Nan Un Adimayadi –EPI 23

அத்தியாயம் 23

வெண்ணிலவுக்கு

வானத்தப் புடிக்கலையா

என் கண்ணுமணிக்கு

இந்தக் காளைய புடிக்கலையா!!! (முத்துக்காளை)

 

“எனக்கு கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்? வேலைல இப்போத்தான் செட்டில் ஆக போறேன். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என சொன்னான் அஜய்குமார்.

“உனக்கு அவசரம் இல்லாம இருக்கலாம்பா! ஆனா உனக்கு ஒரு நல்லத பண்ணிட்டா நான் நிம்மதியா போய் சேருவேன்”

“என்னப்பா பேச்சு இதெல்லாம்?”

“நெசத்தத்தானே சொல்லுறேன்! ஒடம்பு முன்ன மாதிரி இல்லப்பா! யாருக்கு எப்போன்னு அந்த கடவுள் எழுதி வச்சிருக்கானோ, நமக்கு எப்படி தெரியும். காலாகாலத்துல ஒன்ன குடும்பஸ்தனா பார்த்துட்டா உங்கம்மா கிட்டயே நானும் போயிடுவேன்.”

அஜய்குமார் பிறந்த நான்காவது ஆண்டு மீண்டும் கருவுற்றதாய் எண்ணி மருத்துவமனை போக, அது குழந்தையல்ல டியூமர் என கண்டுப்பிடித்தார்கள் மருத்துவர்கள். எவ்வளவு முயன்றும் சிகிச்சை பலனளிக்காமல் காலனின் கோர பிடியில் மாய்ந்து போனார் அவன் அம்மா. அதன் பிறகு அஜய்க்கு எல்லாமே அப்பாத்தான். தேவைக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாய் ஒதுங்கினாலும், மகனுக்கு மாற்றாந்தாய் என ஒருத்தியை மட்டும் வீட்டுக்கு அழைத்து வரவில்லை அவர்.  

தாய் போல் பாசம் காட்ட யாரும் இல்லாவிட்டாலும், ஒன்று விட்ட அக்கா பார்வதியிடம் ஒட்டுதலாய் தான் இருந்தான் அஜய். அதுவும் அவள் வசதியான இடத்தில் திருமணமாகி போகும் வரைதான். அதன் பிறகு படிப்பு, அப்பா, விளையாட்டு, என அப்படியே வாழ்க்கை ஓடியது. அடிக்கடி அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வளர்ந்தான் அவன். நன்றாக படித்து கவர்மெண்ட் வேலைக்குப் பல தேர்வுகள் எழுதியவனுக்கு, அவன் விருப்பப்படியே நல்ல வேலை அமைந்தது.

கிராமத்தை விட்டு வரமாட்டேன் என அப்பா சொல்லி விட இவன் மட்டும் பட்டணத்தில் வேலைக்கு அமர்ந்தான். கை நிறைய சம்பளம், பிடித்த வேலை. இருந்தாலும் தனிமை மனதை அழுத்தியது. அந்த நேரம் தான் அவன் அப்பா தரகர் மூலம் வந்திருந்த சம்பந்தத்தைப் பற்றி இவனிடம் பேசினார். எடுத்ததுமே எப்படி சரியென சொல்லுவான்! அப்படி சொல்லி விட்டால் தான் இதற்க்குத்தான் காத்திருப்பது போல இருக்காதா! ஆகவே முதலில் மழுப்பிப் பார்த்தான் அஜய். அவன் தந்தை பிடிவாதமாய் இருக்கவும், மனதில் இருந்த குதூகலத்தை மறைத்து, போனால் போகிறது என்பது போன தலையாட்டினான்.

“இந்த கவருல பொண்ணு படம் இருக்குப்பாரு! ஜாதகம் அம்சமா பொருந்திருக்கு! சீர் செனத்தி, வரதட்சணை எல்லாம் நான் எதிர்ப்பார்க்கற அளவுக்கு செய்யறதா சொல்லிட்டாங்க. பொண்ணுக்கு உன்ன மாதிரியே அம்மா இல்ல. ஆனா சித்தி இருக்கா”

உன்னை மாதிரியே அம்மா இல்லை எனும் வார்த்தை ஆழமாய் மனதில் இறங்க, பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவளையே மணப்பது என எண்ணிதான் கவரை திறந்துப் பார்த்தான் அஜய். மாப்பிள்ளை வீட்டுக்குக் கொடுப்பதற்காகவே ஸ்டூடியோவில் எடுத்திருப்பார்கள் போல! மெல்லிய புன்னகையோடு கையில் இருந்த ரோஜாவை பார்த்தப்படி நின்றாள் பெண்ணவள். படத்தைப் பார்த்தவனுக்கு ரோஜா அழகா, இல்லை ரோஜா போல் சிவந்திருக்கும் கன்னியின் கன்னம் அழகா என பெரும் குழப்பமே வந்துவிட்டது. இமைக்காமல் பார்த்திருந்தான் போட்டோவை.

“பொண்ணு பேரு போட்டா பின்னால இருக்கு பாருப்பா”

தகப்பனின் குரலில் கனவுலகத்தில் இருந்து வெளி வந்தவன், போட்டோவைத் திருப்பிப் பார்த்தான்.

“மங்கையற்க்கரசி..அரசி” மெல்ல முணுமுணுத்தான் அஜய்.

“பொண்ண புடிச்சிருக்காப்பா? நீ கவர்மெண்டு வேலைல இருக்கன்னுதான் கேட்டு வந்துருக்காங்க. நமக்கு தூரத்து உறவுதான். இந்தப் பொண்ணு பொறந்த கையோட அவங்க அம்மாவுக்கு முனி புடிச்சிருச்சாம்! அவளாவே தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். இவள வளக்கனும்னு அவங்க அப்பன் ரெண்டாம் கல்யாணம் பண்ணி, அந்தப் பொண்ணுக்கு ரெண்டு பசங்களாம். பரம்பரை பணக்காரங்க! நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ள குடும்பம். அதோட, பட்டணத்துல ஒன் பேருல ஒரு பிளாட்டு வாங்கி தரேன்னு சொல்லிருக்காங்க. காசு பணத்துக்குக்காக நான் பார்க்கல, நீ சரின்னு சொல்லு அப்பத்தான் கல்யாணம். இல்லைனா வேற பொண்ண பார்க்கலாம்”

“சரிப்பா!”

“எதுக்கு சரிங்கற? இந்தப் பொண்ணுக்கு சரியா, இல்லா வேற பொண்ண பார்க்கறதுக்கு சரியா?”

“இந்தப் பொண்ணையே எனக்குப் புடிச்சிருக்குப்பா. இருந்தாலும் கொஞ்சம் டைம் குடுங்க. நானும் ஒருக்க நல்லா விசாரிச்சுக்கறேன்! உங்கள மாதிரி, எனக்கும் கல்யாணம்னா அது வாழ்க்கையில ஒரு தடவைத்தான்.” என சொன்ன மகனை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் அந்த தகப்பன்.

தன் பங்குக்கு அரசியைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்ததில் திருப்தியாகவே இருந்தது அஜய்க்கு. பெண் பார்க்கும் வைபவம் சிறப்பாகவே நடந்தது. ஐந்து நிமிடங்கள் தனிமையில் பேச சந்தர்ப்பம் தந்தார்கள் இருவருக்கும்.

எடுத்தவுடனே,

“அரசி, எனக்கு உன் போட்டோவைப் பார்த்ததுமே ரொம்ப புடிச்சிருச்சு! உனக்கு என்னைப் புடிச்சிருக்கா? இல்லை வீட்டுல சொல்றாங்கன்னு ஒத்துக்கிட்டியா?” என கேட்டான் அஜய்.

அவ்வளவு நேரம் நிலத்தையே பார்த்திருந்த அரசி, அந்த கேள்வியில் நிமிர்ந்து அஜயைப் பார்த்தார். பதட்டத்துடன் இருந்த முகத்தில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.

“புடிச்சிருக்கு!” என ஒற்றை வார்த்தை சொன்னவள், குடுகுடுவென உள்ளே ஓட ஆரம்பித்தாள்.

“ஏ நில்லு! இன்னும் கொஞ்சம் நேரம் பேசலாமே!” என அஜய் சொல்ல, பாதி வழியில் நின்றவள்,

“கல்யாணம் ஆனதும், நாம ரெண்டே பேருதானே! வாழ்க்கை முழுக்கப் பேசலாம்” என மெல்லிய குரலில் இயம்பிவிட்டு உள் சென்று மறைந்தாள். அஜய்க்கு வாயெல்லாம் பல்.

‘எனக்குன்னு ஒருத்தி! எனக்கே எனக்குன்னு ஒருத்தி!’

மனம் இன்னிசைப் பாடி, இன்பக் கடலில் மூழ்கியது.

சின்னவர்களை அதிகம் காத்திருக்க வைக்காமல், திருமணத்தை சீக்கிரமே நடத்தி வைத்தார்கள் இரு வீட்டினரும். கோலாகலாமாக நடந்தது அவர்களின் திருமணம். சீர் செனத்தி, நகை தொகையுடன், அரசியின் அப்பா வாங்கி குடுத்த ப்ளாட்டுக்கு தனிக்குடித்தனம் வந்தார்கள் அஜயும் அரசியும்.

இப்படி யாரும் வாழ்ந்திருக்கவே மாட்டார்கள் என்பது போல மகிழ்ச்சியில் முங்கி குளித்தார்கள் இருவரும். அஜய் ஓயாமல் பேச, அரசியோ அவன் பேச்சிலேயே மயங்கிக் கிடப்பாள். அரசியின் சுபாவமே அமைதிதான். அஜய் பத்து வார்த்தைப் பேசினால் இரண்டு வார்த்தை பதிலாய் வரும்.

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அரசி, அரசிம்மா, செல்லம், டார்லிங், பட்டு என கொஞ்சோ கொஞ்சென கொஞ்சுவான் தன் மனைவியை. பெண் வாடை இல்லாமல் வளர்ந்தவனாயிற்றே, தனிமையில் உழன்றவனாயிற்றே, அதைப் போக்க வந்த அரசி அவன் வாழ்க்கையின் பேரரசியாகிப் போனாள். முதலில் தயங்கி தயங்கி பேச ஆரம்பித்த பெண்ணவளோ, அவன் காதலில் முங்கித் திளைத்து கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள்.  

அஜய் ஜெய்யாக மாற, அவன் கொடுத்ததை விட காதலை, அன்பை பன்மடங்காய் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தாள் மங்கையர்க்கரசி. காதலில் திளைத்து மகிழ்ந்தாலும், சில சமயங்களில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகளும் வரும். சின்னதாய் ஆரம்பிப்பதை சின்னதாகவே முடித்து விடுவான் அஜய். அவனால் மனைவியை எதற்காகவும் ரொம்ப நேரம் கோபித்துக் கொள்ள முடியாது. வீட்டில் இருப்பதே இரண்டு பேர். சண்டைப் போட்டுக் கொண்டு எவ்வளவு நேரம் முகத்தைத் தூக்கி வைக்க முடியும்? கோபமாய் இருக்க முயன்றாலும், அவள் முகத்தைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிடும். அவளும் இதுதான் சாக்கு என ஒட்டிக் கட்டி, முட்டி சமாதானமாக்கிவிடுவாள் அஜயை.

இரண்டு வருடங்கள் இப்படியே மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்தது வாழ்க்கை.

“அரசிம்மா!”

“ஹ்ம்ம்”

“நாம் ரெண்டு பேரும் போய் ஒரு செக் அப் செய்துட்டு வரலாமா?”

“எதுக்கு ஜெய்?”

“இல்லடா! அது வந்து..ஹ்ம்ம்..ரெண்டு வருஷம் ஆகுது நமக்கு கல்யாணம் ஆகி! நம்ம சந்தோசத்தப் பங்குப் போட்டுக்க ஒரு பாப்பா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்! அதான், சும்மா போய் ஒரு டெஸ்ட் பண்ணிக்கலாமா?”

“நம்ம சந்தோசத்தப் பங்குப் போட யாரும் வர வேணா ஜெய்! என்னால மறுபடியும் என் அன்ப பங்குப் போட்டுக்க முடியாது! முடியவே முடியாது” என சொன்னவள், ஓவென அழ ஆரம்பித்தாள்.

மனைவி அழுவது பொறுக்காமல், சட்டென அவளை அணைத்துக் கொண்டான் அஜய்! அவள் அழுகைதான் பெரிதாக தெரிந்ததே தவிர, அவள் பேசிய வார்த்தைகளின் அர்த்தத்தை உணரவில்லை அவன்.

“என்னடி பைத்தியம் மாதிரி பேசற! குழந்தைன்றது நம்ம காதலின் அடையாளம்டி! ஈருயிரா இருக்கற நாம காதலில் கலந்து உருவாக்குற இன்னுயிர்டி அது. ஒவ்வொரு தடவையும் உனக்கு மென்சஸ் வரப்ப, நான் எப்படி துடிச்சுப் போயிடுவேன் தெரியுமா செல்லம்! இந்த மாசமும் கிடைக்கலியே கடவுளின் கொடைன்னு ரொம்ப கவலையா இருக்கும். உனக்கும் அது மாதிரிதானே இருக்கும்னு உன் கிட்ட என் பீலிங்க அப்படியே மறைச்சிடுவேன்! இப்போலாம் ரொம்ப ஏக்கமா இருக்குடி அரசி! அதுவுன் எனக்குன்னு இருந்த ஒத்த சொந்தமான அப்பாவும் போனதுல இருந்து, என்னமோ ரொம்ப வெறுமையா இருக்குடி. அந்த வெறுமையைப் போக்க உன்னை மாதிரியே அழகா ஒரு பொண்ணு என்னை அப்பான்னு கூப்புடாதான்னு ஏங்கிப் போய் கிடக்கேன்! அந்த ஏக்கம் அப்படியே மனச போட்டு அரிக்குதுடிம்மா! எங்கயாச்சும் பிள்ளைங்கள பார்த்துட்டா, நம்ம புள்ள எப்படி இருக்கும்னு கற்பனை அதுப்பாட்டுக்கு ஓட ஆரம்பிச்சிருதுடி! என்னால இந்த ஏக்கத்த அடக்க முடியல கண்ணம்மா! உனக்குப் புரியுதாடி அரசி!” என மனைவியை அணைத்துப் பேசியவனின் கண்ணீர் அவள் முதுகை நனைத்தது.

சட்டென இறுகிப் போனாள் பெண்ணவள்.

“பிள்ளைன்னா அவ்ளோ ஆசையா ஜெய்?” நடுங்கிய குரலில் கேட்டாள் அரசி.

“யாருக்கு ஆசை இருக்காது! தத்தக்காபித்தக்கானு அன்ன நடையிட்டு ம்மா, ப்பான்னு நம்மை நோக்கி வரும் குழந்தைய வாரி எடுத்து அணைச்சிக்கற பாக்கியம் வேணான்னு யாரு சொல்லுவா சொல்லு! ரெண்டு வருஷமா இன்னைக்கு கன்சீவ் ஆகிடுவ, நாளைக்கு கன்சீவ் ஆகிடுவன்னு எதிர்ப்பார்ப்போடே தவமாய் தவமிருந்துக்கிட்டு இருக்கேன். உன் கிட்ட வாயத் தெறந்து கேட்க கூட பயம்டி! நீயும் குழந்தையில்லையேன்னு மனசளவுல நொந்துப் போயிருப்பன்னு தெரியும்! அப்படி இருக்க, அதைப் பத்தி பேசி உன்னை நோகடிக்க வேணாம்னு ஆறப்போட்டேன்! ஒரு ஆர்டிக்கல்ல படிச்சேன், ரெண்டு வருஷம் ட்ரை பண்ணியும் ஒன்னும் ஆகலன்னா, கண்டிப்பா செக் பண்ணிக்கறது நல்லதுன்னு! போலாம்டி செல்லம், போய் டாக்டர பார்த்துட்டு வரலாம்டி. ப்ளிஸ்டி!” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டான் அஜய்.

இத்தனை நாள் பிள்ளை வேண்டும் என ஆசை இருந்தும், மனைவியைப் புண்படுத்தக் கூடாது என இருந்தவனை நினைத்து ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், இன்னொரும் பக்கம் நெஞ்சம் படபடவென துடித்தது அரசிக்கு.

“ஜெய்!”

“என்னம்மா?”

“எனக்காக அன்பையும் காதலையும் கொட்டிக் கொடுக்கற உங்களுக்காக இத கூட நான் செய்ய மாட்டேனா! போகலாம் ஜெய், டாக்டர் கிட்ட போகலாம்”

உச்சபட்ச சந்தோஷத்தில் மனைவியைக் கொண்டாடி தீர்த்துவிட்டான் அஜய்.

இருவருக்குமே எந்த குறையும் இல்லை, கண்டிப்பாக குழந்தை தங்கும் என இவர்களைப் பரிசோதித்த டாக்டர் சொல்லிவிட்டார். நல்ல உணவுப்பழக்கம், யோகா, இப்படி மனதை ரிலாக்சாக வைத்திருந்து வாழ்க்கையை அனுபவியுங்கள், கண்டிப்பாக குழந்தைப் பாக்கியம் கிட்டும் என சொல்லி அனுப்பிவிட்டார் அவர்.

இனி கடவுள் விட்ட வழி என கணவன் மனைவி இருவருமே இன்னும் தங்களுக்குள் ஒன்றி போய் வாழ்க்கையை ஓட்டினார்கள். திருமணம் ஆகி ஐந்தாவது வருடத்தில் கரு தங்கியது அரசிக்கு. அஜயைக் கையில் பிடிக்க முடியவில்லை. குழந்தையை வயிற்றில் சுமந்தவளை இவன் மனதில் தூக்கி சுமந்தான். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அவன் தாங்குவது போதாது என, வேலைக்கு போகும் நேரம் அவளை கவனிக்க ஒரு பெண்மணியை வேலைக்கு அமர்த்தி இருந்தான். அரசியின் வீட்டில் எல்லாம் கொடுத்து கல்யாணம் செய்து கொடுத்ததோடு முடிந்தது. சில மாதங்களுக்கு ஒரு முறை எப்படி இருக்கிறாய் என ஒரு போன், வருடம் ஒரு முறை வந்துப் பார்த்து போவது என கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். மாற்றாந்தாய் என்றால் அப்படித்தான் என இவனும் கண்டுக் கொள்ளாமல், தாய்க்கு தாயாய் தன்னவளைப் பார்த்துக் கொண்டான் அஜய்.

ஐந்து வருடம் கழித்து உண்டாகி இருப்பதால், மிக கவனமாக டாக்டர் சொல்லிய எல்லாவற்றையும் கடைப்பிடித்து, மருந்து மாத்திரை தவாறாமல் கொடுத்து கவனமாகப் பார்த்துக் கொண்டான் அரசியை.

“ஜெய்!”

“சொல்லும்மா! முதுகு வலிக்குதா? புடிச்சு விடவா?”

“இல்லை! நான் நல்லா இருக்கேன்”

“வேற என்னடா?”

“இல்ல… பாப்பா பொறந்தா, என் மேல உனக்குப் பாசம் குறைஞ்சிடுமா ஜெய்?”

“கண்டிப்பா குறைஞ்சிடும்டி! இத்தனை வருஷமா என்னை மொத்தமா எடுத்துக்கிட்டல்ல! இனி இந்த அஜய் என் புள்ளைக்கு மட்டும்தான். புள்ள விட்டுக் குடுத்தா வேணா நீ கொஞ்சமா என்னை எடுத்துக்கலாம்!” என குதூகலமாக சொன்னான்.

எல்லா கணவர்களும் தன் மனைவியை வம்பிழுக்க சொல்லும் சாதாரண வார்த்தைதான் அது. ஆனால் அது அரசிக்கு சாதாரணமாக இருக்கவில்லை. கணவன் உறங்கியதும், அவள் தலையணை நனைந்துப் போனது. கணவன் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாய் அவளை கவனித்துக் கொள்ள, இவள் உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தாள்.

அவள் வயிற்றை மென்மையாய் தடவி,

“செல்லம், அப்பாம்மா! அப்பா பேசறேன்! நீங்க என்ன செய்யறீங்க? வெளாடறீங்களா? இல்ல தூங்கறீங்களா?” என குழந்தையுடன் எதாவது பேசிக் கொண்டே இருப்பான். அவன் இருந்த சந்தோஷத்தில் உள்ளுக்குள் மறுகிக் கொண்டே வெளியே பொய்யாய் சிரித்து, பொய்யாய் பேசி, பொய்யாய் நடமாடும் மனைவியைக் கவனிக்கத் தவறினான்.

அஜய் ஆவலாய் எதிர்ப்பார்த்திருந்த நாளும் வந்தது. மங்கையற்க்கரசியை, பிறப்பதற்கு முன்னே நான்கு மணி நேரம் பாடாய் படுத்தி எடுத்து இந்த பூமிவில் வந்து பிறந்தாள் அவர்களின் பெண். முதலில் ஓடி வந்து மனைவியை கவனித்து அவள் நலம் அறிந்துக் கொண்ட அஜய், பிறகே நர்ஸ் கொடுத்த தன் மகளை கையில் ஏந்தினான். தன் மனைவியை உரித்துக் கொண்டுப் பிறந்திருந்த அந்த ரோஜா குவியலை அணைத்துப் பிடித்தவனுக்கு கண்ணில் கண்ணீர் பொங்கியது.

“அரசி, பார்த்தியாம்மா நம்ம மகளை! அப்படியே நீதான்! எனக்கு அப்படியே வெடவெடன்னு வருதுடி அரசி! நமக்கே நமக்குன்னு நம்ம குழந்தை. என்னால நம்பவே முடியலடி”

கண்ணீர் குரலில் பேசினான் அஜய். சிப்பியாய் மூடி இருந்த தன் விழிகளை மெல்லத் திறந்து சிணுங்கியபடியே தன் தகப்பனைப் பார்த்தாள் குழந்தை.

“அரசி! கண்ணு மட்டும் எங்கம்மாடி..ஐயோ, பாரேன்டி எப்படி பார்க்கறான்னு” என சொல்லிக் கொண்டே மனைவியின் அருகே மகளைக் கொண்டு போய் காட்டினான் அஜய். கண்களை எட்டாத புன்னகையுடன் மகளைப் பார்த்தாள் அரசி. பின் களைப்பில் கண்ணை மூடிக் கொண்டாள்.

“உங்கம்மாவுக்கு களைப்புடி குட்டிம்மா! படாத பாடு படுத்திட்டீங்களே அவங்கள! அம்மா தூங்கட்டும். என் பட்டு செல்லம்! எங்கம்மா நீங்க, என் அம்மும்மா! ஐ இது நல்லா இருக்கே! அம்மும்மா! இனி எனக்கு நீ அம்மும்மா”

அவன் கொஞ்சல் பேச்சில் மூடிய கண்ணைத் திறந்துப் பார்த்து விட்டு மீண்டும் மூடிக் கொண்டாள் குழந்தை. பரவசமாகிப் போனான் அஜய். தவமிருந்து தனக்குக் கிடைத்த பொக்கிஷத்துக்கு, அந்த பொக்கிஷத்தை தனக்களித்த தன்னில் பாதியின் பெயரையும் இணைத்து தவமங்கை என பெயர் சூட்டினான் அஜய்குமார்.

 

 

(அடி பணிவான்….)

(இன்னும் ஒரு எபி இருக்கு ப்ளேஷ்பேக் முடியன்னு நெனைக்கறேன். இது வரைக்கும் என்ன பிரச்சனை யாரால பிரச்சனைன்னு எதாச்சும் புரியுதா டியர்ஸ்? சீக்கிரம் நெக்ஸ்ட் எபிய குடுக்க ட்ரை பண்ணுறேன்..குட் நைட் டியரிஸ்..)