mp6b

மது பிரியன் 6B

 

வீட்டிற்கு வந்த விஜய்யிக்கு, வீட்டின் பேரமைதி ஆச்சர்யமாக இருந்தது.

அமைதியாக வீடு வரவேற்க, யோசனையோடு வீட்டினுள் நுழைந்தான் விஜய். பஞ்சவர்ணம் இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருக்க, வசீகரன் தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாமனைக் கண்டதும், எழுந்து சென்று படிப்பதுபோல பாசாங்கு செய்தான் வசீ.

அறைக்குள் செல்ல, ஒருக்களித்துப் படுத்திருந்தவளைக் கண்டதும், என்னவோ ஏதோ என்று பதறி அருகே சென்றவன், “மது” அழைத்தபடியே நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.

படுத்தே இருப்பதால், சற்று உடல் சூடு அதிகரித்திருக்க, விழித்திருந்தவள், “ம்ஹ்ம்” அங்ககீனமான குரலில் தனது பதிலைக் கூறினாள்.

“உடம்புக்கு என்ன செய்யுது”

“தலைவலி”

“திடீர்னு என்னாச்சி”

“தலைவலி சொல்லிக்கிட்டா வரும்” பட்டென வந்த மதுவின் பேச்சு முறை புதிது.  ஆனாலும் அமைதியாக வந்து மதுவின் அருகே அமர்ந்தவன், “அது தெரியலை” விளையாட்டாக எடுத்துக்கொண்டு பதில் கூறியவன், “டேப்லட் எதுவும் எடுத்தியா? இல்லைனா டாக்டர்கிட்ட போயிட்டு வருவமா?”

“இது தீராத தலைவலி” திரும்பாமலே பதில் கூறிய மது, விஜயரூபனுக்குப் புதியதாய்த் தெரிந்தாள். உடல்நலக்குறை அவளை அவ்வாறு பேசச் செய்வதாக எண்ணியவன், யோசனையோடு எழுந்து சட்டையை கழற்றிவிட்டு, தன்னைத் சுத்தம் செய்து கொண்டு வந்தான்.

அடுக்களைப் பகுதிக்குச் சென்றவன், “மதுக்கு தலைவலியாம் பஞ்சுக்கா.  அவளுக்கு எதாவது லைட் ஃபுட்டா குடுங்க.  அதைச் சாப்பிட வச்சி, டேப்லட் போட்டா சரியாகிரும்” என்றுவிட்டு, ஹாலில் சென்று சோபாவில் அமர்ந்தவன், வசீயை நோக்கி, “என்னடா, டிவி ஒரு பக்கம் ஓடுது.  நீ ஒரு பக்கம் இன்னும் படிச்சிட்டுருக்க இன்னிக்கு”

“ரொம்ப ஹோம்ஒர்க் மாமா” என்றபடியே அவனது புத்தகத்தில் கவனம் செலுத்தினான்.

“டிவி பாத்துட்டே, எப்டிடா படிக்கற?”

“நியூஸ் பாக்க இப்பதான் மாமா போட்டேன்”

மாமனிடம் ஏதோ கூறி சமாளிக்க முயன்று தோற்றவன், எழுந்து சிட்டவுட்டில் சென்று அமர்ந்து தனது மீதி வேலையைப் பார்க்க முயன்றான் வசீ.

மது இல்லாமல் அவனால் அன்றைய வீட்டுப்பாடங்கள் அனைத்தும் தொக்கி நின்றிருந்தது.

சற்று நேரத்தில் அங்கு வந்த பஞ்சவர்ணம், “வசீ சாப்பிட வா, தம்பி சாப்பாடு ரெடியாருக்கு.  நீங்களும், வசீயும் சாப்பிடுங்க.  நாம்போயி மதும்மாக்கு இட்லி குடுக்கறேன்”

“இல்லக்கா.  எங்கிட்டயே இட்லியக் குடுங்க.  நீங்களும், வசீயும் சாப்பிடுங்க.  மது சாப்பிட்டதும் நான் வந்து சாப்பிட்டுக்கறேன்”

“சரிப்பா” என்றவர், விஜய் கேட்டதுபோல இட்லியை தட்டில் வைத்து நீட்டினார். பெற்றுக்கொண்டவன் அறைக்குள் சென்று, “மது”

“…”

“மது”

“எனக்கு சாப்பிட எதுவும் வேணாம்”

“சாப்பிடாம படுக்கக் கூடாது மது.  இரண்டு இட்லியாவது சாப்பிட்டு படு”

“நீங்க சாப்பிடுங்க.  எனக்கு எதுவும் வேணாம்”

“நீ முதல்ல எழுந்திரி” தட்டை அருகே இருந்த டேபிளின் மீது வைத்தவன், அவளை நெருங்கித் தூக்கினான். முரண்டு எதுவும் செய்யாமல் அவனுக்கு ஒத்துழைத்து எழுந்தவளின் முகம் பார்த்தான் விஜய்.

அழுதழுது வீங்கியதுபோல முகம்! “அழுதியா?”

இல்லையெனத் தலையாட்டினாள்.

“நீ இல்லைனு சொன்னாலும், உன்னோட முகம் ஆமாங்குதே”

“தெரியுதுல்ல! அப்புறம் என்ன கேள்வி” என கீழே குனிந்தபடியே முணங்கினாள் மது.

“ஏய்! எதுனாலும் வாயத் திறந்து சொல்லு. எல்லாம் இன்னைக்குப் புதுசா இருக்கு? எதுக்கு அழுத?”

“எந்நேரத்தை நினைச்சு அழுதேன்!” கூறும்போதே அவளை மீறி கண்களில் இருந்து அவளையும் மீறி தாரையாய் நீர் வழிந்தது. 

“என்ன பிரச்சனை?  யாரு வந்து என்ன சொன்னா?”

“இங்க எல்லாமே பிரச்சனைதான்!”

“மது.  இப்டி சுத்தி வளைச்சுப் பேசினா எனக்கு எதுவும் புரியாது.  எதுனாலும் நேரடியாச் சொல்லு.  உண்மையிலேயே தலைவலிதானா?  இல்லை, வேற எதுவும் பிரசச்னையா?”

சட்டென எழுந்தவள், படுக்கையின் மறுபுறம் வைத்திருந்த ஆல்பத்தை எடுத்து வந்து, படுக்கையில் அமர்ந்திருந்த விஜய்யின் மடிமீது வைத்துவிட்டு, “இதுதான் இப்ப பிரச்சனை”

அவள் சென்றது முதலே யோசனையோடு மதுவையே பார்த்திருந்தவன், தனது கையில் வாங்குமுன் தன்மீது வம்படியாகக் கொண்டு வந்து திணித்த ஆல்பத்தைப் பார்த்ததுமே, ‘இது எப்டி இவ கையில’ எனும் யோசனையோடு, ஆழ்மனம் சற்று தடுமாறினாலும், அதைக் காட்டாது, ஆல்பத்தைக் கையில் வாங்கியிருந்தான்.

பெருமூச்சொன்றை விட்டவன், “முதல்ல சாப்பிடு.  அப்புறம் இதைப்பத்தி பேசலாம்”

“இனி இதப்பத்திப் பேச என்ன இருக்கு. எல்லாம் முடிஞ்சுபோனதுதான?”

“சரி, முடிஞ்சு போச்சுன்னா எதுக்கு இப்டி ஒக்காந்துட்டு இருக்க?”

“எல்லாருமா சேந்து என்னை ஏமாத்திட்டீங்களே!” அழுதாள்.

“அம்மா, அக்கா ரெண்டு பேர்கிட்டயும் என்னைப் பத்தி கட்டாயம் பொண்ணுகிட்டச் சொல்லி, சம்மதம் வாங்கின பின்னதான் கல்யாணம்னு சொல்லியிருந்தேன் மது”

“…” ஒடுக்கம் நின்று, ஒதுக்கம் உள்ளத்தில் தோன்ற, அவனது அடுத்த வார்த்தைக்காக, உள்ளம் பதற, உடல் விரைக்க, அவன் கூறப்போகும் விசயத்தைக் கேட்கக் காத்திருந்தாள்.

பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கணவனை ஏறிட்டவளிடம், “அதை உங்க அத்தை உங்கிட்ட சொல்லலைனு எங்களுக்கு சத்தியமாத் தெரியாதும்மா”

“நான் வந்து இத்தனை நாளுல நீங்களாவது சொல்லியிருக்கலாம்ல”

“உனக்குத் தெரியாதுங்கறதே சமீபத்துலதான் எனக்குத் தெரிய வந்தது”

“அப்பத் தெரிஞ்சும், மறச்சிருக்கீங்க” விகற்பமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அதான்” என இழுத்தவன், “பிரேமா அத்தைன்னு சொல்லுவியே. அவங்கட்ட சொல்லி, இதை உங்கிட்ட சொல்லச் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்”

“அப்ப அதுக்குள்ள எனக்குத் தெரிஞ்சிருச்சு.  அதுதான் இப்ப உங்களுக்கு வருத்தம்!”

“எப்பனாலும் தெரிய வேண்டிய விசயம்தான் மது.  உன்னை யாரும் நாங்க ஏமாத்த நினைக்கலை.  இப்பவும் உன்னோட விருப்பம் என்னவோ அதை மதிக்க நான் தயாரா இருக்கேன்”

“அப்ப அதுக்காகத்தான் தள்ளியே இருந்தீங்களா?”

“…” அதற்கான காரணம் வேறு என்பதை அவனால் அவளிடம் கூற முடியவில்லை. அமைதி காத்தான்.

“என்னதான் ஆச்சு.  இப்பவாவது எங்கிட்டச் சொல்லலாம்ல” அதட்டலாக வந்தது மதுவின் குரல்.  ஆனால் அவளால் இப்படியெல்லாம் பேச முடியும் என்பதே அவளுக்கு இதுநாள்வரை தெரியாது.

“சொல்லலாம்.  ஆனா முதல்ல சாப்பிட்டு, தலைவலிக்கு டேப்லட் போட்டு ரெஸ்ட் எடு.  உனக்கு தலைவலி சரியானதும் கண்டிப்பாச் சொல்றேன்”

“தலைவலியே இதுனாலதான்” வெடுக்கெனக் கூறியவள், “அதுக்கு மாத்திரை வேண்டியதில்லை.  எனக்கு உங்க பதில்தான் வேணும்” விடாப்பிடியாகக் கேட்டாள்.

“அப்ப, நான் சொன்னாதான் நீ சாப்பிடுவியா?”

“ஆமா!” பிடிவாதமாகக் கூறினாள்.

“பெரியவங்க பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.  ஒத்து வரலைன்னு அவ போயிட்டா.  அடுத்து நான் தன்னந்தனியாவே இருக்கிறேன்னு சொன்னா, யாரும் கேக்கலை.  அடுத்து உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க!” இரண்டொரு வார்த்தையில் கடந்து போன நிகழ்வு முழுவதையும் சுருக்கிக் கூறியிருந்தான்.

“ஏன் அவங்க போனாங்க?”

“அது அவகிட்டத்தான் போயிக் கேக்கணும்”

“உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியற அளவுக்கு அவகூட நான் வாழலை” இறுகிய முகத்தோடு பதில் கூறினான்.

“அப்டின்னா?”

“அப்டித்தான்”

“இது என்ன மாதிரியான பதில்!”

“இதுதான் உண்மையான பதில்!”

“எவ்ளோ நாள் இங்க இருந்தாங்க!”

“இதையெல்லாம் கேட்டு என்ன செய்யப் போற?” சலிப்போடு கேட்டான்.

“இனி நான் என்ன முடிவெடுக்கணும்னு யோசிப்பேன்” என்றவள் சற்றுப் பொருத்து, “எல்லாருமா சேந்து என்னை நல்லா ஏமாத்திட்டீங்க!”

“நல்லா யோசி மது.  வந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரை உன்னை எதுக்காகவெல்லாம் என்னவெல்லாம் சொல்லி ஏமாத்தினேனு”

“…”

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கானு தெரிஞ்சிக்க ஆரம்பத்துல ஆசைப்பட்டேன்.  அதுக்காக உங்கிட்ட கொஞ்சம் டைம் கேட்டேன்” மெல்லிய குரலில் தனது பக்க நியாயத்தைக் கூறினான் விஜய்.

“கல்யாணத்துக்கு முன்னாடி கேட்டிருக்க வேண்டியது அது!” சட்டெனக் கூறினாள்.

“உண்மைதான்.  ஆனா, அதைக் கேக்க உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னவங்ககிட்ட, நீ அவங்க பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டேன்னு சொன்னது உங்க அத்தைதான்!”

“அப்படி அவங்க பேச்சை நீங்க நம்பினா, உங்களை எனக்குப் பிடிச்சிருக்குனுதானே அர்த்தம்.  அப்புறம் ஏன் இத்தனை மாசம் என்னைத் தள்ளி வச்சிருந்தீங்க? அதுக்கு என்ன காரணம்?” குரல்வளையைப் பிடிக்காத குறையாக விஜயிடம் தனக்குத் தோன்றியதைக் கேட்டாள்.

“வீட்டுல பாத்து வைக்கிற கல்யாணத்துல, யாரு, என்னானு புரிஞ்சிக்கறதுக்கு முன்னாடியே சேர்ந்து வாழ ஆரம்பிக்கறது வழக்கம்தான். அதுக்குப்பின்ன, பிடித்தம் எல்லாம் தானா வந்திரும்னும் நானும் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்” என்றவன், “அது எல்லாருக்கும் செட் ஆகும்னு சொல்ல முடியாது மது. உன்னோட விருப்பம் என்னானு நான் தெரிஞ்சிட்ட பின்னதான், உங்கூட சேந்து வாழ ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். அத்தோட எனக்கும் திடீர்னு முடிவான கல்யாணங்கறதால கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்பட்டது”

“இப்போ எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வீங்க”

“என்ன செய்ய முடியும்.  உன்னோட விரும்பம்னு ஒதுங்கித்தான் போகணும்” விட்டேற்றியாகப் பதில் கூறினான்.

கணவனின் பதிலில் மதுவிற்றே சற்று மனவருத்தம் தோன்றியிருந்தது.  மலையிறங்கியவள், “என்ன காரணத்துனால அவங்க உங்களை விட்டுப் போனாங்கன்னு எங்கிட்டச் சொல்ல மாட்டீங்களா?” சாதுவாகவே கேட்டாள்.

“அது அவ பர்சனல்.  அதை நீ அவகிட்டதான் போயிக் கேக்கணும்”

“உங்களுக்கு அதுபத்தித் தெரியுமா? தெரியாதா?” விடாக்கொண்டனாக என்பதுபோல விஜய்யை விடாமல் கேட்டாள்.

“தெரியுது, தெரியலை.  அது உனக்குத் தேவையில்லாத விசயம்.  அதை உங்கிட்ட சொல்றது நல்லாருக்காது”

“அப்ப எங்கிட்டச் சொல்ல மாட்டீங்க” ஏமாற்றமாகக் கேட்டாள்.

“உன்னைப்பத்திக் கேளு உங்கிட்ட சொல்றேன்.  யாரையோ பத்தி எங்கிட்ட எதுக்கு கேக்கற.  அதுக்குப் பதில் நான் சொல்லணும்னு நினைக்கிறது உனக்கே அபத்தமா தெரியலையா? அந்த ரிலேசனைவிட்டு அவ வெளிய போயி, அவங்க வேற ஒரு லைஃல இருக்கும்போது அதைப்பத்திப் பேசறது அநாகரிகம்”

“யாரோ இல்லை அவங்க.  உங்களோட எக்ஸ் வயிஃப்”

“இருக்கட்டுமே.  ஆனா அது பாஸ்ட்.  முடிஞ்சதைப் பத்தி இனி பேசாத.  நீ டிசைட் பண்ணு.  நாம சேந்து வாழலாமா வேணாமானு”

“அப்ப சொல்ல மாட்டீங்க?”

“புரிஞ்சிக்கோ மது”

“என்னத்தைப் புரிஞ்சிக்க?”

“உன்னோட இந்த நிலைக்கு நிச்சயமா நானோ, எங்க அம்மாவோ, அக்காவோ நிச்சயமா காரணம் இல்லை.  ஆனா உனக்கு விசயம் தெரியாம வாழ்க்கையத் துவங்க வேணானுதான் இதுவரை நான் வயிட் பண்ணேன்.  இப்பவும் உன்னோட முடிவைத் தெரிஞ்சிட்டு, அதுக்கு ஏற்ற மாதிரி முடிவு பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.  அதைப் புரிஞ்சிட்டு சீக்கிரமா ஒரு நல்ல முடிவெடு”

“அந்த வாழ்க்கையில உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு எங்கிட்ட மறைக்காமச் சொன்னாதான, அதுக்கு ஏத்த மாதிரி நானும் யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு இனி வரலாம்னு நான் கேக்கறேன்.  ஆனா நீங்க சொல்ல மாட்டிங்கறீங்க” விஜய்யின் மீது பழி சொல்லி, அவனிடம் பதில் வாங்க முயன்றாள் மது.

சற்றுநேரம் அமைதியாக இருந்தது.

மதுவின் பக்க நியாயத்தை சற்று நிதானித்து யோசித்தவன், பெருமூச்சோடு, “அவளுக்கு வேற ஒரு பையனைப் பிடிச்சிருந்தும், எனக்கு அவளை வற்புறுத்திக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.  அதை அவ எங்கிட்டச் சொல்லிட்டு, அவ விரும்பம்போல அவங்கூடப் போயிட்டா. இது போதுமா?” தலை முடியை தன் இரு கரங்களைக் கொண்டு மேலிருந்து, கீழாக அழுத்திச் சரி செய்தான். அதற்குமேல் அவனால் விரிவாகக் கூற இயலவில்லை.

“ஓஹ்..” என்றவள், “அப்ப உங்களுக்குள்ள…” என மேலும் துருவிக் கேட்கத் துவங்கினாள்.

“இதுக்குமேல தேவையில்லாத விசயத்தைப் பத்தியெல்லாம் கேக்காத” விரலை நீட்டி, இத்தோடு நிறுத்திக்கொள் எனும் தோரணையோடு மதுவைப் பார்த்துக் கூறியவன், சட்டென அங்கிருந்து அகன்று, ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து மாட்டியபடியே அறையைவிட்டு வெளியே கிளம்பியிருந்தான்.

சற்றுநேரத்தில் அவன் வெளியே செல்வதை, அவனது வண்டியின் சத்தத்தில் உணர்ந்து கொண்டாள் மது.

ஓய்ந்துபோய் படுக்கையில் அமர்ந்தாள்.  தட்டில் இருந்த இட்லி ஆறிப் போயிருந்தது. பசித்தாலும் உண்ணப் பிடிக்கவில்லை. மேலும் விஜய் வெளியே சென்றதில், மனதோடு வருத்தம் தோன்றியது.

விஜய் வேலைவிட்டு வரும்வரை மதுவிற்கு, ‘எவ்ளோ பெரிய விசயத்தை மறைச்சு, இந்த அத்தை என்னை இரண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக் குடுத்ததோடு எஸ் ஆகியிருக்கு’ எனத் தோன்றியது.  மேலும், ‘யாரு பெத்த புள்ளை, எப்டிப் போனா என்னானு, தள்ளிவிட்டதோட, அன்னைக்கோட தலை முழுகிருக்கு.  இது தெரியாம இவ்ளோ நாள் நான் இருந்திருக்கேனே’ என்று எண்ணும்போதே, கழிவிரக்கத்தால் அழுகை வந்து, அன்றைய பொழுது முழுமையையும் கண்ணீர் விட்டே கடந்திருந்தாள்.

தனக்கு என்று யாருமில்லாததால், தன்னை ஒருவனுக்கு திருமணம் என்கிற போர்வையிலாவது அனுப்பிவிட்ட தனது அத்தையை எண்ணி, சற்று நிம்மதிகூட வந்தது மதுவிற்கு.

‘பாரம்னு நினைச்சு, எவங்கிட்டயும் காசு வாங்கிட்டு விக்காம விட்டுச்சே’ எனத் தோன்றாமல் இல்லை.

இனி தான் என்ன செய்யலாம் என யோசிக்கும்போதே மதுவிற்கு, எதிர்காலம் பற்றி பயம் வந்தது.

படிக்கவில்லை. மேல்நிலைக் கல்வியோடு வீட்டு வேலைகள் பார்க்க அனுமதிக்கப்பட்டு இருந்தவளுக்கு, சமையல் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்நிலையில், அனைத்து மணமகளுக்கும் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு அவளுக்கும் இருந்தது என்னவோ உண்மை.  அது, தன் கணவன் இராமனாக இருக்க வேண்டும் என்பதே அது. அப்படி இல்லை.  தான் இரண்டாந்தாரம் என்பது தெரிய வர, உண்மையில் உள்ளம் உடைந்து சுக்கு நூறாகிப் போனது.  அதை ஒட்ட வைக்க முடியுமா என்பது புரியாமல், உள்ளத்தில் தன் நற்செயலால் குடிவந்த கணவனை ஒதுக்கி விலகவும் முடியாமல், திக்கற்றவளாக இருக்கும் தன் நிலையை எண்ணி எண்ணியே குமைந்து போயிருந்தாள் கணவன் வரும்வரை.

தான், தனது எனும் பற்று விஜய்யின் மேல் எந்தளவிற்கு இருக்கிறது என்பது, மதுராவிற்கு இன்றுதான் புரிய வந்திருந்தது.  வாழத் துவங்கு முன்பே அவன்மீதான கண்மூடித்தனமான நேசத்தை எண்ணி சிரிப்பும் வந்தது. ‘பைத்தியக்காரி. கையில காசக் குடுத்து, எல்லாத்தையும் நீயே பாத்துக்கோன்னு ஒருத்தன் சொன்னதுக்கே, இப்டி மாறிட்டியே.  உன்னை இன்னும் நல்லா வாழ வச்சிருந்தான்னா புடிக்கவே முடியாதுபோல’ எனக் கேலி செய்தது.

வீம்பாக வீட்டை விட்டு வெளியே சென்றால், அவதிப்படுவது என்னவோ தான்தான் என நினைத்துக் கொண்டு, விஜய்யை ஏற்கவும் முடியாமல், விட்டு விலகவும் மனம் ஒப்பாமல் இருதலைக்கொள்ளியாக படுத்திருந்தாள்.

அப்போது கணவன் வந்து, தானாக அவன் தன்னை நெருங்கியதும், ஆழ்மனம் சற்றே ஆனந்தக் கூப்பாடு போட, நடப்பு முன் நின்று அவளை அதிலிருந்து மீட்க, தன்னை ஒருவழியாக சமாளித்து, அவனது கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் தெரிந்து கொள்ள எண்ணி, தான் வீம்பாக சில கேள்விகளை முன்வைக்க, அது அவனைக் கோபப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதை எண்ணி தற்போது வருந்தியபடி அமர்ந்திருந்தாள்.

தனது அவசரத்தனத்தையும், மடமையையும் எண்ணி மனதிற்குள் புலம்பலோடு இருந்தவள், நேரத்தைக் கண்ணுற்று, கணவனுக்கு அழைத்தாள்.

……………………………………..