MP10
MP10
மோகனப் புன்னகையில் 10
அப்போதுதான் கண் விழித்தாள் சுமித்ரா. விழித்தவுடனேயே புரிந்தது, தான் இருப்பது கணவனின் அறை என்று. இழுத்து மூடியிருந்த திரைச்சீலைகள் சூரியனை உள்ளே அனுமதிக்காததால் அறை முழுவதும் மெல்லிய இருட்டு இருந்தது.
இவள் அசைவில் விஜயேந்திரனும் கண் விழித்திருந்தான்.
“குட்மார்னிங் அம்மு.”
“குட்மார்னிங்.” அவன் புரண்டு படுக்க அப்போதுதான் நேரத்தைப் பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள். ஏழைத் தாண்டி இருந்தது.
இரவு அதிக நேரம் கதை பேசிக் கொண்டிருந்ததால் தன்னை மறந்து தூங்கியிருந்தாள்.
“ஐயையோ!” பதறிக்கொண்டு எழுந்த மனைவியை விசித்திரமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
“என்னாச்சு சுமித்ரா?”
“நேரத்தைப் பார்த்தீங்களா? நல்லாவே லேட் ஆகிடுச்சு.”
“இதுல என்ன இருக்கு? இன்னைக்கு ஒரு நாளைக்குத் தானே!” அவன் சமாதானம் சொன்ன போதும் அவள் அமைதி அடையவில்லை.
“நான் கிளம்பட்டுமா?”
“ம்…” ஏதோ ஊருக்குக் கிளம்பும் மனைவியை வழியனுப்புவது போல அத்தனை சோகம் அவன் முகத்தில். சுமித்ராவிற்கே சிரிப்பு வந்தது.
கூந்தலை அள்ளி முடிந்தவள் ஒரு தலையசைப்போடு வெளியே வந்தாள். மனசு கொஞ்சம் படபடத்தது. அந்தப் புரத்திலிருந்து மாடிக்குப் போனதற்கே மாமியார் அப்படிப் பேசினார். இதில் இரவு முழுவதும் அந்தப் புரத்திலேயே தான் இல்லை என்று தெரிந்தால் என்ன ஆகும்?
சஞ்சலத்தோடே படிகளில் இறங்கியவள் சரியாக அமிழ்தவல்லியின் அறையைக் கடக்கும் போது கதவுகள் திறந்து கொண்டன. சுமித்ரா ப்ரேக் அடித்தது போல நின்றாள்.
கலைந்த சேலையும் அள்ளி முடிந்த கூந்தலும் அவள் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறாள் என்று எதிரே கோப விழிகளோடு நிற்பவருக்கு அழகாகச் சொன்னது.
கோதை நாயகியும் கொஞ்சம் கவலையோடு தான் தங்கள் ரூமில் அமர்ந்திருந்தார். காலையில் எழுந்தவுடனேயே சுமித்ரா அவள் அறையில் இல்லை என்பதை அறிந்து கொண்டார் அமிழ்தவல்லி.
அவர் பார்வை கோதை நாயகியைத் துளைக்கவும் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டார் கோதை. ‘இன்னும் எதற்கு இந்தச் சட்ட திட்டங்கள்? அவள் புருஷனோடு அந்தப் பெண் எங்கே இருந்தால் தான் என்ன?’
ஆனால் இதையெல்லாம் தன் அண்ணியிடம் சொல்ல முடியுமா என்ன? மௌனமாகத் தங்கள் ரூமிற்குள் வந்தவர் ஒரு காதை வெளியே தான் வைத்திருந்தார்.
“கோதை!” அமிழ்தவல்லியின் குரல் கேட்கவும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார் கோதை நாயகி.
“இந்த அரண்மனையில என்ன நடக்குது கோதை? இங்க வர்றவங்க என்ன நினைப்போட வர்றாங்க? அவங்க இஷ்டத்துக்குத் தான் நடப்பாங்கன்னா அப்போ இங்க எனக்கென்ன மரியாதை?” குரல் சற்று ஓங்கித்தான் ஒலித்தது.
சுமித்ரா உறைந்து போனாள். பிரச்சினை வரும் என்று தெரியும். அதுவும் நேற்று எச்சரிக்கை விடுத்த பின்பும் மீண்டும் அதே போல நடந்தால் ஆத்திரம் இன்னும் அதிகமாகும் என்றும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்போடு அந்த முகம் தன் அருகாமையை விரும்பும் போது சுமித்ராவால் மறுக்க முடியவில்லை.
“அது… அண்ணி…” கோதை நாயகி தடுமாறினார்.
“இன்னைக்கு என்ன சொல்லப் போறை கோதை? நேத்து ராஜா தான் கூப்பிட்டான்னு சொன்னே. இன்னைக்கு யாரு…”
“சுமித்ரா!” அமிழ்தவல்லி விஷத்தைக் கக்கும் முன்பே கர்ஜனையாக வந்தது விஜயேந்திரனின் குரல்.
இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ராஜா அந்தப்புரம் வருவதேயில்லை. அதில் அத்தனை உறுதியாக இருந்தார் அமிழ்தவல்லி.
இப்போதும் அந்த எண்ணமே மனதில் இருக்க அவர் குரல் சற்றே உயர்ந்திருந்தது.
“என்ன இங்க சத்தம்?” அரண்மனைக் காரனின் கண்கள் சுற்றுப் புறத்தை ஒரு நோட்டம் விட்டது. மகனின் பார்வையின் தீட்சண்யத்தில் எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டார் அமிழ்தவல்லி.
வந்தவளை வதைக்கத் தெரிந்தவருக்குத் தன் வீரத்தை மகனிடம் காட்டத் தைரியம் இருக்கவில்லை. கோதை நாயகிக்கு அப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது.
தன் அண்ணியின் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியாமல் திண்டாடியவரை விஜயேந்திரன் வந்து காத்தருளி இருந்தான். மருமகனிடம் கண்களால் சுமித்ராவை ஜாடை காட்டியவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
அத்தனை பேரும் நகர்ந்து விட கண்களில் நீர் திரள நின்றிருந்தவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன். கைத்தாங்கலாக அவளின் அறைக்குள் அழைத்து வந்தவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“சாரி அம்மு.” கணவனின் கை வளைவில் நின்ற படியே அவனை அண்ணாந்து பார்த்தாள் பெண்.
“எதுக்கு?”
“இல்லை… என்னாலதானே இந்தத் தேவையில்லாத பேச்சு.”
“இல்லையில்லை… நான் அப்படி நினைக்கலை.” அவள் கண்களின் நீரைத் துடைத்து விட்டான் விஜயேந்திரன்.
“நீ என் பக்கத்திலேயே இருக்கணும்னு தோணிச்சு அம்மு. அதான்… இனி வேணாம்.” அவன் சொல்லி முடிக்கவும் அவனை ஒரு விதமாகப் பார்த்தாள் சுமித்ரா.
“ஏன்? உங்களுக்கு அந்தப்புரத்துக்கு வழி தெரியாதா?” அவள் கேட்ட கேள்வியில் விஜயேந்திரனின் கண்கள் மின்னின.
“அம்மு… நான் அந்தப் புரத்துக்கு வந்தா அதோட அர்த்தமே வேறடா. நான் வரட்டுமா?” அவன் கேட்ட பிறகே தான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது பெண்ணுக்கு.
தன்னையே பார்த்திருந்த அவள் கண்களில் நாணத்தின் சாயலைத் தேடிய கணவன் தோற்றுப் போனான். அவள் தலை குனியவில்லை. அவனையே பார்த்த படி இருந்தாள். ஆனால் இப்போது மௌனம் கலைந்தது.
“பள்ளிக்கூடம், நாட்டியம் னு திரிஞ்ச காலத்துல ஒரு முகம் ஆழமா மனசுல பதிஞ்சுது. ரெண்டு தடவை தான் பார்த்திருப்பேன். பேசினது கூட கிடையாது. ஆனா அந்த முகம்தான் வாழ்க்கை ன்னு மனசு அடிச்சு சொல்லிடுச்சு.” ஏதோ கனவில் பேசுபவள் போல தொடர்ந்தாள் சுமித்ரா.
“திடீர்னு ஒரு தாலி. என் கழுத்துல. கட்டின அத்தானை அத்தை மகன்கிறதைத் தாண்டி என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை. கடவுள் புண்ணியம் அதே வார்த்தைகளைத் தான் அத்தானும் சொன்னாங்க. ‘கூடப் பொறந்ததா நினைச்சிருந்தேன். இப்படிப் பண்ணிட்டாங்களே சுமித்ரா’ ன்னு அழுதாங்க. மனசு லேசாகிப் போச்சு. அன்னைக்கு என் கழுத்துல விழுந்தது தாலியே இல்லைன்னு நீங்கெல்லாம் இப்போ சொல்லுறீங்க. இப்போ இன்னொரு தாலி. நான் ஆசைப்பட்ட வாழ்க்கை தான். இருந்தாலும்… என்னால…”
ஆரம்பித்தவள் முடிக்கத் தெரியாமல் தடுமாறவும் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன்.
சுமித்ரா விஷயத்தில் தான் தவறு செய்கிறோமோ என்று முதன்முதலாக எண்ணத் தோன்றியது. அவள் தன்னை ஏற்றுக் கொள்ளத் தான் கொடுக்கும் கால அவகாசம் அவளை என்னை நெருங்க விடாமல் தடுக்கிறதோ என்று தோன்றியது.
கோழிக்குஞ்சு போல தனக்குள் ஒடுங்கி நிற்பவளைப் பார்த்த போது ஆசை பொங்கியது அந்த அரண்மனைக் காரனுக்கு. அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் அவளை லேசாக விலக்கினான்.
“குளிச்சிட்டு வா அம்மு.”
“ம்…” பெண் நகர்ந்து விட்டாள். மலர்ந்த புன்னகையோடு தலையைக் கோதியபடி மாடிக்குப் போய்விட்டான் விஜயேந்திரன்.
***********
சிறிது நேரத்திலெல்லாம் திருமணம் விசாரிக்கவென விருந்தினர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். விருந்து, வெட்டிப் பேச்சு எனப் பொழுது கரைந்து போனது சுமித்ராவிற்கு.
பட்டுடுத்தி நகைகள் போட்டு பொம்மை போல அலங்கரித்து அந்த மேல்தட்டு வர்க்கத்தினரோடு அளவளாவுவது ஏனோ சுமித்ராவிற்குப் பிடிக்கவில்லை. எப்போது ஓயும் இந்த விசாரிப்புகள் என்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தாள்.
அன்று மதியத்துக்கு மேல் ஆரவாரம் கொஞ்சம் அடங்கி விட்டது. தனது ரூமில் ஓய்வெடுத்த படி இருந்த சுமித்ராவை அழைத்தாள் கங்கா.
“அம்மா!”
“என்ன கங்கா?”
“கோவில் பிரசாதம் வந்திருக்கு. ஐயா உங்களைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க.”
இதற்கு என்ன பதில் சொல்வதென்று சுமித்ராவிற்குப் புரியவில்லை. மாடிக்குப் போனால் ஏற்படும் விபரீதங்கள் அவளை அச்சம் கொள்ள வைத்திருந்தன. கங்கா என்ன நினைத்தாளோ,
“ஐயாவோட அம்மாவும் மாடியில தான் இருக்காங்க.” என்றாள்.
“ஓ அப்படியா!” அதற்கு மேல் தயங்காமல் கிளம்பி விட்டாள் சுமித்ரா.
சுற்று வட்டாரங்களில் இருக்கும் கோவிலிலிருந்து பிரசாதம் எப்போதும் வருவது வழக்கம். அமிழ்தவல்லி எதற்கும் முன்னிற்க மாட்டார்.
அரண்மனைக்குப் புதிய மருமகள் வந்திருப்பதால் பிரசாதத்தை வாங்க அவளுக்கு அழைப்பு வந்திருந்தது.
மாடிக்கு இவள் சென்ற போது விஜயேந்திரனும் அமிழ்தவல்லியும் இவளுக்காகத் தான் காத்திருந்தார்கள். வயதான குருக்கள் கையில் வைத்திருந்த தட்டை இவளிடம் நீட்டவும் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘வாங்கு’ என்பது போல அவன் தலையை ஆட்டவும் தட்டை வாங்கிக் கொண்டாள் சுமித்ரா.
மடித்தாற்போல இருந்த நோட்டுக்களை அமிழ்தவல்லி சுமித்ராவிடம் நீட்டவும் அதை வாங்கி அந்தக் குருக்களிடம் கொடுத்தாள். பெரியவர் உத்தரவு வாங்கிக் கொள்ளவும் அமிழ்தவல்லியும் கீழே போய் விட்டார்.
பிரசாதத் தட்டை கங்கா வாங்கிக் கொண்டு நகர கணவனைப் பார்த்தாள் சுமித்ரா.
“உங்க அம்மா உங்ககிட்டப் பேசமாட்டாங்களா?” மனைவியின் கேள்வியில் புன்னகைத்த விஜயேந்திரன் அவனது ரூமிற்குள் போனான். அவனைப் பின் தொடர்ந்தவள் மீண்டும் அதையே கேட்டாள்.
“அரண்மனைக் காரரே! உங்களத்தான் கேக்கிறேன்.” அவள் கேட்ட விதத்தில் பெருங்குரலெடுத்துச் சிரித்தான் விஜயேந்திரன்.
“நாட்டியப் பேரொளியே! எதுக்கு உங்களுக்கு இப்போ இந்தத் தகவலெல்லாம்?” அவனும் விடவில்லை.
“ஏன்? நான் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?” அந்தக் குரலில் தெரிந்த கவலை விஜயேந்திரனை வருத்தப் படுத்தியது.
“அப்படி இல்லை அம்மு. உன்னை வருத்தப் படுத்தக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்.”
“பரவாயில்லை சொல்லுங்க.”
“எப்பவுமே அவ்வளவு பெரிய உறவு இருந்ததுன்னு சொல்ல முடியாது. அத்தை தான் என்னை நல்லாப் புரிஞ்சுப்பாங்க. நம்ம விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் எல்லாமே மொத்தமா நின்னு போச்சு. கல்யாணம் பண்ண சொல்லி ரொம்பவே வற்புறுத்தினாங்க. அதையும் நான் கண்டுக்கலை. அந்தக் கோபமும் சேர்ந்திடுச்சு.”
சுமித்ரா அமைதியாகி விட்டாள். என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“இதுக்குத் தான் சொன்னேன்.” விஜயேந்திரன் அவளைப் பார்த்துப் புன்னகைக்க அவளும் பெயருக்குப் புன்னகைத்தாள். அவள் கண்கள் கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தன.
‘உன் காதல் போல என் காதல் அத்தனை ஆழமானது இல்லை.’ என்று அவள் மனம் உருப்போட்டது. தன்னை விழுங்க வரும் அந்தக் கண்களையே விஜயேந்திரனும் பார்த்திருந்தான்.
“அம்மா!” கங்காவின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தார்கள் இருவரும். ரூம் வாசலில் கங்கா நின்றிருந்தாள். கூடவே பக்கத்தில் ஒரு குட்டிப் பையன்.
“சொல்லு கங்கா.”
“அம்மா, இது என்னோட அக்கா பையன். வீட்டுல உங்களைப் பத்திப் பேசவும் கிளம்பி வந்துட்டான். அம்மாவைப் பார்க்கணுமாம்.”
“அடடா! என்னைப் பார்க்க பெரிய விருந்தாளி வந்திருக்காங்க போல. வாங்க வாங்க.” கேலியாகச் சொன்னவள் அந்தக் குட்டிப் பையனைத் தூக்கிக் கொண்டாள்.
“ஐயோ அம்மா! என்ன பண்ணுறீங்க?”
“ஏன் கங்கா? உன் அக்கா பையனை நான் தூக்கக் கூடாதா?”
“ஐயையோ! அப்படி இல்லைம்மா. நீங்க போய்…”
கங்காவின் வார்த்தைகளைப் புறக்கணித்தவள் குழந்தையைத் தூக்கிய படியே கணவனிடம் வந்தாள். அலமாரியில் இருந்த ஃபைல் ஒன்றை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.
“என்ன அம்மு?”
“பணம் குடுங்களேன்.”
“ஆ!” மனைவியின் உரிமையான பேச்சில் வாயைப் பிளந்தான் அரண்மனைக் காரன்.
“குழந்தை முதல் முதலா நம்மைப் பார்க்க வந்திருக்கு. வெறும் கையோட அனுப்ப வேணாம்.” பணத்துக்காக அவள் கையை நீட்டவும் அவன் எப்போதும் உபயோகத்தில் வைத்திருக்கும் அந்தச் சின்னத் தோல்ப்பையை சுமித்ராவிடம் நீட்டினான்.
எதுவும் பேசாமல் அதை வாங்கியவள் அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்தாள். குழந்தை ரூமிற்கு வெளியே நிற்கும் தன் சித்தியைப் பார்த்தது.
“ஐயோ அம்மா! இதெல்லாம் எதுக்கு? உங்களைப் பார்க்கணும்னு அடம்பிடிக்கவும் நான் சும்மா கூட்டிக்கிட்டு வந்தேன்.”
“இதிலென்ன கங்கா இருக்கு? குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் குடு.” குந்தையின் கையில் பணத்தைத் திணித்தவள் அதன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“நல்லா படிக்கணும் என்ன?” சுமித்ரா சொல்லவும் தலையாட்டியது குழந்தை.
திறந்திருந்த அலமாரியின் கதவுக்குப் பின்னால் நின்றபடி தன் இனியவளின் செய்கைகளை ஒரு மயக்கத்தோடு பார்த்திருந்தான் விஜயேந்திரன்.
அவளின் உரிமையான செய்கைகள் அவனுக்குக் கிறக்கத்தைக் கொடுத்தது. ‘காலம் தாழ்த்துகிறோமோ?’ என்ற எண்ணம் ஏனோ அவனுள் விழுந்து விஸ்வரூபம் எடுத்தது.
“குழந்தை ரொம்ப அழகா இருந்து…”
“அண்ணீ…” சுமித்ராவை முழுதாக முடிக்க முடியாமல் ஸ்டீஃபனின் குரல் அழைத்தது.
“அடடே ஸ்டீஃபன்! என்ன உங்களைப் பிடிக்கவே முடியலை?” அனைத்தையும் மறந்து விட்டு ஸ்டீஃபனை நோக்கிப் போய் விட்டாள் சுமித்ரா. விஜயேந்திரன் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்திருந்தான்.
****************
அன்றிரவும் நேற்றைக்குப் போல காலார நடந்தார்கள் இருவரும். அழகான அமைதி உலகையே போர்த்தி இருந்தது. சுமித்ராவின் குரல் மட்டும் தான் கேட்ட வண்ணம் இருந்தது.
“என்ன எதுவுமே பேச மாட்டேங்கறீங்க?”
“ம்… ஒன்னுமில்லைடா.”
“இல்லை… ஏதோ ஒன்னு உங்க மனசுல ஓடுது.” மனைவி சொல்லவும் புன்னகைத்தான் விஜயேந்திரன். அந்தப் புன்னகையில் அத்தனை வசீகரம்.
“என் ரூமுக்குப் பக்கத்துல இருக்கிற ரூமை டான்ஸ் ப்ராக்டீஸுக்கு ரெடி பண்ணலாம்னு நினைச்சேன் சுமித்ரா.”
“நான் மேலே… எப்படி?”
“சுமித்ரா!” ஒரு நொடி கடுமை வந்தது விஜயேந்திரனின் குரலில். சுமித்ரா மறுத்து எதுவும் பேசவில்லை.
“ரூம்ல இருக்கிற பொருட்களை எல்லாம் ஸ்டோருக்கு அனுப்பணும். அதைப்பத்தித் தான் யோசிக்கிறேன்.”
“ம்…”
“வேற ஏதாவது வேணுமா சுமித்ரா அந்த ரூம்ல?”
“இல்லையில்லை.”
“என்னோட ரூம் மாதிரி நல்ல பெரிய இடம் தான். அதால உனக்கு வசதியாத்தான் இருக்கும்.”
“நீங்க எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்.”
“ம்ஹூம்…” அந்த ‘ஹூம்’ காரத்தில் ஆயிரம் அர்த்தங்கள் தெறித்தது.
நடையை முடித்துக் கொண்டு இரண்டு பேரும் அரண்மனைக்குத் திரும்பி இருந்தார்கள். இப்போது சுமித்ராவின் நடையில் லேசான தயக்கம்.
நேற்று இதே நேரம் ‘குட்நைட்’ சொல்லி விலகியவள் இன்று தடுமாறிய படி நின்றிருந்தாள். விஜயேந்திரன் எதுவுமே பேசவில்லை. எதுவாக இருந்தாலும் அவளே முடிவெடுக்கட்டும் என்று அமைதியாக நின்றிருந்தான்.
நிற்கவும் முடியாமல் போகவும் முடியாமல் அவள் அவஸ்தைப்படுவது நன்றாகவே தெரிந்தது. அந்தக் கண்கள் ஜதி இல்லாமலேயே நாட்டியம் ஆடியது.
“அந்தப் புரத்துக்கு வழி எனக்குத் தெரியும் சுமித்ரா.”
“அப்போ நான் தான் அழைச்சிக்கிட்டுப் போகணும்னு ஏன் எதிர்பார்க்கிறீங்க?”
“அழைச்சிக்கிட்டுப் போகணும்னு எதிர்பார்க்கலை அம்மு. ஆனா அழைப்பு வேணும் இல்லையா?”
“நம்ம வீட்டுக்கு வர நமக்கு யாரும் அழைப்பு வெக்கணுமா என்ன?” கேட்டவள் விடுவிடுவென நடந்து விட்டாள். விஜயேந்திரன் போகும் பெண்ணையே பார்த்திருந்தான். இருந்தாலும் அசையவில்லை.
நடந்து போனவள் கணவன் தன்னைப் பின் தொடரவில்லை என்று உணர்ந்து போது சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள். வாய் விடுக்காத அழைப்பை அந்த விழிகள் சிறப்பாகச் செய்து முடித்தன.
அரண்மனைக் காரன் மயங்கியே போனான். சாவி கொடுத்த பொம்மை போல அவளையே தொடர்ந்து அந்தப் புரத்திற்குள் போனான்.
அவள் மனக் கதவைப் போல அறைக் கதவும் திறந்தே கிடந்தது. கட்டிலின் திரையை விரல்களால் அளைந்த படி நின்றிருந்தாள். விஜயேந்திரன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
கதவைத் தாள் போட்டவன் அவள் பின்னோடு வந்து லேசாக அணைத்துக் கொண்டான். அவள் உடலில் மெல்லிய சிலிர்ப்பு. அவளைத் தன் புறமாகத் திருப்பி அந்த அதரங்களைத் தனதாக்கினான். மெல்லிய தீண்டல் தான். துவண்டு போனவள் சட்டென்று விலகினாள். விஜயேந்திரனின் முகத்தில் அத்தனை ஏமாற்றம்!
“அம்மு… நான் நிக்கட்டுமா? போகட்டுமா?” இப்போது விஜயேந்திரன் கூடத் தடுமாறினான். அவளை நோகடித்துப் பார்க்கும் சக்தி அவனுக்கு இருக்கவில்லை.
கேள்வியாக அவள் நிமிர்ந்து பார்க்க… கதவை நோக்கித் திரும்பியிருந்தான் கணவன். அவன் கை பிடித்துத் தடுத்தவள் அவன் மார்புக்குள் புகுந்து கொண்டாள்.
அன்று காலையில் அந்தக் கண்களில் அவன் தேடிய நாணம் இப்போது காதலுடன் வழிந்தது. அதன்பிறகு அரண்மனைக் காரன் வேறாகிப் போனான்.
கொடுக்க அவனுக்குச் சொல்லியா தரவேண்டும்! எப்போதும் போல அவன் சேமிப்புகள் இப்போதும் கரைந்து கொண்டிருந்தன.
கொடுப்பவன் கரங்கள் சிவப்பது தானே முறை. இங்கு இடம் மாறி வாங்குபவள் சிவந்து கொண்டிருந்தாள். அவள் முகம் பார்த்துப் பார்த்து முன்னேறிக் கொண்டிருந்தான் அரண்மனைக் காரன்.
???
குழல் கலைந்து குங்குமம் தொலைத்திருந்தவளை வாகாக அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன். மனம் நிறைந்திருந்தது.
முகம் பார்க்க மறுத்தவளைப் பார்த்த போது மனம் பொங்கிச் சிதறியது. எத்தனை நாள்க் கனவு! தன் மனம் கவர்ந்தவளோடு சுகித்திருந்த பொழுதுகள் தேனாக இனித்தது.
“அம்மு…” கரகரப்பாக வந்தது அவன் குரல்.
“ம்…”
“எம்மேல கோபமா?”
“ம்ஹூம்.”
“வருத்தமா?”
“ம்ஹூம்.”
“அப்போ என்ன?” குறும்பாகக் கேட்டான்.
“…………..”
“பேசு அம்மு.”
“என்ன பேச?”
“ஏதாவது பேசு.”
“பேசணும்னு தோணலை.”
“ஓ…” சொன்னவளின் முகத்தைத் தன் ஒரு விரலால் உயர்த்தினான் விஜயேந்திரன்.
“இது நாம ரெண்டு பேருமே ஆசைப்பட்ட வாழ்க்கை சுமித்ரா. நடுவில என்னென்னமோ நடந்து போச்சு. இல்லேங்கலை. ஆனா அந்தப் புள்ளியிலேயே நிக்கக் கூடாது. நீயும் நானும் கை கோர்த்து அந்தப் புள்ளியில இருந்து நகர்ந்து வந்திடலாம். ஆசையாப் புடிச்ச இந்தக் கையை எப்பவும் இந்த விஜயேந்திரன் விடமாட்டான். என் கடைசி மூச்சு வரைக்கும்…” அவனை மேலே பேச விடாமல் அவள் கரம் தடுத்திருந்தது.
“பேச விடு அம்மு.”
“நீங்க ஒழுங்காப் பேசுங்க.”
“சரி… சரி… யாரு என்ன சொன்னாலும் எனக்கு நீதான். நீ மட்டும் தான். புரியுதா?”
“ம்…”
“நீ எதுவும் சொல்ல மாட்டியா?”
“என்ன சொல்லணும்?”
“ஏய்…” அவன் குறும்பாக அதட்டவும் மீண்டும் அவனுக்குள் புதைந்து கொண்டாள் பெண்.
“சுமி…”
“ம்…”
“எனக்கொரு ஆசை.”
“என்ன?”
“நேத்து நான் ஒரு ஃபோட்டோ காட்டினேனே, எங்கப்பா கையில மாட்டிக்கிச்சுன்னு.”
“ம்… ஆமா.”
“அதை எடுக்கும் போது அன்னைக்கு அந்தக் கோயில்ல என்ன பாட்டுக்கு நீ அபிநயம் பிடிச்சேன்னு தெரியுமா? ஞாபகம் இருக்கா?”
“இல்லையே… மறந்து போச்சு. என்ன பாட்டு?”
“அலைபாயுதே கண்ணா…”
“ஓ…”
“என் கண்ணுக்குள்ள இன்னும் நிக்குதுடா அந்த முகம்.”
“சொல்லுங்க.”
“அதே பாட்டுக்கு நீ ஆடணும், அதை நான் மட்டும் பார்க்கணும்.”
“இப்போ ஆடணுமா?”
“இல்லையில்லை…” அவன் சொல்லும் போதே புடவையைச் சரிசெய்தவள் அலமாரியைத் திறந்து அவள் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் அந்தச் சின்ன டேப் ரெக்கார்டரை எடுத்தாள். நான்கைந்து காசெட்களை போட்டுப் பார்த்துப் பரிசோதித்தவள் கடைசியாக அவன் சொன்ன பாடலைக் கண்டு பிடித்தாள்.
புடவையைத் தூக்கிச் செருகிக் கொண்டு அவள் நடனத்துக்கு ஆயத்தம் பண்ண விஜயேந்திரன் கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டான். கண்கள் ஜொலித்தது.
பாடலை மெல்லிய ஒலியில் வைத்தவள் அதன் பிறகு அனைத்தையும் மறந்து போனாள். கண்கள் மின்னத் தன்னையே பார்த்திருப்பவனை மனதில் நிறுத்தி அந்த நிமிடம் அவள் அந்த மாயக்கண்ணனை நினைந்துருகும் மங்கையாகிப் போனாள்.
இமைக்க மறந்து அந்த எழிலோவியத்தையே பார்த்திருந்தான் விஜயேந்திரன். கருவிழிகள் காட்டிய அபிநயமும் இங்குமங்கும் சுழன்றாடிய அவள் வளைவு நெளிவுகளும் அவனைக் கட்டிப் போட்டன.
‘கதறி மனமுருகி நான் அழைக்கவோ…
இதர மாதருடன் நீ களிக்கவோ…’
இதே வரிகளுக்கு மீண்டும் மீண்டும் அபிநயம் பிடித்தாள் சுமித்ரா. முகத்தில் சோக பாவத்தைக் கொண்டு வந்து தன் காதலனைத் தேடி உருகும் காதலியாக அவள் மாறிய பொழுது சட்டென்று பாடலை நிறுத்தியவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பில் சுமித்ரா நொறுங்கிப் போனாள்.
“நான் எங்கடி உன்னைக் கதற வெச்சேன். நீ தானேடி என்னைக் கதற வெச்சே. உன்னோட வீட்டுக்கே வந்து உன்னையே ஒரு மனுஷன் தப்பாப் பேசும் போது ‘போய்யா’ ன்னு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நீ ஏன்டி என்னைத் தேடி வரலை. ஏன்டி வரலை நீ?” ஐந்து வருடங்களாக அவன் மனதில் அடைந்து கிடைந்தது எல்லாம் அணையுடைத்து வெளியேறியது.
“அவன் கட்ட வந்த தாலியைத் தூக்கிக் குப்பைல போட்டுட்டு நீ எங்கிட்டத் தானேடி வந்திருக்கணும். நீ இதையெல்லாம் பண்ணாம என்னை விட்டுட்டு எங்கேயோ போயிட்டியேடி. என்னை உயிரோட புதைச்சிட்டுப் போயிட்டியேடி.”
வருத்தத்தில் ஆரம்பித்த அவன் பேச்சு நேரம் செல்லச் செல்ல விருத்தம் ஆகியிருந்தது. இதுவரை காலமும் அவன் கடைப்பிடித்த மென்மை காணாமல் போயிருந்தது. இத்தனை காலமும் அவன் அடக்கி அடக்கி வைத்திருந்த ஆசை வெள்ளம் நொப்பும் நுரையுமாய்ப் பொங்கி அவளை மூழ்கடித்தது.
ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு…
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு…