MP8

MP8

மோகனப் புன்னகையில் 8

கௌரிபுர சிவன் கோவிலில் எள் விழ முடியாத அளவு ஜனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. மண்டபத்தின் நடுவில் மேடை அமைத்து விஜயேந்திரன் அமர்ந்திருந்தான்.

பட்டு வேஷ்டி சட்டை அணிந்து தலையில் தலைப்பாகை அணிந்திருந்தான். என்றுமில்லாத வகையில் இன்று விசேஷத்திற்கென்று கழுத்தைப் பெரிய மரகத மாலை அலங்கரித்திருந்தது. ஐயர் மந்திரங்கள் சொல்ல அதைச் செவ்வனே பின்பற்றிக் கொண்டிருந்தான். 

ஊரே திரண்டிருந்தது. பெருந்தனக்காரர்கள் பிரகாரத்தை நிரப்பி இருக்க சாமானியர்கள் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் நிரம்பி வழிந்தார்கள். 

கோதை நாயகியும் அவர் கணவரும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள். அழிழ்தவல்லி ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் பார்த்தபடி இருந்தார். முகத்தில் சந்தோஷம் தெரிந்தாலும் ஒரு தாய்மைக்கான பூரிப்பை அங்கு காண முடியவில்லை.

பெண் வீட்டார் அனைவரும் வந்துவிட்டார்கள். மணப்பெண் அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் கண்கள் அலைபாய ஒரு பரவச நிலையில் அமர்ந்திருந்தான் விஜயேந்திரன்.

கையில் காமெராவோடு ஸ்டீஃபன் வண்ணம் வண்ணமாகப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தான். ஒரு மாதம் ஓடியே போயிருந்தது. 

வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால் அண்ணனும் தம்பியும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் கரிகாலனும் ஒரு தரம் அழைத்துப் பேசி இருந்தான். பக்கத்தில் இருந்திருந்தால் விஜயேந்திரனின் காலில் விழுந்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

“அண்ணா! மந்திரத்தைச் சரியாச் சொல்லுங்க. அண்ணியை யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க.” ஸ்டீஃபன் காதில் முணுமுணுக்கத் தன்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டான் பெரியவன்.

“அத்தனை அப்பட்டமாவாத் தெரியுது?” இது விஜயேந்திரன்.

“எழுதி ஒட்டாததுதான் பாக்கி.”

“சரி சரி. நீ அண்ணியை ஃபோட்டோ எடுத்தியா?”

“இன்னும் இல்லை ண்ணா. அலங்காரம் முடியலை. பத்து நிமிஷம் கழிச்சு வரச் சொன்னாங்க.”

“ஸ்டீஃபன், எதுவும் விட்டுப் போகக் கூடாது. கவனம்.”

“நீங்க கவலையே படாதீங்க. உங்க ஆல்பம் என்னோட பொறுப்பு.” சொல்லி விட்டு ஸ்டீஃபன் நகர மந்திரங்களைத் தொடர்ந்தான் விஜயேந்திரன்.

“பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ!” ஐயரின் குரல் கணீரென்று ஆணையிட சற்று நேரத்திற்கெல்லாம் பெண்கள் கூட்டமாக மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள்.

இத்தனை நேரமும் என்னதான் அந்த இடம் ஆரவாரமாக இருந்தாலும் பெண்ணை அழைத்து வரும் போது இன்னும் கொஞ்சம் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

ஐந்து வருடங்களுப் பிறகான மூன்றாவது தரிசனம். ரயில்வே ஸ்டேஷனில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. கோயில் திருவிழாவில் கண்ணாறப் பார்த்திருந்தாலும் மனதில் ஒரு படபடப்பு. 

ஆனால் இன்று… தனக்கே உரியவளாக, தனக்கு மட்டுமே சொந்தமாக, தன் கனவுகளை எல்லாம் அலங்கரித்த தேவதை தன் அருகே…

பக்கத்தில் அமர்ந்தவளைத் திரும்பிப் பார்த்தான் விஜயேந்திரன். முகத்தில் எந்த உணர்ச்சியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 

செம்பட்டு உடுத்தி இருந்தாள். பெரிய தங்க பார்டர். அலங்காரம் படு பிரமாதமாக இருந்தது. தலை நிறைய மல்லிகைப்பூ. ஆபரணங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை. 

இத்தனை கனமான புடவை, ஒரு கூடைப் பூ, தடிமனான நகைகள். அசௌகரியமாக இருக்காதா? எண்ணத்தின் போக்கு கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றப் பார்வையைத் திருப்பிக் கொண்டான். 

ஆனால் அந்தக் கண்கள் மட்டும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தான் விஜயேந்திரன். 

எல்லா சம்பிரதாயங்களும் ஓய்ந்து ஐயர் தாலியை அவன் கைகளில் கொடுக்க அதை வாங்கியவன் அவள் கழுத்தருகே கொண்டு போனான். 

அவன் எதிர்பார்ப்பு அப்போதும் பூர்த்தியாகாமல்ப் போக அவன் கரங்கள் ஒரிரு கணங்கள் தயங்கியது. சுமித்ராவின் பார்வை சட்டென்று உயர அந்தக் கண்களோடு தன் கண்களைக் கலந்தவன் அதன் பிறகே மூன்று முடிச்சைப் போட்டான்.

அந்தச் சங்குக் கழுத்தில் அவன் கைகள் உரச சுமித்ராவிற்கு லேசாக நடுங்கியது. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போதும், மாலை மாற்றும் போதும் விஜயேந்திரன் நெருக்கத்தைத் தான் காட்டினான். சுமித்ரா கொஞ்சம் திணறித்தான் போனாள்.

கால்விரல் பிடித்து மெட்டி அணிவித்தான். அவள் கைவிரல் பிடித்து அக்னி வலம் வந்தான். சடங்குகள் முடிந்த பிற்பாடு அந்த விரலை அவளாகத்தான் உருவிக் கொண்டாள். அத்தனை சுலபத்தில் அவளை விட்டு அவன் நகரவில்லை. 

ஸ்டீஃபனைக் கண்களால் அழைத்த சுமித்ரா அவன் அருகில் வந்ததும் காதில் ஏதோ முணுமுணுத்தாள். வாய் விட்டுச் சிரித்தான் இளையவன்.

“அண்ணா! எல்லாரும் பார்க்கிறாங்களாம். உங்களைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டாம்.”

“ஏன்? அதை எங்கிட்ட அவங்க சொல்ல மாட்டாங்களாமா?” விதண்டாவாதமாகக் கேள்வி கேட்டாலும் அதன் பிறகு அவளை அவன் சங்கப்படுத்தவில்லை. 

அவள் சங்கோஜம் ரசிக்கத்தக்கதாக இருந்த போதும் அமைதியாகிப் போனான். பக்கத்தில் அவள் நிற்பதே பரம சுகமாக இருந்தது.

திருமண நிகழ்வுகள் இனிதாக நிறைவேற நேராக அரண்மனைக்குத்தான் வந்தார்கள் மணமக்கள். அன்று தான் முதன்முதலாக அரண்மனையைப் பார்க்கிறாள் சுமித்ரா. 

கோதை நாயகி ஆரத்தி எடுத்து முடிக்க வலது காலை உள்ளே எடுத்து வைத்தவள் ஒரு கணம் தயங்கி நின்றாள்.

‘அரண்மனைக்குள்ள காலடி எடுத்து வைக்க உங்க பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு?’ என்றோ கர்ஜித்த குரல் இப்போது அவள் காதுகளில் எதிரொலித்தது.

சட்டென்று விஜயேந்திரன் திரும்பிப் பார்க்க அந்தக் கண்களில் தெரிந்த வலியைச் சமயோசிதமாக மறைத்துக் கொண்டாள்.

பெண் வீட்டாரின் சீர் வரிசைகளும் வந்திறங்கி இருந்தன. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் தான் வைத்திருந்தார்கள். அரண்மனையோடு ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை தான். இருந்தாலும் கோதை நாயகியும் அவர் கணவரும் பெரும்போக்காகவே நடந்து கொண்டார்கள்.

எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, தான் செய்து வைத்திருந்த இருநூறு பவுன் நகையையும் ஆர்க்கிட் தோட்டத்தின் பத்திரத்தையும் பெண் வீட்டார் வசம் ஒப்படைத்திருந்தான் விஜயேந்திரன்.

சீர்வரிசைகளை நோட்டமிட்டு விட்டு அமிழ்தவல்லியின் கண்களில் வந்து போன கேலியைத் தங்களுக்குக் கிடைத்திருக்கும் தங்கம் போன்ற மாப்பிள்ளைக்காகப் பொறுத்துக் கொண்டார்கள் பெண் வீட்டார்.

அரண்மனையிலேயே விருந்து சமைக்கப்பட்டு பந்தி பந்தியாகப் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது. ஊருக்கே விருந்து வைத்தான் அரண்மனைக் காரன். 

மாப்பிள்ளை பந்தா எதுவும் இல்லாமல் பெண் வீட்டாரை நன்றாகவே கவனித்தான் விஜயேந்திரன். பகல் விருந்து முடியும் போதே மணி நான்கைத் தாண்டி இருந்தது. 

புதுப் பெண்ணிற்காக அந்தப் புரத்தில் ஒரு அறையை ஒதுக்கி இருந்தார்கள். அமிழ்தவல்லி தன் மருமகளை எந்த அக்கறை எடுத்தும் கவனித்துக் கொள்ளவில்லை. அதற்காகப் புறக்கணித்தார் என்று சொல்லவும் முடியாது. 

வந்து விட்டாயா? வா. நீ என் விருப்பமில்லாமல் இந்த அரண்மனைக்குள் காலடி எடுத்து வைத்தவள். இருந்தாலும் உன் இடம் இதுதான். உன் இஷ்டப்படி இருந்து கொள் என்று விலகி விட்டார்.

விருந்தினர்கள் சாரை சாரையாக வந்தார்கள், கலைந்து போனார்கள். பகல் விருந்து முடிந்த பின்பு வடிவையும் சங்கரனையும் தவிர பெண் வீட்டார் நடையைக் கட்டி விட்டார்கள். அமிழ்தவல்லியின் ஏளனப் பார்வையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அதற்கு மேல் அவர்களுக்கு இருக்கவில்லை.

கோதை நாயகி விருந்தினர்களைக் கவனிப்பதில் அலைந்து திரிந்ததால் கங்கா தான் அடிக்கடி வந்து சுமித்ராவின் தேவைகளைக் கவனித்துக் கொண்டாள். 

அந்தப் புரத்தில் அவளது அறைக்கு வந்த பின்பு விஜயேந்திரனை சுமித்ரா பார்க்கவில்லை. அலங்காரங்களைக் களைந்த பின்பு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டாள்.

இருள் கவிய ஆரம்பிக்கும் போது வடிவும் கூடக் கிளம்பி விட்டார். சுமித்ராவின் அறைக்குள் வந்தவர் கதவைத் தாள் போட்டு விட்டு அவளருகே வந்து அமர்ந்தார்.

“சுமித்ரா! அரண்மனையோட பழக்கவழக்கங்கள் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு. நீ கொஞ்சம் பார்த்து பதவிசா நடந்துக்கம்மா. உன்னோட அத்தைக்காரியை எந்த ரகத்துல சேர்க்கிறதுன்னு எனக்குப் புரியலை. ஆனா மாப்பிள்ளையோட அத்தை ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. அதனால நீ எதுக்கும் கலங்காத. மாப்பிள்ளை உன்னை நல்லாவே பார்த்துக்குவாரு. அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அத்தை கிளம்பட்டுமா?”

“ம்…” கண்கள் லேசாகக் கலங்கத் தலையை ஆட்டினாள் சுமித்ரா.

“அழக்கூடாது. தைரியமா இருக்கணும்.”

“சரி அத்தை.” வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டிய அனுபவம் இப்போது இதையும் தாங்கலாம் என்று எடுத்துச் சொன்னது.

அத்தையும் கிளம்பிப் போக கொஞ்ச நேரம் வளர் மங்கை வந்து பேசிக் கொண்டிருந்தாள். பொழுது நன்றாகவே கழிந்தது சுமித்ராவிற்கு.

இரவு உணவைப் பெண்கள் அத்தனை பேரும் ஒன்றாக அந்தப் புரத்திலேயே முடித்துக் கொண்டார்கள். ஆண்களுக்கு வேறாக விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். மங்கை சொன்ன தகவல் இது. 

சந்தடி கொஞ்சம் அடங்கிய பிறகு சுமித்ராவின் அறைக்குள் வத்தார் கோதை நாயகி. 

“சுமித்ரா!”

“சொல்லுங்க சித்தி.”

“கல்யாணத்துக்குத் தேதி குறிச்ச கையோட எல்லாத்துக்கும் நல்ல நேரம் குறிச்சுக் குடுத்தாங்க.” சுமித்ராவின் தலை சட்டென்று குனியப் புன்னகைத்துக் கொண்டார் கோதை நாயகி.

“ஆனா ராஜா தான் ஒத்துக்கலை. அதெல்லாம் இப்போ ஒன்னும் அவசரமில்லை. புதிய இடம், புதிய மனுஷங்க. இதையெல்லாம் ஏத்துக்க அவளுக்குக் கொஞ்சம் அவகாசம் குடுங்கன்னு சொல்லிட்டான்.” மனதுக்குள் ஏதோ ஒரு இதம் பரவ புடவைத் தலைப்பை விரல் நுனியால் சுற்றியபடி இருந்தாள் சுமித்ரா.

“நானும் மங்கையும் பக்கத்து அறையில தான் இருக்கோம். ஏதாவது தேவைன்னா கூப்பிடு ம்மா.” 

“சித்தி!”

“சொல்லும்மா.”

“நீங்க உடனேயே உங்க ஊருக்குக் கிளம்பிடுவீங்களா?”

“இல்லை சுமித்ரா. ஒரு வாரம் கழிச்சுத் தான் கிளம்புவேன். நீ எதுக்கும் சங்கடப்படாதே என்ன.”

“சரிங்க சித்தி.” இளையவளின் தலையைத் தடவிக் கொடுத்தவர் புன்னகைத்த படி கிளம்பி விட்டார்.

அன்று முழுவதும் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்த அரண்மனை அப்போது தான் கொஞ்சம் அமைதியாக இருந்தது. ஆங்காங்கே வேலை செய்பவர்களின் ஒன்றிரண்டு குரல்களைத் தவிர எங்கும் ஒரே அமைதி. 

ரூம் கதவைத் திறந்து கொண்டு அந்தப் புரத்தை ஒட்டினாற் போல இருந்த நந்தவனத்துக்குள் போனாள் சுமித்ரா.

வளர்பிறை நாள். மெல்லிய நிலா வெளிச்சம் வானத்தில் தெரிந்தது. பல வகையான வாசப்பூக்கள் நறுமணம் வீசிக் கொண்டிருந்தன. நடுவில் ஒரு அல்லிக் குளம். மெய்யாலுமே நான்கைந்து அல்லிகள் தலை நீட்டிக் கொண்டிருந்தன. 

சீராகப் பேணப் பட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் இந்த இடமே கண்ணைக் கவரும் என்று தோன்றியது சுமித்ராவிற்கு.

“சுமித்ரா!” அந்தக் குரலில் தூக்கிவாரிப் போடத் தடுமாறிய படி திரும்பிப் பார்த்தாள் பெண்.

“ஏய்! மெல்ல மெல்ல. நான் தான்.” காலையில் பார்த்த அதே வேஷ்டி சட்டையில் நின்றிருந்தான் விஜயேந்திரன். 

பழுப்பு வெள்ளையில் இலைப் பச்சைக் கரையிட்ட காட்டன் புடவை. கலைத்து விடப்பட்டிருந்த கூந்தலை உயர்த்திக் கொண்டை போட்டிருந்தாள். உச்சி முதல் பாதம் வரை அந்த மெல்லிய நிலா வெளிச்சத்தில் அவளை ஆசை தீர ஒரு முறை பார்த்தான் விஜயேந்திரன்.

“சுமித்ரா.” மீண்டும் அதே குரல், நிலம் பார்த்திருந்த அவளை ஏதோ பண்ணியது. முதன்முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறான். 

இதே அழைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த இதழ்கள் உச்சரித்திருந்தால் ஒரு வேளை சுமித்ரா பொங்கிப் பூரித்திருப்பாளோ!

“என் மேல கோபமா?” அந்தக் குரல் இப்போது வெகுவாகத் தணிந்திருந்தது. 

“எங்கூடப் பேசு சுமித்ரா. உன்னால இன்னும் என்னைப் புரிஞ்சுக்க முடியலையா?” தணிந்திருந்த குரல் மேலும் கொஞ்சம் இளகிப் போனது.

“கோபம் எல்லாம் இல்லை. லேசான வருத்தம் தான்.” அவள் தன்னைக் குறை கூறுகிறாள் என்பதையும் மறந்து அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை ஒன்று தோன்றியது.

“நான் என்ன பண்ணி இருக்கணும்னு நீ நினைக்கிற?”

“…………”

“உன்னை வந்து பார்த்துப் பேச எனக்கு எத்தனை நேரம் ஆகிடப்போகுது?”

“அப்போ ஏன் அதைப் பண்ணலை?” பக்கத்தில் நின்றிருந்த செடி ஒன்றைப் பற்றிக்கொண்டு அவள் நின்ற தோற்றம் காகிதத்தையும் தூரிகையையும் கையோடு கொண்டு வந்திருக்கலாமோ என்று விஜயேந்திரனை எண்ண வைத்தது.

“வேணாம்னு தான் பண்ணலை.”

“அப்போ வருத்தம் வர்றது நியாயம் தானே?” அவள் மீண்டும் ஆரம்பித்த புள்ளியிலேயே வந்து நின்றாள். விஜயேந்திரன் புன்னகைத்தான்.

“அந்தக் கண் மட்டும் தான் ஆயிரம் கதை பேசும்னு நினைச்சேன். ஆனா நீயும் நல்லாப் பேசுற.” 

“என்னைப் பத்தி எதுவுமே தெரியாது.”

“அவசியமில்லையே.”

“ரெண்டு தரம் பார்த்திருப்பீங்க. அதுவும் முழுசா இல்லை.”

“……………”

“எதை வெச்சு இவ்வளவு பெரிய முடிவெடுத்தீங்க?”

“நீ சொல்லுற எதுவும் காதலுக்குத் தேவையில்லை சுமித்ரா.”

“காதலிக்கிற வயசை நாம தாண்டியாச்சு.”

“அப்படியா சொல்லுற? அத்தனை வயசாகிப் போச்சா நமக்கு?”

“கேலி பேசுற மனநிலையில இப்போ நான் இல்லை.”

“சரி, கேலி பேசலை.‌ காதலிக்கிற வயசை நாம தாண்டலை சுமித்ரா. தாண்ட வெச்சுட்டாங்க. காத்திருக்க வெச்சுட்டாங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னால நாம பண்ண வேண்டியதை இப்போ பண்ணுறோம் அவ்வளவு தான்.”

“அந்த அஞ்சு வருஷத்துல என் வாழ்க்கையில நிறைய விஷயங்கள் நடந்து போச்சு.”

“எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை சுமித்ரா.”

“ஆனா எனக்கு இருக்கே!”

“உனக்கும் இருக்க வேணாம். இருக்கவும் கூடாது. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அவ்வளவு தான்.”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

“ஹா… ஹா… நீ சொல்லவே வேணாம் அம்மு. நீ எங்கிட்ட சொல்ல நினைக்கிறதை எல்லாம் அந்தக் கண் எங்கிட்ட சொல்லிரும். அஞ்சு வருஷத்துக்கு முன்னால கோயில் தூணுக்குப் பின்னாடி நின்னு என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு அந்தக் கண் எங்கிட்டச் சொல்லிடுச்சு.” அவன் சொல்லவும் முகம் சிவந்து போக தலையைக் குனிந்து கொண்டாள் சுமித்ரா. 

விஜயேந்திரனுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. தலை குனிந்து நின்றிருந்தவளைத் தனதாக்க மனம் பரபரத்தது.

“சுமித்ரா! என்னை நிமிர்ந்து பாரு.”

“…………”

“இப்போ நீ பார்க்கலை… நான் உன் பக்கத்துல வர வேண்டி இருக்கும்.” இப்போது சட்டென்று நிமிர்ந்தாள் பெண். 

‘அடேங்கப்பா! நாம பக்கத்துல வர்றதுல எத்தனை ஆர்வமா இருக்கா!’ மனதுக்குள் புலம்பினான் அரண்மனைக் காரன்.

“வீணான விவாதங்கள் குழப்பங்கள் எதுவும் தேவையில்லை சுமித்ரா. நீயும் நானும் ஆசைப்பட்ட வாழ்க்கை இதுதான். காலங் கடந்திருந்தாலும் அது இன்னைக்குக் கைகூடி இருக்கு. நமக்கான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம். புது இடம் புது மனுஷங்க. இதையெல்லாம் ஏத்துக்கக் காலம் எடுத்துக்கோ. ஆனா என்னை அதிகம் காத்திருக்க வெக்காத அம்மு.” 

கரகரப்பான குரலில் சொல்லி முடித்துவிட்டு நந்தவனத்திலிருந்து மாடிக்குப் போகும் வெளித் தாழ்வாரப் படிக்கட்டுகளில் ஏறி மாடிக்குப் போய் விட்டான் விஜயேந்திரன். 

வேஷ்டி நுனியை ஒற்றைக் கையால் உயர்த்திப் பிடித்த படி நடந்து போகும் அவனையே பார்த்திருந்தாள் சுமித்ரா. ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தவனும் இவனும் ஒன்றல்ல. நிறையவே மாறிப் போயிருந்தான். அசைய மறந்து சிலை போல நின்றிருந்தாள் சுமித்ரா.

*************

வழமை போல காலையில் ஐந்து மணிக்கே கண் விழித்து விட்டாள் சுமித்ரா. நல்ல விசாலமான அறை. 

நான்கு பேர் தாராளமாக உறங்கலாம் போல பெரிய கட்டில். கட்டிலின் நான்கு மூலைகளிலும் வேலைப்பாடு கொண்ட மரங்கள் பொருத்தப்பட்டு மெல்லிய வெண்ணிறத் திரை தொங்கியது.

குளியலறை வசதியும் இருந்ததால் நிதானமாகக் குளியலை முடித்துக் கொண்டாள். ஆளுயரப் பெரிய கண்ணாடி. சுற்றி வளைத்து அலங்கார வேலைப்பாடுகளுடன் பெரிதாக சுவரில் பதிக்கப்பட்டிருந்தது.

சாம்பலும் கறுப்புமாகக் கோடுகள் போட்ட பட்டுப்புடவை. பார்டர் சின்னதாக ஆரஞ்சுக் கலரில் இருந்தது. சேலையின் தலைப்பும் அதே கலரில் இருக்க சுமித்ராவிற்கு மிகவும் எடுப்பாக இருந்தது அந்தப் புடவை. 

இடையை அணைத்திருந்த கூந்தலைப் பின்னாமல் விரித்து விட்டிருந்தாள். கண்களில் லேசாக மை தீட்டிக் கொண்டு லேசான ஒப்பனையோடு கண்ணாடியில் முகம் பார்த்த போது, என்றுமில்லா வண்ணம் இன்று அவள் முகம் இன்னும் கொஞ்சம் அழகாகத் தெரிந்தது.

வழக்கம் போல குங்குமத்தை எடுத்தவள் அதை நெற்றிப் பொட்டிலும் வகிட்டிலும் வைத்துக் கொண்டாள். ஸ்டிக்கர் பொட்டு எப்போதுமே அவளுக்குப் பிடிக்காது. 

தேய்த்துக் குளித்த மஞ்சள் வாசமும் நெற்றியில் வைத்த குங்கும வாசமும் தலையை அலங்கரிக்கும் மல்லிகையின் வாசமும் எனத் தன்னை இயற்கை நறுமணங்கள் சூழும்படி பார்த்துக் கொள்வாள்.

கழுத்தில் புதிதாக மின்னிய மஞ்சள்க் கயிறு சுமித்ராவைப் பார்த்துக் கண் சிமிட்டியது. இதுவரை காலமும் கழுத்தில் கிடந்தது அணிந்திருக்கும் நகைகளில் நான்கோடு ஐந்து போலத்தான் கிடந்தது. 

ஆனால் இது… கனமாகத் தொங்கிய கழுத்துத் தாலியை வெளியே இழுத்துப் பார்த்தாள் சுமித்ரா. சாதாரணத் தாலி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அரண்மனை வழக்கப்படி பெரிதாகவும் கனமானதாகவும் இருந்தது. 

பெயருக்கு இதுவரை என் கழுத்தில் தொங்கிய தாலி இல்லை இது. நான்கு சுவருக்குள் நான்கு பெயரை வைத்துக் கட்டிய வெறும் மஞ்சள்க் கயிறும் இல்லை இது.

ஊரைக் கூட்டி உறவைக் கூட்டி ஆண்டவன் சன்னிதானத்தில் அக்கினி வளர்த்து மந்திரம் ஓதி நல்ல நேரம் பார்த்துக் கட்டிய தாலி.

இந்தத் தாலி புதிதாக ஒரு உறவை எனக்குக் கொடுத்திருக்கிறது. சில கடமைகளை எனக்கு விதித்திருக்கிறது. சிந்தனையின் போக்கில் லேசாகத் தலை பாரமானது சுமித்ராவிற்கு.  

முதல் நாளே சுமித்ராவின் அத்தனை பொருட்களையும் அங்கிருந்த கப்போர்டில் அடுக்கி வைத்திருந்தார் வடிவு. செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல்ப் போக நந்தவனத்தை எட்டிப் பார்த்தாள். 

இருள் லேசாகப் பிரிய ஆரம்பித்திருந்தது. வேலை செய்பவர்களின் நடமாட்டம் கண்ணுக்குப் புலப்பட்டதால் கதவைத் திறந்து கொண்டு அந்தப் புல் வெளியில் கால் பதித்தாள்.

சூரியன் இன்னும் தன் வெப்பக் கதிர்களை அந்தப் புற்களின் மேல் பாய்ச்சாததால் ஆங்காங்கே பனித்துளிகள் மின்னிக் கொண்டிருந்தன. பொடி நடையாக நந்தவனத்தை வலம் வந்து கொண்டிருந்தாள்.

“அம்மா!” அந்தக் குரலில் திரும்பினாள் சுமித்ரா. கங்கா நின்றிருந்தாள்.

“என்ன கங்கா?”

“ஐயா கூப்பிட்டாங்கம்மா.”

“எங்கே?”

“மாடிக்கு.”

“ஓ…”

“வாங்கம்மா.” கங்கா முன்னே செல்லப் பின் தொடர்ந்தாள் சுமித்ரா. நேற்று இரவு தன்னோடு பேசிவிட்டு விஜயேந்திரன் ஏறிப்போன அதே மாடிப்படிகள்.

படிகள் முடியும் இடத்தில் விஜயேந்திரன் நின்றிருக்க கங்கா திரும்பிப் போய் விட்டாள். வெள்ளை நிற இரவு உடையில் தலை லேசாகக் கலைந்திருக்க இவளையே பார்த்தபடி நின்றிருந்தான். சுமித்ராவிற்கு என்னவோ போல் இருந்தது.

“குட்மார்னிங் சுமித்ரா.”

“குட்மார்னிங்.”

“மேலே வா.” அவன் அழைக்கவும் மேலே ஏறிப் போனாள். மாடியிலிருந்த அந்தக் குட்டித் தோட்டம் அழகாக இருந்தது. பல நிற ரோஜாக்களும் தலை நீட்டித் தங்கள் இருப்பைக் காட்டின.

“காலையிலேயே குளிச்சாச்சா?”

“ம்… பழகிடுச்சு.” அவன் கை அவள் புறமாக நீண்டு அந்தக் கற்றைக் கூந்தலைத் தொடப் போக சட்டென்று விலகினாள் சுமித்ரா.

“ஹேய் அம்மு. சாரி சாரி. பட்டு மாதிரி இருந்ததா… அதான் தொட்டுப் பார்க்கத் தோணிச்சு. சாரி டா.” உரிமை எடுக்காமல் அவன் இறங்கி வரவும் சுமித்ராவிற்குத் தான் என்னவோ போல் ஆனது. 

“இல்லையில்லை… பரவாயில்லை. நான் தான் ஏதோ…” தடுமாறியவளைப் புரிந்து கொண்டவன் பேச்சை மாற்றினான். 

“வா அம்மு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுறேன்.” நேற்றிலிருந்து அவளை அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தான். பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த ‘அம்மு’ அவன் வாயில் சரளமாக வந்தது.

ஒவ்வொரு இடமாக அவளை அழைத்துச் சென்றவன் அந்த இடங்கள் எதற்காக உபயோகிக்கப் படுகின்றன என்று விளக்கிக் கொண்டே வந்தான். 

இரண்டு விசாலமான கூடங்கள் காணப்பட்டன. முக்கியமான கலந்துரையாடல்கள், அரண்மனைக் காரர்கள் பேட்டி கொடுக்க என்று அந்த இடங்கள் பாவனையில் இருந்தன.

அடுத்து விஜயேந்திரனின் அறை. அதையடுத்து விருந்தினர் அறைகள். இறுதியாகப் பெரிதாக ஒரு லைப்ரரி. இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கையில் காஃபியோடு கங்கா வந்தாள். 

“கங்கா!”

“சொல்லுங்க ஐயா.”

“சுமித்ராக்குப் பூ கொண்டு வா.”

“சரிங்கய்யா.” காஃபியை அவர்களிடம் கொடுத்தவள் திரும்பிப் போக,

“மங்கை வைக்கிற அளவு இல்லை. சுமித்ராவோட முடியைப் பார்த்தேயில்லை. அதுக்கு ஏத்தா மாதிரி நிறையக் கொண்டு வா.” என்றான்.

“சரிங்கய்யா.” ஒரு சிரிப்போடு நகர்ந்தாள் கங்கா. அவன் கண்கள் இப்போதும் அவள் கூந்தலில் தான் அலைந்தது.

“வா அம்மு.” அவளை அழைத்துக் கொண்டு லைப்ரரிக்குள் போனான் விஜயேந்திரன்.

“நான் அரண்மனையில இருக்கும் போது பெரும்பாலான என்னோட நேரம் இங்க தான் கழியும். ரெண்டு மூனு தலைமுறையாச் சேகரிச்ச அத்தனை புத்தகங்களும் இங்க தான் இருக்கு. உனக்குப் பொழுது போகலைன்னாத் தாராளமா இங்க வந்து படி.” 

“ம்… ஆனா…”

“என்ன அம்மு?” அவள் எதையோ சொல்லத் தயங்கவும் அவசரமாகக் கேட்டான் விஜயேந்திரன். 

“எனக்கு… டெய்லி டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணணும். பழகிடுச்சு. சேர்ந்தாப்போல நாலு நாள் பண்ணலைன்னா கஷ்டமா இருக்கும்.”

“ஓ… இவ்வளவு தானா? நோ ப்ராப்ளம். கீழே வேணாம். இங்கே அதுக்கு ஏற்பாடு பண்ணிக் குடுக்கிறேன். உனக்கு எப்போ தோணுதோ அப்போ எல்லாம் வந்து ப்ராக்டிஸ் பண்ணிக்கோ.” அவள் கையிலிருந்த காலிக் கோப்பையை வாங்கியவன் வெளியே போய் விட்டான்.

சுவர் முழுவதும் ஷெல்ஃப் அடித்துப் புத்தகங்கள் பெயர் வாரியாக அடுக்கப்பட்டிருந்தன. பெரிய அலமாரிகளிலும் புத்தகங்கள் அடுக்கப் பட்டிருந்தன. 

அறையின் இன்னொரு மூலையில் ஸ்டான்ட் ஒன்றில் காகிதங்கள் பொருத்தப் பட்டிருந்தன. அதன் மேல் திரையொன்று தொங்க பின்னாலிருப்பது ஓவியம் என்று புரிந்தது சுமித்ராவிற்கு.

ஆவல் மேலிட அந்தத் திரையை விலக்கினாள் சுமித்ரா. கோவில் தூணிற்குப் பின்னால் நின்றபடி தலையை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். அன்று அவள் உடுத்தியிருந்த அதே மஞ்சள் வண்ணப் புடவையையும் அவன் விட்டு வைக்கவில்லை.

சுவாசம் கொஞ்சம் சிக்கிக் கொள்ள ஏதோ ஒரு உணர்வு உந்தித் தள்ளத் திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா. லைப்ரரிக்கு வெளியே இருந்த வராண்டாத் தூணில் சாய்ந்த படி இவளையே பார்த்திருந்தான் விஜயேந்திரன். கையில் பாதி மலர்ந்த மல்லிகை மொட்டுக்கள் இறுக்கமாக் கோர்க்கப்பட்டு இவள்க் கூந்தல்க் காட்டில்க் குடியேற நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

 

என்ன செய்ய நானும் ஓர் தோல்ப் பாவைதான்…

உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல்ப் பாவைதான்.

 

error: Content is protected !!