ENE–EPI 32

ENE–EPI 32

அத்தியாயம் 32

கை வீசி போகின்ற வைகாசி மேகம்

கை சேர்த்து பாடாதோ தன்யாசி ராகம்

மை பூசி பார்க்கின்ற கண் பார்வை நீலம்

என்னோடு காணாதோ கல்யாண கோலம்

 

மறுநாள்  காலையிலேயே  சொந்த  பந்தங்கள் கற்பகத்தைப்  பார்க்க  வர  ஆரம்பித்து  விட்டார்கள். அந்த  நேரத்தில்  தானு  உடன்  இருக்க  வேண்டாமென முடிவு  செய்த  கற்பகம்  அவர்களை  ஊர்  சுற்றி  பார்க்க என வெளியே அனுப்பினார். சின்னவர்கள் நால்வரும் அருண்  குடும்பத்துடன்  மாந்தோப்புக்கு பிக்னிக்  சென்றார்கள்.

முத்துப்பாண்டிக்கு சொந்தமான மாந்தோப்பு அது. சீசன் காலமானதால் பழங்கள் கொத்து கொத்தாக தொங்கி கொண்டிருந்தன. பிக்னிக்குக்கு தேவையான உணவு வகைகள் , பாய் போன்றவைகளை எடுத்து கொண்டு நடந்தே சென்றார்கள். தானுக்குட்டி விபாவை தூக்க சொல்லி அவனுடனே ஒட்டிக் கொண்டு வந்தாள். தானு அவர்களை கண்டு கொள்ளாமல் அருணுடன் கதை அளந்தவாறு வந்தாள்.

“விபா! பிக்னிக்னா ஆத்தாங்கரைக்கு போவாங்க, இல்ல கடல்கரைக்கு போவாங்க. இங்க என்னடா மாங்கா தோப்புக்கு கூட்டிட்டு போறாங்க. நான் என்ன மசக்கையாவா இருக்கேன்?” என காதை கடித்தான் பிரபு.

“உன் தொப்பைய பார்த்து தப்பா நினைச்சிட்டாங்களோ என்னவோ” என கிண்டலடித்தான் விபா.

“உனக்கும் உன் ஆளுக்கும் என் தொப்பை மேல தான் கண்ணு.  நான்  ஊருக்கு  போறேன், சிக்ஸ் பேக் வைக்கிறேன். அப்ப பாருங்கடா, இந்த பிரபுவோட கெத்த” என சவால் விட்டான்.

“ஏண்டா இந்த வீண் சவடால். சிக்ஸ் பேக் என்ன கடையிலயா விக்கிறாங்க? வாங்கி வச்சிக்க. நீ இப்படி இருக்கிறது தான் மச்சான் அழகு. ”

“அப்படிங்கிறே. சரி விடு. சிக்ஸ் பேக் கர்மமேல்லாம் நமக்கு எதுக்கு. ”

“வேணு, மாங்காய்  பிச்சு  குடுப்பியா  எனக்கு? ” என கேட்டாள் குட்டி.

“பாப்பா, பெரியவங்கள அப்படி பேர் சொல்லி கூப்பிட கூடாது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, என்ன பழக்கம் இது” என கடிந்து கொண்டார் அல்லி.

“வேணு தான் நான் எப்படி கூப்புடனும்னு கேட்டப்போ, வேணுன்னு கூப்ட சொன்னுச்சு. நான் வேணு தான் கூப்டுவேன். அண்ணி மட்டும் வேணு கூப்டுது, நான் கூப்டா என்னா?” என சண்டைக்கு வந்தாள் சின்னவள்.

“நான் எப்போடி அப்படி கூப்பிட்டேன்? பிச்சுருவேண்டி குட்டி” என கடுப்பானாள் தானு.

‘இவ எப்போ கேட்டா? அண்ணன் வேற கூட வரான். . பார்க்கிற பார்வையே சரியில்லையே.பெரிய லெக்சரே குடுத்துருவானே. எதையாச்சும் சொல்லி சமாளி தானு’ என யோசித்தவள்,

“வேணு சார்ன்னு கூப்பிட்டுருப்பேண்டி. உனக்கு சரியா கேட்டுருக்காது”

“நல்லா தான் கேட்டுச்சு. நேத்து நான் தூங்குறன்னு நெனைச்சுகுட்டு வேணு கம்னு படுன்னு சொன்ன. நான் கேட்டேன்”

“சார் போய் படுங்கன்னு சொன்னேன். நீ தூக்க கலக்கத்துல தப்பு தப்பா கேட்டுட்டு இப்படி வத்தி வைக்காதே. சாமி வாயை குத்திரும்”

தானு மாட்டிக் கொண்டு முழிப்பதைப் பார்த்து விபாவுக்கு சிரிப்பாக இருந்தது. அவள் முறைக்கவும் சிரிப்பை அடக்கியவன்,

“தானுக்குட்டி, அங்க பாருங்க. அணில்  ஒன்னு மரக்கிளைல ஓடுது. அணிலுக்கு இங்லீஸ்ல என்ன பேரு சொல்லுங்க” என அவளின் கவனத்தை திசை திருப்பினான்.

தோப்பை அடைந்ததும், அல்லி சமதரையான இடத்தைப் பார்த்து பாயை விரித்தார். பொருட்களை எல்லாம் பாயில் அடுக்கியவர்கள் அப்படியே அக்கடாவென அமர்ந்தார்கள்.

“அல்லி, எல்லோருக்கும் சாப்பாடு போட்டு குடு. நான் போய் கொஞ்சம் மாங்காய் பறிச்சுட்டு வரேன். அப்புறமா உப்பு மிளகாய் தூவி சாப்பிடலாம்” என கிளம்பினான் அருண்.

“மாமா, எனக்கு பழுக்காத பச்சை மாங்காய் தான் வேணும். அப்படியே மாங்காய் இலையும் வேணும்” என கேட்டாள் தானு.

“எதுக்கு மாவிலை? பூர்வ ஜென்மம் ஞாபகம் வந்துருச்சோ. அதான் ஆடு மாடு மாதிரி இலையை சாப்பிட போறீயா?” என கேட்டான் பிரபு.

“நானாச்சும் போன பிறவியில ஆடு மாடா பொறந்தேன். நீ போன பிறவியில கழுதையா பொறந்து சுவத்துல உள்ள போஸ்டரேல்லாம் பிச்சு சாப்பிட்டயாம். உனக்கு பொண்ணு கிடைக்கலைன்னா அத தான் புடிச்சு கட்டி வைக்க போறதா லெச்சும்மா சொல்லிகிட்டு திரியுறாங்க. பீ கேர்பூல்” என மிரட்டியவள் போனை எடுத்து எல்லோரையும்  படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

அல்லி அனைவருக்கும் காலை உணவை தட்டில் வைத்துக் கொடுத்தார். இடியாப்பமும் புட்டும் செய்து கொடுத்து விட்டிருந்தார் வேலம்மா.

“இங்க வா தானுக்குட்டி. அம்மா ஊட்டுறேன்” என அழைத்தார் அல்லி.

“நான் வேணு கிட்ட தான் சாப்டுவேன் “ என அடம் பிடித்தாள் அவள்.

“ரொம்ப பண்ணாதடீ. வா நான் ஊட்டுறேன்” என அழைத்தாள் தானு.

“வேணா போ. நீ என்னைப் பாத்து பாத்து முறைக்கிற. நான் வேணு கிட்டயே சாப்டுக்கிறேன்” என விபாவை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள் சின்னவள்.

விபா தட்டை அல்லியிடமிருந்து வாங்கி, குட்டி தானுவை மடியில் அமர்த்தி கதை சொல்லி கொண்டே ஊட்டினான்.

“உன் பிள்ளைங்கள பார்த்துக்க இப்பவே ட்ரைனிங் எடுக்கறீயா. சரி தான். இந்த வேலை எல்லாம் நீ தான் செய்யனும். எனக்கும் ஊட்டுன்னு வந்து நிப்பாளே தவிர இதெல்லாம் செய்வாளாங்கிறது சந்தேகம் தான்” என விபாவிடம் ரகசியம் பேசினான் பிரபு.

“அதுக்கென்னடா. அவதான் எனக்கு முதல் குழந்தை. அவளுக்கு ஊட்டிட்டு தான் பிள்ளைங்களுக்கு ஊட்டுவேன்.”

“சரியான ஜாடிக்கேத்த மூடிடா நீ. இன்னும் ஒன்னுமே நடக்கல. அதுக்குள்ள ஜிங்குச்சா போடுற பார்த்தியா. அங்க பாரு. உன் ஆளு காதுல இருந்து புகை புகையா வருது. இங்க இருந்து கிளம்புறதுக்குள்ள இந்த குட்டி உங்க ரெண்டு பேருக்கும் டைவோர்ஸ் வாங்கி குடுத்துடும். அது மட்டும் நிச்சயம்”

“போடா! பிள்ளைய ஒன்னும் சொல்லாதே. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம நம்ம மேல பாசம் வைக்க அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். அந்த கேட்டகேரில உன் தங்கச்சியும் ஒருத்தி. உள்ளுக்குள்ள என் மேல பாசம் மலை போல இருக்கு. ஏனோ வெளிய காட்டிக்க பயப்படுற. சீக்கிரம் பயத்தை ஒடைச்சிட்டு என் கிட்ட வருவா. வர வைப்பேன் ”

“நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா சந்தோஷப்படுற முதல் ஆளு நானா தான்டா இருப்பேன்”

“தெரியும் மச்சான். உன் அன்புக்கு நான் எப்போதும் அடிமைடா”

“அங்க என்ன நீங்க ரெண்டு பேர் மட்டும் பேசிக்கிறீங்க? எங்களுக்கும் சொல்லாம்லே” என இடையிட்டாள் தானு.

“உங்க குடும்பத்திலேயே இந்த தானுக்குட்டி மட்டும் எப்படி இவ்வளவு அழகா பிறந்திருக்கான்னு விபா கேட்டான். அதெல்லாம் அல்லி அக்கா சைட்டு ஜெனதிக்கா இருக்கும்னு சொல்லிகிட்டு இருந்தேன்” என விபாவுக்கு ஆப்பை வைத்தான் பிரபு.

விபாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உணடு தட்டோடு தருணின் அருகில் அமர்ந்து கொண்டாள் தானு.

“ஏன்டா பிரபு, எரியற நெருப்புல எண்ணெயை ஊத்துற? அவ பார்க்கிற பார்வையே சரி இல்லைடா.”

“அடிதடி வந்தா தான் லவ் இன்னும் ஸ்ட்ரோங்கா ஆகும். நீ படத்துல பார்க்கல?” என சிரித்தான் பிரபு.

அருண் வந்தவுடன், மாங்காய்களை கழுவி வெட்டி உப்பு மிளகாய் தூவி சாப்பிட்டார்கள். பிறகு அமர்ந்து பல கதைகளையும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் ஒரு ரவுன்டு போயிட்டு அப்படியே கொஞ்சம் படம் பிடிச்சுட்டு வரேன். கொத்து கொத்தா மாங்காய் தொங்குறது ரொம்ப அழகா இருக்கு. “ என எழுந்தாள் தானு.

“ரொம்ப தூரம் போகாதே தானு. நாங்க பார்க்கிற தொலைவிலயே இரு.” என்றான் தருண்.

“நானும் வரேன். என்னையும் போட்டோ புடி” என எழுந்து வந்தாள் தானுக்குட்டி.

இரண்டு தானுவும் சமாதானம் ஆகி ஹை பை கொடுத்துக் கொண்டார்கள். அங்கங்கே நின்று போட்டோ பிடித்தவர்கள் பிறகு ஓடி பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். அவர்கள் கத்தி கூச்சலிட்டு சிரித்து விளையாடுவதை விபா ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

தானு சின்னவளுக்கு கல் எறிந்து மாங்காயை எப்படி விழ வைப்பது என சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தாள். இருவரும் மாறி மாறி மரத்தில் கல் எறிந்து விளையாடினார்கள். விளையாட்டு சுவாரசியத்தில் அவர்கள் எரிந்த கல் ஒரு தேன்கூட்டை தாக்கியதை இருவருமே உணரவில்லை.

தேனீக்கள் கூட்டை விட்டு பறந்து வந்தன இருவரையும் நோக்கி. நிமிடத்தில் நடக்க போகும் விபரீதத்தை உணந்த விபா, வேகமாக சட்டையை கழற்றி விட்டு அவர்களை நோக்கி ஓடினான். அவை நெருங்குவதற்குள் இருவரையும் கீழே தள்ளியவன், சட்டையை அவர்கள் மேல் போர்த்திவிட்டு அவர்களை மறைத்தபடி அவர்கள் மேல் படுத்துக் கொண்டான். ஆத்திரத்தில் வந்த தேனீக்கள் விபாவின் முதுகை பதம்பார்த்து விட்டன.

நிமிடங்களில் நடந்த இந்த அசம்பாவிதத்தை பார்த்து திகைத்துவிட்டனர் மற்றவர்கள். அருண் கொண்டு வந்திருந்த பழைய பேப்பர்களை சுருட்டி, நெருப்பை கொழுத்தி தீ பந்தம் ஆக்கினான். தீ பந்தத்தை தேனிக்களை நோக்கி ஆட்டியபடியே முன்னேறினான். அவனை பின்பற்றி பிரபுவும், தருணும் அப்படியே செய்தார்கள். தீயைப் பார்த்து தேனிக்கள் பயந்து ஓடிவிட்டன.

பயத்தில் அழுது கொண்டிருந்த இருவரையும் வலியிலும் சமாதானப்படுத்தினான் விபா.

“பயப்படாதீங்க. தேனி போயிருச்சு. நான் உங்கள மறைச்சு கிட்டு இருக்கேன். உங்களை ஒன்னும் செய்யாது. ரெண்டு குட்டிமாவும் அழாதீங்க.”

“எழுந்திரீங்க விபா. தேனியை விரட்டிட்டோம்.” என கை கொடுத்து எழுப்பினான் அருண்.

அவனின் வலியிலும் மற்ற இருவரையும் தேனி கொட்டி இருக்கிறதா என ஆராய்ந்தான் விபா. அதற்குள் அல்லி மாங்காய்களை காம்போடு பறித்து வந்திருந்தார். காம்பில் இருந்த பாலை தேனி கொட்டியிருந்த விபாவின் முதுகில் தடவி விட்டார் அவர். வலியில் கண்களை இருக மூடி கொண்டான் விபா.

தானு அவன் கையை பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள். கண்ணை திறந்து அழாதே என தலையை ஆட்டியவன், அவள் கையிலும் தேனி கொட்டி இருந்ததை கண்டு பதறிவிட்டான். மாங்காயை வாங்கி அவனே அவள் கையில் பாலை தடவி விட்டான்.

“வலிக்குதா தானு?”

“இல்லை ஒரு இடத்துல தான் கொட்டி இருக்கு. உனக்கு தான் முதுகு முழுக்க கொட்டி இருக்கு. உனக்கு தான் வலிக்கும்.” என தேம்பி தேம்பி அழுதாள். அவள் அழுது கொண்டே பேசியது மற்றவர்களுக்கு சரியாக கேட்கவில்லை. பயத்தில் தான் அழுகிறாள் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அல்லி குட்டி தானுவை தூக்கி சமாதானப் படுத்தி கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவளுக்கு ஒன்றும் இல்லை.

விபாவின் கையைப் பிடித்து கொண்டிருந்த தானுவை இழுத்து எட்ட நிறுத்திய தருண்,

“உனக்கு அறிவு இருக்கா தானு? இப்படிதான் விளையாட்டு தனமா இருந்து வினையை இழுத்து விட்டுக்கிறதா? உன்னால பாரு, அவருக்கு முதுகே ரணமாகி போயிருச்சு.” என சாரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.

அவன் திட்ட திட்ட தப்பு அவள் மேல் இருந்ததால், தலை குனிந்து அழுது கொண்டிருந்தாள் தானு. விபா பிரபுவை பார்த்து ஒரு முறை முறைத்தான். சிக்னலை புரிந்து கொண்ட பிரபு,

“விடு தருண். அவ என்ன வேணுன்னா செஞ்சா. தெரியாம நடந்த ஒன்னுக்கு இப்படி போட்டு திட்டுற. சும்மா அழுவுற ஆளா இவ, இப்ப பாரு எப்படி அழறா. பயந்து கிடக்கறவள இன்னும் பயம் காட்டிக்கிட்டு ”

“சரி சரி, அழாதே தானு. இனிமே திட்டல” என தங்கையை அணைத்துக் கொண்டான் தருண். அவன் அணைப்பில் இருந்து விபாவையே பார்த்து கண்ணீர் சிந்தினாள் தானு.

“சரி வாங்க, வீட்டுக்கு போகலாம். அம்மா ஏதாவது கை வைத்தியம் செய்வாங்க. அப்புறமா டவுன் ஆஸ்புத்திரிக்கு போகலாம்” என அவர்களை கிளப்பினான் அருண்.

விபாவுக்கு வலியையும் எரிச்சலையும் தாங்க முடியவில்லை. எங்கே வெளியே காட்டினாள் இன்னும் அழுவாளோ என பயந்து சாதாரணமாக இருக்க பாடுபட்டான்.

“ரொம்ப நன்றி விபா. சட்டுன்னு யோசிச்சு ரெண்டு பேரையும் காப்பாத்திட்டீங்க. இல்லைன்னா என்ன ஆகியிருக்குமோ. நினைக்கவே பயமா இருக்கு” என கூறினான் அருண்.

வெளியே போனவர்கள் அழும் தானுவுடன் திரும்பி வரவும் பதறிவிட்டார்கள் வீட்டிலிருந்தவர்கள். விஷயத்தை கேள்விபட்ட வேலம்மா சுண்ணாம்பில் புளி கொஞ்சம் சேர்த்து விபாவின் முதுகில் தடவி விட்டார். வலி கொஞ்சம் மட்டு பட்ட மாதிரி இருந்தது அவனுக்கு.

“நாங்க உனக்கு என்னப்பா செஞ்சோம்? பிள்ளைங்களுக்காக இப்படி நீ வலியை ஏத்துக்கிட்டீயே?” என கண் கலங்கினார் கற்பகம்.

“வலி எல்லாம் எனக்கு புதுசு இல்லம்மா. நான் உயிரோட இருக்கறவரைக்கும் எந்த துன்பமும் என்னைத் தாண்டி தான் தானுவ நெருங்கனும்.” என உணர்ச்சி வசத்தில் சொல்லிவிட்டவன் பிறகே தான் வார்த்தைகளை விட்டு விட்டதை உணர்ந்தான்.

“தப்பா எடுத்துக்காதீங்கமா. நான் தானு பாப்பாவ தான் சொன்னேன்.”

“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு. அவ தான் உன் பின்னாலேயே வாலை புடிச்சுகிட்டு சுத்துறாளே. பாசம் வராம என்ன செய்யும்”

அவர்கள் இருக்கும் அறைக்கு வந்த அருண்,

“வாங்க விபா, கிளம்பலாம். டவுனுக்கு போய் ஒரு ஊசிய போட்டுக்கலாம்.” என அழைத்தான்.

“தானுவையும் கூப்பிடுங்க. அவங்களுக்கும் போடலாம்” என்றான் விபா.

“அவளுக்கு ஒரு இடத்துல தானே கொட்டி இருக்கு. கை மருந்தே போதும். நீங்க போய்ட்டு வாங்க” என்றார் கற்பகம்.

நின்ற இடத்தில் இருந்து அசையாமல் அவன் நிற்கவும்,

“தானு, கிளம்பி இவங்க கூட டவுனுக்கு போய்ட்டு வா” என மகளை அழைத்தார் கற்பகம்.

அருண் வண்டி ஓட்ட, விபாவின் இரு பக்கத்தில் தானுவும் பிரபுவும் அமர்ந்து கொண்டார்கள். தானு சத்தமின்றி அழுது கொண்டே வந்தாள். அவளது கையை தன் மடியில் வைத்துக் கொண்ட விபா,

“அழாத தானும்மா. எனக்கு தான் ஒன்னும் இல்லன்னு சொல்லுறேன்ல. நீ இப்படி அழுதா எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு. ப்ளீஸ் டோன்ட் க்ரை” என குரலை தணித்து மெதுவாக சமாதானப்படுத்தினான்.

சீட்டில் சாயாமல் உட்கார்ந்திருந்தான் விபா. முதுகில் ஒட்டாதவாறு தொள தொளவென தாத்தா கொடுத்த சட்டையை அணிந்திருந்தான். பிரபு இவர்களுக்கு ப்ரைவசி கொடுத்து முன்னால் சாய்ந்து அருணிடம் பேசி கொண்டு வந்தான். யாரும் அறியாமல், விபாவின் சட்டைக்குள் கையை விட்டு மென்மையாக முதுகை தடவி கொடுத்தாள் தானு.

சந்தோஷ அவஸ்தையில் நெளிந்த விபா,

“என்னடி பண்ணுற?”

“தடவி கொடுக்குறேன். என்னால தானே இப்படி ஆச்சு. அதனால நானே பரிகாரம் பண்ணுறேன். இப்ப இங்க யாரும் இல்லாட்டி முதுகு முழுக்க முத்தம் குடுத்திருப்பேன்.”

“என்னம்மா பேச்செல்லாம் ஒரு மாதிரியா வந்து விழுது?”

“இனிமே அப்படிதான் விழும். நீ தானே வாழ்க்கைய அதன் போக்குல வாழனும்னு அட்வைஸ் பண்ண. இனிமே அதை ப்போல்லோ பண்ணுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

“இப்படி எனக்கு இன்ப அதிர்ச்சியை குடுக்காத தானும்மா. நான் செத்து சொர்க்கத்துக்கு போயிர போறேன்”

“அங்கயும் நான் வந்து உன்னை டாச்சர் பண்ணுவேன்.” என்றவள் பிரபுவின் பக்கம் சாய்ந்து தண்ணீர் பாட்டிலை எடுப்பது போல் விபாவின் நெஞ்சில் முத்தமிட்டு விட்டு நல்ல பிள்ளை போல் உட்கார்ந்து கொண்டாள்.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் விபாகர். அவன் இருந்த மனநிலையில் அந்த தேனிக்களுக்கு கோயில் கட்டி தேனீகாம்பாள் வாழ்க என காவடியே தூக்கி இருப்பான்.

தைரியம் பெற்றவனாக  மெல்ல நகர்ந்து தானுவை ஒட்டி அமர்ந்தான் விபா. பிச்சுப்புடுவேன் என சைகை காட்டியவள்,

“அருண் மாமா” என கூப்பிட்டாள்.

விபா அவசரமாக தள்ளி உட்காரவும், அருண் ரியர்வியூ கண்ணாடி மூலம் பார்த்து என்ன என்று கேட்கவும் சரியாக இருந்தது.

“இன்னும் எவ்வளவு தூரம் இருக்குன்னு கேட்க தான் கூப்பிட்டேன்” என சிரிப்புடன் சொன்னாள் தானு.

“ராட்சசி. எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமலா போயிரும். இரு அப்ப வச்சுக்கிறேன்” என முணுமுணுத்தான் விபா.

முகம் மலர புன்னகைத்தவள் ,

“வச்சுக்க, வச்சுக்க” என்றபடி அவன் கைகளை அழுத்தமாக பற்றி கொண்டாள்.

error: Content is protected !!