MP16

MP16

மோகனப் புன்னகையில் 16

மனைவியின் முகத்தைப் பார்த்தபடியே வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தான் கரிகாலன். நம் ஊர்களைப் போல மனைவியே அத்தனை வேலைகளையும் பார்க்கட்டும் என்று இருப்பவர்கள் அல்ல வெளிநாட்டுக் கணவன்மார்.

அதிலும் குழந்தை என்று வந்து விட்டால் அம்மா அப்பா இருவருமே வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நல்ல பழக்கத்தை ஆஃபீஸில் பிடித்துக் கொண்ட கரிகாலன் மகனின் வேலைகளில் எப்போதும் பங்கெடுப்பான். 

தன் பாட்டில் கைகள் மகனைக் குளிப்பாட்டினாலும் கண்கள் என்னவோ ரோஸியையே வட்டமிட்டன.

நேற்று துவாரகா விலிருந்து வந்தவுடன் அங்கு நடந்தது அத்தனையையும் அவளிடம் ஒப்புவித்து விட்டான். அத்தை தன்னை அரவணைத்துக் கொண்ட ஆனந்தத்தில் இருந்தவனுக்கு அம்மா தன்னை நிராகரித்தது மறந்து போனது.

ஆனால் அந்த விஷயம் ரோஸியை வெகுவாகக் காயப்படுத்தியது. படுக்கைக்குச் செல்லும் வரை மௌனமாகவே நடமாடியவள் பாதி ராத்திரியில் கண்ணீர் விடவும் தான் கணவனுக்கு அவள் மன வேதனை புரிந்தது.

‘ரோஸி! என்னாச்சு? ஏன் இப்போ அழறே?’ கணவன் பதறவும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் பெண்.

‘ஒன்னுமில்லை அத்தான். நீங்க தூங்குங்க.’ சமாளித்த மனைவியின் புறமாக எழுந்து வந்தவன் அவளை ஹாலிற்கு அழைத்து வந்தான். சின்னச் சத்தத்திற்கும் ரவி எழுந்து விடுவான்.

‘என்னாச்சு ரோஸி.’

‘ஒன்னுமில்லை.’ அந்தப் பதிலை நம்பாதவன் அவள் முகத்தை நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்தான். அந்தப் பார்வையில் அவள் கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.

‘இல்லை… எனக்குத்தான் அம்மா அப்பா இல்லை. உங்களுக்கு எல்லாம் இருந்தும்… என்னால…’ மேலே பேச அவளால் முடியவில்லை.

‘இது என்ன பேச்சு? உனக்கு எனக்கு ன்னு தனித்தனியா. இத்தனை நாளும் இப்படி இருக்கலையே ரோஸி?’

‘அத்தான்!’ கதறிய படி தன் மார்பில் சாய்ந்தவளை அணைத்துக் கொண்டான் கரிகாலன்.

‘இந்தியா வர்றதால நீ இப்படியெல்லாம் கஷ்டப்படுவியா இருந்தா இனிமே நாம இங்க வர வேணாம் ரோஸி.’

‘ஐயோ அத்தான்! என்ன பேச்சு இது? நான் அப்படி யோசிக்கலை. ஒவ்வொரு வருஷமும் இனித் தவறாம நாம இந்தியா வரணும். உங்க அம்மா அப்பாவைப் பார்க்கணும்.’

‘அப்புறம் என்னடா? எதுக்கு அழற?’

‘இல்லை… காலேஜ் நாட்கள்ல நானாத் தான் உங்களை நெருங்கினேன். இல்லைன்னா நீங்க…’

‘இல்லைன்னா நான் உன்னை நெருங்கி இருப்பேன். அவ்வளவு தான் வித்தியாசம். புரியுதா?’ மனைவியைப் பாதியில் நிறுத்தியவன் மீதியை அவன் முடித்தான்.

‘என்னடி பேச்சு இது? கல்யாணம் பண்ணிக் கொழந்தையும் பெத்ததுக்கு அப்புறமாப் பேசுற பேச்சா இது? விட்டேன்னா பாரு ஒரு அறை!’ வாய் அடிப்பதாகச் சொல்ல, கை அணைப்பை இறுக்கியது.

‘அப்படி இல்லை அத்தான். அப்போ எல்லாம் என்னை நானே ரொம்பக் கட்டுப்படுத்திக்குவேன். என் காதல் எங்கேயும் வெளியே தெரிஞ்சிடக் கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதையா தான் இருப்பேன்.’

‘அது மத்தவங்களுக்கு வேணும்னா பொருந்தும் ரோஸி. எங்கிட்டேயே நீ மறைப்பியா?’

‘அதான்… எனக்கும்…’

‘இங்கப்பாரு ம்மா. அம்மா அப்பா இப்படி இருக்கிறது எனக்கும் வருத்தம் தான். ஆனா மாறுவாங்க. கண்டிப்பா மாறுவாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. மாறாட்டிக் கூட அதுக்கு நீ மட்டும் பொறுப்பு இல்லை ரோஸி. நானும் தான். யாரு நம்மளை வெறுத்தாலும் நமக்குள்ள எந்த விரிசலும் வந்திடக்கூடாது. புரியுதா?’

‘ம்…’ 

‘இப்போ தூங்கலாமா?’

‘ம்…’

‘ஆனாலும் கனடாக் குளிர்தான் நிறைய விஷயங்களுக்கு வசதி இல்லை ரோஸி!’ சரசமாகப் பேசிய படிதான் மனைவியோடு கண்ணயர்ந்திருந்தான் கரிகாலன்.

இரவு நடந்தது எல்லாவற்றையும் அசை போட்ட படி மகனைத் தயார் பண்ணியவன் ரூமிற்கு வந்தான். ரோஸி அப்போதுதான் குளித்து முடித்திருந்தாள்.

“ரோஸி.”

“சொல்லுங்க அத்தான்.

“இன்னைக்கு அத்தை வர்றேன்னு சொன்னாங்க. புடவை கட்டிக்கோ.”

“சரி அத்தான்.”

“கட்டத் தெரியுமில்லை?”

“ஏன்? இல்லைன்னா நீங்க கட்டிவிடப் போறீங்களா?”

“தாராளமா!”

“ரொம்ப வழியாம முதல்ல வெளியே போங்க.” கணவனை ரூமை விட்டு வெளியே தள்ளியவள் தன்னிடமிருந்த ஒன்றிரண்டு புடவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள்.

இந்தியாவில் இருக்கும் வரை தினம் ஞாயிறுகளில் சர்ச்சுக்குப் போகும்போது புடவை தான். கனடா போன பிற்பாடு அங்கு அடிக்கும் குளிருக்குப் புடவையாவது ஒன்றாவது! 

மகன் பிறந்த பின்னர் வசதிக்கு ஏற்றவாறு ஆடைகள் மாறிப் போயின.

சரியாகப் பதினொரு மணியளவில் வந்தார் தமிழ்ச்செல்வி. ரோஸி கொஞ்சம் வெலவெலத்துப் போனாள். கரகாலனின் வீட்டுப் பெரியவர்களில் ஒருவர். 

சுமித்ரா இவர்கள் வயதை ஒத்தவள் என்பதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது படபடப்பாக இருந்தது.

“அத்தை! வா வா.” அத்தையைக் கைப்பிடித்து அழைத்து வந்த கரிகாலன் நடு வீட்டில் அவரை நிறுத்தி தம்பதி சகிதமாக ஆசீர்வாதம் வாங்கினான். 

“நல்லா நீடூழி காலம் சிறப்பா வாழணும்.” வாய் வாழ்த்திய போதும் கண்கள் ரோஸியைத் தான் அளவெடுத்தது. மனைவியைத் தோளோடு அணைத்த கரிகாலன்,

“அத்தை! எப்படி இருக்கா எம் பொண்டாட்டி?” என்றான். கூச்சத்தோடு விலகினாள் ரோஸி.

“கரிகாலா! ஸ்ரீ தேவி மாதிரி இருக்காப்பா உம் பொண்டாட்டி. நீ குப்புற விழுந்த ரகசியம் இப்போ தான் எனக்குப் புரியுது டா.” 

“ஹா… ஹா…” அத்தையின் பேச்சில் வாய்விட்டுச் சிரித்தான் கரிகாலன். ரோஸி யின் முகம் சிவந்து போனது.

“இங்க பூஜையறை எங்க இருக்கு?”

“எதுக்கு அத்தை? அங்கே இருக்கு.” கரிகாலன் கை காட்ட அங்கே போன செல்வி குங்குமச் சிமிழோடு திரும்பி வந்தார்.

“இங்கப் பாரும்மா ரோஸி. பொண்ணுங்க வெறும் நெத்தியா இருக்கப்படாது. எப்பவும் குங்குமம் வெச்சுக்கணும்.” சொன்னதோடு நிற்காமல் தானே குங்குமத்தை வைத்தும் விட்டார். 

கரிகாலன் ஒரு வித சங்கடத்தோடு ரோஸியைப் பார்த்தான். மனைவி எப்போதும் பொட்டு வைக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். அவனும் வற்புறுத்த மாட்டான்.

“வரும்போது உனக்குத் தாம்மா பூவும் வாங்கிட்டு வந்தேன்.” சொல்லியபடி குண்டு மல்லியையும் தன் கைகளாலேயே வைத்து விட்டார் தமிழ்ச்செல்வி.

பூவும் பொட்டுமாக மனைவியைப் பார்த்த போது கரிகாலனுக்கே ஆசையாக இருந்தது.

“அங்கப் பாரு அவன் கண்ணை. உன்னையே வட்டம் போடுது. டேய் பயலே! நான் இன்னும் இங்க தான் நிக்கிறேன்.” அத்தையின் கேலியில் கரிகாலனும் புன்னகைத்தான்.

“நல்ல வேளை தாலியாவது கட்டினானே.”

“சர்ச்சுல வச்சுத் தாலி கட்டினேன் அத்தை.”

“என்னது? சர்ச்சுல மோதிரம் மாத்துவாங்க ன்னு தானே கேள்விப் பட்டிருக்கேன்! அதெப்படி நீ தாலி கட்டினே?”

“கனடா ல நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில எந்தக் கோயிலிலும் இல்லை. ஐநூறு மைல் தாண்டிப் போகணும். ரோஸி வந்து இறங்கின உடனேயே கல்யாணம் பண்ணணும். இல்லைன்னா வேற பிரச்சினை ஆகிடும். அதால சர்ச்சுல வெச்சே தாலியைக் கட்டிட்டேன்.” இலகுவாகப் பதில் சொன்னான் கரிகாலன்.

தமிழ்ச்செல்வி யின் முகம் இருண்டு போனது. அந்தப் பழைய மனுஷியால் இதையெல்லாம் அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“சரி, அதை விடு அத்தை. இன்னைக்கு எங்க கூட உக்கார்ந்து நீ சாப்பிட்டுட்டுத் தான் போகணும்.”

“இல்லை கரிகாலா. நான் இன்னொரு நாள் வர்றேனே.”

“அதெல்லாம் இல்லை. நீ இன்னைக்கு எங்க கூட தான் இருக்கப் போறே. எதுவும் பேசக் கூடாது.”

கரிகாலன் உறுதியாகச் சொல்லி விட தமிழ்ச் செல்வியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சற்று நேரத்தில் சுமித்ராவும் வந்து விட வீடு ஜே ஜே என்று ஆகிப்போனது.

இவர்கள் போட்ட சத்தத்தில் குழந்தையும் எழும்பி விட வீடு களை கட்டியது. கரிகாலனுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. தான் இழந்த ஏதோ ஒன்று தன்னிடம் திரும்பி வந்தது போல உணர்ந்தான்.

ரவி இன்றைக்கு தமிழ்ச்செல்வியிடம் லேசாக அண்டி இருந்தான். நேற்றைக்குப் போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. 

அத்தையின் கைப்பக்குவத்தில் கரிகாலன் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தான். அம்மா சமையலை விட அத்தையின் சமையலை அவன் ருசி பார்த்தது தானே அதிகம்.

எல்லாம் ஓய்ந்து அம்மாவும் மகளும் துவாரகா வந்த போது மணி நான்கைக் கடந்திருந்தது. தமிழ்ச்செல்வி வீட்டுக்குள் வரும் போதே தில்லை வடிவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“எங்க போயிருந்த செல்வி?”

“எம் பையன் வீட்டுக்கு அண்ணி.” எதையும் மறைக்காமல் தெளிவாக வந்தது பதில்.

“எங்களையெல்லாம் விட உம் பையன் தான் இப்போ உனக்குப் பெருசாப் போயிட்டான் இல்லை?”

“கண்டிப்பா! நாம எல்லாரும் வாழ்ந்து முடிச்சவங்க. எனக்கு வாழப்போற சின்னஞ் சிறுசுங்க தான் இப்போ முக்கியம்.” பெண்கள் இருவரும் வாக்குவாதம் பண்ணும் போது அவர்களின் கணவன்மார் சோஃபாவில் அமர்ந்த படி அமைதியாக இருந்தார்கள்.

“அண்ணா! உங்க மகன் குடும்பம் நடத்துற அழகை நீங்க பார்க்கணுமே. உங்க மருமக கண்ணுக்கு லட்ஷணமா அவ்வளவு அழகா இருக்கா. கூடவே அந்தக் குட்டிப் பயல்.” செல்வி வேண்டுமென்றே சங்கரனை விளித்துப் பேச அவர் முகம் கவலையில் வாடியது.

“ரவிக்குட்டி இன்னைக்கு எங்கிட்ட கொஞ்சம் வந்தான் ங்க. சுமித்ராக்கு அப்புறமா நம்ம குடும்பத்திலேயே வந்திருக்கிற குழந்தை அவன். அவனை நாம தாங்க வேண்டாமா?” இப்போது தனது கணவனைப் பார்த்துப் பேச்சுத் தொடர்ந்தது.

“சுமித்ரா! போகும் போதே பூ வாங்கிட்டுப் போனேன். குங்குமம் வெச்சுப் பூவும் வெச்ச உடனே இந்தப் பொண்ணு கிறிஸ்டியன் பொண்ணு தான்னு என்னால நம்பவே முடியலை. ஏதோ நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரியில்லை இருக்குறா.”

“ம்… ரொம்ப நல்ல மாதிரித்தான் தெரியுறா இல்லைம்மா?”

“ஆமா சுமித்ரா. மாஞ்சு மாஞ்சுல்ல கவனிக்குறா. ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அது போதாதா நமக்கு. நம்ம கரிகாலனும் நல்லாத் தேறிட்டான் போ. கூட மாட ஒத்தாசை எல்லாம் பண்ணுறான். என்னடாப்பா, இதெல்லாம் நீ பண்ணுறே ன்னு கேட்டேன். வெளிநாட்டுல இப்படித்தான் அத்தை. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்குப் போறதால வீட்டுலயும் ரெண்டு பேரும் வேலை செய்வாங்கன்னு சொன்னான்.”

அம்மாவும் பொண்ணும் பேசப் பேச தில்லை வடிவின் முகம் பல பாவங்களைக் காட்டியது. முறுக்கிக் கொண்டு நின்றாலும் அங்கிருந்து நகரவில்லை. இவர்கள் பேசி முடித்த போது தொய்வாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

சுமித்ரா அம்மாவை ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். செவ்வியின் கண்களும் வடிவைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

“அண்ணா! என்னோட மனசுல ஒன்னு தோணுது ண்ணா.” 

“சொல்லு செல்வி.” இது சங்கரன்.

“குடும்பம், வீட்டு மனுஷங்க எல்லாம் இருந்தும் ஏதோ அநாதை மாதிரிக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அது அவனாத் தேடிக்கிட்டது. அதைப் பத்தி நான் பேச விரும்பலை. ஆனா, முறைப்படி எதுவும் நடக்கலை போலத் தெரியுது ண்ணா.”

“என்னம்மா சொல்லுற நீ?”

“தாலி கட்டித்தான் கல்யாணம் பண்ணி இருக்கான். ஆனா சர்ச்சுல வச்சுக் கட்டினேன் ங்கிறான்.”

“என்ன!” அடைக்கல நம்பியும் அதிர்ந்து போனார்.

“எனக்கும் கரிகாலன் சொன்னப்போ இப்படித்தான் இருந்திச்சு. ஆனா அந்தப் பொண்ணு அங்க இருக்கிறப்போ அப்படியெல்லாம் பேசக் கூடாது இல்லையா? நமக்கு நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் எவ்வளவு முக்கியமோ அது மாதிரித் தானே அந்தப் பொண்ணுக்கும். அதை நாமளும் மதிக்கணும் இல்லை.”

“நீ சொல்றது ரொம்பச் சரி செல்வி. இங்கப்பாரு வடிவு! இதுக்கு மேலேயும் பெரியவங்க நாங்க வாயை மூடிக்கிட்டு வேடிக்கை பார்த்தா நல்லா இருக்காது. நேத்து நீ பேசினது அத்தனையும் நியாயம் தான் இல்லேங்கலை. அதனால தான் நானும் உம் புருஷனும் உனக்கெதிரா வாயைத் திறக்கலை. ஆனா இதுக்கு மேலேயும் அவங்களை ஒதுக்கி வெக்கிறது நல்லதாப் படலை. நீயும் கொஞ்சம் இறங்கி வந்தா நல்லா இருக்கும்னு தான் எனக்குத் தோணுது.” நம்பி லேசாகக் குரலை உயர்த்தித் தங்கையிடம் பேசவும் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

“மாப்பிள்ளை! நான் சொல்லுறதை நீங்களாவது கேளுங்க. தப்பே பண்ணி இருந்தாலும் அவன் நம்ம வீட்டுப் பையன். அவன் எந்தப் பொண்ணுக்கும் அநியாயம் பண்ண நினைக்கலை. தன்னை நம்பின பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்திருக்கான். இடையில தேவையில்லாத வேலைகள் பண்ணினது நாம தான். இல்லைன்னா அவன் ஏன் கண் காணாத தேசத்துல கல்யாணம் பண்ணப் போறான்?”

சங்கரன் எதுவும் பேசவில்லை. மனைவியின் முகத்தை மட்டும் நிமிர்ந்து பார்த்தார். முகம் சிவந்து போய் கண்கள் கலங்க உட்கார்ந்திருந்தார் தில்லை வடிவு.

“உறவு கொண்டாட வேணாம். ஆனா முறைப்படி ஊரறியக் கல்யாணம் பண்ணி வெப்போம். அது தான் சரின்னு எனக்குப் படுது. நீங்களும் வடிவும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க மாப்பிள்ளை.” பேசி முடித்த நம்பி நகர்ந்து விட்டார். 

சுமித்ரா அத்தையின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள். ஆதரவாய் அவர் கைகளைப் பற்ற அத்தையின் கண்களில் இருந்து மளமளவென்று கண்ணீர் கொட்டியது.

தான் கொண்டு வத்திருந்த பையிலிருந்து இரண்டு ஆல்பங்களை எடுத்தவள் அதைப் பிரித்தாள். சங்கரனும் சுமித்ராவிற்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்.

“இது அத்தானோட கல்யாண ஆல்பம். இது ரவியோடது.” சொன்னவள் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினாள். 

கரிகாலனின் திருமணம் அத்தனை விமர்சையாக நடைபெறவில்லை என்று படங்களைப் பார்க்கும் போதே புரிந்தது. மணமக்கள் இருவர் முகத்திலும் சந்தோஷத்தையும் தாண்டி ஒரு இறுக்கம் தெரிந்தது. 

அடுத்தது ரவிவர்மன் ஆல்பம். பிறந்தது முதல் இன்று வரை ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்டு இருந்தது. ஆல்பங்களை அங்கிருந்த மேசை மேல் வைத்த சுமித்ரா நகர்ந்து விட்டாள். 

தனது ரூமிற்குள் சென்றவள் மெதுவாக எட்டிப் பார்க்க… சுமித்ரா அமர்ந்திருந்த நாற்காலியில் சங்கரன் அமர்ந்திருந்தார். கணவனும் மனைவியுமாக ஆளுக்கொரு ஆல்பத்தை மடியில் வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டிருந்தார்கள். அத்தையின் கை படத்தில் இருந்த ரவியின் முகத்தை ஆசையாகத் தடவியது.

????????????

அரண்மனைக்குச் சுமித்ரா திரும்பிய போது லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. கணவன் வீடு திரும்ப எப்படியும் எட்டு மணி ஆகுமென்பதால் நிதானமாகவே கிளம்பி வந்திருந்தாள்.

விஜயேந்திரனும் அதற்கு எப்போதும் தடை சொன்னதில்லை. தன் தாயும் சுமித்ராவோடு நட்புக்கரம் நீட்ட மறுக்கும் பட்சத்தில் பாவம் அவளும் தான் என்ன செய்வாள்? எத்தனை நேரம் தான் தனியாக உட்கார்ந்திருப்பாள் என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொள்வான்.

ஆல்பங்களைப் பார்த்த போது அத்தையின் முகத்தில் தெரிந்த ஆசை, கவலை சுமித்ராவிற்கு லேசான நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.

சங்கரன் மாமாவை இளகச் செய்வது சுலபம் தான். ஆனால் அத்தை தான் அத்தனை சுலபத்தில் மசிய மாட்டார். 

“சுமித்ரா!” ஏதேதோ யோசனையில் முகத்தில் புன்னகையோடு அமிழ்தவல்லியின் ரூமைக் கடக்கும் போது அதிகாரமாக வந்தது குரல்.

சுமித்ரா அதிர்ந்து நின்று விட்டாள். தன் மாமியார் இதுவரை தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததில்லையே? இன்று என்ன புதிதாக இருக்கிறது? அதுவும் குரலில் இத்தனை கோபம்!

ஒன்றும் புரியாமல் அமிழ்தவல்லியின் ரூமிற்குள் போனாள் சுமித்ரா. எதிரே நின்றவரின் கண்கள் அவளைத் துளைத்தது.

“எங்க போயிட்டு வர்றே?”

“அம்மா… வீட்டுக்கு.” சுமித்ராவின் குரல் தந்தி அடித்தது.

“கூட வந்த உம் புருஷன் எங்க?”

“இல்லை… அவங்க வரலை.”

“இது என்ன புதுப் பழக்கம்? ஒரு பொண்ணு வீட்டை விட்டு வெளியே போகும்போது அவ புருஷன் கூடத்தான் போகணும்னு உனக்குத் தெரியாதா?”

“அவங்களுக்கு நிறைய… வேலை இருக்குன்னு சொன்னாங்க.” தயக்கமாகவே வந்தது இளையவளின் குரல். குற்றவாளியைப் போல நிற்க வைத்துக் கேள்வி கேட்கவும் லேசாகக் கண்ணைக் கரித்தது சுமித்ராவிற்கு.

“வேலை இருக்குதுன்னு தெரியுதில்லை. முடிஞ்சதுக்கு அப்புறம் போக வேண்டியது தானே. அப்படி என்ன அவசரம்?”

“இல்லை… அத்தான் கனடா ல இருந்து வந்திருக்காங்க… அதான்…”

“யாரு? உன்னை அம்போன்னு நடு ரோட்டுல விட்டுட்டுப் போனானே, அவனா?” அந்தக் கேள்வி சுமித்ராவைச் சுளீரென்று தாக்க நிமிர்ந்து பார்த்தாள். 

அமிழ்தவல்லியின் முகத்தில் தெரிந்த கேலி அவளைச் சீண்டிப் பார்த்தது. இருந்தாலும் இயலாமையால் மௌனமாகவே நின்றிருந்தாள். 

“இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்குத் தான் புத்தியில்லை ன்னு இத்தனை நாளும் நினைச்சிருந்தேன். இப்பத்தானே புரியுது. கோதை வீட்டுல இருக்கிறவங்களும் புத்தியைக் கடன் குடுத்துட்டாங்கன்னு.”

இப்போது விஷயம் லேசாகப் பிடிபட்டது சுமித்ராவிற்கு. மங்கை விஷயம் அரண்மனை வரை வந்திருக்கிறது. யார் சொல்லி இருப்பார்கள்?

“அதென்ன? உன்னைச் சார்ந்தவங்க எல்லாருமே சொக்குப் பொடியோட தான் அலைவீங்களா?” வார்த்தைகள் கனமாகத் தெறித்தது. சுமித்ராவின் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தன. ஆனாலும் வார்த்தையை விடவில்லை.

“ஊரார் வீட்டுப் பஞ்சாயத்தைப் பார்க்கிற நேரத்துக்கு இந்த வீட்டைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம். கல்யாணம் பண்ணி மூனு மாசம் ஆச்சுது. நல்லதா ஒரு சேதி காதுல இன்னும் விழலை. அந்த எண்ணம் கொஞ்சமாவது மனசுல இருக்கா? இல்லை அதுக்கும் துப்பில்லையா?” 

அதற்கு மேல் சுமித்ரா அங்கே நிற்கவில்லை. வேகமாகத் தன் அறைக்குள் வந்தவள் கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டாள். உடம்பு படபடவென நடுங்கியது. 

என்ன மாதிரியான வார்த்தைகள்! ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் கூடப் பேசலாமா? 

‘துப்பில்லையா!’ அப்படியென்றால் என்ன? என்ன சொல்ல வருகிறார் இந்தப் பெரிய மனுஷி? தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்கிறாரா? 

உடல் முழுவதும் தணல் போல ஏதோ ஒரு உணர்வு பரவிப் படர அத்தனை கோபமும் இப்போது விஜயேந்திரன் மேல்ப் பாய்ந்தது.

எத்தனை முறை சொல்லி இருப்பாள். இந்தக் கல்யாணம் வீணான பிரச்சினைகளுக்கு இடம் வகுக்கும், உன் அம்மாவின் கோபம் முழுதாக என் மேல் தான் பாயும் என்று. கேட்டானா… அவள் சொன்னது எதைத் தான் கேட்டான்? இது போதாதென்று இப்போது அவள் மீதே பழி விழுகின்றதே!

மகனுக்கு நுரைக்க நுரைக்கக் காதலிக்க வேண்டும். அம்மாவிற்கு அரண்மனைக்கு வாரிசு வேண்டும். இதற்கு இடையில் நான் கிடந்து அல்லாட வேண்டுமா? நான் என்ன முடியாது என்றா சொன்னேன்?

ரவியைப் பார்த்தது முதல் மனதுக்குள் கனன்று கொண்டிருந்த ஆசை, அதற்குத் தூபம் போடுவது போல இன்று மாமியார் பேசிய பேச்சுக்கள் என அனைத்தும் அலைக்கழிக்க கட்டிலில் விழுந்து ஒரு மூச்சு அழுதாள் சுமித்ரா. 

எத்தனை அடக்க முயன்றும் கண்ணீர் நிற்க மறுத்தது. எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ! ரூமிற்குள் சட்டென்று லைட் எரியவும் எழுந்து உட்கார்ந்தாள் சுமித்ரா.

விஜயேந்திரன் தான் நின்றிருந்தான். முகத்தைத் திருப்பிக் கொண்டவள் பாத்ரூமிற்குள் போக எத்தனிக்க, அவள் கைப் பிடித்துத் தடுத்தான் கணவன்.

“என்ன ஆச்சு சுமி?” அந்தக் கேள்வியில் மீண்டும் கண்ணீர் வரத்துடிக்க அவன் கையை உதறியவள் பாத்ரூமிற்குள் சென்று விட்டாள்.

விஜயேந்திரன் ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்தான். வீட்டிலிருந்து கங்கா மூலமாக அவனுக்குத் தகவல் வந்திருந்தது. 

தங்களையும் மனிதர்களாக மதித்து நடக்கும் ஐயாவை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் ஐயாவை விட இன்னும் ஒரு படி மேலாகத் தங்கள் மேல் அக்கறை எடுக்கும் சுமித்ராவின் மேல் அரண்மனையில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் பக்தி என்றே சொல்லலாம்.

சுமித்ராவின் தலையைக் காணவும் அவளுக்குக் காஃபி எடுத்துக் கொண்டு வந்த கங்கா அமிழ்தவல்லி பேசிய அனைத்தையும் கேட்டிருந்தாள். 

பிரச்சினை என்னவென்று புரியாத போதும் விரும்பத்தகாத நிகழ்வொன்று நடந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டவள் அவசரமாக ஐயாவுக்கு ட்ரைவர் மூலம் தகவல் அனுப்பி இருந்தாள். 

விஜயேந்திரனும் தகவல் கிடைத்தவுடனேயே கிளம்பி விட்டிருந்தான். மனைவி இருந்த கோலம் கவலையைக் கொடுத்தாலும் அவள் கோபம் அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

பாத்ரூம் கதவு திறந்து கொள்ளவும் திரும்பிப் பார்த்தான் அரண்மனைக்காரன். அழுதழுது முகம் வீங்கி இருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருக்க அவள் கன்னத்தில் கை வைத்தான். சட்டென்று அந்தக் கையைத் தட்டி விட்டாள் சுமித்ரா.

“அம்மு… எதுக்குடா இவ்வளவு கோபம்?”

“நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்?” அவன் வார்த்தைகள் முடியுமுன்னமே வெடித்தாள் மனைவி.

“என்ன சொன்னே?”

“மங்கை ஸ்டீஃபன் விஷயம் சரியா வராது.‌ இது வேணாம்னு சொன்னேனா இல்லையா?”

“ம்… சொன்னே.”

“அப்போ நான் சொன்னதை நீங்க கேட்டிருக்கணுமா இல்லையா?”

“உன் பேச்சுல நியாயம் இருந்திருந்தா நான் நிச்சயம் கேட்டிருப்பேன் சுமி.”

“அப்போ என் பேச்சுல நியாயம் இல்லை அப்படித்தானே?” அவள் கோபம் முழுவதும் கணவன் மேல் மோதி நின்றது. விஜயேந்திரன் எதுவும் பேசவில்லை.

“இந்த ஸ்டீஃபன் யாரு? ரோஸியோட தம்பி. ஏதோ என்னோட தம்பி மாதிரியில்லை உங்கம்மா பேசுறாங்க. அதென்ன வார்த்தை ‘சொக்குப்பொடி’. சொல்லுறப்போவே ஒரு மாதிரிக் கேவலமா இருக்கு. அதைப் போட்டு உங்களை நான் மயக்கி வெச்சிருக்கேனாம். எனக்குத் தேவையா இதெல்லாம்?” 

ஸ்டீஃபனைச் சுமித்ரா சாதாரணமாகப் பேசவும் விஜயேந்திரனுக்கு லேசாகக் கோபம் எட்டிப்பார்த்தது. ஆனால் அதன் பிறகு அவள் பேசிய பேச்சில் தன்னையும் அறியாமல் சிரித்து விட்டான் அரண்மனைக்காரன்.

“சரியாத்தானேடி சொல்லி இருக்காங்க.” சிரிப்பினூடே வார்த்தையை விட்டான் கணவன். 

“விஜீ… வேணாம். நீங்களும் அதே வார்த்தையைச் சொல்லாதீங்க. அப்புறம் சொல்லிட்டேன்.”

“என்னடீ பண்ணுவே? இல்லை என்னடீ பண்ணுவே ங்கிறேன். இந்த அரண்மனைக்காரனையே மிரட்டுவியா நீ? அம்மா என்னத்தைச் சொல்ல… நானே சொல்லுவேன். சொக்குப்பொடி போட்டுத்தான் என்னை நீ மயக்கி வெச்சிருக்கே. நல்லாச் சொல்லுவேன். என்னடீ பண்ணுவே?” அவள் கைப்பிடித்து அருகே இழுத்தவன் அவளை நகர விடாமல் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“விடுங்க விஜி.” 

“முடியாது. என்னமோ பண்ணுவேன்னு சொன்னியே. இப்போப் பண்ணு அதை.” திமிறிய மனைவியை இலகுவாக முறையடித்தவன் அவள் கண்களையே பார்த்தான். 

அத்தனை அருகில் தெரிந்த அந்த விழிகள் எப்போதும் போல இப்போதும் அவனை வசீகரித்தது. 

“சுமித்ரா!” அவன் குரலில் காதல் வழிந்தது.

“உங்கக் கொஞ்சலை ரசிக்கிற மூடுல நான் இப்போ இல்லை. என்னை விடுறீங்களா?”

“பார்த்தியா! நீ என்னைத் திட்டுற. அப்பவும் எனக்கு உன்னைக் கொஞ்சத் தோணுதே. இதுக்குப் பெயர் தான்டீ சொக்குப் பொடி.”

“விஜீ… திரும்பத் திரும்ப அதே வார்த்தையைச் சொல்லாதீங்க. எனக்கு வலிக்குது.”

“என்னோட அமைதிப் பூங்காக்கே இவ்வளவு கோபம் வருதுன்னா… அம்மா ஏதோ தப்பாப் பேசித்தான் இருக்காங்க. சொல்லு, இப்போ என்னவாம் அவங்க பிரச்சினை?”

“மங்கை விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.”

“எப்படி?”

“அது எனக்குத் தெரியாது.”

“சரி… அதை நான் பார்த்துக்கிறேன். வேற என்னவாம்?”

“தனியா அத்தான் வீட்டுக்குப் போனது தப்பாம். உன்னை அம்போன்னு விட்டுட்டுப் போன அத்தானான்னு கேக்குறாங்க.” லேசாக விசும்பினாள் சுமித்ரா.

அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான் கணவன். தாங்களே அதை மறந்து போனாலும் இந்தச் சமூகம் அதை மறக்க விடாதா?

“இதெல்லாம் கூடப் பரவாயில்லை. கல்யாணம் ஆகி மூனு மாசம் ஆச்சாம்.”

“சரி… இப்போ அதுக்கு என்னவாம்?”

“அவங்க காதுக்கு இன்னும் நல்ல சேதி வரலையாம்.” இப்போது உண்மையாகவே விஜயேந்திரன் தலையில் கையை வைத்துக் கொண்டான். 

அவனவனுக்கு சந்தோஷமாக் காதலிக்கத்தான் குடுத்து வெக்கலை. கல்யாணத்துக்கு அப்புறமா அதைப் பண்ணித் தொலைக்கலாம்னு பார்த்தா அதுக்கும் இத்தனை தடங்கலா! 

“அம்மு! எனக்குப் பசிக்குது. சாப்பாடு போடு.”

“இப்போ உங்களுக்குப் பசிக்குமே. இத்தனை நேரமும் வராத பசி இப்போ டாண்ணு வந்திடுமே.”

“அடியேய்! உண்மையாவே பசிக்குது.”

“கங்காக்கிட்ட சொல்லுங்க. சாப்பாடு போடுவா.”

“ஏன்? கங்கா தான் எம் பொண்டாட்டியா? அவ சாப்பாடு போடுறதுக்கு?” 

“போற போக்கைப் பார்த்தா அப்படி ஏதாவது ஏற்பாடு நடந்தாலும் நடக்கும்.”

“சுமித்ரா!” வாய்க்குள் முணுமுணுத்த மனைவியை கடிந்தான் கணவன்.

“என்ன வாய் ரொம்ப நீளுது.” அவன் குரலில் இப்போது கோபம்.

“எனக்கு அதுக்குத் துப்பில்லைன்னு உங்கம்மா தான் சொல்லுறாங்களே.” கண்களில் நீரோடு ரூமை விட்டு வெளியேறி விட்டாள் சுமித்ரா.

விஜயேந்திரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவன் அம்மாவின் வார்த்தைகள் அவனுக்கே எரிச்சலைக் கொடுத்தது. பிரச்சினையை உண்டு பண்ணப் பெண்களுக்கு ஒரு சிறு துரும்பே போதும் என்று அவனுக்குப் புரியவில்லை.

குளியலை முடித்தவன் மனைவிக்காகக் காத்திருந்தான். கங்கா உணவோடு வர,

“சுமித்ரா எங்க?” என்றான் மெல்லிய குரலில்.

“சமையல்க் கட்டுல நிக்குறாங்க ஐயா. பாவம் அம்மா. முகம் வாடிப்போச்சு. நீங்களும் எதுவும் உங்க பங்குக்கு எங்கம்மாக்குச் சொல்லிடாதீங்க ஐயா. அம்மா தாங்க மாட்டாங்க.” கங்கா வின் பேச்சில் வியந்து போனான் விஜயேந்திரன்.

அடேங்கப்பா! அந்த அம்மா என்னைப் படுத்துற பாடு எனக்குத் தானே தெரியும். இதுல இங்க இருக்கிற அத்தனை பேரும் நாட்டியப் பேரொளிக்கு சப்போர்ட்டு வேற. என் நேரந்தான்.

எங்கிட்ட மட்டும் தான் அந்த வாய் அத்தனை பேசும். மத்தவங்க முன்னாடி நல்ல பிள்ளை மாதிரி முகத்தை வெச்சுக்குவா!

இருக்குடி இன்னைக்கு உனக்கு. அந்த வாய் இன்னைக்கு ஏதாவது பேசட்டும். என்ன பண்ணுறேன் பாரு!

சுமித்ரா உள்ளே வரவும் அவளையே பார்த்திருந்தான் விஜயேந்திரன். எதுவும் பேசாமல் அவனுக்குப் பரிமாற ஆரம்பித்தாள்.

“நீயும் உட்காந்து சாப்பிடு சுமி.”

“பரவாயில்லை. நீங்க சாப்பிடுங்க.” 

அவளைக் கைப்பிடித்துத் தன்னருகே அமர்த்தியவன் அவளுக்கு ஊட்டி விட்டான். மறுக்கவில்லை பெண்.

உண்டு முடித்த பின் அத்தனையையும் ஒழுங்கு படுத்தியவள் எதுவும் பேசாமல் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள். 

“சுமி…”

“…………”

“அம்மு…” அவளை நெருங்கி அவள் கழுத்து வளைவில் தனது முகத்தை வைத்துக் கொண்டான்.

“மத்தவங்களுக்காக நம்மால வாழ முடியாதுடா.”

“மத்தவங்க பிரச்சினை இல்லாம நம்மால வாழ முடியும் விஜி.”

“ஸ்டீஃபன் நமக்கு எவ்வளவோ நல்லது பண்ணி இருக்கான் சுமி.” 

“உங்க சொத்து அத்தனையையும் ஸ்டீஃபனுக்குக் குடுத்திடுங்க.”

“அந்தச் சொத்தை விட நான் பண்ணப் போறதுதான் ஸ்டீஃபனுக்கு நான் செய்யப்போற மிகப்பெரிய மரியாதை சுமித்ரா. அதுதான் அவனை சந்தோஷப் படுத்தும்.”

“இத்தனை பேரோட விருப்பமின்மையோட அந்தக் காதல் தேவையில்லை.”

“சுமித்ரா!”

“உங்க அத்தை மூலமாத்தான் இங்க தகவல் வந்திருக்கணும். பெத்த அம்மாக்கே சம்மதமில்லாத காதல் மங்கைக்கும் தேவையில்லை.”

“எங்கம்மாக்கும் பிடித்தமில்லாமத் தான் நானும் என்னோட காதலை நிறைவேத்திக்கிட்டேன்.”

“நான் அதையும் தான் தப்புன்னு சொல்லுறேன்.” இந்த வார்த்தைகள் அரண்மனைக்காரனைக் கோபப்படுத்தியது. மனைவியைத் தன் புறமாகத் திருப்பியவன் அந்தக் கண்களைக் கோபத்தோடு பார்த்தான்.

“அப்போ உனக்கு நான் வேணாமா சுமித்ரா?”

“நம்மைச் சுத்தி இருக்கிறவங்க எதிர்ப்போட, பெத்து வளர்த்தவங்க சம்மதம் இல்லாம நமக்கு மட்டுமே சந்தோஷத்தைக் குடுக்கிற இந்தக் காதல் எதுக்கு விஜி?”

“அப்போ… உனக்கு நான் வேணாமா சுமித்ரா?” மீண்டும் அதே வார்த்தைகளையே கேட்டான் கணவன்.

அவள் புரிந்து கொள்ளவில்லை. தன் வார்த்தைகள் அவனைக் காயப்படுத்துவதை அவள் அறியவில்லை.

இதுவரை மனைவியின் முகம் பார்த்து அவள் மனம் படித்த கணவன் முதன்முறையாகக் காணாமற்ப் போயிருந்தான். அவள் உணர்வுகளை மதிக்காமல் தன் நிலையில் மட்டுமே அன்று நின்றிருந்தான் அரண்மனைக்காரன்.

“வேணும் விஜி. எனக்கு நீங்க மட்டும் தான் வேணும்.” அந்த வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வரும்வரை அவளை விட்டு அவன் அகலவேயில்லை.

 

error: Content is protected !!