ESK-8

ESK-8

என் சுவாசம் — 8 

இருள் எங்கும் கருமை போர்த்தி இருந்தது. உப்புக்  காற்று குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. படகின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி.

‘இப்ப என்ன தப்பாக் கேட்டுட்டேன்னு இந்த குதி குதிக்கிறான்?  மினிஸ்டர் ஃபோன்ல  சொன்னததானே கேட்டேன். அதுக்குப் போய் இப்படித் திட்டுறான்.  சரியான காட்டான்.

நல்லவேளை அந்த அங்கிள் வந்து அவனைப் புடிச்சாரு. இல்லைன்னா கண்டிப்பா அடிச்சிருப்பான்  மாக்கான்,  வளர்ந்து கெட்டவன்’  என்று  மனதிற்குள் அவனைக் கறுவியபடி கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.

அவள் சித்தியைத் தவிர யாரிடமும் இப்படித் திட்டு வாங்கியதில்லை அவள்.   பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கிதான் பழக்கம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் இனிமையாகவே பழகுவதால்,  யாரும் சிறிதாக முகம் சுளித்துக் கூட பேசியதில்லை.

இவன் ஒருத்தன்தான் அப்பொழுதிலிருந்து தன்னை முறைக்கவும் நக்கலடிக்கவும் திட்டவுமாக இருக்கிறான்  என்று எண்ணியவள், இங்கிருந்து போகும் வரை அவன் கண் பார்வையில் படாதவாறு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

கோபத்தில் அவளைத் திட்டியபடி அடிக்கப் பாய்ந்தவனைப் பிடித்துப் படகின் கீழே இழுத்து வந்திருந்தார் அழகர்.

“ஏன் மாப்ள, அதுவே  சின்னப் பொண்ணு.  ஏற்கனவே ரொம்ப பயந்து கிடக்குது.  அதப் போய் அடிக்கப் போற. உன்னோட ஒரு அடியத் தாங்குமா அது?”

“தலைமறைவா இருக்கியான்னு என்னைக் கேட்கறா?  போலீஸ் தேடுதா  உங்களன்னு கேட்கறா? எவ்வளவு கொழுப்பு இருக்கனும்?  எனக்கு வர்ற கோபத்துக்கு  அடிச்சி  அவ மூஞ்சி முகரையெல்லாம் பேர்த்திருப்பேன்.”

“அட விடுப்பா…  சின்னப்  பொண்ணு.  தெரியாம ஏதோ பேசியிருக்கும்.  நீ இங்கயே ஸ்டீபன் கூட இரு. சாப்பிடும் போது வந்து கூப்பிடுறேன்.”

“சொல்லி வைங்க அவகிட்ட.  இங்கயிருந்து போற வரைக்கும் அவ இருக்கற இடம் தெரியக் கூடாது. வாயத் தொறந்து எதுவும் பேசக் கூடாது.”

“சரிப்பா… சரிப்பா…  நீ அமைதியா இரு.  ஒரு பொண்ணுகிட்டயாவது சண்டை போடாம இருக்கியா நீ” என்று புலம்பியவாறு படியேறியவரை முறைத்தபடி நின்றான் கதிர்.

படகின் மேல்தளத்திற்கு வந்த அழகர் சிவரஞ்சனியையும் சமாதானம் செய்து அவளுடன் பேசியபடி அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“அம்மாடி சிவரஞ்சனி,  அவன் ஒரு முரட்டுப் பய. சட்டுன்னு கோபம் வந்துடும். அவன் திட்டினத மனசுல வச்சிக்காதம்மா. எதுக்கும் நீ அவன் கண்ணுலயே படாம இரு. அதான் நல்லது.”

அப்பொழுது உணவு தயாராகிவிட்டதாகக் கூறிய சுந்தரும் ஜெகாவும்,  உணவு  வகைகளைக் கொண்டு வந்து வைத்தனர். கதிரையும ஸ்டீபனையும் அழைத்தவர்கள்,  சிவரஞ்சனியையும் அழைத்து  அனைவரும் வட்டமாக அமர்ந்தனர்.

ஒரு தட்டில் சுடச்சுட சாதம் வைத்து,  அதன் மீது மணக்க மணக்க மீன் குழம்பை ஊற்றி,  பொறித்த மீன் துண்டுகளை வைத்து முதலில் சிவரஞ்சனியிடம் நீட்டினான்  சுந்தர்.

அவை அப்பொழுது பிடித்த மீன்கள்.  மிகவும் ஃப்ரெஷ்ஷான மீன்களை வைத்து செய்த மீன்குழம்பு மிகுந்த வாசத்துடன் சாப்பிடத் தூண்டும்படி இருந்தது. அனைவரது வாயிலும் தானாக நீரைச் சுரக்கச் செய்தது.

அந்தத் தட்டைத் தயக்கமாகப் பார்த்தவள்,  முகத்தை லேசாகச் சுளித்தபடி வேண்டாம் என்று கூறினாள்.

“சாப்பிடு பாப்பா சூப்பரா இருக்கும்.”

“எனக்கு வேண்டாம் ண்ணா… “  என்று அவள் கூறியதும் அவளை முறைத்த கதிர்,

“என்ன… சாப்பிடக் கூட உன்னை எல்லாரும் கெஞ்சனுமா?  ஒழுங்கா வாங்கிச் சாப்பிடு” என்று மிரட்டினான்.

அவனைப் பாவமாகப் பார்த்தவாறு சுந்தரிடம், “அண்ணா நான் அசைவம் சாப்பிட மாட்டேன். கொஞ்சம் மோர் இருந்தாப் போதும்,  அதை ஊற்றிச் சாப்பிட்டுக்குவேன்.”

“அய்யோ…  மோர்லாம் இல்லையே பாப்பா.”

“பரவாயில்ல ண்ணா நான் வெறும் தண்ணி ஊற்றிக்கூட சாப்பிட்டுக்குவேன்.” என்றபடி வேறு ஒரு தட்டில் சாதம் வைத்து தண்ணீர் ஊற்றி ஜெகா கொண்டு வந்து கொடுத்த ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாள். அது அனைவருக்கும் சங்கடத்தைக் கொடுத்தது.

“நீ வெறும் தண்ணி ஊத்தி சாப்பிடும் போது,  நாங்க மட்டும் மீன் குழம்பு வச்சி சாப்பிடறோம். எப்பவுமே அசைவம் சாப்பிட மாட்டியாம்மா”

“ஆமாம் அங்கிள்,  எப்பவும் அசைவம் சாப்பிட மாட்டேன்.  எத்தனையோ நாள் பட்டினியா வெறும் வயிற்றோட படுத்திருக்கேன் அங்கிள். அப்படிப் பார்த்தா  இந்த சாப்பாடு எனக்கு தேவாமிர்தம்.  நீங்க சாப்பிடுங்க அங்கிள்”   என்று கூறியவளைக் கேள்வியாகப் பார்த்தவன்,

“ஏன்?  உங்க அப்பா என்ன பண்றாரு?”   என்று அவளது தந்தையின் வருமானத்தை அறியும் பொருட்டுக் கேட்டான்.

“எனக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் இல்லை. எங்க சித்தி கூடத்தான் இருக்கிறேன். அப்பா பென்ஷன் கொஞ்சம் வருது.  அதத் தவிர வேற  வருமானம் இல்ல அதான்.” என்று தயக்கத்துடனும் சிறு சங்கடத்துடனும் கூறியவள்,  அப்பொழுதும் தனது சித்தியை விட்டுக் கொடுக்கவில்லை.

ஏனோ!  அவளும் தன்னைப் போலவே தாய் தந்தையற்ற பெண் என்பதில்,  கதிரின் மனம் சற்று இளகியது.  அப்பொழுதுதான் அவளை நன்றாக கவனித்தான்.

காதில் முத்து போன்று பிளாஸ்டிக் தோடுகள் அணிந்திருந்தாள்.  கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்  கைக்கொன்றாக அணிந்திருந்தாள்.  கழுத்து வெறுமையாக இருந்தது. அவளுக்குச் சற்றும் பொருந்தாத அவனது சட்டையைத் தொளதொளவென்று அணிந்திருந்தாள்.

ஆனாலும் முகம் துடைத்து வைத்த வெண்கல விளக்கைப் போல பளபளப்பாக இருந்தது. சோகையான விளக்கு வெளிச்சத்திலும் அவளது சந்தன நிறம் பளிச்சென்று தெரிந்தது.

காந்தம் போல ஈர்க்கும் விழிகள்,  சிறிய அளவிலான மூக்கு. மேலுதடு மெலிந்தும் கீழுதடு சற்று சதைப்பற்றாகவும் இயல்பாகவே சிவந்து இருந்தன. சுந்தரிடம் ஏதோ பேசிக்கொண்டே சாப்பிட்டவளின் பளீரென்று மின்னிய அரிசிப் பற்கள்  என்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்,  தலையை உலுக்கிக் கொண்டான்.

‘ச்சே…  இது என்ன இவளை இப்படிப் பார்க்கிறேன்’ என்றுத் தன்னையே கடிந்து கொண்டவன்,   அதன் பின்னர்  விரைவாக உணவை முடித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டான்.

உணவு உண்டதும் அனைத்தையும் எடுத்து வைக்க ஜெகாவுக்கும் சுந்தருக்கும் உதவினாள்.

“அம்மாடி சிவரஞ்சனி,  நீ அந்த ரூம்ல படுத்துக்கோம்மா.  ரூமுக்கு கதவுல்லாம் இல்ல.   ஆனாலும் ஒரு பயமும் கிடையாது.  நான் இங்க வெளியிலதான் படுத்திருப்பேன்.  நீ உள்ள போய் படுத்துக்கம்மா.”

சரி என்று தலையாட்டியவள் அமைதியாக அறைக்குள் சென்று தரையில்,  கைகளைத் தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.  தூக்கம் வரவில்லை.  தானும் வெளியே அமர்ந்திருந்தால் அவர்களுக்கும் சங்கடம்,  தனக்கும் சங்கடம் என்பதாலேயே உள்ளே வந்தாள்.

வெளியே கதிரின் ஆர்ப்பாட்டமான சிரிப்புச் சத்தம் கேட்டது.  ஜெகாவும் ஸ்டீபனும் ஏதோ நகைச்சுவையைக் கூற அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். இந்த சிடுமூஞ்சிக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா என்று எண்ணிக் கொண்டாள்.

கதிரின் உடைகளும் தோரணையும் அவன் நன்கு வசதியானவன் என்று காட்டியது.  ஸ்டீபனும் ஜெகாவும் மீனவர்கள் என்பதும் புரிந்தது.  ஆனாலும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைவருடனும் நன்கு பழகுபவனைப் பார்த்துச்  சற்று ஆச்சரியமாக இருந்தது.

அழகர் அவனைப் பற்றிக் கூறியதையெல்லாம் நினைத்துப் பார்த்தாள்.  அடேங்கப்பா!  சாதாரணமாகக் கேட்டதற்கு எவ்வளவு கோபம் வருகிறது அவனுக்கு.  இன்று அவனிடம் அடி வாங்கியிருக்க வேண்டியது. அழகர் அங்கிளால் தப்பித்தேன் என்று எண்ணிக் கொண்டாள்.

அத்தனை ஆண்களுக்கு மத்தியில் இருந்தபோதும்,  ஒருவரின் பார்வைகூட தன் மீதுத் தவறாக விழவில்லை என்பது புரிந்தது.  கோபப்பட்டாலும் கதிரும் நல்ல குணமுடையவன் என்று எண்ணிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் இளையராஜாவின் இன்னிசை கீதங்கள் ஒலிக்கத் துவங்கின. கதிர்தான் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.  அருமையான பாடல்களைக் கேட்டபடி அவள் உறங்கிப் போனாள்.

***

எப்பொழுதும் போல அதிகாலை நான்கு மணிக்கே விழிப்பு வந்தது சிவரஞ்சனிக்கு.   வெளியே  மெல்லிய ஒற்றை விளக்கு மட்டுமே எரிந்தது.  சற்றுத் தயக்கத்துடனே வெளியே வந்தாள்.

படகு காற்றின் வேகத்தில் கடலின் மீது சற்று அலைபாய்ந்தபடி இருந்தது. ஸ்டீபனும் ஜெகாவும் படகின் ஒரு புறத்தில் நின்று கடலில் வீசியிருந்த வலைகளை இழுத்துக் கொண்டு இருந்தனர்.

இவளைப் பார்த்ததும், “எழுந்திருச்சிட்டியா பாப்பா.  கீழ சின்னதா பாத்ரூம்மு இருக்கு போய் மூஞ்சி கழுவிக்கோ. கொஞ்சம் வெயில் வந்ததும் குளிச்சிக்கோ பாப்பா.  இப்ப தண்ணீ சில்லுன்னு இருக்கும்”  என்றான் ஜெகா.

சரி என்றவள் கீழே சென்று முகம் கழுவி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டவள் மாடியேறி வந்தாள்.   மார்கழிப் பனிக்காற்று கடலுக்கு நடுவே நின்றிருந்ததால்,  சற்று ஆவேசமாக எலும்பை   ஊடுருவிச்  சென்றது.

கைகள் இரண்டையும் இணைத்துக் குறுக்கே கட்டிக் கொண்டாள். வாயைத் திறந்தால் சிகரெட் பிடிப்பது போல புகையாய் வந்தது.

ஜெகா ஒரு டம்ளரில் டீ கொண்டு வந்து  அவளிடம் கொடுத்தான். அந்தக் குளிருக்கு சூடான டீ இதமாக இருந்தது. கதிர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியில் காலை நீட்டியபடி சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அழகரும் சுந்தரும்  ஆளுக்கொரு  மூலையில் சுருண்டிருந்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் தூங்கலையாண்ணா?”

“கடலுக்குள்ள படகெடுத்துகிட்டு வந்தா தூக்கமெல்லாம் பார்க்க முடியாதும்மா.  திமிங்கிலமோ சுறாவோ கூட்டமா வந்தா படகை கவுத்தி விட்டுடும். கடல் கொள்ளைக்காரனுங்க கண்ணுல பட்டா உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

எந்த நேரம் காத்தடிக்கும் எந்த நேரம் மழை வரும்னு ஒன்னும் சொல்ல முடியாது.  எப்பவும்  ஜாக்கிரதையாதான் இருக்கனும்.”

“நம்ம நாட்டுக் கடல் எல்லைக்குள்ளதான் இருக்கனும். தெரியாம தாண்டிட்டா நம்ம வலையெல்லாம் அறுத்து விட்டுறுவானுங்க  பாப்பா.  படகை உடைச்சிடுவானுங்க. அதுமட்டுமா?  எத்தனை மீனவர்கள் செத்துப் போயிருக்காங்க?”

“மீனவர்கள் பிழைப்பே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பிழைப்பும்மா.  கடலுக்குள்ள வந்தவன் திரும்பி கரைக்கு வந்தாதான் உறுதி. நிம்மதியான தூக்கமெல்லாம் புள்ள குட்டிங்க முகத்தைப் பார்த்தாதான் வரும்.”

அவர்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மைதானே என்று தோன்றியது.

“ஆனா நைட்டு இரண்டு மணிவரைக்கும் கதிர் தம்பிதான் முழிச்சிருந்தது.  நாங்க அதுவரைக்கும் தூங்கி இப்பக் கொஞ்சம் முன்னாடிதான் எழுந்தோம்.”

திரும்பிக் கதிரைப் பார்த்தாள்.  அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.  இப்படி உட்கார்ந்து தூங்கினா உடம்பு வலிக்காதா என்று தோன்றியது.

“கதிர் தம்பி தலையெடுத்த பிறகு இப்ப எவ்வளவோ எங்க நிலைமை  மாறி இருக்குமா.”

“…”

“மீன் பிடி தடைக் காலம் ஏப்ரல் 15 ம் தேதியில இருந்து ஜூன் 15 ம் தேதி வரை  அரசாங்கத்துல அறிவிச்சிருக்காங்க.  மீன்கள் இனப்பெருக்கம் செய்யற நேரம் இது.   அந்த நேரத்துல மீன் பிடிக்க கடலுக்கு வரக்கூடாது.

இரண்டு மாசமும் ஒரு வருமானமும் இருக்காது. இந்த ஓய்வு நேரத்துலதான் படகு, வலையெல்லாம் ரிப்பேர் பண்ணி வைக்கனும்.  அதுக்கும் பணம் வேணும்.

புயல் பாதிப்பு ஏதும் இல்லைன்னா தாக்குப்பிடிச்சிடுவோம். ஆனா புயல் வந்தா சுத்தமா சேமிப்பும் எதுவுமே இருக்காதும்மா.  புயல்ல சேதமான குடிசைய   மறுபடி கட்டவே சரியா இருக்கும்.

ஆனா இப்ப ராகவன் ஐயாவும் கதிரும் சேர்ந்து,  எங்க குப்பத்துல கல்லு வீடு கட்டிக்  குடுத்து, குறைஞ்ச பணத்தை வாடகையா வாங்குறாங்க.”

“இலவசமா குடுத்தா  எல்லா பயலுகளுக்கும் இளக்காரமா போகுமின்னு பணம் வாங்குறாங்க  பாப்பா.  ஆனா அந்தப் பணத்தையும் பேங்க்ல எங்க பேர்லயே போட்டு,  மீன் பிடிக்க தடை போடுற இரண்டு மாசமும் எங்களுக்கே திருப்பி குடுத்துடுவாங்க.”

“…”

“எனக்கெல்லாம் சொந்த படகே கிடையாது.   இது ராகவன் ஐயாவுக்கு சொந்தமான படகு.  இந்த மாதிரி அஞ்சு படகு  ஐயாவுக்கு இருக்கு.  குறைஞ்ச வாடகை வாங்கிகிட்டு படகை விட்டிருக்காங்க.”

“இங்க மட்டுமில்ல பரங்கிப்பேட்டை,  சாமியார் பேட்டைன்னு எல்லா இடத்துலயும் ஐயாவோட நல்ல குணத்தால அவருக்கு செல்வாக்கு அதிகம்  பாப்பா. கதிரு அவருக்கு புள்ள மாதிரி.”

“…”

“கதிரு மட்டும் என்ன?  வக்கீலுக்கு படிச்சிருக்கு. வழிவழியா நாங்க இருந்த நிலத்துல வீடு கட்டித்தர ராகவன் ஐயா முயற்சி பண்ணப்ப,  கலெக்டர்  ஆபீசில  எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாங்க?.

கதிருதான் பொதுநல வழக்கு போட்டு வாதாடி எங்களுக்கு பட்டா வாங்கி தந்துச்சி. எங்க பொம்பளைங்களும் உழைச்சி முன்னேறனும்னு சிறு தொழில் கூடங்கள் அமைக்க அதுதான் முயற்சி பண்ணுச்சி.”

“…”

“கதிருக்கு கோபம் வந்தா சிடுசிடுன்னு பேசிப்புடும்.  தப்புன்னா டக்குன்னு கைய நீட்டிடும். ஒருத்தன் கதிர்கிட்ட அடி வாங்குறான்னா அவன் கண்டிப்பா தப்பு செஞ்சிருப்பான்.”

“ஆனா எதையும் மனசுல வச்சிக்காது.  தப்பு செஞ்சவன் உணர்ந்துட்டா,  உடனே அணைச்சிக்கும். கதிர் மாதிரி ஒரு நல்ல குணம் எங்கயும் பார்க்க முடியாது.”

ஸ்டீபனும் ஜெகாவும் மாறி மாறிப் பேசியதில்,  சிவரஞ்சனியின் மனதில் கதிரின் மீது பெரும் மரியாதை வந்திருந்தது.

ராகவனைப் பற்றி அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.  அறக்கட்டளைகள்  மூலமாக  அவர் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து வருவது அவளுக்கும் தெரியும். ஆனால் இப்போது இவர்கள் வாயால் கேட்கும் போது பெரும் மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது.

“காலைக்கு என்ன சமைக்கலாம் அண்ணா?  சும்மா உட்கார்ந்து இருக்க போர் அடிக்குது. நான் சமைக்குறேனே.”

“ஐய்ய…  உனக்கேன் கஷ்டம் பாப்பா.  நாங்க நிமிஷத்துல செஞ்சிடுவோம். கதிர் அண்ணன் கறி மீனுன்னா நல்லா சாப்பிடும். ஐஸ் பெட்டிக்குள்ள இட்லி மாவும் கோழிக்கறியும் இருக்கு.  இட்லி சுட்டு கோழிக்குழம்பும் செய்யலாம்னு நினைச்சேன்.  உனக்கு கொஞ்சமா வெங்காயம் பூண்டு போட்டு குழம்பு வச்சிட்டா போதாது?”

“போதும் ண்ணா.  நான் மதியத்துக்கும் அதையே வச்சிப்பேன்.  வெங்காயம் பூண்டுல்லாம் எங்கண்ணா இருக்கு?  நான் உறிச்சுத் தர்றேன்.”

“கீழதான் இருக்கு.  இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் பாப்பா,  அப்புறம் செய்யலாம்.”

“சரி ண்ணா.”

கீழே இறங்கி சென்றவள்,  குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அதே உடைகளை அணிந்து கொண்டு வந்தாள்.  கிழக்கில் சூரியன் கடலில் இருந்து மேலே எழும்பும் காட்சி ரம்மியமாக இருந்தது.

கடலுக்குள் மூழ்கி இருந்த கதிரவன் செஞ்சாந்து நிறத்தில் தகதகவென்று மின்னியபடி மேலே எழும்பியது.  அதன் கிரணங்கள் பட்டு, கடலே பொன்னாடை போர்த்தியது போல காட்சியளித்தது.

படகின் ஓரம் நின்று  காணக் கிடைக்காத  இந்தக் காட்சியை ரசித்தபடி தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் பெண்.   உறங்கிக் கொண்டிருந்த கதிர் விழிப்பு வந்ததும் மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தான்.

சூரிய வெளிச்சம் பின்னனியில் இருக்க, கோட்டோவியம் போல நின்றிருந்த பெண் பார்வையில் பட்டாள். தன் தலை முடியை விரல்களால் கோதிப் பிரித்து விட்டபடி நின்றிருந்தவளின் பின்புறத் தோற்றம் ஏனோ மயக்கத்தைத் தருவதாய்  இருந்தது அவனுக்கு.

‘டேய் கதிரு நீ ரொம்பக் கெட்டுப் போயிட்ட.  ஒரு ஆஞ்சநேயர் பக்தன மாத்தப் பாக்குறா. நீ மாட்டிக்காத. முதல்ல இவளக் கூட்டிட்டுப் போய் அவ வீட்டுல விட்டுடனும். அப்புறம் இவ இருக்கற பக்கமே திரும்பக் கூடாது.’  என்று ஏகத்துக்கும் மனசாட்சி அட்வைஸ் செய்ய,  கஷ்டப்பட்டுக் கண்களைத் திருப்பினான்.

அனைவரும் விழித்து எழும்பிவிட காலை வேலைகள் களைகட்ட ஆரம்பித்தது.  வலையில் சிக்கிய மீன்கள் அனைத்தையும் குளிர் பதனக் கிடங்கில் சேமித்தனர்.   படகும் வேறு திசையில்  நகரத் துவங்கியது.

காலை உணவு  செய்வதற்கும் மதிய உணவு செய்வதற்கும் உதவிகள் செய்து கொண்டு கீழேயே இருந்தாள்.  அவன் முன் வரவேயில்லை அவள்.  அவனைத் தேவையில்லாமல் கோபப் படுத்தக் கூடாது என்று ஒதுங்கியே இருந்தாள்.

அது வேறு அவனுக்கு ஏனென்றே தெரியாமல் எரிச்சலைக் கிளப்பியது.   அவன்தான்  அவளை இருக்கும் இடம் தெரியாமல் இருக்கச்   சொன்னவன்.  ஆனால் அவள் ஒதுங்கி இருப்பதும் காரணம் புரியாத வெறுமையைக் கொடுத்தது.

அழகரும் அவளது குடும்ப நிலையைப் பற்றிக் கூறியதில் அவள் மீது இரக்கம் சுரந்தது.

“ அது ரொம்ப நல்ல பொண்ணு மாப்ள.   அநாவசியமான அலட்டல் இல்லை.  தேவையில்லாத பேச்சு பேசறதில்லை. ரொம்ப மரியாதையான பொண்ணும் கூட.

உடனே வீட்டுக்குப் போகனும்னு, அது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா என்ன பண்ண முடியும் சொல்லு? ஆனா எடுத்துச் சொன்னதும் புரிஞ்சிகிட்டு அமைதியா இருந்துகிச்சு.

இப்பவும் அந்தப் புள்ளைக்கு பயம் இருக்கு,  அவங்க சித்தி வீட்டுக்குள்ள விடலைன்னா என்ன செய்யன்னு?  ஆனா எதையும் வெளிய காட்டிக்காம அமைதியா இருக்கு.   குடும்பமும் கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் போல.”

“ஊருக்குப் போனதும் நம்மளால முடிஞ்ச உதவிய செய்வோம் மாமா.”

“கண்டிப்பாச் செய்யனும் கதிரு.”

இவ்வாறாக அன்று முழுவதும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நகர்ந்தது. மூன்றாம் நாள் ராகவனும் ஊருக்குத் திரும்புவதாகக் கூறியதும்,  இவர்களும் படகைத் திருப்பியிருந்தனர்.

விலை மதிப்பு கூடிய மீன்கள் நிறைய கிடைத்ததில் ஸ்டீபனும் ஜெகாவும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர்.  மீன்கள் நல்ல விலைக்குப் போகும் என்று எண்ணியபடி உற்சாகமாக இருந்தனர். அவளும் அவர்களிடம் அது பற்றிய விவரங்களைக் கேட்டபடி வந்தாள்.

“இப்பல்லாம் இடையில கமிஷன் வாங்குறவனுங்க இல்லாம நாங்களே விக்குறது நல்ல லாபம் கிடைக்குது பாப்பா.”

“மீன் பதப்படுத்தும் தொழில் கூடம் வர ஏற்பாடு நடக்குது.  வந்துட்டா நாமளே நேரடியா ஏற்றுமதி பண்ணலாமாம்.  கதிர்தான் முன்ன நின்னு எல்லா ஏற்பாடும் செய்யுது.”

“இந்த  டிசம்பர், ஜனவரி மாசங்கள்ள  நிறைய மீன்கள் கிடைக்கும் பாப்பா.  மீதமாகுற மீனை கருவாடாதான் மாத்துவோம். இனிமே பதப்படுத்தி விக்கலாம்.”

அவளும் அவர்களிடம் உற்சாகமாகப் பேசியபடி வந்தாள். மூன்று நாட்கள்  பழகினாலும் கள்ளமில்லாத அன்பு வைத்திருந்தவர்களை  இன்றோடு பார்க்க முடியாதே என்றும் தோன்றியது.

அழகர் கதிர் இவர்களையும் மறக்க முடியாது என்று எண்ணிக் கொண்டாள்.  அதே சமயம் வீட்டில் சித்தியிடம் எவ்வளவு மாத்து வாங்கப் போகிறோமோ என்ற பயமும் அடி வயிற்றில் உருண்டது.

அவர்கள் படகு ஏறிய இடத்திற்கு மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவும் அமைச்சரின் வாகனம் வரவும் சரியாக இருந்தது.

இடைப்பட்ட இந்த மூன்று நாட்களுக்குள் டிஎஸ்பியும் இன்ஸ்பெக்டரும் வெவ்வேறு மாவட்டங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டு இருந்தனர்.  கிளம்புவதற்குக்  கூட அவகாசம் இல்லாமல் அவசர அவசரமாக ஓடியிருந்தனர் இருவரும்.

எம்எல்ஏ குமார்  பல்  பிடுங்கிய பாம்பாக அலைந்து கொண்டிருந்தான்.  அவனுக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட பயம் வேறு.   இனிக் கதிர் என்னென்ன ஆட்டம் ஆடப் போகிறானோ என்று.  இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கெத்தாக காட்டிக் கொண்டான்.

ஸ்டீபனிடமும் ஜெகாவிடமும் விடைபெற்றுப் பின் கதிரையும் சிவரஞ்சனியையும் ஏற்றிக் கொண்டு அமைச்சரின் வாகனம் அவர்களது ஊரை நோக்கி விரைந்தது.

தான் அப்படியே வீட்டுக்குப் போய்  விடுவதாகக் கூறிய சிவரஞ்சனியை,  வாசுகியையும் அழைத்துக் கொண்டு வந்து உங்க வீட்டுல சொல்லி விட்டுட்டு வர்றோம் என்று கூறியிருந்தார் ராகவன்.

மூன்று நாட்கள் வீட்டிற்குச் செல்லாத பெண், ஆண்களுடன் சென்று இறங்குவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று அவர் கூறியது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது.

சுந்தரும் அழகரும் அங்கே நிறுத்தி வைத்து இருந்த அவர்களது காரில் ஏறி அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

காற்று வீசும். .

 

error: Content is protected !!