mu-28(1)

மீண்டும் இணைந்த பந்தம்

ரம்யாவோ சூர்யாவிடம் பேச வேண்டும் என வீட்டை அடைந்த மாத்திரத்தில் இருந்துஆர்வ மிகுதியால் தவித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சூர்யாவோ களைப்போடு வெகுதாமதமாகவே வீட்டை அடைந்தாள். சூர்யா குளித்து முடித்து உணவருந்தி படுக்கை அறைக்கு வந்ததும் பேசலாம் என ரம்யா காத்திருக்கஅவளோ மும்முரமாய் லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு வேலை செய்யத் தொடங்கினாள்.

ரம்யா பேச எத்தனிக்க அதற்குள் சூர்யாவே அவள் புறம் திரும்பி, “ரம்யா சின்ன ரிக்வஸ்ட்” என்றாள்.

ரம்யா கோபத்தோடு, “என்ன… அம்மா ரூம்ல போய் படுத்துக்கோ… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லப் போற… அதானே?” என்று அவள் கடுப்பாய் கேட்க சூர்யா நிமிர்ந்து பார்க்காமல், “அதேதான்… ப்ளீஸ் இன்னைக்கு மட்டும்” என்றாள்.

என்ன நீ… நான் உன்கிட்ட முக்கியமா பேசணும்னு இவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு வேலை செய்ணும்னு உட்கார்ந்துட்ட” என்று ரம்யா கோபத்தோடுக் கேட்க,

ரம்யா புரிஞ்சுக்கோ… நாளைக்கு நான் மீட்டிங்காக ரெடி பண்ணலன்னா… அந்த ஈஷ்வர் என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவான்” என்றாள்.

ரம்யா கோபமாய் திரும்பிக் கொண்டு, “நீ அந்த ஈஷ்வரையே கட்டிக்கிட்டு அழுவு… நான் போறேன்” என்று கிளம்பப் போனவளிடம்,

சூர்யா குரல் கொடுத்து, “மேட்டர் என்ன ஷார்ட்டா சொல்லிட்டுப் போடி” என்றாள்.

ரம்யா முறைத்தபடி, “ம்ம்ம்… அர்ஜுன் இன்னைக்கு என்கிட்ட பிரொப்போஸ் பண்ணாரு… போதுமா” என்று உரைத்துவிட்டுக் கிளம்ப,

சூர்யா வியப்புக் கலந்த அதிர்ச்சியோடு, “ஏய் ரம்யா போகாதே இரு… முழுசா சொல்லிட்டுப் போ” என்றாள்.

ரம்யா கவனியாமல், “நீ உன் வேலையைப் பாரு… ” என்றாள்.

சூர்யா எழுந்து வந்து ரம்யா கையைப் பற்றித்தடுத்தபடி, “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… நீ மேட்டரை சொல்லு” என்று சொல்லி அவளை உட்காரச் சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்து ஓரம் வைத்தாள்.

உன்னை ஈஷ்வர் உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்… பரவாயில்லையா?” என்று ரம்யா விஷமப் புன்னகையோடுக் கேட்க,

அவன் எல்லாம் என்னை ஒன்னும் பண்ண முடியாது… நீ முதல்ல அர்ஜுன் எப்படி பிரொப்போஸ் பண்ணாருன்னு சொல்லு… நான் தெரிஞ்சுக்கணும்” என்று ஆவல் பொங்கக் கேட்க ரம்யாவும் புன்னகை ததும்ப நடந்தவற்றை விவரிக்கலானாள்.

உனக்குத் தெரியுமா… இன்னைக்கு நான் பார்த்த அர்ஜுனே வேற” 

“எப்பவுமே பேஷண்ட்ஸ்… ரிப்போர்ட்ஸ்… இல்லன்னா ஏதாச்சும் மெடிக்கல் சம்பந்தபட்டதைப் படிச்சுகிட்டிருப்பாரு… அதைப்பத்திதான் பேசுவாரு….. பட் இன்னைக்கு அவரோட ஆட்டிட்யூடும் பேச்சும் அவர் ப்ரொப்போஸ் பண்ண விதமும் இருக்கே…” சொல்லும் போதே ரம்யாவின் முகத்தில் அத்தனைப் பிரகாசம்.

சூர்யா கன்னத்தைக் கைகளால் தாங்கியபடி, “அப்போ நீ மொத்தமா ஃபிளாட்ன்னு சொல்லு” என்றாள்.

பின்ன… “

எப்படிதான் ப்ரொப்போஸ் பண்ணாருன்னு… முதல்ல சொல்லு” என்று சூர்யா ஆர்வமாய் வினவ,

நீ வேற சூர்யா… அர்ஜுன் செஞ்ச அளப்பறை இருக்கே… அவருக்கு உடம்பு சரியில்லைங்கறாரு… படபடப்பா இருக்கு மூச்சு வாங்குதுன்னாரு… நான் பயந்துட்டேன்” என்றாள்.

சூர்யா இதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்துவிட்டு, “நீ உடனே உன் டாக்டர் வேலையைப் பார்த்திருப்ப… கரெக்டா?” என்று கேட்டாள்.

ம்ம்ம்… நான் பாட்டுக்கு அவர் சொல்றது பொய்யின்னு தெரியாம லூசு மாதிரி பிபி பல்ஸெல்லாம் செக் பண்ணேன்… “

சூர்யா அவள் சிரிப்பைக் கட்டுபடுத்த முடியாமல், “லூசு மாதிரியில்ல… லூசேதான்… நல்லா உன்னை வைச்சு செஞ்சிருக்காருன்னு சொல்லு” என்றாள்.

போடி… எனக்கெப்படித் தெரியும் அர்ஜுன் பொய் சொல்றாருன்னு” என்று சொல்லும் போதே ரம்யா பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்கசூர்யா சிரித்து முடித்து சுதாரித்துக் கொண்டு,

இல்ல நான் தெரியாமதான் கேட்கறேன்… அவரும் டாக்டர்தானே… அவர் உடம்புக்கு என்னன்னு அவருக்கே செக் பண்ணிக்கத் தெரியாதா?” என்று கேட்க,

முகத்தை பாவமா வைச்சுகிட்டு… எனக்கு என்னன்னு என்னாலயே டையக்னைஸ் பண்ண முடியலன்னு சொன்னாரு” என்று ரம்யா சொன்னதும் மீண்டும் சூர்யா சிரித்தபடி,

உடனே நீ நம்பிட்ட… சரி அப்புறம் என்னதான் ஆச்சு… மேடம் என்னன்னு டையக்னைஸ் பண்ணீங்களா இல்லையா?” என்று சிரிப்போடுக் கேட்க,

ரம்யா கோபத் தொனியில், “நீ இப்படியே சிரிச்சு கிண்டல் பண்ணிட்டிருந்தன்னா… நான் சொல்ல மாட்டேன்… எழுந்து போயிடுவேன்” என்றாள்.

சூர்யா தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ஒகே… ஒகே… ம்ம்ம்… சிரிக்க மாட்டேன்… நீ மேல சொல்லு” என்று அவள் உறுதி கொடுத்தாலும் அது சிரமமான ஒன்றாகவே அவளுக்குத் தோன்றியது.

மீண்டும் ரம்யா தொடர்ந்தாள்.

நான் உடனே வேற டாக்டரைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னதும்… அர்ஜுன் என் கையைப் பிடிச்சு… எனக்கு என்னன்னு உன்னால மட்டும்தான் டையக்னைஸ் பண்ண முடியம்னு சொல்லி என் ஹார்ட் பீட்டை பீஃல் பண்ணி பாருன்னாரு”

சூர்யா சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி, “நீ உடனே அதிபுத்திசாலியாட்டம் ஸ்டெத்தை எடுத்துருப்பியே” என்று நடந்ததைப் பார்த்தது போல் கேட்க ரம்யா முகத்தைத் தொங்கப் போட்டபடி,

ம்ம்ம்… அதேதான் பண்ணேன்… அப்போ அர்ஜுன்  என்கிட்ட ஸ்டெத்தால… ஹார்ட் பீட்டை கேட்கத்தான் முடியும்… பீஃல் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு… என் கையைப் பிடிச்சு சடார்னு அவர் நெஞ்சு மேல வைச்சு பீஃல் பண்ணிப் பாருன்னுட்டாரு… நான் அப்படியே உறைஞ்சு போயிட்டேன்… ” என்று மிரண்டபடி உரைக்க சூர்யாவும் இதைக்  கேட்ட நொடி உறைந்ததுதான் போனாள். இருவருமே மௌனமாகிட சூர்யா சிறிது நேரம் கழித்துத் தெளிவுப்பெற்று,

வாட் அ சீன்? அர்ஜுன் பின்னிட்டாரு போ…  சரி… நீ என்னதான் பண்ண” என்றாள்.

எனக்கு பிபி எகிறிடுச்சு… கையெல்லாம் பயத்துல சில்லுன்னு ஆயிடுச்சு… நான் கையை விடுங்கன்னு கெஞ்சறேன்… அவரு பாட்டுக்கு நான் என் மனசுல இருக்கிறதை உனக்குப் புரிய வைச்சிட்டேன்… இப்போ உன் மனசிலிருக்கிறதை  சொல்லுன்னாரு”

சூப்பர்… சொன்னியா?”என்று சூர்யா ஆர்வமாய் கேள்வி எழுப்ப,

ரம்யா இல்லையென்பது போல் தலையசைத்து, “ம்ஹும்… நான் இருந்த நிலைமைக்கு எனக்கு பேச்சே வரல” என்றாள்.

வேஸ்ட் பார்ட்டி டி நீ” என்று சூர்யா தலையிலடித்துக் கொள்ள,

ரம்யா கோபம் கொண்டபடி, “ஆமாம் சொல்லுவ… நீயெல்லாம் லவ் பண்ணி பார்த்தாதான் தெரியும்… ப்ரொப்போஸ் பண்றதென்ன அவ்வளவு ஈஸின்னு நினைச்சியா… அது ஒரு பீஃல்… இருந்த நடுக்கத்துல நான் என்னத்த சொல்ல” என்று அவள் உரைக்க அந்த வார்த்தை சூர்யாவிற்குத் தன்னை தாக்குவது போல் தோன்றியது. 

தான் அபிமன்யுவிடம் அவசர கதியில் சொன்ன காதல் நினைவுக்கு வர தான் உணர்வுபூர்வமாய்  சொல்லவில்லை என்பதால்தான் அபிமன்யு கோபித்துக் கொண்டானோ என எண்ணிணாள்.  

ரம்யா அவள் சிந்தனையில் குறுக்கிட்டு, “சூர்யா” என்று அழைக்க அவள் அந்த எண்ணத்தை விடுத்து, “நீ மேலே சொல்லு…” என்றாள்.

அப்புறம் என்ன?… ஒரு போஃன் வந்துச்சு… போஃன் பேசிட்டு  அவசரமா வெளியே போகக் கிளம்பினாரு”

சே… ஸீன் முடிஞ்சுச்சா… அவ்வளவுதானா?!” என்று சூர்யா ஏக்கமாய் கேட்க,

இல்ல… அர்ஜுன் கிளம்பறதுக்கு முன்னாடி உனக்கு ஒண்ணு தரனும்… கண்ணை மூடுன்னு சொன்னாரு”

இதைக்கேட்டு சூர்யா அதிர்ச்சியில் ஆழ்ந்தபடி, “கண்ணை மூடுன்னு சொன்னாரா?” என்றாள்.

ரம்யா அவள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைக் கவனித்து, “ஏன் கண்ணை மூடுன்னு சொன்னதுக்குப் போய் நீ இவ்வளவு ஷாக்காகுற?” என்று கேட்க,

சூர்யாவிற்கு அபிமன்யு தந்த அதிர்ச்சி வைத்தியம் நினைவுக்கு வர அந்த உணர்வினைப் பிரயத்தனப்பட்டு மறைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இன்னொரு புறம் மனதில், ட்வின்ஸா இருந்தா ஒரே மாதிரி யோசிப்பாங்களோ… பட் இது கொஞ்சம் டூ மச்‘ என்று எண்ணிக் கொண்டாள்.

நான் மிஸ்டர். அர்ஜுன் மேல எவ்வளவு மரியாதை வைச்சிருந்தேன்… அவர் எப்படி இப்படி பண்ணலாம்” என்று சூர்யா வெளிப்படையாகக் கேட்க,

இதுல என்னடி இருக்கு?”என்றாள் இயல்பாக.

அப்போ உனக்கு இது தப்பா தெரியலையா?”

அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியலை… இன்னும் சொல்லணும்னா அர்ஜுன் இந்தளவுக்கு யோசிப்பாருன்னு நான் நினைச்சு கூடப் பார்க்கல… அந்த மொமன்ட் நான் ரொம்ப இம்பிரஸாயிட்டேன்… என்னால மறக்கவே முடியாது…” என்று சொல்ல சூர்யாவிற்கு ரம்யாவின் எண்ணம் விளங்கவில்லை.

அவள் குழப்பத்தோடு, “என்னால சத்தியமா நம்பவே முடியல… நீதான் பேசுறியா?” என்று வினவினாள்.

இதுல நம்பமுடியாதளவுக்கு  என்னாயிடுச்சு… இவ்வளவு அழகான ரிங்கைப் போட்டு ப்ரொப்போஸ் பண்ணா எந்த பொண்ணுதான்டி இம்பிரஸாகமாட்டா… ” என்று அந்த மோதிரத்தை சூர்யாவிடம் காண்பிக்க,

ரிங்கா?” என்று பெருமூச்சுவிட்டாள்.

பின்ன நீ என்ன நினைச்சு?”என்று ரம்யா புரியாமல் கேட்க சூர்யா தன் முட்டாள்தனத்தை சிந்தித்து அசடு வழிந்தபடி, “நான்… எதுவும் நினைக்கலயே” என்று சமாளித்தாள்.

பின் சூர்யா மனதிற்குள், அர்ஜுன்  எவ்வளவு டீஸன்ட்டா நடந்துக்கிட்டாரு… இந்த அபிக்கு மட்டும் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுதுன்னு தெரியல… இடியட்‘ என்று சொல்லி மனதில் திட்டிக் கொண்டிருக்க ரம்யா சூர்யா தோள்களைத் தொட்டு, “சரி அதெல்லாம் போகட்டும்… நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” என்றாள்.

என்ன?”

நீ அர்ஜுனை எப்பையாச்சும் மீட் பண்ணி… நான் அவரை லவ் பண்றதா சொன்னியா?” என்று கேட்க

சூர்யா யோசனையோடு, தெரிஞ்சிருக்குமோ… இருக்காது… தெரிஞ்சிருந்தா இன்நேரத்துக்கு சாமியாடியிருப்பாளே‘ என்று யோசித்தவள், “ம்ம்ம்… மீட் பண்ணேனே… அது ஈஷ்வர் தேவ் டாக்டர்.வைத்தீஸ்வரனை மீட் பண்ண அழைச்சிட்டுப் போன போது… இட்ஸ் ஜஸ்ட் அ ஃபார்மல் மீட்டிங்… அப்போ நான் அர்ஜுன்கிட்ட எதுவும் பேசல” என்றாள்.

பொய் சொல்லாதே… நீ எதுவும் சொல்லாமலா… அர்ஜுன் உனக்குத் தேங்க் பண்ண சொன்னாரு” என்று கேட்க சூர்யாவின் முகம் மாறியது.

தான் அதை தெரியப்படுத்தினால் தன் மீது ரம்யா கோபம் கொள்ளவாளே என தயங்கியபடி, “தேங்க் பண்ண சொன்னாரா… எதுக்குன்னு தெரியலையே” என்றாள்.

பொய் சொல்லாம் சொல்லு…  நீ எதுவும் உளறலியா?” என்று மீண்டும் நம்பாமல் ரம்யா கேட்க,

சூர்யா தீர்க்கமாய், “உன் மேல சத்தியமா நான் அர்ஜுன்கிட்ட உன் லவ்வை பத்தி எதுவும் பேசவே இல்ல” என்று உரைக்க அதற்கு மேல் ரம்யாவால் அவள் சொல்லும் பொய்யை நம்பாமல் இருக்க முடியவில்லை.

அப்புறம் ஏன் அர்ஜுன் அப்படி சொல்லணும்‘ என்று ரம்யா சிந்தனையில் ஆழ்ந்திட சூர்யா இப்போதைக்கு தப்பிப்பிழைத்தோம் என்று எண்ணியவள்  ரம்யாவை நோக்கி, “எனக்கு நிறைய வேலை இருக்கு… அல்ரெடி லேட்டாயிடுச்சு” என்று தயங்க,

ரம்யா அதனைப் புரிந்து கொண்டபடி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அர்ஜுன் தன் காதலை உரைத்த கையோடு தன் பெயரைச் சொல்வானேன். இத்தனை சந்தோஷமாய் இருக்கும் ரம்யாவிற்குத் தான் போய் அர்ஜுனிடம் பேசியதால்தான் இவையெல்லாம் நடந்ததெனத் தெரிந்தால் ஒரு வித ஏமாற்றம் உண்டாகலாம். அத்தகைய ஏமாற்றத்தை உடனே ஏற்படுத்த சூர்யாவிற்கு மனமில்லை. ஆதலால் அவளிடம் அந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

ஒருவாறு சூர்யா மீண்டும் வேலை செய்யலாம் என லேப்டாப்பை அருகில் எடுத்து வைத்தவள், அபிமன்யு பற்றிய நினைவு வர அவனிடம் ஒரு நன்றியாவது சொல்லலாம் என்ற எண்ணத்தோடுத் தன் கைப்பேசியை எடுத்தாள்.

ஆனால் அவளின் ஈகோ திட்டவட்டமாய் மறுப்புத் தெரிவித்தது. நான் ஏன் கால் பண்ணனும்… பண்ண மாட்டேன்… செஞ்ச தப்புக்கு ஒரு சாரி சொல்லியிருக்கலாம்ல… இவங்களுக்குப் பார்க்கணும்னா நடுராத்திரில கூட கால் பண்ணுவாங்க… ம்ஹும்… லெட் ஹிம் டாக்‘  என்று நினைத்தபடி அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

இன்று பேச சூழ்நிலை அமைந்தும் பேசாமல் தன் ஈகோவால் தவிர்ப்பவள் நாளை அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்கித் தவிக்கப் போகிறாள். அன்று இந்த ஈகோ கறைந்து போய் காதல் மட்டுமே எல்லாமுமாய் அவளுக்குத் தோன்றக் கூடும்.

*****

அர்ஜுன் தன் காதலை சொன்ன ஒரு வாரத்தில் சுகந்தி வைத்தீஸ்வரனிடமும் பேசி ஒரு வழியாய் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டார். பிறகு அவர்கள் ரம்யாவின் தாய் சந்தியாவிடமும் பேச அவருக்கும் தன் மகள் திருமணம் இத்தனை சிறப்பான இடத்தில் அமையப் போகிறதே என களிப்பு உண்டானது. ஆதலால் சந்தியாவும் சம்மதம் தெரிவித்திட, ஒரு நல்ல நாளில் நேரில் வந்து பேசுவதென முடிவெடுத்தனர்.

அன்று அர்ஜுன் வீட்டார் சந்தியா வீட்டிற்கு  வருகை தர இருந்தனர். ஆதலால் சந்தியா சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருக்க, அவர் மனம் பதட்டத்திலும் மறுபுறம் இன்பத்திலும் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. அந்த தருணத்தின் அனுபவம் அவளுக்கு ரொம்பவும் புதிது. மகளுக்காக மணம் பேச வருபவர்களிடம் எப்படிப் பேசுவதென்று அச்சம் அவளை ரொம்பவும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

ரம்யாவை வளர்த்து சமுதாயத்தில் மதிக்கும்படியான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கணவனை சாராமல் நின்று அதனை சாதித்து வெற்றியும் கண்டார். ஆனால் இத்தனை நாளாய் தேவைப்படாத கணவனின் துணை இன்று தேவைப்பட்டது. அவர் உடன் இருந்தால் நன்றாய் இருக்குமே என நினைக்க மனம் வேதனையில் உழன்றது.தன் வேதனையை பகிர்ந்து கொள்ளவும்  யாரும் இல்லையே என சந்தியா ஒருவிதத் தனிமையை உணர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் அறையில் சூர்யா ரம்யாவை அலங்கரித்துக் கொண்டிருக்க,  அந்த அலங்கரிப்பு ரம்யாவின் அழகோடு இயைந்து அத்தனை அம்சமாய் பொருந்தியது. ஆனால் அதனை ரசிக்கும் மனநிலையில் ரம்யா இல்லை.

இப்போ அப்பா இருந்தா நல்லா இருக்கும்ல” என்று அவளின் ஏக்கமே மேலோங்க,

அக்கறை இல்லாதவரைப் பத்தி நீ ஏன் யோசிச்சிட்டிருக்க?!” என்றாள் சூர்யா.

நீ ஃபோன் பண்ணி இந்த விஷயத்தை சொன்னியா?” என்று ரம்யா ஆர்வமாகக் கேட்க,

சூர்யா முகத்தை சுளித்தபடி,”எல்லாம் பண்ணேன்… ஆனா அவர் எடுக்கல… என்னை என்ன பண்ண சொல்ற?!” என்று சிரத்தையின்றி உரைத்தாள்.

நீ ஒழுங்கா ட்ரை பண்ணியிருக்க மாட்ட?”

அப்போ நீயே ஃபோன் பண்ண வேண்டியதுதானே ?”

உனக்கு விருப்பமில்லை… அதான் நீ இப்படி பேசற… ” என்று உரைக்க இருவருக்கிடையிலும் வாக்குவாதம்  ஏற்பட இறுதியில் ரம்யா சூர்யாவை நோக்கி, ப்ளீஸ் சூர்யா நீ இங்கிருந்து போயிடு… நானே பார்த்துக்கறேன்” என்றாள்.

ஒகே போறேன்… பட் அழுதழுது முகத்தை ஸ்பாயில் பண்ணிக்காதே” என்று சொல்லி சூர்யா வெளியேறப் போக,

ரம்யா கோபத்தோடு, “எல்லாம் எங்களுக்கும் தெரியும்… நீ போ” என்றாள்.

சூர்யா அறையை விட்டு வெளியேறிய பின் சந்தியாவைக் காண வர அவர் முகத்திலும் அதே வேதனை குடிகொண்டிருந்ததைக் கவனித்தாள்.

சூர்யாவிற்கு அப்போதுதான் தான் பெரிய தவறிழைத்துவிட்டோம் என்று தோன்றியது. ரம்யா ஏற்கனவே தந்தையிடம் இந்த விஷயத்தைக் குறித்துத் தெரிவிக்க சொல்லி சூர்யாவிடம் உரைத்திருந்த நிலையில் அவளும் அவரிடம் பேச முயற்சித்தாள். ஆனால் இரண்டு மூன்று தடவை அழைப்பு விடுத்தும் அவர் ஏற்கவில்லை என்ற கோபத்தில் அத்தோடு அவள் அவரை அழைக்க அத்தனை சிரத்தைக் காட்டவில்லை. இப்போது அவளுக்குள் தன் அக்கறையின்மைதான் இவர்கள் வருத்தமுறக் காரணமோ என குற்றவுணர்வு ஏற்பட்டது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க காரின் சத்தம் கேட்க… சந்தியா சூர்யாவிடம், “அவங்க வந்துட்டாங்க போல… போய் உள்ளாற கூப்பிடு” என்றாள்.

நானா… ம்ஹும்… நீங்க போங்க…” என்று சூர்யா மறுப்புத் தெரிவிக்க அதற்குக் காரணம் அபிமன்யுவும் அவர்களுடன் வந்திருப்பானோ என்ற எண்ணத்தில்தான். பின்னர் சந்தியாவே வாசல் கதவருகே போனார்.

ஆனால் அவர் வரவேற்க போன விருந்தாளிகள் அங்கே இல்லை. அதற்கு பதிலாய் அவள் சற்றும் எதிர்பார்க்காத அவரின் கணவன் நின்றிருக்க வியப்பில் மூழ்கிப் போய் வார்த்தைகளின்றி நின்றார்.

கிட்டதட்ட இருபது வருஷத்திற்கு முன்பு பார்த்த அந்த முகத்தில் முழுமையாய் முதுமையின் சாயல் தெரிந்த போதும் அது அவருக்கு மறக்க முடியாத தோற்றமாயிற்றே. 

அந்த மீசையின் கம்பீரம் மட்டும் இன்னும் மாறவேயில்லை என கணவனின் மாற்றத்தை அங்கம்அங்கமாய் அவர் கவனித்துக் கொண்டிருக்க சுந்தரும் தன் மனைவியின் ஆச்சர்யமான முகப்பாவனையிலும் அவரின் முதுமையான தோற்றத்திலும் லயித்திருந்தார். 

அவர்களுக்குள் பல வருடங்கள் முன் இருந்த அந்த உறவின் தாக்கமும் அந்த முதிர்ச்சியில் ஏற்பட்டத் தெளிவும் அவர்களுக்குள் ஈகோவால் எழுப்பப்பட்ட பெரும் திரை இன்று விலகிப் போனது. 

எந்த உறவு ஒத்துவராது என அவர்கள் இருவரும் சேர்ந்தே பரஸ்பரம் பிரிவை ஏற்றுக் கொண்டனரோ அந்த உறவு மொத்தமாய் முறிந்துவிடவில்லை என்பதற்கான ஆதாரமாய் இருவரின் பார்வையின் சந்திப்பிலும் தெளிவாய் உணரப்பட்டது.

 சந்தியாவை வாட்டிக் கொண்டிருந்த தனிமையும் அவள் எதிர்நோக்கிய வாழ்க்கைப் போராட்டமும் என அனைத்திற்கும் சுந்தர் மீது அவர் கோபித்துக் கொண்டதெல்லாம் இப்போது அவை நினைவில் இல்லை. அவருக்கும் அதே நிலைதான்.

சூர்யா சத்தத்தையேக் காணோமே என வாசலருகே வந்தவள் கண்ட காட்சி அவளையும் ஆனந்த அதிர்ச்சியில் உறையச் செய்தது.

அப்படியே சிலையென நின்றிருந்த தன் மனைவியை உயிர்ப்பிக்க சுந்தர் மெலிதானப் புன்னகையோடு,”எப்படி இருக்க சந்தியா?” என நலம் விசாரிக்க சந்தியாஅதிர்ச்சியில் இருந்து மீண்டார்.

அவர் தம் கண்களில் பெருகிய நீரைத் துடைத்தபடி, “ம்ம்ம்… நல்லா இருக்கேன்… நீங்க” என்று அவர் கேட்க சுந்தரும் தானும் நலம் என்று தலையசைத்தார்.

“எதோ ஞாபகத்துல வெளியே நிக்க வைச்சு… சாரி… உள்ளே வாங்க” என்று தழுதழுத்தக் குரலில் அழைப்பு விடுத்தார்.

மனைவியின் கோபத்தையும் நிராகரிப்பையும் எதிர்நோக்கியவருக்கு இப்படியான வரவேற்பு அவருக்குள் இருந்த பிடிவாதம் கோபம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் உடைத்தெறிந்தது.

சூர்யா கதவோரமாய் நின்றிருக்க அவள் தன் தந்தையைப் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சந்தியா ஆர்வமாய் உள்ளே அழைத்து அமர வைத்து உபசரிக்க சூர்யா கோபமானப் பாவனையோடு,

உண்மையிலேயே இங்க வரணும்னு வந்தீங்களா…  இல்லை… ஏதாவது வேலை விஷயமா வந்தீங்களா?” என்று கேட்க சுந்தர் பதிலுரைக்காமல் கோபமாய் மகளைப் பார்த்தார்.

சந்தியாவோ இத்தனை வருடங்கள் கழித்து எப்படியோ அவர் வந்திருக்கிறாரே என நிம்மதி பெற்றிருக்க சூர்யாவின் கேள்வி பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆதலால் அவளை எதுவும் பேச வேண்டாம் என தலையசைக்க சூர்யா உடனே, “சரி நான் எதுவும் பேசல… அட்லீஸ்ட் நீங்களாச்சும் கேளுங்க… இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் எங்களை எல்லாம் பார்க்க நேரம் கிடைச்சுதான்னு…” என்றாள்.

சந்தியா தவிப்போடு, “சூர்யா அமைதியா இரு” என்று மிரட்ட அவள் விடாமல் “உங்க மூத்த பொண்ணு முகமாவது ஞாபகம் இருக்கா… அட்லீஸ்ட் பேராச்சும்” என்று கேட்க அப்போது சுந்தர் ஆர்வமாய் சந்தியாவை நோக்கி, “ரம்யா எங்கே?” என்று கேட்க சந்தியா அறைக்குள் இருந்த மகளை அழைத்தார்.

ரம்யாவும் சிரத்தையின்றி வெளியே வர நட்ட நடு ஹாலில் அமர்ந்திருப்பவரைப் பார்த்து சற்று குழப்பத்தோடும் பார்த்த முகமாயிற்றே என அவரை நினைவுக்கூர எத்தனிக்க சுந்தர் ஆர்வமாய் எழுந்து நின்று கொண்டார். அவர் கண்களில் நீர் ஊற்றாய் பெருக சூர்யா தன் தந்தையின் அருகில் வந்து, “சொந்த பொண்ணுக்கே உங்களை அடையாளம் தெரியல” என்றாள்.

இதனைக் கேட்ட ரம்யா உணர்ச்சி மிகுதியால், “அப்பா” என்று ஒற்றை வார்த்தையில் கண்ணீரில் கரைந்திட இருவருக்குமே பேச வார்த்தையே இல்லை.

 ரம்யா கண்ணீரோடு, “எங்க மேல இருந்த கோபம் இப்பயாச்சும் போயிடுச்சா” என்று கேட்க  இந்தக்கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

“கோபம் எல்லாம் இல்லடா” சொல்லியவர் தன் மகளின் தோள்களைப் பற்றி அணைத்துக் கொள்ள சந்தியாவுமே அந்த வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் வடித்தார். உள்ளுக்குள் தந்தையின் வரவை எண்ணி ஆனந்தம் கொண்டாலும் சூர்யா எந்த உணர்ச்சியையும் எல்லோரையும் போல் அதிகமாய் வெளிப்படுத்தவில்லை. அவள் தனிமையில் எந்த உறவோடும் வளராத நிலையில் அவளுக்கு இதைப் போன்று உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அமையவில்லை.

ஒருவாறு சுந்தர் ரம்யாவை நோக்கி, “இப்படி அழக் கூடாதும்மா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாச்சு இல்லை” என்று உரைக்க அந்த மூன்று பெண்களுமே இதைக்கேட்டு வியந்தனர்.

ரம்யா உடனே சூர்யாவை நோக்கி, “அப்பா வருவாருன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கோபத்தோடுக் கேட்க

அவரு என்கிட்டயே சொல்லல… அப்புறம்தானே நான் உன்கிட்ட சொல்ல” என்றாள் சூர்யா அலட்சியத் தொனியில்.

நீதானே அப்பாவுக்கு போஃன் பண்ணி விஷயத்தை சொன்னது” என்று ரம்யா கேட்க,

சூர்யா குழப்பத்தோடு “நான் போஃன் பண்ணது உண்மை… பட் மிஸ்டர். சுந்தர்தான் போஃனை எடுக்கலயே… ” என்று சொன்னதும் சந்தியா சூர்யாவை நோக்கி, “நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன்… வாய் உனக்கு ரொம்ப நீளுது… ” என்று கண்டித்தாள்.

அப்போது சுந்தர் சந்தியாவிடம், “நீ கண்டிச்சா அவ அப்படியே திருந்திடுவாளாக்கும்… எல்லாம் தலைவிதி… நீ வளர்த்த பொண்ணு இப்படி இருக்கு… நான் வளர்த்தது பாரு… தருதலை… எல்லாம் என்னை சொல்லணும்” என்று தன்னைத் தானே கடிந்து கொள்ள சூர்யாவிற்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

“ஹலோ… தருதலைன்னு சொல்லுங்க… ஆனா வளர்த்தேன்னு மட்டும் சொல்லாதீங்க… எனக்கு செம கோபம் வந்திரும்” என்று அவள் பதிலுக்கு முறைக்க,

சுந்தர் சலிப்போடு, “எல்லாம் நான் முன்ஜென்மத்துல செஞ்ச பாவம்… நீ எனக்கு மகளா வந்து வாச்சிருக்க” என்றார்.

இந்த டயலாக்கை நீங்க மாத்தவே மாட்டீங்களா?” என்றாள்.

அவர்கள் இருவரும் குழந்தைத்தனமாய் முறைத்துக் கொண்டிருக்க சந்தியா சூர்யாவை ஆசுவாசப்படுத்தி அறைக்குள் அனுப்பி வைத்தார்.

சூர்யா கோபமாய் படுக்கையில் படுத்துக் கொள்ள ரம்யா பின்னோடு வந்து அவளருகில் அமர்ந்தபடி, “இதுக்காகதான் நம்ம எவ்வளவு ஆசைப்பட்டோம்… இப்ப போய் நீ இப்படி பேசுறியே… உனக்கு அப்பா வந்ததில் சந்தோஷம் இல்லையா?” என்று கேட்டாள்.

எல்லாம் எனக்கும் சந்தோஷம்தான்…”

அது உன் முகத்தில தெரியலையே” என்று ரம்யா கேட்க அதைப்பற்றி யோசிக்காமல் அவசரமாய் எழுந்தமர்ந்தவள்,

எனக்கு ஒரு டௌட்…  மிஸ்டர். சுந்தருக்கு எப்படி எல்லா விஷயமும் தெரியும்” என்று சூர்யா வியப்பாய் கேட்க ரம்யாவும் பதில் தெரியாமல் விழித்தாள். அந்த சமயத்தில் அர்ஜுன் வீட்டார்  வந்துவிட்டதாக சந்தியா தெரிவிக்க அந்த சகோதிரிகளின் சம்பாஷணை அதோடு முடிந்து போனது.

அர்ஜுன் பெற்றோரோடு சேர்த்து சில உறவினர்களும் வந்திருக்க சூர்யா அவர்களைப் பார்த்து வரவேற்பாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள். ஆனால் சற்று நேரத்தில் அபிமன்யு வரவில்லையோ என்ற தேடலில் அவள் முகம் சுருங்கிப் போக, அதை அர்ஜுன் கவனித்து சுகந்தியிடம் தெரிவித்தான். சுகந்தியும் அந்த ஏமாற்றத்தைக் கவனிக்கவே செய்தார். ஆனால் சுகந்தி அதை குறித்து சந்தோஷம் அடையவில்லை.

அர்ஜுன் புறப்படும் போதே தன் தாயிடம் அபிமன்யு சூர்யா திருமணம் குறித்தும் இப்போதே பேசிவிடச் சொல்லிக் கேட்க அதற்கு அவர் இப்போதைக்கு வேண்டாம் என ஏதேதோ  காரணங்கள்  சொல்லி சமாளித்தார். அதோடு தானும் வருவதாக சொன்ன அபிமன்யுவை வரவிடாமல் தடை விதித்தார் சுகந்தி.  இந்த விஷயம் அர்ஜுனிற்கே தெரியாது.

அவரின் நடவடிக்கையில் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. சூர்யாவைப் பார்த்த நொடி எந்த உறவைப்  பிணைத்திட அவர் ஆசை கொண்டாரோ இப்போது அது நடப்பதை அவரே விரும்பவில்லை. அதனாலயே சூர்யாவும் அபிமன்யும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்திருக்கிறார்.  

இவையெல்லாம் ஒரு புறமிருக்க சுந்தர் வைத்தீஸ்வரனும் ஏற்கனவே மும்பையில்  சந்தித்திருந்ததால் அவர்களின் பேச்சுவார்த்தையும் பழக்கமும் ரொம்பவே சுலபமாய் அமைந்தது. என்றோ முறிந்து போன இந்த இரு குடும்பங்களின் சம்பந்தம் மீண்டும் விதி வசத்தால் இணையப் போகிறது.

திருமணம் குறித்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற அர்ஜுனிற்கும் ரம்யாவிற்கும் எதிர்பார்ப்புகள் எதிர்க்காலக் கனவுகளாய் மலர்ந்தன. எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே நடைபெற்றுஅந்த இரு குடும்பத்தின் சந்திப்பும் இனிதே முடிவுற்றது.

ஆனால் சூர்யாவிற்கு இவை எல்லாம் இன்பகரமாய் இருந்த போதும் அபிமன்யு அந்தத்தருணத்தில் இல்லாதது பெருத்த ஏமாற்றமாயிருந்தது. அன்று அபிமன்யு தான் கரிசன் சோழாவிற்குப் போனால் வர நாளாகும் என்று சொன்னது நினைவுக்கு வந்து அவள் மனதில் குற்றவுணர்வை விதைத்தது.

அன்று தான் அவனிடம் கோபித்துக் கொண்டதால்தான் அவன் இப்படி வேண்டுமென்றே தன்னை தவிக்கவிட எண்ணயிருப்பான் என அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டாள். ஆனால் அங்கே வர முடியாததால் அவன் எந்தளவுக்கு வேதனை கொள்கிறான் என்று கரிசன் சோழாவில் இருக்கும் அவனையன்றி வேறு யார் அறிவார்.

சூர்யா அபிமன்யு பற்றியே நினைத்தபடி இருக்க ரம்யாவோ அன்று முழுவதும் தன் தந்தையிடம் ஆசை தீரப்பேசி தன் ஏக்கத்தை ஒருவாறு தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது ரம்யா மாப்பிள்ளை வீட்டார் வரும் விஷயம் எவ்வாறு தெரிந்தது என தன் தந்தையிடம் வினவ, அந்த சமயம் சுந்தர் சொன்ன பதிலால் சூர்யா அதிர்ந்து தன் சிந்தினையிலிருந்து மீண்டாள்.

“ஈஷ்வர்தேவ்னா சொன்னீங்க” என்று அவள் மீண்டும் கேட்க அவர் அவளை நோக்கி, “ஆமாம்… நான் இங்கே வந்ததுக்கு கூட ஈஷ்வர்தேவ்தான் காரணம்… ஏன் என்னை கட்டாயப்படுத்தி வரவழைச்சதே ஈஷ்வர்தேவ்தான்” என்றார்.