mp3

மது பிரியன் 3

பாரிஜாதமும், அவர் கணவரும், மணமக்களை காரைக்குடிக்கு அழைத்து வந்து, தனிக் குடித்தனம் வைத்துவிட்டு, மதுரா அவ்வீட்டிற்கு புதிதாய் வந்ததன் நிமித்தமாய், அவளைக் கொண்டு சில முறைமைகளை முறையாகச் செய்துவிட்டுச் சென்றிருந்தனர்.

“மதுரா, ரெண்டு வருசமாவே, பஞ்சவர்ண அக்கா இங்கதான் தம்பிகளுக்கும், வசீக்கும் சமையல் பண்ணிப்போட்டுட்டு, வீடு, வாசலையும் பாத்திட்டு இருக்கு. இனியும் அது உனக்கு ஒத்தாசையா இங்கேயே இருக்கட்டுமா?” என பாரி இப்படித்தான் செய்யவேண்டும் என்று நேரடியாகக் கூறாமல், இதுவே சிறந்தது எனும்படியாகக் கேட்டார்.

“இருக்கட்டும் அண்ணீ” என மதுராவும் ஆமோதித்திருந்தாள்.

அத்தோடு சில நடைமுறைச் சிரமங்களை விலக்க எண்ணி, “வசீ இங்கதான் படிச்சிட்டு இருக்கான்.  விஜய் தனியா இருக்கானேனுதான் கடைசிப் பயலுக ரெண்டு பேரையும், இங்க கொண்டு வந்து படிக்க விட்டேன். ஒருத்தன் அங்கேயே எங்க வீட்டுக்கு வரேன்னு அடமா வந்துட்டான். அவன் வந்ததைப் பாத்துட்டு, இவனும் போன வருசம் வரேன்னுதான் சொன்னான்.  நாந்தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு இருனு சொல்லி விட்ருந்தேன்.  இப்பதான் நீ வந்துட்டியே.  அதனால அடுத்த வருசம் அங்கிட்டு, நம்ம ஊருப்பக்கமே சின்னவனை ஸ்கூலுல சேத்துக்கறேன்.  அதுவரை அவன் இங்க இருக்கட்டும்.  எதுனாலும் யோசிக்காம போனைப் போடு” என மதுராவிடம் விசயங்களைப் பகிர்ந்திருந்தார் பாரி.

மதுராவும், வசீகரன் இங்கேயே தங்களுடன் இருக்கட்டும் என்று கூற, “இவ்ளோ நாளும் தம்பி தனியா இருக்கானேன்னுதான், அவனுக்கு துணைக்கு எம்புள்ளைகளை விட்ருந்தேன்.  இப்பதான் நீயிருக்கல்ல! எந்தம்பிக்கு துணையா?” என்று சிரிக்க

“உங்க தம்பி என்ன சின்னப் பையனா அண்ணீ?” என மதுரா கேட்டேவிட்டாள்.

மதுராவின் கேள்விக்கு, “அவன் எனக்கு எப்பவும் சின்னப்பையன்தான். எங்கல்யாணத்தப்ப எப்டி அழுதான்னு நினைக்கிறே!  அக்கா என்னை விட்டுட்டு நீ மட்டும் ஊருக்குப் போற! என்னையும் ஊங்கூடவே கூட்டிட்டுப் போயிருன்னு!” என பழைய நினைவுகளை அசைபோட்டவாறே, தம்பியின் நினைவில் சிரித்தார் பாரி.

சற்று நேரம் அதனைத் தொடர்ந்து, விஜயைப் பற்றிய பேச்சுகள் வந்திட, மதுராவிற்கு தன்னவனைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அனைத்தையும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

புது மணப்பெண்ணின் வருகையை ஒட்டி, வீட்டிலுள்ள சில இடங்களில், அறைகளில், சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்யக் கூறியிருந்தான் விஜய்.  அதற்கான வேலை நடந்துகொண்டிருக்க, அதனை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் விஜய்.

வேலைகள் முடிந்ததுமே, வெளியில் வேலை என்று கிளம்பிய விஜயிடம், “தம்பி, வேலைக்குப் போனாலும், வீட்டுல என்ன நடக்குது, ஏது நடக்குதுனு நீதான் பாக்கணும்.  உன்னை நம்பி வந்த புள்ளைக்கு வேணுங்கறதை நீதான் கேட்டு வாங்கிக் குடுக்கணும். ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா, எங்களுக்கும் சந்தோசம்பா.  அதனால சீக்கிரமா என்னை அத்தைனு கூப்பிட ஒரு புள்ளையப் பெத்துக் குடுங்க” என சாடைமாடையாக, தங்களின் எதிர்பார்ப்பைத் தம்பியிடம் பகிர்ந்துகொண்டிருந்தார் பாரி.

தலையை ஆட்டி சமாளித்தான் விஜய்.

பாரியின் கணவரும் விஜயை தனியே அழைத்துச் சென்று, “மாப்பிள்ளை, நீ இன்னும் சின்னப்புள்ளை இல்ல.  உனக்கு நான் சொல்ற அளவுக்கு ஒன்னுந் தெரியாதவனும் இல்ல நீயி.  இந்த வாழ்க்கைய எந்தக் குறையுமில்லாம, சந்தோசமா வாழ பழகிக்கோ.  பழசை எதையும் யோசிக்காத. அது முடிஞ்சு போனது”

“…” மைத்துனர் கூறுவதையும், மறுப்பேதும் கூறாமல் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டான் விஜய்.

“எப்பப் பாத்தாலும் ஆபிசுனு இல்லாம, தங்கச்சிய வெளிய எங்கேயாவது கூட்டிட்டுப் போயிட்டு வரப்பாரு.  சனி, ஞாயிறு லீவுனா, நம்ம வசீய ஊருக்கு வர்ற பஸ்ல ஏத்திவிட்டுட்டு, எனக்கு ஒரு போனைப் போடு.  அவனை நாம் பாத்துக்குவேன். ஊட்டி, கொடைக்கானல், இல்லைனா உங்களுக்கு எங்க தோதோ, போயிட்டு வாங்க.  பஞ்சவர்ணத்திட்ட சின்னவனை விட்டுட்டுப் போங்க.  அது பாத்துக்கும்” என இங்கிதமாய் பேசிவிட்டு விடைபெற்றிருந்தார்.

தற்போது இருப்பது சொந்த வீடு. மாடியில் உள்ள தனியறையில் வசீகரனைத் தங்கிக் கொள்ளுமாறு பாரி கூற, “இங்கதானம்மா இவ்ளோ நாள் இருந்தேன்.  இப்ப என்ன புதுசா வந்து சொல்லிக்கிட்டுருக்க!” என்றவனிடம், நாசூக்காக சில விசயங்களை தனியாக அழைத்துக் கூறிவிட்டு, பாரிஜாதம் கிளம்பியிருந்தார். பஞ்சவர்ணமும் மாடியில்தான் தங்கியிருந்தார். 

பெரியவர்கள் கூறிய அனைத்திற்கும், மறுப்பேதும் கூறாமல் தலையாட்டி விடை தந்திருந்தனர் தம்பதியர்.

………………………………………….

காரைக்குடிக்கு வந்து ஒரு வாரம் சென்றிருந்தது. வசீகரன், பள்ளி செல்லும் நேரம் தவிர, இதர நேரங்களில் அத்தை மதுராவிற்கு சிறந்த பேச்சுத் துணையாக மாறியிருந்தான்.

பள்ளியில் நடந்த அனைத்தையும் அத்தையிடம் கூறுவான். சிலது கேட்க வேடிக்கையாக இருக்கும்.  சில விசயங்கள் அவனை கண்டிக்கும்படி இருக்கும். எப்படித் தோன்றினாலும், கேட்டுக் கொண்டு இதமாய் வசீகரனுக்கு புரியுமாறு கூறுவாள்.  அவனும் மறுப்பேதும் கூறாமல் கேட்டுக் கொள்வான்.

“அத்தை எங்க கிளாஸ்ல ஒரு பையன் எங்க ஜூனியர் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்துட்டான்”

வசீகரனின் பேச்சைக் கேட்ட மதுரா பதறி, “என்னடா சொல்ற?  பன்னெண்டு வயசுல லவ்வா? லவ்வுன்னா இந்த வயசில உங்களுக்கு என்னடா புரியும்? ஃபிரண்டா இருக்கப் போகுது.  நீங்க தப்பா எதாவது சொல்லி, அவனை ஏத்தி விடாதீங்க”

“லவ்வா, க்ரஷ்ஷா, பெஸ்டியானு, சரியா ஐடென்டிஃபை பண்ணித்தான் குடுப்பானுங்க அத்தை.  பசங்க எல்லாம் இந்த விசயத்துல ரொம்பத் தெளிவாத்தான் இருப்பாங்க” என்றவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் மதுரா. 

இந்த சிறுவயதிலேயே எவ்வளவு முதிர்ச்சியாய் இதுபோன்ற விசயங்களைப் பற்றி தன்னிடம் எந்தத் தயக்கமும் இன்றிப் பேசுகிறான் என்று தோன்றியது மதுராவிற்கு.

சின்னஞ் சிறுவனின் சாதாரண பேச்சே தனக்குத் திகைப்பைத் தர, எப்டி இத்தனை பெரிய ஆண்மகனான விஜய்யை நல்ல விதமாய்ப் புரிந்து கொண்டு, பிரச்சனையின்றி சுமூகமாய் வாழப் போகிறோம் என்கிற கலக்கமும் மதுராவிற்குள் புதிதாய் வந்து குடிவந்திருந்தது.

……………………………….

வேலை செய்யும் பஞ்சவர்ணமும் நல்ல குணமாய் இருக்க, அவரோடும் இணக்கமாய் பொழுதுகள் சென்றது மதுராவிற்கு.

“பஞ்சுக்கா, நீங்க இங்க வந்து எவ்ளோ நாளிருக்கும்?”

“நானா” என யோசித்தவர், “நான் வந்து, இந்த மாசி வந்தா, ரெண்டு வருசமாகப் போகுதுமா”

“உங்களுக்கு சொந்த ஊரே காரைக்குடிதானாக்கா?”

“இல்ல, நான் பாரி வீட்லதான் முன்ன வேலைக்கு இருந்தேன்.  அதுதான் இங்ஙன கொண்டு வந்து விட்டுச்சு.  அதுல இருந்து, ஆக்கிப் பொங்கிப் போட்டுகிட்டு, இங்கதான் தங்கி இருக்கேன்”

பஞ்சவர்ணத்திற்கு எந்த ஆதரவுமின்றி, பாரியின் புகுந்த வீட்டில் விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டு, கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருந்தவரை, இங்கு அழைத்து வந்து தம்பிக்காகவும், தனது பிள்ளைகளுக்காகவும் பாரி விட்டிருந்ததை, அவரின் மூலமாகவே அறிந்து கொண்டாள் மதுரா.

ஆகையினால், பஞ்சவர்ணத்திற்கு விஜயின் பழைய வாழ்க்கை மற்றும் அவனைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதை வந்த இரண்டே நாள்களில் அறிந்து கொண்டிருந்தாள் மதுரா.

வசீகரனுக்கு மூத்தவனும் முன்பு இங்கு வசீரகனுடன் தங்கியிருந்ததையும் அவர் மூலமாகவே அறிந்து கொண்டாள்.  ஆனால் அவன் இங்கு தங்கிப் படிக்கப் பிரியமின்றி, தங்களின் ஊருக்குச் செல்வதே சிறியவனான வசீகரனுக்கு அப்போது தெரியாமல் இருந்ததையும், அவன் சென்ற புதிதில் தானும் தன் தமையனோடு ஊரிலிருந்தே பள்ளிக்குப் போவதாக அடம்பிடித்தவன், தாய் பாரியின் பிடிவாதத்தால் இங்கே தங்கியிருப்பதையும் தெரிந்து கொண்டாள்.

வீட்டு நிர்வாகத்தை இனி மதுராவே பார்ப்பாள் என்றும், அவளிடமே இனி அனைத்தையும் கேட்டுச் செய்யும்படியும் வந்த அன்றே, பஞ்சவர்ணத்தை அழைத்துக் கூறியிருந்தான் விஜய்.

மதுரா தன் அத்தையின் வீட்டில், அவரிட்ட அனைத்து வேலைகளையும் ஒரு வேலைக்காரியைப்போல செய்து வந்திருக்க, இங்கு வேலைப்பளு எதுவுமின்றி இருப்பதாகவே உணர்ந்தாள்.

மொத்தத்தில், சுற்றம் புகுந்த இடத்தில் அவளுக்கு நன்றாகவே அமைந்திருந்தது.  ஆனால் வெகுநேரம் வேலையின்றி இருக்கும்படி நேர்ந்தது. 

அத்தை வீட்டில் இருக்கும்வரை, வேலையே அவளின் பெரும்பாலான நேரத்தை விழுங்கி, அவளுக்காக மெனக்கெட இயலாத நிலையில் இருந்தவளுக்கு, இங்கு ஓய்வு நேரம் அதிகமிருந்தது. அதனால், அவளைக் கவனிக்க, வீட்டைப் பராமரிக்க, கணவனைப்பற்றி யோசிக்க, தனது மனம்போல பொழுதைச் செலவளிக்க என அதிக நேரம் கிடைத்தது.

ஒரு வாரத்திற்குள்ளாகவே பழக்கப்பட்டுப்போன தினசரி முறைமையில், சில வழக்கமான வேலைகள் பழகியதும், நேரம் முன்பைக் காட்டிலும் மிச்சமானது. அந்நேரங்களில் மனதை அது போன போக்கில் செயல்படுத்தத் துவங்கியவளுக்கு, புதிய மணமகளுக்கான இயல்பான எதிர்பார்ப்புகள் கூடிப் போனதையும்,  அது நிறைவேறாததால் உண்டான வெறுமையையும் உணரத் துவங்கியிருந்தாள் மதுரா.

கணவனாய், போதுமான அளவிற்கு செலவுக்கான பணத்தை கையில் தந்து, வேண்டியதை வாங்கிக் கொள்ள, வீட்டு நிர்வாகத்தை தன் மனம்போல நடத்த என சுதந்திரத்தைத் தந்தவனிடம், வந்த ஓரிரு நாள்களில் மனம் மயங்கிக், கிறங்கிக் கிடந்தாலும், அதிலிருந்து விரைவாய் மீண்டு, ஏனிப்படி? இப்படித்தான் அனைத்து ஆண்களுமே திருமணமான புதிதில் இருப்பார்களா எனும் கேள்வி எழுந்ததோடு, அதற்கான பதிலாய், தனது அத்தை மக்களின் கணவன்மார்களது நடவடிக்கைகள், பேச்சு, செய்கை அனைத்தையும் அரசல்புரசலாய் கண்டிருந்தவளுக்கு நிதர்சனம் புரிய, தன்னிடமிருந்து விலகி, ஒதுங்கிப் போகும் கணவனை எண்ணி, ஏமாற்றத்தை உணரத் துவங்கியிருந்தாள்.

அதேநேரம் அந்த விலகலுக்கு, தானும் ஒரு காரணமாய் மாறிப் போனதை எண்ணி வருத்தமும் வந்தது.  இதை மனதிற்குள் வைத்துப் புழுங்கினாள் மதுரா.

காரைக்குடி வந்த அன்று இரவில், “எனக்கு தோணுறதை உங்கிட்ட சொல்றேன் மதுரா.  உனக்கும் சரினு பட்டாச் சொல்லு. இல்லைனா அடுத்ததா என்ன செய்யலாம்னு பாத்துக்கலாம்” என பீடிகையோடு துவங்கினான் அவள் கணவன்.

“ரெண்டு பேரும் இன்னும் நல்லா, ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிட்டு குடும்ப வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்னு தோணுது.  உனக்கு நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்”

கணவன் தன்னிடம் கூற வருவது புரிந்தாலும், “நீங்க மறைச்சு பூடகமாச் சொன்னா எனக்குப் புரியாமப் போகலாம். நீங்க என்ன நினைச்சு சொல்றீங்களோ, அதை ஓபனாவே சொல்லுங்க, ஏன்னா, நீங்க ஒன்னு நினைச்சுச் சொல்ல, நான் அதையே வேற மாதிரி புரிஞ்சிட்டா பின்னாடி பிரச்சனை வர வாய்ப்பிருக்கு.  அதனால எதுனாலும் நீங்களே சொல்லீருங்க” என்றிருந்தாள் மதுரா.

“பத்து நாள்ல அம்மாவும், அக்காவும் உன்னைப் பாத்து, பேசி முடிச்சு, உடனே கல்யாணம்னு நச்சரிச்சு, ஊருக்கு வரச் சொன்னாங்க.  அதான் இன்னும் மைண்ட் செட் ஆகல” எனத் தயங்கினான்.

“அதுக்கு என்ன?”

“இல்ல” என தயங்கியவன் தன்னை சமாளித்துக்கொண்டு, “உனக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ல.  கொஞ்ச நாள் வெயிட் பண்ணி, ரெண்டு பேரும் இன்னும் நல்லா புரிஞ்சிட்டு, நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சா, இன்னும் நல்லாருக்கும்னு தோணுச்சு” என இழுத்தவனிடம்

சட்டென “இதுக்கா இத்தனை பீடிகையோட பேச ஆரம்பிச்சீங்க.  ஒன்னும் பிரச்சனையில்லை.  அதுவரை நானும் காத்திருப்பேன்” என, எதையும் தன்னிடம் கேட்டு முடிவு செய்யும் கணவனை எண்ணி, மெச்சுதல் மனதில் தோன்ற, அதனால் எழுந்த மகிழ்ச்சியோடு வந்த புதிதில் பதில் கூறியிருந்தாள்.

“இதுல உனக்கொன்னும் வருத்தமில்லையே”

“வருத்தமா? எதுக்கு?” எனக் கேட்டவளிடம் என்ன பேச என்றே புரியாமல், “வருத்தமில்லைனா போகட்டும். சீக்கிரத்திலேயே ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிகிட்டு, நம்ம வாழ்க்கைய அமோகமாக வாழ ஆரம்பிச்சிரலாம்” என முடித்திருந்தான் விஜய்.

“எனக்குமே நம்ம கல்யாணம் நடந்ததை இன்னும் என்னால ஏத்துக்க முடியலைங்க.  கனவோன்னு அப்பப்போ தோணுது” என மதுராவும் தனது ஆழ்மன உணர்வைக் கணவனிடம் கூற, அடுத்தடுத்து வந்த நாள்கள், சாதாரண பேச்சு, சிரிப்பு, கேலி என அத்தை மகள், மாமன் மகன் உறவைப்போல இருவருக்கிடையே இடைவெளியோடு சென்றது.

இருவருக்குமே நிதானிக்கும் வயது. ஆகையால் பொறுமையாக, வாழக்கையை அதன்போக்கில் வாழ ஆரம்பிக்கலாம் என்று நினைத்தே, ஆரம்பத்தில் வாழத் துவங்கியிருந்தனர்.

வந்த தினத்தில் இருந்ததைப்போலவே, அடுத்து வந்த பத்து நாள்களும் சென்றிருந்தது.

அன்று காலையில் தலைக்குக் குளித்துவிட்டு, அவர்களின் அறைக்குள் நின்றபடி முடியின் சிக்குகளை நீக்கியபடி நின்றிருந்தவளை, அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவன் கண்டான். மதுராவிற்கு கரிய அடர்ந்த முடி.  அதற்குள் அவளது சிறிய அழகு முகம் பளிச்செனத் தெரிய, இரவு வானின் முழுநிலவை நினைவுறுத்தியது அவள் வதனம்.

தன்னவளின் முகத்தைத் தொட முண்டிய ஆசையை, முயன்றும் முடியாமல் அவனை ஏதோ தடுத்தது.  ஆகையினால் அவளின் நீண்ட கரிய முடிக்குள் கையை நுழைத்துப் பிடித்து, மூக்கருகே கொண்டு சென்றவன், “செமையா வாசம் வருது.  என்ன போட்ட தலைக்கு” எனக்கேட்க, கணவனின் திடீர் எதிர்பாரா செயலில் தடுமாறிப் போனாள் மதுரா.

ஒரே படுக்கையில் படுத்தாலும், இருவருமே ஒருவருக்கொருவர் முதுகு காட்டி, எதிரெதிர் பக்கமாகவே திரும்பிப் படுக்கின்றனர்.  அப்படி ஒரு நிலையில் திடீரென தலைமுடியைப் பிடித்து, வாசம் பிடிப்பவனை நோக்கி, தனது உள்ளம் அவன்பால் ஆசையாய்ச் செல்வதை உணர்ந்தவளுக்கு, நாணிச் சிவந்துபோன தருணமாய் அந்நேரம் மாறிப்போனது.

உள்ளமெங்கும் பரவச உணர்வு ஊடுருவிப் பாய்ந்திட, முடியை விலக்கியபடி கணவனைப் பார்த்தவளின் அருகே இருந்த விஜயின் முகத்தைக் கண்டதும், மேலும் தடுமாற்றம் வந்து சேர்ந்தது மதுராவிற்கு.

மனைவியின் தடுமாற்றம் புரிந்தவனோ, இதழில் நகையோடு, மதுராவின் கன்னத்தை முயன்று தட்டி, “கேட்டதுக்கு பதில் சொல்லாம, என்ன யோசனை மதுரா”

அத்தை மகள்களுக்கு செய்த பக்குவத்தில், காரைக்குடி வந்ததும் தனக்கும் தலைக்கு அரப்புடன் சில அறிய மூலிகைகள் கலந்து அரைத்து அதைப் பயன்படுத்தியதைக் கணவனிடம் கூறினாள்.

“அதுவா இப்டி ஸ்மெல் வருது!” ஆச்சர்யமாய், மனைவியின் முடியை விடாமல், நெருக்கத்தை குறைக்காமல் அப்படியே நின்றபடி கேட்டான்.

“இப்பலாம் ரெகுலரா தலைக்கு மல்லிப்பூ வச்சிட்டு, தலைக்கு அரப்பு தேய்ச்சு குளிச்சதும், ரெண்டும் சேந்து ஒரு புதுவித வாசம் வருதுபோல” என விளக்கினாள்.

இயல்பாய் மனைவியுடன் பேச, பழக முயன்றவனுக்குள், அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாமல், பழைய நிகழ்வுகளும், நினைவுகளும்  தடுப்பதை உணர்ந்தான்.

மதுராவிற்கு அவனோடு இலகுவாகப் பேசினாலும், உரிமையாய் அவனைத் தொடவோ, நெருங்கவோ தயக்கமாய் உணர்ந்தாள்.

ஒரு ஆணே, கணவனாக எல்லா உரிமையும் பெற்றவனாக இருந்தும், தள்ளி நின்று ஒரு இடைவெளியோடு தன்னிடம் உறவாடும்போது, உரையாடும்போது, தான் அதனைத் தகர்த்து, ஒரு அடி எவ்வாறு முன்னால் வைக்க என தன்னை விழிப்போடு தள்ளி நிறுத்தி வைக்க, பழக்கினாள் மதுரா.

பாத்திரம் தேய்க்க, காய்கறி நறுக்க, வீடு வாசல் கூட்ட, கழுவ என பஞ்சவர்ணம் வேலையாக இருக்க, கணவனுக்கு வேண்டிய காலை ஆகாரத்தை செய்து தருவது, அதன்பின் அலுவலகம் சென்றவன் மதியம் சில நாள் வீடு திரும்பும்முன் மதிய உணவைத் தயார் செய்வது என பொழுது வேகமாகச் சென்றது மதுராவிற்கு.

வசீகரனும் மதிய உணவிற்கு சைக்கிளில் வீட்டிற்கு வந்து சென்றான். அந்த நேரங்களில் எல்லாம் மாமனோடு சேர்ந்து அத்தையை கிண்டல் செய்வது, கேலி பேசுவது, சில நேரங்களில் மாமனைப் பற்றி அத்தையிடம் போட்டுக் குடுப்பது என சந்தோசமாகவே அவன் பொழுதுகள் இனிமையாகப் போனது.

அப்படி ஒரு நாள், “அத்தை, இத்தன நாளு நம்ம பஞ்சக்கா என்ன வச்சாலும், ஒன்னுமே சொல்லாம மாமா சாப்பிட்டுப் போவாங்க”

“அப்ப நான் வந்ததும்தான், இவ்ளோ குறை சொல்றாங்களாடா வசீ”

“ஏய். இப்ப என்ன சொன்னேன்.  காரம் கொஞ்சம் கூடிருச்சுனு சொன்னது குறையா?” என விஜய் மதுராவிடம் கேட்க, இல்லையென்று கணவனிடம் தலையாட்டியவள்,

அதேநேரம் அத்தையின் கேள்விக்கு “…” ஆம் என தலையாட்டிவனின் தலையைப் பிடித்து செல்லமாய் ஆட்டிவிட்டு, “இப்டி நீ எங்கிட்ட சொன்னதை மனசுல வச்சு, உன்னை எதுவும் நான் இல்லாத நேரமாப் பாத்து அடிப்பாரோடா” மதுரா, வசீயிடம் வினவ

“என்ன எதுக்கு அடிக்கிறாரு” என சட்டெனக் கேட்டவன், “அடிக்கிறதோ, புடிக்கிறதோ, கடிக்கிறதோ எதுவானாலும், எல்லாம் இனி உங்களோடதான்” என யோசியாது பட்டெனக் கூறிவிட்டான் வசீ.

அவனது பேச்சில் இருவருமே, சிரித்தாலும், நீண்ட நேரம் கண்களில் புன்னகையோடு வசீ கூறியதை நினைத்து, அதைக் கற்பனை செய்தபடியே, ஒருவரையொருவர் பார்த்திருந்தனர்.

“அத்தை, ஸ்கூலுக்கு நேரமாச்சு.  எனக்கு சாதம் போட்டுத் தயிர் ஊத்துவீங்களா? இல்லை ரெண்டு பேரும் கண்ணுலயே பேசிக்கிட்டு, என்னை டீலுல விட்ருவீங்களானு சொன்னா, உக்காந்திருக்கிறதா, இல்லை எழுந்திருச்சி போறாதானு ஒரு முடிவுக்கு வருவேன்ல” எனக்கேட்டு இருவரையும் நடப்பிற்கு கொண்டு வந்தான் வசீகரன்.

தாங்கள் கண் வழியே பேசியது வசீகரன் வரை தெரிய வந்ததை எண்ணி இருவருமே சங்கடமாய் உணர்ந்து, அதன்பின் பார்வையை மீட்டு, நடப்பிற்கு வந்தனர்.

மாலை நேரங்களில் வசீகரனுக்கு தனக்குத் தெரிந்ததைச் சொல்லித் தருவது என மதுராவிற்கு பொழுது சென்றது.

பாரி மகனுடன் பேசும்போது, “என்னடா, அத்தை என்ன செய்யுது” என்று கேட்டதுமே, எதையும் மறைக்காமல் அனைத்தையும் ஒப்பித்துவிடுவான்.  ஆகையால் அரசல் புரசலான இருவரின் கொக்கிப் பார்வைகளும், கொஞ்சும் பேச்சுகளும், தெரியவந்திட ஆசுவாசமாக உணர்ந்தார் பாரி.

‘கடவுள் சீக்கிரமா கண்ணைத் திறக்கட்டும்’ என நல்ல செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கினார் பாரி.

வெளியில் எங்கும் அழைத்துச் செல்ல நேரமில்லாமல் இருந்ததால், தினசரி வந்ததும், “சாரி.  இன்னிக்கு” எனத் துவங்கி, அன்றைய அனைத்து திட்டமிடல்களையும் மனைவியிடம் ஒப்பித்து, தன்னை நல்லவனாய்க் காட்டிக் கொள்ள முனைந்தான் விஜய்.

பதினைந்து நாள்கள் சென்றிருக்க, அன்று மதுரா அம்மாவின் தோழி பிரேமா அவளுக்கு அழைத்திருந்தார்.

மதுராவிடம் நீண்ட நேரம் பேசியவர், “மாப்பிள்ளை உங்கிட்ட நல்லா அன்பா நடந்துக்குறாரா?”

“ம் நடந்துக்குறாங்கத்தை”

“அவருக்கு தோதான நாளு பாத்து, இங்க விருந்துக்கு வந்துட்டுப் போங்க ரெண்டுபேரும்”

“ம். அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேந்தை”

அதன்பின்னும் விடாமல் தோண்டித் துருவிக் கேட்டார் பிரேமா.  உன்னை வெளியில் அழைத்துச் செல்கிறாரா? எங்கெல்லாம் சென்று வந்தீர்கள்? இப்படி கேள்விகள் தொடர, பதில் கூற இயலாது திகைத்துப் போனாள் மதுரா.

பிரேமா, மதுராவின் பதிலைக் கேட்டு என்ன செய்தார்? பிரேமா அழைத்த விருந்திற்கு தம்பதியர் சென்று வந்தனரா?

…………………………………