MP3

MP3

மோகனப் புன்னகையில் 3

விஜயேந்திரன் அந்தக் கறுப்பு அம்பாசிடரை ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் அமர்ந்திருந்தான் ஸ்டீஃபன். இந்த ஊருக்கு வந்து இறங்கிய அன்று பார்த்ததற்கு இன்றுதான் விஜயேந்திரனைப் பார்க்கிறான்.

இன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தன. ‘ஐயா’ வைப் பார்க்கா விட்டாலும் ஸ்டீஃபனுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மற்றவர்களால் செவ்வனே நிறைவேற்றப்பட்டன.

பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்க ஸ்டீஃபனை தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரோடு அனுப்பி வைத்திருந்தார் கணக்கர். அந்தப் பயணம் அவன் வாழ்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாறிப்போனது.

பக்கத்து ஊரில் பெரிதாக ஒரு கோவில் இருப்பதாக கங்கா சொல்லக் கேட்டவன் இன்று அங்கு போவதற்காகத் தன் காமெராவோட புறப்பட்டான்.

அதிர்ஷ்டவசமாக அவன் புறப்படும் நேரம் விஜயேந்திரன் எதிர்ப் புறமாக அரண்மனைக்குள் வந்து கொண்டிருந்தான். 

‘ஹலோ ஸ்டீஃபன்.’

‘ஹலோ சார்.’ விஜயேந்திரனைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்டீஃபனுக்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி. ராஜ மிடுக்கோடு நடந்து வரும் அந்த முழு ஆண்மகனை இமைக்காமல் பார்த்திருந்தான்.

‘நேத்து பத்மநாபபுரம் போனீங்களா?’

‘ஆமா சார். ரொம்ப அருமையா இருந்துச்சு. ரொம்பத் தாங்ஸ் சார். உங்க ஹெல்ப் இல்லைன்னா நான் ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பேன்.’ பவ்வியமாக வந்தது ஸ்டீஃபனின் குரல்.

‘கரிகாலனோட ஸ்நேகிதருக்கு இது கூட நான் பண்ணலைனா எப்படி?’ அந்த வசீகரப் புன்னகையில் ஸ்டீஃபன் மயங்கினாலும், அவன் மனது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டது.

‘கரிகாலனின் ஸ்நேகிதத்திற்கா இத்தனை கவனிப்பு!’

‘இப்போ எங்க கிளம்பிட்டீங்க ஸ்டீஃபன்?’ விஜயேந்திரனின் குரலில் கலைந்தான் இளையவன்.

‘பக்கத்து ஊர்ல பெரிய கோவில் ஒன்னு இருக்குன்னு கங்கா சொன்னாங்க. அதான் பார்க்கலாம்னு கிளம்பிட்டேன் சார்.’

‘ஓ! ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இதோ வந்தர்றேன்.’ சொல்லிவிட்டு உள்ளே போனவன் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான்.

‘போகலாம் ஸ்டீஃபன்.’

‘சார்! நீங்களும் வர்றீங்களா சார்?’ அந்த உற்சாகக் குரலில் புன்னகைத்தான் விஜயேந்திரன். ஆனால் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. அமைதியாகக் காரை ஓட்டிய படியே இருந்தான்.

ஸ்டீஃபனும் வாய் திறக்கவில்லை. இத்தனை பிஸியாக இருக்கும் மனிதர் இன்றைக்குத் தன்னோடு இவ்வளவு தூரம் புறப்பட்டு வந்திருக்கிறார் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவரே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.

கார் அந்த சாலையில் திரும்பியது. வழிநெடுகிலும் பெரிய பெரிய மரங்கள் நிற்க அந்த ஏரியாவே குளிர்ச்சியாக இருந்தது. சற்று தூரம் செல்ல கொஞ்சம் காட்டுப் பகுதி போல தெரிந்த இடத்தில் அந்தக் கோவில் அமைந்திருந்தது. 

கொஞ்சம் பெரிய கோவில் தான். சிற்ப வேலைப்பாடுகளோடு பார்க்க அழகாக இருந்தது.

“அப்புறம் ஸ்டீஃபன்! கரிகாலனோட பேசுனீங்க போல?” அந்தக் கேள்வியில் ஸ்டீஃபன் புன்னகைத்தான். வெளி வேலையாகத் திரிந்தாலும் ‘அரண்மனை ஐயா’ வின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது என்று புரிந்தது.

“ஆமா சார். போஸ்ட் ஆஃபீஸ் போய் பேசினேன்.”

“ம்… என்ன சொல்றார் கரிகாலன்?”

“ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க சார். நீங்க இன்னும் அவங்களை மறக்கலைன்னு சொன்னாங்க சார்.” இதைச் சொல்லும் போது ஸ்டீஃபனின் கண்கள் எதிரிலிருப்பவனையே அளவெடுத்தது.

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தான் விஜயேந்திரன்.

“என்ன சொன்னார்?”

“இல்லை… நீங்க இன்னும் அந்த நட்பை மறக்கலைன்னு சொன்னார் சார்.” ஒரு நமட்டுச் சிரிப்போடு சொன்னான் ஸ்டீஃபன்.

“எதையும் அத்தனை சுலபத்துல மறக்க முடியாது ஸ்டீஃபன்.” ஒரு பெருமூச்சோடு சொன்னவன் மீண்டும் தொடர்ந்தான்.

“கனடா பத்தி சொல்லுங்க ஸ்டீஃபன். கரிகாலன் எங்க வேலை பார்க்கிறார்? அவங்க வொய்ஃப் டான்ஸரில்லை? இப்பவும் டான்ஸ் பண்ணுறாங்களா என்ன?” இயல்பாகக் கேட்பது போல் கேட்டான் விஜயேந்திரன்.

எலி இதுவரை அம்மணமாக ஓடியது எதுக்கென்று இப்போது புரிந்தது ஸ்டீஃபனுக்கு. 

“டான்ஸ் ப்ரோக்ராம்ஸ் பண்ணுறாங்கன்னு தான் நினைக்கிறேன் சார். நான் பேசும் போது உங்க நண்பர் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டார் சார். ஆனா… அதுக்கு எனக்குத்தான் பதில் தெரியலை.”

“அப்படி என்ன கேட்டார் கரிகாலன்?” சிரித்தபடியே கேட்டான் விஜயேந்திரன்.

“சாருக்கு எத்தனை குழந்தைகள்ன்னு கேட்டார்.” ஒரு கூடை நெருப்பை அவன் தலையில் கொட்டுகிறோம் என்று தெரிந்தும் கேட்டான் ஸ்டீஃபன். 

ஆனால் அத்தனை சுலபத்தில் ஸ்டீஃபன் எதிர்பார்த்த சங்கடத்தை விஜயேந்திரனின் முகம் காட்டி விடவில்லை. ஒரு சில நொடிகள் தடுமாறியவன் லாவகமாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். 

“இல்லை ஸ்டீஃபன். இன்னும் கல்யாணம் ஆகலை.”

அந்த அரண்மனையில் மூன்று நாட்கள் தங்கி இருந்தாலும் வேறு யாருடைய அறிமுகமும் ஸ்டீஃபனுக்குக் கிடைக்கவில்லை. படத்திற்குப் போடப்பட்டிருந்த மாலையைக் காட்டி கணக்கரிடம் பெரியவரின் இறப்பை உறுதிப் படுத்திக் கொண்டான். 

மற்ற விடயங்கள் எதையும் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. அரண்மனை ஊழியர்களின் விசுவாசம் காலாகாலமாக அறிந்த ஒன்று என்பதால் அவர்களிடம் எதையும் கேட்டு தன் தரத்தைக் குறைத்துக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை.

“ஓ… கோயிலுக்குள்ள போகலாமா சார்?”

“கொஞ்சம் வேலையிருக்குப்பா. நீங்க போய்ப் பார்த்துட்டு உங்க வேலையை முடியுங்க. நான் ஒரு மதியம் போல காரை ட்ரைவரோட அனுப்புறேன். சரியா இருக்குமில்லை.” 

அதுவரை நேரமிருந்த இலகுத் தன்மை மாற விஜயேந்திரன் அங்கிருந்து நகர முற்படுவது ஸ்டீஃபனுக்குப் புரிந்தது.

“சார் ஒரு பத்து நிமிஷம். உங்களுக்காக வேணாம். எனக்காக வாங்க சார்.” வற்புறுத்தலாகவே சொன்னவன் தானும் காரை விட்டிறங்கி விஜயேந்திரனின் பக்கக் கதவையும் திறந்து விட்டான்.

“இறங்குங்க சார்.” ஸ்டீஃபனின் விசித்திரமான செய்கைகளில் ஆச்சரியப்பட்டான் விஜயேந்திரன். ஆனாலும் மறுக்க முடியவில்லை. காரை விட்டிறங்கிக் கோயிலை நோக்கி நடந்தார்கள்.

கோயிலில் அன்று அதிக கூட்டம் இருக்கவில்லை. வந்திருந்த ஒன்றிரண்டு பேரும் விஜயேந்திரனுக்கு வணக்கம் வைத்து விட்டு நகர்ந்து போனார்கள்.

அங்கிருந்த கருங்கற்பாறை ஒன்றின் மேல் அமர்ந்த விஜயேந்திரன்,

“சொல்லுங்க ஸ்டீஃபன். எங்கிட்ட ஏதாவது பேசணும்னு நினைக்கிறீங்களா?” என்றான். ஆனால் ஸ்டீஃபன் எதுவும் பேசவில்லை. தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் அந்த மனிதனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

“என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு ஸ்டீஃபன்?” இப்போது நன்றாகவே சிரித்தான் விஜயேந்திரன்.

“அந்த சுமித்ரா ரொம்ப லக்கி சார்!” அந்த வார்த்தைகளை ஸ்டீஃபன் சொன்ன பொழுது விஜயேந்திரனின் முகத்தில் கலவரம் வந்து போனது.

“என்ன சொல்லுறீங்க நீங்க?”

“இப்படியொரு மனுஷன் கூட வாழக் குடுத்து வெச்சிருக்கே! அப்போ அவங்க லக்கிதானே சார்?” ஸ்டீஃபன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.

“ஸ்டீஃபன்… நீ… நீங்க என்ன… சொல்றீங்க?” நாவறண்டு தடுமாறினான் விஜயேந்திரன். சற்று முன் காரில் வைத்துத் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த மனிதன் காணாமல் போயிருந்தான்.

“அத்தான் சொன்னாங்க சார். நான் ராஜாவை சரியாப் புரிஞ்சிருந்தா, இன்னைக்கு வரைக்கும் அவன் யாரையும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான்னு சொன்னாங்க.”

“அத்தானா? அது யாரு?”

“கரிகாலன்.”

“ஸ்டீஃபன்… ஸ்டீஃபன். என்னோட உயிரை உருவாதீங்க ஸ்டீஃபன். உங்களைப் பார்த்த நாள்ல இருந்து தினமும் நான் செத்துக்கிட்டிருக்கேன். நீங்க சொல்ல வர்றதைத் தெளிவாச் சொல்லுங்க ஸ்டீஃபன்.” கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்டு அடிக்குரலில் பேசினான் விஜயேந்திரன். குரலில் மட்டுமல்ல, முகத்திலும் அப்பட்டமாக வலி தெரிந்தது.

ஆனால் ஸ்டீஃபன் பேசவில்லை. தான் காமெரா வைத்திருந்த பையைத் திறந்து அதிலிருந்த கவர் ஒன்றை எடுத்து எதிரிலிருப்பவனிடம் நீட்டினான்.

“என்ன இது?”

“பிரிச்சுப் படிங்க சார்.” கலவரத்தோடே அதை வாங்கிய விஜயேந்திரன் மெதுவாக அந்தக் கவரைப் பிரித்தான். கடிதம் ஒன்று உள்ளே இருந்தது. பிரித்துப் படித்தான்.

அன்புள்ள ராஜாவிற்கு,

கரிகாலன் எழுதிக் கொள்வது. உன்னிடம் ஆயிரம் லட்சம் கோடி முறை மன்னிப்பை முதலிலேயே வேண்டிக் கொள்கிறேன். உன் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்டது மட்டுமல்லாமல் இத்தனை காலதாமதமாக உன்னை அணுகுவதற்கும் என்னை நீ மன்னித்து விடு.

காலம் உன்னை மட்டுமல்ல, என்னையும் சேர்த்தே வஞ்சித்தது, உன் அப்பா ரூபத்தில். அன்று அவர் எங்கள் வீட்டிற்கு வந்து ஆடிய ருத்ர தாண்டவத்தை நீ பார்த்திருந்தால் ஒருவேளை எங்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள உன்னால் முடிந்திருக்கும்.

உன் மனதிலிருந்த ஆசையை நீ சொல்லா விட்டாலும் நான் அறிவேன். என் நண்பனை விட ஒரு சிறந்த துணை சுமித்ராவிற்கு அமைய முடியாது என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். அத்தனையிலும் மண்ணை அள்ளிப் போட்டார் உன் அப்பா.

அன்று அவர் பேசிய வார்த்தைகளை இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு உடம்பு கூசுகிறது. அத்தனை கேவலமாக சுமித்ராவை அவர் பேசியிருக்கக் கூடாது. எந்தப் பாவமும் அறியாத அந்த அப்பழுக்கற்ற பெண்ணைப் பற்றி அவர் அவதூறு பேசிய போது என்னால் மட்டுமல்ல, என் ஒட்டுமொத்தக் குடும்பத்தாலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. நாட்டியம் ஆடுபவள் என்றால் இன்றைக்கு அத்தனை கேவலமா என்ன?

இதைப் படிக்கும் போது விஜயேந்திரனின் தாடையென்பு இறுகியது. கண்களை மூடி ஒரு கணம் தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன் தொடர்ந்தான்.

ஆசைகள் அத்தனையும் நிராசையாக, விஷப்பாட்டிலோடு நின்றிருந்த அம்மாவின் ப்ளாக் மெயிலுக்குப் பயந்து தான் சுமித்ராவின் கழுத்தில் தாலியைக் கட்டினேன். 

உன் மனதைத் தெளிவாகப் படிக்க முடிந்த என்னால் சுமித்ராவின் மனதை அத்தனை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு உன் பால் ஒரு பிரியம் இருந்தது என்று தான் இன்றும் என் மனது அடித்துச் சொல்கிறது.

மனதில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு சுமித்ராவோடு வாழ என்னால் முடியவில்லை. கல்யாணம் முடிந்த கையோடு எல்லாவற்றையும் அவளிடம் ஒப்புவித்து விட்டேன். 

காதல் கொண்டிருந்தால் தானே அவள் கவலைப்படுவதற்கு. கடமைக்காகச் செய்த திருமணம் தானே! எல்லாவற்றையும் இலகுவாக ஏற்றுக் கொண்டாள்.

வேலை தேடி அலைந்து கொண்டிருந்த எனக்குக் கனடா செல்ல வாய்ப்பு வரவும் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். வீட்டில் வேலை விஷயம் மட்டுமே சொன்னேன். கனடா போன பிறகு சுமித்ராவையும் அழைத்துக் கொள் என்று முடித்து விட்டார்கள். 

ஆனால் நான் சுமித்ராவிடம் எதையும் மறைக்கவில்லை. நான் பண்ணப்போகும் அனைத்தையும் அவளிடம் சொல்லி விட்டுத்தான் கிளம்பினேன். 

உன்னைப் பார்த்து நடந்தது அனைத்தையும் கூற அவளிடம் அனுமதி கேட்ட போது கடுமையாக மறுத்து விட்டாள். உன் அப்பாவின் பேச்சுக்கள் வாள் கொண்டு இன்றும் அவளை அறுக்கிறது என்பது தான் உண்மை.

ராஜா! நான் காதலித்துத் திருமணம் பண்ணிக் கொண்டவன். அதனால் உன் காதல் மனதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் உன்னைப் பற்றி சுமித்ராவிடம் பேச இன்னும் எனக்குத் தைரியம் வரவில்லை. ஜாடை மாடையாக அவள் வாழ்வு பற்றிப் பல முறை பேசிவிட்டேன். ஆனால் பிடி கொடுக்க மறுக்கிறாள்.

என்னால் அவள் வாழ்வு பட்டுப் போய்க் கிடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் உன்னை அணுகுகிறேன். சாத்திரம், சம்பிரதாயம் என்று சொல்லி நீயும் எதற்கும் தயங்கிவிடாதே.

சுமித்ராவின் பொறுப்பை உன் கையில் ஒப்படைக்கிறேன். தாலி கட்டியது மாத்திரம் தான் நான். ஆனால், உன் காதலியை எந்தப் பங்கமும் வராமல் பத்திரமாகவே பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

சுமித்ராவிடம் எதற்கும் சம்மதம் கேட்காதே. தோல்வி தான் மிஞ்சும். தடாலடியாக முடிவெடு. உன் வீட்டுக்கும், என் வீட்டுக்கும் அதுதான் சரியாக இருக்கும்.

வீட்டு மனிதர்கள் யாரோடும் எந்தவிதத் தொடர்பும் எனக்கில்லை, சுமித்ராவைத் தவிர. காரணம் என் திருமணம். அவள் பெயர் ‘ரோஸி’. உன் எதிரில் நிற்கும் ஸ்டீஃபன், என் மைத்துனன். அவர்கள் இருவரும் என்னோடு இப்போது கனடாவில் தான் இருக்கிறார்கள். 

அம்மாவையும் அப்பாவையும் என்னால் சமாதானம் செய்ய முடியவில்லை. சுமித்ராவோடு நான் பேசுவதையே அவர்கள் விரும்புவதில்லை. இதில் எங்கிருந்து நான் அவர்களோடு பேச, சமாதானம் பண்ண.

சுயநலமாக என் முடிவுகளை நான் எடுத்து விட்டதாக என்னைத் தவறாக நினைக்காதே. இந்த முடிவை நான் துணிந்து எடுத்திருக்கா விட்டால் இரு பெண்களின் வாழ்வு பாழாகி இருக்கும். என்ன? சுமித்ராவின் வாழ்வு இப்படிப் பட்டுப் போய் நிற்பதைப் பார்க்கத்தான் என்னால் பொறுக்க முடியவில்லை.

ஏதாவது செய்வாய் என்று மலை போல உன்னை நம்பி இருக்கிறேன். இனியும் காலதாமதம் செய்யாதே. முடிந்தால் ஃபோன் பண்ணிப் பேசு. மற்றவை நேரில்.

இப்படிக்கு,

உன் அன்புத் தோழன் கரிகாலன்.

கடிதத்தைப் படித்து முடித்த பின்பும் ஒரு சில நொடிகள் விஜயேந்திரன் அமைதியாகத் தான் இருந்தான். அவனிடமிருந்து சந்தோஷ ஆர்ப்பரிப்பை எதிர்பார்த்த ஸ்டீஃபன் கொஞ்சம் ஏமாந்து தான் போனான்.

விஜயேந்திரனின் அறிவு, மனம், உடல் என அனைத்தும் கொஞ்ச நேரம் வேலை நிறுத்தம் செய்தன. தான், தனக்கு இல்லையென்று நினைத்திருந்த சொர்க்கம் அவன் கைகளில் தேடிவந்து திணிக்கப்பட்ட போது மூச்சு கூட லேசாகத் தடுமாறியது.

“சார்.” இவன் தோளை அவன் லேசாக உலுக்க அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தவன் எழுந்து ஸ்டீஃபனை ஆரத் தழுவிக் கொண்டான்.

அவன் இறுகிய அணைப்பும், கட்டுப்படுத்த முடியாத சிரிப்பும், கண்களின் நீர்த் துளிர்ப்பும் அவனுள் பொங்கும் ஆனந்தத்தின் அளவை ஸ்டீஃபனுக்கு அழகாக எடுத்துச் சொன்னது.

“சார்!”

“சாரில்லை ஸ்டீஃபன், அண்ணா. அண்ணான்னு கூப்பிடு.” விஜயேந்திரனின் குரல் கரகரத்தது. நெகிழ்ந்து போனான் இளையவன்.

“கேளு ஸ்டீஃபன்! ஏதாவது இந்த அண்ணாக்கிட்ட கேளு. உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு தோணுது. என்னோட அரண்மனையை என்னால குடுக்க முடியாது. ஏன்னா அது என்னோட அம்மா பெயர்ல இருக்கு. அதுதவிர எங்க பரம்பரைக்குச் சேரவேண்டிய அத்தனை சொத்தும் என் பெயர்ல தான் இருக்கு. உனக்கு என்ன வேணும் ஸ்டீஃபன்? பணமா வேணுமா? இல்லை சொத்தா வேணுமா?”

விஜயேந்திரன் அடுக்கிக் கொண்டே போக ஸ்தம்பித்துப் போனான் ஸ்டீஃபன். மேன்மக்கள் மேன்மக்கள்தான் என்று நினைக்கத் தோன்றியது. தன் எதிரே அத்தனை கம்பீரத்தோடு நிற்கும் சேதுபதி வம்சத்து இளவலின் கையைப் பிடித்துக் கொண்டவன்,

“அண்ணா! இந்த ஊருக்கு வந்த நாள்ல இருந்து நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கேன். ‘ஐயா’ என்கிற வார்த்தையைத் தாண்டி உங்களை யாரும் எதுவும் சொல்லுறதில்லை. அப்படிப் பட்ட நீங்க உங்களை ‘அண்ணா’ ன்னு கூப்பிட அனுமதிக்கிறீங்களே! இதை விட எனக்கு என்ன பாக்கியம் வேணும்?” என்றான். இப்போது இவனின் குரலுமே கரகரத்திருந்தது.

இருவருமே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார்கள். 

“வந்த அன்னைக்கே ஏன் ஸ்டீஃபன் இந்த லெட்டரை எங்கிட்டக் குடுக்கலை?” கேட்ட குரலில் ஆதங்கம் இருந்ததோ?

“இல்லை அண்ணா. அதுக்கு முதல் காரணம் உங்க அப்பா. பிரச்சினைக்கு மூல காரணமே அவங்க தான் எங்கிற போது என்னால சட்டுன்னு கடிதத்தை நீட்ட முடியலை. அதோட… ஒரு வேளை உங்களுக்குக் கல்யாணம் ஆகியிருந்தா? உங்க வாழ்க்கையைப் பத்தியும் யோசிக்கணும் இல்லை?” இப்போது கசப்பாகப் புன்னகைத்தான் விஜயேந்திரன்.

“இல்லை ண்ணா. அத்தான் எவ்வளவோ எங்கிட்ட சொன்னாங்க தான். இருந்தாலும் என் மனசுக்கு அது சரின்னு படலை. ஆனா இதுக்கு மேலேயும் தாமதிக்கத் தோணலை. அதான் சட்டுன்னு கேட்டுட்டேன்.” 

விஜயேந்தரனின் முகம் இப்போது மலர்ந்து சிரித்தது.

“அண்ணா! அண்ணி ஃபோட்டோ ஏதாவது இருக்கா?” ஸ்டீஃபனின் குரலில் கேலி இருந்தது. உதட்டைப் பிதுக்கினான் விஜயேந்திரன்.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது.” சொல்லிய அவன் கண்களில் காதல் வழிந்தது.

“போய்ப் பார்க்கணும்னு தோணலையா அண்ணா?” 

“தோணும். டெய்லி தோணும். எப்படி இருக்காளோ? என்ன பண்ணுறாளோ? கரிகாலன் அவளை சந்தோஷமா வெச்சிருக்கானா? இப்படி என்னெல்லாமோ தோணும். இருந்தாலும்… எப்படிப் போய்ப் பார்க்க முடியும் ஸ்டீஃபன்? நான் காதலிச்சிருந்தாலும் இப்போ அவ இன்னொருத்தன் மனைவி. அவளை மனசால நினைக்கிறது கூட பாவம்கிறப்போ எப்படிப் போய்ப் பார்க்க முடியும் சொல்லு?”

“கிரேட் ண்ணா. வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு தோணவே இல்லையா?” ஸ்டீஃபன் கேட்டபோது வானம் பார்த்துப் புன்னகைத்தான் விஜயேந்திரன். 

“இது அவளை நினைச்ச மனசு ஸ்டீஃபன். அவளை மட்டும் தான் நினைக்கும்.” அதற்கு மேலே அவன் பேசவில்லை. கேள்வி கேட்டவன் தான் திகைத்துப் போனான்.

“ரொம்ப நல்லா டான்ஸ் பண்ணுவா. பாட்டும் கத்துக்கிட்டான்னு கரிகாலன் சொல்லி இருக்கான். அந்தக் கண்ணு இருக்கே! அது பேசும் ஸ்டீஃபன்.” அரண்மனை வாசி புலம்ப ஆரம்பித்திருந்தான். இளையவன் ஒரு புன்னகையோடே அதை ரசித்துக் கொண்டிருந்தான்.

“அவங்க ஊர்க் கோயில்ல வச்சு ஒரு நாள் பார்த்தேன். தூணுக்குப் பின்னால நின்னு என்னை எட்டிப் பார்த்தா. அப்போ அந்தக் கண்ணு எத்தனை கதை பேசிச்சு தெரியுமா?”

“பேசினீங்களா அண்ணா? என்ன சொன்னாங்க?” ஆவலாகக் கேட்டான் ஸ்டீஃபன்.

“நான் என் சுமித்ராக்கிட்ட இதுவரை பேசினதே இல்லை ஸ்டீஃபன்.”

“அண்ணா!” ஸ்டீஃபனின் அலறலில் தொலைவில் போய்க் கொண்டிருந்த ஒருவர் திரும்பிப் பார்த்தார்.

“ஹேய்! என்னாச்சுப்பா?” நிதானமாகக் கேட்டான் விஜயேந்திரன்.

“என்ன ஆச்சுப்பா வா? எந்த உலகத்துல அண்ணா இருக்கீங்க? லவ் பண்ணி இருக்கீங்க. அவங்களுக்கும் பிரியம் இருந்ததுன்னு சொல்றீங்க. அப்போ பேசியிருக்க வேண்டியது தானே. எது தடுத்துச்சு உங்களை?” ஒரு அங்கலாய்ப்புடன் கேட்டான் ஸ்டீஃபன்.

தான் முன்பு அமர்ந்திருந்த பாறை மேல் மீண்டும் அமர்ந்து கொண்டான் விஜயேந்திரன். மனம் இப்போது லேசானது போல இருந்தது. உதட்டில் ஒரு புன்னகை ஒட்டிக்கொள்ள ஏதோ கனவில் மிதப்பது போல பேசிக்கொண்டிருந்தான்.

“தேவைப்படலைப்பா. அவளோட பேசித்தான் என் காதலை அவளுக்குப் புரிய வெக்கணும்னு எனக்குத் தோணலை. எம் மனசுல இருக்கிறது என்னன்னு அவளுக்குத் தெரியும். அவ மனசுல என்ன இருந்ததுன்னு எனக்கும் தெரியும். இதுக்கு மேல எதைப் பரிமாறிக்க நாங்க பேசணும் சொல்லு?” 

தன் காதலி தனக்குத் தான் என்ற எண்ணம் கொடுத்த ஆனந்தத்தில் அனைத்தையும் மறந்து அவன் உள்ளத்தைத் திறந்து காட்டிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன். ஸ்டீஃபனுக்கு வார்த்தைகள் வரவில்லை. இமைக்க மறந்து பார்த்திருந்தான்.

“என்ன மாதிரியான காதல் ண்ணா இது? இந்த தெய்வீகக் காதல்னு படத்துல எல்லாம் சொல்லுவாங்களே? அது இதுதானா?” பையன் நம்மைக் கேலி பண்ணுகிறானோ என்று நிமிர்ந்து பார்த்தான் விஜயேந்திரன்.

இல்லை. ஸ்டீஃபன் முகத்தில் ஆச்சரியம் தான் மிஞ்சி நின்றது.

“சந்தேகமே இல்லை. இது அதுதான். இல்லைன்னா அஞ்சு வருஷத்துக்கப்புறம் நீங்க உங்களுக்கு இல்லைன்னு நினைச்ச காதல் இப்போ கைகூடி இருக்குமா சொல்லுங்க?”

இப்போது அமைதியாகப் புன்னகைத்தான் விஜயேந்திரன். மனம் பொங்கி வழிந்தது. சுமித்ராவை இப்போதே பார்க்க வேண்டும் போல உள்ளுணர்வு சொன்னது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஏங்கித் தவித்தது.

கடைசியாக அவளைப் பார்த்த போது அவளுக்குப் பதினெட்டு வயது. இந்த ஐந்து வருடங்களில் அத்தனை பெரிய மாற்றம் வர வாய்ப்பில்லை என்றாலும் கொஞ்சமாவது மாறி இருப்பாளோ! ஏதேதோ எண்ணியபடி தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

“நீ லவ் பண்றியா ஸ்டீஃபன்?”

“இல்லை ண்ணா. ஆனா உங்களைப் பார்க்கும் போது இப்போ ஆசை வருது. உங்களை மாதிரி, ஒரு பொண்ணை உருகி உருகி லவ் பண்ணணும்.” 

முகம் லேசாகச் சிவக்கச் சிரித்தான் விஜயேந்திரன். 

“அண்ணி ரொம்பவே லக்கி ண்ணா.”

“நானும் தான் ஸ்டீஃபன். என்னோட சுமித்ராவைப் பார்த்துட்டு இதை நீயே சொல்லுவ.”

“அண்ணி ரொம்ப அழகா ண்ணா?”

“ம்… ரொம்ப. எனக்குச் சொல்லத் தெரியலை ஸ்டீஃபன்.  அவ்வளவு அழகு.” 

“அண்ணிக்கிட்ட இப்போ இல்லைன்னாலும் எப்போவாவது ஒரு நாளைக்கு நான் கண்டிப்பா சொல்லுவேன். எங்க அண்ணா எப்படியெல்லாம் அவங்களை உருகி உருகிக் காதலிச்சாங்கன்னு. அவங்களை கடைசி வரைக்கும் அன்பா, ஆசையா பார்த்துக்கோங்க அண்ணி ன்னு அவங்ககிட்ட நான் சொல்லுவேன்.” 

பாறையை விட்டு எழும்பிய விஜயேந்திரன் ஸ்டீஃபனைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான். இரண்டு பேரும் காருக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

“அண்ணா! நான் ஒன்னு சொல்லட்டுமா?”

“சொல்லுப்பா.” 

“இல்லை… அண்ணியோட குடும்பம் ரொம்ப கவுரவம் பார்ப்பாங்க, அண்ணியும் இதுக்கெல்லாம் லேசுல சம்மதிக்க மாட்டாங்கன்னு அத்தான் பேசிக்கிட்டாங்க.”

“ம்…

“நீங்க எடுத்து வெக்கிற ஒவ்வொரு அடியையும் நிதானமா எடுத்து வெக்கணும் ண்ணா. எங்கேயும் இன்னொரு தரம் தவறு நடந்திரக் கூடாது.” கவலை இருந்தது இளையவன் பேச்சில்.

“சரிங்க சார்.”

“பார்த்தீங்களா! அண்ணி வரப்போற சந்தோஷத்துல என்னையே கேலி பண்ணுறீங்க.”

“ஹா… ஹா… இல்லைப்பா. இந்த முறை எதுவும் பிசகாது. என் சுமித்ரா எனக்குத்தான். அதுல இனி எந்த மாற்றமும் இல்லை.” விஜயேந்திரனின் குரலில் அத்தனை உறுதி தெரிந்தது.

 

உன் மனதில் நான் துணையில்லையா – இல்லை

துணை தேடத் துணிவில்லையா…

கண்ணம்மா…

error: Content is protected !!