mu-19

mu-19

வியப்பில் ஆழ்த்தினாள்

ஈஷ்வரின் பின்னோடு மதி நின்று கொண்டிருக்க எதிரே அமர்ந்திருந்த இருவரும் கலக்கத்தோடுக் காணப்பட்டனர்.  அந்த அறையில் நிலுவிய நிசப்தமான சூழ்நிலையை ஈஷ்வர் கலைத்தான்.

“வெல்… சொல்லுங்க சாகர் இப்ப என்ன பண்ணலாம்… நம்ம ப்ராடெக்ஸோட பிரொடக்ஷனை ஸ்டாப் பண்ணிடலாமா?” என்று ஏளனமாய் பார்த்து கேள்வி எழுப்பினான்.

“பாஸ் நாங்க அப்படிச் சொல்லல?” என்று அவன் பதற, ஈஷ்வர் இருக்கையில் சாய்ந்தபடி,

“பின்ன வேறெப்படி சாகர்?” என்று கேட்டுவிட்டு கூர்மையாய் நோக்கினான்.

எதிரே அமர்ந்திருந்தவன் படபடப்பு அடங்காமல், “சோஷியல் மீடியால நம்ம புஃட் ப்ராடெக்ட்ஸ் பத்தின தப்பான இம்பிரஷன் உருவாக்கிட்டாங்க பாஸ்… அதனால சேல்ஸ் ஆல் ஓவர் இந்தியா டவுனாயிடுச்சு… இப்ப மக்கள்கிட்ட திரும்பியும் நம்பிக்கையைப் பெறுவது!” என்று சொல்லியபடி சாகர் தலையைக் கவிழ்ந்து கொள்ள,

ஈஷ்வர் தேவ் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றபடி, “நெகட்டிவ்வா பேசினா எனக்கு சுத்தமா பிடிக்காது… மக்கள்கிட்ட இருந்து நம்பிக்கைப் பெறுவதெல்லாம் பெரிய விஷயமே இல்ல… ஃப்ர்ஸ்ட்… சோஷியல் மீடியால நம்ம ப்ராடெக்ட் பத்தின மேட்டரை மறக்குற மாதிரி வேற இன்ட்ரஸ்ட்டிங்கான மேட்டரைப் பரப்பி விடுங்க… சூன் அவங்க கான்சன்ட்ரேஷன் அதுல போயிடும்…

தென் எந்த ப்ராடெக்ட்டோட பேர் கெட்டுப் போயிருக்கோ அதுக்கு ஆல்டர்னேடிவ்வா வேற ப்ராடெக்ட்டை  புதுசா லாஞ்ச் பண்ணுங்க… டோட்டலா வேற ப்ராடெக்ட்டுன்னு மக்களை நம்ப வையுங்க சாகர்

நெக்ஸ்ட் ஒரு ஒன் மந்த் கேப்ல நம்ம பழைய ப்ராடெக்ட்டை புது பாஃர்ம்ல அட்டிரேக்டிவா இறக்குங்க… ஜஸ்ட் டூ மந்த்ஸ்… இதுவரைக்கும் கிடைச்ச லாபத்தை விட டபுளா வரும்” என்றான்.

சாகர் தயக்கத்தோடு எழுந்து நின்றபடி, “திடீர்னு ஒரு புது ப்ராடெக்ட்டை மக்கள் மத்தியல எப்படி பிரபலமாக்க முடியும்?” என்றான்.

“வெரி ஈஸி சாகர்… நம்ம ப்ராடெக்ட் வாங்கறதை நிறுத்தின எல்லோருக்குமே ஒரு ஆல்டர்னேட்டிவ் தேவைப்படும்…  நம்ம பழைய ப்ராடெக்ட்டுக்கு எதிரா இந்த ப்ராடெக்ட்டை லாஞ்ச் பண்ணுங்க…

எல்லாம் நம்ம ஊர் அரசியல் மாதிரிதான்… இரண்டு கட்சியில் ஏதாவது ஒண்ணு ஜெயிச்சுதானே ஆகணும்… ஆனா இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்…

ஸேம் லாஜிக்… கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்” என்று அவன் திடமாகச் சொல்ல அவர்கள் இருவரும் வியப்பாய் அவனின் வியாபார தந்திரங்களை உள்ளூர எண்ணி வியந்து கொண்டிருந்தனர்.

அதன் பின் ஈஷ்வர் சில முக்கியமான விஷயங்கள் குறித்தும் தீவிரமாய் விவாதித்துவிட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.

பின்னர் அவன் அந்த அறையின்  பால்கனியின் புறம் நடந்துவந்து அந்த பரந்துவிரிந்த தோட்டத்தைப் பார்வையிட்டபடி, “மதி நான் சொன்ன விஷயம் என்னாச்சு?” என்று கேட்டான்.

“என்ன விஷயம் பாஸ்?” என்று மதி குழப்பமாய் கேள்வி எழுப்ப,

“என்ன விஷயமா?” என்று ஈஷ்வர் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

“பாஸ்… நிறைய மேட்டர் சொன்னீங்க… இப்ப எதைப் பத்தி கேட்கறீங்கன்னு” என்று இழுத்தான்.

ஈஷ்வர் மூச்சை இழுத்துவிட்டபடி “ஏன் மதி?… நீ எனக்கு அசிஸ்டென்ட்டா… இல்ல நான் உனக்கு அசிஸ்டென்ட்டா?” என்றான்.

மதி அந்தக் கேள்வியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிர்ந்தபடி நிற்க,

ஈஷ்வர் அவனைக் கோபமாய் பார்த்தபடி “பின்ன என்ன மதி… எல்லா வேலையும் நீ எனக்கு ரிமைன்ட் பண்ணனும்… ஆனா நான் உனக்கு ரிமைன்ட் பண்ண வேண்டியதா இருக்கு” என்றான்.

“சாரி பாஸ்” என்று அவன் புரியாமல் விழிக்க,

“அந்த அபிமன்யு மேட்டர் என்னாச்சு மதி?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான் ஈஷ்வர்.

அவன் மீண்டும், “அது வந்து… சாரி பாஸ்” என்று சொல்லிவிட்டு  அவன் பதில் சொல்ல முடியாமல் தயங்கினான்.

“சாரி கேட்கவா மதி நான் உன்னை அசிஸ்டென்ட்டா வைச்சிருக்கேன்… திரும்பியும் உன் வாயில இருந்து சாரிங்கற வார்த்தை வந்ததுன்னா ஐ வில் கில் யூ டேமிட்… அபிமன்யு பத்தின டீடைல்ஸ் கிடைச்சுதா இல்லையா?” என்று மதியை நோக்கி அழுத்தமாய் வினவினான்.

மதி மீண்டும் சாரி என்று சொல்ல வாயெடுத்துவிட்டு அந்த வார்த்தையை வெளிய வரவிடாமல் கட்டுப்படுத்தியபடி “பாஸ்… அந்த கொங்ககிரில இருந்த அபி யாரு என்னங்குற டீடைல்ஸ் கிடைக்கல… கொங்ககிரி மக்களை விசாரிச்சா ஏதோ மூலிகை தேடி வந்தான்னும்… அவங்களுக்கு காய்ச்சலுக்கு மருந்து தாயாரிச்சுக் கொடுத்தானாம்… கடவுள் தெய்வம்னு தலையில் வைச்சுக் கொண்டாடுறாங்க… இலிட்ரேட்ஸ்…  ரீசன்ட்டா கூட இப்ப ஒரு தடவை வந்தான்னு தகவல் கிடைச்சுது… பட் நம்ம ஆளுங்க அவனை மிஸ் பண்ணிட்டாங்க… இந்த அபிமன்யு மேட்டர்ல அவன்  சித்த வைத்தியன்கிறதைத் தவிர்த்து வேற எந்த உருப்படியானத் தகவலும் இப்போதைக்கு நமக்குக் கிடைக்கல” என்று மதி தயங்கித் தயங்கி உரைக்க ஈஷ்வர் தலைத்தூக்கிய கோபத்தைப் புன்னகையோடு, “எந்த தகவலும் கிடைக்கல… குட் ஜாப் மதி… சூப்பர்…” என்று வஞ்சமாய் புகழுரை செய்தான்.

மதி தலைகவிழ்ந்தபடி நிற்க ஈஷ்வர் மேலும், “இது எவ்வளவு சீரியஸான இஷ்யூன்னு உனக்குப் புரியலயா மதி… இந்த கொங்ககிரி ப்ராஜெக்ட் மட்டும் வெளிய லீக்காயிடுச்சு… தட்ஸ் இட்… நம்ம ஃபார்மசுட்டிக்கல் இன்டஸ்ட்ரீயோட பேர் காலி… அதனாலதான் எல்லா வேலையையும் விட்டுவிட்டு நான் இந்தியா வந்திருக்கேன்… ஆனா நீ கூலா எந்தத் தகவலும் உருப்படியா கிடைக்கலன்னு சொல்ற…

ஐம் டோட்டலி டிஸ்ஸப்பாயின்டட் மதி… இனிமே இந்த மேட்டர்ல  யாரையும் நான் நம்பப் போறதில்ல… நானே நேரடியா டீல் பண்ணிக்கிறேன்” என்று சீற்றத்தோடு குரலை உயர்த்திப் பேசி சில நொடிகள் மதியை திகலடையச் செய்துவிட்டு அமைதியானான்.

புயலுக்குப் பின் அமைதி என்பது போல் மெல்ல மெல்ல  ஈஷ்வர் அமைதியாகி  ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். அவன் எண்ணமெல்லாம் அபிமன்யுவை எவ்விதம் கண்டறிவது என்றிருக்க அந்த சமயத்தில் அவனின் அறைக் கதவு தட்டப்படும் சத்தம் ஒலித்தது.

அந்த நொடியில் ஈஷ்வர் தன் யோசனையை ஒதுக்கிவைத்துவிட்டு, “மதி ஓபன் தி டோர்” என்று ஆணையிட்டான்.

மதி சென்று கதவைத் திறக்க ஒரு பணியாளோடு உட்கார்ந்தபடியான நாற்காலியில் அவந்திகா அறையினுள் நுழைந்தாள்.

ஐந்து வருடத்திற்கு முன்பு அவந்திகாவின் அதீத மன உளைச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அந்த சூழ்நிலையில் அவருக்கு உடல் நிலை மோசமாகி இரு கால்களும் செயலிழந்துப் போனது.

எத்தனையோ மருந்துகள் சிகிச்சைகள் என எதுவும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. அவந்திகாவிற்கு அது பெரியளவிலான இழப்பு எனினும், இது… தான் செய்த பாவத்திற்கான தண்டனை என்று அந்த நிலையைக் குற்றவுணர்வால் ஏற்றுக் கொண்டார்.

அவந்திகாவிற்கு யாரும் இரக்கம் காட்டுவதில் உடன்பாடில்லை. ஆதலால்  நடக்க முடியாது போனாலும் அந்தத் துயரில் முற்றிலும் ஆழ்ந்துவிடாமல் மீண்டு வந்து தன்னம்பிக்கையோடும் கம்பீரத்தோடும் தன் ஆளுமையை மீண்டும் நிரூபித்தார்.

விந்தை என்னவெனில் மருத்துவ துறையையே ஆளுமை செய்து கொண்டிருக்கும் ரா மெடிக்கல் ரிசர்ச் சென்டரும் இதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியாததுதான்.

அவந்திகா நுழைவதைப் பார்த்து ஈஷ்வர் பதட்டத்தோடு, “என்ன மாம்… நானே உங்களைப் பார்க்க வரலாம்னு… நீங்க ஏன் சிரமப்படுறீங்க” என்றபடி அக்கறையோடு வந்து அவர் அருகில் நின்றான்.

நடக்க முடியாமல் போனாலும் அவந்திகாவின் கம்பீரமும் திடமும் இம்மியளவும் குறையவில்லை என்பது  அவரின் தோரணையிலும் தோற்றத்திலும் நன்றாகவே வெளிப்பட்டது.

“ஐம் ஆல்ரைட் தேவ்! நான் உன்னைப் பார்க்க வந்தா என்ன… இல்ல நீ என்னைப் பார்க்க வந்தா என்ன… இரண்டும் ஒண்ணுதானே… ஆனா ப்ளீஸ் என்மேல ரொம்ப கேரீங்கா இருக்குற மாதிரி மட்டும் ஆக்ட் பண்ணாத ஒகே?” என்று சொல்லிவிட்டு அவந்திகா விழி இடுங்க அவனை நோக்க,

அப்போது ஈஷ்வர் அவரின் வார்த்தைக்கு பதிலுரைக்காமல் மதி மற்றும் அவந்திகாவின் பணியாளை அந்த அறையை விட்டு  வெளியேறச்  சொல்லிக் கண்ணசைவாலேயே கட்டளைப் பிறப்பித்தான்.

அவர்களும் அவனின் பார்வையின் பொருளை உணர்ந்து வெளியேறிவிட  அவன் நாற்காலியில்  அமர்ந்திருந்த தன் அம்மாவின் கால்கள் மீது கைவைத்து தாங்கியபடி தரையில் மண்டியிட்டு, “என்ன மாம்… டக்குனு ஆக்ட் பண்றேன்னு சொல்லிட்டீங்க… எனக்கு உங்க மேல அக்கறை இல்லையா என்ன?” என்று அவன் சொல்ல,

அந்த நேரத்தில் முற்றிலும் மாறுப்பட்ட ஈஷ்வர் வெளிப்பட்டான். அவனின் கம்பீரமும் கர்வமும் காணாமல் போனது. அவனின் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஒரே நபர் அவந்திகா மட்டும்தான். அதுமட்டுமின்றி அவன் தன் அம்மாவின் மீது அலாதியான அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான் என அவன் பார்வையாலேயே தெளிவாய் வெளிப்பட்டது.

அவந்திகா தன் மகனின் தலை முடியைக் கோதியபடி, “பின்ன என்ன தேவ்… நீ மும்பைப் பக்கம் வந்தே மோர் தென் டூ இயர்ஸ் ஆயிடுச்சு… இப்போ கூட ஏதோ முக்கியமான வொர்க்காகத்தான் வந்திருக்க… கரேக்டா?” என்றார்.

ஈஷ்வர் வருத்தம் நிரம்பிய முகத்தோடு, “என் டைட் ஷெட்டியூல் அந்த மாதிரி இருக்கு… ஐம் சாரி மாம்…” என்று அவன் அத்தனை தாழ்மையாய் உரைக்க அவந்திகாவும் வேறுவழியின்றி அவன் நிலையைப் புரிந்தவளாய் மனம் இறங்கினார்.

“யா தேவ்… ஐ அன்டர்ஸ்டான்ட்… பட் நீ வொர்கையே பார்த்துகிட்டிருந்தா எப்படி… உன் பர்ஸன்ல் லைஃப் பத்தி யோசிக்க மாட்டியா?” என்று கேட்க ஈஷ்வருக்கு அந்தக்  கேள்வி அவன் திருமணத்தைக் குறித்தது  என்பது புரிய மெல்ல எழுந்து நின்றவன்,

“சில இஷ்யூஸ் போயிட்டிருக்கு… அதெல்லாம் சால்வ் பண்ண பிறகு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவந்திகா இடைமறித்து, “ஸ்டாப் இட் தேவ்… எனக்கு நீ எந்த விளக்கமும் தர வேண்டாம்… உனக்கு மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இருக்கா இல்லையா… இல்ல உன் டேட் மாதிரி பாஃட்டி ஏஜ்ல பண்ணிக்கப் போறியா?” என்று தீர்க்கமாய் கேட்டாள்.

“ஜடியா எல்லாம் இருக்கு மாம்… பட் என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணை நான் மீட் பண்ணலயே” என்று ஈஷ்வர் தன் மனம் கவர்ந்தவளின் முகத்தை ஒரு நொடி நினைவுப்படுத்திப் புன்னகையை உதிர்த்தான்.

அவன் முகத்தில் ஒளிர்ந்த பிரகாசத்தை வியப்போடு அவந்திகா கவனித்து, “அது யார் தேவ்? உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு” என்று கேட்டார்.

“யார்… என்ன… எங்கன்னு… எல்லாம் கேட்காதீங்க மாம்… ஏன்னா எனக்கும் தெரியாது… வெரி சூன் நான் அவளை மீட் பண்ணதும் உங்ககிட்ட கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன்… அதுவரைக்கும் இந்த மேரேஜ் டாபிக்கை பத்தின டிஸ்கஷன் வேண்டாமே” என்று ஈஷ்வர்  தன் முடிவை உரைத்தான்.

அவந்திகா அவனின் எண்ணத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் குழப்பமாய் பார்த்தார். இருப்பினும் அவனுக்கு திருமணத்தில் ஆர்வம் இருப்பது உள்ளூர அவருக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

அம்மாவின் யோசனையை புரிந்தபடி ஈஷ்வரும் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.

அவந்திகா மெல்ல சிந்தனையிலிருந்து மீண்டபடி, “ஒகே தேவ்… உன் மேரேஜ்  பத்தி இப்போதைக்கு நான் பேசல…” என்று உரைக்க,

ஈஷ்வரின் முகம் மலர்ந்தது. அதற்குள் அவந்திகா மீண்டும் “டீ7 ரிசர்ச் எந்த லெவலில் போயிட்டிருக்கு” என்று வினவினார்.

அவனின் முகம் மாறுதலடைய, “யா… கிட்டத்தட்ட முடியிற ஸ்டேஜ்தான்” என்றான்.

“ம்ம்ம்… தட்ஸ் குட்… ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல தேவ்?” என்று அவனை நோக்கி சந்தேகமாய் அவர் பார்க்க, “என்ன மாம்?” என்று தன் தாயை நோக்கிப் புரியாமல் பார்த்தான்.

அவர் யோசனைக் குறியோடு, “டீ7 ஆராய்ச்சிக்கும்… அபிமன்யுங்கற சித்த வைத்தியனுக்கும் என்ன கனெக்ஷன் தேவ்” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத அவனின் முகம் அதிர்ச்சியில் இருளடர்ந்துப் போனது. அதை அவந்திகாவும் கவனித்தார்.

ஈஷ்வர் தன் மனதிற்குள், ‘இந்த மதிக்கிட்ட சீக்ரெட்டா இந்த மேட்டரை டீல் பண்ணச் சொன்னா… மாம்க்கு தெரியற அளவுக்குப் பண்ணி வைச்சிருக்கான் இடியட்’ என்று மனதிற்குள் கடிந்து கொண்டான்.

அவந்திகா புருவத்தை உயர்த்தி, “எனக்குத் தெரியக் கூடாத மேட்டரா தேவ்?” என்று மீண்டும் அவனை நோக்கிக் கேட்க,

இப்போது ஒருவாறு சுதாரித்துக் கொண்டவன், “நோ… நத்திங் லைக் தட்… ஜஸ்ட் அந்த அபிமன்யு…  டீ7 டிசீஸை க்யூர் பண்ணதா ஒரு இன்ஃபர்மேஷன்… அதான் அவனைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன்…இட்ஸ் அ சிம்பிள் மேட்டர்” என்று அவன் சமாளிக்க,

“நம்ப முடியல தேவ்… நீ சொல்றதுல லாஜிக் இடிக்குதே… யார் அந்த அபிமன்யுன்னு மதியை விட்டு விசாரிக்கச் சொல்லி இருக்க… அவன் எங்க இருக்கான் என்னன்னு டீடைல்ஸ் தெரியாம அவன் டீ7 க்யூர் பண்ணான்னு மட்டும் உனக்கெப்படி தெரிஞ்சுது… அதுவும் பிரான்ஸ்ல இருந்தபடி” என்று அவர் தன் யூகத்தைத் தெரிவிக்க,

ஈஷ்வர் இப்போது  கொங்ககிரி விஷயம் தெரிந்தால் தன் அம்மாவை எப்படி எதிர்கொள்வது எனக் குழப்பத்தில் மூழ்கிவிட,

அவந்திகா அவனின் அமைதியை  குலைக்கும் விதமாய் “கமான் ஈஷ்வர்… வாட்ஸ் த மேட்டர்?” என்று வினவினாள்.

இப்போது ஈஷ்வர் தன் மௌனத்தைக் கலைத்தபடி, “மாம் இந்த மேட்டரை இப்போதைக்கு விடுங்க…அப்புறமா  நான் உங்களுக்கு டீடைலா சொல்றேன்…” என்றான்.

அவந்திகா இப்போது சூட்சமமான புன்னகையோடு, “நீ சொல்லலன்னா பரவாயில்ல தேவ்… எனக்கு நீ சொல்லாமலே தெரிய வரும்” என்றாள்.

அவன் யோசனையோடு, “எப்படி?” என்று  கேட்க,

“என் அசிஸ்டென்ட் ஆல்ரெடி அபிமன்யு பத்தின கம்ப்ளீட் டீடைல்ஸைக் கலெக்ட் பண்ணிட்டா?” என்று அவர் உரைக்க அவன் அதிர்ந்தான். இன்னும் அவனால் தான் கேட்டதை உண்மை என்று  நம்பமுடியவில்லை.

“எப்படி இது பாசிபிள்… அவனோட பெயர் தவிர எந்த டீடைல்சும் என்கிட்டயே இல்லயே… ” என்றான்.

“கமான் தேவ்… என் அசிஸ்டென்ட் உன்னோட மதி மாதிரி நினைச்சியா… ஷீ இஸ் வெரி க்ளவர்… அந்த அபிமன்யு சித்த ஆராய்ச்சி செய்றவன்னு ஒரே ஒரு க்ளூ வைச்சே அவனைப் பத்தி ஈஸியா கண்டுபிடிச்சிட்டா… அவன் ரிசர்ச் பண்றதால நிச்சயம் புக்ஸ் எழுதியிருப்பான்னு கெஸ் பண்ணி சித்தா பத்தின ரீசன்ட்லி பப்ளிஷ்ட் புக்ஸோட ஆத்தர்ஸ் நேமை கலெக்ட் பண்ணி தேடிப் பார்த்தா… அதுல அக்னிங்கறவன் மார்டன் மெடிஸன் வெர்சஸ் சித்தான்னு ஒரு புக் வெளியிட்டிருக்கானாம்… டீ7 ங்கிறது அட்வான்ஸ்ட் ரிசர்ச் இல்லயா… ஸோ அந்த புக் ஆத்தருக்கும் அபிமன்யுவிற்கும் கண்டிப்பா கனெக்ஷன் இருக்கும்னு அவ டீடைல்ஸ் கலெக்ட் பண்ணா… ஹெர் கெஸ் வாஸ் ரைட்… அந்த அக்னிதான் அபிமன்யு” என்று அவந்திகா சொல்லி முடிக்க,

“கிரேட்… வெரி பிரில்லியன்ட்…” என்று சொல்லி தன்னை அறியாமல் சூர்யாவை மனதளவில் பாராட்டினான். அவளின் புத்திசாலித்தனம் ஈஷ்வரை வியப்பில் ஆழ்த்தியிருக்க,

 

“இதுக்கே நீ ஆச்சர்யப்பட்டா எப்படி தேவ்… அந்த அபிமன்யுவை என் அசிஸ்டென்ட்  நேரடியாவே இன்ட்ராகேட் பண்ணி… அவன் டீ7 ரிசர்ச் பண்ணிட்டிருக்கானான்னு  கண்டுபிடிக்கிறேன்னு தமிழ்நாடு வரைக்கும் போயிருக்கா… ஷீ ஆல்மோஸ்ட் டன்… அவ மும்பை வந்ததும் நாம இந்த மேட்டரைப் பத்தி திரும்பவும் டிஸ்கஸ் பண்ணுவோம்… ” என்று அவந்திகா உரைக்க,

இப்போது ஈஷ்வர் வியப்பில் இருந்து மீண்டான். அவளின் புத்திக்கூர்மை தனக்கு வினையாய் முடிந்துவிடும் என்ற எண்ணம் உருவானது. அவள் அபிமன்யு பற்றி உளவறிய சென்றாளா இல்லை தன்னைக் குறித்த செய்தியை சேகரித்து தன் அம்மாவிடம் சிக்க வைக்கச் சென்றாளா என்ற கோபமும் உள்ளூரத் தோன்றியது.

“ஒகே ஈஷ்வர்… ஐம் லீவீங் நவ்… நீ ஃப்ரீயானப் பிறகு நம்ம ஆபிஸுக்கு வந்து… ஒரு விசிட் பண்ணிட்டுப் போ” என்று சொல்லிவிட்டு அவந்திகா புறப்பட அவனும் சிரத்தையின்றி சம்மதம் தெரிவித்தான்.

ஈஷ்வருக்கு தான் எண்ணிய வேலை முடிந்துவிட்ட ஆனந்தம் ஒரு புறம் இருந்தாலும் இந்த விஷயத்தில் சூர்யா எத்தகைய செய்தியை சேகரித்திருக்கக் கூடும் என்ற கவலையும் இருந்தது. அதுவும் தான் மனிதர்கள் மீது இந்த டீ7 நோயைக் குறித்த சோதனையை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தன் அம்மாவிற்குத் தெரிய வந்தால்  அது குறித்து அவர் கேள்வி எழுப்பினால் தான் என்ன பதிலுரைப்பது என்று சிந்தனை எழுந்தது.

சூர்யாவிடமிருந்து எந்த செய்தியும் அவந்திகாவை சென்றடையக் கூடாது என யோசித்த மறுகணம் அறைக்குள் நுழைந்த மதியிடம் சூர்யாவின் எண்ணிற்கு கைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளச் சொன்னான்.

மதி புரியாமல்,”என்ன மேட்டர் பாஸ்?” என்று கேட்க,

ஈஷ்வர் முறைத்தபடி “இனிமே நான் அந்த சூர்யாவை எனக்கு அசிஸ்டென்ட்டா வைச்சுக்கலாம்னு இருக்கேன் மதி… ஷி இஸ் வெரி ப்ரில்லியன்ட்… நீ என்ன சொல்ற!” என்று  கேட்டான்.

“நோ பாஸ்…” என்று மதி அதிர்ந்தான்.

“நீ இப்படி என்னைத் தேவையில்லாம கேள்வி கேட்டன்னா… கண்டிப்பா நான் சொன்னது நடக்கும் மதி”

“சாரி பாஸ்”

“நீயும் உன் சாரியும்… இரிடேட் பண்ணாம அந்த சூர்யாவிற்கு டயல் பண்ணு மதி”

மதி சூர்யாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான்.

error: Content is protected !!