UUP–EPI 5 (Andru)

அத்தியாயம் 5

 

ஏஸ்ட்ரடயல் (Estradiol) பெண்களின் இனவிருத்தி செயல்பாட்டுக்கு இன்றியமையாத ஹார்மோனாகும். மாதவிடாயின் போது அதிகமாக சுரக்கும் ஏஸ்ட்ரடயல் ஹார்மோன் கருமுட்டை முதிர்ச்சி அடைய உதவுவதோடு, விந்தணுவுடன் சேர்ந்த கருமுட்டை ஒட்டிக் கொள்ள கர்ப்பப்பையை வளப்படுத்துகிறது. இது மிக அதிகமாக சுரக்கும் போது முகத்தில் பருக்கள் அதிகரிக்கின்றன, டிப்ரெஷன் வருகிறது, தாம்பத்ய உறவில் பிடித்தமின்மை நேருகிறது.

 

அன்று

 

“சம்மு! ஏன் இப்படி மூஞ்ச தூக்கி வச்சிருக்க?”

“என் மூஞ்சி, நான் தூக்கியும் வைப்பேன் இறக்கியும் வைப்பேன்! நீ ஒன்னும் கேக்க வேணா போ!”

“நான் பேப்பர காட்டத்தான் நினைச்சேன் சம்மு! பின்னால மெதுவா உன் கிட்ட குடுக்கறதுக்குள்ள டீச்சர் என் கிட்ட வந்துட்டாங்க! நான் என்னடி செய்ய?”

“உன்னை நம்பித்தான் நான் கணக்குப் போட்டு பாக்கவே இல்ல! நம்ப நண்பன் இருக்கானே, அவன் பேப்பர காட்டுவான், அப்படியே காப்பி அடிச்சுக் குடுத்துருவோம்னு எவ்வளவு கெத்தா பரிட்சைக்கு வந்தேன்! இப்படி பண்ணிட்டல! வாத்தி என் பேப்பருக்கு கழுதை முட்டைப் போடுவாரு, நான் அதை உனக்கு மொளகா போட்டு வறுத்துத்  தரேன்” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சண்மு.

“நீ டைனசோர் முட்டையை வறுத்துக் குடுத்தாக் கூட நான் அப்படியே சாப்புடுவேன் சம்மு”

“அப்புடியே மூஞ்சி மேல அப்பிருவேன் பாத்துக்கோ! நாளைக்கு வர இங்கிலீசு பரிச்சையில நான் டைனசோர் முட்டை வாங்குவேன்னு இப்பயே சூசகமா சொல்றல! போடா போ! எங்கம்மா மட்டும் என்னைப் பார்த்து பூவ கிள்ளு, கீரைய கட்டி வை, கத்திரிக்காய பையில போடு, புல்லைப் புடுங்கி விடுன்னு வேலை சொல்லாம இருந்தா நானும் தான் உன்ன மாதிரி நல்லாப் படிப்பேன்! இதெல்லாம் செஞ்சுட்டு, ராவுல புக்கப் பிரிச்சா சரசுவா வரா, நித்திராதான்டா வரா!” சரஸ்வதி தேவியையும் நித்திராதேவியையும் வசைப்பாடிக் கொண்டே நடந்து வந்தாள் சண்மு.

பள்ளியில் இறுதியாண்டு பரிட்சை நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. பத்து வயதாகி இருந்த இருவரும், இன்னும் இணைப்பிரியா நண்பர்களாகத்தான் இருந்தார்கள். எப்பொழுதும் இவர்களுக்குப் பரிட்சை எல்லாம் ஏனோ தானோவென தான் நடக்கும். ஆசிரியர்கள் பரிட்சைத் தாளைக் கொடுத்து விட்டு முன்னே அமர்ந்து எதாவது படித்துக் கொண்டிருப்பார்கள். கதிரின் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் சண்மு ஈயடிச்சான் காப்பி அடிக்காமல், புத்திசாலித்தனமாக பாதி கேள்விக்கு சொந்தமாக முயற்சித்து விட்டு மறுபாதியை கதிரைப் பின்பற்றி எழுதி பாஸ் ஆகி வந்தாள்.

இந்த வருடம் வந்த புது தலைமை பள்ளியைத் தூக்கி நிறுத்தப் போகிறேன் என கங்கணம் கட்டிக் கொண்டு பாடுபட்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாம் அவர் கையில் சிக்குண்டு சிதறிப் போனார்கள். அவர் வந்ததும் வரும் முதல் பரிட்சை இது. மாணவர்களின் திறன் அறிய பரிட்சை நேரத்தில் கண்கொத்தி பாம்பாய் அவர்களை கண்காணித்தார். ஆசிரியர்களையும் ஸ்பாட் செக் என செக்கில் போட்டு ஆட்டினார். இதனால் தான் சண்முவால் எந்த தகிடுதத்தமும் செய்ய முடியவில்லை.

அவள் கோபித்துக் கொள்ள இவன் சமாதானம் செய்ய என நடந்தவாறே அவர்கள் ஊரின் பெட்டிக்கடைக்கு வந்திருந்தார்கள். அங்கே பீடி பற்ற வைத்துக் கொண்டு நின்றிருந்தார் பரமு. மகனையும் அவன் தோழியையும் பார்த்தவர், பீடியைக் காலில் கீழே போட்டு மிதித்தவாறே,

“கதிழு! எம்மா மம்மவளே! வாங்கோ வாங்கோ! ஸ்கோலு முழிஞ்சதா?” என முகம் நிறைந்த சிரிப்புடன் வரவேற்றார்.

“முடிஞ்சது கதிரப்பா!” என புன்னகைத்தாள் சண்மு.

“ஏம்பா வெயிலுல நின்னுட்டு இருக்க? வீட்டுல போய் படுக்க வேண்டிதானே?” என கேட்டான் கதிர்.

வீட்டில் பார்வதி இருந்தாரே! எப்பொழுதும் பகலில் சரக்கடித்ததும் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு தனது அறையில் கவிழ்ந்தடித்துப் படுத்து விடுவார். மாலையில் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டுவிட்டு மறுபடியும் சரக்கடிக்க போவபரை, இரவில் யாராவது தூக்கிக் கொண்டு வந்துப் போட்டு விட்டுப் போவார்கள். இவர் குஜாலாக சரக்கடிக்கும் பகல் வேளையில் பார்வதி எப்பொழுதும் வட்டி வசூலிக்கப் போய் விடுவார்.

வீட்டின் பக்கத்திலேயே சின்னதாக ஷெட் மாதிரி போட்டு பார்வதி தறி போட்டிருந்தார். பட்டு சேலைகள் நெய்ய சில பெண்களை வேலைக்கும் அமர்த்தி இருந்தார் அவர். அதிலிருந்தும் வருமானம் வந்தது பார்வதிக்கு. மேற்பார்வை சின்ராசுவின் அம்மா பார்த்துக் கொள்ள, பார்வதி பகல் வேளைகளில் வெளி வேலைகளைப் பார்த்துக் கொள்வார். பரமுவின் குடும்பம் கொஞ்சம் வளமையான குடும்பம்தான். சின்ன வயதிலேயே குடிக்கு அடிமையாகி இருந்த பரமுவுக்கு அவர் அம்மா சீர் செனத்தி எதுவும் கேட்காமல் கட்டிக் கூட்டி வந்த ஏழைப் பெண்தான் பார்வதி. அமைதி, அடக்கம் ஒடுக்கம் என இருந்தவர்தான் பார்வதி. கணவனே கண் கண்ட தெய்வம் என இவரும் இருந்திருப்பார்தான், அந்த தெய்வம் முதல் இரவன்றே நிற்க நிதானம் இல்லாமல் தடுமாறி பார்வதியின் கால் மட்டில் விழுகாமல் இருந்திருந்தால்.

அடி உதை என பரமு பார்வதியைக் கொடுமைப்படுத்தவில்லைதான். ஆனால் குடும்பத் தலைவர் என எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் குடியில் கரைந்துக் கொண்டிருந்த சொத்தை குறையோடு பிறந்திருந்த மகனுக்காகப் பிடித்து வைக்க முடிவெடுத்தார் பார்வதி. (பரம)சிவம் இயங்காவிட்டால் என்ன, அவரின் பாதியான இந்தப் பார்வதி களம் இறங்கினார். வட்டிக்குப் பணம் விட்டப் பார்வதி கருணையே உருவானவராய் இருந்தது போய் கறாராய் மாறிப் போனார்.

மகன் மட்டுமே வாழ்வின் பற்றுக்கோல் என பற்றிக் கொண்டவர், பரமுவை ஒதுக்கித் தள்ளினார். மாமியார் இருக்கும் வரை பரமுவைப் பொறுத்துப் போனவர், அவர் டிக்கெட் வாங்கியதும் தனது ஆட்சியை முழுமையாக அவ்வீட்டில் நிலை நாட்டினார். மாமனார் கல்யாணத்துக்கு முன்னமே, குடியால் டிக்கெட் வாங்கி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. நிதானத்தில் இருக்கும் போது பரமுவுக்கு பார்வதியிடம் இருந்து மண்டகப்படி அதிகம் கிடைப்பதால், நிதானத்தையே கைவிட்டார் அவர். எந்நேரமும் தண்ணியில் மிதங்க ஆரம்பித்தார் பரமு. அம்மா உயிரோடு இருந்த வரை பணம் அவர் கொடுப்பார். அவர் போனதும், வீட்டில் அங்கிங்கே இருந்ததை திருடி விற்பது, பார்வதி வட்டிக்கு விட்ட இடத்தில் காசை இவர் வாங்கி தண்ணி அடிப்பது என வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்துக் கொண்டிருந்தார் பரமு. பார்வதி எப்படி மகனுக்காக வாழ்கிறாரோ, இவரும் தன் மகனுக்காகத்தான் வாழ்கிறார். ஆனால் இருவரும் வாழும் முறைதான் வேறு.

மகன் கேட்ட கேள்விக்கு,

“அப்பாக்கு தூக்கம் வழலடா ஜாமி! அதான் காத்தாட இங்க நிக்கழேன்” என அசடு வழிந்தார்.

இத்தனை வருடமாய் பெற்றவர்களைப் பார்த்து வளர்பவனாயிற்றே! அம்மா வீட்டில் இருப்பதை நொடியில் யூகித்துக் கொண்டான் கதிர்.

“இருப்பா! சம்முக்கு போண்டா வாங்கிக் குடுக்கறேன்னு சொல்லிருக்கேன்! அவ சாப்பிட்டதும் நாம வீட்டுக்குப் போலாம். என் கூட வந்தா அம்மா உன்ன திட்டமாட்டாங்க!”

மகனின் வார்த்தையில் கண் கலங்கியவர், அவன் கன்னத்தை தடுமாற்றத்துடன் தொட்டு நெட்டி முறித்தார்.

“எனக்கு ஒன்னும் நீ வாங்கிக் குடுக்கற போண்டா வேணா போ” இன்னும் தன் கோபத்தை விடவில்லை சண்மு.

“ஏன் மம்மவளே, இப்போவே என் மவன கோச்சிக்கற! அவந்தான் வாங்கித் தழான்ல. ஜாப்புடுடி என் லாஜாத்தி. ஆமா எங்க ஒன் தம்பிப்பயன். இடுப்புழயே வச்சிப்ப! ஸ்கோலுக்கு வழலயா?”

“அவனுக்கு காய்ச்சல் கதிரப்பா! அம்மா வீட்டுலயே இருக்க ஜொல்லிட்டாங்க” என அவர் மாதிரியே பேசிக்காட்டி சிரித்தாள் சண்மு.

“என் லாஜாத்தி! இப்டியே சிழிச்சிக்கிட்டே என் மவன்கூட ஜந்தோஷமா வாழோனும்”

“எனக்கு உங்க மவன் ஒன்ரை வேணா!” என சொல்லியபடியே கதிரைப் பார்த்துப் பழிப்புக் காட்டினாள் சண்மு.

“இந்தா சாப்புடு! மூனா வாங்கிருக்கேன் பாரு. ரெண்டு இங்கயே சாப்புடு. ஒன்னு தம்பிக்கு கொண்டுப்போ!”

அவள் தன்னை வேண்டாம் என  சொன்னதை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் போண்டாவை அவள் கையில் திணித்தான் கதிர். அதன் பிறகு பிகு பண்ணாமல் வாங்கி சாப்பிட்டாள் சண்மு.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து, பின்பே அப்பாவும் மகனும் வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள்.

அன்று மாலை எப்பொழுதும் போல அவர்கள் விளையாடும் ஆலமரத்தின் கீழ் சந்தித்துக் கொண்டார்கள் இருவரும். வந்ததில் இருந்துப் பேசாமல் முக வாட்டத்துடன் நின்றிருந்தான் கதிர்.

“என்னடா? மூஞ்சு தொங்கிப் போய் கிடக்கு? நான் தான் போண்டா சாப்பிட்டப்பவே உன் கூட பழம் விட்டுட்டேன்ல! அப்புறம் என்ன?” தன் நண்பனுக்காக எடுத்து வந்த கொய்யாக்காயை அவன் புறம் நீட்டியவாறே கேட்டாள் சண்மு.

“ம்ப்ச்! ஒன்னும் இல்ல”

“சொல்லுடான்னு சொல்றேன்ல!”

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை சம்மு”

“அது எப்பவும் உள்ளது தானேடா!”

“எப்பவும் சண்டை தான்! ஆனா இன்னிக்கு அம்மா கொஞ்சம் ஓவரா திட்டிட்டாங்க அப்பாவ. சின்னப்புள்ள மாதிரி அவரு ஒரே அழுகை! கதிரு டேய், ஒனக்காத்தாண்டா உசுர வச்சிருக்கேன்! நீ மட்டும் இல்லைனா நான் ஆத்துல குளத்துல விழுந்துருவேன்னு அவரு சொல்ல! அதுக்கு அம்மா, முதல்ல அத செய்யுய்யா! தாலி அத்தாலாச்சும் எனக்கு நிம்மதி கிடைக்குதான்னு பாக்கறேன்னு திட்டிப்புட்டாங்க! ஒரு மூனு முடிச்சால முட்டாளா ஆனேன்னு இவர் பாட்டுப் பாடி ஒரே ஒப்பாரி. எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு சம்மு இதெல்லாம் பார்க்க” குரல் கம்மியது கதிருக்கு.

பட்டென அவன் கையைப் பற்றிக் கொண்டாள் சண்மு.

“கதிரு, குடிச்சாலும் உனக்கே உனக்குன்னு ஒரு அப்பா இருக்காரு! திட்டினாலும் உனக்கே உனக்குன்னு ஒரு அம்மா இருக்காங்க! எனக்குப் பாரு, அப்பா இல்ல! அனாதை புள்ளைங்களுக்கு எல்லாம் அம்மாவும் இல்ல, அப்பாவும் இல்ல!” தனக்கு தெரிந்த வகையில் நண்பனை சமாதானப்படுத்த முயன்றாள் சண்மு. அப்பொழுதும் அவன் முகம் தெளியவில்லை.

“புல்லாங்குழல் கொண்டு வந்தியா?” என அவனைத் திசைத் திருப்ப கேட்டாள் சண்மு. பட்டென அவன் முகம் மலர்ந்தது.

“இரு ஓடிப் போய் எடுத்துட்டு வரேன். நம்ம பாட்டுப் பாடனும் நீ” என சொல்லியவாறே வீடு நோக்கி ஓடினான் கதிர். அவன் குழலோடு வந்தப் போது, தன் குரலோடு காத்திருந்தாள் சண்மு. அவளுக்கு ஆட்டம் தான் ஆட்டம் காட்டும். குரல் குழலையே தோற்கடிக்கும்.

“ஏ குருவி!!” இவள் குரல் பாட, கதிரின் குழல் பதில் போட்டது.

“குருவி குருவி” ஆண் குரல் பாடலை சண்மு பாட பின்னாலேயே கதிரின் குழல் இசைத்தது. பெண் குரல் குழலாய் வர, ஆண் பகுதியை சண்மு பாட என இருவரும் கவலை மறந்து தங்கள் உலகில் சஞ்சரித்தார்கள்.

 

(இதுக்கும் மேல டைப் பண்ண முடியல. கண்ண கட்டுது. இன்று. போர்ஷன் நாளைக்கு இல்லைனா நாளை மறுநாள் தரேன். கொஞ்சம் பெருசாவே ட்ரை பண்றேன் டியர்ஸ். வெய்ட் பண்ணுவீங்களேன்னுதான் அன்று போர்ஷன் டைப் பண்ணேன். கோச்சிக்காம படிப்பீங்களாம்)