T10

T10

தொடுவானம் __10
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது.  அபிக்கும் நந்தகுமார்க்கும் நிச்சயதார்த்தம் நடைபெற சில மணி நேரங்களே உள்ள நிலையில் வேர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தாள் கங்கா.
“ பூ வைக்க வர்றவங்களுக்கு கொடுக்க தனியா பூ எடுத்து வச்சிட்டியா?”
“எடுத்து வச்சிட்டேன் மா. அபிக்கும் தனியா நெருக்க கட்டி எடுத்து வச்சிருக்கேன்”
“குத்து விளக்கு, தாம்பாளம் எல்லாம் ஹால்ல எடுத்து வந்து வச்சிடு.”
“சரிம்மா, ஹால்ல பூ அலங்காரம் முடிக்கப் போறாங்க. ஜமுக்காளத்தை விரிச்சிட்டு, எடுத்து வந்து வச்சிடறேன்”
“அபிக்கு மேக்கப் பண்ணி நேரத்தில முடிக்க சொல்லு லேட் பண்ணிட போறாங்க”
“ அதெல்லாம் முடிச்சிடுவாங்க நீங்க பதட்டப் படாம உட்காருங்க ம்மா”
“ எல்லா வேலையும் நீயே செஞ்சி முடிச்சிட்ட… எனக்கு என்னம்மா பதட்டம்? பங்சன் நல்லபடியா முடிஞ்சு, வர்றவங்களை நல்லா கவனிச்சு அனுப்பனும். அவ்வளவு தான்”
“ அதெல்லாம் நல்லபடியா முடியும் மா. கவலைப்படாதீங்க. நிச்சயதார்த்தம் முடிய நிறைய நேரம் ஆகும் அபி டயர்ட் ஆகிடுவா. நான் அவளுக்கு ஜூஸ் எடுத்துட்டு போறேன். உங்களுக்கும் கொண்டு வரேன்.”
அபிக்கும் மஞ்சுளாவுக்கும் பழச்சாறு பிழிந்து கொடுத்துவிட்டு, வெளியே வாழைமரம் கட்டவும், ஷாமியானா பந்தல் போடவும் வந்திருந்த ஆட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷுக்கும் பழச்சாறு கொண்டு போனாள்.
இரண்டு நாட்களாக அவளிடம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருப்பவனை, என்ன செய்வது என்றே புரியவில்லை அவளுக்கு.  அவனிடம் சமாதானமாகப் பேச எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
அவள் மீது அவனுக்கு கோபத்தை விட வருத்தமே அதிகமாக இருந்தது. சிறு குழந்தைக்கு என்று கூறியும் வர மறுத்து விட்டாளே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த குழந்தைக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து சிறுவன் குணமானதில் சற்று சமாதானமாகியிருந்தான்.
பழச்சாறு நிறைந்த கோப்பையை ஏந்தியவாறு தன்னை நோக்கி நடந்து வருபவளைப் பார்த்தான். மாசு மருவற்ற முகமும் இதழ்களில் உறைந்திருந்த புன்னகையும்  ‘இவளிடம் கோபப்படக் கூட முடியுமா?’ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
காலை எழுந்ததில் இருந்து வெளியில் வேலையாக வெயிலில் நின்று கொண்டிருந்ததில் அவனும் வேர்த்து வடிந்து நின்றிருந்தான். அவனிடம் வந்து பழச்சாறை நீட்டியவள்,
“ டாக்டர் சார், அன்னைக்கு எனக்கு காய்ச்சல் இருந்தது. அதனாலதான் நான் வரலைன்னு சொன்னேன். சாரி சார்… என்கிட்ட ஏன் பேச மாட்டேங்குறீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ” முகத்தைச் சுருக்கி பாவமாக கேட்டாள்.
தான் அவளிடம் பாராமுகமாக இருப்பது அவளை பாதிக்கின்றது என்பதை உணர்ந்தவனுக்குள் பெரும் கொண்டாட்டம். அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“நான் உன் கிட்ட பேசலைன்னா என்ன? உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு கங்கா?”
“பின்ன, கஷ்டமா இருக்காதா? எனக்குன்னு இப்ப இருக்கறதே நீங்க அபி அம்மா மட்டும்தான். நீங்களும் பேசலைன்னா நான் என்ன செய்றது?”
தன்னையும் தன் குடும்பத்தையும் அவளுக்கு நெருக்கமாக நினைக்கிறாள் என்ற நினைவு அவனை வானத்தில் பறக்க வைத்தது. உள்ளத்தின் உவகை முகத்தில் தெரிய நகைத்தவன்,
“உன் மேல எனக்கு கோபமெல்லாம் இல்லம்மா… சின்ன வருத்தம்தான், இப்ப அதுவும் இல்ல ஓகே வா?”
அவளது கையில் காலி கோப்பையைக் கொடுத்தவன், “கங்கா, நான் இப்ப நந்து ஃபேமிலிய ரிசீவ் பண்ண போகனும். மாடியில போய் என் ஷர்ட் ஒன்னு எடுத்துட்டு வா” என்றான். அவன் போட்டிருந்த சட்டையைக் கழட்டி அவளிடம் கொடுத்தவன், “இதை துவைக்கப் போட்டு விடு” என்றான்.
அவன் தன்னிடம் பேசிவிட்ட மகிழ்ச்சியில் அவனுடைய சட்டையை கையில் வாங்கிக் கொண்டவள், துள்ளலுடன் அவனுக்கு மாற்றுடை எடுக்க ஓடினாள்.
சிறிது நேரத்தில் நந்தகுமார்,அவனது பெற்றோர், மற்றும் உறவினர்கள் புடைசூழ வந்திரங்கினான். அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்க வைப்பது வரை அனைத்து வேலைகளையும் முகத்தில் புன்னகை மாறாமல் செய்த கங்கா அங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள்.
  விழாவுக்கு வந்திருந்த நந்தகுமாரின் சித்தப்பா மகளான அருந்ததி, தனது பண்பான பேச்சாலும், இயல்பாக மற்றவரிடம் பழகும் இனிமையான குணத்தாலும் கங்காவைக் கவர்ந்தாள். வந்த சிறிது நேரத்தில் தன்னுடன் இனிமையாக பேசிப் பழகும் அருந்ததியை கங்காவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
சம வயதினராய் இருந்ததால் இருவரும் உடனடியாக நட்பு பாராட்டி பழகிக் கொண்டனர்.
கங்காவும் அருந்ததியும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து ஹாலில் அடுக்கியவர்கள், அபியை அழைத்து வரச் சென்றனர்.
“அபி அண்ணி, எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? எங்க நந்து அண்ணா இன்னைக்கு மயங்க போறாங்க”
“ ஆமாம் அருந்ததி,  நந்து அண்ணா அபிய பார்த்ததும் இன்னைக்கே கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்லப் போறாங்க பாருங்களேன்”
வெட்கத்தில் சிவந்த அபி, “சும்மா இருங்க மச்சி” என்று சினுங்கியவள் அருந்ததியிடம்,
“ வாங்க அருந்ததி, உங்க அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“அடேங்கப்பா இப்பவே புகுந்த வீட்டு ஆளுங்களை நலம் விசாரிக்கறதை பாரேன்!” என்று கிண்டலாகப் பேசிய கங்கா அபிக்கு திருஷ்டி பொட்டு ஒன்றை வைத்தாள்.
அபியும் அருந்ததியும் வெகுவாக வற்புறுத்தவே, தானும் அபி கொடுத்த புடவையை உடுத்தி தயாரானாள்.
பெண்ணை அழைத்து வரச் சொல்லி குரல் கேட்டதும் அபியை அழைத்து சென்று அமர வைத்தனர்.
நந்தகுமாரின் பார்வை அபியை விட்டு நகர மறுத்தது. சுபாஷ் தன் குழந்தைக்கு உடல் நலமில்லாததால் வரவில்லை. மற்ற நண்பர்கள் நந்துவை கலாய்த்து கொண்டிருக்க அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
தன்னவளை முதன் முதலில் சேலையில் பார்த்த ஆகாஷும் உறைந்து நின்றான். அவள் செல்லுமிடமெல்லாம் அவன் பார்வை அலைபாய்ந்தது.
ஆகாஷின் பார்வையைக் கண்ட கங்கா,’,என்ன இது இப்படி பார்க்குறாங்க’ என்று எண்ணியவள், கூடிய வரை அவன் பார்வையில் படாமல் ஒதுங்கி நின்றாள்.
மாப்பிள்ளை வீட்டினர் ஒவ்வொருவராக வந்து பூ வைத்து திருமணத்தை உறுதி செய்தனர்.
விருந்து உண்டு முடித்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இளையவர்கள் ஒரு புறமும், பெரியவர்கள் ஒரு புறமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆகாஷின் பெரியப்பா ஒருவர் மஞ்சுளாவிடம், “ அபிக்கு நல்ல இடமா அமைஞ்சிடுச்சி, அடுத்து ஆகாஷுக்கும் நல்ல பொண்ணா பார்த்து முடிச்சிட்டா உன் கடமை முடியும்மா” என்றார்.
“ஆமாம் மாமா. அடுத்து ஆகாஷுக்குதான் முடிக்கனும்.”
அப்பொழுது நந்தகுமாரின் அம்மா,“பொண்ணு ஏதும் பார்த்து வச்சிருக்கீங்களா ஆகாஷ்க்கு?  எங்க அருந்ததிக்கும் மாப்பிள்ளை  பார்க்குறோம். ஆகாஷுக்குன்னா கண்ண மூடிட்டு குடுக்கலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஜாதகம் பரிமாறிக்கலாமே!” என்றார்.
முகத்தில் எதிர்பார்ப்பு மின்ன ஆசையாக கேட்பவரிடம் எப்படி மறுத்து பேசுவது என்று புரியாமல் திகைத்துப் போனார் மஞ்சுளா.
ஆகாஷின் பெயர் அடிபடவும் இவர்களது பேச்சை கவனித்த கங்காவின் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானது.  ஆகாஷும் இவர்களது பேச்சை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். மஞ்சுளா ஏதாவது சொல்வார் என்று பார்த்தவன், அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால், எழுந்து அவர்கள் அருகே சென்று,
“இல்ல ஆண்ட்டி, நான் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பறேன். அவளைத்தான் கல்யாணம் செய்ய ஆசைப்படறேன்” என்றான்.
சற்று ஏமாற்றமாக இருந்தாலும், உடனே சமாளித்துக் கொண்டவர் உண்மையான சந்தோஷத்துடன், “யார் ஆகாஷ் அந்த லக்கி கேர்ல்?” என்றார்.
அங்கு சூழ்ந்திருந்த ஆகாஷின் உறவினர்களும், நண்பர்களும் ஒருவித எதிர்பார்ப்புடன் ஆகாஷை பார்த்திருக்க,  மெல்ல நடந்து சென்று கங்காவின் கரத்தைப் பற்றி அவளை எழுப்பியவன், அவளது மிரண்ட விழிகளைக் கூர்ந்து பார்த்தவாறு, “கங்காவதான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் ஆண்ட்டி”  என்று கூறினான்.
அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருந்த கங்காவுக்கு பேச்சே எழும்பவில்லை. விழியகலாமல் அவனைப் பார்த்திருந்தவள், அனைவரது வாழ்த்துகளையும் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள்.
அத்தனை பேர் நிறைந்த சபையில் தன் காதலைக் கூறியவன், பூரிப்பின் உச்சத்தில் அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டான். அபியும் அருந்ததியும் கங்காவுக்கு வாழ்த்து கூறினர்.
அவ்வளவு சந்தோஷமான தருணத்தில் திளைத்திருக்கும் ஆகாஷைப் பார்த்தவள், தான் இப்போது ஏதாவது மறுத்துக் கூறினால் அது ஆகாஷுக்கு தலையிறக்கமாகப் போய்விடக் கூடும் என்று கருதி, அமைதியாக வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள்.
விழா நல்லபடியாக முடிந்து அனைவரும் கிளம்பிய பின், யார் முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் அமைதியாக தனதறைக்குள் சென்று முடங்கிக் கொண்டவள் மனம், வேதனை தாளாமல் வெதும்பி வருந்தியது. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து தலையணையை நனைத்தது.
மனம் நிறைய ஆசையிருந்தும், தன் மனம் கவர்ந்தவன் தன்னை விரும்பியிருந்தும் அதனை மறுக்கும் நிலையில் தன்னை வைத்த விதியை அறவே வெறுத்தாள்.  அவனிடம், தனது காதலை மறைத்து, பொய்யாக அவனைப் பிடிக்கவில்லை என்று கூறும் தைரியத்தைக் கொடு என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தவள், மனம் தன் குடும்பத்தை எண்ணி ஏங்கியது. ‘அவர்களுடனே தானும் இறந்து போயிருக்கலாம். தனக்கு வாழ்க்கை இன்னும் என்னென்ன சோதனைகளை வைத்திருக்கிறதோ தெரியவில்லை’ என்று அவள் மனம் மருகியது.
அங்கே ஆகாஷோ தன்னவளிடம் தனது காதலைக் கூறியது மட்டுமல்லாமல், அத்தனை பேர் நிறைந்த சபையில் திருமணத்தையும் உறுதி செய்து விட்ட திருப்தியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
கங்கா மறுத்து எதுவும் கூறாத காரணத்தால் அவளுக்கும் இதில் விருப்பம் என்றே அனைவரும் நினைத்திருக்க, கங்காவோ இவர்களைப் பிரிந்து செல்வதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
         மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், அவளைப் பள்ளியில் இறக்கி விட்ட ஆகாஷ், புன்னகையுடன் அவளைப் பார்த்து தலையசைத்து விட்டு, மருத்துவமனை சென்றான்.
அங்கு முக்கியமான மருத்துவ கலந்தாய்வுக்கு இவனைச் செல்லும்படி பணிக்க, மருத்துவமனையில் இருந்து கலந்தாய்வு நடைபெறும் ஹோட்டலுக்குச் சென்றான். கலந்தாய்வை வெற்றிகரமாக முடித்து விட்டு, அனைவருக்கும் அங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பஃப்பே முறையிலான விருந்தில் கலந்து கொண்டான்.
தேவையான உணவுகளைத் தட்டில் வைத்துக் கொண்டவன், அங்கு நீச்சல் குளத்தையொட்டி சீராக அமைக்கப்பட்டிருந்த புல்வெளியின் இடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, சக மருத்துவர்களுடன் உணவருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான்.
 அவன் அமர்ந்து இருந்த இடத்திற்கு எதிர்புறம்  கண்ணாடித் தடுப்பினாலான அறைகள் நீச்சல் குளத்தைப் பார்க்கும் வண்ணம் கட்டப்பட்டிருந்தது. சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தவனின் விழிகளில் எதிர்புறம் இருந்த அறையில் கங்காவும், அவளுடன் இருந்த மூவரும் பட்டனர்.
ஆகாஷுக்கு ஆச்சர்யத்தில் புருவங்கள் மேலேறின. ‘இந்த இடத்தில் கங்காவுக்கு என்ன வேலை, அவளுடன் இருப்பவர்கள் யார்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
 அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் பெரியவர் அவளது இரு கைகளையும் பிடித்து முகத்தில் வைத்து குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவளும் அழுது கொண்டிருப்பது அவன் கண்களுக்கு தெரிந்தது.
அவள் கால்களில் விழப்போன பெரியவரைத் தடுத்தவள், அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவள் அருகில் நின்றிருந்த இருவரில் ஒருவர் அவளது தலையை ஆதரவாகத் தடவுவதும், ஒருவர் அவளுக்கு குடிக்கத் தண்ணீர் தருவதையும் பார்த்தவன் மிகவும் குழம்பிப் போனான்.
‘யார் இவர்கள்? அந்தப் பெரியவர் ஏன் கங்காவின் கால்களில் விழ வேண்டும்? பள்ளியில் இருக்க வேண்டியவள் இந்த நேரத்தில் இங்கு எதற்கு வந்தாள்?’ விடையறியாத பல கேள்விகள் அவனுக்குள்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவர்களுடன் கிளம்பி காரில் ஏறிச் சென்று விட்டாள். அவனும் உடனே அனைவரிடமும்   விடைபெற்று வீட்டிற்கு வந்தவன் நேராக ஹோமில் இருந்த அவளது அறைக்குச் சென்றான்.
“இப்ப எங்க போய்ட்டு வர?”
அவனது முகத்தில் இருந்த பாவனையை புரிந்து கொள்ள முடியாமல் வாய் தானாக பதில் கூறியது. “ஸ்கூல்க்குதான் ஏன் கேட்கறீங்க?”
புருவங்கள் நெறிபட அவளைக் கூர்ந்து பார்த்தவன், “எப்ப இருந்து பொய் சொல்ல கத்துகிட்ட கங்கா? இப்ப உன்னை ஹோட்டல் லீ மெரிடியன்ல பார்த்தேன். அங்க யார் கூட பேசிகிட்டு இருந்த? உன் கால்ல விழப் போறாரு அந்தப் பெரியவர். யார் அவர்?”
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே வந்தனர் மஞ்சுளாவும் அபியும்.
“என்ன ஆகாஷ்? என்னப் பிரச்சனை?”
“ம்ப்ச்…  என்ன பிரச்சனைன்னு இதோ நிக்குறாங்களே இந்த மேடம்தான் சொல்லனும்”
அவ்வளவு எளிதாக யாரிடமும்  கோபப்பட்டு பேசாத தன் அண்ணன், இப்போது கங்காவிடம் கோபப் படுவதற்கான காரணம் புரியாமல் அபி,  “அண்ணா, எதுவா இருந்தாலும் கோபப் படாம பேசுண்ணா.”
 ஆழ்ந்து பெருமூச்சை வெளியிட்டவன், “கோபமெல்லாம் இல்ல அபி, இவள ஸ்கூல்ல இறக்கி விட்டுட்டு நான் ஒரு கான்ஃபெரன்ஸ்காக லீ மெரிடியன் போயிருந்தேன். அங்க இவ கூட மூனு பேர் பேசிட்டு இருந்தாங்க. அதுல ரொம்ப வயசானவரா இருந்த பெரியவர் அழுதுகிட்டே இவ கால்ல விழப் போறார். இவளும் அழுதுகிட்டு இருந்தா.
நான் அவ கிட்ட போகலாம்னு நினைக்கறதுகுள்ள எல்லாரும் கிளம்பிட்டாங்க. அதான் வீட்டுக்கு வந்து கேட்டா இவ ஸ்கூல்க்கு போயிருந்தேன்னு என் கிட்ட பொய் சொல்றா.”
பேசிக் கொண்டிருந்தவன் விழிகள் அறையின் மூலையில் அழகாக பேக் செய்து வைக்கப் பட்டிருந்த அவளது பேக்கை கண்டது. அவளது அலமாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் பேக் செய்யப்பட்டு இருந்தது.
விழிகள் இடுங்க அவளைக் கண்டவன், “சோ, மேடம் எங்கயோ கிளம்பிட்டீங்க… எங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு இருக்கீங்களா? இல்ல சொல்லாம போக ப்ளான் போடுறீங்களா?” கோபமும் நக்கலும் கலந்து வந்தது அவனது கேள்வி.
அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் கங்கா.
“மச்சி என்னது இது? ட்ரெஸ்லாம் ஏன் பேக் பண்ணி வச்சிருக்கீங்க? பதில் சொல்லுங்க.”
மஞ்சுளாவும், “ என்னம்மா… என்னடா பிரச்சனை உனக்கு? ஏன் எங்கள விட்டு போக முடிவு பண்ணியிருக்க?”என்று கேட்க.
சற்று நேரம் மனதை திடப் படுத்திக் கொண்டவள் தலையை மெதுவாக நிமிர்ந்து பார்த்து கண்களில் கண்ணீர் வழிய, “ எ…எனக்கு டாக்டர் சாரை க…க…கல்யாணம் பண்ணிக்க இ…ஷ்டம் இல்ல”
சொல்லி விட்டாள்… இமைக்காமல் கூர்ந்த பார்வையுடன் விரைத்து நிற்கும் ஆகாஷையும், வாயில் கை வைத்து மூடி கண்கள் அதிர்ச்சியால் விரிந்திருக்க விழியோரத்தில் நீர்க்கசிய நின்றிருந்த அபியையும், குழப்பமான முகத்துடன் நின்றிருந்த மஞ்சுளாவையும் பார்ப்பதைத் தவிர்த்தவள்,
“எ…எ…என்னால டா…டா…க்டர் சார க…க…கல்யாணம் பண்ணிக்க முடியாது.  எனக்கு அ…அவர பிடிக்கலை. அதனாலதான் இங்க இருந்து போயிடலாம்னு நினைச்சேன்.”
.இவ்வளவு நேரமாகப் பேசும் போது தன் கண்களைச் சந்திக்க மறுக்கும் கங்காவைப் பார்த்தவன் அவள் முகத்தை தன்புறம் திருப்பி,
“ என் முகத்தை பார்த்து சொல்லு கங்கா… உங்களை நான் விரும்பலைன்னு என் கண்ணைப் பார்த்து சொல்லு”
கண்களில் கண்ணீர் ஆறாக ஓட திடமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு உங்களை பிடிக்கல, என்னால உங்களை கல்யாணம் பண்ண முடியாது” என்றாள்.
.
கண்மண் தெரியாத கோபம் வந்தது அவனுக்கு. எங்கே அவளை அடித்து விடுவோமோ என்று பல்லைக் கடித்து, தலையைக் கோதி கோபத்தை அடக்கியவன், விடிவிடுவென்று சென்று அறையின் மூலையில் இருந்த அவளது பேக்கை எடுத்து வந்தான். அதனைத் திறந்து தலைகீழாகக் கொட்டினான்.
அந்த பேக்கில் இருந்து அவளது உடமைகளோடு சேர்ந்து ஆகாஷ் உபயோகப்படுத்திய தேநீர் கோப்பை, கைக்குட்டை, அவன் ஏதோ எழுதி கசக்கி எறிந்திருந்த பேப்பர், அவனது வியர்வை வாசம் வீசும் சட்டை, இறுதியாக அவனது ஸ்டெதஸ்கோப் அனைத்தும் வெளியே வந்து விழுந்தது.
“இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் கங்கா?”
அப்பொருட்களை எல்லாம் பார்த்து வாயடைத்து போய் நின்றிருந்தனர் அபியும் மஞ்சுளாவும்.
அவன் திடீரென்று அவள் சேர்த்து வைத்த அத்தனைப் பொருட்களையும் கீழே கொட்டவும் அதிர்ந்து போனவள்,  அவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்றெண்ணி மலைத்துப் போனாள்.
“என்ன பார்க்குற? இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா? அன்னைக்கு உன்கிட்ட கழட்டிக் கொடுத்த சட்டைய துவைக்கப் போடாம உன் ரூம்க்கு எடுத்துட்டு போறத பார்த்தேன். அங்க எதுக்கு எடுத்துட்டு போறன்னு பார்க்க உன் பின்னாடி வந்தேன். நான் வந்தத பார்க்காம நீ அந்த சட்டைய போட்டு கண்ணாடி முன்ன நின்னு ரசிச்சதையும் பார்த்தேன்.”
“நீயும் என்னை விரும்புறன்னு அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. உனக்கும் என்னைப் பிடிக்கும்ன்ற தால்தான் அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி தைரியமா உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன்.”
“இப்ப என்ன பார்த்து  சொல்லு, உனக்கு என்னை  பிடிக்கலைன்னு” அவன் முகத்தில் அடக்கப்பட்ட கோபம்.
கண்களில் வழிந்த நீரோடு  ஒன்றும் பேசாமல் கீழே மண்டியிட்டு அமர்ந்து, அவனது பொருட்களை மீண்டும் பையினுள் எடுத்து வைத்தாள்.
அவளது முழங்கையைப் பற்றித் தூக்கி நிறுத்தியவன், “ பதில் சொல்லுடி… அதெல்லாம் உயிரில்லாத ஜடம் டி… உயிரும் உணர்வுமா உன் முன்னாடி நிக்குறேனே எனக்கு பதில் சொல்லு”
“உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் என்னால சரி பண்ண முடியும் கங்கா. நீ என் மேலே உயிரே வச்சிருக்கன்னு எனக்கு தெரியும். எதுவா இருந்தாலும் சொல்லு. நீ எனக்கு வேணும் கங்கா…”
.
கண்களின் ஓரம் நீர்க்கசிய கேட்டவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு அழுதவள், “ என்னை எதுவும் கேட்காதீங்க… ப்ளீஸ்… நான் உங்களுக்கு வேணாம்…என்னை இப்படியே விட்டுடுங்க…”
“அப்படியெல்லாம் விட முடியாது கங்கா. எட்டு வருஷமா எனக்குள்ள இருக்கற நேசம் இது. உன்னைத் தேடி இரண்டு வருஷமா அலைஞ்சவன்டி நான். கடவுளே உன்னை என் கண்ணுல காட்டினதா நினைச்சிட்டு இருக்கேன். எனக்கு பதில் சொல்லாம உன்னை நான் விடமாட்டேன்.”
“என்னம்மா உனக்கு பிரச்சனை? என் புள்ள எல்லாம் சரி பண்ணிடுவான். அவன் உன் மேல உயிரே வச்சிருக்கான் கங்கா. சொல்லும்மா…”
“மச்சி நாங்க எல்லாரும் உங்களுக்கு இருக்கிறோம். எங்கள விட்டு போக உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி? என் அண்ணன் பாவம் மச்சி. உங்கள நல்லா பார்த்துக்கும். எதா இருந்தாலும் அண்ணன்ட்ட சொல்லுங்க” என்று தேம்பினாள் அபி.
“ இவ்வளவு பேர் கேட்கறோம் இல்ல சொல்லுடி” அவளைப்  பிடித்து உலுக்கியவன்,
“நான் சொல்றேன் தம்பி…” என்று தழுதழுத்த குரலைக் கேட்டு திரும்பினான்.
வாசலில் நின்றிருந்தனர் சுந்தரம், சுகுமாறன், அந்த பெரியவர் மூவரும்.
அவர்களைப் பார்த்தவன், இவர்களைத்தானே ஹோட்டலில் பார்த்தோம் என்று எண்ணிக்கொண்டே, “நீங்க யாரு?” என்றான்.
அமைதியாக உள்ளே வந்தனர் மூவரும். அந்தப் பெரியவர் கரகரப்பான குரலில், “ என் பெயர் காசிராஜன். கங்காவின் தாத்தா…” என்றார்.
____தொடுவோம்.
error: Content is protected !!