NP2

NP2

நிலவொன்று கண்டேனே 2

காலைக் கடன்களை முடித்து விட்டு, ரூமை விட்டு வெளியே வந்தான் யுகேந்திரன். நேரம் காலை ஆறு முப்பது. சமையலறையில் வானதியின் நடமாட்டம் தெரிந்தது.

சோஃபாவில் அமர்ந்தவன், தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். காலையில் அவனுக்கு நியூஸ் சேனல் பார்க்க வேண்டும்.

அந்த விலையுயர்ந்த சோஃபா, அவனைப் பாதி உள்வாங்கிக் கொண்டது. கால் நீட்டி, சுகமாக அமர்ந்து கொண்டான்.

‘இன்றைய பரபரப்பான செய்தி.’ நியூஸ் வாசிப்பவர், ஏதோ ஒரு சேனலில் மும்முரமாகத் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தார்.

“அம்மா…” யுகேந்திரனின் அழைப்பில், காஃபியோடு வந்தார் வானதி.

“வந்துட்டேன் கண்ணு.”

“அங்கப் பாருங்க, உங்க ஹீரோயினை.” மகன் கை காட்டவும், டீ வியைத் திரும்பிப் பார்த்தார் அம்மா. கை, தானாக காஃபியை மகனிடம் நீட்டியது.

“அட, நம்ம சப் கலெக்டர்! இந்நேரத்துக்கு இந்தப் அம்மணி இங்க என்ன பண்ணுது?” ஆச்சரியமாகக் கேட்டார் வானதி. ஏனென்றால், அந்தக் காணொளி நேரடியாக ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.

நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த யுகேந்திரனுக்கும், அதே எண்ணம் தான். நேற்றைக்குப் போல இன்றைக்கும் குர்தா, லெக்கின். என்ன, கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக இருந்தாள்.

களப்பணி என்றால், அம்மணியின் ட்ரெஸ் கோட் இதுதான் போல. வாய் வரை வந்த வார்த்தைகளை, விழுங்கிக் கொண்டான். இல்லாவிட்டால், வானதி அடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

காமெரா, ஒன்றிரண்டு நிருபர்கள் என புடைசூழ நின்றிருந்தாள். பொள்ளாச்சியை அண்டிய, வளர்ந்து வரும் ஊர் ஒன்றில், நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்தது.

புதிதாக அமைக்கப்பட்டிருந்த, அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கொண்ட பகுதி அது. ஏதோ ஒரு பேப்பரை சரிபார்த்தபடி, காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தாள் நித்திலா. அங்கு நடப்பது அத்தனையும், நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“யாருங்க அம்மணி அது? காலங்காத்தாலே பெல்லை அடிச்சிக்கிட்டு?” ஒரு வயதான குரல், கேட்டபடியே கதவைத் திறந்தது.

“அம்மா, இங்க ‘மஞ்சுளா’ ங்கிறது…” நித்திலாவின் குரல் கேள்வியாக வந்தது.

“என்ற மருமகள் தானுங்க. என்ன ஆச்சு?” பயத்தோடு கேட்டார் அந்த அம்மா.

“கொஞ்சம் அவங்களைக் கூப்பிடுறீங்களா?”

“மஞ்சுளா…” அந்த அம்மா உள்ளே குரல் கொடுக்க, ஒரு பெண் வெளியே வந்தாள். யுகேந்திரனும், வானதியும் அனைத்தையும் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“மேடம்… நீங்க?”

“நீங்கதான் மஞ்சுளாவா?”

“ஆமாம் மேடம்.”

“நான்… நித்திலா. சப் கலெக்டர். நீங்க குடுத்த புகாரை விசாரிக்க வந்திருக்கேன்.”

“ஓ… தான்க் யூ மேடம். உங்களுக்கு லெட்டர் போட்டே மூனு நாள் தானே ஆச்சு?” ஆச்சரியமாகக் கேட்டாள் அந்தப் பெண்.

“நீங்க வெள்ளிக்கிழமை லெட்டரை போஸ்ட் பண்ணி இருக்கீங்க. சனிக்கிழமையே என் கைக்கு லெட்டர் கிடைச்சிருச்சு. சொல்லப் போனா, நான் தான் லேட். அதுக்கு உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” அங்கு அவள் சொல்லிக் கொண்டிருக்க, இங்கே யுகேந்திரன் நிமிர்ந்து அமர்ந்தான். வானதி வாய்பிளந்து பார்த்திருந்தார்.

“சொல்லுங்கம்மா… எந்த இடத்துல குப்பை போடுறாங்க?”

“வாங்க மேடம் காட்டுறேன்.” சொல்லிய அந்தப் பெண், நித்திலாவை காம்பவுண்ட் சுவரருகே அழைத்துச் சென்றாள். சுவருக்கு அந்தப் புறமாக இருந்த ஒரு சிறிய இடத்தில், குப்பைகள் குமிந்து கிடந்தன. நாற்றம் வந்து கொண்டிருந்தது. நித்திலா முகத்தைச் சுளித்தாள்.

“வீட்டுல வயசானவங்க, குழந்தைங்க எல்லாம் இருக்காங்க மேடம். சொன்னா யாரும் கேக்க மாட்டேங்குறாங்க. நைட்ல கொசுத்தொல்லை தாங்க முடியலை.”

“யாரு பண்ணுறாங்க?”

“பக்கத்துல, புதுசா கொஞ்சம் அப்பார்ட்மெண்ட்ஸ் வந்திருக்கு. அங்க இருக்கிறவங்க தான் இப்பிடிப் பண்ணுறாங்க.”

“ம்…”

“எல்லாரும் நல்ல வேலையில இருக்கிறவங்க மேடம். படிச்சவங்களே இப்பிடிப் பண்ணினா, என்னத்தைச் சொல்ல மேடம்.”

“ம்… புரியுதும்மா. வேலைக்கு கிளம்பும் போது, வீசிட்டுப் போறாங்கன்னு லெட்டர்ல சொல்லி இருந்தீங்க இல்லையா? அதனால தான், கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டோம்.” சொன்னவள், மட மடவென்று காரியத்தில் இறங்கினாள்.

காவல் நிலையத்திற்கு தகவல் சொல்ல, இரண்டு கான்ஸ்டபிள்கள் உடனடியாக உதவிக்கு அனுப்பப் பட்டார்கள். ‘முனிசிபல்’ இல் இருந்தும், ஊழியர்கள் வந்து சேர்ந்தார்கள்.

சற்று நேரம் போனதும், மக்கள் நடமாட்டம் வீதியில் ஆரம்பித்தது. விலையுயர்ந்த காரில் போகும் மேல்தட்டு வர்க்க மக்கள், காரை விட்டு இறங்காமலேயே குப்பைகளை வீச முற்பட்டார்கள். நித்திலாவுக்கு நடப்பதை நம்பவே, கொஞ்ச நேரம் எடுத்தது.

தயவு, தாட்சண்யம் இல்லாமல் அனைத்துக் கார்களும் நிறுத்தப்பட்டு, ‘சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986’ இன் கீழ், குப்பை வீசியவர்கள் அனைவருக்கும், தலா ஐநூறு ரூபாய் அபராதம் அங்கேயே (ஸ்பாட் ஃபைன்) விதிக்கப்பட்டது.

இந்தத் திடீர் நடவடிக்கையில், அந்த ஏரியா வாசிகள் மலைத்துப் போனார்கள். யாரும் இப்படியொரு திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. பணம் கட்டியவர்களை எச்சரித்தே அனுப்பினாள் நித்திலா.

சப் கலெக்டரின் உத்தரவின் பேரில், அந்த இடம் உடனடியாகச் சுத்தப் படுத்தப்பட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தில் அனைத்தும் நடந்து முடிய, மக்கள் மகிழ்ந்து போனார்கள்.

“மேடம், ரொம்ப நன்றி. எத்தனையோ தரம், எங்கெல்லாமோ புகார் பண்ணினோம். ஒன்னுமே நடக்கலை. நீங்களாவது, ஏதாவது பண்ண மாட்டீங்களான்னு ஒரு நப்பாசையில தான், லெட்டர் போட்டேன்…” அதற்கு மேல் பேச முடியாமல், கண் கலங்கினார் மஞ்சுளா. வானதிக்கும் கண்கள் கலங்கின.

“மஞ்சுளா, என் கடமையை நான் பண்ணி இருக்கேன். அதுக்கு நீங்க இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. நாட்டை நல்லபடியா வச்சிருக்க, எத்தனையோ சட்டங்கள் இருக்கு. என்ன, அதையெல்லாம் அமுல்படுத்த யாருமே இல்லை. வளர்ச்சி அடைந்த நாடுகள்ல எல்லாம், ரோட்டுல எச்சில் பண்ணினா, சிகரெட் பிடிச்சா எல்லாத்துக்கும் அபராதம் கட்டணும். அதனால அந்த நாடுகள் எல்லாம், அத்தனை சுத்தமா இருக்கு. நாமளும் இதையெல்லாம் பின்பற்றினா, நம்ம நாடும் எங்கேயோ போயிடும். கூடிய சீக்கிரம் அந்த நாளும் வரும். ” சொல்லி முடித்தவள், எல்லோருக்கும் வணக்கம் வைத்தாள். அரச வாகனம், அவசரமாகக் கிளம்பியது.

யுகேந்திரனுக்கு ஆச்சரியம் பிடிபடவில்லை. அந்தப் பெண்ணின் மேல், கொஞ்சம் மரியாதை உருவானது. தடாலடியாக என்றாலும், சமூகத்துக்கு ஏதோ அவள் செய்ய நினைப்பது, அப்பட்டமாகப் புரிந்தது.

யுகேந்திரனின் நிலையே இதுவென்றால், வானதி, நிகழ்ச்சி முடிந்த பின்னும், டீ வீயையே பார்த்திருந்தார். மகனின் கேலிப் புன்னகையை கவனிக்கும் நிலையில் அவரில்லை.

***   ***  ***   ***   ***   ***

அந்த வார இறுதியில், பொள்ளாச்சியில் ‘கம்பன் விழா’ மிகப்பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிடப் பட்டிருந்தது. பல்வேறு நிகழ்வுகள் நடந்தாலும், முத்தாய்ப்பாக, கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

விழாவில் பல அறிவு ஜீவிகள் பேச அழைக்கப் பட்டிருந்தார்கள். அதில், யுகேந்திரனும் அடக்கம். தாத்தா, சத்தியமூர்த்தியுடன் வந்திருந்தான்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து, அத்தனை கம்பீரமாக இருந்தான் யுகேந்திரன். விழா ஆரம்பிக்க, இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. பார்வையாளர்கள் சிறுகச் சிறுக வந்து கொண்டிருந்தார்கள்.

விழா மண்டபத்தின் நடுவில், சட்டென்று ஒரு சலசலப்புத் தோன்ற, யுகேந்திரன் திரும்பிப் பார்த்தான். சப் கலெக்டர் வந்திருந்தார். கூடியிருந்த மக்கள் கொஞ்சம் ஆரவாரப்பட, விழா ஒருங்கிணைப்பாளர் உடனேயே அங்கு போனார்.

“மேடம், முன் வரிசைக்கு வரலாமே.” மரியாதை நிமித்தம் கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் நித்திலா.

“இல்லை சார். நான் வாங்கின டிக்கெட்டோட சீட் நம்பர் இதுதான். நான் இங்கேயே உக்கார்றேன். நீங்க உங்க வேலையைக் கவனிங்க.”

“இல்லை மேடம்… அது…” ஏதோ சொல்லத் தயங்கியவரைப் பார்த்து, உறுதியாகப் புன்னகைத்தாள் பெண். அவருக்கு என்ன புரிந்ததோ? மௌனமாகப் போய் விட்டார்.

நடந்தது அத்தனையையும், கண்டுங் காணாமல் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் யுகேந்திரன். அழகான மெல்லிய பட்டுடுத்தி, தலை நிறையப் பூ வைத்து, லட்சணமாக அமர்ந்திருந்தாள் நித்திலா. அன்றைக்கு நடு ரோட்டில், வியர்வை வடிய நின்ற பெண் இவள்தானா என்றிருந்தது யுகேந்திரனுக்கு. நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க, அனைத்தையும் மறந்து போனான்.

முதலாகப் பேசியவர், ‘கம்பன் செய்த வம்பு’ என்ற தலைப்பில், வான்மீகி ராமாயணத்தையும், கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பேசினார்.

அடுத்து வந்தவர், ‘ராமாயணத்தில் மக்களுக்கு உள்ள படிப்பினைகள்’ என்ற தலைப்பில் பேசினார்.

அடுத்து, யுகேந்திரனின் முறை. முகமன் கூறி முடித்தவன், தனது தலைப்பைச் சொன்ன போது, அரங்கம் கொஞ்சம் உஷாரானது. எல்லோரையும் போல, நித்திலாவும் வியப்பாகப் பார்த்திருந்தாள்.

‘நான் ரசித்த ராவணன்.’

“ராவணனிடம் ரசிக்க என்ன இருக்கிறது? அவன் அரக்கக் குணத்தைத் தவிர? இப்படித்தானே நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள்?‌ அதுதான் தவறு. இராவணன், ஒரு சிறந்த சிவபக்தன் என்பது, நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன.” இப்படி ஆரம்பித்தான் யுகேந்திரன்.

“தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் இராவணன். தென் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த, இயக்கர், நாகர் என்ற பூர்வீகக் குடிகளுடன், குடியேற்ற வாசிகளான ஆரியருக்குப் பகை இருந்துள்ளது. இதனாலேயே, ‘சிவதாசன்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சிவபக்தன், இராவணன் என்னும் கொடுங்கோல் மன்னனாகச் சித்தரிக்கப்பட்டான்.” தேர்ந்த தமிழ் உச்சரிப்பும், தெளிவான பேச்சும், பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது. தாத்தா சத்யமூர்த்தி, தனது பேரனின் அறிவிலும், சொல்லாட்சியிலும், லயித்துப் போய்ப் பார்த்திருந்தார்.

“தமிழ் மகா கவியான கம்பன், தமிழ் மக்களுக்குச் செய்த இழிவு, இராவணன் பாத்திரம்.” இதைச் சொல்லும் போது, சபையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. யுகேந்திரன் எதையும் கண்டு கொள்ளவில்லை.

“கம்பனின் கவிச்சுவையிலும், தேன் சொட்டும் எழுத்து நடையிலும், தமிழ் மன்னன், சிவபக்தன் இராவணன், அரக்கனானான். இராவணனின் ஆட்சி எப்படி நடந்தது என்று, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவன் ஆண்ட அழகான இலங்கையில், அப்போது வாழ்ந்த மக்களின் செழிப்பான வாழ்க்கை முறை, அவன் ஒரு சிறந்த மன்னன் என்பதற்குச் சான்று. அவன் ஆட்சியில், ஓங்கி வளர்ந்திருந்த பல்வேறு கலைகள், அவன் ஒரு ரசிகன் என்பதற்குச் சான்று.” யுகேந்திரனின் குரல் தவிர, அங்கு மூச்சுச் சத்தம் மட்டுமே கேட்டது.

“இராவணனின் மனைவியின் பெயர், மண்டோதரி என்று தான் நமக்குத் தெரியும். ஆனால், அவள் இயற்பெயர் ‘வண்டார்குழலி’. வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய, கூந்தலைக் கொண்ட பெண் என்று பொருள் படும். அவள் மேல் அளவு கடந்த காதலைக் கொண்ட சிவதாசன், அவளைக் காதல்த் திருமணம் செய்து கொள்கிறான். அவனா பெண் மோகங் கொண்டு சீதையைக் கவர்ந்தான்? இந்தக் கம்பனின் வம்பிற்கு அளவே இல்லையா? என்னைப் பொறுத்தவரை, தன் தங்கையை இழிவு படுத்தியவர்களை வஞ்சம் தீர்க்கவே, சிவதாசன் சீதையைச் சிறைப்படுத்தி இருக்க வேண்டும்.”

இராவணனின் ஆட்சிச் சிறப்புகள், அவன் வீரம், அவன் தெய்வ பக்தி, மனைவி மேல் கொண்ட காதல் என, அத்தனையையும் சுவை பட விளக்கினான் யுகேந்திரன்.

இறுதியாக, இத்தகைய தமிழ் மன்னனின் வரலாறு, எத்தனை நாசூக்காக இலங்கையின் வரலாறு கூறும் ‘மகாவம்சம்’ நூலில் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறிய போது, அரங்கமே கை தட்டியது.

அதற்குப் பின்னரும் ஒரு சிலர் உரை நிகழ்த்த, விழா இனிதே நிறைவு பெற்றது. பலரும் யுகேந்திரனுடன் பேசிவிட்டுத்தான் போனார்கள்.

“என்ன யுகேந்திரன்? பெரிய சர்ச்சை ஒன்னை ஆரம்பிச்ச மாதிரி தெரியுது?” இலக்கிய நண்பர் ஒருவர், சிரித்தபடியே யுகேந்திரனைக் கேட்டார்.

“சர்ச்சையெல்லாம் ஒன்னுமில்லை. படிச்ச விஷயம், சுவாரஸ்யமா இருந்திச்சு. அதை இங்க பகிர்ந்துகிட்டேன். அவ்வளவுதான்.” இவன் சொல்லவும், கேட்டவர் சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.

“வணக்கம் சார்.” முதுகிற்குப் பின்னால் குரல் கேட்டது. சட்டென்று திரும்பினான் யுகேந்திரன். சப் கலெக்டர் நின்றிருந்தார். எதிர்பாராத சந்திப்பு.

“வணக்கம் மேடம்.”

“பேச்சு ரொம்ப அருமையா இருந்துது சார். உங்களைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்லாமப் போனா, இன்னைக்கு எனக்குத் தூக்கம் வராது.” அவள் பேச்சில் விழி விரித்தான் யுகேந்திரன்.

“உங்க தமிழ் அத்தனை சுவையா இருக்கு சார். கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல ஒரு சுகம். இந்த ஏரியாக்கு நான் புதுசு சார். இதுமாதிரியான இலக்கியக் கூட்டங்கள் எங்க நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. யாரை அணுகணும்னு சொன்னீங்கன்னா உதவியா இருக்கும்.”

“ஓ… தாராளமா மேடம். அதோ நிக்குறாங்களே, அங்கவஸ்திரம் போட்டுக்கிட்டு. அவங்க என்னோட தாத்தா. எல்லா இலக்கிய விழாவிலயும் தவறாம கலந்துக்குவாங்க. அவங்க உங்களுக்கு உதவி பண்ணுவாங்க.”

“நன்றி சார். இன்னைக்கு நீங்க பேசின கருத்துக்கள், ஒரு வித்தியாசமான பார்வையில இருந்துச்சு சார்.”

“இல்லை மேடம். அது என்னோட பார்வை கிடையாது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை. அதிர்ஷ்ட வசமா அது என் கண்ணுல பட்டுது. அதை உங்களோட பகிர்ந்துக்கிட்டேன், அவ்வளவுதான்.” அவன் சொல்லவும், அவள் முகத்தில் ஒரு புன்னகை வந்து போனது.

தலையாட்டி விடை பெற்றுக் கொண்டவள், சத்யமூர்த்தியிடம் போனாள். ஏதோ, சிரித்துப் பேசுவது தெரிந்தது. யுகேந்திரன், பார்த்தும் பாராதது போல கவனித்துக் கொண்டான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஸ்கூட்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே வந்தாள் நித்திலா. நெடு நாளைக்குப் பிறகு, இன்று புடவை கட்டியிருந்தாள். புடவையோடு ஸ்கூட்டி ஓட்டுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது.

இந்த வார இறுதியில் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தாள். பொள்ளாச்சிக்கு வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. இப்போது ஊர், மக்கள் எல்லாம் கொஞ்சம் பழக்கப்பட்டிருந்தது.

‘கம்பன் விழா’ நடப்பதை அறிந்ததும், அதற்குப் போகலாம் எனத் திட்டம் போட்டுக் கொண்டாள். வீட்டில் உட்கார்ந்து கொண்டு, எத்தனை நேரம் தான் டீ வி பார்ப்பது?

இலக்கியம் சம்பந்தமான விடயங்களைக் கேட்பதென்றால், நித்திலாவிற்குப் பிடிக்கும். பெரிதாக ஆர்வம் என்று சொல்ல முடியாது. ஆனால், தரமான பேச்சுக்களை எப்போதும் ரசிப்பாள். ஏனென்றால், அவளுக்கு நயமாகப் பேச வராது.

மனதில் தோன்றுவதை எப்போதும் சட்டென்று பேசிவிடுவாள். அதனால், இப்படி நயமாக, லாவகமாகப் பேசுபவர்களைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கும். ‘எத்தனை அழகாகப் பேசுகிறார்கள்’ என்று, மெச்சிக் கொள்வாள்.

இன்றைய விழாவை, நித்திலா மிகவும் ரசித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இலக்கியப் பேச்சாளர்கள் என்றால், சற்று வயதானவர்களாகத் தான் இருப்பார்கள் என்பது அவள் எண்ணம். அது இன்று தவிடு பொடியானது.

யுகேந்திரனை, அவளுக்கு ஏற்கனவே தெரியும். சார்ஜ் எடுத்த கையோடு, அந்த ஏரியாவின் ஜாதகத்தையே அவள் பார்வைக்குக் கொண்டு வந்து விட்டாள்.

அந்த ஏரியாவின் முக்கிய புள்ளிகள், அரசியல் வாதிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் என, அத்தனை பேரையும் பரிட்சயம் பண்ணிக் கொண்டாள். ஆனால் ஃபாரெஸ்ட் ஆஃபீசருக்குள், இப்படியொரு கவிஞனை அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆளையும், வயதையும் பார்த்தபோது, ‘லிவைஸ் ஜீன்ஸும், போலோ ஷர்ட்டுமாக’ நிற்பான் என்று பார்த்தால், பட்டு வேட்டி சட்டையோடு நிற்கிறானே? ஆச்சரியம் தாங்க முடியவில்லை நித்திலாவுக்கு.

குளியலை முடித்துக் கொண்டு, நைட் ட்ரெஸ்ஸுக்கு மாறி இருந்தாள். பங்கஜம் அம்மா இரவுச் சமையலை முடித்து விட்டு, இன்று அவர் வீட்டுக் போயிருந்தார். வெளியூரில் இருக்கும் அவர் மகள், இன்று வீடு வருவதாகச் சொல்லி இருந்தார்.

தனியாக உட்கார்ந்து  உண்டு முடித்தவள், தபால்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். இரண்டு, மூன்று நாட்களாக வந்திருந்த எதையும் பிரித்துப் பார்க்கவில்லை. இன்று நிதானமாக எல்லாவற்றையும் படித்தாள்.

லெட்டர் மூலமாக இப்போதெல்லாம் நிறையப் புகார்கள் வர ஆரம்பித்திருந்தன. சப் கலெக்டரிடம் சொன்னால், நிச்சயம் தீர்த்து வைப்பார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இப்போது தோன்றியிருந்தது.

அனேகமாகப் பெண்களே அதிகம் கடிதம் போட்டார்கள். வெளி உலகத்தோடு அத்தனை பிணைப்பு இல்லாததால், அவர்களுக்கு இந்த முறை மிகவும் வசதியாக இருந்தது. அவர்களின் சின்னச் சின்ன சங்கடங்களையும், தீர்த்து வைத்தாள் நித்திலா.

அந்தக் கவர் கொஞ்சம் கனமாக இருந்தது. பிரச்சினை கொஞ்சம் பெரிதாக இருக்கும் போல, என்ற நினைத்தபடியே கவரைப் பிரித்தாள். படிக்கப் படிக்க நெற்றி சுருங்கியது.

 

error: Content is protected !!