Nan Un Adimayadi– EPI 15

Nan Un Adimayadi– EPI 15

அத்தியாயம் 15

மழையடிக்கும் சிறு பேச்சு

வெயிலடிக்கும் ஒரு பார்வை

ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்

உடன் வரக் கூடுமோ (முத்துக்காளை)

 

தட்தட்தடதடவென கேட்ட சத்தத்தில் திருத்திக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு, வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் தவமங்கை. சத்தம் வீட்டின் வெளியே இருந்து வந்தது.

‘என்ன சத்தம் இது! பறையிசை மாதிரி இருக்கே’ என யோசித்தவள், வீட்டு முற்றத்திற்கு நடந்துப் போனாள். அவளுக்கு முன்னே வீட்டில் இருந்த மற்றவர்கள் திண்ணைக்குப் போயிருந்தனர். வெளி வாசலுக்கு வந்தவள் கண்டது காமாட்சியின் கலவரமான முகத்தையும் காளையின் இறுக்கமான தோற்றத்தையும்தான்.

பறையடித்துக் கொண்டிருந்தவன், அதை நிறுத்திவிட்டு,

“அதாகப்பட்டது என்னன்னா” என சொல்லியவன் டொக்கென பறையை ஒரு தட்டு தட்டினான்.

“இந்த குடும்பத்து மேல” இன்னொரு டொக்.

“பஞ்சாயத்துல பிராது குடுத்துருக்காங்க” டொக்.

“நாளைக்கு காலை பத்து மணிக்கு” டொக்.

“இந்த வீட்டுல இருக்கற அத்தனை பேரும்” டொக்.

“பஞ்சாயத்துக்கு வந்து சேர்ந்திடனும்” டொக்.

“இது பெரிய தனக்காரரோட உத்திரவு” டொக்.

அவன் கொடுத்த டொக் டொக் சத்ததில் ஊரே வெளியே வந்து இவர்கள் வீட்டை எட்டிப்பார்த்தது.

“பிராது யாரு மேலப்பா?” என கேட்டார் அப்போதுதான் தோப்பில் இருந்து வந்த மச்சக்காளை.

“ஒங்க மகன் முத்துக்காளை” டொக்.

இவன் என்ன வம்பை விலைக்கு வாங்கினானோ என காமாட்சி மகனை உறுத்துப் பார்க்க, அவனோ அசால்ட்டாக நின்றிருந்தான்.

“அப்புறம்…” டொக்.

“என்னாது அப்புறமா?” என கலவரமானார் காமாட்சி”

“அப்புறம் நம்ம டவுனு டீச்சர்” டொக்.

“இவங்க ரெண்டு பேர் மேலதான் பிராது” டொக்.

வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பது போல நின்றிருந்த காளை, மங்கையின் பெயரிலும் பிராது இருக்கிறது என கேட்டு கதி கலங்கிப் போனான்.

இது எதுவும் புரியாது அதிசயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள் தவமங்கை.

“பஞ்சாயத்து முடியற வரைக்கும், இந்த வீட்டுல இருந்து யாரும் ஊரை விட்டுப் போக கூடாது” டொக்.

“எந்த எடுபட்ட நாய்டா எங்க மேல பிராது குடுத்தது?” என எகிறிக் கொண்டு பிராது தகவல் சொன்னவனை அடிக்கப் பாய்ந்தான் காளை. மச்சக்காளை மகனை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

“டேய், அடங்குடா! சேதி சொல்ல வந்தவனா அடிச்சு என்ன இருக்கு. நாளைக்குப் பஞ்சாயத்து முடியட்டும், அப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய” என மகனை சமாதானப்படுத்தினார்.

காமாட்சியோ ஓய்ந்து போய் அப்படியே மண்ணில் அமர்ந்துக் கொண்டார்.

“சீராட்டி நான் வளத்தேன்

பாலூட்டி நான் வளத்தேன்

தாலாட்டி நான் வளத்தேன்

தங்கமா தான் வளத்தேன்….

தப்புத்தண்டா பண்ணதில்லே

வம்பு வழக்கு செஞ்சதில்லே

காளை மாதிரி புள்ளையில்லே

பிராது குடுத்தவன் போவான் கட்டையிலே!!!!” என ஓவென கதறி ஒப்பாரி வைத்தார் காமாட்சி.

“ஆத்தா! எந்திரித்தா! எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கிறே! தப்புத்தண்டா ஒன்னும் நடக்காதப்போ எதுக்கு நாம கலங்கனும்! நாளைக்குப் பஞ்சாயத்துல நான் கேக்கற கேள்வில பிராது குடுத்தவன் நாண்டுக்கிட்டு சாகறனா இல்லையா பாரேன்! நீ வாத்தா உள்ள” என தன் ஆத்தாவை கைப்பற்றி தூக்கினான் காளை.

எழுந்து கண்ணைத் துடைத்துக் கொண்டவர், மங்கையைப் பார்த்ததும் மீண்டும் கண் கலங்கினார். மங்கையிடம் என்னவோ சொல்ல வந்தவரை,

“ஆத்தா எதுனாலும் டீச்சர் கிட்ட வீட்டு உள்ளாற போய் பேசு! ஊரு சனமே நம்மளத்தான் வேடிக்கைப் பார்க்குது” என எச்சரித்தான்.

தலையை ஆட்டியவர், மங்கையின் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனார். ஓய்ந்து போய் முற்றத்தில் அமர்ந்து விட்டவரைப் பார்க்க மங்கைக்குத் தாளவில்லை. அடுப்படிக்கு சென்று அவர்கள் அனைவருக்கும் காபி போட்டவள், ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் காமாட்சிக்கு எடுத்து வந்துக் கொடுத்தாள்.

“ஆத்தா! இந்தாங்க குடிங்க! இப்படி கலங்கிப் போகிற அளவுக்கு என்ன நடந்துருச்சு?” என கேட்டப்படியே உள்ளே போய் மீதி மூன்று டம்ளர் காபியையும் எடுத்து வந்து மச்சக்காளைக்கும், காளைக்கும் கொடுத்து விட்டு தனக்கொன்று எடுத்துக் கொண்டு காமாட்சியின் அருகே அமர்ந்தாள்.

காபியை கூட குடிக்க முடியாமல், குற்ற குறுகுறுப்புடன் மங்கையை பார்த்திருந்தான் காளை. நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், குடி என்பது போல சைகை செய்தாள். மடமடவென கையில் இருந்த காபியை அருந்தினான் அவன்.

“இப்போ சொல்லுங்க! என்ன நடக்குது இங்க? டொக்கு டொக்குன்னு தட்டிட்டுப் போனானே அவன் யாரு?” என கேட்டாள் தவமங்கை.

“அவன் தான் நம்மா ஊருக்கு சேதி சொல்லறவன். பஞ்சாயத்து, சாவு, கல்யாணம், கருமாதி இப்படி என்ன நடந்தாலும் அவன் கிட்ட ஊரெல்லாம் சொல்ல சொல்லி வுடுவாங்கம்மா” என சொன்னார் மச்சக்காளை.

“ஓஹோ! இப்போ நம்ம வீட்டுல வந்து என்ன சேதி சொல்லிட்டுப் போறான்?”

“நம்ம மேல பஞ்சாயத்துல பிராது குடுத்துருக்காங்களாம்த்தா!” என சோகமான குரலில் சொன்னார் காமாட்சி. உங்கள் மேல் என பிரித்து சொல்லாமல் நம்ம என சேர்த்து சொன்னார் அவர்.

“பஞ்சாயத்துனா சொம்பு வச்சிகிட்டு ஆலமரத்து கீழ உக்காந்து ‘எலே சின்ராசு! உன்னை ஊர வுட்டு தள்ளி வைக்கிறோம்லே! இனிமே உன் கூட ஆரும் அன்னந்தண்ணி பொழங்கக்கூடாது. இது இந்த நாட்டாமை தீர்ப்புல்லே!’ அப்படின்னு மீசைய முறுக்கிக்கிட்டு கைய ஆட்டி ஆட்டி பேசுவாங்களே, அந்த பஞ்சாயத்தா?”

அவள் சொல்லிய பாவத்தில் மூவரின் முகத்திலும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“இங்க ஆலமரம் இருக்கு! ஆனா சொம்பு இல்லீங்க டீச்சர்! பெரிய தனக்காரரு கோவத்துல சொம்ப தூக்கி அடிக்கறதுனால அம்புட்டு சொம்பும் நெளிஞ்சு போகுதுன்னு வீட்டம்மா அதை மட்டும் குடுத்து வுடறது இல்ல” என சிறு புன்னகையுடன் சொன்னான் காளை.

இவளுக்கு அவன் சொல்லியதைக் கேட்டு சிரிப்பு வந்தது. மெல்ல நகைத்தவளை மூவரும் கலக்கத்துடன் பார்த்தனர்.

“எவ்வளவு நல்ல புள்ளத்தா நீ! படிப்பு வராத புள்ளைங்களுக்கு இலவசமா படிச்சுக் குடுக்கற! பொம்பள புள்ளைங்களுக்கு சண்டைப் போட சொல்லிக் குடுக்கற! பெரியவங்க கிட்ட மருவாதையா நடந்துக்கற! நீ பட்டிக்காடு நான் படிச்சவன்னு பாகுபாடு காட்டாம அருமையா பழகற! ஒன்னைப் போய் பஞ்சாயத்துக்கு இழுத்துட்டாங்களே! என்னால தாங்கவே முடியலையேத்தா! எல்லாம் நான் பெத்த இந்தப் பய புள்ளையால வந்தது. தண்ணிய போட்டுட்டு கையப்புடிச்சு இழுத்து இப்போ வீதி வரைக்கும் ஒரு வயசு புள்ள மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டான்” என சோகமாக ஆரம்பித்து கோபமாக முடித்தவர், காளையை முதுகிலேயே பட்டு பட்டென்று போட்டார்.

ஆத்தா அடிப்பதை அமைதியாகவே வாங்கிக் கொண்டான் காளை. மங்கைதான் நடுவில் புகுந்து தடுத்தாள்.

“ஆத்தா! எதுக்கு கம்ப்ளேன் பண்ணிருக்காங்கன்னு நாளைக்குப் போனா தெரியப் போகுது! அத விட்டுட்டு இவர போட்டு ஏன் அடிக்கிறீங்க! விடுங்க ஆத்தா! தண்ணியப் போட்டு கையப் புடிச்சது எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள தானே நடந்துச்சு! அந்த விஷயம் நம்ம சொல்லாம வெளிய போயிருக்காதுத்தா! இது வேற என்னமோ மேட்டர்! சோ கோபப்படாம அமைதியா இருங்க!” என அவரை சமாதானப்படுத்தினாள் மங்கை.

வீட்டில் இருக்கும் மூவரும் மூன்று திசையைப் பார்த்தப்படி இருக்க, இவளுக்கு மனதைப் பிசைந்தது. அன்று இரவுக்கு மங்கையே சமைத்தாள். மூவரையும் தேற்றி சாப்பிடவும் வைத்தாள். அவர்களிடம் அமர்ந்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவள், அவர்கள் படுக்கப் போனதும் தான் தனது அறைக்குப் போனாள். மற்றவர்களை சமாதானப்படுத்தியவள் அன்று இரவு உறங்காமல் விழித்தே கிடந்தாள். மனதில் பல விஷயங்கள் முட்டி மோதி அவள் தூக்கத்தை கெடுத்து துக்கத்தைக் கொடுத்தன.

“நான் வேணுமா இல்ல அவளா?”

“சனியன தொலைச்சு விடுங்க”

“இப்படி வாழறதுக்கு நான் செத்துப் போறேன்! நிம்மதியா இருங்க நீங்க”

“என்னை விட அவதான் முக்கியமா போயிட்டாளா?”

அழுகுரலில், கோபத்தில், விரக்தியில் என பல வேறான மாடுலேஷனில் அந்த குரல் அவள் தலைக்குள் புகுந்து குடைந்தது. எப்பொழுதும் போல கண்ணீர் ஆறாய் பெருகியது மங்கைக்கு. பின் மெல்ல எழுந்து அமர்ந்தவள், முகத்தைத் தன் கரம் கொண்டு துடைத்துக் கொண்டாள்.

சேவல் கடமையை ஆரம்பித்திருந்தது. மாடுகளும் ம்மா என சத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தன. கதவைத் திறந்து வைத்து விட்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தாள். காலை நேர பனிக்காற்று உள்ளே பரவியது. உடல் சிலிர்க்க, கண் மூடி தன்னை சுற்றி கேட்கும் சத்தங்களை ஆழ்ந்து உள்வாங்கினாள். காளை கிணற்றில் நீர் சேந்தும் சத்தமும், அதை தன் மேல் ஊற்றிக் கொண்டு ஸ்ஸ்ஸ் என குளிரை விரட்ட போடும் சத்தமும் காதில் விழ, இவளுக்குப் புன்னகை அரும்பியது.

“நான் செஞ்சது தப்பேயில்ல!” என முனகிக் கொண்டவள் அப்படியே மல்லாந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

முகம் அவ்வளவு பிரகாசமாக ஜொலித்தது. இவ்வளவு நேரம் குலுங்கிக் குலுங்கி அழுதவள் இவள் தான் என சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். அதன் பிறகு தான் மெல்ல கண் அசந்தாள் மங்கை. ஏழு மணி போல எழுந்தவள், குளித்து முடித்து சேலை ஒன்றைக் கட்டிக் கொண்டாள். பல பேர் வரும் பஞ்சாயத்துக்கு கொஞ்சம் கண்ணியமாக போகலாம் எனதான் இந்த சேலை.

மெல்ல நடந்து அடுப்படிக்கு வந்தவள், அங்கே காமாட்சி இன்னும் சமையலோடு மல்லுக் கட்டுவதைப் பார்த்தாள். அன்று ஞாயிற்றுக் கிழமை. ஆனால் கறி மிஸ்ஸிங். அதை வைத்தே யாருக்கும் மூட் சரியில்லை என உணர்ந்துக் கொண்டவள், அவளாகவே காபி தயாரித்தாள். அவள் வந்ததை உணர்ந்து முயன்று புன்னகைத்தார் காமாட்சி. இட்லியோடு அவர் போராட, இவள் சட்னிக்கு வதக்கிக் கொடுத்தாள். அவளுக்குத்தான் அம்மியோடு போராட தெரியாதே! அமைதியாக கழிந்தது அவர்களின் காலை பசியாறல்.

பஞ்சாயத்துக்குக் கிளம்பும் முன் தனியே கிடைத்த சந்தர்ப்பத்தில்,

“டீச்சர்” என தயங்கி அழைத்தான் காளை.

“சொல்லுங்க காளை”

“இன்னிக்கு பஞ்சாயத்துல என்ன நடந்தாலும், உங்களுக்குப் பிடிக்காத எதையும் நடக்க விடமாட்டேன் நான். என்னை நம்புங்க டீச்சர்”

“எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு காளைக்கு ரொம்ப நல்லாத் தெரியுமோ?”

அவள் குரலில் நக்கல் நையாண்டியோ, கோபமோ, வருத்தமோ எதுவும் இல்லை. உணர்ச்சித் துடைக்கப்பட்ட குரலில் இவன் தான் குழம்பி நின்றான்.

“போகலாம் காளை! எது நடந்தாலும் தாங்கி நிப்பா இந்த தவமங்கை! நீங்க உங்களுக்காக மட்டும் கவலைப்படுங்க” என புன்னகையுடன் கூறியவள், காமாட்சியுடன் போய் இணைந்துக் கொண்டாள்.

சரியாக பத்து மணிக்கெல்லாம் இவர்கள் பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வந்திருந்தார்கள். இவர்களைப் பார்க்க ஊரே திரண்டிருந்தது. ராஜேஸ்வரியும் விஷயம் கேள்விப்பட்டு தன் கணவருடன் நேராக பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வந்திருந்தாள். மங்கையை நெருங்கி அவள் கையைப் பற்றிக் கொண்டவள்,

“பயப்படாத மங்கை, எதுனாலும் சமாளிக்கலாம். நாங்கல்லாம் இருக்கோம்” என சொன்னாள்.

அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் மங்கை.

நடுநாயகமாக இருந்தது அந்த ஆலமரம். கப்பும் கிளையுமாய் பரந்து நின்ற அந்த ஆலமரத்துக்குக் கீழ், பெரிய தனக்காரர் உட்கார நாற்காலி போட்டிருந்தார்கள். ஊர் மக்கள் அந்த மரத்தை சுற்றி குழுமி நின்று தங்களுக்குள்ளாகவே கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் புல்லட் வரும் சத்தத்தில் சலசலப்பு அடங்கியது. படங்களில் நாட்டாமை குதிரை வண்டியில் ஏறி,

‘நாட்டாமை பாதம் பட்டா’ என டொக்டி டொக்டி என குதிரையின் குளம்பொலி முழங்க வருவார். இங்கேயோ ரொம்பவே மார்டனாக பெரிய தனக்காரர் புல்லட்டில் வந்து இறங்கினார்.

“வணக்கம் ஐயா” என ஊரே சலாம் வைத்தது. ஒரு தலையசைப்புடன் நடந்துப் போய் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார் அவர்.

“யார் மேல பிராது இன்னிக்கு?” விஷயம் தெரிந்தாலும் சம்பிரதாயமாக கேட்டார் அவர்.

“நம்ம முத்துக்காளை மேலயும் டீச்சர் மேலயும் அய்யா”

“என்ன பிராது?”

“கள்ளக்காதலுங்க ஐயா”

அவன் சொல்லி முடிப்பதற்குள் வாய் வெற்றிலை பாக்கு போட்டிருந்தது.

“பரதேசி நாயே! யாரப் பார்த்துடா கள்ளக் காதல்னு சொன்ன? உன்னைக் கொன்னுப் புதைக்கறேன் பாருடா” என காளை காட்டு காட்டு என காட்டி இருந்தான். செவல மற்றும் சிலர் அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

“கள்ளக் காதல் இல்லாம, இது நல்ல காதலோ!”

“கள்ளக் காதலு இல்லாங்காட்டி காவிய காதலோ!”

என பல குரல்கள் அங்கங்கே கேட்க,

“தைரியம் இருந்தா முன்ன வந்து பேசுங்கடா! பேசன ஒவ்வொருத்தான் வாயையும் ஒடைக்கறேன்” என திமிறினான் காளை.

இன்னும் பஞ்சாயத்து ஆரம்பிக்கவேயில்லை. அதற்குள் அடிதடியாகி இருந்தது.

“யப்பா காளை! நான் தான் விசாரிச்சுட்டு இருக்கேன்ல! இப்படி நீ சலம்பிகிட்டு நின்னா, எனக்கு என்ன மரியாதை? பேசாம நில்லுப்பா.” என அவனைப் பார்த்து சொன்னவர், பின் ஊர் மக்களைப் பார்த்து,

“டீச்சர் நம்ம ஊருக்கு பாடம் சொல்லிக் குடுக்க வந்துருக்காங்க. நான் தான் அவங்கள காளை வீட்டுல தங்க வச்சேன்! டீச்சர பத்தி பெருசா தெரியலைனாலும் நம்ம காளையப் பத்தியும் அவன் ஒழுக்கத்தப் பத்தியும் நம்மளுக்கெல்லாம் நல்லாவே தெரியும். அதனால பேசி தீர்க்கற வரைக்கும் யாரும் வாய விட வேணாம்னு கேட்டுக்கறேன்” என கேட்டுக் கொண்டார்.

கொஞ்சம் தூரமாக அமர்ந்து பல்லில் குச்சி வைத்துக் குத்திக் கொண்டிருந்த பெருசு ஒன்று,

“இத்தனை வயசுக்கு அப்புறமும் கண்ணாலம் ஆகாம இருந்தா, முத்துக்காளை என்ன காங்கேயம் காளை கூடத்தான் கள்ளக் காதல் வச்சிக்கும்! இதுக்கெல்லாம் எதுக்கு டோய் பஞ்சாயத்து” என நக்கலாக கேட்க ஊரே கொல்லென சிரித்தது.

‘அட கெரகம் புடிச்ச கெழவா! வருஷா வருஷம் எமனை ஏமாத்திப்புட்டு சுத்திக்கிட்டு இருக்கற ஒனக்கு இந்த வருஷம் காளைதான்யா பாசக்கயிற வீசப் போறான்!’ என பெருசை முறைத்துக் கொண்டிருந்த காளையைப் பார்த்து மனதில் பேசிக் கொண்டான் செவல.

“சரி விஷயத்துக்கு வருவோம்! இது ஒரு உத்தமமான வேலைப் பார்க்கும் பொண்ணு மேல போடப்பட்டுருக்கற பழி. உண்மை என்னான்னு தெரியற வரைக்கும் யாரும் டீச்சர பாத்து ஒத்தை வார்த்தைப் பேசக் கூடாது! இது நம்ம ஊருக்கு அழகில்ல! யாருய்யா அது பிராது குடுத்தது? முன்னுக்கு வா” என சொன்னார் பெரிய தனக்காரர்.

அங்கே வந்து நின்றது நீங்கள் நினைப்பது போல பக்கோடாவோ, ரூம் ரெண்டலோ இல்லை. அங்கே பம்மிக் கொண்டு வந்து நின்றது மாரிமுத்து! எந்த மாரிமுத்து? வகுப்புத் தோழியைப் பின்னால் தட்டிய சூரியின் தந்தை தான் அன்னார்.

‘நீதானா அது?’ என கொலைவெறியுடன் பார்த்திருந்தான் காளை.

“சொல்லு மாரிமுத்து! எதுக்கு இந்த பிராது? உன் கிட்ட இதை நிரூபிக்க சாட்சி இருக்கா?”

“இதுக்கு என்ன சாட்சிலாம் கேக்கறீங்க? சாட்சி வச்சிக்கிட்ட சரசம் பண்ணுவாங்க? அட சாட்சி வச்சிக்கிட்டா சாந்தி முகூர்த்தம் பண்ணுவாங்க?” இது நம் பக்கோடாவின் குரல்.

“பிராது குடுத்தவன தவிர வேற யாரும் வாயத் திறக்கக்கூடாது” என பெரிய தனக்காரர் சத்தம் போட,

“என்ன நடக்குது இங்க? வாட் தெ ஹெல் இஸ் கோயிங் ஆன்?” என கத்தியபடி வந்தான் மறை.

“தோ வந்துட்டாருடா வாட்டு, கூட்டு, வாயில பூட்ட பூட்டுன்னுகிட்டு! இப்ப ஒன்னும் நடக்கல வாத்தியாரே! ஏற்கனவே நடந்து முடிஞ்சு போச்சு எல்லாம்! ஏன் நடந்துச்சு, எப்படி நடந்துச்சு, எங்க நடந்துச்சுன்னு விசாரணைத்தான் ஓடுது இப்போ” என கிண்டலாக சொன்னான் ரூம் ரெண்டல் மாடசாமி.

“சார், என்ன பஞ்சாயத்துனாலும் அதுல வெளியூர்காரங்க எங்கள இழுத்து விடறது தப்பு. உங்க பஞ்சாயத்து உங்க ஆளுங்களுக்கு மட்டும்தான் செல்லும். டீச்சருக்கு இல்ல” என பெரிய தனக்காரரைப் பார்த்து சொன்னான் மறை.

“அசலூர்னா எங்கூரு சோத்த திங்கலியோ? சோறு மட்டும் நாங்க குடுக்கறது வேணும்! ஆனா எங்கூரு கட்டுத்திட்டம் மட்டும் வேணாமாக்கும்! நாங்களாம் சோத்துக்கு கஸ்டப்பட்டாலும் ஒழுக்கத்த இஸ்டப்பட்டு நெஞ்சுல சுமக்கற ஜனங்க! மயிறு போனா உயிரு போச்சுன்னு உசுர வுடற கவரிமான் பரம்பரை. எங்கூருல இப்படி ஒரு ஒழுக்கக்கேடுன்னா பார்த்துட்டு சும்மா போக மாட்டோம்!” பக்கோடா பாண்டியன் சிலிர்த்துக் கொண்டு நின்றான்.

“எது நீ கவரிமானு பரம்பரையா? பொண்டாட்டி குத்துக்கல்லாட்டம் இருக்கறப்போவே அவ தங்கச்சி காவேரிய உஷார் உடற நீ கவரிமானப் பத்தி பேசற? கலி முத்தி போச்சுடா டோய்” என கூட்டத்தில் இருந்து செவல சவுண்ட் விட,

“அந்நிய சக்திங்க கண்டதையும் பேசி பஞ்சாயத்த தெசை திருப்புறானுங்க! நீங்க பஞ்சாயத்த ஆரம்பிங்க ஐயா!” என மீண்டும் பேச்சை பெரிய தனக்காரரிடம் திருப்பி விட்டான் பாண்டியன். அவன் பொண்டாட்டி முந்தானையை ஒரு உதறு உதறி மீண்டும் இடையில் சொருகி கொண்ட ஸ்டைலிலே கிலி பிடித்தது அவனுக்கு.

“இருங்க வாத்தியாரு தம்பி! பிராதுன்னு வந்துட்டா நாலையும் விசாரிச்சு தீர்ப்பு சொல்லுறது என்னோட கடமை. காலங்காலமா இது எங்க பரம்பரைக்கு இந்த ஊரு தர மரியாதை!”

மறை கடுப்புடன் போய் மங்கையின் அருகே நின்றுக் கொண்டான்.

“என்னோட ப்யூர் ஏஞ்சல கண்டவனும் கண்டபடி பேசறது எனக்குப் புடிக்கல தவா. இதெல்லாம் முடிஞ்சதும், வேலையாவது ஒன்னாவதுன்னு நாம சென்னைக்கு கிளம்பிடலாம். கண்ட்ரி ப்ரூட்ஸ்! அனெடுக்கேட்டேட் பார்பேரியன்ஸ்” என முனகினான் மங்கையிடம்.

இவ்வளவு சலசலப்பு நடந்தும் நிதானமாகவும், அமைதியுமாக நின்றிருந்தாள் மங்கை. காளையோ கோபத்துடனும், தவிப்புடனும் நின்றிருக்க, அவனை சுற்றி மச்சக்காளையும் இன்னும் பத்து பேர் காவலாகவும் நின்றிருந்தார்கள். அவன் பார்வை எல்லாம் மங்கையிடமே நிலைத்திருந்தது. ஊர் மத்தியில் அவளைக் கேவலப்படுத்துவது அவனுக்கு நெஞ்சில் ரத்த ஆறையே வரவழைத்தது. காமாட்சி கண் கலங்கினாலும் மகளுடன் மங்கை அருகிலேயே நின்றிருந்தார். ராஜியின் கணவன் பட்டும் படாமல் நடப்பதைப் பார்த்திருந்தான்.

“சொல்லுப்பா மாரிமுத்து! இந்த அபாண்டத்துக்கு உன் கிட்ட சாட்சி இருக்கா?” என கேட்டார் பெரிய தனக்காரர்.

“இருக்குங்க ஐயா”

“என்னாது இருக்கா? சாட்சி இருக்கா? சத்தியமா இருக்கா?” என ஒரே சலசலப்பு கூட்டத்தில்.

“என் மவன் சின்னப்பையன்! தெரியாம பொம்பள புள்ள மேல மோதிட்டதுக்கு இந்த டீச்சரும், காளையும் மாத்தி மாத்தி அவன அடிச்சிருக்காங்க ஐயா! இவங்க என்ன ஒழுக்கமா இருகாங்கன்னு என் மவன கை நீட்டி இருக்காங்க? அது தான் எனக்கு கோபம்! ஒரு தப்ப தண்டிக்கனும்னா மொதல்ல நாம நல்லவங்களா இருக்கனும்! அந்த தகுதி இவங்க ரெண்டு பேருக்குமே இல்ல! நம்ம ஊருல திருட்டு நடந்துருக்கு, ஏன் கொலை கூட நடந்துருக்கு! ஆனா இப்படி ஒழுக்கங்கெட்ட ஈன காரியமெல்லாம் நடந்தது இல்ல. நாம குழந்தையம்மனுக்கு கட்டுப்பட்டு வாழறவங்க! அந்த மண்ணுல இப்படி ஒரு கள்ளக்காதல் கூடாதுன்னு நெனைச்சுத்தான் இந்தப் பிராது குடுத்தேன்” என சொல்லியவன் மடித்து விட்டிருந்த வேட்டியில் இருந்து ஒரு சீடியை எடுத்தான்.

‘ஐயயோ இவன் குறும்படம் ஓட்டப் போறான் போலிருக்கே!’ என்பதுதான் ஊரில் உள்ளவர்களின் மைண்ட்வாய்ஸ்.

தப்பு எதுவும் செய்யவில்லையே எனக்கென்ன பயம் என தெனாவெட்டாகத்தான் நின்றிருந்தான் காளை.

பக்கோடா பாண்டியன் குடுகுடுவென ஓடி ஓரமாக வைத்திருந்த டீவியையும், சீடீ ப்ளேயரையும் அங்கே ஏற்கனவே செட் செய்திருந்த மேசையில் வைக்க, ரெண்டல் மாடசாமியோ பக்கத்தில் இருந்த குட்டி மண்டபத்தில் இருந்து வயர் இழுத்து வந்து கரெண்ட் கனேக்‌ஷன் கொடுத்தான்.

குறும்படமும் ஓடியது…

இருவர் வாழ்க்கையின் வழித்தடமும் மாறியது…

மாற்றம் ஒன்றுதான் மாறாதது.. இந்த மாற்றம் இவர்கள் வாழ்க்கைக்கு ஏற்றமாகுமா? அல்லது வாழ்க்கையைக் குலைக்கும் சுனாமியின் சீற்றமாகுமா??????

 

(அடி பணிவான்…..)

error: Content is protected !!