MT 9

MT 9

          மாடிவீடு – 9 

அன்று மாலை, பால் கறக்க வேகமாக வந்தான் அழகு.

வீட்டில் தங்கை தனியாக இருப்பாள் என வேகமாக ஓடி வந்தான் அவன்.

இத்தனை நாள் யாராவது ஒருத்தர் அவளுடன் இருந்தனர். பத்து நாட்கள் கடந்த நிலையில், தான் கவனித்து கொள்வதாக கூறி அனுப்பிவிட்டான். தற்சமயம் செல்வியை அருகில் வைத்து வந்தான்.

அவளுக்கு சாப்பாடு அரண்மனையில் இருந்து வந்தது.  அமுதாவுக்கு எப்பொழுதும் அன்புவை நிரம்பவே பிடிக்கும் என்பதால், அவரே அவளுக்கு உணவை கொடுத்தனுப்பி விடுவார்… அரண்மனை சாப்பாடு அன்பை கொஞ்சமாய் பூசினார் போல் அழகாக காட்டியது.

 “அழகு”

“சொல்லுங்கம்மணி”

“எனக்கும் பால் கறக்க சொல்லி தரியா?”

“எதுக்கம்மணி? என்கிட்ட சொன்னா நானே பால் கறந்து தரப்போறேன்… எடே அழகுன்னு நீங்க ஒரு குரல் கொடுத்தா, நான் உங்க முன்னாடி நிக்க போறேன். உங்களுக்கு வேண்டியதை செய்ய போறேன்”

“எப்படினாலும் பழகத்தேன் செய்யோணும்?”

“ஏனாம்?”

“நாளைக்கு என்னை வேற இடத்துல கட்டிக் கொடுப்பாக, அப்போ இதெல்லாம் நாந்தேன் செய்யோணும்? நீ எப்பவுமா என்கூடக்கவ வரப்போற?”

“ஏன் வரமாட்டேன், என் சின்னம்மணி எங்க போனாலும் நான் அங்க வருவேனாக்கும்”

“என்மேல அம்புட்டு பிரியமா உனக்கு?”

“பின்ன பிரியம் இல்லாம இருக்குமா? நான் உயிரா நினைக்க என் ஐயாவோடு உயிர் நீங்கத்தேன். உங்களை எப்படி பிடிக்காம போகும்?”

“அம்புட்டு என்னை பிடிக்குமா?”

“பிடிக்காம போகுமா?”

“அப்போ நான் என்ன கேட்டாலும் செய்வியா?”

“சின்னம்மணி கேட்டு நா செய்யாம இருப்பேனா?”

“நெசமாவா?”

“நேசமாவேத்தேன்”

“கடைசி வரைக்கும் நான் என்னக் கேட்டாலும் செய்வியா?”

“உங்களுக்கு செய்யாம வேற ஆருக்கு செய்யப்போறேனாக்கும்?”

“என்னை கட்டுக்குடுத்து வெளியூருக்கு அனுப்பிருவாகளே? அப்போ எப்படி நான் ஆசைப்பட்டதை நீ செய்வ”

“ஊக்கும்… இப்போ இப்படி தான் சொல்லுவீக, கல்யாணம் முடிஞ்சு போகச்ச நீங்க எங்களைத்தேன் மறந்துருவீக? எப்படி நான் உங்களுக்கு செய்றதாம்?”

“நான் மறக்கமாட்டேன். நீ எப்பவும் என் கூடாக்கவே இருக்கோணும்?”

“அதுக்கென்ன… உங்களை, ஐயா வந்து பாக்குற சாக்குல நானும் வந்து பாத்துக்க போறேன்”

“இல்ல எனக்கு எப்பவும் உன்கூடாக்க இருக்கோணும், எதுவும் வேணாம், ஆரும் வேணாம்… நீ மட்டும்… உன்கூட மட்டும் காலம் பூரா இருக்கோணும்,

“உன்னை பார்த்துகிட்டே இருக்கோணும், அன்புக்கு கொடுக்குற பாசத்துல கொஞ்சூண்டு எனக்கும் தா அழகு. என்னையும் உன் கூடவே சேர்த்துக்கோ அழகு… நான் உன்னை பார்த்துட்டு ஒரு ஓரமா இருந்துக்கிறேன்” கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.

அவளை ஒரு பார்வைப் பார்த்தவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான்.

“ஏன் அழகு, என்னை உனக்கு பிடிகலல்ல”

“நான் அப்படி சொல்லலீங்கம்மணி”

“அப்போ நெசமா பிடிக்குமா?”

“என்னோட ஐயா எந்த அளவு புடிக்குமோ, அதுக்கு மேலவே உங்களைப் புடிக்கும். நீங்க எனக்கு சாமி மாதிரி… சாமியை ஆருக்காவது புடிக்காம போவுமா? ஆனா சாமி கோவில்ல இருந்தாத்தேன் அழகு. அதை கொண்டு தெரு ஓரம் வைக்க ஆசை படகூடாதுங்க அம்மணி”  

“சாமி ஆசைபடுதே அழகு, அப்போ அது ஆசையை நிறைவேத்திப் போடணுமே அழகு”

“எல்லார் ஆசையும், எப்பவும் நிறைவேறிபோடாதுங்க அம்மணி, அதுக்கும் சில ஆசை நிறைவேறலன்னுத்தேன் இப்படி ஒரே இடத்துல இருக்காக… அதை போய் மாத்த சொல்லுறீகளே”

“நல்லா பேச கத்துகிட்ட அழகு… ரொம்ப மாறிட்ட”

“அல்லாரும் மாறும் போது, நானும் மாறுறதுத்தேன் அழகுங்கம்மணி” மீண்டும் பால் கறக்க ஆரம்பித்தான்.

அவன் கையை தட்டி விட்டு, மாட்டின் மடியில் தன் கையை வைத்து பால் கறக்க முயற்சி செய்தாள் தமிழ்.

கைகளை விலக்கிக் கொண்டான் அழகு.

“சொல்லி தா அழகு” ஒன்றும் அறியாதவள் போல், அவனைப் பார்த்துக் கூறினாள் தமிழ்.

மாட்டின் மடியில் ஒரு காம்பை பிடித்துக் கொண்டு, அவளுக்கு சொல்லிக் கொடுக்க, இன்னொன்றை அவள் பிடித்துக் கொண்டாள்.

“இதே போல, உன் பாச கூட்டில் கொஞ்சம் இடம் தா அழகு”

“பைத்தியக்காரத் தனமாப் பேசாத தமிழ்… கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டியா? என்ன பேசுறன்னு ரோசனை பண்ணிதேன் பேசுறியா? ஒரே இனத்துல ஒருத்தருக்கொருத்தர் விரும்பினாக் கூட சேர்த்து வைக்க நிரம்பவே யோசிக்குற காலத்துல இருக்கோம், இதுல நீ வேற? நான் வேற? எந்த காலத்திலையும் உங்க வாசப்படியை தாண்டி வரக் கூடாதுன்னு கட்டுப்பாட்டோட வாழுற என்னை போய் ஊட்டுகுள்ளாற கொண்டு வரப் பாக்குறியே தமிழு?

“நிலாவை ரசிக்க ஆசைப்படலாம், அதை கையில் பிடிக்க ஆசைப் படக்கூடாது தமிழ். இப்போ நான் நிலாவையும் ரசிக்கும் நிலையில் இல்ல. அதை கையில் பிடிக்க ஆசையும் இல்லை”

“உன் மனசுல முளைசிருக்கது பயங்கர விஷ செடி. அதை வேரோடு புடுங்கி எறிஞ்சிரு… இல்லன்னா நிறைய உயிரை காவு வாங்கிரும்” தன்மையாக அவளுக்கு எடுத்துக் கூறியவன்,

“பொண்ணா லச்சணமா ஐயா சொல்லுற பையனைக் கட்டிக்கிறதுத்தேன் உனக்கு நல்லோது” பால் வாளியை வாசலில் வைத்து வீட்டை நோக்கி நடந்தான்.

கைகளை உதறியபடியே செல்லும் அவனையே பார்த்திருந்தாள் தமிழ். அவனை விடும் எண்ணம் அவளுக்கில்லை.

சிறு வயதிலையே கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்றி வைத்த ஆசை… ஆலமரமாய் படர்ந்திருக்கிறது. எப்படி ஒரேடியாக வேரறுக்க முடியும்?

கோவில் வேலையை முடித்த ஆலமரத்தான் அன்று மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தார்.

தமிழ் தூங்காமல் ஊஞ்சலில் அமர்ந்திருப்பதைக் கண்டவர், அவள் அருகில் அமர்ந்துக் கொண்டார்.

“என்ன கண்ணு, இன்னும் தூங்கலியாக்கும்?”

“இல்லப்பா”

ஏங்கண்ணு, என்ன ரோசனைப் பண்ணுத?”

“வீட்டுல எனக்கு நேரமே போகலப்பா…”

“ஏங்கண்ணு, நம்ம அரண்மையை சுத்தி வந்தாலே நாள் பொழுதெல்லாம் ஓடிப்போடுமே?”

“எத்தனை நாள்தேன் சுத்தி வரதுப்பா… பள்ளிக் கொடதுக்கும் போண்டாம் சொல்லிட்டீக, நான் என்னதேன் பண்ண?”

“ஏன் எனக்கு கூடமாட வேலை செஞ்சாதேன் என்னாவாம்?”

“நீ பேசாம இரும்மா”

“ஏங்கண்ணு, அப்போ மறுக்கா பள்ளிக்கொடதுக்குப் போறியா?” மகள் வருந்துவது கேளாமல் கேட்டார் ஆலமரத்தான்.

நிறைய படித்தால், இதை வைத்தும் அழகு மறுக்க வாய்ப்பிருக்கு என எண்ணிய தமிழ்,

“வேண்டாம்பா” என்றாள்.

“சொல்லு கண்ணு அப்பாரு இப்போ என்ன பண்ணோணும்?”

“நானும் வயலுக்கு வரவாப்பா… வயலை சுத்தி வந்தா எனக்கும் நேரம் போகும்… நம்ம வயலை பாத்த மாதிரியும் ஆச்சு?”

“வயலுக்கா கண்ணு? அங்க வந்து நீ என்ன பண்ண போறீக?”

“வேலை எல்லாம் கத்துப்பேனாக்கும்”

“வேலை செய்ய நிறைய ஆளுக இருக்காக கண்ணு”

“அப்பா” மகள் சிணுங்கவும் மனது கேளாமல்,

“சரி கண்ணு, அழகு கூடவே போயிட்டு, அவன் கூடவே வீட்டுக்கு வந்ரோணும்… என்ன சரியா?”

மகள் வேகமாக தலையாட்டிக் கொண்டாள். அவளின் எண்ணமும் இதுதானே?

தோட்டத்தில் அழகு என்ன வேலை செய்கிறானோ அவன் அருகிலையே இருப்பாள். பொதுவாகவே அவர்கள் இருவரையும் ஒன்றாகவே பார்த்து பழகிய மனிதர்களுக்கு அவர்கள் சேர்ந்தே இருப்பது ஒன்றும் தவறாகவோ, வித்தியாசமாகவோ தெரியவில்லை.

ஊரே மதிக்கும் ஐயா ஆலமரத்தான்… அவரது மகள் அவர்கள் அனைவருக்கும் தங்க மகள்.

அழகு அந்த ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கும் நல்லவன்.

அவர்கள் இருவரும் ஒன்றாக பழகுவதை அவர்கள் வீட்டு மனிதர்களே ஒன்றும் சொல்லாமல் இருக்கும் பொழுது மற்றவர்கள் அதை மறுத்து ஏதாவது சொல்லுவார்களா என்ன?

இருவரும் யாருக்கும் தெரியாமல் சுற்றி திருந்தால் மற்றவர் கண்களை உறுத்தலாம்? இவர்களோ அனைவர் பார்க்கும் படியாகவே சுற்றுவதால் யாரும் பெரிதாக எண்ணவில்லை.

மகளை எப்பொழுதும் கண்டிக்கும் அமுதா கூட அவள் அழகுவுடன் பழகுவதை ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.

அப்பத்தா தான் சும்மா இல்லாமல் “ஏட்டி… இப்படி தான் ஒரு வயசு பையன் கூட எப்பவும் சுத்துறதா?” என திட்டிக் கொள்ளுவார்.

“ஏய் கிழவி, நான் என்ன ஊரான் வீட்டு பையன் கூடவா சுத்த போறேன், நீ வளர்த்த பையன் கூட பாதுக்காப்பாத்தேன் இருக்கேன்”

“இப்படி சொல்லியே என் வாயை அடை” சலித்துக் கொள்வார் அப்பத்தா.

மகளும், ‘தோட்டத்தை கவனிக்க செல்வதற்கு அழகு கூட சென்றால் தான் சரியாக இருக்கும்’ என்று ஆலமரத்தானும் அவர்களைக் கண்டுக் கொள்ளவில்லை.

தமிழுக்கு, அழகு அருகில் இருந்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால், அழகுவோ, ஐயா கூறிய வேலையை சரியாக செய்தான். தமிழை அழைத்து செல்வது முதற்கொண்டு அவளுக்கு சாப்பாடு கொண்டு கொடுப்பது வரை அழகு வேலை.

அதை சரியாக செய்தான் அவன். இந்த வேலையை சாக்காக வைத்து தமிழ் அவள் காதலனை அருகிலேயே வைத்துக் கொண்டாள்.

அன்று பிறகு அவனிடம், அவள் எதுவும் கூறவும் இல்லை… ஏன்… அப்படி பேசியவளாக கூட நடந்துக் கொள்ளவில்லை. சாதரணமாக இருந்தாள், நடந்தாள்.

‘தான் சொன்னதை அம்மணி கேட்டுட்டாக’ அழகுவும் அதை அதோடு விட்டுவிட்டான். சிறு பெண் அன்று ஏதோ தெரியாமல் பேசி விட்டாள் என்ற எண்ணம் தான் அவனுக்கு.

@@@@@@@@@

அவளைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. தினமும் வயலுக்கு வருகிறான் தான், ஆனால் அவளை மட்டும் காணவில்லை.

இன்று விடுமுறை நாள் என்பதால் அந்த தெருவையை பார்த்துக் கொண்டு வாசலில் அமர்ந்திருந்தான். குழந்தைகள் குதுகலமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அருகில் நான்கைந்து பிள்ளைகளும், பையன்களும் நொண்டி விளையாடிக்கொண்டிருந்தனர். இவனுக்கு அவர்களுடன் விளையாட ஆசை, ஆனால் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு பையன் கோட்டில் காலை வைத்துவிட்டு, எல்லாரையும் ஏமாற்றி விளையாடிக் கொண்டிருந்தான். மெதுவாக சிரித்துக் கொண்டான் அமுதன்.

அப்பொழுது ஐஸ்காரன் சைக்கிளில், ஐஸ் பெட்டியை வைத்து வரவே, குழந்தைகள் எல்லாம் அவன் பின்னே ஓடி, ஆளுக்கொரு ஐஸ் வாங்கி சுவைத்தபடி வர,

அவனுக்கும் ஆசை வந்தது. ‘இந்த ஊர் ஐஸ் எப்படியும் சுவையாக தான் இருக்கும்’ என்ற எண்ணம் அவனுக்கு,

சிறுவன் ஒருவனை அழைத்து, ஐஸ் விலையைக் கேட்டு இரண்டு ரூபாய் கொடுத்து விட்டான்.

அவன் நல்ல பிள்ளையாக சேமியா ஐஸ் வாங்கி கொடுக்கவே, வாசலில் அமர்ந்து சுவைத்துக் கொண்டிருந்தான்.

‘அட! இங்க எல்லாமே அழகு தான்’ என்ற எண்ணம் ஓடியது. அதே நேரம்  நினைவும்!

தூரத்தில் நான்கைந்து தாவணி அணிந்த பெண்கள், கையில் துணியுடன் வந்துக் கொண்டிருந்தனர். குளிக்க செல்ல போகிறார்கள் போல, அவனே எண்ணிக் கொண்டான்.

அந்த கூட்டத்தில் அவளும் இருந்தாள். புதிதாக தாவணி அணிந்திருக்கிறாள்’ என்ற யோசனை அவனுக்கு.

ஐஸை வாயில் வைத்து  ஒரே இழுப்பாக இழுக்க, குச்சி மட்டு கையில் வந்தது. அதை தூர வீசியவன், வீட்டுக்குள் சென்று வேறு ஒரு சட்டையை அணிந்து அவர்கள் பின்னே நடந்தான்.

அவர்கள் பின்னே தான் செல்கிறேன், என்பதை பிறர் அறியா வண்ணம் தொடர்ந்தான். அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது.

‘அடே மடையா சின்ன பொண்ணு பின்னாடி தான் இத்தனை நாள் சுத்துனியா?’ மனம் காறி துப்பியது.

‘இப்பொழுது தான் தாவணி அணிந்து விட்டாளே? பிறகென்ன’ அவனே கூறிக் கொண்டான்.

வழியில் நின்றவர்களுடன் பேசுவதுப் போல பாவனை செய்து, அவர்களை தொடர்ந்து வந்தான்.

அவர்கள் வயலுக்கு செல்வதை அறிந்துக் கொண்டவன். வயல் வாசலில் நின்று வயலை பார்பதுப் போல் நின்றுக் கொண்டான்.

அப்படியே வயலின் உள்ளே நுழைந்தான். அவன் இடம் யாரை கேட்கவேண்டும். வேடிக்கைப் பார்ப்பது போல் சென்றான்.

இன்று, யாரும் அவனை ஈர்க்கவில்லை. இப்பொழுது தான் பாதி அறுவடை முடிந்திருந்தது. அந்த பக்கம் நின்ற மணிகள் முற்றிய நிலையில் அந்த வெயிலுக்கு தங்கமாய் ஜொலிக்க, அவன் கண்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ரொம்ப நேரம் அங்கு சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு நன்கு தெரியும் அவள் குளத்தில் தான் இருப்பாள் என்று,

ஆனால், அவளுடன் வேறு பெண்களும் இருப்பார்களே, அது தான் அவனுக்கு கொஞ்சமாய் இடித்தது.

‘அவள் தனியாக இருக்க வேண்டும், நான் அவளிடம் பேசவேண்டும்’ இது அவனின் மன வேண்டுதலாக இருந்தது.

யாரும் வருவதுப் போல் தெரியவில்லை. மெதுவாக குளத்தை நோக்கி சென்றான்.

அங்கிருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்று தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான். அவள் மட்டும் தாவணியுடன் குளித்துக் கொண்டிருந்தாள்.

அதுவே அவனுக்கு ஒரு ஆறுதல்… பார்த்தால் பரவாயில்லை என்ற எண்ணம்…

அவள் கண்களை மூடி மூழ்குவதும், எழுவதுமாக இருந்தாள்.

அவளையே, அவள் முகத்தையே பார்த்திருந்தான்… இப்பொழுது மிகவும் வித்தியாசமாய் தெரிந்தாள். அவனின் பார்வை தடம் மாறியது.

இத்தனை நாட்களும் சிறு பெண், குழந்தை முகம் என்றவனின் மனம் முதல் முறையாக தடம் புரண்டது.

மொத்தமாய் புரண்டுவிட்டான். அவள் அப்படியாய் அவனை ஈர்த்தாள்.

டக்கென்று கண்ணை திறந்தவள். அவனைப் பார்த்துவிட்டாள். கண்கள் சிவக்க, அவனை நோக்கி மேலேறி வந்தாள்.

error: Content is protected !!