MP4

மோகனப் புன்னகையில் 4

விஜயேந்திரனும் ஸ்டீஃபனும் அப்போதுதான் கோயிலிலிருந்து வீடு திரும்பி இருந்தார்கள்.‌ அருகே அமர்ந்திருந்தவரின் முகத்தைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை ஸ்டீஃபனுக்கு.

சும்மாவே அந்த முகத்தின் தேஜஸில் மயங்கிப் போவான் இளையவன். இப்போது காதலும் மயக்கமும் அங்கு சேர்ந்து கொள்ள, அந்த ஆண்மையின் இலக்கணத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் போனது.

குறுகுறுவென தன்னையே பார்த்திருக்கும் ஸ்டீஃபனைத் திரும்பிப் பார்த்தான் விஜயேந்திரன். 

“என்ன ஸ்டீஃபன்? ஏதாவது சொல்லணுமா?”

“இல்லை ண்ணா சும்மாதான்.” ஏதோ சொல்லிச் சமாளித்தான். மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி ஸ்டீஃபனுக்குத் தோன்றாமல் இல்லை. 

ஆனால் அதில் தான் மூக்கை நுழைத்தால் அத்தனை மரியாதையாக இருக்காது என்று வாயை மூடிக் கொண்டான். இருந்தாலும் மனதில் பொங்கிய ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

வீட்டைக் கார் அடைந்த போது வாசலுக்கே வந்து வரவேற்றார் கணக்கர்.

“தம்பி, கோயில்ப் பெரியவங்க எல்லாம் வந்திருக்காங்க. உங்களுக்காகத் தான் காத்திருக்காங்க.”

“ஓ! இதோ வந்தர்றேன்.” காரை அவசர அவசரமாக ஷெட்டில் விட்டவன் விறுவிறுவென்று உள்ளே போனான்.

“வணக்கம் தம்பி!” வந்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தார்கள்.

“வணக்கம்! உக்காருங்க. உக்காருங்க ஐயா.” பதிலுக்கு வணக்கம் வைத்தவன் அத்தனை பேருக்கும் நாற்காலியைக் காட்டினான்.

அவர்கள் மீண்டும் அமர்ந்து கொள்ள விஜேயந்திரனின் தலை வீட்டினுள்ளே திரும்பிப் பார்த்தது. கங்கா பெரிய ட்ரேயில் அனைவருக்கும் காஃபி கொண்டு வர அம்மாவின் தலையும் தென்பட்டது.

‘அமிழ்தவல்லி.’ விஜயேந்திரனின் அம்மா.‌ கணவர் தவறிய பிறகு இந்த அரண்மனைக்குள்ளேயே அடைந்து போனவர். விஜயேந்திரனின் அம்மா என்று சொல்ல அனைத்து தகுதிகளும் அவரிடம் இருந்தது.

காதோரம் லேசாக நரைத்திருந்த போதும் சேதுபதி வம்சத்தோடு சம்பந்தம் பண்ணிக்கொண்ட நிமிர்வு நிரம்பவே தெரிந்தது. முகத்தில் தெரிந்த கம்பீரம் சொன்னது, இந்த ஊரின் அனைத்து நல்லது கெட்டதிலும் எனக்கும் பங்குண்டு என்று.

காஃபியை எல்லோரும் குடித்து முடிக்க வயதில் மூத்தவர் ஒருவர் ஆரம்பித்தார். 

“தம்பி! ஐயா தவறினதுக்கப்புறம் ஊர்ல எந்த விசேஷமும் இதுவரை நடக்கலை. நம்ம ஒட்டுமொத்த ஊரோட துக்கம் அது. அதைத்தாண்டி ஒரு விசேஷத்தைப் பண்ணிப் பார்க்கிற மனநிலையில நாங்களும் இருக்கலை.”

விஜயேந்திரன் அமைதியாகக் கேட்டிருந்தான். ஒன்றிரண்டு பெரிய தலைகளும் பேசியவரின் கூற்றை ஆதரித்தது. ஸ்டீஃபன் எல்லாவற்றையும் ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான். பாரதிராஜா படம் பார்ப்பது போல இருந்தது.

“இந்த வருஷம் கோயில் திருவிழாவை எடுத்துப் பண்ணலாம்னு நாங்க எல்லாரும் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கோம் தம்பி. அதுக்கு அரண்மனையோட அனுமதி வேணும். தம்பி என்ன சொல்லுறீங்க?”

விஜயேந்திரனின் தலை இப்போது சட்டென்று உள்ளே திரும்பிப் பார்க்க அம்மாவின் தலை ஒப்புதலாக அசைந்தது.

“தாராளமாப் பண்ணிடலாம் ஐயா. எந்தக் குறையும் வராம அமோகமாப் பண்ணுங்க. அப்பா இருக்கும் போது கோயிலுக்கு வந்த கொடை இப்பவும் தவறாம வந்திரும்.”

“ரொம்ப சந்தோஷம் தம்பி. அதேபோல இந்த அரண்மனையோட வாரிசு எங்கிற முறையில ஊரோட முதல் மரியாதையைத் தம்பி ஏத்துக்கணும்.”

“கண்டிப்பா ஐயா.” விஜயேந்திரன் இப்போது உள்ளே திரும்பிப் பார்க்க அமிழ்தவல்லி கையில் பெரிய தட்டோடு நின்றிருந்தார். தட்டில் மங்கலப் பொருட்களோடு இரண்டு பெரிய கட்டுக்களாகப் பணம் வைக்கப் பட்டிருந்தது.

உள்ளே போன விஜயேந்திரன் அம்மாவின் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். கோயில் தர்மகர்த்தாவின் கையில் அதைக் கொடுக்க அங்கிருந்தவர்களின் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது.

“எந்தக் குறையும் வராம நிறைவாப் பண்ணுங்க. கலை நிகழ்ச்சிகள் எதையும் தவற விட்டுறாதீங்க. எல்லா வகையான கலைஞர்களும் கவுரவிக்கப்படணும்.” விஜயேந்திரன் ஆரம்பிக்க சூழல் எதிர்பார்த்ததை விடக் கலகலப்பாகிப் போனது.

கூட்டமாக வந்திருந்தவர்கள் விஜயேந்திரனிடம் இப்படியொரு ஆதரவை எதிர்பார்க்கவில்லை. பெரிய ஐயா தவறிய பிறகு தொழில்களை எடுத்துப் பண்ணி இருந்தாலும் அருகே நெருங்கமுடியாத படி இறுக்கமாக இருந்த விஜயேந்திரனைத் தான் அவர்களுக்குத் தெரியும்.

இப்போது கிளம்பி வரும் போது கூட ஏதோ ஒரு கடமைக்காகத் தான் புறப்பட்டு வந்திருந்தார்கள். ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் அரண்மையின் அனுமதி பெறுவது தான் அவர்கள் வழக்கம்.

ஆனால், தம்பி இன்று இத்தனை இணக்கம் காட்டவும் வந்திருந்த அத்தனை பேரும் மகிழ்ந்து போனார்கள்.

ஒவ்வொரு நிகழ்வாக அலசி ஆராய்ந்தவர்கள் கலை நிகழ்ச்சிக்காக ஒரு பட்டியலைப் போட ஆரம்பித்தார்கள்.

கோலாட்டம், கும்மி, கரகாட்டம், வில்லுப்பாட்டு, வயலின் கச்சேரி என பட்டியல் நீண்டு கொண்டே போனது.

கடைசி நாள் நிகழ்வாக ‘பரதநாட்டியம்’ ஏகமனதாக முடிவாகியது. எல்லா நிகழ்வுகளுக்கும் அந்தந்தத் துறையின் விற்பன்னர்களை தெரிவு செய்து கொண்டிருந்தார்கள்.

“பெரியவங்க தவறா நினைக்கலைன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?”

“தாராளமாச் சொல்லுங்க தம்பி.” இது தர்மகர்த்தா.

“துவாரகா விலேயே பெரிய நாட்டியக் கலைஞர் ஒருத்தர் இருக்காங்க. அவங்களையே கடைசி நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு பண்ணினா என்ன?”

விஜயேந்திரனின் கோரிக்கையில் அதுவரை அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்டீஃபனின் மனம் உள்ளுக்குள் ‘சபாஷ்’ போட்டுக் கொண்டது. 

பெரியவனைப் பார்த்து இவன் லேசாகப் புன்னகைக்க, யாருக்கும் தெரியாமல் இவனைப் பார்த்து அவனும் கண் சிமிட்டினான்.

பேச்சுக்கள் கலை நிகழ்ச்சிகள் சம்பந்தமாக இருந்ததால் உள்ளே போகலாம் எனத்திரும்பிய அமிழ்தவல்லியின் கால்கள் மகனின் ‘துவாரகா’ என்ற ஒற்றைச் சொல்லில் அசையாது அப்படியே நின்றது.

* * * *

“அம்மா சுமித்ரா.”

“சொல்லுங்க மாமா.” சங்கரனின் குரலில் ரூமை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா.

“இந்த வாரக் கடைசியில ஒரு ப்ரோக்ராம் வந்திருக்கு. நாம ஃப்ரீயாத்தான் இருக்கோம். புக் பண்ணிடட்டுமா?”

“ஃப்ரீன்னா தாராளமாப் பண்ணுங்க மாமா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்க வடிவும் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.

“இல்லைம்மா… ப்ரோக்ராம் கௌரி புரத்துல நடக்குது…” சங்கரன் இழுக்க சுமித்ரா விலுக்கென்று நிமிர்ந்தாள். பெரியவர்கள் இருவரும் சுமித்ராவின் முகத்தையே பார்த்திருந்தார்கள். வார்த்தைக்குத் திண்டாடியவள் சற்று நேரத்திற்குப் பிறகே சுதாரித்துக் கொண்டாள். 

“அது வந்து மாமா…” 

“என்ன வந்து போயீ? எதுக்கு இப்படித் தயங்குறே? முடியுமா முடியாதா? அதை மட்டும் சொல்லு.” அத்தையின் கறார்க் குரலில் லேசாக விழித்தாள் சுமித்ரா.

“வடிவு! நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா. அதான் நான் பேசிக்கிட்டு இருக்கேனில்லை.” 

“ஆமா… நீங்களும் இத்தனை வருஷமா பேசிக்கிட்டுத் தான் இருக்கீங்க.” வாய்க்குள் முணுமுணுத்தபடி உள்ளே சென்று விட்டார் வடிவு. அத்தை அகன்ற பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டாள் சுமித்ரா.

“சொல்லும்மா.”

“மாமா… நான் என்ன பண்ணட்டும்?” அந்தக் கேள்வியில் தாடையைத் தடவிய படி கொஞ்ச நேரம் சிந்தித்தார் சங்கரன்.

“என்னைக் கேட்டாத் தப்பில்லைன்னு தான் தோணுது ம்மா. எந்த ஊரா இருந்தா நமக்கென்ன? ஆண்டவன் சந்நிதானத்தில நாட்டியம் ஆடப் போறோம். இதுல தப்பென்ன இருக்கு?” 

“அது சரிதான் மாமா. ஆனாலும்…” 

“நான் உன்னை வற்புறுத்தப் போறதில்லை சுமித்ரா. எதுவா இருந்தாலும் இறுதி முடிவு உன்னோடது தான். யோசிச்சு இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள பதில் சொல்லு. நம்மால முடியலைனா அவங்களும் வேற யாரையாவது புக் பண்ணணும் இல்லை.” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் சங்கரன். 

ரூமிற்குள் வந்த சுமித்ரா தான் துடித்துப் போனாள். மனக்கதவை என்றோ இறுக்கி அடைத்தது போல ரூமின் கதவையும் இப்போது அடைத்துத் தாழ்ப்பாள் போட்டாள்.

‘கௌரி புரம்’ அந்தப் பெயரைக் கேட்கும் போதே ஏதோ கூடை நெருப்பை அள்ளித் தலையில் கொட்டினாற் போல ஒரு தகிப்பு உடலெங்கும் பரவியது. 

சுட்டெரிக்கும் அதே தணலைத் தணிய வைப்பது போல அந்தக் கம்பீரப் பார்வை அவள் மனக்கண்ணில் ஒரு நொடி வந்து போனது. கழுத்துத் தாலியை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் கண்ணீர் தாரை தாரையாகக் கன்னத்தை நனைத்தது.

இன்றைக்கும் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது அவளுக்கு வயது பதினெட்டு. கள்ளம் கபடமில்லாத கன்னிப் பருவம். சூது வாது தெரியாது சுமித்ராவிற்கு.

நாட்டியத்தில் நல்லதொரு பெயரைச் சம்பாதித்திருந்தாள். அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலெல்லாம் திருவிழா என்றாள் சுமித்ராவின் நாட்டியம் தான். 

ஒரு சில வசதி படைத்த பெருந்தனக்காரர்கள் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் அவள் நாட்டியத்தை நடத்த விரும்பிய காலமது. 

கரிகாலனின் எதிர்ப்பு வீட்டில் பயங்கரமாக எழுந்த போதும் பெரியவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. தங்கள் வம்சத்திலேயே யாருக்கும் நாட்டியம் இத்தனை கைவந்த கலையாக இல்லாதிருந்ததால் சுமித்ராவின் திறமையை மேலும் வளர்த்து விடவே முயன்றார்கள்.

அப்போதெல்லாம் அத்தை வடிவிற்கு தன் மகன் கரிகாலனை சுமித்ராவிற்குப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. 

சொல்லப்போனால் தன் மகன் சுமித்ராவிற்கு ஏற்ற, சிறந்த துணையில்லை என்றே வெளிப்படையாகப் பேசுவார். கரிகாலனும் கோபித்துக் கொள்ள மாட்டான். அவன் மனதில் தான் அப்போது ரோஸி குடி கொண்டிருந்தாளே! ஆனால் அந்த விடயம் பிற்பாடு தான் சுமித்ராவிற்குத் தெரிய வந்தது.

ஊரின் இளசுகள் அத்தனையும் தன்னை வட்டமிட்ட போதும் அவள் கண்கள் ஏறெடுத்துப் பார்த்தது அந்த ராஜ கம்பீரத்தை மட்டும் தானே? 

அத்தானின் நண்பர் என்று தெரியும். கரிகாலனின் பேச்சில் ‘ராஜா’ என்ற பெயர் அடிக்கடி வந்து போகும். பெரிதாகக் கண்டு கொள்ளாதவள் போல அனைத்தையும் கேட்டுக் கொள்வாள்.

நிறுத்தி நிதானமாக எல்லாம் பார்த்தது கிடையாது. அதற்குத் தைரியமும் வந்ததில்லை. ஒரேயொரு முறை மட்டும் கோவிலுக்குப் போகும் போது அந்த முகத்தைத் தூண் மறைவில் பார்த்திருக்கிறாள். 

ஊர்ப் பெரியவர் ஒருவருடன் பேசிய படி நின்றிருந்தவனைக் கடந்தவள், ஒரு எதிர்பார்ப்போடு அந்த விசாலமான தூணைச் சரணடைந்திருந்தாள். 

மனம் படபடவென அடித்துக் கொண்டது. எட்டிப் பார்க்கச் சொல்லி ஆசை கட்டளை போட்டது. சுற்றுமுற்றும் பார்த்து யாரும் இல்லையென்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டவள் மெதுவாகத் தலையை நீட்டிப் பார்த்தாள்.

அந்தப் பார்வைக்காகவே ஏங்கி நின்றிருந்தன ஒரு ஜோடி விழிகள். பக்கத்தில் பேசிக்கொண்டு நின்றிருந்த பெரியவரைக் காணவில்லை. அவன் மட்டும் தான் நின்றிருந்தான். 

இவள் விழிகளைச் சந்தித்த மாத்திரத்தில் அந்த முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. கண்களில் காதல் வழிய ஒரு சின்னப் புன்னகையோடு இவளையே பார்த்திருந்தான். சுமித்ராவால் பார்வையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. 

ஒன்றை ஒன்று கவ்விக்கொண்ட விழிகள் நான்கும் அந்தக் கணத்திலேயே உறைந்து போயின. காதலைச் சொல்லிக் கொள்ள அங்கு வார்த்தைகளுக்கு அவசியம் இருக்கவில்லை. சொல்லாமலேயே அங்கு ஒரு காதல் நாடகம் அரங்கேறியிருந்தது. இதயங்கள் இடம் மாறத் துடித்தன.

அன்று பார்த்த அந்த முகத்தை இப்போதும் சுமித்ராவிற்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்றைக்குப் பார்த்ததுதான். அதன் பிறகு அந்தப் பாக்கியம் அவளுக்குக் கிடைக்கவில்லை. 

பேச நினைத்ததுண்டு. ஆனால் அதற்கு வாய்ப்புத்தான் அமையவில்லை. அமைந்திருந்தாலும் பயன்படுத்தி இருப்பாளா என்பது சந்தேகம் தான்.

ஒற்றைப் பார்வை பார்ப்பதற்கே அத்தனை தூரம் திணறியவள் எங்கிருந்து பேசப்போகிறாள்.

ஆனால், இந்த இன்பத் தவிப்பையெல்லாம் தவிடு பொடியாக்கியது அரண்மனை ஐயாவின் வருகை. அவர் அள்ளி வீசிய வார்த்தை நெருப்புகளை இன்று நினைத்தாலும் கூசிப்போவாள் சுமித்ரா. 

அன்று வீட்டில் அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் யாருக்கும் எதிர்த்துப் பேசத் தைரியம் இருக்கவில்லை. தங்கள் வீட்டுப் பெண்ணை ஒருவர் அவதூறு பேசிய போதும் கையைக் கட்டிப் பொறுத்துக் கொண்டார்கள்.

அந்தச் சுற்று வட்டாரத்திலேயே அரண்மனை என்றால் அப்படித்தான். ஐயா பேசினால் அதற்கு மறு பேச்சுக் கிடையாது. தங்கள் பெண் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்த போதும் மரியாதை நிமித்தம் வாய் மூடி மௌனித்திருந்தார்கள்.

அந்தப் பொழுது, பேசியவரை அனுமதித்தவர்கள் அதன் பிறகு பேச அனுமதிக்க வில்லை. அதற்கு இடமும் வைக்கவில்லை.

அவளது போதாத காலம் அன்றென்று பார்த்து சங்கரன் மாமாவும் அத்தையும் கரிகாலனைப் பார்க்கத் துவாரகா வந்திருந்தார்கள். 

பெரியவர் பேசிய அபாண்டத்தில் வார்த்தையைத் தொலைத்து நின்றவர்கள் அதன் பிறகு மடமடவென்று செயலில் இறங்கி விட்டார்கள்.

தன் மகன் கரிகாலன் சுமித்ராவிற்கு எந்த வகையிலும் பொருத்தமில்லை என்று இதுநாள் வரை நினைத்திருந்த அத்தை அனைத்தையும் புரட்டிப் போட்டார். 

சுமித்ராவின் பெற்றோர்களும் எதுவும் எதிர்க்கவில்லை. அத்தையின் முடிவு சுமித்ராவின் நன்மையை முன்னிட்டே எனும்போது அவர்களும் பேசா மடந்தையாகிப் போனார்கள்.

எதிர்ப்பைக் காட்டிய ஒரே ஜீவன் என்றால் அது கரிகாலன் தான். முடியவே முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றவனை விஷ பாட்டிலைக் காட்டிப் பணிய வைத்தார் அத்தை. 

சுமித்ரா நடப்பது அனைத்தையும் ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். புதுப்பூவாகப் பூத்த உறவொன்று பெரியவர் காலில் மிதிபட்ட பின்பு அதை முகர்ந்து பார்க்க அவள் விரும்பவில்லை.

நடைப்பிணமாகத்தான் அந்தத் தாலியை ஏற்றாள். இருந்தாலும் தனக்கு இனி இதுதான் வாழ்வு என்ற முடிவோடு தான் அந்தத் தாலியை ஏற்றாள். 

அதன்பிறகு ஏதேதோ நடந்து போனது. இந்த ஐந்து வருடங்களில் நாட்டியம் தான் தனது வாழ்க்கை என்று தீர்மானமாகவே இருந்தாள். இனியும் இருப்பாள். 

அத்தையும் மாமாவும் எவ்வளவு சொன்ன போதும் அவள் வளைந்து கொடுக்கவில்லை. அவள் பிடியிலேயே உறுதியாக நின்றாள். 

மாமா கொஞ்சம் தன்மையாகப் பேசுவார். ஆனால், அத்தைக்கு அது மருந்திற்கும் வராது. ஒருவேளை தான் முன்னின்று நடத்திய கல்யாணம் என்ற குற்ற உணர்ச்சியோ என்னவோ, சுமித்ராவிற்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் முழு மூச்சாக இருந்தார்.

கன்னத்தில்க் கண்ணீர்க் கோடோடு ஏதேதோ அசைபோட்டபடி அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

* * * * *

அந்த ஆங்கிலேயர் காலக் கட்டிடம் புதிதாக அடிக்கப்பட்ட வெள்ளைச் சுண்ணாம்போடு ஜம்மென்று காட்சியளித்தது. நெடுந்தூரம் வரைக்கும் நெளிவில்லாது தெரிந்த அந்த ஒற்றை ரெயில்வே ட்ராக்கில் நிறைமாத கர்ப்பிணி போல அசைந்தாடி வந்து நின்றது ட்ரெயின்.

‘கௌரி புரம்’ வெள்ளைப் பலகையில் கொட்டை எழுத்தாக கறுப்பில் எழுதப் பட்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் மாத்திரம் தான் ட்ரெயின் அங்கு தாமதிக்கும். இறங்க வேண்டிய பயணிகள் அவசர அவசரமாகத் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்க, சங்கரனும் கொஞ்சம் வேகம் காட்டினார்.

“வடிவு! சீக்கிரம்.” கணவனின் பரபரப்பான குரலில் தங்கள் பைகளை ஒவ்வொன்றாகக் கணவனிடம் கொடுத்துக் கொண்டிருந்தார் வடிவு.

ட்ரெயின் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டிப் பார்த்தாள் சுமித்ரா. திருமணம் முடிந்த பிறகு அதிகம் ஊருக்கு வந்ததில்லை. 

ரெயில்வே ஸ்டேஷன் கௌரி புரத்தில் மட்டும் தான் இருந்தது. அண்டினாற் போல இருந்த ஊர்களுக்குப் போக வேண்டும் என்றால் இங்கிருந்து தான் செல்ல வேண்டும். அதனாலேயே சுமித்ரா அத்தனை தூரம் ஊருக்கு வருவதை விரும்புவதில்லை.

ஸ்டேஷனை ஒட்டி நின்ற ஆலமரம், பழைய கால ஆங்கிலேயர் பாணியில் அமைந்த சிவப்பு நிற டெலிஃபோன் பூத், ஸ்டேஷன் மாஸ்டர் என அனைத்தும் மாறாமல் அப்படியே தான் இருந்தன.

“சுமித்ரா! சீக்கிரம் இறங்கும்மா. அங்க என்ன வேடிக்கை?” சங்கரன் குரல் கொடுக்கவும் சட்டென்று இறங்கினாள். அத்தை பைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார். 

இந்தத் தடவை சேர்ந்தாற் போல ஒரு வாரம் ஊரில் தங்குவதென்று முடிவாகி இருந்தது. இந்தப் பயணத்தைத் தவிர்க்க, முடிந்த மட்டும் முயற்சித்துப் பார்த்தாள் சுமித்ரா. ஆனால் அவள் தந்திரங்கள் எதுவும் அத்தையிடம் பலிக்கவில்லை.

சொந்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் கோவிலில் திருவிழா. நாமாக வாய்ப்புக் கேட்கவில்லை. அதுவாகத் தேடி வரும் போது எதுக்கு மறுக்க வேண்டும்? இதுதான் அத்தையின் வாதம். 

‘உன்னோட நாட்டியத்தை எத்தனை இழிவாப் பேசினாங்க? அவங்களுக்கு இன்னைக்கு உனக்கிருக்கும் மவுசைக் காட்ட வேணாமா?’ அத்தை ஒரே பிடியாக நின்று சுமித்ராவைச் சம்மதிக்க வைத்திருந்தார்.

‘உன்னோட அத்தை சொல்லுறதும் நியாயம் தானேம்மா?’ இது சங்கரன். அதற்கு மேல் சுமித்ரா எதுவும் பேசவில்லை.

“சார்.” அந்தக் குரலில் சங்கரன் திரும்பிப் பார்த்தார். ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

“சங்கரன் ஐயா எங்கிறது…?” 

“நான் தான்பா. என்ன விஷயம்?”

“நான் ‘கௌரி புர வாசல்’ அரண்மனையில இருந்து வர்றேன். வணக்கம் மா.” தனித்தனியாக வடிவிற்கும் சுமித்ராவிற்கும் வணக்கம் வைத்தான் அந்த வாலிபன். 

“அம்மா, நீங்க தான் சுமித்ரா மேடங்களா?” 

“ஆமா.” 

“உங்களைப் பத்தி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன் மா. உங்க நாட்டியம் ரொம்பப் பிரபல்யம் னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்கம்மா.” இதைப் பையன் சொன்ன போது அத்தையின் முகத்தில் அத்தனை பெருமை.

“அது உங்க அரண்மனைக்குத் தெரிஞ்சதுல எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.” நீட்டி முழக்கினார் வடிவு.

“வடிவு!” சங்கரனின் அதட்டலில் வாயை மூடிக்கொண்டார் தில்லைவடிவு.

“ஐயா உங்களுக்குக் கார் அனுப்பி இருக்காங்க. கிளம்பலாமா சார்.” சுமித்ராவின் மூச்சு கொஞ்சம் போராடி மீண்டது. 

“சரிப்பா.” ஆளுக்கு ஒன்றாக பைகளைத் தூக்கிக் கொள்ள, காரை நோக்கி நடந்தார்கள். அன்று அத்தனை கூட்டம் இருக்கவில்லை. 

பைகளை டிக்கியில் போட்டு விட்டுக் காரை ஸ்டார்ட் செய்தான் ஸ்டீஃபன். கார் மெதுவாக நகர வலக்கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். 

அவ்வளவு நேரமும் ஸ்டேஷனுக்குள் இருந்த படி சுமித்ராவின் ஒவ்வொரு அசைவையும் கண்களில் படம் பிடித்துக் கொண்டிருந்த விஜயேந்திரன் வெளியே வந்தான். 

முகத்தில் பத்து மத்தாப்புக்களை ஒன்றாகக் கொளுத்திப் போட்ட வெளிச்சம் தெரிந்தது. ஒரு கை தலையைக் கோதிக் கொடுக்க போகும் காரையே பார்த்திருந்தான்.

அவன் கண்கள் இரண்டையும் கொய்து கொண்டு காரில் போவது நாட்டியப் பேரொளியா? அவன் இதயத்தில் உட்கார்ந்து கொண்டு ஜதி போடுவது அவள் சதங்கை என்னும் நாட்டியப் பேரொலியா?