SST– EPI 17
SST– EPI 17
அத்தியாயம் 17
மலாக்கா மாநிலம் கலாச்சாரப் பாரம்பரியங்களையும் வரலாற்று சிறப்புகளையும் கொண்ட மாநிலமாகும். பரமேஸ்வரா எனும் சிற்றரசனால் 1402ல் உருவாக்கம் பெற்றது இம்மாநிலம். கடல் கடந்து பல வணிகர்கள் இங்கே வணிகம் புரிய வந்தார்கள். பல நாடுகள் இந்த மாநிலத்தை அடைய விரும்பியதால் பல போர்களும் நடந்தன. எல்லா கஸ்டங்களையும் கடந்து, பலதரப்பட்ட கலப்பு மணங்களைக் கண்டு இன்றும் கம்பீரமாக நிற்கிறது மலாக்கா.
அழகாக விடிந்தது அன்றைய சனிக்கிழமைப் பொழுது. எப்பொழுதும் போல குருவின் மேசேஜில் தான் கண் விழித்தாள் மிரு.
“ஹெப்பி மார்னிங் மமி மரு”
“ஹெப்பி மார்னிங் பாஸ்”
“சீ யூ லேட்டர்”
“யெஸ் பாஸ்” என அனுப்பியவள் உற்சாகமாக எழுந்து அன்றைய வேலைகளை முடித்தாள். அதன் பிறகு நிதானமாக தலையை அலசி குளித்து விட்டு வந்தவள், ட்ரீ குவாட்டர் ஜீன்சை போட்டுக் கொண்டாள். ஆபிசில் கொடுத்த சிவப்பு நிற போலோ டீ சர்டை கையில் எடுத்து ரசித்துப் பார்த்தாள் மிரு. டீ சர்டின் முன்னே இருந்த பாக்கேட்டின் மேல் ஜிபி ஐடி சொலுஷன் என ப்ரின்ட் செய்யப்பட்டிருந்தது. முதுகு பகுதியில் ஆபிசில் வேலை செய்யும் அனைவரின் ஷார்ட் நேமும் தூவி விட்டது போல ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்தது. மிரு என எழுதி இருந்த தன் பெயரை ஆசையாகத் தடவிக் கொடுத்தாள் மிரு. அவளின் பெயருக்கு மேல் குருவின் பெயர் இருந்தது. ஒரே ரு வைத்து குருவும் மிருவும் இணைக்கப்பட்டிருந்தது. எல்லோருடைய பெயரும் அப்படித்தான் சில பல எழுத்துக்களால் இணைக்கப்பட்டு பார்க்கவே அழகாக இருந்தது. டீ சர்டை அணிந்துக் கொண்டவள், அம்மாவையும் தம்பியையும் எழுப்பினாள்.
அன்று காலையில் மூவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்கள்.
“கணே, அம்மாவ பாத்துக்கோ. ரெண்டு பேரும் கவனமா இருங்க”
“நாங்க நாலு சுவத்துக்குள்ள பத்திரமாத்தான் இருப்போம். நீ கவனமா இருக்கா!”
“ஆமாடி மிரு. தனியா எங்கயும் போகாதே! அந்தப் பொண்ணு ரீனா கூடவே இரு. பத்திரம்டி”
“சரிம்மா!” என தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டவள், தனது குட்டி பேக்கை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள். அவள் பின்னாலேயே வந்த கணே தலையை சொரிந்துக் கொண்டு மிருவை ஒரு மாதிரி பாவமாகப் பார்த்தான்.
“பாவ மூஞ்ச காட்டாதடா! அங்கிருந்து என்ன வேணும் உனக்கு?” என அவனின் ஒவ்வொரு செயலையும் அறிந்திருந்தவள் கேட்டாள்.
“பைனேப்பள் தார்ட் அங்க நல்லா இருக்குமாம். என் கிளாஸ் மேட் போன தடவை வாங்கிட்டு வந்தான். அப்படியே வாயில கரையுது தெரியுமாக்கா! ப்ளிஸ் வாங்கிட்டு வாயேன்”
“அம்மா இனிப்பு சாப்பிடக் கூடாதுன்னு தெரியும் தானே. குட்டி டப்பால வாங்கிட்டு வரேன், ஒளி வச்சு சாப்பிடு!” என்றவள் அவன் தலையைக் கலைத்து மூக்கைத் திருகி விட்டு சிரித்தாள்.
“பாய் அக்கா”
“பாய்டா”
முதன் முறையாக பல பேரோடு ஒருத்தியாக பயணம் போகிறாள். மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. குடும்பப் பொறுப்பு என முதுகில் கட்டி இருந்த தளையை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு தன் வயதுகேற்ற துள்ளலுடன் காரை ஸ்டார்ட் செய்தாள் மிரு.
குருவை ஏற்றும் போது கூட சிரித்த முகமாக இருந்தாள் அவள்.
“என்ன முகம் பளபளன்னு பளிச்சுன்னு இருக்கு?” என கேட்டான் குரு.
“அவுட்டிங் போறோம்ல அதான் பாஸ்!”
“நாம போறது மலாக்காத்தான் மிரு, மால்டிவ்ஸ் இல்ல” புன்னகைத்தான் குரு.
“மனசுல சந்தோசத்தோட பாத்ரூம் போறது கூட பாரிஸ் போறது மாதிரிதான் பாஸ். அந்த நேரத்துல நம்ம மனசு என்ன நிலையில இருக்குன்றது தான் முக்கியம், போற இடம் முக்கியம் இல்ல!”
வாய் விட்டு சிரித்தான் குரு. எப்பொழுதும் போல அவன் சிரிக்கும் போது டாலடிக்கும் பல் வரிசையை திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் சாலையில் கவனத்தை வைத்தாள் மிரு. இவளைப் போலவே அவனும் ஆபிஸ் டீ சர்ட் தான் போட்டிருந்தான். காக்கி ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். கருப்பு வண்ணத்தில் ஸ்போர்ட்ஸ் காலணி போட்டிருந்தான்.
எப்பொழுதும் போல காரை ஆபிஸ் வளாகத்தில் பார்க் செய்தவர்கள், கட்டிடத்தின் கீழே அனைவரும் ஒன்று கூடும் படி சொல்லி இருந்த இடத்துக்கு சென்றார்கள். ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாரும் வந்து சேர்ந்திருந்தார்கள். மோனிக்கா அட்டெண்டன்ஸை செக் செய்து விட்டு,
“ஆர் யூ காய்ஸ் ரெடி டூ ராக் மலாக்கா?” என சத்தமாகக் கேட்டாள்.
“யெஸ்” என எல்லோருடைய உற்சாகக் குரலும் சேர்ந்து ஒலித்தது.
அதற்குள் ஏற்பாடு செய்திருந்த பஸ்சும் வந்திருந்தது. அதில் ஏறி அவரவர் இஸ்டம் போல் அமர்ந்தனர். மிரு ரீனாவின் அருகே அமர்ந்துக் கொண்டாள். ரீனா ஏற்கனவே டீம் போண்டிங் போயிருந்ததால், போன தடவை நடந்த நிகழ்வுகளை வாய் ஓயாமல் பேசியபடி வந்தாள்.
குரு மிருவின் டீம் லீட் பக்கத்தில் அமர்ந்திருந்தான். இரண்டரை மணி நேர பயணம் ஒரே சலசலப்பும், கூச்சலும், விளையாட்டுமாய் போனது. ரீனாவும் அவர்களுடன் எல்லாம் சேர்ந்து அடித்த லூட்டியை சிரித்த முகத்துடனே பார்த்திருந்தாள் மிரு. அவள் தான் அங்கே ஜீனியர். வயதிலும் சரி, வேலைக்கு சேர்ந்ததிலும் சரி. அதனால் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது அவளுக்கு.
குரு ஒரு புன்னகையுடன், கண் மூடி சீட்டில் சாய்ந்து விட்டான். அனைவரிடமும் அவன் நன்றாக பேசிப் பழகினாலும், முதலாளி என்பதால் சின்ன கேப் இருக்கத்தான் செய்தது. இவன் விழித்திருந்தால் மற்றவர்கள் சகஜமாக பேசிப் பழக மாட்டார்கள் என்பதால் தான் கண் மூடி படுத்து விட்டான். காதில் மாட்டி இருந்த இயர்போனில் ஸ்வர்ணலதா பாடிக் கொண்டிருந்தார். ஆம் ஸ்வர்ணலதாதான்!
பஸ் இவர்கள் போக வேண்டிய ரிசார்டை அடைந்ததும், அனைவரும் சலசலத்தபடி கீழே இறங்கினார்கள். மோனிக்கா புக் செய்திருந்த ரிசார்ட் மலாக்காவின் நுழை வாயிலிலேயே இருந்தது. அங்கிருந்து இன்னும் அரை மணி நேரம் பயணித்தால் தான் மலாக்கா டவுன் வரும்.
ரிஷப்சன் அருகே எல்லோரும் தத்தம் பயணப் பைகளுடன் நின்றிருந்தார்கள். பச்சை பசேலென, அருவி நீர் சலசலக்க அவ்விடமே குளு குளுவென இருந்தது. மூங்கிலால் கட்டப்பட்டிருந்த தங்கும் இடங்களையும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களையும் பிரமிப்புடன் பார்த்திருந்தாள் மிரு. நன்றாக ஆழ மூச்செடுத்து சுத்தமான காற்றை தனக்குள்ளே அனுப்பியவளுக்கு செல்கள் எல்லாம் புது பிறப்பெடுத்தது போல சிலிர்த்துப் போனது.
“மிரு!”
“ஹ்ம்ம்ம்”
“கீ கார்ட் கிடைச்சிருச்சு. வா போகலாம்!” என ரீனா உசுப்பவும் தான் தன்னிலை அடைந்தாள் மிரு.
ஆண்கள் நான்கு நான்கு பேராக பெரிய குடிலிலும், பெண்கள் இருவர் இருவராக சின்ன குடிலிலும் தங்க வைக்கப் படுவார்கள் என ஏற்கனவே மோனிக்கா சொல்லி இருந்தாள். குருவுக்கு தனியாக ஒரு குட்டி குடில் கொடுக்கப்பட்டது.
“காய்ஸ்! எல்லோரும் பதினைஞ்சு நிமிஷத்துல மீட்டிங் ரூமுக்கு வந்துருங்க.” என சொல்லி அனுப்பினாள் மோனிக்கா.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட குடிலுக்கு வந்த மிரு அசந்துப் போனாள். மூங்கிலாலும் மரப்பலகையாலும் செய்யப்பட்டிருந்த அந்த குடில் மிக அழகாக இருந்தது. கிங் சைஸ் கட்டில் ஒன்று நடுநாயகமாக வீற்றிருந்தது. இரண்டு நாற்காலிகள், குட்டி மேசை, மினி ப்ரிட்ஜ் என சகல வசதிகளுடன் இருந்தது அந்தக் குடில்.
“ரொம்ப அழகா இருக்குல்ல ரீனா? வருஷா வருஷம் செம்மையா எஞ்சாய் பண்ணறீங்க நீங்கலாம்”
“இந்த வருஷம் தான் இப்படி ரிசார்ட்கு வந்துருக்கோம். போன தடவைலாம் நார்மல் ஹோட்டல்ல தான் டீம் போண்டிங் நடந்தது மிரு. எல்லா வசதியும் இருக்கும் ஆனா இந்த மாதிரி ஜிலு ஜிலு குளு குளுலாம் இல்ல. இந்த ப்ளேஸ் இதான் ஃபர்ஸ்ட் டைம். செம்மையா இருக்கு.”
பேக்கை மூலையில் கடாசிய ரீனா பொத்தென கட்டிலில் சாய்ந்தாள். அவளைப் போலவே மிருவும் அவள் பக்கத்தில் சாய்ந்துக் கொண்டாள்.
“புள்ளக்குட்டி, புருஷன், மாமியார், மாமனார் இவங்க எல்லாம் இல்லாம நமக்கே நமக்குன்னு இப்படி தனியா வரது எவ்ளோ நல்லாருக்குத் தெரியுமா மிரு? ஷப்பாடான்னு இருக்கு. இங்க அம்மா, வைப், மருமக இப்படி எந்தப் பொறுப்பும் இல்லாம நான் நானா, வெறும் ரீனாவா இருக்கப் போறேன். போனை அடைச்சுப் போட்டுட்டேன். இன்னிக்கு மட்டும் என்னை தொந்தரவு பண்ணாதிங்கன்னு ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லிட்டேன்.” என்றவள்,
“மெர்டேக்கா(சுதந்திரம் மலாயில்)” என கத்தினாள்.
மிருவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“என்ன சிரிப்பு? சிங்கிளா இருக்கல்ல அந்தக் கொழுப்பு உனக்கு” என்றவள் பக்கத்தில் இருந்த தலையணையால் மிருவைப் போட்டு மொத்தினாள். இவளும் இன்னொரு தலையணையை எடுத்து ரீனாவை மொத்தினாள். கத்தலும் கூச்சலுமாக இருவரும் அடித்துக் கொண்டார்கள். பத்து நிமிடங்கள் விளையாட்டில் கழிந்திருக்க அவசர அவசரமாக மீட்டீங் ஹாலுக்கு ஓடினார்கள் இருவரும்.
இவர்கள் போவதற்குள் எல்லோரும் வந்திருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியம் ஆனார்கள் இருவரும். ஆரம்ப நிகழ்ச்சியாக குருவின் ஸ்பீச் இருந்தது. நாற்காலி மேசையெல்லாம் ஏற்கனவே ஓரமாக நகர்த்திப் போடப்பட்டிருந்தன. இவர்கள் எல்லோரும் அப்படியே கார்ப்பேட் தரையில் அமர்ந்துக் கொண்டார்கள். அவர்கள் முன்னே வந்து நின்ற குரு, மெல்லிய புன்னகை ஒன்றை முகத்தில் படரவிட்டான்.
“பாஸ், செம்ம ஹேன்ட்சமா இருக்காருல்ல” மெல்லிய குரலில் மிருவின் காதோரம் ஜொள்ளினாள் ரீனா.
“வீட்டுல உன் ஆத்துக்காரு புள்ளைக்கு இந்நேரம் பேம்பர்ஸ் மாத்திட்டு இருப்பாரு. நீ இங்க வந்து பாஸ்ச சைட் விடற!”
“போடி! இன்னிக்கு நான் வெறும் ரீனா மட்டும்தான். யார வேணும்னாலும் சைட் அடிப்பேன், யாரும் கேட்க கூடாது.”
“சைட் அடிக்கற மாதிரி நம்ம பாஸ் கிட்ட என்னடி இருக்கு?”
“என்ன இல்லன்னு கேளு! ஆர்ம்ஸ் பாத்தல்ல, அங்க ஊஞ்சல் கட்டி ஆடலாம்! ச்சேஸ்ட் பாத்தல்ல, அங்க கூடு கட்டி வசிக்கலாம். கண்ண பாத்தல்ல, அங்க கப்பல் விட்டு நீந்தலாம். கன்னம் பாத்தால்ல, அங்க சோறு போட்டு சாப்பிடலாம்.”
அவள் சொல்ல சொல்ல இவளும் குருவை ஆராய்ச்சியாய் நோக்கினாள்.
“லிப்ஸ் பாத்தல்ல, அங்க..”
“பாய்சன் ஊத்திக் குடிக்கலாமா?” சிரிப்புடன் கேட்டாள் மிரு.
“ஹ்கும்.. அங்க தேன் ஊத்திக் குடிக்கலாம். மண்டு, மண்டு! சைட் கூட அடிக்கத் தெரியல, ஏழேழு ஜென்மத்துக்கும் நீ சிங்கிள் தான் மிரு”
இவளுக்கு சிரிப்பாக இருந்தது.
“மிரு” சத்தமாக அவள் பெயர் கேட்கவும் பதறி அடித்து எழுந்து நின்றாள் மிரு.
குருதான் அழைத்திருந்தான். முன்னே வரும்படி சைகை செய்தான்.
‘இவ்ளோ நேரம் என்ன பேசனான்னு தெரியலயே! இப்போ எல்லார் முன்னுக்கும் எதுக்கு முன்ன வர சொல்றான்னு புரியலையே’
எழுந்து அவன் அருகே போய் நின்றாள் மிரு.
“மீட் மிரு! நம்மளோட டீம்ல கடைசியா ஜாய்ன் பண்ணவங்க. வெல்கம் டூ அவர் டீம் மிரு” என ஆபிசியலாக வரவேற்றான் குரு. எல்லோரும் கைத்தட்ட புன்னகையுடன் அந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டாள் மிரு.
“கூப்பிட கூப்பிட விளங்காத அளவுக்கு என்ன கதை மிரு அங்க?” என மெல்லிய குரலில் கேட்டான் குரு.
“இல்ல, உங்க லிப்ஸ்ல” என தொடங்கியவள் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
“என் லிப்ஸ்ல என்ன?” என கேட்டவன் உதட்டைத் தடவிப் பார்த்தான்.
“உங்க லிப்ஸ்ல இருந்து வரப்போ மட்டும் எப்படி சாதாரண வார்த்தை கூட பவர்புல்லா மாறுதுன்னு பேசிட்டு இருந்தோம்” என சமாளித்தவள் மறுபடியும் ரீனா அருகில் போய் அமர்ந்துக் கொண்டாள்.
அதன் பிறகு அவர்களின் டீம் போண்டிங் அக்டிவிட்டிஸ் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் எல்லோரையும் நான்கு குழுக்களாக பிரிக்க ஒரு விளையாட்டை வைத்தார்கள். கண்ணாடி ஜாரில் இருந்த குட்டி தாளை எடுக்க சொல்லிப் பணிக்கப்பட்டார்கள் அனைவரும். அந்தத் தாளில் மிருகங்களின் பெயர் எழுதி இருந்தது. வாய் திறந்து பேசாமல் அந்த தாளில் இருந்த மிருகம் போல் கத்திக் கொண்டே அவர்களின் மற்ற டீம் மெம்பரை கண்டுப் பிடிக்க வேண்டும். மிருவுக்கு நாய் கிடைக்கவும், லொள் லொள் என குரைத்துக் கொண்டே, வேறு யாரும் குரைக்கிறார்களா என தேடி அவர்களிடம் போய் இணைந்துக் கொண்டாள். நாய், பூனை, மாடு, ஆடு என கலவையான ஒலிகளும் சிரிப்பு சத்தமும் அந்த அறையையே நிறைத்தன.
இவளது குழுவில் குருவும் இருந்தான். ரீனாவோ இன்னொரு குழுவுக்குப் போயிருந்தாள்.
‘நாய் மாதிரி குரைக்காமலே எப்படி நம்ம டீமுக்கு வந்தாரு பாஸ்? ஒரு சமயம் குணத்தைப் பார்த்து மோனிக்கா இந்த நாய் டீம்ல சேர்த்து விட்டாளோ?’ என நினைத்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவனைப் பார்த்ததும் இவள் புன்னகைக்க அவனும் புன்னகைத்தான். எல்லா விளையாட்டுகளையும் எச்.ஆரே நடத்தினார்கள். முதல் விளையாட்டுக்கு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க சொன்னார்கள். மிருவின் குழுவில் எல்லோரும் குருவையே தலைவனாக்கி விட்டார்கள்.
முதல் அக்டிவிட்டியாக தலைவனைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் கருப்புத் துணியால் கண்ணைக் கட்டி விட்டார்கள். மற்றவர்கள் எல்லோரும் வரிசையாக ஒருத்தர் கையை மற்றவர் பிடித்துக் கொள்ள வேண்டும். முன்னால் இருப்பவரை தலைவன் அழைத்துப் போக, சங்கிலி போல மற்றவர்களும் தொடர வேண்டும். ஒரு தலைவனின் தலைத்துவமும், தன் கீழ் உள்ளவர்களை அவன் எப்படி கைட் செய்ய வேண்டும் என்பதை போதிப்பதே இந்த விளையாட்டின் சாராம்சம்.
குரு கண்ணைக் கட்டாமல் நின்றிருக்க, மிருவும் மற்றவர்களும் தற்காலிகமாக குருடாக்கப்பட்டார்கள். அவர்களின் குழுவில் இரு ஆண்கள் மட்டுமே இருக்க குரு முன்னேயும் இன்னொருவன் ஆக கடைசியாகவும் நின்றுக் கொண்டான். மற்ற பெண்கள் எல்லோரும் வேறினத்தவர்கள் ஆதலால் குருவின் பின்னால் மிருவை நிற்க வைத்து விட்டார்கள். பல இன மக்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், குழுக்களாக செயல் படும் போதோ, யுனிவெர்சிட்டியில் அசைண்ட்மெண்ட் செய்யும் போதோ தங்கள் இனத்தவரையே நாடுவது வெகு சகஜம் இந்நாட்டில்.
கண் கட்டி இருந்த மிருவின் கையை விரலோடு விரல் சேர்த்து உன்னை விட மாட்டேன் என்பது போல இறுக்கமாக பற்றிக் கொண்டான் குரு. நான்கு குழுக்களும் ரெடியாக, மீட்டிங் ஹாலின் கதவு திறந்து விடப்பட்டது.
“எந்த டீம் நாங்க போட்டு வச்ச பாதையில நடந்து போய் சீக்கிரம் இந்த மீட்டிங் ஹாலுக்கு வந்து சேரறாங்களோ, அவங்கத்தான் வின்னர்” என அறிவித்தாள் மோனிக்கா. விசில் ஊதப்பட நான்கு குழுக்களும் வெளியே நடக்க ஆரம்பித்தார்கள்.
குரு மிருவிடம் டர்ன் ரைட், டர்ன் லெப்ட், என்று சொல்லியபடியே கைப்பிடித்து நடக்க வைக்க இவள் அதையே தான் கைப்பிடித்து அழைத்து வரும் ஆளுக்கு சொன்னாள். அப்படியே முன்னால் உள்ளவர் பின்னால் உள்ளவரை கைட் பண்ண மெதுவாக நடந்துப் போனது இவர்கள் குழு.
கண் மூடி இருப்பதால் மற்ற புலன்கள் விழித்துக் கொள்ள மெதுவாக நடையிட்டாள் மிரு. குளிர்ந்த காற்று முகத்தில் மோத, காலடியில் சரசரக்கும் காய்ந்த இலைகள் சத்தம் எழுப்ப, அவர்கள் போகும் பாதையில் இருந்த பூச்செடிகளின் வாசம் நாசி நிறைக்க, குருவின் கை சூடு உள்ளங்கையை கிச்சு கிச்சு மூட்ட ஒரு வித மோன நிலையில் இருந்தாள் மிரு. சென்(zen) நிலையில் நடந்தவள், குரு லெப்ட் என சொன்னது கேட்காமல் நேராக நடந்துப் போனாள். இவர்களுக்கு நேராக பெரிய செடி ஒன்று இருக்க அழுத்தமாக மிருவின் கைப்பற்றி தன் பக்கம் இழுத்தான் குரு. கால் தடுக்கி அவள் அவன் மேல் விழ அவளை தாங்கிப் பிடித்தவனும் மல்லாக்க விழுந்திருந்தான். மிருவின் பின்னால் இருந்தவள் மிரு மேல் விழ என வரிசையாக எல்லோரும் கீழே விழுந்துக் கிடந்தார்கள். கீழே கிடந்த குருவை தொட்டுத் தடவிப் பார்த்தவள்,
“மலாக்கா வந்து இப்படி மல்லாக்க விழுந்துட்டீங்களே பாஸ்” என மெல்லிய குரலில் சொல்லி சத்தமாக சிரித்தாள். இவள் சிரிப்பதைக் கேட்டு மெல்ல எழுந்த மற்றவர்களும் கீழே விழுந்ததை எண்ணித்தான் சிரிக்கிறாள் என கூட சேர்ந்து சிரித்தார்கள்.
“ஆவ்வ், வலிக்குது பாஸ்”
“என்னைக் கீழ தள்ளிட்டு சிரிக்க வேற செஞ்சல்ல அதுக்குத்தான் இந்த தண்டனை” என மிருவின் உதட்டைக் கிள்ளி இருந்தவன் புன்னகை குரலில் சொன்னான்.
இவர்கள் குழுதான் கடைசியாக மீட்டிங் ஹாலுக்குப் போய் சேர்ந்தார்கள். அதில் அவர்கள் யாருக்கும் வருத்தம் இல்லை. சின்னப் பிள்ளைகள் போல கீழே மேலே விழுந்து எழுந்து வந்ததில் முகத்தில் சிரிப்புத்தான் இருந்தது.
அடுத்த விளையாட்டுக்காக நியூஸ் பேப்பர் வந்தது. நான்கு குழு இப்பொழுது எட்டு குழுவாக பிரிந்தார்கள். யாரும் அறியாமல் மிருவை தன் குழுவுக்குள் இழுத்துக் கொண்டான் குரு. ஆட்சேபணையாகப் பார்த்தாலும் அவனுடனே நின்றுக் கொண்டாள் மிரு.
மியூசிக் ஓடும் போது ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று போட்டு இருக்கும் பேப்பரை சுற்றி நடக்க வேண்டும். மியூசிக் நிற்கும் போது எல்லோரும் பேப்பரில் ஏறி நின்றுக் கொள்ள வேண்டும். அடுத்த ரவுண்ட் போகும் போது பேப்பர் பாதியாக ஆக்கப்படும். மறுபடியும் மியூசிக் போகும். அது நிற்கும் போது அடித்துப் பிடித்து பேப்பரில் நிற்க வேண்டும். யாருக்கு இடம் கிடைக்கவில்லையோ அவர்கள் கேமில் இருந்து அகற்றப்படுவார்கள்.
சிரிப்புடனே அனைவரும் இடித்துப் பிடித்து தள்ளிக் கொண்டு விளையாடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பேப்பர் சிறிதாக ஆக்கப்பட்டுக் கொண்டே வந்தது. குருவின் குழுவில் கடைசியாக மிருவும் குருவும் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். பேப்பரோ இரண்டு கால்கள் வைக்கும் அளவுக்கு கிழிக்கப் பட்டிருந்தது. மற்றவர்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து மிஞ்சி இருந்தவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் பக்கம் இருந்தவர்கள் பாஸ் ஆகிப் போனதால் குருவுக்கு ச்சியர் பண்ண, மிருவுக்கு அவனை எப்படியாவது வெல்ல வேண்டும் என வெறியே வந்தது. அவள் தீவிரமான முகத்தைப் பார்த்த குருவுக்கோ புன்னகை அரும்பியது.
“விட்டுக் குடுக்கவா மிரு?” என வம்பிழுத்தான் குரு.
“தேவையில்ல பாஸ். நானே ஜெயிப்பேன். மிருவா கொக்கா!” என சிலிப்பிக் கொண்டாள். நண்பி ஆகி விட்டாளே என ரீனா மட்டும் ‘மிரு, மிரு’ என குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
மியூசிக் ஆரம்பிக்க, மிஞ்சி இருந்தவர்கள் பேப்பரை சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள். குருவும் மிருவும் தங்கள் பேப்பரில் கண்ணையும், மியூசிக்கில் காதையும் வைத்தவாறே நடந்தார்கள். மியூசிக் நிற்க, பேப்பரில் குரு இடது காலை வைத்திருக்க, மிரு வலது காலை வைத்திருந்தாள். மறு பக்க காலை இருவருமே மடித்து நின்றிருந்தார்கள். கீழே விழுந்து விடாமல் இருக்க இவள் அவன் கையைப் பற்றிக் கொள்ள அவன் இவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். இருவருமே அவுட் ஆகாமல் தப்பித்தார்கள். மற்ற குழுக்களில் எல்லாம் ஒருவர் மற்றவரைத் தள்ளிவிட்டு ஒத்தையாக வென்றிருக்க, இவர்கள் மட்டும்தான் இருவராக நின்றிருந்தார்கள்.
இருவரில் ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியும் என சொன்ன மோனிக்கா, அந்த பேப்பரை ஒற்றைக் கால் மட்டுமே வைக்க முடியும் அளவுக்கு கிழித்து விட்டாள். மற்ற எல்லோரும் இவர்கள் இருவரையும் சுற்றி அமர்ந்து உற்சாக குரல் எழுப்பினார்கள். இந்த முறை பெண்கள் மிருவுக்கும் ஆண்கள் குருவுக்கும் சப்போர்ட் செய்ய ஆரம்பித்தார்கள். மீண்டும் மியூசிக் ஆரம்பிக்க, இருவரும் பேப்பரை சுற்றி நடந்தார்கள். மிருவின் கவனம் பேப்பரில் இருக்க குரு மிருவையே பார்த்தப்படி நடந்தான்.
மியீசிக் சடனாக நிற்க, மிருவை அலேக்காக தூக்கிக் கொண்டு ஒற்றைக் காலில் பேப்பரில் நின்றிருந்தான் குரு. அவன் செய்ததைப் பார்த்து எல்லோரும் கைத்தட்டி ஆரவாரம் செய்ய, மிரு அதிர்ந்துப் போய் குருவைப் பார்த்தாள்.
“நானும் ஜெயிச்சுட்டேன், உன்னையும் ஜெயிக்க வச்சுட்டேன் மமி மரு.” என சொல்லியவன் அவசரமேப் படாமல் மெல்ல அவளை கீழே இறக்கி விட்டான். சிறந்த டீம் வோர்க் என அவர்கள் இருவருக்கும் அன்று சிறப்பு பரிசுக் கூட கிடைத்தது. அந்த விளையாட்டுக்குப் பிறகு குரு தனதறைக்குப் போய் விட்டான். மதிய உணவுக்குக் கூட வரவில்லை. இவர்கள் மதிய உணவு உண்டு, மீண்டும் விளையாடி, டீ குடித்து நீச்சல் குளத்தில் உருண்டு பிரண்டு என அட்டகாசம் செய்தனர். இரவு எட்டு மணிக்கு மலாக்கா டவுனுக்குப் போக பஸ் ஏற்பாடு ஆகியிருந்தது. டவுனை சுற்றிப் பார்ப்பவர்கள் அதில் செல்லலாம். போகாதவர்கள் ரூமில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்திருந்தாள் மோனிக்கா.
ரீனாவுடன் மிருவும் இரவு நேர மலாக்காவைப் பார்க்கலாம் என கிளம்பினாள். பஸ்சில் குருவும் இருந்தான். இவள் அவனைப் பார்த்து லேசாக புன்னகைக்க, அவனோ கண் மூக்கு முகம் எல்லாம் மலர புன்னகைத்தான்.
ஜோன்கர் ஸ்ட்ரீட் என அழைக்கப்படும் இரவு நேர சந்தையில் குரு ஆண்டிக் கடிகாரங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் போன் இசைத்து அழைத்தது. மமிமரு என பெயர் ஒளிரவும், அவசரமாக காதுக்குக் கொடுத்தான் குரு.
“என்னாச்சு மிரு?”
“பாஸ் நான் செசாட்(வழி தவறி விட்டேன் மலாயில்) ஆகிட்டேன். என்னைக் கண்டுப்பிடிச்சு கூட்டிப் போங்க பாஸ்” விட்டால் அழுது விடுபவள் போல பேசினாள் மிரு.
(தவிப்பான்)