Nan Un Adimayadi–EPI 18

Nan Un Adimayadi–EPI 18

அத்தியாயம் 18

அடாடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது!!! (தவமங்கை)

 

“நிறுத்துங்க!”

மங்கையின் குரலில் மெல்ல பைக்கை ஓரம் கட்டினான் காளை.

“என்னாச்சு டீச்சர்? எதாச்சும் மறந்துட்டீங்களா ஸ்கூலுல?”

இந்த ஒரு வாரமாக மங்கை ஒரு மணி நேரம் லேட்டாகத்தான் பள்ளி முடிந்து வருகிறாள். அவர்கள் ஊரில் இன்னும் ஒரு மாதத்தில் திருவிழா வைத்திருந்தார்கள். அவ்விழாவில் கடைசி நாளன்று கலை நிகழ்ச்சி ஒன்று நடக்கும். அதில் வெளியூரில் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் கலைஞர்களோடு உள்ளூர் மக்களும் தங்கள் திறமையைக் காட்டுவார்கள். அந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் நாடகம் ஒன்று வைக்க சொல்லி பெரிய தனக்காரர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். கடவுள் பெருமையை சொல்லும் நாடகமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவர் கேட்டுக் கொள்ள, பள்ளி நிர்வாகமும் ஒத்துக் கொண்டது.

ஆசிரியர்கள் எல்லாம் கூடி மீட்டிங்கில் என்ன நாடகம் போடலாம், எப்படி நடத்தலாம் என பேசும் போது, நிறைய ஐடியாக்களைக் கொடுத்தாள் தவமங்கை.

“கற்புக்கரசி கண்ணகி டிராமா போடுங்க டீச்சர்! நீங்க போடறதுக்கு ரொம்ப பொருத்தமான டிராமா அதுதான்!” என எல்லோர் முன்னும் நக்கலடித்தான் மறை.

அவளது திருமணம் பற்றி அங்கிருந்த எல்லா ஆசிரியர்களுக்கும் தெரியும்தான். ஜாடை மாடையாக அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டாலும் மங்கையின் முன்னே நேரே யாரும் அப்படி பேசியதில்லை. மறையின் நக்கலில், பக்கென சிரித்து விட்டார்கள் சிலர்.

அமைதியாக எழுந்தவள்,

“கற்புக்கரசி கண்ணகி போடறதுக்கு பதில், இந்திரனின் இன்ப லீலைகள்னு ஒரு நாடகம் போட்டா, நீங்களே ஹீரோவா நடிக்கலாம் மறை சார். அப்படி ஒரு பொருத்தமா இருக்கும்!” என அவனைப் பார்த்து நேராக சொன்னவள்,

“என்ன நாடகம் வேணா போடுங்க! ஐம் நாட் இண்டரெஸ்டெட்!” என மற்றவர்களைப் பார்த்து சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

“நில்லுங்க டீச்சர்!” என அவளை தடுத்து நிறுத்தினார் தலைமை.

“நீங்க சொன்ன ஐடியாலாம் ரொம்ப நல்லா இருந்தது. நீங்களே இதப் பொறுப்பேத்து நடத்திடுங்க! உங்களுக்கு மத்தவங்க கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க! கடவுள் சம்பந்தப்பட்ட நாடகம் வேணும்னு சொல்லறதுனால, தமிழாசிரியர் என்ன நாடகம், என்ன வசனம் எல்லாம் அவர் பார்த்துப்பார்” என எல்லோருக்கும் பொறுப்பைப் பகிர்ந்தளித்து மீட்டிங்கை முடித்து வைத்தார்.

தவமங்கையின் தலையில் அப்படிதான் அந்த பொறுப்பு வந்து விழுந்தது. முதலில் யோசித்தாலும் மனதை திசை திருப்ப கிடைத்த வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டாள் மங்கை. மாணவர்களை நாடகத்துக்குத் தேர்ந்தெடுப்பது, நடிக்க சொல்லிக் கொடுப்பது, உடைகள் விஷயத்தைக் கவனிப்பது, ப்ரோப்ஸ் ஏற்பாடு செய்வது என நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது அவளுக்கு. மற்ற ஆசிரியர்கள் உதவினாலும், எல்லாவற்றையும் அவளே முன்னின்று பார்த்தாள்.

நாடக பிராக்டிஸ் முடிந்து, பள்ளி நுழைவாயில் தாண்டி ரோட்டுக்கு வந்ததும் பைக்கை திடுமென நிறுத்த சொல்லியிருந்தாள் அவள்.

“ஒன்னும் மறக்கல! எனக்கு..”

“சொல்லுங்க டீச்சர்”

அவர்களுக்குப் பக்கமாக இருந்த பெட்டிக்கடையைக் காட்டி,

“அந்த கடையில என்னமோ சாப்பிட்டுக்கிட்டே ஓரமா நிப்பீங்களே! அப்படி என்ன சாப்புடுவீங்க?” என கேட்டாள்.

அவள் பள்ளி முடிந்து வரும் நேரம் அங்கே நின்று தானே அவளைப் பார்ப்பான். பின்பு ரொம்பவே இடைவெளி விட்டு அவளைப் பின் தொடர்ந்து பத்திரமாக அவள் வீடு சேர்ந்ததும், விட்ட வேலையைத் தொடர போவான் காளை. முக்கியமான வேலைகளில் மாட்டிக் கொள்ளும் போது மட்டுமே அந்த செக்குரிட்டி வேலைத் தடைப்படும். அந்த மாதிரி ஒரு நாளில் தான் அவள் விழுந்து வாரி இருந்தாள். அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்கிறோம் என இவன் நினைத்திருக்க, அவளோ அங்கே நின்று என்ன கொறிக்கிறான் என்பது வரை கவனித்திருக்கிறாள்.

லேசாக அசடு வழிய,

“அது வந்து..கடலை மிட்டாய் சாப்புடுவேன் டீச்சர்! மொதெல்லாம் பீடி பிடிக்க அங்க போவேன்! அத கொஞ்ச நாளா விட்டுட்டேன்! அதான் வாய் நம நமன்னுதென்னு வெய்ட் பண்ணறப்ப கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்” என சின்ன குரலில் சொன்னான்.

“எனக்கு வேணும்”

“ஐயே டீச்சர்! இங்கெல்லாம் சுத்தபத்தமா இருக்காது! உங்களுக்காக ஆத்தாவா நான் செஞ்சுக் குடுக்க சொல்லறேன்”

“வேணும், இப்போ!”

“இல்ல டீச்சர்…”

அவன் தயங்க பைக்கில் இருந்து இறங்கி அவளே அந்தக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“இருங்க, இருங்க டீச்சர்! நானே வாங்கியாறேன்” என பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டுப் போனான் காளை.

பை நிறைய கடலை மிட்டாயை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். பைக் மேல் அந்தப் பையை வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டவள், அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு சுவைத்தாள்.

“நல்லாருக்கு” ஆசையாக சாப்பிட்டாள் மங்கை.

அமைதியாக நின்று அவள் சாப்பிடுவதையேப் பார்த்திருந்தான் காளை.

“வேணுமா?”

“இல்ல டீச்சர்! நீங்க சாப்புடுங்க”

“இப்போ வாய் நம நமன்னு இல்லயா?”

இல்லையென தலையாட்டினான்.

“பரவாயில்ல சாப்பிடுங்க!” என சொல்லியவள் ஒன்றை எடுத்து பாதி கடித்து அவள் வாயில் போட்டுக் கொண்டு மீதியை அவனிடம் நீட்டினாள்.

அவன் ஆவென பார்க்க,

“ஹ்ம்ம்! இந்தாங்க” என நீட்டியபடியே நின்றாள் மங்கை.

“இல்ல நீங்க வாய்…வந்து நீங்க…” தடுமாறினான் காளை.

“ஓ! நான் வாய் வச்சிட்டன்ல! ஹ்ம்ம் சாரி மிஸ்டர் காளை! என்னமோ நெனைப்புல குடுத்துட்டேன்!” என அவனுக்காக நீட்டியதைத் தூக்கித் தூர எறிந்தாள்.

பின் எங்கோ பார்த்தப்படி,

“போலாம்!” என சிடுசிடுத்தாள்.

கிளம்பி வீட்டுக்கு வந்தார்கள் இருவரும். வாசலிலேயே சிரித்த முகத்துடன் வரவேற்றார் காமாட்சி.

“வாத்தா! இன்னிக்கு வேலை எப்படி போச்சு?” என கேட்டப்படியே முற்றத்துக்கு வந்தவளுக்கு கால் கழுவ நீர் எடுத்துக் கொடுத்தார். சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டவள் பள்ளியில் நடந்ததை எல்லாம் அவரிடம் ஒப்பித்தாள்.

அவள் பேசியதை கேட்டுக் கொண்டே காபியுடன் வந்தார் காமாட்சி. மாலை காபி இருவரும் இணைந்து தான் அருந்துவார்கள். முற்றத்தில் காற்றாட அமர்ந்து பேசிக் கொண்டே காபி அருந்தி பலகாரம் எதாவது சாப்பிடுவார்கள். மாமியாரும் மருமகளும் சேர்ந்து பேசுவதை தனியே அமர்ந்து காபி குடித்தப்படி பார்த்திருப்பான் காளை. அவர்கள் பேச்சில் இவனை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.(சோ சேட்) காபி குடித்ததும் தன் வேலையைப் பார்க்க கிளம்பி விடுவான் காளை. அதன் பிறகு தான் மங்கை குளிக்கப் போவாள். அவள் குளித்து வர, பேசிக் கொண்டே இருவரும் சேர்ந்து இரவுக்கு எதாவது செய்வார்கள்.

ராஜி திருமணம் முடித்துப் போனதில் இருந்து பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் இருந்தவருக்கு மங்கையிடம் சொல்ல கேட்க ஆயிரம் விஷயங்கள் இருந்தன. மனதில் உள்ளதை பகிர்ந்துக் கொள்ள ஆளில்லாமல் இருந்த இவளுக்கோ தங்குத் தடையின்றி காமாட்சியிடம் பேச முடிந்தது.

சிரித்துப் பேசி பாசமாக பழகினாலும் சில நேரம் இருவருக்கும் முட்டிக் கொள்ளும். மழை வருகிற மாதிரி இருக்கிறது, தலைக்கு ஊற்றாதே என காமாட்சி சொல்ல, இவள் கசகசவென இருக்கிறது என ஊற்றிக் கொண்டு வருவாள்.

“பெரியவங்களுக்கு ஒரு மட்டு மருவாதை இல்ல! எதை வேணான்னு சொல்லறமோ அத தான் செய்வீங்க!” என காச் மூச் என கத்துபவர், துண்டோடு வந்து தலையைத் துவட்டிக் காய வைத்து விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார். மாமியாருக்கும் மருமகளுக்கும் நாளுக்கு நாள் பாசப்பிணைப்பு அதிகரித்துக் கொண்டே போனது.

காளை வெளியே கிளம்பியதும், தனது ரூமுக்குப் போனாள் மங்கை. அதாவது காளையின் ரூம் தான் தற்பொழுது அவளின் ரூம். அங்கே அவள் ஜாகையை மாற்றி வாரம் ஒன்று ஆகிறது. உள்ளே நுழையும் போதே எப்பொழுதும் போல உற்சாகம் குமிழியிட்டது மங்கைக்கு. பேக்கை கட்டிலின் மேல் வைத்து விட்டு மல்லாக்க படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தாள்.

தோப்புக்கு கிளம்பப் போனவன், பைக்கிலேயே மங்கை வைத்து விட்டுப் போன கடலை மிட்டாயைப் பார்த்தான். ஆசையாகக் கேட்டாளே, இப்படி இங்கேயே வைத்து விட்டுப் போய் விட்டாளே என எண்ணியபடியே அவளிடம் கொடுக்க தங்களது ரூமுக்குப் போனான். கதவு லேசாக திறந்து தான் இருந்தது. அங்கிருந்தே மங்கை படுத்திருந்தது இவன் கண்களுக்குத் தெரிய அப்படியே நின்று அவளை சற்று நேரம் ரசித்துக் கொண்டிருந்தான்.

அன்று தூக்கக் கலக்கத்தில் எழுந்தவன் கண்டது கதவு நிலையில் சாய்ந்தவாறு நின்றிருந்த ஒரு பெண் உருவத்தைத்தான். முற்றத்தின் மெல்லிய வெளிச்சத்தில், தலை முடி விரிந்து கிடக்க மாய மோகினி போல் நின்றிருந்தவளைப் பார்த்து ஒரு கணம் மூச்சு நின்று விட்டது அவனுக்கு. வேகமாக துடித்த நெஞ்சைப் பிடித்துக் கொண்டு,

“முருகா காப்பாத்து, கந்தா காப்பாத்து!” என முணுமுணுத்தவன் அருகே வந்து நின்றாள் மங்கை.

கிட்டே வந்தவள் முகத்தைப் பார்க்கவும் தான் மூச்சு சீராக வந்தது அவனுக்கு.

“நீங்களா டீச்சர்? நான் எந்த மோகினி பிசாசோன்னு நினைச்சுட்டேன். இன்னிக்கு வேற அமாவாசை! அமாவாசை அன்னிக்குத்தான் அதுங்க கன்னிப் பசங்கள தேடி வந்து கண்டம் பண்ணுங்களாம்” என கதை சொன்னவனை கஸ்டப்பட்டு சிரிக்காமல் பார்த்தாள் மங்கை.

“என்னாச்சு டீச்சர்? இந்த நேரத்துல இங்க…” என இழுத்தான் காளை.

“என் ரூமுல எலி ஓடுது”

“எலியா? இருக்காதே! இருங்க நான் போய் பார்க்கறேன்!” என அவன் கட்டிலில் இருந்து எழ, இவள் கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.

“தூக்கமா வருது! ஆனா தூங்க பயமா இருக்கு” என சொல்லியபடியே கட்டிலில் சரிந்தாள் மங்கை.

“டீச்சர், டீச்சர்!” என இவன் அழைக்க, இன்னும் வாகாக படுத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள் அவள்.

முட்டி வரை இருக்கும் நைட் பேண்ட், மெல்லிய டீஷர்ட் அணிந்து ஒருக்களித்துப் படுத்திருப்பவளை கைகளைப் பிசைந்தப்படி பார்த்திருந்தான் காளை. அவன் கட்டிய தாலி டீ ஷர்ட்டுக்கு வெளியே தெரிய, பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்.

பின் அவனது பீரோவை திறந்து, சலவை செய்து வைத்திருக்கும் போர்வையைக் கொண்டு வந்து அவளுக்குப் போர்த்தி விட்டவன், தனது போர்வையை விரித்துத் தரையில் படுத்துக் கொண்டான். அடுத்த ரவுண்ட் பாத்ரூமுக்குப் போய் விட்டு வந்தவள், கீழே படுத்திருந்த காளையின் காலை மிதித்து விட்டாள். ஏற்கனவே தூங்காமல் படுத்திருந்தவன், அவள் மிதித்த வலியில் ஆவ்வ்வ் எனும் சத்தத்துடன் எழுந்து அமர்ந்துக் கொண்டான்.

கொஞ்சம் கூட பதட்டமில்லாமல்,

“சாரி, சாரி! இருட்டுல கண்ணு சரியா தெரியலை. ப்ளீஸ், மேல கட்டில்ல ஒரு ஓரமா படுத்துக்குங்க! எனக்கு அடிக்கடி பாத்ரூம் போகனும். அப்புறம் தூக்கக்கலக்கத்துல படக்கூடாத இடத்துல கால் வச்சிடப் போறேன்! ப்ளிஸ், மேல படுத்துக்குங்க” என சொன்னாள்.

‘படக்கூடாத இடத்துலயா!!!!! ஐயோ சாமி!!’ என மனதில் அலறியவன், கட்டிலின் ஓரத்தில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான். மறுநாளே மங்கையின் ரூமை நன்றாக செக் செய்து, எலி வராமல் இருக்க மருந்து எல்லாம் அடித்து சுத்தமாக வைத்தான். ஆனாலும் அன்று இரவும் நடு ராத்திரியில் அவன் அருகே வந்து படுத்துக் கொண்டாள்.

“டீச்சர்!!!” என்றவனை,

“கரப்பான்பூச்சி பறந்து வந்து கன்னத்து மேல உட்காருது! தூங்க முடியல, பயமா இருக்கு” என சொல்லி அவன் வாயடைத்தாள் மங்கை. எலி, கரப்பான்பூச்சி, பூராண், பல்லி என நாளுக்கு நாள் லிஸ்ட் பெரிதாகி கொண்டே வர, இவனுக்கே பல்ப் எரிந்து அவளது உடமைகளை தனது அறைக்கு கொண்டு வந்து வைத்தான்.

அவனது ரூம் பெரியதாகத்தான் இருக்கும். அதில் பெரிய கட்டில் ஒன்றும், இவனுக்கென இரும்பு பீரோ ஒன்று மட்டும்தான் வைத்திருந்தான். மங்கையின் ரூமில் இருந்து அவளது மேசை, நாற்காலி என எடுத்து வந்து போட்டவன், புதிதாக மர அலமாரி ஒன்றும், ட்ரெசிங் டேபிள் நாற்காலியோடு ஒன்றும் வாங்கிப் போட்டான். ஏசிக்கு ஆர்டர் கொடுத்திருந்தான். இன்னும் வரவில்லை.

இருவரையும் கவனித்தப்படிதான் இருந்தார் காமாட்சி! மங்கை அவன் ரூமுக்குப் போனதையோ, மனைவிக்கு அவன் அதையும் இதையும் வாங்கிப் போட்டதையோ எதையும் என்னவென்று கேட்டுக் கொள்ளவில்லை அவர். ஆனால் உள்ளுக்குள் மிகுந்த சந்தோஷமாக இருந்தவர், வெளியே அதைக் காட்டிக் கொள்ளவுமில்லை.

ஒரே ரூமில் இருந்தாலும் இருவரும் தேவைக்குத் தவிர பேசிக் கொள்வதில்லை. மங்கை ஆழ்ந்து தூங்கியதும் அவளையே கண் கொட்டாமல் பார்த்தப்படி இருப்பதில் கூட சுகம் கண்டான் காளை. அவள் வாசம் அந்த அறை முழுக்க வியாபித்து இருக்க, சொர்க்கம் இப்படித்தான் இருக்குமோ என எண்ணி எண்ணி பூரித்துப் போவான். பள்ளிக்கு அவளை விட்டு விட்டு வந்ததும், நேராக ரூமுக்குப் போய் அவளது போர்வையை மடித்து வைப்பான். அவசரத்தில் அவள் நாற்காலியில் போட்டு வைத்திருக்கும் துண்டை எடுத்து காயப்போடுவான். சுத்தமாக பெருக்கி, மாப் போட்டு ரூமை பளபளவென வைத்து விட்டுத்தான் வேலைக்குப் போவான். நான்கு மணிக்கே முழிப்பவன், தன் கடமையை இன்னும் கரேக்டாகத்தான் செய்து கொண்டிருந்தான். அதில் இந்த வேலைகளும் அடங்கிப் போனது.

ஊரே எதிர்பார்த்திருந்த திருவிழாவும் வந்தது. உள்ளூர்வாசிகள் வெளியூருக்குப் போகாமல் இருக்க காப்பு கட்டி எல்லோரையும் லாக்டவுன் செய்திருந்தார்கள். காலை மாலை என எந்நேரமும் மைக் செட்டில் தெருவுக்கு தெரு பக்தி பாடல்கள் முழங்கின. ஊர் மக்கள் விரதம், நோன்பு என சுத்தபத்தமாக இருந்தனர்.

குழந்தையம்மனுக்கு வேண்டிக் கொண்டு தீமிதி எடுபவர்கள் இன்னும் கட்டுக் கோப்பாக விரதம் இருந்தனர். இந்த வருடம் காளையும் தீமிதிக்க வேண்டி இருந்தான். இதைக் கேள்விப்பட்ட மங்கை அதிர்ந்துப் போய் நின்றாள்.

“ஏன்?”

“அது வந்து..நம்மல பஞ்சாயத்துல நிப்பாட்டுனாங்கல்ல! அப்போ உங்க மேல எந்த கலங்கமும் இல்லைன்னு ஊர் மக்கள் நம்புனாங்கன்னா நான் தீமிதிக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன் டீச்சர். நான் வச்ச சத்தியத்த ஏத்துக்கிட்டு என் மேல தானே தப்புன்னு ஒத்துக்கிட்டாங்க! உங்க மேல உள்ள களங்கம் போயிருச்சுல்ல! அதுக்கு என்ன வேணா செய்யலாம் டீச்சர்! தீ மிதிக்க மாட்டேனா!”

“பைத்தியமாடா ஒனக்கு?” ஓங்கிக் கத்தினாள் மங்கை.

“டீச்சர், டீச்சர்! அப்படிலாம் சொல்லாதீங்க! சாமி குத்தம் ஆகிடும்!”

“மண்ணாங்கட்டி! இனிமே இப்படிலாம் வேண்டி வச்ச, நானே தீக்குழில உன்னைப் புடிச்சு தள்ளிடுவேன்! இடியட்”

அன்றிலிருந்து முகத்தைத் தூக்கி வைத்திருந்தவளை,

“இங்க தீ மிதிக்கிறதுலாம் சகஜம்த்தா! முன்ன எனக்கு ஆப்பரேஷன் பண்ணப்பக்கூட அம்மனுக்கு வேண்டிக்கிட்டு நம்ம காளை தீ மிதிச்சான்! நீ கவலைப்படாதே ந்ல்லாம் சரியா நடக்கும். சாமிக்கு நேர்ந்துக்கிட்டத முழு மனசோட செய்யனும். நீ இப்படி மூஞ்ச தூக்கி வச்சா, அவன் எப்படி நேர்த்திக்கடன ஒழுங்கா நெறைவேத்துவான் சொல்லு!” என கடிந்துக் கொண்டார்.

“காலு பொத்துப் போயிடாதாத்தா?”

“எப்படி போகும்? எப்படி போகுங்கறேன்? சாதாரணமா ஒரு மெழுகுவத்தில கையை வச்சிட்டா கூட சுட்டுப் பொசுக்கிடற தீ, அவ்ளோ பெரிய குழில தீக்கங்குங்களா ஜொலிக்கறப்ப மட்டும் ஏன் சுட்டுப் பொசுக்கல?”

“ஏன் ஆத்தா?”

“ஏன்னா மகா சக்தியா நமக்கும் மேல ஒருத்தன் இருக்கான்! மனசு சுத்தமா, உடம்பு சுத்தமா விரதம் இருந்து அவன மட்டுமே நம்பி நேர்த்திக்கடன செலுத்துறவங்களுக்கு அவன் தொணை நிப்பான்!”

(நேரிடையா தீமிக்கிறத நான் பார்த்துருக்கேன்! எனக்கு இன்னிக்கி வரை ஆச்சரியம்தான். எப்படி காலுல ஒரு தீக்காயம் படாம இவங்க நடந்துடறாங்கன்னு! அதே மாதிரி பெரிய பெரிய அலகு குத்தறவங்களையும் பார்த்துருக்கேன். எப்படி அலக எடுத்துட்டு திருநீரு வச்சதும் அந்த காயம் அப்படியே ஆறி போயிடுது! வடு கூட தெரியாது! எவ்ளோ எவ்ளோ ஆச்சரியங்கள் அதிசயங்கள் நம்ம சுத்தி நடக்குது!!!! கடவுள் இருக்காரு இல்லைன்னு நான் சொல்ல வரல. அது அவங்க அவங்க மனச பொறுத்தது. நான் பிரமிச்ச இந்த மாதிரி விஷயங்கள பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு! அவ்ளோதான்)

காளை விரதம் ஆரம்பிக்கவும், பூஜை அறையிலேயே படுக்க ஆரம்பித்தான். சுத்தபத்தமாக சமைத்துக் கொடுத்தார் காமாட்சி. மங்கையும் தானாகவே பள்ளிக்கு போக ஆரம்பித்தாள். முடிந்த அளவுக்கு அவன் முன்னே வந்து நிற்காமல் இருந்தாள்.

தீ மிதிக்கும் நாளும் வந்தது. எத்தனையோ முறை யூடியூப்பில் மாரியம்மா மாரியம்மா பாடலை ஓட விட்டுப் பார்த்தாள் மங்கை. முன்பெல்லாம் சிரிப்போடு ராமராஜன் ஆடுவதை பார்த்திருந்தவள் இப்பொழுது பயத்தோடு பார்க்க ஆரம்பித்தாள்.

தீமிதியைப் பார்க்க அந்த ஊர் மக்கள் மட்டும் இல்லாமல், பல ஊர்களில் இருந்து மக்கள் திரண்டிருந்தார்கள்.

கண்கள் சிவந்து, முகம் உப்பிப் போய் நின்ற தன் மருமகளை அமைதியாக பார்த்திருந்தார் காமாட்சி. சில நாட்களாக சரியாக உண்ணக் கூட இல்லை அவள். சுத்தபத்தமாக குளித்து கிளம்பி காலையிலேயே கோயிலுக்கு சென்றார்கள் இவர்களும். அம்மனுக்கு பூஜை புணஸ்காரங்கள் முடிந்து தீ மிதிப்பவர்களுக்கு பூசாரி மஞ்சள் நீர் மேல் ஊற்றி, திருநீறு வைத்து விட பெண்கள் குலவையிட்டு உற்சவத்தைத் தொடக்கி வைத்தார்கள்.

தவமங்கையின் கண்கள் இரண்டும் காளையின் மேலேயே அப்பி இருந்ததன. அவனோ கைக்கூப்பி குழந்தையம்மனை வணங்கி அம்மன் மந்திரத்தை உச்சரித்தப்படியே நின்றிருந்தான். அவனுக்கு முன்னே இருவர் தீக்குழியில் இறங்கிட, அவனது முறையும் வந்தது. கையை மேலே ஏற்றி அம்மனை தொழுதுக் கொண்டே அந்த தீக்குழியை பூக்குழியாய் பாவித்து அவன் மெல்ல நடையிட, பெண்களின் குலவை சத்தம் வானைப் பிளந்தது. அங்கே அவன் தீமிதித்து முடித்திருக்க, காமாட்சியின் பக்கத்தில் நின்று பார்த்திருந்த மங்கை படக்கென மயங்கி சரிந்தாள்.

காமாட்சி மருமகளை மடியில் தாங்க, மச்சக்காளை ஓடி வந்து அவளை குழந்தையைப் போல தூக்கிக் கொண்டார். உள்ளே பூசையில் இருந்த காளைக்கு இந்த களேபரம் எதுவும் காதுக்கு எட்டவில்லை. சாங்கிய சம்பிரதாயங்கள் முடிந்து விரதத்தை முடித்துக் கொண்டு காளை வீடு வந்து சேர மாலையாகி இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்தவனிடம் விஷயத்தை மச்சக்காளை சொல்ல, ரூமுக்கு குடுகுடுவென ஓடினான் காளை. அங்கே துவண்டுப் போய் படுத்திருந்தாள் மங்கை. அவள் அருகே காமாட்சி.

“ஒன்னும் இல்லடா, லேசா மயக்கம்! தீமிதிய பாத்து புள்ள பயந்துட்டா. மயக்கம் தெளிய வச்சு, கஞ்சி குடுத்து படுக்க வச்சிருக்கேன்! நல்லா தூங்குறா!” என சொல்லியபடியே ரூமில் இருந்து வெளியேறினார் காமாட்சி.

மங்கையை நெருங்கியவன், கை நடுங்க மெல்ல அவள் முகத்தை வருடிக் கொடுத்தான். அவன் ஸ்பரிசத்தில் விழித்தவள், அவனையே இமைக் கொட்டாமல் பார்த்திருந்தாள். கண்களில் அருவியென கண்ணீர் கரை புரண்டோடியது!

“டீச்சர்” பதறினான் காளை.

அவன் கையைப் பற்றி நெஞ்சுக்குள் வைத்து அணைத்துப் பிடித்தவாறு மீண்டும் கண் மூடிக் கொண்டாள் மங்கை. அவள் சுவாசம் மெல்ல சீராக, கையை அகற்ற முனைந்தான் காளை. ஆனால் அவள் பிடி இரும்புப் பிடியாக இருந்தது. உள்ளே வந்து அவனின் நிலையைப் பார்த்த காமாட்சி, தட்டில் உணவிட்டு எடுத்து வந்து அங்கேயே அவனுக்கு ஊட்டி விட்டார்.

மெல்லிய குரலில்,

“போஅனது போகட்டும்! இனிமே எதையும் உன் பொண்டாட்டிக்கிட்ட கலந்து பேசிக்காம முடிவெடுக்காதடா! அவ பட்டணத்து பொண்ணு! இதெல்லாம் தாங்க மாட்டா!” என திட்டிக் கொண்டே உணவை ஊட்டினார்.

சரியென தலையை ஆட்டி வைத்தான் காளை.

அன்று இரவு பாரமாக எதுவோ அழுத்த மெல்ல கண் திறந்தான் காளை. அவன் மேல் ஏறி படுத்து, அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்திருந்தாள் மங்கை.

“டீச்சர்!”

“ஹ்ம்ம்”

“என் மேல படுத்திருக்கீங்க!”

“தெரியும்!”

“வந்து…”

“விரதம், சாங்கியம், தொட்டா தீட்டு இதெல்லாம் முடிஞ்சதா?”

“மு..முடிஞ்சது டீச்சர்!” மூச்சு ஏகத்துக்கும் ஏறி இறங்கியது அவனுக்கு. கழுத்து அடியில் இருந்து அவள் பேச, அவளின் உதடுகள் உராய்ந்து உராய்ந்து அவனை சுக இம்சையில் ஆழ்த்தின.

தலையை நிமிர்த்து அவன் முகத்தைப் பார்த்தவள்,

“ஒன்னும் கேக்கல! சத்தமா சொல்லுங்க” என்றாள்.

“முடிஞ்சது டீச்சர்” அப்பொழுதும் வெறும் காற்றுதான் வந்தது.

தன் விரல் கொண்டு அந்த அரையிருட்டில் மெல்ல அவன் முகவடிவை அளந்தாள் மங்கை.

“எ.எ.எ.என்ன பண்ணறீங்க டீச்சர்!!!!!”

“மூக்கு கண்ணெல்லாம் கரேக்டான இடத்துல இருக்குதான்னு செக் பண்ணுறேன்!” என சொல்லியவள், அவன் உதட்டை மென்மையாக தடவினாள்.

“டீ..டீச்சர்!”

“எலிசுன்னு சொல்லு”

“இல்லல்ல!!!”

“எ…லி…சு….” ஒவ்வொரு வார்த்தையாக கற்றுக் கொடுத்தவள், அந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் உதட்டோடு தன் உதட்டை ஒட்டி ஒட்டி எடுத்தாள்.

அவள் கீழே நெளிந்தவன்,

“என்னை விட்டுருங்க டீச்சர்!!!” என குழைவான குரலில் கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.

“எலிசுன்னு கூப்டு, விட்டுடறேன்”

“எ…எ..எலிசு!”

அவன் சொல்லி முடித்த நொடி அவன் உதட்டைத் தன் உதடு கொண்டு லாக்டவுன் செய்திருந்தாள் தவமங்கை. அவன் இரு கன்னங்களையும் தன் இரு கரங்களால் தாங்கி, முத்துக்காளையின் உதட்டில் முத்தாடி அவனைப் பித்தாக்கினாள். அவன் கரங்கள் மென்மையாய் அவளை வளைத்துக் கொள்ள, லாக்டவுனை முடிவுக்கு கொண்டு வந்து தன் முத்தச் சிறையில் இருந்து அவனுக்கு விடுதலை கொடுத்தாள் தவமங்கை.

“தோ விட்டுட்டேன்!” என சொன்னவள், அவன் மேலிருந்து இறங்கி தனது இடத்தில் நல்ல பிள்ளை போல படுத்துக் கொண்டாள்.

தள்ளிப் போய் படுத்திருக்கும் தன் எலிசையே பாவமாகப் பார்த்திருந்தான் முத்துக்காளை. வீட்டில் அடைந்திருக்கும் வேளையில், ஃபுல் ப்ளேட் பிரியாணி கொடுத்து, ஒரு வாய் வைத்ததும் பிடுங்கிக் கொண்டது போல முகத்தை வைத்திருந்தான் அவன். அவளை தானாக நெருங்கவும் பயந்து வந்தது அவனுக்கு. மனதில் ஆயிரத்தெட்டு ஆசைகள் அவனுக்கு. ஆனால் மங்கையின் முகத்தைப் பார்த்தால், எல்லாம் புஸ்க்கென ஆகிவிடும். தயக்கமும், தடுமாற்றமும், தாழ்வு மனப்பான்மையும் சூழ்ந்து கொண்டு அவனைப் பந்தாடிவிடும்.

தன் கற்பை கண்டம் பண்ண வந்த அந்த அழகிய மோகினிப் பிசாசையே ஏக்கத்துடன் பார்த்திருந்தான் காளை. அந்தப் பிசாசு கொடுத்த இதழ் அமுதம் இன்னும் இன்னும் வேண்டுமென பேயாட்டம் போட்டது அவன் உள்ளமும் உடலும்.

தொண்டையை செருமியவன்,

“டீ..டீச்சர்” என மென்மையாய் அழைத்தான்.

அந்த ராட்சசியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

“எலிசு!” என கரகரப்பான குரலில் அழைக்க, தாவி வந்து மீண்டும் அவன் மேல் ஏறிக் கொண்டாள் அவன் எலிசு.

“எலிசுதான் உன் எலிசுதான்!” என மீண்டும் மீண்டும் சொன்னவள் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

அவள் இறுக்கிக் கொண்டதில் அவன் தடைகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. ஜல்லிக்கட்டு காளை துள்ளி எழுந்தது, தன் துணையை அள்ளி அணைத்தது! முட்டி, மோதி, சீறி, சினந்து, துள்ளி, தவித்து, கடைசியில் மங்கையவளின் மென்மையில் மயங்கி மண்டியிட்டு அடி பணிந்தது இந்தக் காளை.

“சுட்டுவிழி கண்டாலே

சொக்குதடி தன்னாலே

சிக்குப்பட்ட எள் போலே

நொக்குப்பட்டேன் உன்னாலே

கட்டுத்தறி காளை நானும்

கட்டுப்பட்டேன் உன்னாலே!!!!!!!”

 

(அடிபணிவான்……)

error: Content is protected !!