mu-18

அண்டமும் பிண்டமும்

சூர்யா அந்தப் புத்தக அறையை தன்னிலை மறந்து பார்த்தபடி லயித்திருந்தக் காரணத்தினால் அவனின் அழைப்பு குறித்த செய்தியை அவள் மூளை வெகுதாமதமாகவே கொண்டு போய் சேர்த்தது. அவள் அதனை உணர்ந்து திரும்பும் போது அவன் பார்வையோ அவள் மீது நிலைகொண்டிருக்க,

“சாரி மிஸ்டர். அபி… கூப்பிட்டீங்களோ?” என்று கேட்டாள்.

அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும் அவன் மனம் கண்டுகொள்ளாமல் இல்லை. இருப்பினும் அவன் எண்ணங்களைத் தள்ளி வைத்துவிட்டு, “ம்ம்ம்…  கூப்பிட்டேன்… நீங்கதான் கவனிக்கல” என்றான்.

“நான் இந்த ரூம்ல இந்தளவுக்கு புக்ஸ் எதிர்ப்பார்க்கல… எல்லா வகையான மெடிஸனல் புக்ஸும் வைச்சிருக்கீங்க…  இட்ஸ் வெரி இம்பிரஸ்ஸிவ்… வாட் அ கலெக்ஷன்?! அப்படியே பார்த்துகிட்டிருந்தேனா… அதான் நீங்க கூப்பிட்டதைக் கூட நான் சரியா கவனிக்கல” என்று அவள் தன் வியப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்க,

அவன் புன்னகையோடு, “எஸ்… எல்லா டைப்ஸ் ஆஃப் மெடிஸனல் புக்ஸ் என் கலெக்ஷன்ஸ்ல இருக்கும்… நம்ம எதைப் பத்தி ஆராய்ச்சி செய்றோமோ அதுனுடைய எல்லா டைமன்ஷனையும் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்னு நான் நினைக்கறேன்” என்றான்.

அவளோ அவன் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அலமாரியில் உள்ள புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் பார்வை அவற்றை ஆராய்ந்தபடியே, “நீங்க ஏன் அக்னிங்கற பெயரை உங்க புனைப் பெயராய் சூஸ் பண்ணீங்க… எனி ஸ்பெஷல் ரீசன்?” என்று கேட்டபடி அவளின் செல்ஃபோன் ரெக்கார்டரை ஆன் செய்து அங்கிருந்த மேஜை மீது வைத்தாள்.

“நத்திங் ஸ்பெஷல்… அந்தப் பெயர் எனக்குத் தோணுச்சு… வைச்சுக்கிட்டேன்… தட்ஸ் இட்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டபடியே சூர்யா ஓலைச்சுவடிகள் இருக்கும் கண்ணாடிக் கதவு அருகில் போய் நின்றபடி, “இந்த ஓலைச் சுவடிகளும் சித்த மருத்துவத்தைப் பற்றினதா… இதெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைச்சது?” என்று வினவினாள்.

அவனும் அந்த ஓலைச் சுவடிகள் இருந்த கண்ணாடி கதவைத் தொட்டுப் பார்த்தபடி, “இதெல்லாம் வழிவழியாய் எங்க முன்னோர்கள் பாதுகாத்துட்டு வந்த மருத்துவக் குறிப்புகள்… என்னைப் பொறுத்துவரை இந்த சுவடிகள் எல்லாம் விலை மதிப்பில்லாதப் பொக்கிஷம்… பல நோய்கள் பற்றியும்… அதை சரி பண்ற மருத்துவ முறை பற்றியும் இதுல இருக்கு…

அதுமட்டுமில்லாம் ரொம்ப அரிய வகை தாவரங்கள் பற்றியக் குறிப்பும் இருக்கு… இந்த மாதிரி உலகம் முழுக்க பாதுகாக்கப் பட வேண்டிய நிறைய மருத்துவம் பற்றிய ஓலைச் சுவடிகளை ஒன்று திரட்டினா பல முக்கியமான குறிப்புகள் கிடைக்கலாம்… பட் அதுக்கு நம்ம அரசாங்கம் முனைப்போடு முயற்சி செய்றதில்ல” என்றான்.

அவன் பதிலைக் கவனித்தபடி, “ஆதாயம் இல்லாத வேலையை நம்ம அரசாங்கம் எப்போ செஞ்சிருக்கு” என்று சொல்லிப் புன்னகைத்தவள் மீண்டும் அவன் புறம் திரும்பி, “சித்த மருத்துவத்தில் பல குணப்படுத்த முடியாத நோய்களான கேன்சர்  மாதிரியான நோய்களைக் கூட குணப்படுத்த முடியும்னு உங்க புக்ல எழுதி இருக்கீங்களே… அது எந்தளவுக்கு சாத்தியம்?” என்று கேள்வி எழுப்ப,

அவன் புன்னகை ததும்பிய முகத்தோடு,

“மறுப்ப துடல் நோய் மருந்தென லாகும்

மறுப்ப துள நோய் மருந்தெனச் சாலும்

மறுப்ப தினி நோய் வாராதிருக்க

மறுப்பது சாவை மருந்தினலாகும்” என்று உரைக்க அவளோ  குழப்பமாய் நோக்கி,

“இதுவா நான் கேட்ட கேள்விக்கான பதில்… எனக்கு சத்தியமா புரியல” என்று தலையசைத்தாள்.

“இது திருமூலச் சித்தரின் கருத்து… மருத்துவம் என்பது உடல் நோயையும் மனநோயையும் குணப்படுத்துவது மட்டுமல்ல… நோய் வராமல் தடுத்து மரணமில்லாத வாழ்வைத் தருவதுன்னு சொல்லி இருக்காரு… அசாத்தியம்னு நினைக்கிற மரணமில்லா வாழ்வையே சித்தர்கள் சாத்தியம்னு சொல்லும் போது…  ஒரு நோயைக் குணப்படுத்துறது ரொம்ப சாதாரண விஷயம்…

எல்லா நோயையும் குணப்படுத்தும்  வழிமுறையை சித்தர்கள் சொல்லிட்டுப் போயிருக்காங்க… அதை எல்லாம் சரியாக செய்தால் நிச்சயமா சாத்தியம்… இதில் ரொம்ப முக்கியமான விஷயம்னு பார்த்தா…  மருந்துகளோ மருத்துவ முறை இல்ல… நம் எண்ணத்தின் சக்திதான்… நோயாளிகள் மட்டும் மனோதிடத்தோட நாம உயிர் வாழ்வோம்னு நம்பிக்கையோடு இருந்தால் எத்தகைய நோயிலிருந்தும் அவர்களை மீட்டுக் கொண்டு வந்துடலாம்” என்று உரைத்தான்.

“அதெப்படி? சாவை நோக்கிப் போயிக்கிட்டிருக்கவன்  மனோதிடத்தோட இருக்க முடியும்… தப்பா எடுத்துக்காதீங்க நீங்க சொல்றது இடியாட்டிக்கா இல்ல… பாம்பு கடிச்சதும் பதறாம இருன்னா எப்படி முடியும்… எல்லோருக்கும் உயிர் பயம் இருக்கும்… இட்ஸ் இம்பாசிபிள்” என்று அழுத்தமாக உரைத்தாள்.

அவன் மென்னகை புரிந்து, “மைன்ட் பவர்ல எனிதிங் இஸ் பாஸிபிள்… முயற்சி செஞ்சா முடியாததுன்னு எதுவும் இல்ல… மனசை ஒருநிலைப்படுத்தினா எல்லாமே சாத்தியம்தான்…நம்பிக்கையாக போராடி சாவோட பிடியில் இருந்து உயிர் பிழைச்சு வந்தவங்க எத்தனையோ பேர் இருக்காங்க” என்றான்.

“மரணம்ங்கறது நாம தீர்மானிக்கிற விஷயமா என்ன? இதுல மைன்ட் பவரால என்ன பண்ணிட முடியும்?” என்றும் மீண்டுமே அவள் அவன் சொன்னதை ஏற்காமல் கேள்வி எழுப்ப,

“மார்கண்டேயன் கதை கேள்விப்பட்டதில்லயா? அந்தக் கதையில அவன் மரணத்தையும் விதியையும் அவனோட ஸ்ட்ராங்க் வில் பவரால ஜெயிக்கலயா?” என்றான்.

“அது வெறும் கதை மிஸ்டர். அபி”

“நம்முடைய சரித்திரங்களும் வரலாறுகளும் வெறும்  கதைகள் மட்டுமில்ல… அதில் நிறைய ஆழமான அர்த்தங்கள் இருக்கு” என்று அவன் சொல்ல அவள் அப்போதும் நம்பிக்கையின்றி,

“ம்ம்ம்… இருக்கலாம்… பட் சில விஷயங்களை நான் கண்ணால பார்க்காம நம்பறதில்லை” என்றாள்.

“நான் கண்ணால பார்க்கறதைக் கூட நம்ப மாட்டேன்… என் மனசு எதை சரின்னு சொல்லுதோ அதைத்தான் நான் நம்புவேன்… ஏன்னா நாம பார்க்கறதும் கேட்கறதும் கூட சில நேரங்களில் பொய்யாக இருக்கலாமே” என்று அவன் சூர்யாவை பார்த்தபடி உரைக்க, அவன் தன்னைத்தான் சுட்டிக் காட்டுகிறானோ என்ற பதட்டம் உண்டானது.

அவள் தன் மனதின் எண்ணத்தைக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை திசைதிருப்பும் விதமாய், “ஒகே நாம எங்கயோ டைவர்ட் ஆகி வந்துட்டோம்… நாம கேள்விக்கு வருவோமே” என்றவளைப் பார்த்து அவனும் புன்னகையோடு தலையசைக்க,

“எந்தவொரு டெக்னிக்கல் எக்யூப்மென்ட்ஸ் இல்லாம… சித்த மருத்துவத்தில் நீங்க நோயை எப்படி கண்டுபிடிப்பீங்க?” என்றாள்.

“நோயைக் கண்டுபிடிக்கிறதுக்கு டெக்னிக்கல் எக்யூப்மென்டெல்லாம் தேவையா என்ன? ஒரு மனிதனோட நோயைக் கண்டுபிடிக்க வெறும் புறக்கண்ணால பார்த்தால் மட்டுமே முடியாது… அகக்கண்ணால் பார்த்து உணர்ந்து கொள்ளணும்னு சித்த வைத்தியம் சொல்லுது…

நம்ம உடலை உயிரோட இணைத்து வைச்சிருக்கறது, முக்கியமான மூன்று விஷயம்… அதுதான் வாதம், பித்தம் அப்புறம் சிலேத்துமம்… சித்தர்கள் இதைத்தான் முத்தாதுன்னு குறிப்பிடறாங்க…  இதைத்தான் திருவள்ளுவர்,

“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று” ன்னு

சொல்லி இருக்காரு… அதாவது வாதம் ஆகிய நம்முடைய சுவாசம், பித்தமாகிய உடல் உஷ்ணம் அப்புறம் சிலேத்துமமாகிய நீர்… இந்த மூன்றும் நம் உடம்பில் சீரான நிலையில் இருந்தா நாம ஆரோக்கியமா இருக்கோம்னு அர்த்தம்…  அப்படில்லாம அவற்றில் ஒன்று அதிகமானாலோ குறைந்தாலோ நோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுடும்… எல்லா நோயுமே இந்த மூன்றுக்கு கீழ் வந்துடும்” என்றான்.

அவனுடைய பதிலின் தெளிவும் தீர்க்கமும் சூர்யாவை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்க, அவனின் புத்திசாலித்தனத்திற்கு முன் தன் சாமர்த்தியம் பலிக்காதோ என்ற சிந்தனைகளில் அவள் மௌனமாகிப் புத்தகங்களை நோட்டமிட்டபடி  அவள் கண்ணில் பட்ட புத்தகத்தை உற்று நோக்கிவிட்டு,

“மெடிக்கல் சைன்ஸ் புக்ஸோட ஆன்மீக புத்தகங்களும் இருக்கு போல” என்றாள்.

“அது ஒண்ணும் ஆன்மீகம் பத்தினது மட்டும் இல்ல… அதுக்கும் மருத்துவத்திற்கும் நிறைய தொடர்பிருக்கு… கிட்டத்தட்ட நாம ஆன்மீகம்னு நினைச்சுகிட்டிருக்கற பல விஷயங்கள் நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்காக கடவுள்ங்கிற பெயரால் புகுத்தப்பட்டது. நாம வீட்டில் கடவுளாக வணங்குகிற வேப்ப மரம், துளசிச் செடி… நம்ம நெற்றியில் வைக்கிற குங்குமம் திருநீறு கடவுளுக்காக அனுஷ்டிக்கிற விரதம்னு எல்லாத்துக்குப் பின்னாடியும் ஒரு ஸ்ட்ராங்கான மெடிக்கல் ரீசன் இருக்கு” என்றான்.

சூர்யாவும் தலையாட்டியபடி “ம்ம்ம்… நானும் இதை எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்… நம்ம முன்னோர்கள் ரொம்ப புத்திசாலிங்க… ஆனா இந்த புக்ல அப்படி என்ன மருத்துவத்தைப் பத்தின மேட்டர் இருக்கு!” என்று கேட்டாள்.

“இன்னைக்கு விஞ்ஞானிகள் அட்வான்ஸ்ட் ரிசர்ச்னு பண்ணிட்டிருக்குற பல மேட்டரை நம்ம முன்னோர்கள் எப்பவோ சொல்லிட்டாங்க… சித்த மருத்துவம் வெறும் வைத்தியம் சார்ந்தது மட்டுமல்ல… மெய்ஞானம், விஞ்ஞானம், ஜோதிடம், பரிகாரம், பஞ்சபட்சி, சரம் இப்படி நிறைய விஷயங்கள் அதில் அடங்கியிருக்கு…

நம்ம விஞ்ஞானிகள் தேடிட்டிருக்கற பல கேள்விகளுக்கானப் பதிலை சித்தர்கள் சொல்லிட்டுப் போயிருக்காங்க…

என்ன? நாம இன்னைக்கு உதாசீனப்படுத்திக்கிட்டிருக்கற நம்முடைய மொழியும் கலை கலாச்சாரமும் பல அறிவார்ந்த அறிவியல் சிந்தனைகளைக் கொண்டது… அதுவும் தமிழ் மொழி என்பது வெறும் மொழி மட்டுமே இல்ல… அதில் அறிவியல் முதல் அறநெறி வரைக்கும் எல்லாமுமே இருக்கு” என்று சொல்லி அவன் ஆதங்கப்பட்டுக் கொண்டே கையில் இன்னொரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்து,

” கோடி கோடியாய் செலவு பண்ணி நம்ம பிளானட்ஸ் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க… அதைப் பத்தியும் சித்தர்கள் பாடி இருக்காங்க… இந்தப் பூமியை சுற்றியுள்ள கிரகங்களின் ஈர்ப்புவிசைக்கும் நம்ம உடம்புக்குமே தொடர்பு இருக்குன்னும்… அதனாலயே இன்ன இன்ன கிழமையில் நாம எதை எதை செய்யணும்னு பெரிய பட்டியலும்  இருக்கு… ஒரு சில நாட்களில் நாம மாமிசம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்வதற்குப் பின்னாடியும் இப்படிப்பட்ட அறிவியல் காரணங்கள் ஒளிஞ்சு இருக்கு…

சில கிரகங்களை நம்ம உடல் இயக்கத்தோடு ஒப்பிட்டும் சொல்லி இருக்காங்க… அதில் சூரியனை இதயத்திற்கும்… சந்திரனை நம்ம மூளைக்கும் ஒப்பிட்டு இருக்காங்க… இது இரண்டுமின்றி பூமி இயங்காது… அப்படித்தான் மனித உடலும்… இப்படி எல்லா கிரகங்களையும் நம்ம உடல் உறுப்பின் இயக்கங்களோட பொருத்தி சொல்லி இருக்காங்க… அதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்னு சித்தர்கள் குறிப்பிடறாங்க” என்றான்.

சூர்யா வியப்புக் குறியோடு, “அட்வான்ஸ்ட் ரிசர்ச்ங்கறீங்க… அண்டம்னு சொல்றீங்க பிண்டம்னு சொல்றீங்க…  வாட் மிஸ்டர் அபி… எனக்குப் புரியல” என்று வினவினாள்.

அபிமன்யு மெல்லியப் புன்னகையோடு, “அண்டம்னு சொல்லப்படுறது இந்த பூமி… பிண்டம்ங்கறது நம்ம உடல்… இரண்டுமே இயங்குகிறது… ஒரே மாதிரியான பார்ஃமுலாவில்தான்.

அதாவது நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் இந்த பஞ்ச பூதங்கள்தான் உலகம் இயங்க முக்கியக் காரணம்… அதே போலத்தான் நம்ம உடம்பும் இயங்குது… பூமியில் ஓடிட்டிருக்கற நதிகள் போல இரத்த நாளங்கள்… இந்த பூமியில் சுழன்றுகிட்டிருக்கிற வாயுவைப் போல நம்ம சுவாசம்… பூமியோட உஷ்ணத்தைப் போல நம்ம உடல் வெப்பம்… அதில்லாம நம்ம எலும்பு தசை போன்றவை நிலத்தையும்… ஆகாயம் நம்ம புரிதலுக்கு அப்பாற்ப்பட்டிருக்கிற உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் குறிக்கிறது… இந்தப் பரந்த விரிந்த ஆகாயத்திற்கு முடிவும் தொடக்கமும் எப்படி இல்லயோ அப்படித்தான் நம் மனித எண்ணங்களும்…

இந்த பிரபஞ்சம்தான் இந்த அண்டசராசரத்தை ஒரு விதிக்குள்ள இயக்கிகிட்டிருக்கு என்பது எவ்வளவு ஆச்சர்யமான விஷயமோ அப்படிதான் நம்ம எண்ணங்கள் மனித உடலை ஒரு விதியில் இயக்கிட்டிருக்கு…

நம்ம கூட சில நாட்களில் வரப் போற ஒரு கம்ப்யூட்டரோட லேங்குவேஜை நாம தெரிஞ்சிக்கறோம்… நம்ம மரணம் வரைக்கும் கூட வரப் போற இந்த உடலைப் பத்தி நாம தெரிஞ்சுக்க ட்ரை பண்றதே இல்ல…

ஏன் நமக்கு ஜுரம் வருது… நம்ம ஏன் மாத்திரை போடுறோம்… அந்த மாத்திரை என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்னு நாம தெரிஞ்சுக்கறோமா… நோ… எப்படி கண்மூடித்தனமா இந்த உலகத்தை அதனோட தூய்மையை நாசப்படுத்தறோமோ அப்படித்தான் இந்த உடம்பையும் நாம கண்டதை சாப்பிட்டு அசுத்தப்படுத்திட்டிருக்கோம்” என்றான்.

சூர்யா அவனை யோசனையோடு பார்த்து, “ஏன்? அலோபதி முறையில்… நம்மை ஆரோக்கியமா வைச்சுக்க முடியாதுன்னு சொல்றீங்களா?” என்றவள் கேட்க,

“முடியாதுன்னு இல்ல… முடிஞ்சாலும் அதை அவங்க செய்ய மாட்டாங்க…  இன்றையளவில் பெரிய பிசினஸாக மருத்துவம் மாறிகிட்டிருக்கு… எல்லோருமே நோயாளியா இருக்கணும்… அதுவும்  ஆயுட்காலம் முழுக்க… பல நோய்களுக்கு மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு அந்த மருந்துக்கு நாம அடிமையாகிட்டிருக்கோம்… கரெக்டா சொல்லணும்னா  நாம அடிமையாக்கப்பட்டிருக்கணும்… அதாவது நம்ம உடல் இயற்கையா செய்கிற விஷயத்தை எப்போ நாம மாத்திரை போட்டு செயற்கையா செயல்படுத்துறோமோ அப்போ நம்ம உடம்பு நாளடைவில் அந்த வேலையை இயற்கையா செய்யவதை நிறுத்திடும்… பாஃர் எக்ஸேம்பிள்… ஸ்லீப்பிங் டேப்ளட்… ஷுகர்  டேப்ளட் இப்படிப் பல” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க சூர்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘இவன் பொதுப்படையாகத்தான் சொல்கிறானா இல்லை இவன் ஆராய்ச்சி எதைக் குறித்தது… இதுக்கும் ரா மெடிக்கல் ரிசர்ச் சென்டருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? ‘ என அவள் மனம் குழப்பமடைந்த அதேநேரம் அவன் பார்வையோ அவளையே ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தது.

அவளோ தான் கேட்க வந்ததைக் கேட்டுவிட வேண்டியதுதான் என்ற எண்ணத்தோடு, “ட்யூமர், கேன்ஸர் இந்த மாதிரி  டிசீஸை ட்ரீட் பண்ண மாதிரி… டீ7 டிசீஸையும் ட்ரீட் பண்ணி இருக்கீங்களா… மிஸ்டர். அபி” என்று அவள் இயல்பாகக் கேட்க,

அவன் இப்போது தன் யூகம் சரியென்று எண்ணியபடி, “இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா?” என்றான்.

அவள் இயல்பாய் சிரித்தபடி, “ஏன்… இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றதுல என்ன பிரச்சனை மிஸ்டர்.அபி” என்றாள்.

“நீங்க  நேரடியா என்கிட்ட என்ன கேட்கணும்னு  நினைச்சீங்களோ… அதைக் கேளுங்க… நான் பதில் சொல்றேன்” என்று அபி அழுத்தமாய் சொல்ல,

அவன் தன்னை யூகித்து விட்டதை ஒருவாறு அறிந்து கொண்டவள், “நேரடியான்னா… என்ன கேட்கணும்… எனக்குப் புரியல” என்றாள் சமாளிப்பாக!

” உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியும்… புரியாத மாதிரி ஆக்ட் பண்ண வேண்டாம்” என்றவனை அவள் புன்னகையோடு பார்த்து,

“நான் ஆக்ட் பண்றேனா… ஏன் இப்படி கற்பனை பண்ணி நீங்களா ஏதாவது பேசிட்டிருக்கீங்க… என்னாச்சு அபி… உங்களுக்கு ஏதாச்சும் சைக்கலாஜிக்கலா டிஸ்ஸாடரா… ரொம்பப் புத்திசாலியா இருந்தா இப்படி எல்லாம் கற்பனை பண்ணத் தோணுமோ?!” என்றாள்.

அவன் அவளை ஏற இறங்கப் பார்த்து, “சரி… நான் உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும்… கேட்கலாமா? ” என்று சொல்ல சூர்யாவுக்கு மனதளவில் இப்போது அச்சம் தொற்றிக் கொள்ள,

“என்ன கேட்கப் போறீங்க? நான் என்ன சொல்லணும்” என்றாள்.

“உண்மையைச் சொல்லணும்… உங்க உண்மையான அடையாளம் என்னன்னு சொல்லணும்” என்றான்.

“அகெயின்… ஏன் புரியாமலே பேசிட்டிருக்கீங்க?” என்று தலையில் கைவைத்துக் கொள்ள,

அபிமன்யு அவளின் பேச்சில் சற்றுக் குழம்பி, “நீங்க  உண்மையிலேயே ரிப்போர்டர்தானா?”என்று வினவினான்.

அவள் சலித்தபடி, “இந்தாங்க… இது என் ஐடி… செக் பண்ணிக்கோங்க” என்று ரொம்பவும் இயல்பாக அவள் பர்ஸிலிருந்த கார்டை நீட்ட அபிமன்யு அதைக் கையில் வாங்காமல் யோசித்தபடி நின்றவனின் பார்வை மேஜை மீதிருந்த அவள் செல்போன் மீது பதிந்தது.

அவன் எண்ணத்தை யூகித்தவள் அதை சுதாரித்து எடுப்பதற்கு முன்னதாக அவன் கைப்பேசியை எடுத்துக் கொண்டான்.

சூர்யா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவள் பதட்டத்தோடு “என் செல்ஃபோனைத் தாங்க… மிஸ்டர். அபி” என்றாள்.

அவனிடமிருந்து அவள் தன் கைப்பேசியைப் பறிக்க முயல்வதற்கு முன் அவன் அவள் கடைசியாய் பேசிய அழைப்பிற்கு டயல் செய்து ஸ்பீக்கரை ஆன்செய்ய, “ஹலோ… சொல்லு சூர்யா…?” என்று அலெக்ஸின் குரல் ஒலிக்க அவள் நெற்றியில் கை வைத்துக் கொண்டு சிலையென நின்றாள்.

அபிமன்யு அனல் தெறிக்கும் கோபத்தோடு, “நீ சொல்லாததை உன் செல்ஃபோன் சொல்லிடுச்சு” என்றவன் வெறுப்போடு,

“முதல் முறையாய் பொய்யே உருவமான ஒரு பெண்ணை இப்பதான் பார்க்கறேன்” என்றான்.

அந்த வார்த்தைகள் சூர்யாவைக் காயப்படுத்த அவள் அப்போதும் மௌனமாய் நின்றாள்.

அவன் மீண்டும்,”பணம் கொடுத்தா என்ன மாதிரியான வேலையும் செய்வீங்களா?” என்று கேட்க,

அவள் உச்சபட்ச் எரிச்சலோடு, “அபி ஸ்டாப் இட்… தேவையில்லாம வார்த்தையை விடாதீங்க… என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்” என்று கேட்டாள்.

“சொன்னா தெரிஞ்சுக்கறேன்… உன்னைப் பத்தி… உன் பாஸைப் பத்தி” என்று அவன் அலட்சியமான பார்வையோடு சொல்ல,

“நான் ஏன் இங்க நின்னு? என்னை உங்களுக்குப் புரிய வைக்க ட்ரை பண்ணணும்… நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க… நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட எத்தனித்தவளை, “ஹலோ” என்று சொடுக்கிட்டு அவள் முன்னே வந்து அவளை நிறுத்தினான்.

“நான் சொல்றதை மறக்காம உன் பாஸ்கிட்ட போய் சொல்லு… நான்தான் அந்த கொங்ககிரி மக்களைக் காப்பாத்தினேன்னு… அப்புறம் அப்பாவி மக்கள் உயிரோடு விளையாடிகிட்டிருக்குற இந்த விளையாட்டை இத்தோடு நிறுத்திக்க சொல்லு… இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு அவனால கற்பனை கூட பண்ண முடியாது” என்று மிரட்டலோடு உரைத்தான்.

அபிமன்யு ஈஷ்வரைக் குறித்துச் சொல்கிறான் என்பது சூர்யாவுக்குப் புரிந்தாலும் அவன் சொல்லும் விஷயங்கள் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.

சூர்யா யோசனையில் ஆழ்ந்துவிட அபிமன்யு அவளை நோக்கி,

“நான் எப்பவுமே கண்கள் சொல்றதைக் கேட்கறவன் இல்ல… என் மனசு என்ன சொல்லுதோ அதை நம்பறவன்… முதல்முறையாய் என் மனசு உன்னைப் பார்த்து தடுமாறிடுச்சு… அதுக்காக நான் உன் அழகைப் பார்த்து மயங்கிட்டேன்னு நினைக்காதே… அப்படி இல்ல… என்னவோ… நம்ம இரண்டு பேருக்குள்ள ஏதோ ஒரு ரிலேஷன்ஷிப் இருக்குற மாதிரி” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க தனக்கும் அதே எண்ணம் தோன்றியதை அவள் மனமும் யோசித்தது.

ஆனால் அந்த எண்ணத்தை மறைத்துக் கொண்டவள், “அப்படி என்ன ரிலேஷன்ஷிப்னு தோணுச்சு?” என்று கேலியாகக் கேட்க,

“ஹ்ம்ம்… கணவன் மனைவி மாதிரி” என்று அவன் பளிச்சென்று உரைத்துவிட அவள், “வாட்?” என்று அதிர்ந்தாள்.

அவன் அவளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல், “ஆனால் போயும் போயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து முதல் முறையாய் இம்ப்ரஸ் ஆனேன் பார்… என்னை” என்று சொல்லித் தலையிலடித்துக் கொண்டான்.

அவன் முன்பு சொன்னதை விட இதுதான் கொஞ்சம் அவளுக்கு அதிக வலியாய் இருக்க அவன் மேலும், “ப்ளீஸ்… திரும்பவும் என் கண் முன்னாடி மட்டும்… எந்த சந்தர்பத்திலயும் வந்துடாதே… ” என்று கோபமான பார்வையோடு எச்சரித்துவிட்டு அகன்றான்.

முதல் முறையாய் தான் ஒருவனின் முன்னிலையில் அவமானப்பட்டு நிற்க வேண்டியதாய் போனதே என்ற சிந்தனை உதிக்க, தான் ஏன் இத்தகைய காரியத்தில் இறங்கினோம் என்று எண்ணமிட்டபடி அந்த வைத்திய சாலையை விட்டு வெளியேறினாள் அவள்.

அலெக்ஸ் அவளுக்காக காரில் காத்துக் கொண்டிருக்க சூர்யா ஆழ்ந்த யோசனையோடு வந்த அமர்ந்தாள். அவள் மனமெல்லாம் கொங்ககிரி மக்கள் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் நிற்க

அலெக்ஸ் அவளை நோக்கி, “என்னாச்சு சூர்யா?” என்றான். ஆனால் அவள் தலையசைத்து அவனை மௌனமாக வரச் சொன்னாள். அவனின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலைமையில் அவள் இல்லை.

இப்படியாக முன்னுக்குப் பின் முரணாய் அபிமன்யு சூர்யாவின் முதல் சந்திப்பு கேள்விக் குறியாய் முடிவுற்ற அதே சமயத்தில் மும்பையில் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான வீட்டின் பெரிய விசாலமான படுக்கை அறையில் கம்பீரமாய் தன் வலது கையால் தாடையைத் தாங்கியபடி இருக்கையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தான் ஈஷ்வர்!

அவனின் கூர்மையான பார்வை யோசனையில் ஆழ்ந்திருந்தது.