Mu4

5
அரங்கரநாதன் திருக்கோவில்
ஆரை நாட்டிலேயே சிறப்பாய் அமைந்த விஷ்ணு ஸ்தலம் அரங்கநாதன் திருத்தலமே. அந்த மார்கழி நிறைந்த நன்னாளில் சூரியன் தன் ஒளிக்கீற்றை வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்க, அர்ச்சகர் முகுந்தநாரயணன் பூசைக்கு வேண்டிய வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார்.
அவரின் மகள் ரங்கநாயகி புதிதாய் மலர்ந்த மலராய் வாசலில் சாணம் தெளித்து கோலம் புனைந்து கொண்டிருந்தாள். அந்தக் கோலம் ஆரம்பமும் முடிவையும் நாம் கண்டுபிடிக்காத வண்ணம் இறைவனின் சாரம்சத்தை உரைத்துக் கொண்டிருந்தது.
பின்னர் ஆலய வாசலிலிருந்த பூந்தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களை இறைவனுக்கு மாலையாய் சூட அவள் பறித்துக் கொண்டிருக்கையில் அக்னீஸ்வரி பின்புறம் வந்து அவள் தோள்களைப் பற்றினாள். தோழிகள் இருவரும் அந்த சில நாட்கள் பிரிவை சமன்படுத்த கட்டியணைத்துக் கொண்டனர்.
ரங்கநாயகி புன்னகையோடு, “அக்கா வீட்டில் இருந்து… எப்போது வந்தாய் அக்னீஸ்வரி” என்று வினவினாள். “நேற்று அந்தி சாயும் போதுதான் வந்தேன்…  உன்னைப் பார்க்க வேண்டி விடிந்தும் விடியாமலும் ஓடோடி வந்தேன்” என்று அக்னீஸ்வரி உரைத்தபடி தோழிக்கு உதவியாய் மலர்களை பறிக்க ஆரம்பித்தாள்.
அரங்கநாதன் திருக்கோவில் அருகில்தான் அக்னீஸ்வரியின் வீடு அமைந்திருந்தது. ரங்கநாயகியுடன் சேர்ந்து கோவில் பணிகள் செய்வதை விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அக்னீஸ்வரி தொடர்ந்து வருகிறாள்.
அக்னீஸ்வரிக்கு மாலை கோர்ப்பதில் அலாதியான இன்பம். அவளின் அழகிய கைவண்ணமெல்லாம் அரங்கநாதன் தோள்களை மாலைகளாய் கோர்த்து அலங்கரித்தது. அன்றும் பூமாலைகளை கட்டத் தோழிகள் இருவரும் கோவிலுக்குள் அமைந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டனர்.
இங்கே இந்தத் தோழிகளின் சம்பாஷணை நிகழ்ந்த அதே சமயத்தில் ருத்ரதேவன் ஆரை நாட்டின் நிமிர்ந்து நின்றிருந்த கோட்டையின் குளத்தில் மலர்ந்திருந்த அல்லி மலர்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கருவிழிகளுக்குள் அவன் கண்ட காட்சி என்னவோ தெரியாது. ஆனால் அவன் இதழ்கள் விரிந்து புன்னகை பூவாய் மலர்ந்திருந்தது.
ருத்ரதேவனின் செயல்களில் சில நாட்களாய் அவன் தாய் மற்றும் தந்தை என்று எல்லோருமே  மாற்றத்தை உணர்ந்தனர். அவனின் துறுதுறுப்பு மறைந்து கவலை தோய்ந்திருந்த முகத்தையும் தனிமையை நாடும் அவன் புதுவிதமான இயல்பையும் கண்டு வியப்புற்றனர். அதற்கான காரணம் அவன் மனதில் நிலைகொண்டிருந்த அக்னீஸ்வரியின் அழகான வதனம். காணும் இடமெல்லாம் அவளின் பிம்பத்தைக் கண்டு காதலில் மூழ்கி இருப்பவனை மீட்டெடுக்க… அவளால் மட்டுமே சாத்தியம்.
இந்த நிலையில் ருத்ரதேவன் விழித்துக் கொண்டே கனவுலகில் சஞ்சரிக்க அவனின் இளைய தமக்கை இளவெயினி தேவி முன்னே வந்து நின்று அவன் கனவைக் கலைத்து விட்டாள்.
இளவெயினி தேவி கட்டி நாட்டு அரசனை மணந்து கொண்ட நிலையில்… அவ்வப்போது பெற்றோரையும் தம்பியையும் பார்க்க பிறந்த வீட்டிற்கு வருவாள்.  அன்று தம்பியைப் பற்றி தாயுரைத்த புலம்பலை எல்லாம் கேட்டு அவனைப் பார்க்க வந்திருந்தாள். தாயுரைத்த வாக்கு உண்மை என்பது போல் அவள் தன் தம்பியை பலமுறை அழைத்தும் அவன் கவனிக்கவில்லை.
அவன் சிந்தனை அங்கில்லை என்பதை உணர்ந்த இளவெயினி எதிர்பாராவிதமாய் அவன் முன்னே வந்து நின்று அவன் காதல் தவத்தைக் கலைத்துவிட்டாள்.
“என்னவாயிற்று ருத்ரா?… விழித்துக் கொண்டே கனவுலகில் சஞ்சரிக்கிறாயோ?… உன்னை இப்படி தனிமையில் இனிமை காண வைத்த தேவதை யாரோ?” என்றவள் பரிகாசமாய் கேட்க,
ருத்ரதேவன், “அப்படி ஒன்றுமில்லை… நான் அல்லி மலரை பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று அப்பட்டமாய் பொய்யுரைதான்.
“ஒரு ஆடவன் மலர்களை ரசிக்கிறான் என்றால்… ஏதோ ஒரு பெண் அவன் மனதில் வசிக்கிறாள் என்றே அர்த்தம்” என்று இளவெயினி அவன் மனம் புரிந்து உரைக்க, அவன் அவள் வார்த்தைகளைக் கவனியாமல் அங்கிருந்து செல்ல எத்தனிக்க,
தம்பி கோபித்து கொண்டான் என்பதைப் புரிந்து கொண்ட இளவெயினி அவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, “ருத்ரன் என்ற பெயருக்கு ஏற்றாற் போல உனக்குக் கோபமும் வருகிறது… சரி இனி நான் அவ்வாறு பேச மாட்டேன்… நானும் தாயும் அரங்கநாதன் திருக்கோவிலுக்கு செல்ல இருக்கிறோம்… நீயும் எங்களோடு வா” என்று அழைத்தாள்.
இப்போது ருத்ரதேவன் தன் தமக்கையை அலட்சியமாய் நோக்கி,
“கோவிலுக்கு செல்ல நான் எதற்கு? நீங்கள் இருவரும் சென்றுவிட்டு வாருங்கள்” என்றான்.
“எங்களின் துணைக்கு கூட நீ வரமாட்டாயா?”
“உங்களின் துணைக்கு அழைத்துச் செல்ல கோட்டையில் வீரர்களா இல்லை?” அவன் இறுக்கமான முகத்தோடு பதிலளிக்க,
“என் தம்பி போன்ற வல்லமை பொருந்திய வீரன் இந்த ஈரேழுலோகங்கில் வேறு யார் இருக்க முடியும்… கண்டிப்பாக நீதான் வர வேண்டும்” என இளவெயினி திட்டவட்டமாய் உரைக்கவும் ருத்ரதேவன் தமக்கையின் விருப்பத்தைத் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் புறப்பட்டான்.
ரதத்தில் ருத்ரதேவியும் இளவெயினியும் வந்து கொண்டிருக்க, ருத்ரதேவன் தன் மனம் கவர்ந்தவளை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்பதை உணராமல் கம்பீரமாய் தன் வெண்புரவியில் முன்னே சென்று கொண்டிருந்தான். அவர்கள் வந்த வீதி தோறும் செவிகளைச் செவிடாக்கும்வண்ணம் கோஷங்கள் எழுந்து கொண்டிருந்தன. அதுவும் ருத்ரதேவனை காண மக்கள் திரள் திரளாய் கூடி அவன் குதிரையில் வரும் அழகை கண் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
கோவிலுக்கு அருகில் இத்தகைய கோஷங்கள் வேண்டாமென வீரர்களிடம் சொல்லி மக்களைக் கட்டுப்படுத்த சொன்னான்.
அரங்கநாதன் திருக்கோவிலில் பூமாலையை இறைவனுக்கு சூட கட்டிக் கொண்டிருந்த அக்னீஸ்வரியிடம் ரங்கநாயகி, “நீ இல்லாத நாட்களில் எல்லாம் உன்னைப் போன்று நான் மாலை கட்டுவதில்லை என தந்தை ஓயாமல் வசை பாடிக் கொண்டிருந்தார்… தெரியுமா?” என்று தன் வேதனையை உரைத்துக் கொண்டிருந்தாள்.
அக்னீஸ்வரி அவள் சொல்வதை செவிகளில் வாங்கிக் கொண்டாலும் பதில் ஏதும் பேசாமல் மாலையைக் கட்டுவதிலேயே ஆழ்ந்து ஈடுபட்டிருந்தாள்.
ரங்கநாயகி ஏதோ நினைவு வந்தவளாய், “அர்ச்சனைக்கு நாழிகை ஆகிறது… நீ மாலையைக் கோர்த்து தந்தையிடம் கொடுத்துவிடு….. நான் வீட்டிற்குச் சென்று பிரசாதம் எடுத்துக் கொண்டு வருகிறேன்” எனச் சொல்ல, அக்னீஸ்வரி மௌனமாகத் தலையசைத்து தன் தோழியிடம் சமிக்ஞை செய்து அனுப்பினாள்.
அக்னீஸ்வரியின் கையில் இருந்த மாலை அத்தனை நேர்த்தியாய் வண்ணமயமாய் திகழ்ந்தது. முன் எப்போதும் இல்லாமல் இந்த முறை அழகாய் வந்ததன் காரணத்தை அவளே அறியவில்லை. எழுந்து நின்று மாலையின் உயரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கோவில் வாசலில் சில சத்தங்கள் வித்தியாசமாக எழுந்தன.
அவற்றை உற்றுக் கவனித்து யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் அரசி ருத்ரதேவியும் அவரின் இளைய மகள் கட்டி நாடு அரசியாக இருக்கும் இளவெயினியையும் கண்டவளின் விழிகள் ஆச்சரியத்தில் இமைக்க மறந்துவிட்டன.
அப்போது அவள் மனம் இளவரசரும் வந்திருப்பாரா என எதிர்பார்ப்போடு பார்வையைத் திருப்ப, அவனோ முன்னமே அவளைக் கண்டுவிட்டான். தன் மனதைக் கொள்ளை கொண்டவள் அழகிய பூமாலையை ஏந்திக் கொண்டு நிற்கும் காட்சியைப் பார்த்து அவன் பேரானந்தம் கொண்டிருக்க, அந்த நொடி நாணத்தில் அவள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றாள்.
ருத்ரதேவனின் தமக்கையும் அன்னையும் அரங்கநாதனைத் தரிசிக்க  வேண்டி விரைவாய் முன்னே சென்று விட, அவனோ என்றுமில்லாத திருநாளாய் மெதுவாய் நடந்து சென்றான். அவள் மீதான தன் விழிகளை அகற்றாமலே!
அரங்கநாதன் தரிசனத்தைக் காண  இரு பெண்களும் உட்கோபுரத்திற்குள் நுழைய அரச குடும்பத்தினரைப் பார்த்த அர்ச்சகருக்குக் கைகால் ஓடவில்லை.
“வாருங்கள் வாருங்கள்… முன்னமே சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பான பூசைக்கு ஏற்பாடு செய்திருப்பேனே” என்று ஆதங்கப்பட்டார்.
ருத்ர தேவி அமைதி நிரம்பிய புன்னகையோடு, “நீங்கள் எப்போதும் போல அர்ச்சனைகளை மேற்கொள்ளுங்கள்” என்றாள்.
“இல்லை இல்லை சற்று நேரத்தில் நான் சிறப்பான வழிப்பாடுகளும் அலங்காரமும் செய்து விடுகிறேன்” என்று உரைக்க,
இதைக் கேட்ட ருத்ரதேவன் “அவசரம் வேண்டாம்… நீங்கள் பொறுமையாகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்… சிறப்பான அபிடேக அர்ச்சனைகள் மேற்கொள்ளுங்கள்… நாங்கள் காத்திருந்து வழிப்படுகிறோம்” என்று கூற, அவனை இளவெயினி ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
கோவிலுக்கே வர மாட்டேன் என்று சொன்னவனுக்கு இப்போது இறைவனை தரிசிக்கும் ஆர்வமும் பொறுமையும் திடீரென எங்கிருந்து பொங்கியது என்றவள் குழப்பமுற்றாள். தமக்கையின் சந்தேகப் பார்வையைப் பின்னோடு நின்று கவனித்த ருத்ரதேவன், “அக்கா…கோவிலுக்கு வந்தால் கடவுள் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” என்க,
தன் தம்பியின் குரலில் வெளிப்பட்ட குறும்புத்தனத்தை அவன் உடன்பிறந்தவள் உணர்ந்த போதும் அவனின் இந்த திடீர் உவகையின் காரணத்தை அவளால் கணிக்க முடியவில்லை.
அந்தச் சமயம் அர்ச்சகர், “ரங்கநாயகி… மாலையை எடுத்து வா” என்று குரல் கொடுக்க அக்னீஸ்வரி தயங்கியபடி கட்டிய மாலையை பெரிய தாம்பூலத்தில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
மாலையைப் பார்த்த அரசி ருத்ரதேவி “நாம் எடுத்து வந்த மாலையை விட இந்த மாலை வெகு அழகாக இருக்கிறதே!” என்று வியப்புற,
இளவெயினியும் தாயின் வார்த்தையை ஆமோதித்து, “நீங்கள் சொல்வது சரிதான்… இந்த மாலை ரொம்பவும் அழகாக புனையப்பட்டு இருக்கிறது” என்று ஆச்சரியம் கொண்டாள்.
பின் இளவெயினி அக்னீஸ்வரியை நோக்கி, “இந்த மாலையை நீயே கட்டினாயா?” என்று வினவ அவள் தன் தலையை நிமிர்த்தாமலே, “ஹ்ம்ம்” என்று ஆமோதித்தாள்.
“மாலை மட்டுமல்ல… இவளுமே ரொம்பவும் அழகாக இருக்கிறாள்” என்று இளவெயினி தன் தாயிடம் சொல்ல,
“உன் பெயர் என்னம்மா?” என்று ருத்ரதேவிஅவளிடம் கேட்டார்.
அந்த நொடி அக்னீஸ்வரி ருத்ரதேவனின் பார்வைக்குள் சிக்குண்டு வார்த்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்படி சிலை போல் நிற்பதைப் பார்த்த இளவெயினி,  “ஏன் பதில் சொல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறாய்?!” என்று மீண்டும் வினவ ருத்ரதேவன் தன்னால்தான் அவள் அவ்விதம் நிற்கிறாள் என்பதை உணர்ந்தான்.
ருத்ரதேவன் தமக்கை சார்பாக, “உனக்கு வாய் பேச வராதா பெண்ணே!” என்று எள்ளலான புன்னகையோடு வினவ,
அப்போது அர்ச்சகர் வெளியே வந்து அக்னீஸ்வரியிடம் இருந்து மாலையை பெற்றுக் கொண்டு “என்னவாயிற்று அக்னீஸ்வரி உனக்கு?… அரசியார் கேள்வி கேட்கிறார்கள்… நீ எதற்கு மரம் போல் நிற்கிறாய்” என்று அதட்டினார்.
“விடுங்கள் அர்ச்சகரே… பாவம் சின்னபெண் எங்களை எல்லாம் திடீரென்று… பார்த்ததில் பயந்து போய்விட்டாள் போலும்” என்று ருத்ரதேவி அவள் நிலைமை உணர்ந்து சொல்ல,
“இல்லை அரசி… இவளைப் பற்றி தங்களுக்குத் தெரியாது… இவள் யாரையும் கண்டும் பயம் கொள்பவள் அல்ல… பேச ஆரம்பித்தால் ஊரையே விற்று விடுவாள்” என்று அர்ச்சகர் அவளின் புகழுரை பாட ருத்ரதேவன் அடக்க முடியாமல் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அக்னீஸ்வரி தன்னைப் பார்த்துத்தான் அவன் பரிகாசமாய் சிரிக்கிறான் என்பதைக் கண்டு கொண்டவளின் உள்ளம் தவிப்பில் ஆழ்ந்தது.
அதேநேரம் அர்ச்சகர் அவளை நோக்கி, “ரங்கநாயகி எங்கே?!” என்று கேட்டார்.
“குடிலுக்கு பிரசாதம் எடுத்து வரச் சென்றாள்” என்று அக்னீஸ்வரி பதிலுரைக்க,
இளவெயினி உடனே, “நாங்கள் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்ல மாட்டாயோ ?!” என்றாள்.
“அப்படி எல்லாம் இல்லை இளவரசி” என்று அக்னீஸ்வரி சற்று சுதாரித்துக் கொண்டு பேச, இளவெயினி அதற்குப் பிறகு வரிசையாக அவள் குடும்பம் பற்றி நிறையக் கேள்விகளை எழுப்பினாள்.
அவற்றிற்கெல்லாம் ஒருவாறு தட்டுத்தடுமாறி பதிலுரைத்தவள் அவ்வப்போது ருத்ரதேவனையும் தன் ஓரப் பார்வையால் கவனித்தாள். அவனோ தன் கூரிய விழிகளால் அவளை மட்டுமே குறி வைத்திருந்தான்.  
இறுதியாக, “நான் என் குடிலுக்கு செல்ல வேண்டும்” என்று அக்னீஸ்வரி அவர்களிடமிருந்து நழுவிக் கொண்டாள். கோவில் வாசலை அடைந்த போது காவலர்கள் அவளை வழிமறித்தனர்.
“உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல கூடாது என்பது இளவரசரின் உத்தரவு” என்றனர்.
எப்போது இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தான் என்று யோசித்தபடி பலமுறை காவலர்களிடம் தன் தந்தையின் பெயரை எல்லாம் சொல்லி அவள் வெளியே செல்ல முயன்று பார்த்தாள். ஆனால் அந்தக் காவலர்கள் அவளை வெளியே விடச் சம்மதிக்கவில்லை.
அவள் வாடிய முகத்தோடு கோவிலின் பின்புறம் சென்று நின்று கொண்டு, “எதற்காக இப்படி ஒரு உத்தரவைப் போட வேண்டும்” என்று தவிப்பாய் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
“வேறு எதற்கு… உனக்காகத்தான் அக்னீஸ்வரி” என்று ருத்ரதேவன் தன் கணீர் குரலால் பதிலுரைத்தபடியே அவள் முன்னே வந்து கம்பீரமாய் நின்றான். ருத்ரதேவன் அன்னையும் தமக்கையும் சிறிப்பு பூசையில் ஆழ்ந்த சமயம் பார்த்து அவன் அவளைக் காண வந்திருக்க, அவனைக் கண்டவள் பதட்டம் கொண்டாள்.
அவனைக் கடந்து அவள் செல்ல முயற்சி செய்ய அவன் தன் கரங்களால் தடுப்பணை போட்டு அவளை வழிமறித்தான்.
“வழி விடுங்கள்… நான் செல்ல வேண்டும்” என்று அக்னீஸ்வரி அழுத்தமாய் தரையை பார்த்துக் கொண்டே கூற,
“நான் காத்திருந்து கிடைத்த இந்த அரிய வாய்ப்பை நழுவ விடுவதாயில்லை அக்னீஸ்வரி” என்று வஞ்சம் இழையோடிய புன்னகையை உதிர்த்தான்.
என்னதான் அவள் மனம் அவனுக்காகத் தவிப்புற்றாலும் அவன் நடந்து கொள்ளும் விதத்தில் கோபம் மூண்டது அவளுக்கு!
“பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தங்கள் தமக்கையும் அன்னையும் உங்களுக்குக் கற்றுத் தரவில்லையா?” என்று அவள் அவனிடம் கேட்டு விட, எங்கிருந்து தனக்கு அத்தகைய துணிவு வந்ததென்று அவளுக்கேத் தெரியவில்லை.
ருத்ரதேவன் புன்னகை ததும்ப, “சற்று முன்பு பேச்சற்று போய் நின்றாய்… இப்போது நன்றாகவே பேசுகிறாய்… ம்… இதைதான் நானும் எதிர்பார்த்தேன்” என்றவன் மேலும்,
“ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள அக்னீஸ்வரி… பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நன்றாக அறிவேன்… ஆனால் நீ என் மனம் கவர்ந்தவளாயிற்றே” என்று சொல்லி நிறுத்தி அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வையில் அவள் உள்ளம் அவனிடத்தில் மொத்தமாய் சாய்ந்துவிட்டதெனினும் அவள் அந்த எண்ணத்தை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்,
“இவ்விதம் என்னிடம் பேசாதீர்கள்… நான் ஒரு சாதாரண பெண்… நீங்கள் காதல் கொள்ள எத்தனையோ இளவரசிகள் இருக்கிறார்கள்… ஏன் உங்களை மணமுடிக்கப் பல இளவரசிகள் காத்தும் கிடக்கிறார்கள்” என்றாள்.
“உண்மைதான்… ஆனால் என்ன செய்வது அக்னீஸ்வரி… உன்னைப் பார்த்த பின்புதானே என் மனம் காதல் வயப்பட்டுப் பேதலித்துத் தவிக்கிறது” என்றான்.
அக்னீஸ்வரி தம் இதழ்கள் விரிய அவனைப் பார்த்து, “பேதலித்த மனதிற்கு ஆதுர சாலை சென்று வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்… இதில் நான் செய்ய ஒன்றுமில்லை” என்றாள்.
அவள் தன்னை பரிகாசம் செய்கிறாள் என்பதை உணர்ந்தவன்  தன் பார்வையை மேலுயரத்தி, “இந்த அகந்தைதான் உன் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்கிறது” என்று உரைக்க அந்த நொடி விஷ்ணுவர்தனும் இவ்வாறு சொன்னதை எண்ணிக் கொண்டாள். ஆனால் இருவரின் கருத்தும் முற்றிலும் வேறு என்று எண்ணியபடி மௌனமாய் நின்றவளிடம் ருத்ரதேவன் மேலும் தொடர்ந்தான்.
“ஆதுர சாலைக்கு சென்றதினால்தான் இத்தகைய விளைவே ஏற்பட்டது… நான் மட்டும் அன்று உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால்… இப்படி நிம்மதியின்றி தவித்திருக்கமாட்டேன்… ஏன்?… என்னைப் போல் நீயும் தவிப்புறவில்லையா என்ன?!” என்று கேள்வி எழுப்பினான்.
அக்னீஸ்வரி உண்மையை சொல்ல அச்சம் கொண்டு “இல்லையே” என்று ஒற்றை வார்த்தையில் பதில் உரைத்தாள். இப்போது ருத்ரதேவன் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு,
“கோவிலில் நின்று கொண்டு இப்படி பொய்யுரைத்தாயனால் ஏழேழு பிறவிக்கும் உனக்கு மோட்சமே கிட்டாது” என்று சொல்ல அக்னீஸ்வரி அவனை அலட்சியமாய் பார்த்து,
“மோட்சம் கிட்டவில்லை என்றால் பரவாயில்லை… எனக்கு வழி விடுங்கள்” என்று போக எத்தனித்தவளை மீண்டும் தன் கரங்களால் அவன் தடுத்து நிறுத்தினான்.
“மோட்சம் கிட்டாமல் போனால் பரவாயில்லை என்று சொல்வதைப் பார்த்தால்… அப்போது நீ பொய்யுரைத்தாய்” என்று கேட்டவன் அவளை ஆழ்ந்து பார்க்க,
திடமாய் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று தடுமாறி, “இல்லை… நான் அவ்விதம் கூறவில்லை” என்றாள்.
“பின் வேறெவ்விதம் கூறினாய் ?” என்றவன் எள்ளி நகைக்க,
அக்னீஸ்வரி பேச முடியாமல் தவிக்க ருத்ரதேவன் அவளைக்  கூர்மையாய் நோக்கி, “என்னைப் பற்றி நீ நினைக்கவே இல்லை… காதல் வயப்படவே இல்லை… பின் எதற்கு என்னைப் பார்த்து மறைந்து கொள்கிறாய்… தடுமாற்றம் கொள்கிறாய்… பேச முடியாமல் தவிக்கிறாய்” என்றான்.
“நீங்கள் என்னை பார்வையாலேயே விழுங்குவது போல் பார்த்தால் பின் நான் என்ன செய்வது” என்றவள் பதில் கேள்வி கேட்க,
“நான் இவ்வாறுதான் உன்னைக் காண்கிறேன் என்று நீ எவ்வாறு அறிந்தாய் அக்னீஸ்வரி… உன் பார்வையும் என் மீது பதிந்திருப்பதால்தானே” என்றான்.
இப்போது தான் அவனிடம் வகையாகச் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்த அக்னீஸ்வரி, “நடவாத ஒன்றை எண்ணி மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு பின் காலம் முழுக்க அவதியுற நான் விரும்பவில்லை” என தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள்.
“இதுவரை நான் நினைத்த எதுவும் நடவாமல் இருந்ததில்லை அக்னீஸ்வரி… நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை மட்டுமே மணம் முடிப்பேன்” என்று தீர்க்கமாக உரைத்தான்.
“ஆனால் தாங்கள்” என்று அக்னீஸ்வரி ஏதோ சொல்ல எத்தனிக்க,
“இளவரசன் என்று சொல்ல வருகிறாயா… உன்னை நான் மணமுடிக்க இந்த இளவரசன் என்ற பட்டம் தடை எனில் அதையும் நான் தூக்கி எறிவேன்” என்று உரைத்தவனை அவள் அதிர்ச்சியாய் நோக்க அவன் மீண்டும்,
“நான் ஏதோ பேச்சுக்கு சொல்கிறேன் என எண்ணிக் கொள்ளாதே… நான் நினைத்ததை நடத்த எத்தகைய எல்லைக்கும் செல்வேன்” என்று அழுத்தமாக உரைத்தான். இப்போது கோவில் மணியோசை ஒலிக்க இருவரின் முகமும் துணுக்குற்றது.
“நான் என் தந்தையிடம் இது குறித்துப் பேசிவிட்டு உன்னை நற்செய்தியோடு காண வருகிறேன்… அதுவரை நீ கொஞ்சம் காத்திரு” என்று அவன் தெரிவிக்க அக்னீஸ்வரி தன்னை அறியாமல் தலையசைத்தாள். சில நாழிகைகளில் அவன் முழுவதுமாய் அவளை தன் வசமாய் ஈர்த்துவிட்டான். அவசரமாய் செல்ல எத்தனித்தவனிடம், “மீண்டும் தங்களை சந்திக்கப் போகும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று நெகிழ்ந்தபடி உரைத்தாள்.
“விரைவில் சந்திப்போம்… என் புரவியில் வருவேன்” என்று சொல்லிவிட்டு ருத்ரதேவன் சென்று விட்டான்.
அக்னீஸ்வரி அவனுடன் பேசிய அந்த நொடி கனவாய் தோன்றக் கடைசியாய், ‘புரவியில் வருவேன்’ என்ற அவன் வாக்கியத்தின் அர்த்தம் என்னவென்று யோசிக்கலானாள்.
அரங்கநாதனுக்கு அர்ச்சகர் தீபாரதனைக் காட்ட ருத்ரதேவன் மெதுவாக வந்து பின்னோடு நின்றான். அவன் நடந்தவற்றை எண்ணி உள்ளுர களிப்படைந்திருக்க இளவெயினி அவனை நோக்கி, “இத்தனை நேரம் எங்கே சென்றாய் ருத்ரா?!” என்று கேட்டாள்.
“கோவிலில் உள்ள அழகிய சிற்பங்களைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன்” என்று ஏற்கனவே யோசித்த வைத்த காரணத்தை சொல்லிச் சமாளித்தான்.
“மலர்களை ரசிப்பது…சிற்பங்களை ரசிப்பது… என திடீரென்று ரசனை மிகுந்தவனாய் மாறிவிட்டாயே… அது எப்படி…?” என்று அவன் சொன்னதை நம்பாமல் சந்தேகமாய் வினவினாள்.
அப்போது அர்ச்சகர் கற்பூரத்தைத் தொட்டு வணங்க அருகில் எடுத்து வர ருத்ரதேவன், “தேவையில்லாத எண்ணங்களை விடுத்து… மாமாவிற்கு தீர்க்காயுள் கொடுக்கச் சொல்லி வேண்டிக் கொள்” என்று அவன் வேடிக்கையாகக் கூறி அந்தச் சம்பாஷணையை அத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்தான். அவன் மனஎண்ணத்தை இளைவெயினியால் யூகிக்க முடியவில்லை.
தரிசனம் முடிந்து மூவரும் புறப்பட அக்னீஸ்வரியை பார்த்து காதல் நிரம்பிய புன்னகையை உதிர்த்தபடி ருத்ரதேவன் கோவிலை விட்டு வெளியேறினான். ஆனால் அக்னீஸ்வரியின் மனதில் அவன் அழுத்தமாய் குடியேறிவிட்டான்.
அவள் கோவில் முன்புறம் இருந்த மண்டபத்தில் தூண்களில் சாய்ந்தபடி அவள் அமர்ந்து கொள்ள அப்போது ரங்கநாயகி ருத்ரதேவன் வந்ததைக் குறித்து அவளிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தன் தோழியிடம் கூட தன் காதலைப் பற்றி உரைக்காமல் அமைதி காத்தாள்.
அக்னீஸ்வரி கொண்ட காதல் எப்போதும் ரகசியமாகவே அவளுக்குள் புதையப் போகிறது என்பதை அன்று அவள் அறியவில்லை. வெகு விரைவாய் துளிர்த்து மலர்ந்த அந்தக் காதல் மலர் விரைவில் வாடி வதங்கி மண்ணோடு மண்ணாய் போகப் போகிறது.