Nee Enaku Uyiramma–EPI 5

189613085_863389437581725_4803627891963141566_n-62003986

Nee Enaku Uyiramma–EPI 5

அத்தியாயம் 5

அப்பொழுதுதான் டீம் மீட்டிங்கை முடித்து விட்டு தனது ஆபிஸ் அறைக்குள் வந்தான் நேதன். என்னவோ சோர்வாக இருப்பது போல இருந்தது. கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தவன், தனது அறையின் பெரிய கண்ணாடி ஜன்னல் அருகே வந்து நின்றான். சுற்றித் தெரிந்த கட்டிடங்கள், சாலைகள், அதன் மேலே ஓடிய வாகனங்கள் என சற்று நேரம் வேடிக்கைப் பார்த்தான் அவன்.

நேதன் முதலாளியாக இருந்தாலும் எல்லாவற்றையும் தானே பார்க்க வேண்டும், தானே செய்ய வேண்டும், மற்றவர்கள் வேலையில் மூக்கை நுழைக்க வேண்டும் எனும் முதலாளித்துவ மனப்பான்மை எல்லாம் இல்லை இவனுக்கு. தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்து தேவைப்படும் போது தலையிடுவது தான் அவனது ஸ்டைல். பிஸ்னஸ் கொண்டு வருவதை மட்டுமே மேய்ன்னாக இவன் செய்வான். டே டூ டே ஆபரேஷன், ஹியூமன் ரிசார்ஸ் இதையெல்லாம் பார்க்க தனியாக டீம் வைத்திருந்தான். அந்தந்த டீமுக்கு லீடரையும் அசைன் செய்திருந்தான். ஆகவே அவனது நிறுவனம் எந்த வித தங்குத் தடையுமின்றி ஸ்மூத்தாகப் போய் கொண்டிருந்தது.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் எண்ணங்கள் அங்கிங்கே சுற்றி மறுபடியும் வேணியிடம் வந்து நின்றது. அன்று டின்னருக்குப் போய் வந்த பிறகு ‘சோல் கபே’வை நேதன் எட்டிப் பார்க்கவேயில்லை. அவள் முகத்தைப் பார்த்து ஆகிற்று ஒரு வாரம். மேசேஜூம் செய்யவில்லை அவளுக்கு. என்னவோ ஒரு கோபம் அவள் மேல்.

‘ஏன் குட்டி மனுஷர் கூட நான் விளையாடக் கூடாதா? இல்ல பிரியத்தக் காட்டக் கூடாதா? குழந்தைகள்னா எல்லோருக்கும் தானே பிடிக்கும்! அந்தப் பிடித்தத்துல அவர் கூட பேசி சிரிச்சது தப்பா? ஏன் அவளுக்கு என் மேல அப்படி ஒரு கோபம் வந்தது? குழந்தையை வச்சி அவ கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துப்பேன்னு நினைக்கறாளோ? என்னைப் பார்த்து எப்படி அப்படி நினைக்கலாம்? எந்த இடத்துலயாச்சும் அவள தப்பா ஒரு பார்வைப் பார்த்திருப்பனா நான்?’

நினைக்க நினைக்க கோபம் வந்தது நேதனுக்கு. தப்பு செய்யாமல் தண்டிக்கப்படும் ஒருவனுக்கு வரும் நியாயமான கோபம் அது. தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டவன், பெருமூச்சுடன் தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.

டிங்கென மேசேஜ் வந்த டோன் வரவும், போனை எடுத்துப் பார்த்தான் இவன். வேணியிடமிருந்து தான் வந்திருந்தது. உடனே அதைத் திறந்துப் பார்த்தான் நேதன். மக்கில் இருக்கும் காபி போட்டோ போட்டு, அதன் கீழே ‘காபி வித் மீ?’ என அனுப்பி இருந்தாள் அவள்.

‘போடி! நீயும் வேணா உன் காபியும் வேணா!’ என சடைத்துக் கொண்டவன், மேசேஜை ரிப்ளை செய்யவேயில்லை.

போனைத் தூரமாக வைத்து விட்டு தனது வேலையில் கவனத்தை செலுத்தினான். பத்து நிமிடம் மட்டுமே அவன் மைண்ட் வேலையில் நிலைத்தது. போனை மீண்டும் கையில் எடுத்தவன்,

“ஆன் தி வே!” என வேணியின் மேசேஜூக்கு பதிலளித்தான்.

மேசேஜ் போட்ட வேணியோ, ப்ளூ டிக் காட்டியும் அவனிடம் இருந்து பதில் வராமல் போக அவமானமாக உணர்ந்தாள். தங்களை வீட்டில் விட்டுப் போனவன், அதன் பிறகு எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்தது இவளுக்கு வருத்தத்தையேத் தந்தது. கோபம் போய் விட்டதா என ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து கேட்டவனின் குரல் அடிக்கடி அவள் காதில் ஒலித்தப்படி இருந்தது. தான் கோப முகம் காட்டவும்தான் ஒதுங்கிப் போய் விட்டானோ எனும் எண்ணம் அவளை வாட்டியது. இவளாகவே அவனிடம் அதிகம் வைத்துக் கொள்ளாமல் ஹாய் பாய் ரேஞ்சில் ஒதுங்கிப் போகத்தான் நினைத்தாள். ஆனால் இப்படி ஒரேடியாக நட்பை முறித்துக் கொள்ள எண்ணவில்லை வேணி.

இன்று வருவான், நாளை வருவான் என ஒரு வாரமாக கபேவில் இவள் காத்திருக்க, அவனோ எட்டியேப் பார்க்கவில்லை. அதனால் தான் தானாகவே அவனை காபிக்கு வர சொல்லி மேசேஜ் செய்தாள் வேணி. அவனோ படித்து விட்டு ரிப்ளை செய்யாததில் மிகுந்த வருத்தமாகி விட்டது இவளுக்கு. ஆனால் பத்து நிமிடம் கழித்து வந்த பதிலில் முகம் புன்னகைப் பூசிக் கொண்டது.

அவன் வந்த நேரம் கஸ்டமர் யாரும் இல்லை. அவனைப் பார்த்து புன்னகைத்தவள்,

“என்னடா குடிக்கற?” என கேட்டாள்.

அவனோ பதில் சொல்லாமல், அமைதியாகவே நின்றிருந்தான்.

“என் மேல கோபமா நேதன்?”

“நான் யார் உன் மேல கோபப்பட?”

“அப்போ கன்பர்ம் கோபம்தான்!” என்றவள் சீனி இல்லாத இரண்டு ப்ளாக் காபி போட்டு, காரவேனில் இருந்து இறங்கி வந்தாள்.

கப்பை நிழற்குடைக் கீழ் இருந்த மேசை மேல் வைத்தவள்,

“உட்காருங்க சார், பேசலாம்” என்றாள்.

மீண்டும் உள்ளே போய் சாக்லேட் மஃபின் இரண்டு எடுத்து வந்தவள், அவன் அருகே அமர்ந்துக் கொண்டாள்.

“எப்படி இருக்க?” என இவள் கேட்க,

“ஹ்ம்ம்” என பதில் அளித்தான் இவன்.

மஃபினை அவன் புறம் நகர்த்தி வைத்தவள்,

“சாப்பிடு” என்றாள்.

அவனும் பிகு செய்யாமல் எடுத்து உண்ண ஆரம்பித்தான். இவளும் தனது மஃபினை கொஞ்சமாய் பிட்டு, அதை காபியில் நனைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“உவேக்! என்ன கேக்கை காபில தொட்டு சாப்பிடற நீ?” என முகத்தை சுழித்தான் நேதன்.

“ஏன்? சாப்பிட்டா என்ன தப்பு? இந்த சாப்பாட்ட இப்படித்தான் சாப்பிடனும்னு எதாச்சும் ரூல் புக் இருக்கா? எனக்கு இப்படித்தான் பிடிச்சிருக்கு, நான் சாப்பிடறேன்!” என்றவள் மீண்டும் அதே போல தொட்டு சாப்பிட்டாள்.

தலையை இடம் வலமாக ஆட்டியவன்,

“நீ எப்பவுமே ஒரு யூனிக் பீஸ்” என்றான்.

“இருந்துட்டுப் போறேன்!” என புன்னகைத்தாள் இவள்.

அதன் பிறகு அமைதியாக இருவரும் காபியை அருந்தினார்கள். இவள் பேச ஆரம்பிக்கும் போது கஸ்டமர் வந்து விட, எழுந்து கேரவானுக்குள் போனாள் வேணி. அவர்களை கவனித்து விட்டு மீண்டும் வந்து அமர்ந்தவள், வலது கை கொண்டு பின்னங் கழுத்தை அழுத்தி விட்டுக் கொண்டாள்.

“டயர்டா இருக்கா வேணி?” என கேட்டான் நேதன்.

“காபி ஆத்தற வேலைத்தானே, இதுல என்ன டயர்ட் இருக்கு!” என சிரித்தாள் வேணி.

அவனுக்குப் பார்த்தாலே தெரிந்தது களைத்துப் போயிருக்கிறாள் என. தூக்கம் பத்தாதது போல கண்கள் லேசாக வீங்கிக் கிடந்தன. உடம்பு சரியில்லையா என கேட்க வந்தவன், வாயை இறுக மூடிக் கொண்டான். இவன் எதார்த்தமாய் கேட்க போய் அவள் மேல் இவனுக்கு என்ன புது அக்கறை என தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டால், வீண் வம்புதானே என அமைதியாக இருந்தான்.

“ரொம்ப பிசியா நீ? ஒரு வாரமா இங்க வரக் காணோம்!”

“எதுக்கு வரனும்?”

“ஏன் இப்படி கேக்கற நீ? காபி குடிக்கத்தான்!”

“இந்த புக்கிட் பிந்தாங்ல(இடத்தின் பெயர்) ஏகப்பட்ட கபேஸ் இருக்கு! எனக்கு இங்கத்தான் வந்து காபி குடிக்கனும்னு இல்ல”

“ம்ப்ச்! இப்ப உனக்கு என்னடா பிரச்சனை?”

“நீதான் என் பிரச்சனை!”

“நான் என்ன செஞ்சேன்?”

“உனக்கு என்னைப் பார்த்தா எல்லாப் பொண்ணுங்களையும் கையைப் புடிச்சு இழுக்கறவன் மாதிரி இருக்கா வேணி?”

“என்ன உளறற நீ?”

“அன்னைக்கு ஏன் என் மேல கோபப்பட்ட? கேஷவ வச்சி உன்னை நெருங்க முயற்சி பண்ணறேன்னு நெனைச்சதனாலத்தானே கோபம்?” என கேட்டவனின் முகம் கோபத்தில் சிவந்துக் கிடந்தது.

“பைத்தியமாடா உனக்கு? உன்னைப் போய் அப்படிலாம் நினைப்பேனா நான்? ஸ்கூல்லயே எத்தனைப் பொண்ணுங்க உன்னை சைட் அடிச்சாங்க! அந்த ஆல் இன் ஆல் அழகு ராணி மேரி உன்னையே சுத்தி சுத்தி வந்தா! அவள கூட நீ திரும்பிப் பார்க்கல! லேடிஸ் விஷயத்துல நீ ஒரு சாமியார்டா! உன் கூட பழகறப்போ ஒரு பாதுகாப்பான பீலிங் தான் வருதே தவிர, என்னை உன் கிட்ட இருந்து பாதுகாத்துக்கனும்ங்கற பய ஃபீல் வரல நேதன்”

அவளது அந்த வார்த்தைகள் அவ்வளவு ஆசுவாசத்தைக் கொடுத்தன அவனுக்கு. முகம் பூவாய் மலர்ந்துப் போனது.

“இத கேட்க எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா வேணி! ஒரு வாரமா நீ எப்படி என்னைத் தப்பா நினைக்கலாம்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே இருந்துச்சு! நான் கேசுவலா பழகனத நீ எங்கயாச்சும் தப்பர்த்தம் செஞ்சுக்கிட்டியான்னு வேதனையா போச்சு. இப்போத்தான் நிம்மதியா இருக்கு வேணி”

தன் சிறு பிள்ளைத்தனமான கோபத்தால் ஒருவன் நிம்மதியைத் தொலைத்திருக்கிறான் என்பது வருத்தமாய் போனது இவளுக்கு. பெருமூச்சொன்றை விட்டவள்,

“எனக்கு உன் மேல எந்த வித கோபமும் இல்ல நேதன். என் மேலத்தான் எனக்கு கோபம். கேஷவுக்கு நானே அம்மாவா, அப்பாவா இருக்கனும்னு எவ்வளவோ முயற்சி செய்யறேன். ஆனா என்னால அம்மாவா மட்டும்தான் இருக்க முடியுது போல. என் மகன் பார்க்கற எல்லா ஆண்களிடமும் அப்பாவ தேடறானோன்னு ரொம்ப கவலையா இருக்குடா. அவனுக்காக நான் என் சக்தியையும் மீறி உழைக்கிறேன், கிடைக்கற மிச்ச சொச்ச டைம எல்லாம் அவன் கூடவே கழிக்கறேன்! அப்படி இருந்தும் அப்பான்னு ஒருத்தர தேடறான்னா, நான் என் வேலையைக் கரேக்டா செய்யலன்னு தானே அர்த்தம். அந்த கோபம்தான் அன்னைக்கு உன் கிட்ட வெடிச்சிருச்சு. சாரிடா நேதன்” என்றவளின் குரல் கரகரத்து ஒலித்தது.

“ஏ பைத்தியம்! இந்த மாதிரி லூசுத்தனமா நினைக்கறத முதல்ல நிறுத்து! அவர் குழந்தைடி. அவங்க அப்படித்தான் நடந்துப்பாங்க. உன்னையும் பேபி சிட்டரையுமே பார்த்து வளருறாரு அவர். அதான் லேடிஸ் அல்லாத ஆண்களப் பார்த்து ஒரு வியப்பு. இவர் அம்மா மாதிரி இல்லையேன்னு ஒரு ஈர்ப்பு! அவ்வளவுதான். குழந்தைகளோட கிரியோசிட்டி அது! அதுக்குப் பொய் நான் ஒழுங்கா குழந்தையப் பார்த்துக்கலன்னு கவலைப் படற நீ! நான் பார்த்த வரைக்கும் யூ ஆர் அ கிரேட் மாம் வேணி!”

அவன் முகத்தைப் பாவமாய் பார்த்தவள்,

“உண்மையா நான் கிரேட் அம்மாவா நேதன்?” என கேட்டாள்.

அவள் கைகளை மெல்லப் பற்றிக் கொண்டவன்,

“நீ அம்மாவா கிடைக்க கேஷவ் குடுத்து வச்சிருக்கனும்” என உண்மையாக சொன்னான்.

சட்டென அவள் கண்கள் கலங்கி விட்டது. கலங்கியக் கண்களை அவனுக்குக் காட்டாமல் இருக்க முகத்தைத் திருப்பிப் கொண்டாள் அவள். மெல்லிய குரலில்,

“தேங்க்ஸ் நேதன்! நீ சொன்ன வார்த்தை எனக்கு எவ்ளோ பெரிய பூஸ்ட் தெரியுமா!” என்றாள்.

“கிரேட் அம்மான்னு சொன்னதுக்கு போய் இவ்ளோ இமோஷனல் ஆகற நீ! சரி விடு, ரெண்டு பேரும் பேசி சங்கடங்கள தீர்த்தாச்சு! அந்த சந்தோஷத்தக் கொண்டாட இந்த சண்டே என் வீட்டுக்கு வரீங்களா? கேஷவ ஸ்வீமிங் பூல்ல விளையாட விடலாம்! ஓகேவா?” என கேட்டான் நேதன்.

“வரோம்டா, கண்டிப்பா வரோம்! உன் வைப், புள்ள குட்டிங்கள பார்க்கனும்னு எனக்கும் ஆசைதான்! அட்ரஸ் குடு! சண்டே நாங்களே வந்துடறோம்” என்றாள் இவள்.

தான் ஒரு தனிக்கட்டை என சொல்ல வந்தவன், பின் தன் முடிவை மாற்றிக் கொண்டான். தனியாக இருப்பதாக சொன்னால் கண்டிப்பாக வர மாட்டாள் என அவன் உள்ளுணர்வு அடித்து சொல்லியது. தண்ணீரைக் காட்டி அன்று கேஷவ் குதித்தக் குதி இன்னும் அவன் நினைவில் பசுமையாய் இருந்தது. தந்தை இல்லாத அவன் மேல் என்னவோ இவனுக்கு ஒரு சாப்ட் கார்னர் வந்திருந்தது. சின்னவனை சந்தோசப்படுத்திப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டவன், தன் சிங்கிள் ஸ்டேட்டசை வேணியிடமிருந்து தற்போதைக்கு மறைத்து வைத்தான். ஞாயிறு தங்கைக் குடும்பத்தை அழைத்துக் கொண்டால், இவளுக்கு ஆக்வர்ட்டாக இருக்காது என முடிவெடுத்தவன், சண்டே அன்றே தனது பாச்சிலர் வாழ்க்கையைப் பற்றி சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்தான்.  

அப்பொழுதே தனது வீட்டு முகவரியை அவளுக்கு வாட்சாப் செய்தான் நேதன். முகவரியைப் படித்தவள்,

“பார்டா, இந்த ஏரியாவுல வீடா! பெரிய அப்பாடக்கர்தான்டா நீ. வாழ்ற!” என புன்னகைத்தாள்.

“எல்லாம் ஐயாவோட உழைப்பு மேடம்!”

“ஹ்ம்ம்! நானும்தான் ராப்பகலா உழைக்கிறேன்! கையில வாங்கனேன் பையில போடல காசு போன இடம் தெரியல நிலைமைலதான் இருக்கேன்! எல்லாத்துக்கும் ஒரு மச்சம் வேணும்டா!”

“ஆமா, உடம்பு ஃபுல்லா மச்சக்காடா இருக்கு எனக்கு! அதான் பணம் புரளுது!” என சிரித்தான் நேதன்.

அதற்குள் இவளுக்கு கஸ்டமர் வர,

“நீ வேலையைப் பாரு வேணி! எனக்கும் ஒரு மீட்டிங் இருக்கு. நான் வரேன்” என கிளம்பி விட்டான் நேதன்.

 

(போன எபிக்கு லைக்  அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. ஜீவன் நீயம்மா கதை இன்னைக்கு இல்லைனா நாளைக்குத் தரேன் டியர்ஸ். லவ் யூ ஆல்) 

Leave a Reply

error: Content is protected !!