மோகனப் புன்னகையில் 5
ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான் விஜயேந்திரன். கார் புறப்பட்டுப் போயிருந்தது.
“வந்த வேலை முடிஞ்சுதுங்களா ஐயா?” எதிரே வந்தவரின் குரலில் கலைந்தவன்,
“ம்… முடிஞ்சுது.” என்றான். ஸ்டேஷனில் ஒரு வேலை இருப்பதாகப் பெயர் பண்ணிக் கொண்டு தான் ரயில் வரும் நேரத்திற்குச் சற்று முன்பாக ஸ்டீஃபனோடு வந்திருந்தான்.
ட்ரெயின் வந்து நின்றவுடன் அண்ணியைப் பார்க்கும் ஆர்வத்தில் ஓடிவிட்டான் இளையவன். விஜயேந்திரன் தான் கொஞ்சம் திணறிவிட்டான்.
ஐந்து நெடிய ஆண்டுகள். இன்னும் சொல்லப்போனால் அவனைப் பொறுத்தவரை ஐந்து கொடிய ஆண்டுகள்.
‘சுமித்ரா’
உதடுகள் ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்க அந்தத் தித்திப்பு அவன் தொண்டையைத் தாண்டி இறங்கி நாடி நரம்பெங்கும் பரவியது.
தூணிற்குப் பின்னால் அன்று முகம் காட்டிய அந்தப் பௌர்ணமி நிலா இன்று ரயில் கம்பிகளுக்குப் பின்னால் முழுதாகத் தரிசனம் தந்தது. விஜயேந்திரனின் கண்கள் லேசாகக் கலங்கிப் போயின.
ஸ்டேஷனை அந்தக் கண்கள் ஒருமுறை வலம் வந்த போது விஜயேந்திரன் முகத்தை அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொண்டான். தன் இருப்பை எந்தக் கணத்திலும் வெளிப்படுத்திக் கொள்ள அவன் விரும்பவில்லை.
ரயில்வே ஸ்டேஷனை அண்டி ஒரு வாய்க்கால் ஓடிக் கொண்டிருக்க அதன் ஓரமாகப் பொடி நடையாக நடந்து வந்தான் விஜயேந்திரன்.
‘ஓ’ வென்று கத்த வேண்டும் போல ஒரு உணர்வு தோன்றியது. தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் அங்கிருந்த சின்னப் பாறை ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டான்.
“ஐயா! நீங்க இங்க?”
“இல்லையில்லை, காருக்காகக் காத்திருக்கேன். நீங்க கிளம்புங்க.”
“அப்போ சரிங்கய்யா.” எதிரே வந்தவருக்குப் பதில் சொன்னவனுக்கு இது ஒரு அசௌகரியம். எங்கே போனாலும் தனிமை தொலைந்து போகும். போவோர் வருவோருக்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டும்.
தூரத்தே ப்ளாக் அம்பாசிடர் வருவது தெரிந்தது. கை இரண்டையும் நீட்டிச் சோம்பல் முறித்தவன் எழுந்து கொண்டான். ஸ்டீஃபனின் ரியாக்ஷனைப் பார்க்க அத்தனை ஆவலாக இருந்தது.
காரை வந்த வேகத்தில் நிறுத்தி விட்டுப் பறந்து வந்தான் ஸ்டீஃபன். சுற்று முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டவன் விஜயேந்திரனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“அண்ணா…”
“ஏய்! ஏய்! ஸ்டீஃபன்… என்ன பண்ணுற நீ?” விஜயேந்திரன் ஸ்டீஃபனின் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தான்.
“அஞ்சு வருஷம் என்னண்ணா? சுண்டைக்கா. அம்பது வருஷம் வேணும்னாலும் அண்ணிக்காக நீங்க தாராளமாக் காத்திருக்கலாம்.”
“ஓய்! என்ன? என்னைக் கிழவனானப்புறம் சம்சாரி ஆகச் சொல்லுறயா?”
“அதானே! எங்கண்ணா வாலிப முறுக்கோட இருக்கிறப்போவே கல்யாணம் பண்ணி நாலஞ்சு சிங்கக் குட்டிங்களைப் பெத்துக்க வேணாம்?”
“ஆ! அது!” இப்போது கெத்தாக மீசையை முறுக்கினான் அரண்மனைக் காரன்.
“ஆனா அண்ணா… ஒன்னே ஒன்னு. பொண்ணு, அதுவும் அண்ணி மாதிரி.” லயித்துச் சொன்னவனை தோளோடு அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன்.
“என்ன சொன்னா ஸ்டீஃபன் உன்னோட அண்ணி?”
“ரொம்ப அமைதி ண்ணா. அளந்து தான் பேசுறாங்க. கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில். ஆனா அந்தக் கண்ணு மட்டும் யாரையோ தேடினா மாதிரி எனக்கு ஒரு ஃபீல் ண்ணா.”
பெருமூச்சு ஒன்று கிளம்பியது விஜயேந்திரனிடம் இருந்து.
“கொண்டு வர்றேன் ஸ்டீஃபன். அந்தக் கண்ணை என்னோட அரண்மனைக்குள்ள கொண்டு வர்றேன். காத்திருந்தது போதும்.”
“அது அத்தனை சுலபமா நடக்கும்னு எனக்குத் தோணலை ண்ணா.” கவலையோடு சொன்னான் இளையவன்.
“ம்… அது எனக்கும் தெரியும் ஸ்டீஃபன். ஆனா நடக்கும். நடத்திக் காட்டுவான் இந்த விஜயேந்திரன்.” பேசியபடியே இரண்டு பேரும் காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்.
அண்ணி… அண்ணி என்று வாய் ஓயாமல் சின்னவன் பேச, அதை ஒரு கிறக்கத்தோடே கேட்டிருந்தான் பெரியவன்.
************
ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஏழு நாட்களும் மக்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். நாட்டுப் புறக் கலைஞர்களின் திறமைகளைப் போற்றும் விதமாக தினம் ஒரு நிகழ்வு நடைபெற்றது.
ஸ்டீஃபன் தலை சுற்றிப் போனான். திருவிழா என்று சொன்ன போது இப்படியொரு பிரம்மாண்டத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
கௌரி புரத்தின் பிரசித்தமான சிவன் கோவில் அவன் சிந்தைக்குப் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. அதன் விசாலமும், பசுமையும், குளிர்ச்சியும் அவனைக் காந்தம் போல இழுத்தன.
கோவிலின் மிகப் பிரம்மாண்டமான விமானம் பிரமிடுகளை ஒத்திருந்தது. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த கற்களில் சிற்ப வேலைப்பாடுகள் கண்களைக் கொள்ளை கொண்டன.
கருங்கற்ச் சுவர்கள் நெடுகிலும் உளி கொண்டு செதுக்கியிருந்த சிற்பங்கள், சிற்பங்கள்தானா என வியக்கும் வண்ணம் கலைநயத்தோடு மிளிர்ந்தன.
பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை ஸ்டீஃபனுக்கு. கானடாவிலும் இது போன்ற பிரம்மாண்டமான தேவாலயங்கள் இருந்தாலும் இது போன்ற சிற்பங்களைப் பார்ப்பது அரிதுதான்.
காலையிலேயே அரண்மனையை விட்டுத் தன் காமெராவோடு வெளியேறினால் இரவு தான் திரும்பி வந்தான். விஜயேந்திரனும் ஒன்றும் சொல்லவில்லை. கட்டவிழ்ந்த காளை போல அவன் சுற்றித் திரிவதைப் பார்க்கச் சிரிப்புத் தான் வந்தது அவனுக்கு.
கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கூத்து, காவடி ஆட்டம், கும்மி, கோலாட்டம்… அப்பப்பா! ஊரே கலையோடு இன்புற்றிருந்தது.
இன்று இறுதி நாள் நிகழ்வு. முத்தாய்ப்பாக சுமித்ராவின் பரதநாட்டிய நிகழ்ச்சி. ஊரே சிவன் கோவிலில் திரண்டிருந்தது. அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து எல்லாம் மக்கள் வண்டி கட்டிக் கொண்டு கௌரி புரத்திற்கு வந்திருந்தார்கள்.
தோரணங்கள் காற்றில் அசைந்தாட கோயில் பிரகாரம் ஜெகஜ்ஜோதியாகக் காட்சியளித்தது. கோயில் மண்டபத்தில் சுமித்ராவின் வாத்தியக்காரர்கள் அனைவரும் தங்கள் இசைக்கருவிகளை சுருதி சேர்த்த வண்ணம் ஆட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
‘ஜல் ஜல்’ என்ற மெல்லிய சதங்கை ஒலியில் கூடியிருந்தவர்களின் சலசலப்பு மெல்ல அடங்கிப் போனது. சிவப்பும் ஆரஞ்சும் கலந்தடித்த பட்டுப் புடவையை பரத நாட்டியத்திற்கே உரிய முறையில் உடுத்தி இருந்தாள் பெண். கண்ணைப் பறிக்கும் வகையில் நகையலங்காரம். சுண்டி இழுக்கும் ஒப்பனை.
வெண்ணெயையும், மஞ்சளையும், சந்தனத்தையும் குழைத்து அதில் குங்குமத்தை மேலாகத் தூவியது போல் ஒரு நிறம். அது அவள் மேனி நிறம்.
மூக்கிலிருந்த ஒற்றைக்கல் வைர மூக்குத்தி அத்தனை பேர் நடுவிலும் ஒற்றைக் கதிரையில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த விஜயேந்திரனுக்கு சவால் விட்டது. எனக்கு எத்தனை பாக்கியம் பார்த்தாயா என்று அவனைக் கேலி பண்ணியது.
ஊர்மக்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்திருக்க, ஊர்ப் பெரியவர்கள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டார்கள். விஜயேந்திரன் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் அரண்மனைக்குரிய மரியாதையாக அவனுக்கு மட்டும் நாற்காலி போட்டிருந்தார்கள்.
நேராகச் சென்று நட்டுவாங்கத்தை நமஸ்கரித்தவள் சபைக்கும் வணக்கம் வைத்தாள்.
மெல்லிய தம்பூராவின் இசை கூடியிருந்தவர்களுக்கு உன்மத்தம் ஊட்ட இசையற்ற வாய்ப்பாட்டிற்கு முதலில் அபிநயம் பிடித்தாள் சுமித்ரா.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்
குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்
வெண்ணீறும்
ஓதுவார் குரல் ஓங்கி ஒலிக்க அந்தச் சுற்றுப்புறமே மெய்ம்மறந்து பார்த்திருந்தது. ஜனங்கள் இமைக்க மறந்து லயித்திருந்தார்கள்.
ஸ்டீஃபன் விக்கித்துப் போனான். இப்படியொரு தேவதைப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிவிட்டா கரிகாலன் தன் அக்காளை ஏற்றுக்கொண்டான்?
புல்லையும் பூவையும் கூட விடாது தனது காமெராக்குள் பதுக்குபவன் இன்று ஸ்மரணை தப்பியவன் போல வாய்பிளந்து பார்த்திருந்தான்.
இத்தனை பேரின் நிலை இதுவென்றால் விஜயேந்திரன்…
மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு தனக்கே உரித்தான அந்தக் காந்தப் பார்வையோடு அவளையே பார்த்திருந்தான்.
சுற்றம் மறந்து போனது. அபிநயம் பிடிப்பது அவன் சொத்து. காலதாமதம் ஆனாலும் காலத்தின் கட்டளை அதுதானே.
பாடல் மாற இப்போது வாத்தியங்கள் இன்னிசை பரப்பின. ஜதிக்கு ஏற்ப தபேலா தாளம் போட்டது.
வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா
ரமணா
சசிவதனா சரஸிஜநயனா
ஜகன்மோஹன ராதா ரமணா
எத்தனை உணர்ச்சிகளை அந்த முகம் பிரதிபலித்தாலும், ஆயிரம் கதைகளை அந்தக் கண்கள் கூறினாலும், தாவலும் துள்ளலும் குதித்தலுமாக அந்த மண்டபத்தையே அவள் ஆக்கிரமித்திருந்தாலும் நாற்காலி இருந்த திசைப்பக்கம் மட்டும் அவள் பார்வை திரும்பவில்லை.
கூடியிருக்கும் ஜனத்திரளுக்கு மத்தியில் ஒற்றை நாற்காலியில் வீற்றிருப்பது யாரென்பதை ஊகிக்க முடியாத முட்டாளல்ல அவள்.
இன்னுமொரு கீர்த்தனைக்கும் அபிநயம் பிடித்தவள் அத்தோடு நாட்டியத்தை முடித்துக் கொண்டாள். கோயில் சந்நிதானம் என்பதால் யாரும் சினிமாப் பாடலை நேயர் விருப்பமாகக் கேட்கவில்லை.
கலைஞர் அத்தனை பேரிற்கும் கடந்த ஏழு நாட்களாக ஊரின் சார்பாக, அரண்மனையின் சார்பாக விஜயேந்திரன் தான் ரோஜா மாலை அணிவித்து சன்மானம் வழங்கினான்.
இன்றும் அதுவே முறை என்பதால் ஊர்ப் பெரியவர் ஒருவர் ரோஜா மாலையை விஜயேந்திரன் கைகளில் கொடுக்க அதை வாங்கியவன் சுமித்ராவை நோக்கி வந்தான்.
தங்கள் பக்கத்து ஊர்க்கோவில் என்பதால் சன்மானத்தை ஏற்கனவே சங்கரன் மறுத்திருந்தார்.
மாலையோடு வந்த விஜயேந்திரனை மறந்தும் சுமித்ரா நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த அழுத்தமான காலடி ஓசை அருகே நெருங்க நெருங்க மத்தளம் கொட்டிய இதயத்தோடு போராடிய படி நின்றிருந்தாள்.
பெண் கலைஞர்களுக்கு ஆண்கள் மாலை போடுவது வழக்கம் இல்லை என்பதால் மாலைக்காகக் கையை நீட்டியவள் அது கிடைக்காமல் போக நிமிர்ந்து பார்த்தாள்.
அந்தக் கண்கள் அவளிடம் சொல்லியது என்ன? மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் போல அந்த பாஷையை அவள் படிக்க முயல ரோஜா மாலை அவள் கழுத்திலேயே விழுந்தது.
சபை ஒரு கணம் அதிர்ந்து ஓய்ந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அடுத்து விஜயேந்திரன் பண்ணிய காரியம் அத்துமீறல்களின் உச்சமாக இருந்தது.
தன் கழுத்தில் உணர்ந்த விரல் ஸ்பரிசத்தில் தான் சுயநினைவுக்கு வந்தாள் சுமித்ரா. தன் கழுத்தில் விழுந்த மாலையையே அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியிருக்க…
அவள் கழுத்துத் தாலியை அணிந்திருந்த நகைகளிலிருந்து பிரித்தெடுத்த விஜயேந்திரன் அதைக் கழட்ட முற்பட அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துத் தடுத்தாள் சுமித்ரா.
தான் பற்றியிருப்பது அன்னிய ஆணொன்றின் கை என்பதையும் மறந்து அந்தத் தாலியைக் காப்பாற்றுவது மட்டும் தான் அவளுக்குப் பெரிதாகத் தோன்றியது.
அந்த வலிய கரங்களின் பிடிக்கு முன்பால் அவள் மென்மை தோற்றுப் போனது. இரண்டு மூன்று நொடிகளுக்குள்ளாக அவள் கூந்தல்ப் பக்கமாகப் பின்னலைத் தாண்டித் தாலியை இழுத்தெடுத்தவன் மண்டபத்திற்குப் பக்கத்தில் இருந்த சாமி உண்டியலில் அதைப் போட்டான்.
“விஜயேந்திரா…” ஒதுக்குப்புறமாக அமர்ந்திருந்த அமிழ்தவல்லியின் குரலில் அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது.
“தம்பி… என்ன காரியம் பண்ணிட்டீங்க?” சுமித்ராவின் அப்பா அடைக்கல நம்பி பதறினார்.
எதையும் பொருட்படுத்தாமல் சபையை நோக்கி கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டான் விஜயேந்திரன். ஸ்டீஃபன் கூட இப்படி ஒரு தடாலடியான காரியத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.
“இந்த சபையில நான் ஏதாவது விளக்கம் சொல்லக் கடமைப் பட்டிருக்கேன்னா அது இவங்களுக்குத்தான்.” அவன் சுட்டு விரல் சங்கரனை நோக்கித் திரும்பியது.
“ஐயா! நீங்க சொல்லுங்க. நான் பண்ணினது தப்பா?” இரவு ஏறியிருந்த அந்தக் கோவில் மண்டபத்தில் விஜயேந்திரனின் கர்ஜனைக் குரல் லேசாக எதிரொலித்தது.
கழுத்தில் விழுந்திருந்த ரோஜா மாலையோடு தான் ஐந்து ஆண்டுகளாகச் சுமந்திருந்த வாழ்வின் ஆதாரத்தையும் தொலைத்து விட்டு உயிர்ப்பே இல்லாமல் நின்றிருந்த மருமகளை ஒரு கணம் ஏறெடுத்துப் பார்த்தார் சங்கரன்.
“சொல்லுங்க ஐயா! நான் பண்ணினது தப்பா? உங்க பையன் உயிரோட இருக்கும் போது அவர் கட்டின இந்தத் தாலியை நான் கழட்டினது தப்புன்னு நீங்க சொன்னா இந்த ஊர் முன்னாடி அரண்மனைக் காரன் உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேப்பான். சொல்லுங்க ஐயா!”
சங்கரன் சட்டென்று எதுவும் சொல்லிவிடவில்லை. கண்களை மூடி அமைதியாகக் கொஞ்ச நேரம் நின்றவர் அதன் பிறகு நிதானமாப் பேச ஆரம்பித்தார்.
“உயிரோட இருக்கும் போது நீங்க கழட்டி இருந்தா அது தப்புத் தான் தம்பி. இல்லாத ஒருவன் கட்டின தாலியை எதுக்கு வீணா என்னோட மருமகள் சுமக்கணும்? என்னைப் பொறுத்தவரை நீங்க பண்ணினது தப்பே இல்லை.”
இதை சங்கரன் சொன்ன போது ஸ்டீஃபன் முகத்தில் அத்தனை வலி தெரிந்தது. விழுங்கிக் கொண்டான்.
“இந்தப் புனிதமான மண்டபத்துல வெச்சு இங்க கூடியிருக்கிற அத்தனை பேருக்கும் ஒன்னை நான் சொல்லிக்க விரும்புறேன். கூடிய சீக்கிரமே அரண்மனையில விசேஷம் நடக்கும். முறைப்படி ‘துவாரகா’ க்கு என்னோட அம்மா பொண்ணு கேட்டு வருவாங்க. அரண்மனையோட மருமகள் துவாரகாவிலிருந்து தான் வருவாங்க. இதுல எந்த மாற்றமும் இல்லை.”
அதே கர்ஜனைக் குரலில் சொல்லி முடித்தவன் மலங்க விழித்தபடி விறைத்துப் போய் நின்றிருந்த சுமித்ராவை ஒரு தரம் கண்களில் முழுதாக நிரப்பிக் கொண்டு நகர்ந்து விட்டான்.
அரண்மனைக்குத் தங்கள் ஊர்ப் பெண்தான் மருமகள் என்ற தகவலைக் கேட்ட போது அந்த ஊர் மக்கள் மற்றதையெல்லாம் மறந்து போனார்கள்.
காலாகாலமாக அரண்மனையோடு சம்பந்தம் வைத்திருப்பவர்கள் இன்னொரு சிற்றரசர் வம்சமாக இருப்பதே மரபு என்பதால் சாதாரண குடும்பப் பெண்ணான சுமித்ராவிற்குக் கிடைத்திருப்பது பாக்கியமே என்று வாய் ஓயாமல் பேசி முடித்தார்கள்.
கௌரிபுர மக்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும் இருபத்தி ஒன்பது வயது வரை திருமணமே வேண்டாமென்றிருந்த தங்கள் அரண்மனை வாரிசு இப்போதாவது மனமிரங்கியதே என்று மகிழ்ந்து போனார்கள்.
‘ஐயா’ வின் வார்த்தை தான் இறுதி முடிவு என்று பழக்கப்பட்டு வாழ்ந்தவர்களுக்கு சுமித்ராவின் கழுத்தில் ஏற்கெனவே கிடந்த தாலி பற்றிப் பேசத் தைரியம் இருக்கவில்லை.
‘ஐயா’ வின் வார்த்தையை எப்போதும் போல இப்போதும் ஏற்றுக் கொண்டார்கள்.
விஜயேந்திரன் காரை அடைந்த போது பின்னோடு ஓடி வந்தான் ஸ்டீஃபன். கீயை அவன் கையில் கொடுத்த பெரியவன்,
“ஸ்டீஃபன், நீ இன்னைக்கு ஓட்டு.” என்றான்.
“சரிங்க ண்ணா.” கீயை வாங்கியவன் காரை ஓட்ட அமைதியாகக் கண் மூடி அமர்ந்து கொண்டான் சேதுபதி வம்சத்தவன்.
****************
விஜயேந்திரன் வீடு வந்து சேர்ந்த போது அவனுக்கு முன்பாக அவன் அம்மா பயன்படுத்தும் கார் ஷெட்டில் நின்றது. ட்ரைவர் கை கட்டி மரியாதையாக நின்று இவனுக்கு வணக்கம் வைத்தான்.
“பசங்க எல்லாம் நல்லா படிக்கிறாங்களா மாரி?” இலகுவாகக் கேட்டபடி உள்ளே போய்விட்டான் விஜயேந்திரன். எதிர்ப்பட்ட கணக்கர் தான்,
“தம்பி…” என்றார். பதில் சொல்லாமல் அவரை ஏறெடுத்துப் பார்க்க,
“அம்மாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.” என்றார் தயங்கிய படி.
“அனுமதி கிடைச்சிருக்கும்னு நினைக்கிறீங்களா?” தீர்க்கமாகப் பார்த்தபடி விஜயேந்திரன் கேட்க தலையைக் குனிந்து கொண்டார் பெரியவர்.
விஜயேந்திரன் மாடிக்குப் போக அரண்மனையின் அந்தப்புரத்திற்குப் போனார் கணக்கர். நாற்காலி ஒன்றில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அமிழ்தவல்லி. முகத்தில் கடுமை தெரிந்தது.
“அம்மா! தம்பி வந்துட்டாரு.”
“ம்!” கர்ஜனையாக வந்தது பதில். கணக்கர் வேறொன்றும் பேசவில்லை. உத்தரவிற்காகக் காத்திருந்தார்.
“கோதை நாயகிக்குத் தகவல் அனுப்பங்க கணக்கரே.”
“சரிங்கம்மா.”
“அறுவடையை யார் கையிலாவது ஒப்படைச்சிட்டு திருவிழாக்கு சாக்குப் போக்குச் சொன்னா மாதிரி இப்பவும் சொல்லாம ரெண்டு நாளைக்குள்ள வந்து சேரச் சொல்லுங்க.”
“சரிங்கம்மா.”
“அண்ணன் வீட்டுல விசேஷம் னு சொல்லியே அனுப்புங்க கணக்கரே.”
“சரிங்கம்மா.” ஆச்சரியம் உச்சத்தில் இருந்தாலும் கணக்கர் எதுவும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டார்.
அந்த அரண்மனை அமைப்பில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கட்டடங்கள் விசாலமாக இருந்தாலும் தொடர்ச்சியாக அல்லாமல் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக ஆங்கிலேயர் காலத்தில் உபயோகத்தில் இருந்த ராஜாங்க விவகாரப் பகுதிகளும் நூதனசாலையும் ஒரு புறமிருக்க, அரண்மனை வாசிகளின் புழக்கம் பிறிம்பாக இருந்தது.
சேதுபதி வம்சத்தின் பெண்களுக்கான அந்தப்புரப் பகுதி ஒரு புறமிருக்க மாடியிலும் கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட அறைகள் இருந்தன.
பெண் வாரிசுகள் இல்லாததால் அமிழ்தவல்லியும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த கங்காவும் மட்டுமே அங்கு வசித்திருந்தார்கள்.
அந்தப்புரத்தில் மட்டுமே மொத்தம் ஐந்து அறைகள் இருந்தன. அரண்மனைக்குப் பின்னால் பென்னம் பெரிய தென்னந்தோப்பு இருந்தாலும் அந்தப்புரம் முடியும் இடத்தில் அழகானதொரு நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது.
மாடி அறைகளின் வெளிப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தாழ்வாரப் படிகளும் இந்த நந்தவனத்தில் தான் வந்து இணைந்து கொண்டன.
விஜயேந்திரனின் ஜாகை மாடியில் தான். கணவர் உயிரோடு இருந்தவரை அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்ட அமிழ்தவல்லி அவர் தவறிய பிறகு அந்தப் புரத்தோடு அடங்கி விட்டார்.
வெளிப்படையாக எதிலும் கலந்து கொள்ளாவிடினும் ஊரின் அனைத்து நடவடிக்கைகளும் அவருக்கு அத்துப்படி. அரண்மனைச் செருக்கு அருக்கு நிரம்பவே உண்டு.
மாடித் தாழ்வாரத்தில் சாய்மனைக் கட்டிலைப் போட்டு அதில் கால்நீட்டி வானம் பார்த்திருந்தான் விஜயேந்திரன். அண்ணனைத் தேடிக்கொண்டு வந்த ஸ்டீஃபன் என்ன நினைத்தானோ, விஜயேந்திரனின் கோலம் பார்த்து எதுவும் பேசாமல் திரும்பி விட்டான்.
வானில் இருந்த நிலாவோடு போட்டி போட்டது அந்த வட்ட முகம். குமரியாகப் பார்த்த பெண். இன்று முழுதாக விளைந்து நிற்கிறாள். இப்போதே போய் அள்ளிக்கொண்டு வந்து விடலாம் போல பரபரத்தது காதல் கொண்ட மனது.
எத்தனை அழகாக இருக்கிறாள்! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலவொரு அழகு. தெய்வீக அழகு என்பார்களே… அது இதுதானோ? எண்ணங்கள் சுமித்ராவை நோக்கிப் பறக்க ஒரு மோனநிலையில் தன்னை மறந்து அமர்ந்திருந்தான் விஜயேந்திரன்.
என் உள்ளம்
வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே…
உன் காதல் நீரூற்றினால்
ஆடாது பெண்ணே…
நீ வந்து என் கோப்பையை
நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று…
என் நெஞ்சில்
தூங்கவா நிலாவே…