Neer Parukum Thagangal 6.2

NeerPArukum 1-24d29fd9

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 6.2

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன் & மினி ஜோசப்!

மினியின் அழுகுரல் அதிகரித்துக் கொண்டே போனதும், லக்ஷ்மி தன் மனதை தேற்றிக் கொண்டு, தன்மேல் சாய்ந்திருப்பவளை விலக்கி நிறுத்தினார். பின் அவள் கண்ணீரைப் பார்த்து, “மினி க்ரை பேபியா இருந்தது போதும்? இனிமே அழக்கூடாது” என்று தேற்றும் வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.

“ஆண்ட்டி” என்று மீண்டும் அவர் நெஞ்சில் சாய வந்தவளை, “மினி… ஆண்ட்டி சொல்றதைக் கேட்கணும். இங்க வா” என்று அவளைக் கூட்டிச் சென்று, தன் கைப்பை கிடக்கும் இடத்தினருகே அமர வைத்தார்.

அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தார். வந்தபோது பார்த்ததிற்கும்… இந்தப் பொழுதில் பார்ப்பதற்கும், அவளிடம் சில மாற்றங்கள் இருந்தன. போராட்டம், பயம், கோபம் என இத்தனைக்கும் பிறகு ஓய்ந்து போயிருந்தாள்.

முதலில் அவள் தோற்றத்தைச் சரி செய்ய நினைத்தவர், கலைந்திருந்த தலைமுடிகளை ஒதுக்கிவிட்டார். பின் கைப்பைக்குள் கிடந்த ஈரமான துடைப்பான் கட்டை எடுத்து… அதிலிருந்து ஒன்றை உருவி, அவள் முகத்தின் வியர்வையின் பிசுபிசுப்புகளை, கண்ணீர் கோடுகளைத் துடைத்தெடுத்தார்.

மீண்டும் அதை உள்ளே வைக்கப் போகையில், “எனக்கொரு வெட் வைப்” என மினி கேட்க, ‘அவளாகத் துடைத்தால்தான் திருப்தியாக இருக்கும் போல’ என எண்ணிக் கொண்டு ஒன்று எடுத்து தந்ததும், அவர் நெற்றியில் இருந்த சிறு காயத்தில் கசிந்த ரத்தத்தை அவள் ஒற்றி எடுத்தாள்.

சற்றும் லக்ஷ்மி இதை எதிர்பார்க்கவேயில்லை!

அவருக்குள் என்றோ உருவாகி… காலப்போக்கில் பழகிப் போயிருந்த ஏக்கம் ஒன்று, இக்கணத்தில் எங்கோ எழுந்தோடிச் செல்வது போல் உணர்ந்தார்!

பூப்போல் ஒற்றி எடுத்துக் கொண்டே, “பெயி-னா இருக்குதா ஆண்ட்டி?” என்று வருத்தமாக கேட்க, “கொஞ்சமா… அதுகூட அப்போ இருந்தது… இப்ப இல்லை” என உள்ளம் உணர்ந்ததைச் சொல்லவும், “என்ன சொல்றீங்க ஆண்ட்டி?” என அவள் இருந்த மனநிலையினால் புரியாமல் கேட்டதற்கு, “ஒன்னுமில்லை. இரு வர்றேன்” என்று எழப்போனார்.

உடனே பதறியவள், “எங்க போறீங்க ஆண்ட்டி? என்னை தனியா விட்டுட்டுப் போகாதீங்க. ப்ளீஸ்… ப்ளீஸ்” என்று ஒத்திகை அறையைப் பார்த்தபடி கெஞ்சல், பயம், இரண்டும் கலந்த குரலில் அரற்றிக் கொண்டே இருந்ததும், “மினி, மினி” என்று ஆறுதலான குரலில் அழைத்து, ஏதோ சொல்ல வந்தார்.

ஆனால் கேட்கும் மனநிலையில் அவளில்லை என்பதால், “மினி!!” என அதட்டி அவளை அமைதிப்படுத்தி, “இங்க பாரு, அவனைக் கட்டிப் போட்டாச்சு. இனி பயப்படக் கூடாது. இப்போ உன் ஸ்பெக்ஸ் எடுக்கத்தான் போறேன். சரியா?” என சிறு பிள்ளைக்குச் சொல்வது போல் விளக்கிச் சொன்னார்.

சரியென அவள் தலையசைத்ததால், எழுந்து சென்றவர் கீழே விழுந்து கிடந்த கண்ணாடியை எடுத்து வந்து தந்தார். அதை மாட்டிக் கொண்டே தொண்டை வறண்டு போயிருந்ததால், “ஆண்ட்டி குடிக்க தண்ணீ வேணும்” என உலர்ந்து போன குரலில் கேட்டாள்.

உடனே லக்ஷ்மி சுற்றிப் பார்த்தார். துணிக்கடையின் ஒரு மூலையில் ‘மினரல் வாட்டர் கேன்’ இருந்தது. மீண்டும், “இரு” என்று சொல்லிச் சென்றவர், திரும்ப வருகையில் ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து தந்தார்.

மடக்மடகென குடித்துவிட்டு, சற்று நேரம் கண்கள் மூடியிருந்தாள். அதன்பின் அவள் மெதுவாக இமை திறந்ததும், “இப்ப ஓகேவா மினி?” என லக்ஷ்மி கேட்க, “ம்ம்ம்” என்று சத்தம் வெளிவராத குரலில் சொன்னதும், “இப்பவாது சொல்லு, யார் அந்தப் பையன்?” என்று ஆரம்பத்தில் கேட்ட கேள்வியைக் கேட்டார்.

**********************************

வணிக வளாகத்தின் வெளியே

சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது. ஆனாலும் இன்னும் சாலை விளக்குகள் போடப்படவில்லை. வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருந்தவர்களில் சிலபேர் வேலை இருக்கென்று கிளம்பிப் போயிருந்தார்கள். அதனால் அங்கே ஆட்கள் கூட்டமானது குறைந்திருந்தது.

வந்திருந்த ஊடகத்தினர், காவல்துறை ஆட்கள் ‘யாரிடமாவது பேச முடியுமா?’ என முயற்சித்துக் கொண்டிருந்தனர். சில இளைஞர்கள் அலைபேசி கொண்டு அந்த இடத்தை காணொளி எடுத்துவிட்டுச் சென்றனர்.

உள்ளே மாட்டிக் கொண்டிருப்பவர்களின் உறவினர்கள் வந்து காவலர்களிடம் விசாரித்துப் பார்த்தனர். ஆனால் ஒன்றும் சரியாக தெரியவில்லை என்பதால் பதற்றத்துடன் நின்றிருந்தனர். அதில் சரவணன் சித்தப்பாவும் ஒருவர்!

**********************************

கடமை தவறா காவலர் பெனசீர்!

பெனசீரின் திறமையைக் கருத்தில் கொண்டு, இந்த மீட்பு நடவடிக்கைளை வழிநடத்திச் செல்வதற்கு கட்டளை அதிகாரி என்று யாரையும் காவல்துறை நிர்வாகம் நியமிக்கவில்லை! அதை இவர் பொறுப்பிற்கே தந்திருந்தது!

வணிக வளாகத்தின் புல்வெளிப் பரப்பின் மேல் ஒரு மேசையும் நாற்காலியும் போடப்பட்டிருந்தது. மேசை மீது சாய்ந்து பெனசீர் நிற்க, துணை ஆய்வாளர் செந்தில் மற்றும் சில காவலர்கள் அவர் முன்னே நின்றனர்.

காவலர்களிடம் தகவல்களைக் கேட்டு முடித்து சற்று நேரம் யோசித்துவிட்டு, “இந்த பெரிமீட்டர்ல பப்ளிக், மீடியா-ன்னு யாரையும் அலோவ் பண்ணாதீங்க. பேரிகேட் வச்சி அங்கேயே ஸ்டாப் பண்ணிடுங்க” என்று தள்ளியிருந்த ஒரு பகுதியைக் சுட்டிக் காண்பித்தார்.

மேலும், “இந்த ரோடு யூசேஜ்-அ பிளாக் செஞ்சிட்டு, ஸ்டேர்ஞ் ஆக்ட்டிவிட்டிஸ் ஏதும் இருக்கா-ன்னு எக்ஸிட் வேய்ஸ்ஸ செக் பண்ணுங்க. சஸ்பெக்ட் பண்ற மாதிரி ஆளுங்க நடமாட்டம் இருந்ததானும் விசாரிங்க” என்று கடகடவென உத்தரவிட்டார்.

“ஓகே மேடம். பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் எதுவும் அரேஞ் பண்ணவா?” என்று செந்தில் கேட்டான்.

“டிமான்ட் பண்றங்களானு பார்த்துட்டு… இது, நெகோஷியேஷன் எக்ஸ்பர்ட் பத்தி யோசிக்கணும்” என்றவர், “எனி கேஸுவாலிட்டிஸ்?” என்று கேட்டார்.

“இதுவரைக்கும் எதுவும் இல்லை மேடம்”

“ம்ம்ம், மாட்டியிருக்கிற சிவிலியன்ஸ் லிஸ்ட் எடுங்க செந்தில். அவங்கள்ல யாரோடாவது காண்டாக்ட் பண்ணவும் ட்ரை பண்ணுங்க”

“ஓகே மேடம்”

“பில்டிங் மேனேஜர், ஹவ்ஸ்கீப்பிங், செக்யூரிட்டி ஆட்களை வரச் சொல்லுங்க. அவங்ககிட்ட விசாரிக்கணும்”

“ஓகே மேடம்” என்றவன், “மூணு பேர்ல ஒருத்தர் கன் வச்சிருந்ததா பப்ளிக் சொன்னாங்க. அதைப் பத்தி விசாரிக்க வேண்டாமா?” என்று கேட்டான்.

“கன் சத்தம் கேட்டதா யாராச்சும் சொன்னாங்களா?”

“இல்லை மேடம்”

“அப்போ இந்த ஆங்கிள்ல இன்வெஸ்டிகேஷனை எடுத்திட்டுப் போறது சரியா இருக்குமானு தெரியலை. ம்ம், கன் வச்சிக்கிட்டு கட்டையால எல்லாத்தையும் உடைக்க வேண்டிய அவசியம் இல்லைல!?”

“உள்ள இருந்தவங்களை பயமுறுத்தனுமே மேடம்!”

“ஷூட் பண்ணாலே பப்ளிக் பேனிக் ஆகியிருப்பாங்களே?” என்று கேட்டாலும், ஒருபக்கம் அந்த விசாரணையும் நடக்கட்டும் என்றிருந்தார். அவர் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்த காவலர்கள் கலைந்து சென்றனர்.

வழக்கத்திற்கு மாறான அமைதியில் இருந்த அந்தச் சாலை! ஆட்களோ, சிறு வியாபாரிகளோ இல்லாத வணிக வளாக முன்பக்கம்! வணிக வளாகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடத்தின் பக்கவாட்டுப் பகுதி!

இப்படி இருந்த சூழலைக் கூர்ந்த கவனித்த பெனசீர், கட்டிடத்தின் ஒவ்வொரு தளமாகத் தனது பார்வையை உயர்த்திச் சென்று நான்காவது தளத்தில் வந்து பார்வையை நிலை நிறுத்தினர்!!

**********************************

மனிதநேயம் பேசும் மஹிமா – கார்த்திகேயன் – ???

அந்த மூவரில் பெரியவர் மற்றும் அந்தப் பெண்ணின் பார்வையில் மஹிமா பேச்சின் மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் அந்த மனிதரின் பார்வையில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பினை அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் போயிருந்தது!

பெரியவரும் அந்தப் பெண்ணும் சலிப்புடன் தங்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டனர். ஆனால் அந்த மனிதரோ வேகமாக நடந்து வந்து மஹிமா முன் அமர்ந்தார். திடுமென அவரது செயலால் அவள் ஒருநொடி பயந்தாள்!

மறுநொடி, அவர் கண்களில் தேங்கிய கண்ணீரில்… அதில் தெரிந்த வலியில், எதிர்பார்ப்பில்… அவள் மொத்தமாக குழம்பினாள்!

அவரிடம் மஹிமா ஏதோ கேட்க வரும் பொழுதே, “அல்போன்ஸ் என்ன பண்ற? எந்திரிச்சி வா” என பெரியவர் அழுத்தமாகச் சொன்ன பிறகும், அவர் எழுந்து கொள்ளாமல் அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

இதன்மூலம் மஹிமாவிற்கு ஒன்று தெரியவந்தது. அது, அந்த மனிதர் பெயர்! ஆம், அவர் பெயர் அல்போன்ஸ்!!

அவர் சொன்னதைக் கேட்காமல் அல்போன்ஸ் இருந்ததால், “பைரவி இப்படி நிக்காத. வந்து இவனைக் கூட்டிட்டுப் போ” என பெரியவர் அப்பெண்ணிடம் சொல்லவும், அவள் வந்து அல்போன்ஸின் அருகே அமர்ந்து, “அங்கிள் வாங்க” என்று அவரை எழுப்ப பார்த்தாள்.

அந்த நேரத்தில்தான் மஹிமாவிற்கு இன்னொன்று தெரிய வந்தது. அது, அந்த பெண்ணின் பெயர்! ஆம், அவள் பெயர் பைரவி!!

அருகே அமர்ந்திருந்த பைரவியிடம், “இந்தப் பொண்ணு சொல்லுதுல… அந்தப் பையன் உதவுவான்னு. நம்மளைப் பத்திச் சொல்லலாமே?” என ஏக்கத்தைத் தேக்கி வைத்த குரலில் அல்போன்ஸ் கேட்க, தொண்டைக் குழி அடைத்ததில் பைரவியால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.

பைரவி பேசாமல் இருக்கவும், “நிஜமா அந்தப் பையன் உதவி செய்யவானா?” என்று மஹிமாவைப் பார்த்து அல்போன்ஸ் கேட்க, “ம், ஹெல்ப் பண்ணுவான்” என அவரது கலங்கிய கண்களைப் பார்த்து அவள் சொல்ல, அவர் கண்களில் ஒரு சிறு நம்பிக்கைத் தெரிந்தது.

என்னமோ பைரவிக்கு இதெல்லாம் சரியாகப்படவில்லை. எனவே, “அங்கிள் எதுக்கு வந்திட்டு என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க? யாரையும் ஈஸியா நம்ப வேண்டாம். வாங்க” என்று அவர் கைப்பிடித்து எழுப்பினாள்.

அந்த நேரத்தில் மஹிமா, “அவர் பாஸிட்டிவா இருக்கிறப்ப, நெகட்டிவா பேச வேண்டாமே? ப்ராப்ளம் என்னென்னு சொன்னீங்கனா, கண்டிப்பா ஹெல்ப் கிடைக்கும்” என்று படபடவென உறுதியான குரலில் சொன்னாள்.

எதற்காக மஹிமாவின் பேச்சினில் இத்தனை வேகம்?!

உள்ளே மாட்டியிருப்பவர்களுக்கு உதவவா? அல்போன்ஸ் கண்ணில் தெரியும் வலிக்காகவா… சிறு நம்பிக்கைக்காகவா? பைரவியின் நெற்றிக் காயத்தைக் கண்டா? எதற்கென்று தெரியவில்லை!

ஆனால் அவள் பேச்சில் உறுதி இருந்தது!

அவளது பேச்சைக் கேட்டதும், பட்டென அல்போன்ஸின் கையை விட்டுவிட்டு மீண்டும் அமர்ந்த பைரவி, “அங்கிள் பாஸிட்டிவா இருக்கிறார்-ன்னு உனக்குத் தெரியுமா? நாங்க உன்னை டிஸ்டர்ப் பண்ணோமா? இல்லை-ல? அதேமாதிரி நீயும் எங்களை டிஸ்டர்ப் பண்ணாத” என அழுத்தமாக சொல்லி எழுந்தாள்.

உடனே மஹிமா நிமிர்ந்து பார்த்து, “இப்படிக் கால்-ல காயம்பட்டு, இங்க நான் உட்காரந்திருக்கிறதுக்கு காரணமே நீங்கதான்! ’என்ன டிஸ்டர்ப் பண்ணோம்’ -னு கேட்கிற?” என்று கேட்டதும் பைரவியின் முகம் ஒருமாதிரி ஆயிற்று.

அதைக் கண்ட பெரியவர், “இங்க பாரு…” என்று மஹிமாவிடம் ஏதோ சொல்ல வருகையில், சட்டென பைரவி, ‘இரக்கத்திற்கு இடம் கொடுக்காதே’ என தயார் செய்த மனதை ஞாபகப்படுத்திக் கொண்டு, “தாத்தா இருங்க” என்று சொல்லி மீண்டும் அமர்ந்தாள்.

மஹிமாவின் கண்களைச் சந்தித்து, “ரொம்பப் பேசாத. சரியான கோபத்தில இருக்கேன். நீ இப்படிப் பேசிக்கிட்டு இருந்தா, என்ன செய்வேன்னே சொல்ல முடியாது” என அச்சுறுத்தும் குரலில் பைரவி சொன்னாலும், மஹிமா பயந்த மாதிரியே தெரியவில்லை.  

ஆம்! இப்போது மஹிமாவிற்கு அவர்கள் மீது இருந்த பயம் குறைந்திருந்தது! ஏனென்றால் அவர்கள் மூவரும் தன்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஓர் வலுவான எண்ணம் வந்திருந்தது!!

பைரவி பேச்சிற்கு மஹிமா அமைதியாக இருந்தாள். ஆனால் பெரியவர்தான், “என்ன பைரவி இப்படிப் பேசற?” என்று ஒரு அதட்டலான குரலில் கண்டித்தும், “இவளைப் பேசாம இருக்கச் சொல்லுங்க தாத்தா” என கோபமாகச் சொல்லி எழுந்து கொண்டாள்.

“சரி சொல்றேன். நீ இப்படிப் பேசாத” என்றவர், மஹிமாவைப் பார்த்து, “இங்க பாருமா, நீ எந்த உதவியும் பண்ண வேண்டாம். பேசாம இருந்தாவே போதும்” என சற்றே கடிந்து சொன்னார்.

பெரியவர் அப்படிச் சொன்ன பிறகும், “இல்ல நான் ஹெல்ப்…” என்று மஹிமா சொல்லிக் கொண்டிருக்கையில், “எதும் பண்ண வேண்டாம். தாத்தா சொல்ற மாதிரி நீ பேசாம இரு” என்று பைரவி சொல்லுகையிலே, அவள் கையிலிருந்த அலைபேசியை பறித்த மஹிமா, “கார்த்திக்கு கால் பண்றேன்” என்றாள்.

சட்டென மீண்டும் அமர்ந்த பைரவி, “என்ன ஸ்மார்ட் மூவா?” என்று கேட்கவும், ‘என்ன சொல்ல வருகிறாள்?’ என்று புரியாமல் மஹிமா பார்த்தாள்.

“என்ன புரியலையா? எங்களுக்கு ஹெல்ப் பண்றதா சொல்லிட்டு… நீ உனக்கு ஹெல்ப் கேட்கப் போறியா?” என முகத்தைக் கடுமையாக வைத்தபடி கேட்டு, அவள் கையிலிருந்த அலைபேசியை பைரவி பிடுங்க, “இந்தக் காயம் உனக்கு எப்படி வந்துச்சு?” என்று மஹிமா சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்.

அடுத்த நொடி பைரவி கண்கள் பணித்தன. அவள் முகம் வெகுவாக கலங்கிப் போனது! உடனே பெரியவர் அவளருகில் வந்து ஆறுதலாக நின்று கொண்டு, தேற்றவென அவள் தோளில் தட்டிக் கொடுத்தார்.

அவளது கலக்கத்தைப் பார்த்த மஹிமா, “தீடிர்னு என்னாச்சு?” என்று கேட்டுப் பார்த்தாள். அதற்கு பைரவி அமைதியாக இருக்கவும், “என்னை நம்பி ஃபோன் கொடு. உங்களுகுத்தான் ஹெல்ப் கேட்பேன். வேணும்னா ஃபோன ஸ்பீக்கர்ல போட்டுப் பேசறேன்” என்று மஹிமா சொல்லிப் பார்த்தாலும், ஏதும் பேசாமல் பைரவி எழுந்துவிட்டாள்.

‘இவர்களது திட்டம்தான் என்ன? இவர்களுக்கு என்ன பிரச்சனை? என மஹிமா ஒன்றும் புரியாமல் இருக்க, ‘நினைத்தது நடக்குமா… நடக்காதா?’ என பைரவி புண்பட்டு நிற்க, அக்கணம் இரண்டு அலைபேசிகளுக்கு அழைப்பு வந்தது!

ஒன்று மஹிமா அலைபேசி! இன்னொன்று பைரவி அலைபேசி!

‘சமாதானப்படுத்தவென கார்த்தி அழைக்கிறானோ?’ என மஹிமாவும், இந்த அழைப்பிற்காகத்தான் காத்திருந்தது போல் பைரவியும் இருந்தனர்!!

**********************************