Alaikadal 12

Alaikadal 12

அலைகடல் – 12

“அவ இல்ல அவங்க” என்று ரியாஸ் கூறியதும் அவனை விசித்திரமாக பார்த்தவன் உடனே அவங்க என்று மாற்றினால் அது ஆரவ் இல்லையே.

“சரி பூங்குழலி இப்போ எங்கே? சீக்கிரம் சொன்னா நான் ஆபிஸ் கிளம்புவேன். இல்லையா நீயே உன் அவங்ககிட்ட வேந்தன் என்கூட இருக்கான் அப்படிங்கற செய்திய தெரியப்படுத்திரு என் வேலை மிச்சம். அதுவும் முடியாது என்றால் பிரச்சனையே இல்லை வழக்கம்போல் இங்க எல்லாமே நடக்கும் ஒரே மாற்றம் ரித்தேஷ் அவன் தேடுதலை நிறுத்திருவான்” என்று ரியாஸிடம் கூறியவன்

“அமௌன்ட் செட்டில்மெண்ட் உன் வீடு தேடி வரும் ரித்தேஷ். தேங்க் யூ” என்றவாறு அவனிடம் கைகுலுக்க

“அப்புறம் எதுக்கு இத்தனை வருசமா வேஸ்ட்டா தேடுனீங்க?” ஆரவ்வின் அலட்டிக்கொள்ளாத பாவனையில் கடுப்பாகிய ரியாஸ் எதிர்த்து கேள்விகேட்க ரித்தேஷ் அவனின் கையை அழுத்தினான் பேசாதே என்னும் எச்சரிக்கையுடன்.

“அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான் இருந்தாலும் சொல்றேன் வேந்தன் என்னை நம்புறான். நான் கொடுத்த வாக்கை நம்புறான். ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்லை, கிட்டதட்ட ஏழு வருசமா நான் அவங்க அக்காவை கண்டுபிடிப்பேன்னு நம்புறான். அந்த நம்பிக்கைக்காக மட்டும்தான் கோழை மாதிரி ஓடுன அவன் அக்காவை தேடுறேன். காட் இட்” என்றான் அழுத்தமாய் அந்த அழுத்தத்தினுள் கோபம் இருந்ததோ என்னவோ ஆனால் எதிரில் இருப்பவர்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆரவ்வின் பதிலில் எரிச்சலான ரியாஸ், “அவங்க ஒன்னும் கோழை இல்லை. இப்படி அவங்க ஓட காரணமே நீங்கதான். தைரியம் இருந்தா நேர்ல அவங்ககிட்ட இதை சொல்லிப்பாருங்க” என்று சவாலிட்டவன்

“நான் அகைன் லீவ் முடிஞ்சு வேலைக்கு போக ரெண்டு மாசத்துக்கு மேல ஆகும். அதுவரை தெரிஞ்சே மேடம் அவங்க குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பதை நான் விரும்பலை. ஷி இஸ் சப் கமாண்டர் ஆப் இந்தியன் நேவி இன் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா” என்றான் பெருமையுடன்.

“ஸ்மார்ட். நல்லா ஊகிக்க முடியாத இடத்துல இருந்து இத்தனை வருசம் போக்கு காட்டுன அவங்க வீரத்தை நான் மெச்சுறேன்” என்று குத்தலாக மொழிந்தவன்

“ரித்தேஷ் லாஸ்ட் வொர்க். நேவில போன் பேச முடியாதுன்னு நினைக்குறேன் சோ பூங்குழலிய எங்க எப்போ மீட் பண்ணலாம்ன்னு தெரிஞ்சு வேந்தனை கூட்டிட்டு போங்க. அதுவரை வேந்தனுக்கு ஒன்னும் தெரியவேண்டாம் அங்க போய் சொல்லிக்கோங்க” உத்தரவிட்டுக் கொண்டிருந்தவனை இடைமறித்தான் ரியாஸ்.

“ஏன் பூவேந்தனை மட்டும் அனுப்புறீங்க மேடம் அம்மா எங்கே?” என்றவனை சுடும் பார்வை பார்த்த ஆரவ், “யார் இருக்காங்களோ அவங்களைத்தானே அனுப்ப முடியும். அவங்க உயிரை மூணு மாசத்துக்கு மேல என்னால பிடிச்சி வைக்க முடியல போதுமா. ஹோப் இதுக்குமேல நீ தேவை இல்லாம பேச மாட்ட. பேசவும் கூடாது. கெட் லாஸ்ட்” அதுவரை இருந்த நிதானத்தை இழந்து கத்தியிருந்தான் ஆரவ்.

**************************************

நீல வானை காணும் இடமெல்லாம் பிரதிபலிக்கும் இந்தியப் பெருங்கடல்.

கப்பலில் ஒரு சாரர் விடுமுறையில் சென்றிருந்தாலும் வேலைகள் எந்தவித தடங்கலுமின்றி சீராக செல்ல பூங்குழலி வழக்கம்போல் வேலையைப் பார்த்தாலும் மனம் சிறிது உற்சாகத்தில் இருந்தது.

காரணம் கமாண்டர் நேற்றைய மீட்டிங்கில் கூறிய செய்திதான். மலபார் என்னும் கப்பற்படை கூட்டுப்பயிற்சி அடுத்த மாதம் வருவதாகவும் அதில் பூங்குழலி விமானம் ஓட்டி பயிற்சி செய்யலாம் என்பதுமே அது. வழக்கம் போல் அபிஷேக்கின் மனம் கடுகடு என்றாக பூங்குழலிதான் கண்டுக்கொள்ள மாட்டாளே!

மலபார் கூட்டுப்பயிற்சி என்பது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் எல்லாம் ஒன்று கூடி அவரவர் திறமையை காண்பித்து கற்றுக்கொள்ள இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய வங்ககடலிலும் அரபிக்கடலிலும் பத்து நாட்கள் செய்யும் பயிற்சிதான்.

ஆனால் மற்ற அனைத்து நாட்டு கூட்டுப்பயிற்சியை விட இதில் சவால்களும் கற்றுகொள்வதும் அதிகம் இருக்கும். வங்கக்கடலே அந்த பத்து நாட்களில் குண்டுகளால் அதிரும் என்றால் வானில் பறக்கும் விமானங்களால் அப்பகுதி போர்க்களம் போலவே காட்சியளிக்கும்.

இதுவரை எத்தனையோ பயிற்சியில் விமானம் ஓட்டியிருந்தாலும் பூங்குழலிக்கு மலபாரில் விமானத்தை ஓட்ட வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் சமீபத்தில் அவள் மீனவர்களை காப்பாற்றி எல்லைத்தாண்டியவர்களை விரட்டியதால் அவளை இம்முறை மலபார் பயிற்சிக்கு தேர்ந்தெடுத்திருந்தனர்.

இரு வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் இந்தியாவின் கப்பற்படையுடன் பயிற்சி என்றால் சும்மாவா அவளது மனம் மூளை எல்லாம் விமானத்தில் தஞ்சமடைந்து வானத்தில் பறக்க அதை கீழே இறங்க வைக்கவென்றே ஒருவன் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறியவில்லை.

**************************************

தமிழக முதலமைச்சர் அலுவலகம்.

ஆரவ் ஆபிஸ் வந்துவிட்டாலும் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை என்பது எதுவும் இல்லை. அனைத்தும் மாத தொடக்கத்தில் முதல் வாரமே முடிந்துவிடும்.

மற்றைய நாட்களில் நாட்டில் நடப்பதை கண்காணித்து அதுவும் சலித்துவிடும் வேளையில் வீட்டிற்கு கிளம்பிவிடுவான்.

நாட்டில் நடப்பது நல்லவையோ கெட்டவையோ அதனை உடனுக்குடன் தெரியும்படி கண்காணித்து சொல்ல ஆட்கள் உண்டு. அதுவே லட்சகணக்கில் இருப்பர். அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு நெட்வொர்க்கில் இணைத்திருந்தான். அவர்கள் நடப்பதை மெசேஜ் அனுப்பினாலே போதும் அடுத்த நொடி தேவைப்படுவதிற்கு ஆக்சன் எடுத்துவிடுவான்.

இதனை ரகசியமாக செய்ய வேண்டியது மட்டுமே முக்கிய கண்டிஷன். வெளியே கசிந்தால் வேறு எங்கும் வேலை பார்க்க முடியாது மற்றும் செய்யும் வேலைக்கு கணிசமான சம்பளமும் கொடுப்பதால் கவனமாகவே இருப்பார்கள் அனைவரும்.

அப்படி கண்காணிப்பவர்கள் யாரென்று மக்களுக்கே தெரியாது வீட்டில் வேலைவெட்டியில்லாமல் போன் நோண்டும் தண்டசோறாக இருக்கலாம், மருத்துவமனையை கூட்டித் துடைக்கும் ஆயாவாக இருக்கலாம், தூய்மை தொழிலாளர்களாக இருக்கலாம், துணி அயன் செய்பவராக இருக்கலாம் இப்படி போய்க்கொண்டே இருக்கும்.

தான் கண்காணிக்கப்படுகிறோம் என்று மனிதர்களுக்கு தெரிந்தாலே போதும் பெருமளவு தவறுகள் தடுக்கப்பட்டுவிடும் தானே. அதற்குத்தான் கடவுள் கண்காணிப்பதாக முன்னோர் சொல்லி வைத்தார்களோ என்னவோ? காலத்தின் கோலம் கடவுள் மீதான பயம் துளிர்விட்டு போய்விட கண்காணிக்கும் வேலையை தனதாக்கிக்கொண்டான் ஆரவ்.

தான் இல்லாத வேளையில் தனது முடிவை எடுக்க நான்கு பேரை துணை முதலமைச்சராகவும் வைத்திருக்க அதில் வினோத்தும் ஒருவன். செயலாளர் பதவியில் இருந்து இங்கு தூக்கி உட்கார வைத்தாலும் இப்போது செயலாளர் வேலையையும் சேர்த்து செய்துகொண்டு இருந்தான்.

அதற்காக ஆரவ் முதலமைச்சர் என்ற பதவியில் சும்மா இருக்கிறான் என்றில்லை. இத்தகைய நிலையை அடைய அவன் மிக மிக சிரமப்பட வேண்டியிருந்தது. கிட்டதட்ட கடும் நான்கு வருட இரவு பகல் பாராத உழைப்பிற்கு பலன் கிடைக்க அதைத்தான் ஆசுவாசமாய் அனுபவித்துக்கொண்டிருந்தான்.

நான்கு வருடத்திற்கு பின்பு பெருமளவு வேலை குறைந்ததால் நேரமும் அதிகம் கிடைக்க முழுதாக ஒரு மாதம் கால்சீட் கொடுத்து வருடத்திற்கு ஒரு படம் விதம் இன்னமும் அழுத்தமாக திரைத்துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கிறான்.

மதியம் ஆகியதும் வீட்டிற்கு கிளம்பலாம் என்கையில் விழுப்புரத்தில் கர்ப்பிணி பெண் ரோட்டில் வழியில் துடித்ததால் அருகில் இருந்த இருபத்திநாலு மணிநேர மருத்துவமனையில் சேர்த்தும் பிரசவம் பார்க்க டாக்டர் இல்லை என்று புகார் வந்திருக்க சீல் வைக்கணும் அந்த ஹோச்பிடலுக்கு என்று நினைத்து முடிக்கவில்லை.

டாக்டர் அரக்க பறக்க வந்துவிட்டதாக அடுத்த தகவல் வந்து விழ உதடு பிரியாமல் புன்னகைத்துக்கொண்டான்.

முன்பொரு முறை தான் சீல் வைத்ததும் பின் சர்வதிகாரம் என்று நாடே போராட்டம் செய்ததும் நினைவுவர இது போல் கடந்து வந்த பல கடின பாதையின் நினைவுகள் வந்தது.

அதன் அழுத்தம் தாங்காமல் வீட்டிற்கு வந்தால் பூவேந்தன் வேறு தினமும் இரவு வீடு வருகையில் தன் பின்னே எட்டி எட்டி பார்த்து ஏமாற அதைக் கண்டு ஏனோ நெஞ்சைப் பிசையும் ஆரவ்விற்கு.

இரவில் சிறிதுநேரம் அவனை சமாதானப்படுத்த அவனோடு பேசிப் பழக தாயில்லாத இருவரும் உள்ளத்தால் அண்ணன் தம்பியாக நெருங்கினர். ஆரவ்வின் அழுத்தம் பூவேந்தனால் மறைய பூவேந்தனின் தேடுதல் ஆரவ்வினால் மறக்கடிப்பட்டது ஆனால் மறையவில்லை. தினமும் பேச்சுவாக்கில் பூமா இப்படி பூமா அப்படி என அவளின் பெருமை பேசாமல் தூக்கம் வராது சிறுவனுக்கு.

அப்போதெல்லாம் ஆரவ்விற்கு வாய் நமநம என்று வரும் ‘போதும் வேற ஏதாவது பேசுறியா?’ என ஆனால் சொன்னதில்லை.

வருடங்கள் செல்ல செல்ல டான்ஸ், படிப்பு, சினிமா என்று நுழைந்து பூங்குழலி இவர்களுக்கு இடையிலிருந்து மறைந்தாலும் என்றாவது தோன்றும்போது கேட்டே விடுவான், “இன்னும் பூமாவை கண்டுபிடிக்கலையா?” என.

அதுவும் இவன் பிறந்தநாளோ பூங்குழலி பிறந்தநாளோ வந்துவிட்டால் போதும் அன்று ஆரவ் அவனின் கண்ணில் படவேமாட்டான். அந்தளவு படுத்தி எடுத்துவிடுவான் பூவேந்தன்.

நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை அருகில் இருந்த அவனது பிரத்யேக செல்பேசி இசைத்து கவனத்தை ஈர்க்க அழைத்தது ரித்தேஷ்தான்.

“நீங்க சொன்னத விசாரிச்சிட்டேன். பூங்குழலிய இந்தியால பார்க்குறது வருடத்துக்கு ஒருமுறைதான். அதுவும் கப்பற்படை தினம் கொண்டாடும்போது வந்துட்டு பரிசு வாங்குறது, விமானம் ஓட்டுறது எல்லாம் முடிந்ததும் கிளம்பிருவாங்க. அதை பொதுமக்கள் பார்க்க அல்லோவ் பண்ணுவாங்க. அப்போதான் நான் பூவேந்தனை கூட்டிட்டு போகமுடியும். ஆனா அதுக்கு இன்னும் ஆறு மாசத்துக்கு மேல இருக்கு என்ன பண்றது?” என

“ஒஹ்…” என்றவாறு யோசித்தவன்“சரி அப்போ உன் தம்பியே ஷிப்க்கு போய் சொல்லட்டும். கேட்டுட்டு தம்பிய தேடி பூங்குழலியே ஓடோடி வரட்டும். வேற என்ன பண்றது?” என்றான் அலட்சியமாய்.

“பட் நீங்க நினைச்சா நெக்ஸ்ட் மந்த் பார்க்கலாம்…” என்று நிறுத்தினான் கொக்கியான கோரிக்கையுடன்.

“இஸ் இட்… எப்படி? எங்க?” என புருவம் சுருக்கி வினவ

“மலபார்” என்றான் ரித்தேஷ்.

**************************************

அன்றைய இரவு.

யோசனையுடன் சோபாவில் அமர்ந்திருந்த ஆரவ்விடம் வந்தான் பூவேந்தன்.

“அண்ணா… வாட் ஹப்பன்?” என்றவாறு வந்தவன் இரு கைகளையும் மேலே தூக்கி தொம்மென்று அவனருகில் விழ

“நத்திங்…” என்றான் ஆரவ் அவன் விழுந்ததால் ஏற்பட்ட விசையை ஆடிக்கொண்டே.

“சம்திங்…”

“பச் வேந்தா…”

“ஓகே ஓகே. மூட் அவுட் சோ டிஸ்டர்ப் பண்ணாம போகணும் அதானே” என்று சத்தமாய் சொன்னவன், “இதுல நான் சொல்ல வந்ததை கேட்டா இன்னும் மூட் அவுட் ஆகும்” என்று முனங்கி எழ

“என்ன சொல்லணும் சொல்லு” என்றான் அவனின் முனுமுனுப்பையும் காதில் வாங்கி

“நத்திங்…” இப்போது சொல்வது இவன் முறையாக

முறைத்த ஆரவ்விடம், “அண்ணா… அது வந்து… இன்னக்கி ஸ்கூல்ல பொன்னியின் செல்வன் படம் வரப்போறதைப் பற்றி பேசுனோம். அதான் அதை பத்தி பேச வந்தேன். வேற ஒன்னும் இல்லை” என்று தோளை குலுக்க

“ஹ்ம்ம் அப்புறம்…” என கூர்ந்து பார்த்தவனிடம் பார்வையை தழைத்தவன்

“அது ஒரு ஹிச்டோரிக் நாவல். அதுல பூங்குழலி அப்படின்னு ஒரு கேரக்டர் இருக்காம். அந்த கேரக்டர்க்கு ஆக்டர் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்குறாங்களாம்” முகம் சிறிது சுருங்கியது.

அவன் கேட்க வருவது புரிந்தாலும் தன் மனநிலைக்காக தலையை சுத்தி மூக்கை தொடுபவனைக் கண்டு மனம் லேசாக

“ஹ்ம்ம் அதுக்கு” என்றான் சீண்டலாய். இதே பூங்குழலி இருக்குமிடம் தெரியவில்லை என்றால் அவன் மனநிலையே மாறியிருக்கும்.

“இல்ல அந்த நாவல் படிக்கணும் போல இருக்கு அதான் உங்க கிட்ட இருக்கான்னு கேட்க வந்தேன்” என்று சமாளித்தான்.

அந்த வீட்டின் மேலறையில் ஒரு குட்டி நூலகம் உண்டு. அதில் தான் வாங்கி அடுக்கியது போக தாயார் விரும்பி படித்த புத்தகமெல்லாம் மூட்டைகட்டி தன்னோடு எடுத்து வந்திருந்தான். மூட்டை கட்டி எடுத்து வந்ததில் பொன்னியின் செல்வன்னும் ஒன்று. தாய் படிக்கும்போது அவரை நச்சரித்து கதைக் கேட்ட நியாபகமும் தன்னைப்போல் வர, மனம் போவோமா வேண்டாமா என்ற குழப்பத்தை விடுத்து நிலையாக ஒரு முடிவெடுத்தது.

“அதெல்லாம் மேல இருக்கு. பப்ளிக் எக்ஸாம் முடியட்டும் எடுத்துத் தரேன்” என்றவனின் நெஞ்சம் ‘அதுவரை நீ இங்க இருப்பியான்னு தெரியலை பட் அப்போ உனக்கு அந்த பூங்குழலி தேவைப்படாது’ என்றெண்ணி சிறிது வருத்ததோடே புன்னகைத்தது.

“ஓகேண்ணா குட் நைட்” என்றுவிட்டு எழ போனவனைப் பிடித்து அமரவைத்த ஆரவ், “அப்போ அப்போ நடத்துவதை படிச்சி வை வேந்தா லாஸ்ட் மினிட் வரை வச்சிருக்காத அண்ட் நாம நெக்ஸ்ட் மந்த் கடலுக்கு போறோம்” என்றான் இன்னதென்று பிரித்தறியா குரலில்.

“பீச்க்கு தானே அதுக்கு எதுக்கு நெக்ஸ்ட் மந்த் போகணும் இப்போவே போகலாமே” கடற்கரை என்று நினைத்து பேச

“ம்ஹும்… பீச்க்கு இல்ல கடலுக்குள்ள ஷிப்ல போறோம்”

“ஓ ஷிப்லயா… எதுக்குண்ணா அங்க போறோம்?” என்ற பூவேந்தனின் கேள்விக்கு

“சமுத்திரகுமாரியைப் பார்க்க” என்று பதிலளித்திருந்தான் ஆரவ்

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

error: Content is protected !!