MP6
MP6
மோகனப் புன்னகையில் 6
திருவிழா முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்தன. ஊர் வழமைக்குத் திரும்பி இருந்தது. மக்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் பேச்சில் திருவிழாவின் மிச்சம் மீதிகள் லேசாகக் கேட்ட வண்ணம் தான் இருந்தது.
கௌரிபுரத்துக்கு இரண்டு மைல் தொலைவில் இருந்தது அந்த ஊர். பெயர் பூந்துறைக் கிராமம். புதிதாகக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்த பகுதி அது.
லேசாகத் தயங்கிய படி அந்த இடத்திற்குள் நடந்து வந்து கொண்டிருந்தார் அடைக்கல நம்பி. சுமித்ராவின் அப்பா.
ஆள் நடமாட்டம் நன்றாக இருந்தது. எதிரே வந்த வாலிபனை நிறுத்தியவர்,
“தம்பி, ஐயாவைப் பார்க்கணும்.” என்றார்.
“கொஞ்சம் இருங்க. இதோ கூட்டிட்டு வர்றேன்.” பதில் சொன்னவன் ஒரு கூடாரம் போன்ற அமைப்பிற்குள் சென்றான். அந்த இடம் முழுவதும் இதே போல நீண்ட கூடாரங்கள் தான் அமைக்கப்பட்டிருந்தன. அந்தப் பழைய மனிதருக்கு அதற்கான விளக்கம் தெரியவில்லை.
எதிரே விஜயேந்திரன் அவசர அவசரமாக நடந்து வருவது தெரியவும் படபடப்பாக உணர்ந்தார் அடைக்கல நம்பி. மிகவும் சாதாரண மனிதர் அவர். இப்படியொரு சூழ்நிலையை கனவிலும் அவர் நினைத்திருக்கவில்லை.
“வாங்க வாங்க! ஏன் அங்கேயே நின்னுட்டீங்க.” வாய்நிறைய அழைத்த விஜயேந்திரன் பக்கத்தில் இருந்த அந்தச் சின்னக் கட்டடத்திற்குள் நம்பியை அழைத்துச் சென்றான்.
ஆஃபீஸ் அறை போல தெரிந்தது. ஃபைல்கள், காகிதங்கள், பழுப்பு நிறத்தில் பெரிதாக ஒரு கம்ப்யூட்டர் எனக் கச்சிதமாக இருந்தது அறை.
“உட்காருங்க… மாமான்னு நான் உங்களைக் கூப்பிடலாமா?” அரண்மனையின் பணிவில் ஆடிப்போய்விட்டார் நம்பி.
“அந்தத் தகுதி எனக்கு இருக்கா தம்பி?” நடுங்கியபடி வந்தது அவர் குரல்.
“ஏனில்லை? சுமித்ராவோட அப்பாங்கிற ஒரு தகுதி போதுமே. வேற என்ன வேணும்?”
“தம்பீ…”
“ஏன்? உங்க வாயால என்னை வாய்நிறைய மாப்பிள்ளை ன்னு கூப்பிட மாட்டீங்களா?”
“மாப்பிள்ளை!” ஏக்கத்தோடு கேட்ட அந்த மாடி வீட்டு ஏழையைப் பார்த்தபோது நம்பியின் வாய் தானாக வார்த்தையை உதிர்த்தது.
“சந்தோஷம் மாமா. இந்த வார்த்தையைக் கேட்க அஞ்சு வருஷம் நான் காத்திருக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு.” ஒரு புன்சிரிப்போடு பேசியவனைக் குழப்பமாகப் பார்த்தார் நம்பி.
“சொல்லுங்க மாமா. மனசுல என்ன இருந்தாலும் தயங்காம சொல்லுங்க. அதுசரி… நான் இங்க இருப்பேன்னு உங்களுக்கு யாரு சொன்னா?” ஒரு கள்ளச் சிரிப்போடு கேட்டான் விஜயேந்திரன்.
இப்போது நம்பியின் முகம் நிரம்பவே தர்மசங்கடப் பட்டது. விஜயேந்திரனைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரித்தார்.
“மாப்பிள்ளை… நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கப்படாது.”
“ஐயையோ! எதுக்கு நான் உங்களைத் தப்பா எடுத்துக்கப் போறேன். ஆக்சுவலா இந்த நாலு நாளும் நீங்க என்னைப் பின் தொடர்ந்துக்கிட்டு இருந்தது எனக்கு நல்லாவே தெரியும்.”
“மாப்பிள்ளை…”
“இதுல சங்கடப்பட என்ன மாமா இருக்கு? நீங்க பொண்ணைப் பெத்தவங்க. நாலையும் விசாரிக்கத்தான் செய்வீங்க. அது தப்பு இல்லையே.”
“………………”
“நீங்க இன்னைக்கு இங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். சொல்லுங்க மாமா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு பையன் காஃபி கொண்டு வந்து கொடுத்தான்.
“எடுத்துக்கோங்க மாமா.”
“சரி மாப்பிள்ளை.” சொன்னவர் காஃபியை எடுத்துக் கொண்டார். அவரை நிதானமாக அருந்த அனுமதித்த விஜயேந்திரன் தானும் காஃபியைப் பருகினான். மனம் சந்தோஷத்தில் கூத்தாடியது.
“மாப்பிள்ளை… நான் சாதாரண மனுஷன்… என் சொத்தே எம் பொண்ணு சுமித்ரா தான்.” காஃபியை முடித்தவர் ஆரம்பிக்க,
“அந்த விலை மதிப்பில்லாத சொத்தைத் தான் உங்க கிட்ட நான் கேக்கிறேன் மாமா.” என்றான் விஜயேந்திரன்.
“அரண்மனைக்கு ஈடு குடுக்க என்னால முடியாது மாப்பிள்ளை. நீங்க பாட்டுக்குச் சட்டுன்னு எல்லார் முன்னாடியும் வார்த்தையை விட்டுட்டீங்க. என்னோட நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.”
“ம்…”
“நீங்க பெருந்தன்மையா இருக்கலாம். ஆனா உங்க அம்மா… ஏற்கெனவே எம் பொண்ணு ரொம்ப நொந்து போய் இருக்கா மாப்பிள்ளை. இன்னொரு அடியைத் தாங்க அவ மனசுலயும் தைரியம் இல்லை. எங்க உடம்பிலயும் தெம்பு இல்லை.” கலங்கிய படியே பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று குலுங்கி அழுதார்.
“மாமா!” திகைத்துப் போன விஜயேந்திரன் எழுந்து போய் நம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை இழுத்து அவருக்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டவன் அதில் உட்கார்ந்து அவர் கைகளைத் தட்டிக் கொடுத்தான்.
“இந்தக் கலக்கத்துக்கு அவசியமே இல்லை மாமா.”
“அப்படி இல்லை மாப்பிள்ளை. வாழப்போற இடத்துல ஒரு பொண்ணு நிறைவாப் போகும் போதே ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் வருது. இதுல எம் பொண்ணு…” மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது மனிதருக்கு.
“புரியுது மாமா. ஆனா ஒன்னை நீங்க நல்லாப் புரிஞ்சுக்கணும். அவசர அவசரமா சுமித்ராக்கு நீங்க கரிகாலனைக் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலும் என் முடிவு இதுவாத் தான் இருந்திருக்கும். அதே நேரம்… இப்போ கையில சுமித்ரா ரெண்டு குழந்தைங்களோடத் தனிச்சு நின்னிருந்தாலும் என் முடிவு இதுவாத்தான் இருந்திருக்கும்.”
“மாப்பிள்ளை… எம் பொண்ணுக்கு அவசரக் கோலத்துல கல்யாணம் பண்ணிப் பார்க்க நானும் ஆசைப்படலை.”
“புரியுது மாமா. பழசைப் பேசுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை. விட்டுத் தள்ளுங்க. ஆகவேண்டியதை நாம முதல்ல பார்ப்போம்.”
“எல்லாம் சரிதான் மாப்பிள்ளை. ஆனா… உங்க அம்மா…”
“ஒரு பிரச்சனையும் வராதுன்னு நான் பொய் சொல்ல மாட்டேன் மாமா. ஆனா எந்தப் பிரச்சினை வந்தாலும் எம் பொண்டாட்டியை நான் பாதுகாப்பேன். அதுல உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேணாம்.”
“எனக்கு இது போதும் மாப்பிள்ளை. இது போதும்.” கண்களைத் துடைத்த படி எழுந்தவர் வெளியே போக ஆயத்தப்பட,
“மாமா ஒரு நிமிஷம்.” என்றான் விஜயேந்திரன். அசையாமல் அப்படியே நின்றார் நம்பி. அங்கிருந்த பெரிய இரும்பு அலமாரி ஒன்றின் லாக்கரைத் திறந்தவன் பெட்டி ஒன்றை எடுத்து அங்கிருந்த மேஜை மேல் வைத்தான். கூடவே நான்கைந்து காகிதங்கள். கேள்வியாகப் பார்த்தார் நம்பி.
“மாமா! நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது. இதெல்லாம் சுமித்ராவோடது.”
“சுமித்ராவோடதா? என்ன இதெல்லாம்? இதெப்படி உங்ககிட்ட வந்தது?” குழப்பம் மேலிடக் கேட்டார் நம்பி.
“இதுல இருநூறு பவுன் நகை இருக்கு. இது இந்த இடத்தோட பத்திரம். இதையும் சுமித்ரா பேருக்கு மாத்தி எழுதி இருக்கிறேன்.”
“மாப்பிள்ளை… என்ன சொல்லுறீங்க நீங்க? எனக்கு எதுவும் புரியலை.” இரண்டெட்டு பின்னே நகர்ந்தார் நம்பி.
“இதுல நீங்க எந்தச் சங்கடமும் படத்தேவையில்லை மாமா. இதெல்லாம் நான் என் சுமித்ராவுக்காகப் பண்ணுறது.”
“அதை சுமித்ரா உங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமாப் பண்ணுங்க மாப்பிள்ளை. அது தான் முறை.”
“மாமா… தயவு செஞ்சு என்னைத் தப்பா எடுக்காதீங்க. கொஞ்சம் நான் சொல்லுறதைப் புரிஞ்சுக்கோங்க.”
“நல்லாவே புரியுது மாப்பிள்ளை. இதையெல்லாம் இப்போ நான் வாங்கிக் கிட்டா நாளைக்கு உங்க வீட்டுல அது எம் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய தலைக் குனிவைக் குடுக்கும்னு உங்களுக்குத் தெரியாது மாப்பிள்ளை. நான் வாழ்ந்து அனுபவப் பட்டவன்.”
“அதுக்கு வாய்ப்பே இல்லை மாமா. எப்போ கரிகாலனுக்கும் சுமித்ராவுக்கும் இடையில ஒன்னுமே இல்லைன்னு தெரிஞ்சுதோ அப்போவே இதையெல்லாம் நான் பண்ணிட்டேன்.”
“எம் பொண்ணுக்காகச் சிறுகச் சிறுகச் சேமிச்சு நானும் ஒரு நூறு பவுன் சேர்த்து வெச்சிருக்கேன் மாப்பிள்ளை.”
“நல்லது மாமா. அப்போ எல்லாமா முந்நூறு இருக்கட்டுமே. இந்த இடம் நான் புதுசா வாங்கினது மாமா. ஆர்க்கிட் வளர்ப்பு நடக்குது. இன்னும் லாபம் பார்க்கலை. லாபம் வந்ததுக்கு அப்புறமாச் சொல்லிக்கலாம்னு அம்மாக்கிட்டயும் இதைப் பத்தி நான் ஒன்னும் சொல்லலை. அதனால உங்களுக்கு எந்த சங்கடமும் வேணாம். வாங்கிக்கோங்க.”
“இல்லை மாப்பிள்ளை. நீங்க என்னதான் சொன்னாலும் என்னால இதை ஏத்துக்க முடியாது. என்னை வற்புறுத்தாதீங்க. உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. சோதனையைக் குடுத்தாலும் அதுக்கொரு விடிவையும் ஆண்டவன் வெச்சிருக்கான். மனம் நிறைஞ்ச பாரத்தோட தான் வந்தேன்.” அதற்கு மேல் வார்த்தைகளைத் தொலைத்தவர் கண்கள் கலங்கக் கையெடுத்துக் கும்பிட்டார்.
விஜயேந்திரனும் வணக்கம் வைத்தான். வறுமையிலும் செழுமை என்பார்களே! அது இப்படிப்பட்ட மனிதர்களுக்குத் தானா? பிரமிப்போடு போகும் மனிதரையே பார்த்து நின்றான் விஜயேந்திரன்.
***************
காரொன்று வீட்டின் முன்னாடி வந்து நிற்க அதிலிருந்து சங்கரனும் வடிவும் இறங்கினார்கள். காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பிப் போனவர்கள் தான். இப்போதுதான் திரும்பி வருகிறார்கள்.
விளக்கு வைக்கும் நேரம் என்பதால் அந்த வேலைகளை முடித்து விட்டு அப்போதுதான் வாசலுக்கு வந்தார் தமிழ்ச்செல்வி. சுமித்ராவின் அம்மா.
அடைக்கல நம்பியும் அங்கே தான் அமர்ந்திருந்தார். காலையில் விஜயேந்திரனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து மனம் லேசாகிப் போயிருந்தது மனிதருக்கு. மனைவியிடமும் அதைப் பகிர்ந்து கொண்டார்.
சுமித்ரா தான் சம்பவம் நடந்த பிற்பாடு ஒடுங்கிப் போனாள். ரூமை விட்டு வெளியே வரவேயில்லை. யாரும் அவளை வற்புறுத்தவும் இல்லை. நடந்திருப்பது மிகவும் பாரதூரமான ஒரு விஷயம் என்பதால் அதை ஜீரணித்துக்கொள்ள அவளுக்குக் கால அவகாசம் வழங்கினார்கள்.
தடதடவென இரண்டு பேர் பொருட்களை உள்ளே கொண்டு வந்து வைக்க கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வரிசையாக அட்டைப் பெட்டிகள் ஹாலில் அடுக்கப்பட்டன. பார்த்தால் பட்டுப் புடவைகள் போல தெரிந்தது தமிழ்ச்செல்விக்கு.
“அண்ணி… என்ன இதெல்லாம்? எங்க போயிட்டு வர்றீங்க நீங்களும் அண்ணனும்? காலையில கிளம்பும் போது எங்கன்னு கேக்கக் கூடாதுன்னு தான் நான் கேக்கலை.” வடிவைப் பார்த்துக் கேட்டார் தமிழ்ச்செல்வி.
“செல்வி… ஃபேனைப் போடு. கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டு வா.” புடவைத் தலைப்பால் விசிறிக் கொண்டு ஆணைகள் போட்டார் தில்லை வடிவு.
அண்ணன் மனைவி என்றாலும் தன்னை விட இளையவள் என்பதால் ‘செல்வி’ என்று தான் அழைப்பார் வடிவு. இரண்டு பேரும் நல்ல ஒற்றுமை. கரிகாலன் மாமா வீட்டில் தங்கி அத்தனை காலம் படிக்கக் காரணமே அந்த ஒற்றுமைதான்.
தமிழ்ச்செல்வி கொடுத்த நீரைப் பருகியவர் மீதியைக் கணவருக்கும் கொடுத்தார்.
“செல்வி! டவுன் வரைக்கும் போயிருந்தோம். சுமித்ராவுக்கு நல்லதா கொஞ்சம் பட்டுப் புடவைகள் எடுக்கலாம்னு. இப்போதைக்கு தனியா பட்டுப்புடவை மட்டும் செலெக்ட் பண்ணி இருக்கேன். ஐம்பது புடவை இருக்கு. ஒவ்வொன்னும் ஐயாயிரத்துக்குக் குறையாம எடுத்திருக்கேன்.”
“என்ன!” வடிவின் பேச்சில் வாயைப் பிளந்தார் செல்வி.
“எதுக்கு வாயைப் பொளக்குற? நம்ம பொண்ணு வாழப் போறது சாதாரண வீடில்லை, அரண்மனை. நாம சாதாரணமானவங்க தான். அதுக்காக ஒன்னுமத்துப் போகலை.”
“எல்லாம் சரிதான் வடிவு. இதுக்கெல்லாம் ஏது உங்கிட்ட இவ்வளவு பணம்?” அதுவரை அமைதியாக இருந்த அடைக்கல நம்பி ஒரு அண்ணனாக இப்போது வாயைத் திறந்தார்.
வடிவு பதிலெதுவும் கூறவில்லை. தன் கணவரைத் திரும்பிப் பார்த்தார். செல்வியும் நம்பியும் கூட இப்போது சங்கரனைத் தான் திரும்பிப் பார்த்தார்கள்.
“அது ஒன்னுமில்லை மச்சான். நமக்கொரு பிள்ளை இருக்கானேன்னு என் சம்பாத்தியத்துல மிச்சப்படுத்தி ஊர்ல ஒரு நிலம் வாங்கிப் போட்டிருந்தேன். எம் பொண்ணுக்காக அதை இப்போ வித்துட்டேன்.”
சங்கரன் சுலபமாகச் சொல்ல செல்வியும் நம்பியும் வாயடைத்துப் போனார்கள்.
“அதோட ஊர்ல இருக்கிற என்னோட வீட்டையும் சுமித்ரா பேருக்கு மாத்தி எழுதிட்டேன். இந்த வீட்டையும் சுமித்ரா பேர்ல மாத்தி எழுத எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கேன் மச்சான். நீங்க கையெழுத்துப் போடுறது மட்டும் தான் பாக்கி. இந்த அஞ்சு வருஷமா சுமித்ராவோட நாட்டியத்துல கிடைச்ச வருமானத்தை எல்லாம் சேர்த்து மதுரைக்குப் பக்கத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வேண்டிப் போட்டிருக்கேன் மச்சான். அதுவும் சுமித்ரா பேர்ல தான் இருக்கு.”
சங்கரன் ஒவ்வொன்றாகச் சொல்ல அன்று இரண்டாம் முறையாகக் குலுங்கி அழுதார் நம்பி. தன் பெண் மேல் இத்தனை பாசம் வைக்க மனிதர்கள் இருக்கும் போது அவளுக்கு என்ன குறை வந்து விடப் போகிறது. மனம் கிடந்து விம்மியது.
கண்களைத் துடைத்துக் கொண்டவர் காலையில் விஜயேந்திரனைச் சந்தித்த சம்பவத்தை சத்தமில்லாமல் அவர்களுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொல்லி முடித்தார்.
இப்போது வடிவு தன் கணவனைப் பார்த்து எதற்கோ அனுமதி வழங்க சங்கரன் மீண்டும் ஆரம்பித்தார்.
“மச்சான்… நான் இப்போ சொல்லுறதைச் சரியான கோணத்துல நீங்க புரிஞ்சுக்கணும். சுமித்ரா உங்க பொண்ணுதான். ஆனா, எனக்கும் வடிவுக்கும் அதையும் தாண்டின பாசமும் அக்கறையும் சுமித்ரா மேல இருக்கு.”
“அதுல எந்தச் சந்தேகமும் எங்களுக்கு இல்லை மாப்பிள்ளை.”
“இருந்தாலும்…” எதையோ சொல்லத் தயங்கியது போல இழுத்தார் சங்கரன். பின் குரலை வெகுவாகத் தாழ்த்திக் கொண்டவர்,
“இங்க வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே விஜயேந்திரன் தம்பி எங்களை மதுரையில வந்து சந்திச்சார் மச்சான்.”
“ஓ!” இதற்கு மேல் எதுவும் நம்பி சொல்லவில்லை.
“அவர் தரப்பை மனம் விட்டுப் பேசினார். சுமித்ரா மேல அவருக்கிருக்கிற அன்பைத் தெளிவாப் புரிய வெச்சார். எனக்கும் வடிவுக்கும் என்ன சொல்லுறதுன்னே புரியலை. ஆண்டவன் இருக்கான் மச்சான். சமயத்துல அவன் நம்ம கண்ணுக்கும் தெரியுறான்னு தான் தோணிச்சு.”
“……………..”
“இதை உங்ககிட்ட மறைக்கணுங்கிறது எங்க நோக்கம் இல்லை. இந்த விஷயம் சுமித்ரா காதுக்குப் போனா எங்க நடக்க இருக்கிற நல்லது நடக்காமலேயே போயிடுமோங்கிற பயத்துல சொல்லலை.”
அவர் சொல்லி முடிக்க செல்வியின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.
“இன்னையோட இந்த வீட்டுல இருக்கிற சோகம் ஒழிஞ்சு போகணும் மச்சான். போதும், நான் பெத்தது பண்ணின காரியத்தால இத்தனை நாளும் நாம அழுதது போதும். இனியும் அழ சக்தி இல்லை மச்சான்.”
“அண்ணா! நடக்கப்போறது எங்க பொண்ணு கல்யாணம். கையில இன்னும் கொஞ்சம் பணமிருக்கு. ஜாம் ஜாமுன்னு கல்யாணத்தை நடத்துவோம். உங்க கிட்ட இருந்தா நீங்களும் குடுங்க. இன்னும் விசேஷமாப் பண்ணுவோம்.”
“சரி வடிவு.” நெகிழ்ந்து போய்ச் சொன்னார் நம்பி.
“எல்லாம் சரிதான் அண்ணி. ஆனா…” சுமித்ராவின் ரூமை நோக்கிக் கண்ணைக் காட்டினார் செல்வி. வடிவிற்கும் அது புரிந்துதான் இருந்தது.
“செல்வி, சுமித்ராவை வரச்சொல்லு.” இது அடைக்கல நம்பி.
செல்வி போய் அழைக்க சற்று நேரத்தில் வெளியே வந்தாள் சுமித்ரா. பார்வை ஒரு முறை அனைவரின் முகத்திலும் பதிந்து மீண்டது.
“உட்காரு சுமித்ரா.” சங்கரன் சொல்லவும் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன முடிவு பண்ணி இருக்கே?”
“மாமா?”
“மாமா தான் கேக்குறேன். இத்தனை நாளும் அத்தை கேட்டா. மாமா அமைதியாத்தானே இருந்தேன். இப்போ மாமாவே கேக்குறேன். என்ன முடிவும்மா எடுத்திருக்கிறே?”
“……………”
“உன்னோட மனசு எனக்கும் புரியுது சுமித்ரா. அதுக்காக உன்னை இப்படியே விட்டுட முடியுமா சொல்லு? எத்தனை நாளைக்கு நாங்க உன்னைப் பாதுகாக்க முடியும்? எங்க கண்ணுக்கு அப்புறம்? இதையெல்லாம் நீயும் கொஞ்சம் யோசிக்கணும் சுமித்ரா.”
“…………..”
“ஒரு பொண்ணோட கழுத்துல இருக்கிற தாலி அவளுக்கு எவ்வளவு மகத்தானதுன்னு புரியாத முட்டாளுங்க இல்லை நாங்க. ஆனா அதே நேரம், அந்தப் பொண்ணுக்கு அந்தத் தாலியால எந்தப் பிரயோஜனமும் இல்லைங்கிறப்போ அதைப் பிடிச்சிக்கிட்டுத் தொங்குறதுல என்ன அர்த்தம் இருக்கு சொல்லு?”
“கட்டின தாலியில லாப நட்டக் கணக்குப் பார்க்க எனக்குத் தெரியலை மாமா.”
“என்னடீ! வாய் ரொம்பத்தான் நீளுது?” சட்டென்று பாய்ந்தார் வடிவு.
“போதும் அத்தை! நீ எங்கிட்ட கோபமா இருக்கிற மாதிரி நடிச்சது எல்லாம் போதும். நிறுத்திக்கோ. எம்மேல இருக்கிற அக்கறையில பெத்த புள்ளையையே இல்லைன்னு சொல்லிட்டு நீ தவிக்கிற தவிப்பு எனக்குப் புரியாதுன்னு நினைக்கிறயா?”
“சுமித்ரா!” ஓடி வந்து சுமித்ராவை அணைத்துக் கொண்டு கதறித் தீர்த்தார் வடிவு. உணர்ச்சி மேலிடும் போது தான் தன் அத்தையை அவள் இப்படி ஒருமையில் அழைப்பாள்.
“நான் தான்டி உன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன். நான் பெத்த படுபாவியை உன் தலையில கட்டி உன் வாழ்க்கையை நான் தான்டி நாசம் பண்ணிட்டேன்.”
“அத்தானைத் திட்டாதே அத்தை. அவங்க மேல எநதத் தப்பும் இல்லை. தப்புப் பண்ணினது நீ.”
“ஆமா. நானே தான். அதுக்குத் தான் அந்தத் தப்புக்கு இப்போப் பிராயச்சித்தம் பண்ணக் கிடந்து தவிக்கிறேன். இதை விட உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாது சுமித்ரா.”
“அப்போவும் இதைத் தானே அத்தை சொன்னே?”
“இல்லைடி சுமித்ரா. ஒரு பெரிய மனுஷன் நம்ம பொண்ணைப் பார்த்து இப்படியொரு வார்த்தை சொல்லிட்டானேங்கிற அவசரத்துல அன்னைக்கு முடிவெடுத்துட்டேன். ஆனா இன்னைக்கு அப்படியில்லை. புரிஞ்சுக்கோடி தங்கம்.”
“புரியுது அத்தை. நீங்க அத்தனை பேரும் என்னோட நல்லதுக்குத் தான் பேசுறீங்கன்னு நல்லாவே புரியுது. ஆனா, அத்தனை சுலபத்துல இதையெல்லாம் என்னால ஏத்துக்க முடியலையே அத்தை.”
“முடியணும் சுமித்ரா.”
“நடக்கப் போறது எனக்கு ரெண்டாவது கல்யாணம். இதை உன் வாயால நீ ஒரு தரம் சொல்லிப் பாரு அத்தை. உனக்குக் கூசலை!” இதைச் சுமித்ரா சொன்ன போது செல்வி புடவைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டார். ஆண்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டார்கள்.
ஆனால் வடிவு விடவில்லை. உடம்பைக் கிழித்துத் தைத்தாலும், ரத்தம் சிந்தினாலும் சிகிச்சை தான் அவருக்கு முக்கியமாகப் பட்டது.
“ரெண்டாங் கல்யாணமா? யாரு சொன்னா? ஊரைக் கூட்டினோமா? விருந்து வெச்சோமா? நாள் பார்த்தோமா? இல்லை நேரங் குறிச்சோமா? ஒன்னுமே பண்ணலியே! இதோ! இந்த நாலு பேரும் தான் அன்னைக்கும் சாட்சிக்கு நின்னோம். அதே நாலு பேரும் தான் இன்னைக்கும் நிக்கிறோம். ஒரு கயிறு உங்கழுத்துல விழுந்திச்சு. குடும்பம் நடத்தினயா அந்தப் பரதேசியோட? இல்லை கொழந்தை தான் பெத்துக்கிட்டியா? அப்படியெல்லாம் நடந்திருந்தா இப்போ நீ சொல்லுறது எல்லாம் நியாயம். இங்க தான் எதுவும் நடக்கலியே!”
“அத்தை… மூனு முடிச்சு தான் அழகு. ஆறு முடிச்சு அவமானம் அத்தை.”
“சுமித்ரா! போதும் நிறுத்து. பெரியவங்க சொன்னா கேட்டுப் பழகு. இது என்ன புதுசா? வாய்க்கு வாய் எதிர்த்துப் பேசுற? நல்லாருக்கு செல்வி நீ பொண்ணை வளர்த்து வெச்சிருக்கிற லட்சணம்.”
“அம்மாவை எதுக்கு இப்போ திட்டுற அத்தை?”
“வேற என்ன பண்ண? உன்னைத் திட்ட முடியலையே!”
“நான் கொஞ்ச நேரம் கோயிலுக்குப் போயிட்டு வரட்டுமா அத்தை?”
“போயிட்டு வாடி ராஜாத்தி. அந்த ஆண்டவன் உனக்கு நல்ல வழியைக் காட்டட்டும்.” வடிவு சொல்லத் தலையை அசைத்தவள் உள்ளே போய்விட்டாள்.
**************
கோயிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா. சங்கரனோடு வந்திருந்தாள். யாரோ தெரிந்தவரைப் பார்த்து விட்டு வருவதாக அவர் போயிருக்க இவள் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
வாழ்க்கை தனக்கு இன்னும் என்ன சோதனைகளை வைத்திருக்கிறது என்று புரியவில்லை. எப்போதோ முளைத்த ஒரு ஆசை. மடல் விரிக்கும் முன்னமே உதிர்ந்து போனது.
அதை ஜீரணிக்க முடியாமல் தவித்த போது வலுக்கட்டாயமாக இன்னொரு உறவுக்குள் திணித்து விட்டார்கள்.
சரி, இதுதான் இனி நமக்கு வாய்த்த விதி என்று நினைத்த போது அந்த விதியே அவளைப் பார்த்து எள்ளி நகையாடியது.
எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நாட்டியத்தின் போது மட்டுமே தனது முக பாவங்களைக் காட்டப் பழகிக் கொண்டாள்.
தனிமை சில நேரம் வாட்டி வதைக்கும். தாங்கிக் கொள்வாள். அம்மா, அப்பா, அத்தை, மாமா இவர்களையெல்லாம் நினைவில் வைத்துப் போலியாகப் புன்னகைப்பாள். அதுவும் பழகிப் போனது.
தன்னருகே அரவம் கேட்க உட்கார்ந்திருந்தவள் அண்ணாந்து பார்த்தாள். அரண்மனையின் ட்ரைவர் நின்றிருந்தான். அன்று ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்த பையன்.
“அண்ணீ…” அவன் அழைப்பில் திகைத்துப் போனாள் சுமித்ரா. அண்ணீயா? என்ன சொல்கிறான் இவன்?
“நீங்க எனக்கு ஒரு வகையில அக்கா முறை. இன்னொரு வகையில அண்ணி முறை.” தெளிவாகக் குழப்பினான் பையன்.
“புரியலையா? விஜயேந்திரன் அண்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க எனக்கு அண்ணி முறையாகணும். அக்கா…” மேலே பேசாமல் தனது பர்ஸை எடுத்து சுமித்ராவிடம் நீட்டினான்.
அதைத் தொட்டும் பார்க்காதவள் அந்தப் பையன் நீட்டிய பர்ஸில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த போது திகைத்துப் போனாள்.
“நீங்க…”
“ஸ்டீஃபன். உங்க அத்தான் கரிகாலன் கல்யாணம் பண்ணி இருக்கிறது என்னோட அக்காவைத்தான்.”
“ஓ… உட்காருங்க தம்பி.” அவளுக்குப் பக்கத்தில் அமரச் சொன்னவளின் குரலில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நீங்க எப்படி இங்க…”
“அரண்மனையில தான் இருக்கேன். அத்தான் தான் அனுப்பினாங்க.”
“யாரு? கரிகாலன் அத்தானா?”
“ஆமா.”
“எதுக்கு?”
“அண்ணி… அதையெல்லாம் இன்னொரு நாள் நாம சாவகாசமாகப் பேசலாம். இப்ப நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” ஆவலாகக் கேட்ட ஸ்டீஃபனைப் பார்த்துப் புன்னகைத்தாள் சுமித்ரா.
“பரவாயில்லையே! உங்களுக்காவது எங்கிட்ட அபிப்பிராயம் கேக்கணும்னு தோணிச்சே, சந்தோஷம்.”
“அது அப்படியில்லை அண்ணி. அண்ணனுக்கும் உங்க சம்மதம் ரொம்பவே முக்கியம் தான். ஆனா இப்போ அவங்க நிலைமை அதுக்கு இடம் குடுக்கலை.”
“அப்போ நீங்க மட்டும் ஏன் அதைப்பத்திக் கவலைப்படுறீங்க ஸ்டீஃபன்? அத்தானோட குழந்தை ரொம்ப அழகா இருக்கு.” ஸ்டீஃபன் காட்டிய புகைப்படத்தில் கரிகாலன் குடும்ப சகிதம் புன்னகைத்த படி இருந்தான்.
“அண்ணி… அண்ணா உங்க மேல எவ்வளவு பைத்தியமா இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியாது அண்ணி. நடந்தது அத்தனையையும் மறந்திருங்க அண்ணி. எங்க அண்ணனை சந்தோஷமா ஏத்துக்கிட்டு அந்த அரண்மனைக்கு வாங்க அண்ணி. உங்களை உள்ளங்கைல வெச்சு அண்ணா தாங்குவாங்க அண்ணி. ப்ளீஸ்… மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க அண்ணி. உங்களைக் கெஞ்சிக் கேக்கிறேன்.”
எதிரில் உட்கார்ந்து கொண்டு மன்றாடுபவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் சுமித்ரா. ஏதோ புரிந்தாற் போல இருந்தது. அத்தானின் மைத்துனனுக்கு அரண்மனையில் என்ன வேலை? அப்படியென்றால்…
ஸ்டீஃபனை சுமித்ரா பார்த்த பார்வையில் தலையைக் குனிந்து கொண்டான் பையன். அந்தப் பார்வையைத் தாங்கும் சக்தி அவனுக்கு இருக்கவில்லை.
உள்ளத்தை மறைத்தேன் உயிர் வலி பொறுத்தேனே
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்…