Mp14

மோகனப் புன்னகையில் 14

விஜயேந்திரனும் சுமித்ராவும் அரண்மனைக்குத் திரும்பி இருந்தார்கள். மங்கையின் பிரச்சினையைக் கொஞ்சம் ஆறப் போட்டால் நன்றாக இருக்கும் என்று கண்ணபிரான் அபிப்பிராயப் படவும் விஜயேந்திரன் கிளம்பி விட்டான்.

கிளம்புவதற்கு முன்பே மங்கையை அழைத்து ஸ்டீஃபன் சம்மதம் சொன்னதைத் தெரிவித்திருந்தான். இளையவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. சுமித்ராவைக் கட்டிக் கொண்டு அவள் கண்ணீர் விடவும் கணவனும் மனைவியும் நெகிழ்ந்து போனார்கள்.

மேலும் ஒரு மாதம் நகர்ந்திருந்தது. அன்று மதிய உணவிற்கு விஜயேந்திரன் அரண்மனைக்கு வந்திருந்தான். நேராக அவன் அந்தப்புரம் வரவும் சுமித்ரா ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“அடடே! அரண்மனைக்காரரே! வாங்க வாங்க. ஏது, இன்னைக்கு இந்நேரத்துக்கு உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கு?” வேண்டுமென்றே அவள் வம்பிழுக்கவும் புன்னகைத்தான் விஜயேந்திரன்.

“எம் பொண்டாட்டி ஞாபகம் வர்றப்போ எல்லாம் நான் வீட்டுக்கு வரணும்னா நான் வீட்டிலயே தான் இருக்கணும்.”

“அது சரி. இந்தச் சக்கரைப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.”

“ஐயையோ! அப்படியா சொல்லுறீங்க?” அவன் வேண்டுமென்றே வில்லத்தனமாகக் கண்ணடிக்க முறைத்துப் பார்த்தாள் சுமித்ரா. அவன் அதற்கும் வாய்விட்டுச் சிரித்தான்.

“சுமித்ரா! சாப்பிட்டுட்டு நாம ரெண்டு பேரும் வெளியே கிளம்புறோம்?”

“ஐயையோ! இன்னைக்கா?”

“ஆமா ஏன்? என்னாச்சு?”

“நான் பசங்களை இன்னைக்கு வரச்சொல்லி இருக்கேனே?”

“பசங்களா? யாரு அது?”

“கங்காக்குத் தெரிஞ்ச பசங்க. நாட்டியம் கத்துக்கணும்னு சொன்னாங்க. சரி, இன்னைக்குக் கூட்டிட்டு வான்னு சொன்னேன்.”

“அதை நாளைக்குப் பார்க்கலாம். இப்போ சாப்பாட்டை முடிச்சிட்டு கிளம்பு அம்மு.”

“கண்டிப்பாப் போகணுமா?”

“அட! ஆமாங்கிறேன்.”

“அப்படி எங்க போறோம்?”

“அது சஸ்பென்ஸ்.” மர்மமாகச் சிரித்தான் கணவன்.

“ப்ளீஸ்… சொல்லுங்களேன்.”

“சொன்னா எனக்கு என்ன குடுப்பே?”

“உங்களுக்கு என்ன வேணும்?”

“எனக்கு என்ன பிடிக்கும்னு தான் உனக்குத் தெரியுமே.”

“சரி. இன்னைக்கு வெளியே போய்ட்டு வந்ததுக்கு அப்புறமா அரண்மனைக்காரருக்கு மட்டும் தனியா நாட்டியக் கச்சேரி. சரியா?”

“அது!”

“இப்போ சொல்லுங்க. எங்கே போறோம்.”

“ஏர்போர்ட் க்கு.”

“ஏர்போர்ட் க்கா? எதுக்கு? ஓ… ஸ்டீஃபன் வர்றாரா என்ன?” சுமித்ராவின் குரலில் இனம்புரியாத மகிழ்ச்சி.‌ மங்கைக்கும் அவளுக்கும் இடையில் அழகானதொரு புரிதல் உருவாகி இருந்ததால் மங்கைக்கு ஆனந்தம் கொடுக்கும் அனைத்தும் இவளுக்கும் இனித்தது.

“இல்லை.”

“இல்லையா? அப்போ யாரு… விஜீ… அத்தானா? அத்தான் வர்றாங்களா? விஜீ… வர்றது அத்தானா?” அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தாள் சுமித்ரா. அவள் கொண்டாட்டம் அவனையும் தொற்றிக்கொண்டது.

“ஆமா… ஆமா… இப்போவாவது நாட்டியப் பேரொளி சீக்கிரம் ரெடி ஆகுறீங்களா?” சொன்னபடி சிரித்தான் விஜயேந்திரன்.

“இதோ! பத்து நிமிஷத்துல ரெடி ஆகிறேன்.” பரபரத்தவளைப் பிடித்து நிறுத்தினான் கணவன்.

“அந்த மயில்கழுத்து நிறத்துல ஒரு சேலை இருக்கில்லை? அதைக் கட்டு அம்மு. அப்புறம் கங்கா க்கிட்டச் சொல்லி பூ நிறைய வெச்சுக்கோ. அப்புறம் இந்தக் கண்ணுக்கு ஏதோ போடுவே இல்லை…”

“ஐயோ விஜி! இப்படியே பேசிக்கிட்டு இருந்தா அங்கே அத்தான் வந்திருவாங்க. நான் ரெடியாக வேணாமா?”

“அதுவும் சரிதான். அப்படியே என் வீட்டுக்காரி எனக்குக் கொஞ்சம் சாப்பாடு போட்டா நல்லா இருக்கும்…” வேண்டுமென்றே அவன் இழுக்க இப்போது பல்லைக் காட்டினாள் சுமித்ரா.

“நாம இன்னும் சாப்பிடல்லை இல்லை… நான் அதை மறந்தே போயிட்டேன் விஜி.” மனைவியின் ஒவ்வொரு செய்கைக்கும் மலர்ந்து புன்னகைத்தான் அரண்மனைக்காரன். 

ஏதோ ஒரு பரபரப்போடே ஆயத்தமாகிக் கணவனோடு கிளம்பி இருந்தாள் சுமித்ரா. விஜயேந்திரனிடம் கேட்க அவளுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தது.

“ஏன் விஜி? நீங்க அத்தானைப் பார்த்து அஞ்சு வருஷம் இருக்குமா?”

“ரோஸி எப்படி இருப்பாங்க விஜி? எங்கூடப் பேசுவாங்களா?”

“அத்தானோட பையனுக்கு ரெண்டு வயசுன்னு சொன்னாங்க. பார்க்க யாரு மாதிரி இருக்கும் குழந்தை?”

‘விஜி விஜி’ என்று அவனைத் துளைத்து எடுத்து விட்டாள் சுமித்ரா. அத்தனைக்கும் சலிக்காமல் ஒரு புன்னகையோடே மனைவிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

மங்கையின் வீட்டிலிருந்து வந்த உடனேயே கரிகாலனைத் தொடர்பு கொண்டு விட்டான். ஸ்டீஃபன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சொல்லா விட்டாலும் லேசாகச் சொல்லி இருந்தான்.

கரிகாலனுக்குத் திடீரென்று லீவு போட முடியாத படியால் உடனடியாகக் கிளம்ப முடியவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாக போஸ்ட் ஆஃபீஸுக்குக் கால் பண்ணித் தகவல் சொல்லி இருந்தான்.

விஜயேந்திரன் யாரிடமும் சொல்லவில்லை. சுமித்ராவிடம் சொன்னால் ஆர்வக் கோளாறில் ஒரு வேளை தகவல் அவள் வீட்டிற்குப் போக வாய்ப்பு இருப்பதால் அதையும் தவிர்த்திருந்தான். 

ஒரு வழியாகக் கணவனும் மனைவியும் ஏர்ப்போர்ட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அந்த ப்ளாக் அம்பாஸிடரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே போக அப்போதுதான் ஃப்ளைட் தரையிறங்கிய அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.

“வெளியே வர இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும் விஜி?”

“இந்த ஃப்ளைட் மட்டும் தான் இப்போ வந்திருக்கிறதால எப்படியும் ஒரு அரை மணி நேரத்தில வந்திருவாங்கடா.”

“ஓ… அவ்வளவு நேரம் எடுக்குமா?”

“உங்களுக்கு எதுக்கு இன்னைக்கு இவ்வளவு அவசரம்?” 

“தெரியலை விஜி. பெயருக்குத் தான் அவங்க எனக்கு அத்தான். எங்க வீட்டிலேயே இருந்ததால எனக்கு எப்போவுமே அத்தான் ரொம்ப நல்ல ஃப்ரென்ட். வீட்டுல மத்தவங்க கிட்ட சொல்ல முடியாத விஷயங்களைக் கூட அத்தான் கிட்ட ஈஸியாப் பேசுவேன்.”

“என்னைப் பத்தி என்ன பேசி இருக்கீங்க? உங்க அத்தான் கிட்ட?” கேட்ட கணவனின் கண்களில் அத்தனை ஆர்வம்.

“உங்களைப் பத்தி எதுவும் பேசினதில்லை.” இப்போது மனைவியின் முகத்தில் லேசான வெட்கம்.

“ஏன் அப்படி?”

“பசங்க ரோட்ல கலாட்டா பண்ணினா அத்தான் கிட்ட வந்து சொல்லிடுவேன். ஆனா இந்தப் பையன் தான் எந்தக் கலாட்டாவும் பண்ணலையே.”

“ஓ… கலாட்டா பண்ணி இருந்தா சொல்லி இருப்பீங்களோ உங்க அத்தான் கிட்ட? அவரு என்ன பண்ணி இருப்பாராம்? வந்து என் சட்டையைப் பிடிச்சு ‘நீ எப்படிடா என் முறைப் பொண்ணை சைட் அடிக்கலாம்’ னு சண்டை போட்டிருப்பாரோ?” கூட்டத்தையும் பாராமல் அவள் இடை வளைத்தான் அரண்மனைக்காரன்.

“விஜி! என்ன பண்ணுறீங்க?”

“பதில் சொல்லுடி.” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பயணிகள் வெளியே வர ஆரம்பித்ததால் இருவர் கவனமும் அங்கே போனது.

சற்று நேரத்திலெல்லாம் கரிகாலன் பைகளைத் தள்ளிக் கொண்டு வருவது தூரத்தில் தெரிந்தது.

“விஜி! அத்தான்!” கண்ணீர் கலந்த குரலில் குதூகலித்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் இங்கிருந்து கையை ஆட்ட கரிகாலனும் கையை ஆட்டினான். 

ட்ராலியில் பைகளோடு மகனையும் சேர்த்து உட்கார வைத்துக் கரிகாலன் நடக்க கூடவே அந்தப் பெண்ணும் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

‘ரோஸி.’ கரிகாலனின் மனைவி. ஜாடையில் நடிகை ஸ்ரீ தேவியைப் போல இருந்தாள் பெண். சுமித்ரா வீட்டிலும் எல்லோரும் அரைத்த வெண் சந்தனத்தைப் போல நல்ல நிறமாக இருப்பார்கள். கரிகாலனும் கனடா வாசத்தில் ஜம்மென்று தான் இருந்தான்.

பக்கத்தில் அவர்கள் வரவும் சுமித்ரா தான் ஓடிப்போனாள்.

“அத்தான்.” கண்களில் கண்ணீர் நிரம்ப அவள் அழைத்த போது கரிகாலனுக்கும் கண்கள் கலங்கி விட்டது. 

“சுமிம்மா.” என்றவன் அவளைத் தவிர்த்து விட்டு சட்டென்று விஜயேந்திரனிடம் போய் அவனைக் கட்டிக் கொண்டான்.

“ராஜா! எப்படி இருக்கே?” கரிகாலனின் குரல் தழுதழுத்தது.

“நல்லா இருக்கேன் பா. ரொம்ப நல்லா இருக்கேன்.” விஜயேந்திரனுமே கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனான்.

சுமித்ராவிற்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. கரிகாலனை அவள் அவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்திருக்க அவன் தன்னைத் தவிர்த்துத் தன் கணவனிடம் நட்புப் பாராட்டியது அவளை லேசாக வருத்தியது.

அப்போதுதான் ரோஸியின் மீது கவனத்தைத் திருப்பியவள் புன்னகைத்தாள்.

“எப்படி இருக்கீங்க ரோஸி?”

“ம்… நல்லா இருக்கேன். நீங்க?” மிகவும் தயக்கத்திற்கு மத்தியில் வந்தது ரோஸியின் குரல். 

“ரொம்ப நல்லா இருக்கேன். குட்டிப் பையன் அவ்வளவு அழகா இருக்கான். எங்கிட்ட வருவானா?” ரோஸி தன்னிடம் நெருங்கத் தயங்குவதை உணர்ந்த சுமித்ரா சட்டென்று சகஜமானாள்.

“பெருசா யார்க்கிட்டயும் போக மாட்டான்.” ரோஸி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தையை நோக்கிச் சுமித்ரா கையை நீட்ட ஒரு கணம் அம்மாவைத் திரும்பிப் பார்த்த குழந்தை சுமித்ராவிடம் தாவிக் கொண்டது.

“அடடே! சின்னக் குட்டி எங்கிட்ட வந்துட்டானே?”

“அதானே! எனக்கே ஆச்சரியமா இருக்கு சுமித்ரா. நான் இல்லைன்னா உங்க அத்தான் தான். ஸ்டீஃபன் கிட்டக் கூடப் போக மாட்டான். உங்க கிட்ட சட்டுன்னு வந்துட்டான்.”

“பின்னே இருக்காதா? எங்க அத்தையோட வாரிசு எங்கிட்ட வராம வேற யார்கிட்ட போவானாம்?” உரிமையாக சுமித்ரா சொல்ல ரோஸியின் முகம் மலர்ந்து போனது.

பெண்கள் இருவரும் கடந்த காலத் தயக்கங்களை மறந்து நட்புக் கரம் நீட்டிக் கொண்டார்கள்.

“சின்னக் குட்டியைப் பார்த்தீங்களா விஜி? யார்கிட்டேயும் போக மாட்டானாம்.‌ நான் கூப்பிடவும் சட்டுன்னு வந்துட்டான்.” குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனிடம் வந்த சுமித்ரா கரிகாலனும் விஜயேந்திரனும் பேசிக் கொண்டிருப்பதைக் கூடக் கருத்தில் கொள்ளாது இடை மறித்தாள்.

“சுமித்ரா, என்ன இது? இப்படி பெயர் சொல்லிக் கூப்பிடுறே?” கரிகாலன் குரலில் அத்தனை ஆச்சரியம். தங்களுக்கு நண்பன் என்றாலும் ‘ராஜா’ என்ற வார்த்தை தவிர அவர்கள் வட்டத்தில் வேறு பெயர் இல்லை. அத்தனை நெருக்கமாக விஜயேந்திரனை அழைக்க அத்தனை பேரும் தயங்குவார்கள்.

“ஏன் அத்தான்? அவங்களுக்குப் பெயர் வெச்சதே நான் கூப்பிடத்தானே?” சுமித்ராவின் பதிலில் இப்போது விஜயேந்திரனின் கண்களில் மின்னல் தெறித்தது.

“ஏய்! என்னம்மா பேசுறே நீ?”

“விடுங்க கரிகாலன். வாய் இப்போல்லாம் ரொம்பத்தான் நீண்டு போச்சு.” குறும்பாகச் சிரித்தபடி விஜயேந்திரன் அவள் இதழ்களைச் சுண்டிவிட அழகு காட்டினாள் பெண்.

கரிகாலனுக்கு மனது நிறைந்து போனது. சுமித்ராவின் வாழ்க்கை இத்தனை நாளும் தன்னால் பாழ்பட்டு விட்டது என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு அவர்களது அன்னியோன்யம் ஆனந்தமாக இருந்தது.

ரோஸியைப் பார்த்துப் புன்னகைக்க அந்தப் பெண் முகத்திலும் ஒரு ஆறுதல்ப் புன்னகை தவழ்ந்தது.

“அத்தான்! இன்னைக்கு ராத்திரியே அத்தைக்கு ஃபோனைப் போட்டு நாளைக்கு துவாரகா கிளம்பி வாங்க ன்னு சொல்லணும்.”

“சுமிம்மா… அவசரப்படாதே. கொஞ்சம் ஆறுதலா எல்லாமே பண்ணலாம்.”

“ம்ஹூம்… நீங்க எதுவும் பேசக்கூடாது அத்தான். இந்தப் பயலைப் பார்த்ததுக்கு அப்புறமும் அத்தை கோபம் தாக்குப் பிடிக்கும்னு நினைக்கிறீங்களா?”

“அதுக்கில்லை சுமிம்மா…”

“உங்க பேச்சு எதுவும் இனி எடுபடாது. நான் சொல்ற படி மட்டும் கேளுங்க.” கரிகாலனுக்கு ஆணையிட்டவள் அதன் பிறகு குழந்தையைக் கொஞ்சத் தொடங்கி விட்டாள்.

பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக விஜயேந்திரன் ஏற்பாடு பண்ணி இருந்த வீட்டிற்கு எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். இம்முறை விருந்தினரை ஏனோ அரண்மனையில் தங்க வைக்காமல் வீடொன்றை ஏற்பாடு பண்ணி இருந்தான் விஜயேந்தின். 

கரிகாலனுக்கு மூன்று வாரங்கள் விடுமுறை கிடைத்திருந்தது. மங்கையின் வீட்டிலிருந்து வந்த உடனேயே கரிகாலனோடு பேசி இருந்தான் அரண்மனைக்காரன்.

உடனேயே புறப்பட்டு வர முடியாததால் இப்போது கிளம்பி வந்திருந்தது கரிகாலன் குடும்பம். ரோஸி பார்க்க அத்தனை அழகாக பாந்தமாக இருந்தாள். 

குழந்தை கொள்ளை அழகாக இருந்தான். ரவிவர்மன் என்று பெயர் வைத்திருந்தார்கள். கொழு கொழுவென்று பச்சரிசிப் பல்லோடு சிரித்தவனை சுமித்ரா யாரிடமும் கொடுக்கவில்லை. தன்னோடே வைத்துக் கொண்டாள்.

கரிகாலனுக்காக ஏற்பாடு பண்ணியிருந்த வீட்டில் சமையலுக்கும் ஆட்களை அமர்த்தி இருந்ததால் இவர்கள் வந்து சேர்ந்த போது சாப்பாடும் ஆயத்தமாகி இருந்தது.

பயணக் களைப்புத் தீரக் குளித்து முடித்து இரவுச் சாப்பாட்டையும் முடிக்கும் போது குழந்தை உறங்கி இருந்தான். பெண்கள் இருவரும் பரஸ்பரம் விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள ஆண்கள் இருவரும் வீட்டின் முற்றத்திற்கு வந்திருந்தார்கள்.

“கரிகாலன்.”

“சொல்லு ராஜா.”

“ஸ்டீஃபன் பத்தி நீ என்னப்பா முடிவெடுத்திருக்க?” விஜயேந்திரன் நேரடியாகவே கேட்கக் கரிகாலன் கொஞ்ச நேரம் அமைதி காத்தான்.

“மனசுல என்ன இருந்தாலும் அதை மறைக்காம சொல்லு கரிகாலா.”

“ராஜா… உங்க குடும்பத்துல பொண்ணு எடுக்க நாங்க குடுத்து வெச்சிருக்கணும்.”

“அப்புறம் ஏன் தயங்குற?”

“ஏற்கெனவே உங்க குடும்பத்துக்கு நாங்க ஒரு பொண்ணு குடுத்திருக்கோம் ராஜா.”

“சரி… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சுமித்ரா வாழ்க்கையில என்னால ஏற்கெனவே பல குழப்பங்கள். இப்போதான் எங்க ஒட்டு மொத்த குடும்பமே நிம்மதியா மூச்சு விடுறோம்.”

“…………..”

“இப்போ இன்னொரு பிரச்சினை என்னால திரும்பவும் வந்ததுன்னா… என் குடும்பம் என்ன, என் மனசாட்சியே என்னை மன்னிக்காது ராஜா.”

“அப்படி என்ன பிரச்சினை என்னைத் தாண்டி சுமித்ராக்கு வந்திரப் போகுது?”

“உங்க அம்மாக்கும் சுமித்ராக்கும் இன்னைக்கு வரைக்கும் நல்ல உறவு இல்லை ராஜா.”

“கரிகாலா… அது…”

“இல்லையில்லை… உங்கம்மாவை நான் எந்த விதத்திலும் தப்பு சொல்லமாட்டேன். அவங்களுக்கும் உள்ளது ஒரே பையன். உங்க குடும்ப கௌரவத்துக்கும் அந்தஸ்துக்கும் அவங்க எவ்வளவோ கனவு கண்டிருப்பாங்க. அத்தனையும் சுமித்ராவால நாசம் ஆனப்போ அவங்க கோபம் நியாயமானது தான்.”

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற கரிகாலா?”

“எனக்கு சுமித்ரா வாழ்க்கை தான் முக்கியம் ராஜா. இதைப் பத்தி நான் ரோஸி கிட்டக் கூடப் பேசிட்டேன்.”

“என்ன சொன்னாங்க?”

“ஸ்டீஃபனோட ஆசையை விட அவளுக்கு சுமித்ரா வாழ்க்கை தான் முக்கியம் னு அவளும் தெளிவா சொல்லிட்டா.”

“……….”

“எங்க நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எங்க ரெண்டு பேராலயும் சுமித்ரா அவளோட வாழ்க்கையில அஞ்சு வருஷத்தைத் தொலைச்சிட்டு நிக்குறா. உங்க ரெண்டு பேரையும் இப்படி அன்னியோன்யமா பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அந்த சந்தோஷம் நிலைக்கணும் ராஜா.”

“சரிப்பா. இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிக்கணுமா என்ன? பார்க்கலாம்.” பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டவன் சுமித்ராவோடு கிளம்பி விட்டான்.

“அத்தான்! நாளைக்கு விடிஞ்சதும் வந்திருவேன். இனி உங்க பையன் என் பொறுப்பு, சரியா?”

“உன் இஷ்டம் சுமிம்மா. எப்போ வேணும்னாலும் நீ தாராளமா வா.” சுமித்ராவின் தலையைத் தடவிய படியே கண் கலங்கினான் கரிகாலன். ரோஸியும் வெளியே வந்தவள் சுமித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“சுமித்ரா…” ஏதோ சொல்ல வாயெடுத்தவள் சுமித்ராவின் கரங்களைக் கண்களில் ஒற்றிய படி தேம்பித் தேம்பி அழுதாள்.

“ஐயோ! ரோஸி என்ன இது? எதுக்கு இப்போ அழுறீங்க? விஜி… என்ன ஆச்சு? அத்தான் எதுக்கு ரோஸி இப்போ அழுறாங்க?” சுமித்ரா தவித்துப் போனாள்.

கரிகாலன் மனைவியைத் தேற்ற முயற்சிக்கவில்லை. அமைதியாகவே நின்றான். ஆனால் கண்கள் மட்டும் கலங்கிச் சிவந்திருந்தன. அவர்கள் குற்ற உணர்ச்சிகள் எல்லாம் அந்தக் கண்ணீரில் கரைந்து போயினவோ!

“ரோஸி… இங்கப்பாருங்க. எதுக்கு இப்போ நீங்க அழுறீங்கன்னு எனக்குப் புரியலை. நான் நல்லாத்தான் இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். உங்களுக்கும் அத்தானுக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. சரியா? விஜி… நீங்க சொல்லுங்களேன். ரோஸியை அழ வேணாம்னு சொல்லுங்களேன்.” மனைவி கிடந்து தவிக்கவும் விஜயேந்திரன் சுமித்ராவின் பக்கத்தில் வந்தான்.

“அம்மு… அஞ்சு வருஷமா அவங்க மனசுக்குள்ள அடங்கி இருந்த குற்ற உணர்வு. இப்போ வெடிக்குது. அது வெளியே வர்றது தான் அவங்களுக்கும் நல்லது. அப்போதான் அவங்களுக்கு நிம்மதியா இருக்கும். கரிகாலா! உள்ளே கூட்டிக்கிட்டுப் போப்பா. போய் ரெஸ்ட் எடுங்க. நாங்களும் கிளம்புறோம்.” சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள் விஜயேந்திரனும் சுமித்ராவும். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தான் நகர்ந்தார்கள் பெண்கள் இருவரும்.

கரிகாலன் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் சுமித்ராவின் வாய் ஓயாது பேசிக் கொண்டிருந்தது. 

“விஜி… குட்டிப் பையன் ரொம்ப அழகா இருக்கான் இல்லை. அந்த ஊர்க் குழைந்தங்க மாதிரி தான் இருக்கான் இல்லையா?”

“ம்…”

“விஜி… குளிர்காலம் வந்தா ரொம்பக் கஷ்டமா இருக்குமாம். ரோஸியால தாங்கவே முடியாதாம். அத்தானுக்கு பழகிடுச்சாம். ஆனா இவங்க ரொம்பக் கஷ்டப் படுவாங்களாம்.”

“அப்படியா…”

“ம்… வீட்டு வாடகையே லட்சக்கணக்கில வருமாம் விஜி. முன்னாடி ரோஸியும் வேலைக்குப் போனாங்களாம். குழந்தை பொறந்ததுக்கு அப்புறமா அத்தான் வேணாம்னு சொல்லிட்டாங்களாம்.”

“ஓ…” 

அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு ஒன்பதைத் தாண்டி இருந்தது. அரண்மனையே அமைதியான இருளில் மூழ்கி இருக்க விஜயேந்திரனும் சுமித்ராவுடன் அந்தப்புரம் வந்தான். 

லேசான குளியலோடு மெல்லிய காட்டன் புடவைக்கு மாறியவள் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். ஏற்கெனவே குளியலை முடித்திருந்த கணவன் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான்.

“சுமி…”

“ம்…” விளக்கை அணைத்து விட்டு நைட் லாம்ப் ஐ ஆன் பண்ணியவள் திரும்பிப் பார்த்தாள். 

“இன்னைக்குக் மத்தியானம் யாரோ என்னவோ சொன்னதா ஞாபகம்.”

“என்ன விஜி?” கேட்ட பிறகுதான் அவனுக்குப் பிடித்ததைக் கொடுக்க ஒப்புக் கொண்டது ஞாபகம் வந்தது. அன்றைக்கு அவளுக்கிருந்த மன நிலையில் கணவன் கேட்டிருக்கா விட்டால் கூட அவன் கேட்டது நடந்திருக்குமோ என்னவோ!

ஒரு புன்னகையோடு அலமாரியைத் திறந்தவள் அதிலிருந்த டேப் ரெக்கார்டரை எடுத்தாள். கேசட் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவள் அதை ஒலிக்கவும் விட்டாள்.

ஜேசுதாஸின் குரலில் பாரதியின் வரிகள் அறையை நிரப்பியது. சாய்ந்திருந்த விஜயேந்திரன் எழுந்து உட்கார்ந்தான்.

‘சுட்டும் விழிச் சுடர் தான் – கண்ணம்மா…’

அந்தக் கண்கள் இரண்டும் சுழன்று வீசிய வீச்சில் அரண்மனைக்காரன் கூப்பிடாமலேயே மனைவியின் அருகில் வந்திருந்தான்.

நாட்டியத்திற்கு ஏற்றவாறு ஒரே பாடல் வரி திரும்பத் திரும்ப ஒலிக்க சுமித்ரா ஒவ்வொரு தடவைக்கும் வெவ்வேறு அபிநயம் பிடித்தாள்.‌ அந்த நயன பாஷையில் அரண்மனைக்காரன் கவிழ்ந்து போனான்.

“பாரதி சரியாச் சொல்லலை அம்மு.” மெல்லிய ஒலியில் பாடல் ஒலித்ததால் இவன் குரல் அதையும் தாண்டித் தெளிவாகக் கேட்டது. ஆட்டத்தை நிறுத்தாமல் புன்னகைத்தாள் சுமித்ரா.

“பாரதியையே குறை சொல்லுவீங்களோ?”

“காதல்னு வந்துட்டா பாரதி என்ன அந்தக் கம்பனையே வம்புக்கிழுக்கலாம்.”

“பாரதி எதைச் சரியாச் சொல்லலை?” பேச்சு பேச்சாக இருக்க பாட்டும் நடனமும் தொடர்ந்தது.

“இந்தக் கண்களோட ஒளியை சூரிய சந்திரனுக்கு ஒப்பிடுறாரே… இங்க இருந்து சதா என்னை நோக்கி அம்பு வருதே… இதயத்தைப் புண்ணாக்குதே… அதைச் சொல்லலையே அம்மு அந்த பாரதி!” 

‘வட்டக் கரிய விழி – கண்ணம்மா…’ பாடலில் ஒலித்த வரியை தானும் ஒரு முறை தன் ஆழ்ந்த குரலால் பாடலோடு சேர்ந்து உச்சரித்தான் கணவன்.

“இது உண்மை தான்.” அவன் இப்போது பாரதியை சிலாகிக்கப் புன்னகைத்தாள் சுமித்ரா.

‘வாலைக் குமரியடீ – கண்ணம்மா…’ இப்போது பாடலை அவனும் சேர்ந்து பாடினான். அந்தக் குரலின் வசீகரம் சுமித்ராவை என்னவோ பண்ணியது. விஜயேந்திரனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

மருவக் காதல் கொண்டேன்… ஆமா… மீள முடியாம தானே பைத்தியக்காரன் போல காத்துக்கிட்டுக் கிடந்தேன்.”

‘சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா…’

“ஆமா… அடிக்கடி இப்போல்லாம் சாத்திரம் தான் பேசுறே நீ.”

“அப்படி என்ன பேசிட்டேனாம்?”

“பக்கத்துல வந்தா ஆயிரம் ரூல்ஸ் போடுறே தானே?”

‘மூத்தவர் சம்மதியில் – வதுவை…’ இப்போது அவன் பார்வை அவளைப் பிரித்து மேய்ந்தது. அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு அடி வைத்து அந்த முகத்தை அப்புறாகத் திருப்பி விட்டாள்.

“சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம் எல்லாம் பார்த்து அனுமதியும் வாங்கியாச்சு அம்மு.” சொன்னவன் டேப் ரெக்கார்டரில் பாடலை நிறுத்தி இருந்தான்.

அந்தக் குரல் மட்டும் இப்போது பாடலின் அடுத்த வரிகளைத் தானாகப் பாடியது.

‘காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று…’ பாடல் நின்றவுடன் கடைசியாகப் பிடித்த அபிநயத்தோடு அசையாமல் அப்படியே நின்றிருந்தாள் சுமித்ரா. லேசாக மூச்சு வாங்கியது.

பாடலைப் பாடி முடித்த அரண்மனைக்காரன் அவள் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் வைத்தான். 

“விஜீ… டான்ஸ் பண்ணும் போது இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு பல தடவை சொல்லி இருக்கேன்.” கட்டிலில் வந்து அமர்ந்தபடி அவள் குரல் அவனை மிரட்டியது.

“வீட்டுல மிரட்டுறது பத்தாதுன்னு இன்னைக்கு கரிகாலன் முன்னாடியும் வேணுமின்னு விஜி விஜி எங்கிற இல்லை நீ?” அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன் தானும் கட்டிலில் சரிந்து கொண்டான்.

“ஆ… வலிக்குது. பின்னே என்னவாம்? எப்பப் பாரு ராஜா ராஜான்னுக்கிட்டு. எந்த ஊருக்கு ராஜாவாம் நீங்க?” அவள் குரலில் வழிந்த கேலியில் அவன் கண்கள் மின்னியது.

“எந்த ஊருக்கு ராஜாவா இருந்தா என்ன இல்லாட்டா என்ன? உனக்கு நான் தானேடீ ராஜா!” அவன் கைகள் இப்போது அவளை வளைத்துக் கொண்டது. 

“எனக்கு ராஜாவா நீங்க? நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” 

“ஏன்? நீ சொன்னதே இல்லையா? அன்னைக்கு…” அவர்கள் அந்தரங்கங்களை அவன் பட்டியலிட ஆரம்பிக்க அவன் வாய் மூடினாள் சுமித்ரா.

“விஜீ! சரி… நீங்க தான் ராஜா… ராஜாதி ராஜா… சக்கரவர்த்தி… போதுமா?” அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையானது.

“போதாது… போதாதுடி.” அந்தக் குரலில் இப்போது போதை வழிந்தது.

 

ராஜ ராஜ சோழன் நான்… எனை ஆளும் காதல் தேசம் நீதான்…