MP20

MP20

மண்டபம் நிறைந்திருந்தது. நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நிறைவாக நடந்து கொண்டிருந்தன.

அனைத்து நிகழ்வுகளும் மங்கையின் குடும்ப வழக்கப்படியே நடைபெற்றுக் கொண்டிருந்தன. ரோஸியும் ஸ்டீஃபனும் எந்த முகச் சுணக்கமும் இல்லாமல் இயல்பாகவே எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்கள்.

‘மாப்பிள்ளை கிறிஸ்டியனா?’ இவ்வாறு வாயைப் பிளந்த உறவுக்காரர்கள் சரசரக்கும் பட்டு வேஷ்டியோடு கம்பீரமாக நின்ற ஸ்டீஃபனைப் பார்த்த போது வாயை மூடிக் கொண்டார்கள்.

கண்ணபிரான் நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக ஒரு முறை ஸ்டீஃபனைச் சந்தித்துப் பேசி இருந்தார். வீட்டிற்கு அழைப்பது முறையில்லை என்பதால் ஆர்க்கிட் தோட்டத்திலேயே சந்திப்பு இடம்பெற்றது.

மாமாவையும் மருமகனையும் அறிமுகப் படுத்திவிட்டு இங்கிதமாக ஒதுங்கி விட்டான் அரண்மனைக்காரன். ஸ்டீஃபனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. இருந்தாலும் கண்ணபிரானின் அனுபவம் பேசியது.

“வாங்க தம்பி. நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன்…”

“எதுக்குத் தயங்குறீங்க. மாமான்னே கூப்பிடுங்க.”

“ம்…” ஒரு புன்னகையோடு தலையாட்டினான் ஸ்டீஃபன்.

“எம் பொண்ணு உங்களை ரொம்பவே தொல்லை பண்ணிட்டாளோ?” இப்போது புன்னகை மாமனின் முகத்திற்கு இடம் மாறி இருந்தது.

“ஐயையோ! அப்படியெல்லாம் இல்லை மாமா. என்ன… மாமா இப்படி இணக்கமாப் பேசுற மாதிரி அத்தையும் பேசியிருந்தா நான் சந்தோஷப் பட்டிருப்பேன்.”

“ம்… புரியுது. அந்தக் காலமும் வரும் தம்பி. எங்க போயிடப் போறா? நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க.”

“எனக்கும் அக்காக்கும் உறவுன்னு சொல்லிக்க இதுநாள் வரை இருந்தது அத்தான் மட்டும் தான். இப்போதான் அத்தானோட குடும்பம் அண்ணா அண்ணின்னு எங்களுக்கும் நாலு மனுஷங்க இருக்காங்க. மங்கையோட அம்மா அப்பா தானே மாமா இனி எனக்கு எல்லாமும்?”

மாப்பிள்ளை பந்தா… அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளை! எதுவும் இல்லாமல் இயல்பாகப் பேசிய ஸ்டீஃபனை கண்ணபிரான் கூர்ந்து பார்த்தார். மனம் தன் மகளின் தெரிவை நினைத்துப் பெருமைப் பட்டது. அருகே வந்து மருமகனை அணைத்துக் கொண்டார்.

“கவலைப் படாதீங்க மாப்பிள்ளை. எல்லாம் உங்க மனசு மாதிரி நல்லா நடக்கும். மாமா நான் எதுக்கு இருக்கேன்?”

“சரி மாமா.”

ஊர்க்காரர்களும் சொந்த பந்தங்களும் சாரை சாரையாக மண்டபத்திற்கு வந்த வண்ணம் இருந்தார்கள்.

கோதை நாயகியின் முகத்தில் இன்றைக்கு லேசானதொரு மகிழ்ச்சி தெரிந்தது. மகளின் விருப்பத்திற்கு அவரும் எதிரியல்ல. ஆனால் தங்கள் சடங்குகள் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்கும் அளவிற்கு அவருக்குப் பெரிய மனதில்லை.

ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல் மங்கைக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ஸ்டீஃபனை அவருக்குக் கொஞ்சம் பிடித்திருந்தது. அத்தோடு அத்தனை அனுசரணையாக நடந்த ரோஸியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

மாப்பிள்ளை என்று ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் அது கூட நாட்டியம் ஆடுமே! அப்படியிருக்க இந்த மனிதர்கள் இத்தனை மேம்போக்காக நடந்து கொள்கிறார்களே!

ஆனால் நிச்சயதார்தத்திற்கு முன்பே ஸ்டீஃபனும் ரோஸியும் இந்த முடிவிற்கு வந்துவிட்டார்கள். குடும்பத்தை உட்கார வைத்து அரண்மனைக்காரன் நிச்சயதார்த்தம் பற்றிப் பேசும் போதே ஸ்டீஃபன் தெளிவாகச் சொல்லி விட்டான்.

‘அண்ணா! பொண்ணு வீட்டு சம்பிரதாயப்படியே எல்லாம் நடக்கட்டும்.’

‘ஸ்டீஃபன்! என்ன சொல்லுற நீ?’

‘இல்லை ண்ணா. மங்கையையோட அம்மா என்னை நிராகரிக்கிற இடமே அதுதான். எங்கே தன்னோட சம்பிரதாயங்களை விட்டுக்குடுக்க வேண்டி வந்திருமோ ன்னு அவங்க பயப்படுறாங்க. அதுக்கு நாம இடம் குடுக்க வேணாம். அவங்க வழக்கப்படியே எல்லாம் நடக்கட்டும். நான் அத்தான் கிட்டேயும் அக்கா கிட்டேயும் பேசிட்டேன்.’

ஸ்டீஃபன் சொல்லி முடிக்கவும் விஜயேந்திரன் கரிகாலனைத் திரும்பிப் பார்த்தான். ஒரு புன்னகையோடே நண்பனும் ஒப்புதலாகத் தலையாட்ட விஜயேந்திரனுக்கு மகிழ்ச்சியாகிப் போனது.

‘ஏன் ண்ணா? உங்க குடும்பத்துல எல்லாருமே தீவிரமாத்தான் காதலிப்பீங்களா?’ முக்கியமான பேச்சுவார்த்தைக்கு நடுவில் ஸ்டீஃபன் காதைக் கடிக்கவும் விஜயேந்திரன் தம்பியை வியப்பாகப் பார்த்தான்.

‘என்னாச்சு ஸ்டீஃபன்?’

‘உங்க அத்தை பொண்ணு ஒன்னு குடுத்தா பாருங்க…’

‘டேய்! நான் உன்னோட அண்ணன் டா!’ கன்னத்தைப் பிடித்தபடி ஒரு மிரட்சியோட பேசிக் கொண்டிருந்த ஸ்டீஃபனுக்கு அப்போதுதான் விஜயேந்திரனின் பேச்சுக்கான அர்த்தம் பிடி பட்டது.

‘அடப்போங்க ண்ணா. நீங்க வேறே… அவ விட்ட அறையில நானே நொந்து போயிருக்கேன்…’

‘ஹா… ஹா… ஐயா என்ன வம்பு பண்ணினீங்க? மங்கைக்கே கோபம் வர்ற அளவுக்கு?’

‘முழுசா முடிக்கக் கூட இல்லை ண்ணா. இந்த ஸ்டீஃபன் இல்லைன்னா வேற யாராவது ன்னு சொல்ல வந்தேன்…’

‘அப்போ அடி நியாயம் தான்.’ அரண்மனைக்காரனின் தீர்ப்பு இதுவாகத்தான் இருந்தது.

நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டு மணமக்களின் பெற்றோர் தாம்பூலத் தட்டை மாற்றிக் கொண்டார்கள். ஸ்டீஃபனின் தரப்பில் கரிகாலனும் ரோஸியும் அமர்ந்திருந்தார்கள். விஜயேந்திரனையும் சுமித்ராவையும் அமரச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் விஜயேந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மாப்பிள்ளை வீட்டுச் சீர் அனைத்தும் விஜயேந்திரன் வீட்டில் இருந்து தான் வந்திருந்தது.

சுமித்ராவிற்கு நிற்க நேரமில்லாமல் வேலைகள் இழுத்துக் கொண்டன. அன்றைக்கு அழகானதொரு பட்டுப்புடவை, ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்தில் அணிந்திருந்தாள்.

அகலக் கரையிட்ட ஜரிகையில் பார்டர். விஜயேந்திரன் மனைவிக்காகப் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்திருந்தான். அவள் நிறத்துக்கு அத்தனை எடுப்பாக இருந்தது. பொருத்தமாக ரூபி செட், அழகுக்கு அழகு சேர்த்தது.

தலையில் கங்கா நெருக்கிக் கட்டியிருந்த குண்டு மல்லிகை. பூவின் பாரமே சுமித்ராவிற்குத் தலையை ஏதோ பண்ணியது. கணவனுக்குப் பிடிக்குமே என்று சமாளித்துக் கொண்டிருந்தாள்.

ஆயத்தமாகி ரூமை விட்டு வெளியே வந்தவளை அத்தனை வேலைக்கு நடுவிலும் ஒரு வழி பண்ணி இருந்தான் அரண்மனைக்காரன்.

‘விஜீ… மண்டபத்துல அத்தனை பேரும் உங்களுக்காகக் காத்திருப்பாங்க. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?’

‘எம் பொண்டாட்டியைக் கொஞ்சுறேன்.’

‘அடி தான் வாங்கப் போறீங்க.’

‘பரவாயில்லை… நான் கொஞ்சி முடிச்சதுக்கு அப்புறமா நீ அடி அம்மு.’ தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தவனை ரொம்பவே சிரமப்பட்டு நகர்த்தி இருந்தாள் சுமித்ரா.

இப்போதும் அவன் எங்கிருந்தாலும் அவன் பார்வை அங்கே இங்கே நகரும் மனைவியின் வசமே இருந்தது.

“அத்தை!” தமிழ்ச்செல்வியை அழைத்தான் விஜயேந்திரன்.

“சொல்லுங்க மாப்பிள்ளை.”

“சுமித்ராவைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. ரொம்ப டயர்டாத் தெரியுறா.”

“சொல்றேன் மாப்பிள்ளை. காலையில இருந்து ஒன்னும் சாப்பிடவும் இல்லை. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஃபங்ஷன் முடியட்டும், நிதானமாச் சாப்பிடுறேன் ன்னு சொல்லிட்டா மாப்பிள்ளை.”

“என்னால இப்போ இங்கே இருந்து நகர முடியாது அத்தை. நான் சொன்னேன் ன்னு சொல்லுங்க.”

“சரி மாப்பிள்ளை.” தமிழ்ச்செல்வி நகர்ந்து விட்டார்.

கோதை நாயகியின் மனதில் எத்தனை கஷ்டம் இருந்தாலும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முழு அலங்காரத்தோடு பட்டுப் புடவையில் வாய் கொள்ளாப் புன்னகையோடு அமர்ந்திருந்த மகளைப் பார்த்த போது கணவன் செய்தது சரிதானோ என்று முதல் முதலாக எண்ணத் தோன்றியது.

கண்ணபிரான் ஏற்பாடுகளை அத்தனை கச்சிதமாகப் பண்ணி இருந்தார். பெயருக்குத் தான் நிச்சயதார்த்தம். ஆனால் மகளின் திருமணம் நடந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு ஜமாய்த்திருந்தார் மனிதர்.

நாதஸ்வரக் கச்சேரி முதற்கொண்டு சாப்பாடு வரையிலும் பார்த்துப் பார்த்துப் பண்ணி இருந்தார்.

அமிழ்தவல்லியும் மங்களாபுரி ஜமீனின் அழைப்பின் பேரில் வைபவத்திற்கு வந்திருந்தார். எத்தனை எதிர்ப்புகளைக் காட்டிய போதும் முறையாக அரண்மனைக்கு அழைப்பு விடுத்திருந்தார் கண்ணபிரான்.

“அத்தை!” நிச்சயதார்த்தம் நிறைவாக முடிந்திருந்த திருப்தியில் உட்கார்ந்திருந்த கோதை நாயகி அந்தக் குரலில் திரும்பிப் பார்த்தார். எதிரே ஸ்டீஃபன் நின்றிருந்தான்.

சட்டென்று எழுந்தவர் புடவைத் தலைப்பால் தோளை மூடிக் கொண்டார். திடீரென்று ஸ்டீஃபன் தனக்கு முன்னால் வந்து நிற்கவும் என்ன பேசுவதென்று புரியவில்லை அவருக்கு.

“உங்க கூட தான் பேசலாம்னு வந்தேன் அத்தை.”

“………..”

“தெரியும் அத்தை. நீங்க என் கூடப் பேச மாட்டீங்க. எனக்கு அது நல்லாவே தெரியும். இருந்தாலும் என்னால அப்படி இருக்க முடியலை. மங்கையோட அப்பா எனக்கு எந்த அளவு முக்கியமோ… அதேயளவு மங்கையோட அம்மாவும் எனக்கு முக்கியம்.”

“………….”

“என்னால உங்களைப் புரிஞ்சுக்க முடியுது அத்தை. இருக்கிறது ஒரே பொண்ணு. அதுக்கு எப்படியெல்லாமோ கல்யாணம் பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டிருப்பீங்க. அது எதுக்குமே சம்பந்தமில்லாம இப்படியொரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்தினா… பாவம், நீங்களும் தான் என்ன பண்ணுவீங்க!”

இப்போது கோதை நாயகியின் கண்கள் லேசாகக் கலங்கியது.

“உங்களுக்கு எந்த வகையில சமாதானம் சொல்றதுன்னு எனக்குப் புரியலை அத்தை. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். மங்கைக்கு எந்த அளவு ஒரு நல்ல புருஷனா என்னால நடந்துக்க முடியுமோ… அதே அளவுக்கு உங்களுக்கும் மாமாவுக்கும் ஒரு நல்ல மருமகனா என்னால நடந்துக்க முடியும்.”

“…………..”

“உங்க பொண்ணோட நிச்சயதார்த்தத்திலேயே இப்படிப் பட்டும் படாம நீங்க நிக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு அத்தை. அதுக்கு முழுக் காரணமும் நான் தான்னு நினைக்கிறப்போ… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை…”

இவர்கள் இங்கே இப்படிப்  பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த விஜயேந்திரன் இவர்களை நோக்கி வந்தான்.

“உறவுகள் இல்லாம வளர்ந்தவன் அத்தை நான். எனக்கு உறவுகளோட அருமை நல்லாவே புரியும்.”

“என்ன அத்தை! என்ன சொல்லுறான் நம்ம மாப்பிள்ளைப் பையன்?” அனைத்துக் கோபங்களையும் மனக்கசப்புகளையும் மறந்து விட்டு தன் பிரியத்திற்குரிய அத்தையின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான் அரண்மனைக்காரன்.

கோதை நாயகி விக்கித்துப் போனார். மாப்பிள்ளை வந்து தன்னோடு பேசுவார் என்றே அவர் சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை.

அது போதாததற்கு விஜயேந்திரனும் பேசவும் அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சுமித்ராவைத் தான் சாடிப் பேசியதற்கு விஜயன் தன்னிடம் வன்மம் பாராட்டுவான் என்றே அவர் நினைத்திருந்தார்.

ஆனால் அந்த இரண்டு சின்னப் பையன்களும் இத்தனை பெருந்தன்மையாக நடந்தது அவருக்குப் பெரும் சங்கடமாகிப் போக விஜயேந்திரனின் தோளில் சாய்ந்த படி விசும்பினார்.

“அடடா! இது என்ன அத்தை நீ சின்னக் கொழந்தை மாதிரி அழுதுக்கிட்டு? அதுவும் வீட்டுல ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது. கண்ணைத் தொடை முதல்ல. அட! கண்ணைத் தொடைன்னு சொல்லுறேன் இல்லை.”

அத்தைக்கு லேசாக ஒரு அதட்டல் போட்டவன் கோதை நாயகியின் கண்களைத் துடைத்து விட்டான்.

“இங்கப் பாரு அத்தை. இந்த ஸ்டீஃபனை மங்கை ஆசைப் பட்டுட்டா எங்கிறதுக்காக நான் இவனை உன் வீட்டு மாப்பிள்ளை ஆக்கலை. ஸ்டீஃபன் நல்ல பையன். பொறுப்பான பிள்ளை. உனக்கும் மாமாக்கும் ஒரு நல்ல மருமகனா இருப்பான் எங்கிற நம்பிக்கை எனக்கு நூறு சதவீதம் இருக்கு. அந்த நம்பிக்கை இல்லைன்னா நான் மங்கையோட மனசை மாத்தத்தான் முயற்சி பண்ணி இருப்பேன். அதை நீ முதல்ல புரிஞ்சுக்கோ… சரியா?”

“ம்…”

“இப்போ மண்டைய மண்டைய நல்லா ஆட்டு. உன்னால மாமாக்கும் மங்கைக்கும் எவ்வளவு மனவருத்தம் பாரு.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக வந்தாள் ரோஸி. முகத்தில் ஒரு மெல்லிய படபடப்புத் தெரிந்தது.

“என்னாச்சு ரோஸி?” இது விஜயேந்திரன்.

“அண்ணா! சுமித்ரா உங்களை வரச்சொன்னா. நீங்க கொஞ்சம் வர்றீங்களா?”

“என்னாச்சு ம்மா?” படபடப்பு இப்போது அரண்மனைக்காரனைத் தொற்றிக் கொள்ள இருவரும் நகர்ந்தார்கள். ஸ்டீஃபனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த கோதை நாயகி தானும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.

“அம்மூ… என்னாச்சு?” மாப்பிள்ளையின் ரூமில் அமர்ந்திருந்தாள் சுமித்ரா. பக்கத்தில் தமிழ்ச்செல்வியும், தில்லை வடிவும் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தார்கள்.

“காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடலை மாப்பிள்ளை. எவ்வளவு சொல்லியும் கேக்க மாட்டேங்குறா. அதுதான் அவளால முடியலை போல இருக்கு.” இது தமிழ்ச்செல்வி.

“செல்வி! சுமித்ராக்கு சுத்திப் போடணும். இந்தப் புடவையில ரொம்ப அழகா இருக்கா. என் கண்ணே பட்டிருக்கும் இன்னைக்கு அவளுக்கு.” இது தில்லை வடிவு.

“விஜயா!” அந்தக் குரலில் சட்டென்று திரும்பினான் விஜயேந்திரன். ரூமின் கதவிற்குப் பக்கத்தில் அமிழ்தவல்லி நின்றிருந்தார்.

“சுமித்ராவை டாக்டர் கிட்ட அழைச்சிக்கிட்டுப் போ.” ஆணை போல வந்தது குரல். அமிழ்தவல்லி இப்படி மகனோடு பேசி நெடுங்காலம் ஆகிவிட்டது.

அதுவும் இன்று சுமித்ராவை முன்னிட்டுப் பேசியது மகனுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

“ம்…” சட்டென்று அம்மாவிற்குப் பதில் சொன்னான் மகன்.

“அத்தை! கொஞ்சம் சூடா பால் கொண்டு வாங்க. சக்கரை ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ராவா சேருங்க.”

“சரி மாப்பிள்ளை.” தமிழ்ச்செல்வி நகரவும் எல்லோரும் அவர்களுக்குத் தனிமை கொடுத்து நகர்ந்து விட்டார்கள்.‌ அமிழ்தவல்லியின் கண்கள் சுமித்ராவை ஒரு நொடி ஆராய்ச்சியாகப் பார்த்து மீண்டது.

“என்னாச்சு சுமி?” எல்லோரும் நகரவும் மனைவியை முழுதாகத் தன் மீது சாய்த்துக் கொண்டான் விஜயேந்திரன்.

“தலையை என்னவோ பண்ணுது விஜி.”

“தப்பு எம்மேல தான். இந்த நிச்சயதார்த்த வேலையில உன்னை நான் சரியாக் கவனிக்கலை. இந்த கங்கா என்ன பண்ணுறா? உனக்கு டைமுக்கு சாப்பாடு போடுறதை விட அவளுக்கு என்ன வேலை? வாய் மட்டும் எட்டு ஊருக்கு நீளும்.”

கணவனின் பேச்சில் சிரித்தாள் சுமித்ரா.

“சிரிப்பு… ஒரு வேளை தலையில இவ்வளவு பூ இருக்கிறது தான் கஷ்டமா இருக்கா சுமி? எடுத்திடலாமா?”

“இல்லை விஜி… அது இருக்கட்டும். நாம டாக்டர் கிட்டயே போகலாம்.” தன்னை முழு அலங்காரத்தில் பார்ப்பது கணவனுக்கு எத்தனை பிடித்தம் என்று தெரிந்ததால் மறுத்தாள் சுமித்ரா.

“ஏன் சுமி? ரொம்ப முடியலையா என்ன? எதுக்குடா டாக்டர்?”

“போகலாம் விஜி. எல்லா வேலையும் முடிஞ்சுது இல்லை?”

“எல்லாம் முடிஞ்சுது. மண்டபத்தை காலி பண்ணுறது தான் பாக்கி. அதை மாமா பார்த்துக்குவார்.”

“அப்போ போகலாம் விஜி.” சுலபமாக முடித்தாள் பெண்.

********************

விஜயேந்திரனின் வீடே களிப்பில் திளைத்திருந்தது. சுமித்ராவின் தரப்பில் அத்தனை பேரும் அங்கு தான் கூடி இருந்தார்கள்.

பேச்சும் சிரிப்பும் ஆரவாரமுமாக வீடே கலகலவென்று இருந்தது. கங்காவின் குரல் தான் எல்லாவற்றையும் மிஞ்சி நின்றது.

“எங்கம்மா சும்மாவே அழகு. இப்போ அப்படியே ஜொலிக்கிறாங்க.”

“அடியேய்! நீ இப்படியே பேசிப் பேசி எங்க பொண்ணுக்கு கண்ணு வெக்காதே.” இது தில்லை வடிவு.

“அடப்போங்க பெரியம்மா. எங்கம்மாக்கு என்னோட கண்ணெல்லாம் ஒன்னுமே பண்ணாது. ரெண்டு நாளாச் சரியாச் சாப்பிடாம இருந்தாங்களா… எனக்கு சட்டுன்னு புரியலை. நிச்சயதார்த்த வேலையில ஐயாவும் சரியா வீட்டுக்கு வேளா வேளைக்கு வரலையா? அதனால தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.”

“நல்லா நினைச்ச போ!” இங்கே இப்படிப் பேச்சுப் போய்க் கொண்டிருக்க… ரூமிற்குள் விஜயேந்திரனின் தோளில் சாய்ந்திருந்தாள் சுமித்ரா. அரண்மனைக்காரனின் கை மனைவியின் தலையை இதமாக வருடிக் கொடுத்தது.

சுமித்ரா சொன்னதிற்காக அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்ற விஜயேந்திரன் நிச்சயமாக இப்படியொரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் சுமித்ராவிற்கு அந்த சந்தேகம் இருந்தது.

“அரண்மனைக்கு வாரிசு வந்திருக்கு ஐயா.” கௌரிபுரத்தின் அந்த இளம் பெண் டாக்டர் ஊர்ஜிதப் படுத்திய போது திக்குமுக்காடிப் போனான் விஜயேந்திரன்.

மனைவியைச் சட்டென்று திரும்பிப் பார்க்க அவள் முகத்தில் இப்போது சோர்வையும் தாண்டி ஒரு மந்தகாசப் புன்னகை மலர்ந்தது.

இப்போது நினைக்கும் போதும் விஜயேந்திரனுக்கு உடல் சிலிர்த்தது. விஷயம் தெரிந்ததும் அத்தனை பேரும் கூடி விட்டார்கள். மங்கை கூடத் தனது அத்தானைக் கேலி பண்ணினாள்.

“ப்ளீஸ் ஸ்டீஃபன். எங்கேயாவது கூட்டிக்கிட்டுப் போடா. தொல்லை தாங்க முடியலை.” விஜயேந்திரன் தலையில் கையை வைத்துக் கொண்டு சொல்லவும்,

“அத்தான்…” சிணுங்கினாள் மங்கை. கோதை நாயகியும் வந்திருந்தார்.

“வேலைகளை மூட்டை கட்டி ஒரு பக்கம் வெச்சிட்டு சுமித்ராவை நல்லாப் பார்த்துக்கோ விஜயேந்திரா.”

“சரி அத்தை.”

“அப்போ நாங்க கிளம்புறோம் ராஜா.” கரிகாலனும் ரோஸியும் விடைபெற்றுக் கொண்டார்கள்.

அத்தனை பேரும் வந்திருந்த போதும் விஜயேந்திரனின் மனதில் லேசாக ஒரு வருத்தம் தோன்றியது.

‘அம்மா வரவில்லையே!’ அவனது எண்ணத்தைப் பொய்ப்பிப்பது போல ரூமிற்குள் ஓடி வந்தாள் கங்கா. ஐயா வீட்டிலிருக்கும் போது அந்த எல்லையையே அறியாதவள் இன்று அனைத்தையும் மறந்திருந்தாள்.

“ஐயா! அம்மா… நம்ம… அம்மா… வந்திருக்காங்க.” தந்தி அடித்தாள் பெண்.

“அரண்மனைக்கார அம்மாவா?” விஜயேந்திரனின் நெற்றி சுருங்கியது.

“ஆமாங்க ஐயா.” சட்டென்று நகர்ந்து உட்கார்ந்தாள் சுமித்ரா.

“சுமி… மெதுவா.” மனைவியை எச்சரித்தவன் ரூமை விட்டு வெளியே வந்தான்.

“வாங்க வாங்க.” அதற்குள்ளாக அமிழ்தவல்லியை வரவேற்றார்கள் தமிழ்ச்செல்வியும் தில்லை வடிவும்.

“இருக்கட்டும்.” கம்பீரமாகச் சொன்னவர் கங்காவைப் பார்த்தார்.

“சுமித்ரா ம்மா இந்த ரூமில இருக்காங்க.”

“ம்…” மகனைக் கடந்து கொண்டு கங்கா கைகாட்டிய ரூமிற்குள் போனார் அமிழ்தவல்லி.

சுமித்ரா அப்போதுதான் எழுந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். தலை லேசாகச் சுற்றியது. ஆதாரத்திற்காகக் கையை நீட்டியவள் கிடைத்த கையைப் பற்றிக் கொண்டாள்.

கணவனின் கையை எதிர்பார்த்திருந்தவள் மாமியார் நீட்டிய கையைப் பற்றி இருந்தாள்.

“விஜயேந்திரா!” அம்மாவின் அழைப்பில் உள்ளே வந்தவன் தடுமாறிய மனைவியைத் தாங்கிக் கொண்டான். அத்தனை பேரும் நகர்ந்து விட அந்த ரூமிற்குள் ஒரு அசாத்திய மௌனம் நிலவியது.

இதுநாள் வரை மகன் மீதும் மருமகள் மீதும் வராத பாசம் இப்போது பேரப்பிள்ளையின் மீது வந்திருந்தது.

“எத்தனை நாளைக்கு இங்கேயே உக்காந்திருக்கிறதா உத்தேசம்?” பொதுவாக வந்தது கேள்வி.

“எம் பொண்டாட்டிக்கு அரண்மனையில மரியாதை கிடைக்கிற வரைக்கும்.” பேசாதே… பேசாதே… என்று சுமித்ரா கண்களால் கெஞ்சிய போதும் விடாமல் பதில் சொன்னான் விஜயேந்திரன்.

“அப்போ அம்மா முக்கியம் இல்லை?”

“முக்கியம் தான்… இல்லேங்கலை. அதே அம்மாவுக்கு பையனும் முக்கியமில்லாம போயிட்டானே?”

“அப்படி யாரு சொன்னா?”

“யாரும் சொல்லணுமா என்ன? நான் முக்கியம் ன்னு நினைச்சவங்களுக்கு எம் பொண்டாட்டியும் முக்கியமாத்தான் இருந்திருப்பா.‌ இங்க அப்படித் தெரியலையே. அத்தையோட பேச்சைக் கேட்டுக்கிட்டு சம்பந்தமே இல்லாம சுமித்ராவை நோகடிச்சா அது என்ன நியாயம்?”

“இப்போ என்ன சொல்ல வர்ற நீ?”

“நாங்க இங்க நிம்மதியா இருக்கோம்.”

“அப்போ… உன்னோட நிம்மதியை நான் குலைக்கிறேனா?”

“ஐயையோ! அப்படியெல்லாம்… இல்லை…” வாக்குவாதம் தடிக்கவும் வாய் திறந்தாள் சுமித்ரா.

“என்ன… விஜி இது?” வாய்க்குள் முணுமுணுத்த மனைவியை சட்டை செய்யவில்லை விஜயேந்திரன். முறைத்துக் கொண்டே நின்றான்.

வந்த வேகத்தில் திரும்பிப் போய் விட்டார் அமிழ்தவல்லி.

********************

இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. சுமித்ரா ஓய்ந்து போனாள். தமிழ்ச்செல்வியும் தில்லை வடிவும் மாறி மாறி வந்து பார்த்துக் கொண்டார்கள்.

அது அவசியமே இல்லை எனும் வகையில் கங்கா தனது சுமித்ரா அம்மாவை உள்ளங் கையில் வைத்துத் தாங்கினாள். ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை.

அன்று மதியம் போல கட்டிலில் சாய்ந்திருந்தாள் சுமித்ரா. ஆகாரங்கள் வெகுவாகக் குறைந்து போனதால் அவளால் நடக்கக் கூட முடியவில்லை.

விஜயேந்திரன் வரத் தாமதமாகும் என்பதால் சுமித்ராவை உண்ண வைக்க ஒரு போராட்டமே நடத்தி ஓய்ந்து போயிருந்தாள் கங்கா.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென்று சுமித்ரா வீட்டிற்கு வந்திருந்தார் அமிழ்தவல்லி. அன்றைக்குப் போனவர்தான். அதன் பிறகு வரவில்லை.

“வாங்க…” சிரமப்பட்டு எழுந்த சுமித்ராவைக் கை நீட்டித் தடுத்தவர்,

“கங்கா! கார்ல ஒரு பை இருக்கு. சீக்கிரமா எடுத்துட்டு வா.” என்றார்.

“சரிங்கம்மா.” கங்கா ஓட்டமாகப் போகவும் கிச்சனுக்குள் சென்றவர் ஒரு ப்ளேட்டை எடுத்து வந்தார். பையோடு திரும்பி வந்த கங்கா வாய் பிளந்து நின்று விட்டாள்.

அவளது இத்தனை வருட அரண்மனை வாழ்க்கையில் அமிழ்தவல்லியைக் கிச்சன் பக்கம் பார்த்ததே இல்லை. ராஜ்ய விவகாரங்களில் ஈடுபடுவாரே தவிர அடுப்படிப் பக்கம் வந்ததே இல்லை.

“என்ன மசமச ன்னு நிக்கிற. பையைப் பிரி கங்கா.” அம்மாவின் ஆணையில் பையைப் பிரித்து உள்ளேயிருந்த பாத்திரங்களை வெளியே எடுத்தாள் கங்கா.

“அந்தப் புளியோதரையில கொஞ்சம் போடு. வடு மாங்காய் வை.” ஒவ்வொன்றாகக் கேட்டு வாங்கியவர் ப்ளேட்டை சுமித்ராவின் பக்கம் நீட்டினார்.

“நான்… அப்புறமா…”

“இந்தக் கதையே இங்க வேணாம். வாயைத் திற.” ஒரு அதட்டல் போட்டவர் சுமித்ராவிற்கு ஊட்டவே ஆரம்பித்து விட்டார். கங்கா அதிர்ந்து போனாள் என்றால் சுமித்ரா எதுவும் பேச முடியாமல் கொடுத்ததை விழுங்கினாள்.

பார்த்துப் பார்த்துப் புளிப்பான பதார்த்தங்களாகக் கொண்டு வந்திருந்தார் அமிழ்தவல்லி. வாய்க்கு ருசியாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சுமித்ராவால் முடியவில்லை.

“போதும்… அத்தை.” அந்த ‘அத்தை’ அத்தனை தயக்கத்திற்கு மத்தியில் வந்தது.

“இங்கப்பாரு சுமித்ரா! இந்த நேரத்துல சாப்பிடுறது கஷ்டம் தான். இல்லேங்கலை. அதுக்காக அப்படியே இருக்க முடியாது. நீ சாப்பிட்டாத் தானே குழந்தை ஆரோக்கியமா இருக்கும்.”

“சரி அத்தை.”

‘அடேங்கப்பா! பேரப்பிள்ளைன்ன உடனே இந்தம்மாக்கு வந்த அக்கறையைப் பாருடா!’ மனதுக்குள் வியந்து போனாள் கங்கா.

சில பல உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு வந்த வேகத்திலேயே கிளம்பி விட்டார் அமிழ்தவல்லி. மகன் வீடு வரும்போது அவர் அங்கே இருக்கவில்லை.

வீட்டுக்கு வந்த விஜயேந்திரன் ஆச்சரியப்பட்டுப் போனான். இப்போதெல்லாம் எப்போதும் கட்டிலில் சாய்ந்த படி இருக்கும் மனைவி இன்று நடமாடவும் வேண்டுமென்றே சீண்டினான்.

“என்னாச்சு கங்கா? ஆச்சரியமா இருக்கு! உன்னோட சுமித்ரா அம்மா இன்னைக்கு நடமாடுறாங்க?”

கணவனின் கேலியில் சுமித்ரா சிரிக்கவும் கங்காவிற்குப் படு குஷியாகிப் போனது.

“அதை ஏன் ஐயா கேக்குறீங்க. இனிமே அம்மாவுக்குச் சாப்பாடு குடுக்கும் போது இந்தக் கெஞ்சல் கொஞ்சலை எல்லாம் விட்டிருங்க ஐயா. நம்ம பெரிய அம்மா மாதிரி ஒரு அதட்டல் போடுங்க. மொத்த சாப்பாடும் டான்னு இறங்கிடும்.”

“நீ அடிதான் வாங்கப் போற கங்கா.”

“நீங்க சாப்பிடுறதா இருந்தா நான் எவ்வளவு அடி வாங்கவும் தயார் ம்மா.”

சுமித்ராவைக் கேள்வியாகப் பார்த்தான் விஜயேந்திரன். மலர்ந்து சிரித்தவாறே அன்றைய கதை பேசினாள் மனைவி.

******

இரவு நன்றாக நிலவில் ஊறி இருந்தது. வீட்டிற்குப் பின்னாலிருந்த அந்தச் சின்னப் படித்துறையில் கணவனின் தோள் சாய்ந்திருந்தாள் சுமித்ரா.

“விஜீ…”

“ம்…”

“இப்போ எம் மனசுல என்ன ஓடுது சொல்லுங்க?” மனைவியின் கேள்வியில் புன்னகைத்தான் அரண்மனைக்காரன். அவன் கைகள் அவள் விரல்களை நீவி விட்டது.

“நாட்டியப் பேரொளி வேற என்ன சொல்லப் போறீங்க! அரண்மனைக்கு எப்பப் போகலாம்னு கேக்கப் போறீங்க.” கணவனின் சரியான அனுமானத்தில் புன்னகைத்தாள் சுமித்ரா.

“என்ன? நான் சொன்னது சரியா?”

“நீங்க என்னைக்கு என்னைத் தப்பாப் புரிஞ்சிருக்கீங்க விஜி.” அண்ணாந்து முகம் பார்த்துச் சிரித்தவள் நெற்றியில் இதழ் பதித்தான் கணவன்.

“எப்போ போறோம் விஜி.”

“கொஞ்ச நாள்ப் போகட்டும் சுமி.”

“இல்லை விஜி. பாவம் அத்தை. ரொம்ப நாள்க் கடத்தாதீங்க.”

“ம்…”

“ம் ன்னா என்ன அர்த்தம்?”

“இவ்வளவு அழகான இந்த ஏகாந்தப் பொழுதுல நம்மைப் பத்தி மட்டும் பேசலாமேன்னு அர்த்தம்.” கணவனின் கண்களில் தெரிந்த காதல் சுமித்ராவையும் தொற்றிக் கொண்டது.

“நீங்க இப்படிப் பார்த்தா எனக்கு எந்திரிச்சு ஆடணும் போல தோணுது.”

“ஆடலாமே சுமி.”

“விஜி…”

“ரொம்பக் கஷ்டப்படுத்திக்காம மெதுவா ஆடுறதா இருந்தா.”

“ம்… சரி. என்ன பாட்டு?”

“பாயும் ஒளி நீ எனக்கு…” அவன் ரசித்துச் சொன்னான்.

“யாரு நானா?”

“கண்டிப்பா… இந்த ஒளி இல்லைன்னா நான் இன்னமும் அமாவாசை இருளாத்தானே இருந்திருப்பேன்.”

“விஜி…”

“ம்…”

“வான மழை நீ எனக்கு…”

“ம்ஹூம்…”

“இந்த மழை என்மேல பொழியலை ன்னா நானும் கருகித்தானே போயிருப்பேன்?”

“வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு…” அவன் கைகள் கொஞ்ச நாட்களாக சொல்ல மறந்திருந்த கதையைச் சொல்லத் தொடங்கின.

“விஜி…” செல்லமாகச் சிணுங்கியவள் அவனை விட்டு விலகினாள். அவள் விலகும் போது அவள் கழுத்துத்தாலி அவன் ஷர்ட் பட்டனில் சிக்கியது.

“பூணும் வடம் நீ எனக்கு…” மனைவியின் வரியில் இப்போது சிரித்தான் விஜயேந்திரன்.

“தோயும் மது நீ எனக்கு… தும்பியடி நானுனக்கு…” இதழ்கள் நான்கும் இப்போது மதுவுண்டு களித்தது.

“கண்ணின் மணி போன்றவளே…” அந்தக் கண்களுக்குள் ஊன்றிப் பார்த்தான் அரண்மனைக்காரன். அன்று தூண் மறைவில் நின்று கொண்டு தன்னை ஈர்த்த அதே விழிகள்!

“காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி வீசுதடி…” அந்தக் கண்கள் அவனுக்கு போதை ஏற்றின. அத்தனை நேரமும் எல்லை தாண்டாமல் நின்றவன் இப்போது லேசாகக் கோடு தாண்டினான்.

“விஜி… விஜி… விஜி…” அரற்றிக் கொண்டிருந்தாள் நாட்டியப் பேரொளி.

வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்.

error: Content is protected !!