mu-15
mu-15
அபிமன்யு
அபிமன்யு தான் நினைத்ததை அடைந்த திருப்தியோடு மீண்டும் மலை உச்சியில் உள்ள கொங்ககிரி கிராமத்தை வந்தடைய அவன் கூட வந்த ஊர்க்காரர் அபிக்கு பாம்பு கடித்ததாக உரைக்க அந்த ஊர் மக்கள் எல்லோருமே பதட்டமடைந்து அவனை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.
அதோடு நிற்காமல் அவர்களுக்கு தெரிந்த மருந்துகளைத் தயாரித்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினர். போதாக் குறைக்கு அவனுக்குப் பார்த்து பார்த்து உணவு தயாரித்துக் கொடுத்தனர். எந்த உறவும் இல்லையென்ற போதும் அவன் மீது அந்த மக்கள் பொழிந்த அன்பும் அரவணைப்பும் அவனை நெகிழச் செய்தது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த ஊருக்கு அவன் அந்த மலரைத் தேடி வருவது வழக்கம். அப்படி ஒரு முறை தேடி வந்த போதுதான் அங்கே இருந்த சிலரை விஷக் காய்ச்சல் பீடித்திருந்தது. அந்த மக்களுக்கு அந்த நோயின் தீவிரம் புரியவில்லை. எனினும் அபிமன்யு அவர்கள் நாடியை சோதித்து ஏதோ ஒரு பெரிய உயிர் கொல்லி நோய் அவர்களைப் பீடித்திருப்பதை உணர்ந்தான்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் கொங்ககிரி மக்களைப் போராடி ஒற்றை ஆளாய் காப்பாற்றிய அபிமன்யுவின் திறமை எப்படி வந்ததெனில் அவன் சிறு வயதிலிருந்தே சிறந்த சித்த வைத்தியரான அவன் தாத்தா அரங்கநாதனின் வழித்தோன்றல் என்பதால்தான்.
வழிவழியாய் அவர்கள் குடும்பத்தினர் வைத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள். அபிமன்யுவின் தாத்தா அரங்கநாதனும் வைத்திய சாலை நடத்தி பலரின் நோயினைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய பழைய கலாச்சார முறை எல்லாம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்க, அந்த வைத்திய சாலைக்கு வருவோர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
எல்லோரும் ஆங்கிலேயரின் மருத்துவத்தை நம்பிச் சென்று கொண்டிருக்க நம் பழமையான முறை மெல்ல மெல்ல அழிந்து கொண்டே வந்த காரணத்தால் அரங்கநாதன் பெரும் துயரில் ஆழ்ந்தார். அந்தச் சமயத்தில் அவரின் மகன் வைத்தீஸ்வரன் பிடிவாதமாய் சித்த வைத்திய முறையை கற்க விருப்பமில்லாமல் ஆங்கிலேய மருத்துவத்தின் பால் மோகம் கொண்டு அதைக் கற்க ஆர்வம் கொண்டார்.
அரங்கநாதனுக்கோ தம் முன்னோர்களால் வெகுகாலமாய் தொடர்ச்சியாய் பாதுகாக்கப்பட்டு வந்த வைத்திய முறை தன்னோடு வாரிசில்லாமல் அழிந்துவிடுமே என்ற மன வேதனை உண்டானது. அப்போதுதான் வைத்தீஸ்வரனின் மனைவி சுகந்திக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அவர்கள் சந்ததியில் இரட்டையர்கள் பிறந்தாலே ஒன்று இறந்து பிறப்பது வழக்கமாய் இருந்தது. இம்முறையும் முதல் குழந்தை நன்றாகவே பிறக்க இரண்டாவதாக பிறந்தவன் அசைவற்று இருந்தான். மருத்துவர்கள் எல்லோரும் இறந்துவிட்டதாக உரைக்க அரங்கநாதன் மட்டும் அந்தக் குழந்தையை தன் கையில் பெற்று நம்பிக்கையில்லாமல் சோதித்துப் பார்த்தார்.
அவன் உயிருடன் இருப்பதாக அவருக்கு உள்ளுணர்வு ஏற்பட தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தார். அவரின் முயற்சியின் பலனாக எல்லோரும் அதிசயிக்கும் விதமாய் அபிமன்யு கதறி அழத் தொடங்கினான். அரங்கநாதன் அப்போது அறிந்திருக்க மாட்டார்.
தான் உயிர் கொடுத்து காப்பாற்றியவன் வருங்காலத்தில் தம் பழமையான சித்த வைத்திய முறையை தூக்கி நிறுத்தப் போகிறான் என்றும் கொடிய நோய்களிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றி பெரும் பெருமையை ஏற்படுத்த வல்லவனாய் திகழ்வான் என்றும்.
அர்ஜுன் தன் அப்பாவின் வழியை தேர்ந்தெடுக்க அபிமன்யு தன் தாத்தாவின் வழியைப் பின்பற்றினான். சிறு வயதில் இருந்தே எல்லா மூலிகைகள் குறித்தும் அவற்றின் பயன் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.
அவன் தாத்தா அரங்கநாதன் காலங்காலமாய் காப்பற்றி வைத்திருந்த பழைய வைத்திய குறிப்புகளையும் கற்றுத் தேர்ந்தான். அந்தச் சமயத்தில் அரங்கநாதன் மரணத்தை தழுவிட அந்த இழப்பு பெரியளவில் அபிமன்யுவைப் பாதித்தாலும் அவனின் வைத்திய முறை குறித்த தேடலும் கற்றலும் அதோடு நின்றுவிடல்லை.
நம் தேசம் முழுக்க உள்ள பழைய மருத்துவ குறிப்புகளைத் தேடிக் கண்டெடுத்தான். பல அரிய மூலிகைகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சேகரித்து அதன் பயன்களைக் கண்டறிந்து அக்னி என்ற பெயரால் மக்களுக்கு அறிவுறுத்த நிறைய சித்த வைத்திய முறை பற்றிய புத்தகங்களை எழுதி வெளியிட்டான்.
இத்தகைய தேடலின் ஒரு பங்காகவே அவன் கொங்ககிரியை வந்தடைந்தான். அங்கே அடிக்கடி மூலிகையைத் தேடி வருவது அபிமன்யுவுக்கு நாளடைவில் வழக்கமான ஒன்றாக மாறியது. ஆதலாலேயே அந்த மக்கள் அவனுக்கு ரொம்ப பழக்கப்பட்டவர்களாய் மாறினர்.
மூன்று மாதத்திற்கு முன்பு இதேப் போன்று ஒரு பௌர்ணமி இரவில் சந்திரவதனி மலரைத் தேடிவந்த போது அந்த ஊர்மக்கள் சிலரை விஷக் காய்ச்சல் பாதித்திருப்பதாக பதறிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அபிமன்யுவின் மூளை வெகு வேகமாக செயல்பட்டது. அவன் பார்த்த கணத்திலேயே அவர்கள் விழியும் முகமும் கறுத்துப் போயிருப்பதையும் நாடித் துடிப்பு சீராக இல்லாததையும் உணர்ந்து கொண்டான். ஆனால் அந்த மக்களை பீதியுறச் செய்யாமல் அவர்கள் எண்ணியது போல் அது வெறும் சாதாரண விஷக் காய்ச்சல் என்றே உரைத்தான்.
அபிமன்யுவிற்கு தன் தாத்தா அரங்கநாதன் கற்பித்த விஷயங்கள் பசுமரத்தாணியாய் அவன் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது.
- முதலில் நோயுற்றவர்களை அச்சம் கொள்ள செய்து அவர்கள் மனோதைரியத்தை தகர்க்கக் கூடாது.
- பிரச்சனை என்ற ஒன்று வரின் அதற்கான தீர்வு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும்.
- அதே போல் அந்த தீர்வை நாம் வெகுதூரத்தில் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் அதற்கான தீர்வு நம் அருகாமையிலேயே இருந்தும் நாம் உணராமல் போய்விடுவோம்.
- எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் நாம் நோயுற்றவர்களை அதிலிலருந்து மீட்க முடிந்தளவு துவளாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- நாம் எல்லா உயிர்களையும் காக்க வல்லவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை எனினும் நாம் எந்நிலையிலும் எத்தகைய துயர் ஏற்பட்டாலும் எந்த உயிரையும் கொல்லத் துணியும் பெரும் பாவச் செயலை மட்டும் செய்யவே கூடாது என்று உரைத்திருந்தார்.
இவையே அபிமன்யுவின் மூல மந்திரம். வெகுவிரைவில் அவனின் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்படும் போது அவனை சக்கரவியூகத்தில் சிக்க வைக்கப் போவதும் மீட்கப் போவதும் இந்த வரிகள்தாம்.
கொங்ககிரி மக்களைப் பீடித்த அந்தக் கொடிய நோயில் இருந்து காக்க அபிமன்யு அவன் தாத்தா சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினான். அந்த ஊரிலேயே விளைந்த மூலிகைகளை வைத்தே அவர்கள் உயிரைக் காப்பாற்ற அவன் கிட்டதட்ட நாற்பது நாட்கள் உறக்கமின்றி அயராது பாடுபட்டு வைத்தியம் புரிந்தான். அபிமன்யு தன் தாத்தாவின் கற்பித்தல் மற்றும் அவனின் திறமை கொண்டு நம்பிக்கையோடு செய்த முயற்சி பலனளித்தது. அதே நேரத்தில் ஈஷ்வர்தேவ்வின் திட்டமும் தரைமட்டமானது.
அபிமன்யு அந்த மக்களைக் காப்பாற்றிய பின் இதற்குப் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியையும் அவன் கண்டுகொள்ள ஆரம்பித்தான். அவன் தேடல் முடிவுற்ற இடம் ரா மெடிக்கல் ரிசர்ச் சென்டர். அவர்களின் மோசமான திட்டத்தை முறியடித்ததோடு இல்லாமல் அர்ஜுனும் அபிமன்யுவும் சேர்ந்து இது குறித்து இன்னும் பற்பல விஷயங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அப்படியாக அபிமன்யு தெரிந்து கொண்ட விஷயங்கள் ஈஷ்வர் மீது அளவில்லாத வெறுப்பை ஏற்படுத்தியது.
அபிமன்யுவும் ஈஷ்வர் தேவ்வும் உலகின் வெவ்வேறு மூலையில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காமலே துவேஷத்தையும் கோபத்தையும் வளர்த்துக் கொண்டு எதிரிகளாய் நின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஓரே கோட்டில் இணைத்து நேருக்கு நேராய் சந்திக்க வைக்கும் வல்லமை படைத்தவள் நம் நாயகிதான்.
**************
மனிதன் என்னதான் மாய்ந்து மாய்ந்து தன் அறிவியல் அறிவால் இந்த பூமித் தேவதையின் அழகை சீரழித்துக் கொண்டிருந்தாலும் அவள் தன் இயற்கையின் ஆளுமையை அத்தனை சீக்கிரத்தில் விட்டுத்தரத் தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்குச் சாட்சியாக இன்னும் சிற்சில மலைகளும் காடுகளும் தம் எழில் கொஞ்சும் இயற்கையின் அழகால் ஆட்சி புரிந்து கொண்டிருந்தன. அத்தகைய பசுமையும் வளமையும் சூழ்ந்த பொள்ளாட்சி நகராட்சியில் உள்ள சுற்றலாத்தலமாக அமைந்துள்ள ஆனைமலையை நோக்கியே அபிமன்யுவின் ஜீப் பொறுமையாய் சென்று கொண்டிருந்தது.
அந்த இடத்தின் செழிப்பும் வனப்பும் நம் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்ய, ஒருவித சில்லென்ற உணர்வு நம் தேகத்தை சிலிர்ப்படையச் செய்து கொண்டிருந்தது.
அங்கே விழிகள் பார்க்கும் திசையெல்லாம் இயற்கையின் விந்தை! அவற்றைப் பார்த்து பார்த்து வியந்து கொண்டே இருக்கலாம். இன்றே இப்படியெனில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை அரசியாய் திகழும் இந்த மலைமகளின் அழகை கண்டு ரசித்திட கண்கள் கோடி வேண்டும்?! ஆனால் அத்தகைய கொடுப்பினை நமக்கில்லை.
இந்த இயந்தரத்தனமான வாழ்க்கையை விடுத்து அந்த இயற்கைக்குள்ளே மீளாமல் தொலைந்துவிடக் கூடாதா என்ற எண்ணம் தோன்ற, அது சாத்தியமில்லை என பெருமூச்செறிந்து கொண்டு மேலே அபியன்யுவோடு நாமும் அவன் செல்லும் திசை நோக்கிப் பயணிப்போம்.
அங்கே உள்ள சலசலக்கும் அருவிகளைக் கடந்து கம்பீரமாய் நின்று பல காலமாய் தம் மாட்சிமையை உரைக்கும் அந்த ஆனைமலை பாதையில் அபிமன்யு கருப்பு நிற ஜீப்பை ஓட்டிக் கொண்டு அந்தச் சூழலின் வளமையையும் செழிப்பையும் ரசித்தபடி போய் கொண்டிருந்தான். இந்தப் பாதை அவனுக்கு ரொம்பவும் பழக்கப்பட்டதெனினும் அவன் இவ்விடத்தின் பசுமையும் அழகையும் எத்தனை முறை ரசித்தாலும் அவனுக்கு சலிப்புத் தட்டுவதேயில்லை.
எப்போதுமே அவன் செல்லும் திசையெல்லாம் உள்ள மரங்களையும் தாவரங்களையும் உன்னிப்பாய் கவனித்தபடியே வருவது அவனுக்கு வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமான தாவரமும் மரமும் அவன் கண்ணில் பட்டுவிட்டால் அங்கேயே நின்று அதன் ஆராய்ச்சியில் இறங்கிவிடுவான்.
இயற்கையின் மீது அவனுக்கு ஏன் இத்தனைக் காதல் என்று அவனுக்கே விளங்கவில்லை. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவனின் காதலையும் மனதையும் முழுமையாய் தனக்கே உரித்தாக்கிக் கொள்ள ஒருத்தி வரவிருக்கிறாள். ஒரு பிறவியையே அவன் அவளுக்காக விட்டுக்கொடுத்து விட்டு மீண்டும் அவளின் மீதே காதலில் திளைக்கப் போகிறான் என்பதை அப்போது அவன் நிச்சயம் யூகித்திருக்கக் கூட மாட்டான்.
அபிமன்யுவின் ஜீப் வந்து நின்ற இடம் ஆனைமலை பகுதியில் உள்ள கரிசன் சோழா. அங்கே உயரமான மரங்கள் செடிகள் பரவிக்கிடக்க கேரளத்தில் அமைந்திருக்கும் கொட்டாரம் போல ஒரு அழகிய பெரிய வீடு நம்மை ஈர்க்க அதன் ஓடுகள் எல்லாம் பச்சை வண்ணக் கொடிகள் சூழப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் வெளிப்புறமே சௌந்தரியத்தின் ரூபமாய் காட்சியளித்தது. மேற்புறம் உள்ள கோபுரம் போன்ற அமைப்பு வானை நோக்கிப் பார்த்த வண்ணம் இருக்க அதன் வாசல் புறத்தில் சிவப்பு நிற தூண்கள் அந்த வீட்டினையேத் தூக்கி தாங்கியபடி நின்றன என்றே சொல்ல வேண்டும்.
பார்க்க வீடு போன்றே காட்சியளித்தாலும் ஆயிரம் காலத்திற்கு மேல் பழமையான ஆதுர சாலை அது. அக்னீஸ்வரி தன் மரணத் தருவாயில் உரைத்ததைக் கேட்டு சுவாமிநாதன் தன் பெயரனோடு ஆரை நாட்டை விட்டு வந்து இந்த ஆனைமலை நாட்டில்தான் அன்று குடியேறினார். அங்கே உள்ள கரிசன் சோழா பகுதியில் பலவகையான மூலிகைத் தாவரங்களும் அரிதான மூலிகை பண்பு கொண்ட மரங்களும் நிரம்பி இருந்தன என்பதை அறிந்த சுவாமிநாதன் அவ்விடத்தில் மீண்டும் ‘அரங்கநாதன் ஆதுர சாலை’ அமைத்து தன் வைத்திய பணியை மீண்டுமே தொடர்ந்தார்.
அன்று அவரின் ஆதுர சாலை சாதாரணமாக ஓலையால் வேயப்பட்டிருந்த குடிலாயிருந்து நாளடைவில் பல பெரும் பேறும் சிறப்பும் பெற்றது. அந்த ஆதுர சாலை சிறப்பை அறிந்த பல பேரரசர்களும் சிற்றரசர்களும் பொன்னையும் பொருளையும் குவியல் குவியலாய் வழங்கிக் கௌரவித்தனர்.
சுவாமிநாதனின் பேரன் அரங்கநாதன் காலகட்டத்தில் கரிசன் சோழாவின் பெரிய விசாலமான இடத்தில் பிரமாண்டமான இந்தக் கொட்டாரம் அமைக்கப்பட்டது. ஆனால் சந்திரன் தேய்பிறையை காண்பதைப் போல் அவர்களின் பெருமை எல்லாம் காலங்கள் கடந்து செல்ல செல்ல தேய்ந்து கொண்டே வந்தது.
அதுவும் நூற்றாண்டுகளை கடந்து அபிமன்யுவின் தாத்தா அரங்கநாதன் காலத்தில் வைத்திய சாலையின் சிறப்பெல்லாம் குன்றி மொத்தமாய் இருள் சூழ்ந்து கொண்டதென்றே சொல்லலாம். ஆனால் மீண்டும் அபிமன்யு தலைதூக்கி அந்த ஆதுர சாலைக்குப் புத்துயிர் தந்தான்.
இப்போது அந்தப் பழமையான ஆதுர சாலையின் முன்புறம் அழகான மூலிகை தோட்டத்தில்தான் அபிமன்யு தன் ஜீப்பிலிருந்து இறங்கினான். அப்போது உள்ளே இருந்து ஒரு வயதான முதியவர் காவி நிற வேட்டியும் மேலே அதே நிறத்தில் துண்டும் போர்த்தியிருக்க அவரின் வெண்தாடி மார்பைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவர் பெயர் திருமூர்த்தி. அவரும் அபிமன்யுவின் தாத்தா அரங்கநாதனோடு சேர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தவர்.
அந்த தோட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்ட பாதையில் அவர் அபியை நோக்கி நடந்து வந்தார். கிட்டத்தட்ட எழுபது வயதை எட்டியிருந்தும் அவரின் தடுமாற்றம் இல்லாத நடையும் நிமிர்ந்த உடலமைப்பும் அவரின் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
திருமூர்த்தி அபிமன்யுவின் விழிகளில் வெற்றிக் களிப்பு மின்னிக் கொண்டிருப்பதை கூர்ந்து கவனித்தபடி வர அவன் வேகமாய் நடந்து வந்து அவரை இறுக அணைத்துக் கொண்டு, “பூ கிடைச்சிடுச்சு தாத்தா…” என்று கொண்டாட்டமாய் உரைத்தான்.
திருமூர்த்தி அவன் பிடியில் இருந்து விலகி முகத்தை சுருக்கியபடி,
“போங்க தம்பி… சும்மா விளையாடாதீங்க… எங்க காலத்திலேயே நாங்க அந்த சந்திரவதனியைப் பார்த்ததில்லை… நீங்க என்னவோ இப்ப போய் கிடைச்சிடுச்சுன்னு… தேவையில்லாத வேலை எல்லாம் வேணாம்னு சொன்னா… கேட்காம… சும்மா அலைச்சல் பட்டுகிட்டு… சரி சரி…களைப்பாய் இருப்பீங்க… போய் குளிங்க தம்பி” என்றார்.
அபி ஒவ்வொரு முறையும் ஏமாற்றமாய் வருவதை மனதில் எண்ணிக் கொண்டு திருமூர்த்தி அவ்வாறு சலிப்போடு உரைத்தார்.
அபியின் முகம் சுருங்கிவிட, “என்ன தாத்தா நீங்க? நான் எதுக்கு விளையாடப் போறேன்… சந்திரவதனி பூவை நான் என் உயிரையே பணயம் வைச்சு பறிச்சிட்டு வந்திருக்கேன்… நீங்க என்னமோ நம்பாமாட்டேங்கறீங்க… இருங்க எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி ஜீப்பிலிருந்து சிறு மூடிப்போட்ட கூடையை எடுத்து வந்தான்.
இப்போது திருமூர்த்திக்கு உண்மையிலேயே ஆவல் பெருகிட அந்தக் கூடையை வாங்கி ஆர்வமாய் திறந்தார். அதன் மீது மூடியிருந்த வெண்ணிற ஈரத் துணியை விலக்கி விட்டு லேசாய் வாட்டமுற்றிருந்த போதும் அந்த கருநீல வண்ணத்தில் இருந்த சந்திரவதனி மலரைப் பார்த்த போது அது கண்கொள்ளா காட்சியென்றே தோன்றி அவரை வியப்பில் ஆழ்த்தியது. திருமூர்த்தியின் முகம் பிரகாசமடைய அவர் ஆச்சர்யம் பொங்க தம் சுருங்கிய பார்வையை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இத நானும் உங்க தாத்தாவுமே கேள்விதான் பட்டிருக்கிறோம்… ஆனா இந்த காலத்துல… எப்படி… இப்பவும் என்னால நம்ப முடியலயே தம்பி” என்று குழப்பமாய் அவர் கேட்க அபி தன் பேகில் இருந்த குறிப்பை அவரிடம் காண்பித்தான்.
அதை வாங்கிப் படித்த திருமூர்த்தி இப்போது நம்பிக்கை பெருகி வியப்போடு அபியை நிமிர்ந்து பார்த்து, “இந்த பூ… மூன்று நான்கு சந்ததிக்கு முன்னாடியே அழிஞ்சிடுச்சுன்னுல்ல நினைச்சிட்டிருக்கோம்… நீங்கதான் மெனக்கெட்டு தேடி அலையறீங்கன்னுல நினைச்சேன்… ஆனா பெரிய விஷயம் தம்பி… எப்படியோ கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டீங்களே!” என்று அவன் தோள்களில் பெருமையோடு தட்டினார்.
“அதான் தாத்தா அபி… நான் நினைச்சதை எப்படியாவது முடிச்சுக் காட்டிடுவேன்” என்று பெருமிதத்தோடு அவன் தன் டீஷர்ட் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
“உங்க தாத்தா என்கிட்ட அடிக்கடி சொல்வார்… என் பேரன் கோடில ஒருத்தன்… எதை நினைச்சாலும் அதை செஞ்சு முடிச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பான்… அவன் பெருசா சாதிச்சு எல்லாரும் பிரமிக்கிற மாதிரி பெரியாளா வருவான்… ஆனா அதை பார்க்க எனக்கு ஆயுசு இருக்குமோ என்னவோன்னு வருத்தப்படுவாரு… அவர் உங்களைப் பத்தி சொன்னதெல்லாம் சத்திய வாக்குதான் தம்பி” என்று சொல்லிக் கொண்டே அவரின் கண்களில் நீர் துளிர்க்க அபியும் தன் தாத்தாவின் நினைவில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விழியோரம் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டான்.
பின்னர் அபி, “இந்தாங்க தாத்தா… இதை எடுத்து வைங்க… நான் போய் குளிச்சிட்டு வர்றேன்” என்று கூடையை திருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு முன்னேறிச் சென்றவனிடம் திருமூர்த்தி, “எங்க எடுத்தேன்… ஏது என்னன்னு ஒண்ணும் சொல்லாம போறீங்களே தம்பி” என்று கேட்டார்.
“குளிச்சிட்டு வந்து… விவரமா எல்லாத்தையும் சொல்றேன் தாத்தா” என்று வாசல் படிக்கட்டுகளில் ஏறி முன்னேறிச் சென்றான்.
அந்த முதல் பெரிய கனமான வேலைபாடுடன் கூடிய வாசற் கதவை கடந்து அவன் உள்ளே செல்ல இன்னும் அவன் இரண்டு மூன்று வாசற் கதவுகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த வீட்டின் அமைப்பும் அங்கிருந்த பொருட்களுமே அதன் பழமையையும் பாரம்பரியத்தையும் உரைத்துக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் நடுவில் ஒரு விசாலமான முற்றம் தூண்கள் சூழ அமைந்திருந்தது. அந்த வீட்டின் பெரிய விஸ்தாரமான இடத்தில் நோயுற்றவர்களுக்கு மும்முரமாய் வைத்தியம் நடந்து கொண்டிருந்தது. முதிர்ந்த தோற்றமுடைய வைத்தியர்கள் சிலரும் இளம் வயதினர்கள் ஒன்றிரண்டு பேரும் சித்த வைத்தியத்தின் மீது ஆர்வம் கொண்டு கற்கும் நோக்கில் அங்கேயே வந்து தங்கி உதவி புரிந்து கொண்டனர்.
கொடிய நோய்களால் பிழைக்கவே முடியாது என்ற நிலையில் வந்தவர்களையும் அதிசயிக்கும் விதமாய் புத்துயிர் பெறச் செய்திருக்கின்றனர். நிறைய நோயாளிகள் கை கால்கள் இயங்காமல் வந்து இயல்பான முறையில் மீண்டும் பழைய உடல் நிலையைப் பெற்றும் அங்கிருந்து சென்றனர். அத்தகைய சிறப்பான முறையில் அந்த ஆதுர சாலை இயங்கிக் கொண்டிருந்தது.
அந்கே பல அறைகள் சூழ்ந்திருக்க அபி தன்னுடைய அழகான சிறு அறையில் தன் பேகை வைத்து விட்டு வெளியே வந்தான்.
மீண்டும் விழிகள் சங்கமித்தன
அந்த வீட்டின் பின்புறம் இருந்த விசாலமான அந்த அழகிய தண்ணீர் குளத்தில் சூரியன் ஒளிப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. அந்த குளிர்ந்த நீரில் நீராட அபிமன்யு கால் வைத்த போது ஒரு வித சிலிர்ப்பை அவன் தேகம் உணர ஏற்கனவே அந்த இடம் குளிர் பிரதேசமாய் இருக்க அந்த சில்லென்ற உணர்வை ரசித்தபடி அந்த நீரில் முழுவதுமாய் மூழ்கித் திளைத்தான்.
அவன் அத்தனை தூரம் பயணித்து வந்த களைப்பையும் சோர்வையும் அந்த நீரில் மூழ்கி நீக்கி விட்ட பின், மனமும் உடலும் லேசாகிட குளத்தை விட்டு வெளியேறியவன் துண்டால் துவட்டிவிட்டு வெண்மையான வேட்டியை அணிந்து கொண்டு தன் பரந்த மார்பை மறைத்தபடி துண்டை எடுத்து மேலே போர்த்திக் கொண்டான்.
அந்த உடையில் அவனின் தோற்றம் முற்றிலும் மாறியிருக்க அவனின் கம்பீரமும் மிடுக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடிக் கூடியிருந்தது. அவன் அந்தக் குளத்திற்கு அருகிலேயே செடிகளும் கொடிகளும் சூழ்ந்திருந்த சிறு கோவிலில் சிலையென அமைக்கப்பட்டிருந்த அரங்கநாதனை வழிப்பட்டு தீபம் ஏற்றி வைத்து கண்களை மூடித் தியானிக்க அந்த இடத்தில் குடிகொண்டிருந்த அமைதியினைக் குலைத்தபடி,
“இப்ப உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்னையே இப்படி முறைச்சு பார்த்துகிட்டிருக்க?” என்று ஒரு பெண்ணின் குரல் அவன் செவியில் புகுந்து மனதைத் துளைத்திட அவன் சட்டென்று கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஆனால் அவன் விழிகளின் தேடலில் யாரும் தென்படாமல் போக அந்த எண்ணத்தை தவிர்த்து அங்கே வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அவனின் அடர்ந்த புருவத்திற்கு இடையில் உள்ள இடைவெளியில் பாலமென வைத்துக் கொண்ட போது மீண்டும் அந்த ரம்மியமான குரல் கொஞ்சம் உயர்த்தலாய்,
“ஒழுங்கா போயிடு… இன்னும் கொஞ்சம் நேரம் இங்க நின்ன… என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்ற மிரட்டல் தொனியில் மீண்டும் அந்தக் குரல் மென்மையாக இருந்த போதும் வன்மையான தொனியில் காற்றில் வந்து அவன் செவியைத் தீண்டி மனதைப் பிசைந்தது.
அவன் மனம் அந்த குரலுக்கு உரியவளைக் காண வேண்டுமென ஏங்க மீண்டும் தன் பார்வையை அலைபாய விட்டுவிட்டு மீண்டும் ஏமாற்றத்தோடு குழப்பத்தில் ஆழ்ந்தான்.
அவள் இன்னும் நிறுத்தியபாடில்லை. “அந்த கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்… நீயும் வரக் கூடாது… பேச்சு பேச்சாதான் இருக்கணும்” என்று மீண்டும் அந்தக் குரல் கேட்க, அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. இப்போது சரியாய் அந்தக் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான்.
அந்த சிறு கோவிலின் சற்று அருகாமையில் மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில் ஒரு பெண் திரும்பி நின்று கொண்டு எதிரே இருந்த மரத்தின் மீது அமர்ந்து அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த குரங்கிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள்.
இதைப் பார்த்த அபிமன்யு தலையசைத்து சத்தம் வராமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அந்த குரங்கு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பெண்ணின் முகம் மட்டும் அவனுக்குப் புலப்படவில்லை.
மீண்டும் அந்த பெண், “என் கேமரா வேணுமோ… நோ வே… நீ என்னதான் குட்டிகரணம் அடிச்சாலும்… உனக்கு அது கிடைக்காது… நெவர்” என்று அவள் விரல்களை அசைத்து மிரட்டிக் கொண்டிருக்க, இப்போது வானரன் கொஞ்சம் சினம் கொண்டு முறைத்து தன் பற்களைக் கோரமாய் காட்ட,
அபிமன்யு ஆர்வமாய் இப்போதாவது அவள் பயப்பட்டு திரும்புவாளா என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம்தான்.
அந்தப் பெண் அவளின் இடுப்பின் மீது கை வைத்து தோரணையாய்,
“ஒய்! என்ன முறைக்கிற? என்னை உன்னால ஒண்ணும் செய்ய முடியாது… பார்க்கலாமா?!” என்று சவால் தொனியில் உரைத்தாள்.
அபியால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘குரங்குகிட்ட சவால் விட்டுகிட்டிருக்கா… மூளை கீளை கலங்கிப் போய் வைத்தியம் பார்க்க அழைச்சிட்டு வந்திருப்பாங்களோ? ஆனா டிரஸ்சைப் பார்த்தா அப்படித் தெரியலையே… எதுவாயிருந்தாலும்… முகத்தைப் பார்த்தாதானே தெரியும்… இப்போதைக்கு இவ பேச்சு வார்த்தையை முடிக்க மாட்டா போலயே!” என்று அபி தனக்குள்ளேயே சொல்ல,
அவளோ மஞ்சள் வண்ண புடவையை நேர்த்தியாய் உடுத்திக் கொண்டு அவளின் கூந்தல் மேலே மட்டும் லேசாய் கோர்க்கப்பட்டு கீழே அவள் முதுகை மறைத்த வண்ணம் பரந்திருந்தது. அவளின் பின்புறமோ சிலை போன்ற வடிவமைப்பில் இருக்க முதல் முறையாய் ஒரு பெண்னை பார்க்காமலே அவளின் குரலும் துடுக்கான செயலும் உள்ளுக்குள் ஒரு வித ஈர்ப்பை உண்டாக்க அது எப்படி என்று காரணம் புரியாமல் அவள் முகத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற தவிப்போடு நின்று கொண்டிருந்தான்.
அந்த பெண் அந்த வானரனை லேசில் விடுவதாகத் தெரியவில்லை. இப்போது அவள் தன் வீரப்பராகிரமத்தைக் காட்டும் விதமாய்,
“என்னையே முறைக்கறல்ல… இப்போ நான் உன்னை என்ன பண்றேன் மட்டும் பாரு” என்று சொல்லியபடி அருகிலிருந்த மரத்தில் நீட்டிக் கொண்டிருந்த கிளையை உடைக்க முயற்சி செய்தாள்.
அபிக்கு அவளின் செயலைப் பார்த்து கோபம் ஏற்பட்டது. எல்லா தாவரங்கள் மரங்களுக்கும் உயிரும் உணர்வும் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவன் அவன். தேவையில்லாமல் யாரும் மரக்கிளைகளை உடைக்கவோ தாவரங்களை உபயோகமின்றி பறிக்கவோ அனுமதிக்க மாட்டான்.
அவன் அந்த பெண்ணை நோக்கி, “ஏ… நிறுத்து” என்று முன்னேறி வர அந்த வானரனும் அவளின் செயலால் சினம் கொண்டு அவளை நெருங்கி வர நினைக்க அந்த பெண்ணோ இப்போது கொஞ்சம் அச்சம் கொண்டு பின்னோடு காலெடுத்து வைத்தாள்.
அப்போது அபி பின்புறம் இருந்த கல்லை பார்த்து,” ஏய் கீழே.. .பார்த்து” என்று உரைக்கும் போதே அந்த கல் தடுக்கி விழப் போனவளை அவனின் கரங்களில் தாங்கிக் கொண்டான்.
அப்போதுதான் அபிமன்யு அவளின் முகத்தைப் பார்த்தான். அந்த பெண்ணின் முகத்தை இத்தனை அருகாமையில் பார்க்க அபியின் விழிகள் ஸ்தம்பித்துப் போனது.
அந்த பெண்ணின் வானவில் போன்று நேர்த்தியாக வளைந்த புருவங்களும் மான் போன்ற விழிகளும் நீட்டமான மெல்லிய மூக்கும் அதன் கீழே பூவின் இதழ்களைப் போலவே சிவந்த இதழ்களும் அவள் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியமா இல்லை நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பமா என்ற சந்தேகம் அபிக்கு எழுந்தது.
காந்தமென தன்னை இழுப்பது அவளின் அழகு மட்டும்தானா?! எல்லா பெண்களையும் சகோதரத்துவத்தோடு பாவிக்கும் நானா இப்படி இந்தப் பெண்ணை பார்த்த மாத்திரத்தில் மதி மயங்கி தன்னிலை மறந்து நிற்கிறேன்? இயற்கை வனப்பை மட்டுமே அழகென்று ரசித்த தன் விழிகள் அவள் முகத்தின் அழகில் மெய்மறந்து போனதை அவனாலேயே நம்ப முடியவில்லை.
அவளைப் பார்த்த மாத்திரத்தில் மோகமும் காதலும் ஒரு சேர ஊற்றெடுக்கச் செய்யும் அவளின் வதனத்திற்குள் அபி கட்டுண்டான். அவளை விட்டு அகல்வேனா என அவன் விழி அடம்பிடிக்க, அவளுமே அவன் மீது பதித்த பார்வையை எடுக்கத் தயாராக இல்லை.
ஏன் அவன் கரத்திலிருந்து மீளும் முயற்சியையும் அவள் செய்யவில்லை. அவனின் கூரிய விழிகளும் ஆண்மையின் அத்தனை அம்சமும் பொருந்திய அவனின் உடலமைப்பும் தன்னை தாங்கி ஸ்பரிசிக்கும் அவனின் கரங்களின் அணைப்பும் மீள்வதற்கு வழியில்லாமல் அவளின் பெண்மையையும் நாணத்தையும் மறக்கடித்தது.
இருவரின் கருவிழிகளும் மீண்டுமே பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்து ஒன்றாய் சங்கமிக்க அவர்கள் இருவரின் மனமும் ஒரு சேர, “இந்த முகத்தை எங்கே எப்போது பார்த்தோம்?” என்ற கேள்விக்கான தேடலில் ஆழ்ந்துவிட்ட காரணத்தால் அவர்களைச் சுதாரிக்க சொல்ல மறந்து போனது.
அழகின் பால் ஈர்க்கப்பட்டுப் பார்த்த நொடியில் பிறந்த காதல் இல்லை அவர்களுடையது. பல காலங்கள் காத்திருப்பின் தேடலின் முடிவாய் இன்று இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
மீட்க முடியாமல் கட்டுண்ட இருவரையும்அபியின் ஈரமான கேசத்தில் வழிந்த நீர் அவன் நெற்றி குங்குமத்தில் வழிந்து, அவனின் கரத்தில் லயித்து உலகையே மறந்திருக்கும் அந்தப் பெண்ணின் புருவங்களுக்கு மத்தியில் சொட்ட, அப்போது அவனிடம் முழுமையாய் தொலைந்த அவளின் உணர்வுகள் துரதிஷ்டவசமாய் விழித்துக் கொண்டன.
உடனடியாக அவள் தன்னை அவனின் கரத்திலிருந்து மீட்டுக் கொண்டு தன் நெற்றியில் வீழ்ந்த குங்குமத்தை தொட்டுப் பார்த்து… தான் என்ன இப்படி செய்தோம் என்றெண்ணி தலையிலடித்து அவளை அவளே கடிந்து கொண்டாள். அவனின் உடலின் ஈரம் அவளின் மீதும் ஒட்டிக் கொள்ள நாணம் ஏற்பட நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவிக்க,அவனோ அவளைப் பிரிந்த நொடியில் பிறந்த ஏக்கத்தைப் பெருமூச்சோடு வெளியே விட்டு தன் மேற்த்துண்டை சரி செய்து கொண்டான்.
அவள் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் பேரழகி என்பதில் ஐயமில்லை. இருந்தும் ஏதோ ஒரு உறவும் உணர்வும் அவளிடம் தனக்கு இருக்கிறதோ என்ற எண்ணத்தில் அபிமன்யு குழம்பி நிற்க அவளோ இப்போது அனல் தெறிக்கும் பார்வையோடு அவனை முறைத்தபடி நின்றாள்.