Neer Parukum Thagangal 7.1

NeerPArukum 1-43ba35b1

Neer Parukum Thagangal 7.1


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 7.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்

செல்வி கேட்டதும், தன்னைப் பற்றிப் பேச நினைத்த சரவணன், “நான் என்ன வேலை பார்க்கிறேன்னு தெரியுமா?” என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்க, “ம், மெக்கானிக் ஷாப் வச்சிருக்கீங்கனு அக்கா சொன்னாங்க” என்றாள்.

“அது இப்ப! அப்போ பைக் மெக்கானிக்!! ஒருநாள் ஓனர் கூப்பிட்டு, இடத்தை சொல்லி, ‘ஸ்கூட்டி ஒன்னு ஸ்டார்ட் ஆகாம நிக்குது. என்னென்னு பார்த்திட்டு வா’-ன்னு சொன்னாரு. சரின்னு கிளம்பிப் போனேன்.

மணி ஒன்னோ ரெண்டோ இருக்கும். ஸ்கூட்டியை ரோட்டோரத்தில நிறுத்தி வச்சி ரிப்பேர் பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்தப் பொண்ணு ரோட் பக்கமா நின்னு ஃபோன் பேசிக்கிட்டு இருந்தது” என்று இடைநிறுத்தினான்.

மகன் உறங்க முட்டியை ஆட்டியபடியே கேட்டவளிடம், “ஸ்டார்ட் ஆகுதான்னு செக் பண்றப்போ, பைக் கண்ணாடில அந்தப் பொண்ண பார்த்துக்கிட்டே ஒரு பையன் வர்றது தெரிஞ்சது. கைல சின்ன பாட்டில் வச்சிருந்தான். என்னமோ அவன் பார்வை எனக்கு சரியா படலை” என்றான்.

அடுத்து அவன் பேசுவதற்குள், அதுவரை பேசாமல் கேட்டிருந்தவள், “உடனே அந்தப் பொண்ண அலெர்ட் பண்ணியிருக்க வேண்டியதுதான?” என்றாள், ‘என்ன விபரீதம்?’ என புரிந்து!

“அதாங்க செஞ்சேன்! அந்த நேரத்தில தோணுனது, அந்தப் பொண்ண ‘இந்தப் பக்கம் வந்து உட்கார்ந்து முகத்தை மூடிக்கோ’-ன்னு சொல்லிட்டு, அவனைத் தடுக்க முடியுமானு பார்த்தேன்!

ஆனா அவன் வந்த வேகத்துக்கு முடியாதுனு தெரிஞ்சதும், நானும் முகத்தை மறைச்சி குனியறதுக்குள்ள பாட்டில் வீசிட்டான்… அதான் இப்படி!” என கழுத்து, தாடையைக் காட்டி நடந்த விபரீதத்தைச் சொன்னான்.

ஒருகணம் அதிர்ச்சியில் இருந்துவிட்டு, “அந்தப் பொண்ண காப்பாத்த போய், உங்களுக்கு இப்படி ஆயிடுச்சா?” என்று செல்வி கேட்டதற்கு, “ஒரு சொடுக்குப் போடற நேரத்தில எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு!” என்றான்.

“அந்தப் பொண்ணு உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா?”

“இல்லையே! ஏன் கேட்கிறீங்க?”

“இப்படி ஒரு உதவி செஞ்சிருக்கீங்க. அதான் கேட்டேன்!” என்றவள், “அவன் ஏன் இப்படிப் பண்ணனுமா?” என்று கேட்டாள்.

“படிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணனும்னு கேட்டுருக்கான்! கேட்டதுமே   விருப்பமில்லைனு இந்தப் பொண்ணு சொல்லிடுச்சாம். அதோட அவன் அதை விட்ருந்தா பிரச்சனை வந்திருக்காது. ஆனா… அவன் விடாம திரும்பத் திரும்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு கட்டாயப்படுத்தியிருக்கான்!

ஒருகட்டத்தில அவன சமாளிக்க முடியாம இந்தப் பொண்ணு வீட்ல சொல்லி, அவங்க அவன் படிக்கிற இடத்தில சொல்லி… அங்கே அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சிருக்காங்க.  எல்லார்கிட்டயும் சொல்லி இந்தப் பொண்ணு அவனை அசிங்கப்படுத்திடுச்சாம். அதுக்காக இப்படி பண்ணியிருக்கான்” என்றான்.

மேலும், “யாரை, எப்போ கல்யாணம் பண்ணனும்-னு முடிவெடிக்கிற உரிமை, அந்தப் பொண்ணுக்கு உண்டுதான?” என்று கேள்வி கேட்டவன், “உண்டுதான். பிடிக்கலைனு சொன்னா விட்டுடனுங்க” என்று பதிலும் சொன்னான்.

லேசாக அசைந்த மகனை தட்டிக் கொடுத்தவள், “வேண்டாம்னு சொல்றதை ஏந்தான் ஏத்துக்க முடியலையோ?” என்றாள் பொதுவாக.

“பிள்ளைங்க என்ன கேட்டாலும், ‘இல்லைனு சொல்லாம… மறுக்காம’ வாங்கிக் கொடுத்துதான் அவங்கமேல இருக்கிற பாசத்தைக் காட்ட முடியும்னு பெத்தவங்க நினைக்கிறது கூட இருக்கலாம்”

“என்ன இப்படிச் சொல்றீங்க? பெத்தவங்கதான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்றீங்களா? ஒத்துக்க முடியலைங்க!” என்றாள் அதிருப்தியாக!

“ஏங்க, அப்படிச் சொல்லலைங்க! சொல்லவும் மாட்டேன்!! ஆனா அவங்க சில விஷயத்துக்கு இல்லைன்னு சொன்னாதான, சமுதாயத்தில இந்த மாதிரி ஒரு பதில் கிடைக்கிறப்போ… அதை ஏத்துக்கிற மனப்பக்குவம் வரும். வீட்டைத் தாண்டியும் வாழ்க்கை இருக்குல!? அதுக்காக சொல்றேன்” என்றான்.

பல ‘இல்லை’களும், சில ‘ஆமாம்’களும் சேர்ந்ததுதானே வாழ்க்கை! ‘ஆமாம்’ என்பதற்கு ஆனந்தம் கொள்வது சரிதான்! ஆனால், ‘இல்லை’ என்பதற்காக இல்லாமல் போக நினைப்பதும்… இல்லாமல் ஆக்க நினைப்பதும்… என்ன மாதிரி மனநிலை? என்ற கேள்வி செல்விக்குள் எழுந்தது!

உடனே சரியான மனநிலை இல்லை என்ற பதிலும் வந்தது!!

கூடவே வெறுப்பில்லாமல் மறுப்பை ஏற்கின்ற மனப்பக்குவத்துடன் மகனை வளர்க்க வேண்டுமென்று நினைத்தபடி, “இவ்ளோ நடந்திருக்கிறப்ப, அந்தப் பொண்ணும் கவனமா இருந்திருக்கலாம்ல?” என்று செல்வி கேட்டாள்.

“அதனாலதான் தெரியாத பாதையில போகாம, என்னைக்கும் போற வழியில போயிருக்காங்க. பழகின பாதையே ஆபத்தா மாறுதுனா… அந்தப் பொண்ண தப்பு சொல்ல கூடாதுங்க!!” என்றான்.

அதற்கு எதுவும் சொல்லாமல், “ரொம்ப வலிச்சதா?” என்று கேட்ட கேள்வியில், பேச்சானது ‘சரவணனைப் பற்றி’ என்றாக மாறியது.

‘என்ன கேள்வி?’ என்று புரியாமல் கண்சுருக்கினான். பின் தன்னைப் பற்றிக் கேட்கிறாளென புரியவும், “வலியா? அது வேதனைங்க. தாங்கவே முடியலை. நாலு ஆப்ரேஷன் வேற நடந்தது. ஒரு வருஷம் வலி மட்டும்தான் வாழ்க்கை!” என்றான் வலியைக் கடந்து வந்த சிரிப்போடு!

“கஷ்டமா இருந்திருக்கும்ல?”

“ம்ம்ம், வெளிய வரவே பயந்தேன். பழகின ஆளுங்களைப் பார்க்க… பழகின இடத்துக்குப் போக… ஒரு மாதிரி இருந்தது” என்றான், அமிலத் தாக்குதலுக்குப் பின்னரான நிலை குலைந்த அன்றாட வாழ்க்கையைப் பற்றி!

“உங்க வீட்ல எதுவுமே சொல்லலையா?” என்று கேள்வி கேட்டவளிடம், “உங்க அக்கா என்னை பத்தி எதுவும் சொல்லலையா?” என்றான் கேள்வியாக!

“சொன்னாங்களே. உங்க பாட்டிதான் உங்களை வளர்த்தாங்க. அவங்க இப்ப இல்லை. உங்க சித்தி, சித்தப்பாகூட நீங்க இருக்கிறீங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு-ன்னு அக்கா சொன்னாங்க”

“சரிதான்! இந்த சித்தி, சித்தப்பா பொண்ணுதான்… அந்தப் பொண்ணு!”

“என்ன சொல்றீங்க? இவங்க பொண்ணதான் காப்பாத்தினீங்களா? அப்போ குட்டிமானு சொன்னீங்கள… அவங்கதான் அந்தப் பொண்ணா?

“ம், குட்டிமாதான் அது! அவ பேரு நசியா. வீட்ல குட்டிமானு கூப்பிடுவோம்”

“தெரிஞ்சவங்க இல்லைனும் சொன்னீங்களே?”

“ஆமா, அப்போ தெரியாதுங்க. இப்படி நடந்ததும் நசியா அப்பாதான் சேர்த்து வச்ச பணம், இருந்த கொஞ்ச நகையை வித்து ஆப்ரேஷனுக்கான செலவு, ஹாஸ்பிட்டல் செலவு எல்லாம் பார்த்துக்கிட்டாரு.

அதுக்கப்புறமும் அவர்தான் பார்த்தாரு. நான் ஒரு வருஷம்னு சொன்னேனே, அப்போ எந்த வேலைக்கும் போக முடியலைங்க. பாட்டியும் இல்லை. இவங்க மூணு பேரும்தான் என்னை கவனிச்சிக்கிட்டாங்க! அதோட கோர்ட் கேஸ்-னு அலைஞ்சி, அந்தப் பையனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தாங்க!

இதுல என்ன இருக்குன்னு கேட்கலாம்! ஆனா நன்றினு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டுப் போகாம, கூடவே இருந்து என்னைப் பார்த்துக்கிட்டது… சேர்த்து வச்சதெல்லாம் எனக்காக செலவழிச்சது… எனக்கு பெரிசாதான் தெரிஞ்சது.

குட்டிமா ‘அண்ணே’-ன்னு பேச ஆரம்பிச்சா. இவங்களும் மகனா பார்த்தாங்க. அப்புறம் நானுமே உரிமையா சித்தி, சித்தப்பானு கூப்பிட்டேன். இப்ப நாங்க ஒரே குடும்பம்” என்றான் நிறைவான குரலில் புதிய பந்தம் பூத்த நிகழ்வை!

‘இப்படியும் சில மனிதர்கள்’ என்ற எண்ணத்தோடு, “அடுத்து என்னாச்சு?” என மகனின் முன்னெற்றி முடிகளை வருடியபடி கேட்டாள்.

“ஒன்னுமே இல்லாம வாழ்க்கையை ஆரம்பிச்சி, இப்ப ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு. இதோ… இந்த இடத்தை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்தறோம். குட்டிமா மேற்படிப்பு படிக்கிறா. ஆனா இந்த நிலைமைக்கு வர்றதுக்கு, நாங்க நிறைய உழைச்சோம்” என்றான் மூச்சே விடாமல் முன்னேற்றம் பற்றி!

சிறு முறுவலோடு அதைக் கேட்டுக் கொண்டாள்!

மேலும் அவனே, “இதுதான் நான்னு ஏத்துக்கிட்டேன். மத்தவங்களைப் பத்திச் சொல்லணும்னா, சிலர் சகஜமா இருப்பாங்க. சிலர் ஒருமாதிரி பார்ப்பாங்க. அப்போ மட்டும் கஷ்டமா இருக்கும்” என்றான் ஒரு காரணத்தோடு!

அடுத்த நொடியே, “உங்களுக்குப் பார்க்கிறதுக்கு எப்படி இருக்கு?” என அந்த ‘காரணத்தின்’ கேள்வியைக் கேட்டான்!

காரணம், காரியம் என எதற்குள்ளும் போகாமல், “நான் உங்களைப் பார்த்துப் பேசறப்போ உங்களுக்கு எதும் கஷ்டமா இருக்கா?” என்றதற்கு, ‘இல்லை’ என அவன் தலையசைக்க, “அப்ப இந்தக் கேள்வி எதுக்கு?” என்றாள் கேள்வியாக!

அவள் கூறிய பதிலில் மனம் கொஞ்சம் இதமாக உணர்ந்ததும், “சரிங்க, இப்ப உங்களைப் பத்திச் சொல்லுங்க?” என்றான், இந்தச் சந்திப்பு… பேசி ஒரு முடிவு எடுப்பது என்பதை மனதில் வைத்துக் கொண்டு!

அவளிடம் ஓர் பேரமைதி!

அவளது அதிகபட்ச அமைதியைப் பார்த்து, அதற்கு மதிப்பு தர நினைத்தவன், “ஏங்க, சொல்ல விருப்பமில்லை-னா விட்டுருங்க. வேண்டாம்” என்றதும், “ச்சே, ச்சே அப்படி ஒன்னும் இல்லைங்க. சொல்றதுல என்ன இருக்கு?” என்று செல்வி முடிவடைந்த வாழக்கைப் பற்றிப் பேச அரம்பித்தாள்!

பேச ஆரம்பித்தாள்! ஆனால் இந்தச் சந்திப்பு… பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதிற்குள் எல்லாம் போகாமல்!!

**********************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

அந்த பேரமைதி தொடரும் போதே, இவள் பேச்சைத் தொடர்வாளா? அப்படித் தொடர்ந்தால், எப்படி எதிர்வினை செய்ய வேண்டும்? தான் பேச வேண்டுமா? என்ற கேள்விகளுடனே சேது பேசிக் கொண்டிருந்தான்.

கண்மணிக்கு, தன்னை சுற்றிப் பேரமைதி நிலவுவதை கேட்க முடிந்தது. அதே போல் தனக்குள் பேரிரைச்சலின் சத்தம் கேட்பதை உணர முடிந்தது.

ஏதோ ஒரு நொடியில் இவ்வளவு நேரமும் தான் பதிலுக்குப் பதில் பேசிவிட்டு, இப்போது பேசாதிருப்பது சரியல்ல என்று சேதுவிற்குத் தோன்றியது. கூடவே, தன் பேச்சு அவளைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளிவிட கூடாதெனவும் தோன்றியது!

இந்தக் காரணத்தால், “உன் பேரென்ன?” என்று எளிதான கேள்வியிலிருந்தே பேச்சை சேது ஆரம்பித்தான்.

“கண்மணி” என்று பதிலளித்தாள்.

“ஓ!” என்று புருவத்தை உயர்த்தியவன், “என்ன படிச்சிருக்கிற?” என்றான்.

“பி.ஏ எகனாமிக்ஸ்”

“ஓகே ஓகே” என தலையாட்டியவன், “ஜாப் போறியா?” என்றான்.

“ம்ம்ம்”

“குட்” என்று மெச்சியவன், “ம்ம்ம், என்ன வேலை பார்க்கிற?” என்றான்.

“போதும். பேசணும்னு எதையாவது பேசாத” என்று அவன் முகத்திற்கு நேராக சொன்னதும், அவளைப் பார்த்தபடியே சேது அமைதியாக இருந்தான். ஆழ்ந்த மூச்சொன்று எடுத்துக் கொண்டு முட்டியின் குறுக்கே கைகளைக் கட்டியபடி, அவளாகவே பேசத் தயாரானாள்.

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் அம்மா, அப்பா, நான்-னு அழகான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்” என்று துடிப்பே இல்லாத குரலில் தொடங்கியவள், “ம்ப்ச், ம்ப்ச் அது அப்புறமா சொல்றேன்” என்று தொடங்கிய வேகத்திலே நிறுத்திவிட்டாள்.

பின், “அம்மா, அப்பா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க. ம், பேமிலி சப்போர்ட் ஒன்னும் பெருசா கிடையாது. அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு! அதுவுமே பத்து வருஷத்துக்கு அப்புறம் பொறந்த பொண்ணு!!” என துள்ளிக் குதிக்கும் குரலில் பேச்சை மாற்றினாள்.

“பயங்கிற செல்லம் போல?” என, ‘பயங்கிற’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கேட்டான்.

“ஆமா! கையில வச்சி தாங்குவாங்க. நான் கொஞ்சமா கவலைப்படுறேன்-னு தெரிஞ்சாலோ, சின்ன அடிபட்டாலோ அவ்வளவுதான்! ‘என்னாச்சு? என்னடா? என்னம்மா?’-னு கேட்டுப் பதறிடுவாங்க.

அதுலயும் அப்பாவைப் பத்தி சொல்லவே வேண்டாம். அப்படிப் பார்த்துப்பாரு.  எனக்கு ஏதாவதுனா… அவரால தாங்கிக்க முடியாது” என்றாள், அதுவரைக்கும் பேசிய பேச்சுகளில் இல்லாத முகமலர்ச்சி, தந்தையைப் பற்றிப் பேசும் போது கண்மணி முகமெங்கும் வந்திருந்தது.

அதைக் கண்டவன், “அப்பா பொண்ணா நீ?” என்று கேட்டதும், “அப்படியில்ல” என உடனே மறுத்தவள், “ம். ம்ம்… கைன்டு ஆஃப்” என்று ஒத்துக் கொண்டதும், ‘மேலே சொல்’ என்பது போல் பார்த்தான்.

“எங்களது மிடில் கிளாஸ் பேமிலிதான். அப்பா பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தாரு. வாடகை, வீட்டுச் செலவு, படிப்புச் செலவு இதுக்கெல்லாம் அப்பா சம்பாத்தியமே கரெக்ட்டா இருக்கும்.

ஆனா எனக்கு நிறைய செய்யணும்னு நினைச்சாங்க. ஸோ அம்மா வீட்லயே ஊறுகாய் போட்டுத் தர்றது, மசாலா பவுடர் ரெடி பண்றதுன்னு சின்ன சின்ன வேலை செய்வாங்க. அப்பாவும் ஹெல்ப் பண்ணுவாரு” என மிகச் சுருக்கமாக குடும்பத்தைப் பற்றிச் சொல்லி நிறுத்தினாள்.

அடுத்து தொடரும்போது, “ஆக்சுவலி நான் யூஜி முடிச்சதும், ஜாப் போறேன்னு சொன்னேன். பட் அப்பா ஒத்துக்கவே இல்லை. பீஜி பண்ணனும்னு கண்டிப்பா சொல்லிட்டாரு” என்று பேச்சை எங்கோ இருந்து எங்கோ மாற்றினாள்.

திடுமென, “எனக்கு நிறைய நிறைய ஆசை உண்டு” என்று இருகைகளையும் விரித்துச் சொல்லி, “பெரிய வேலைக்குப் போகணும். அம்மா, அப்பாக்கு வீடு வாங்கிக் கொடுக்கணும். அம்மாக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தரணும்.

அப்புறம் அப்பா, அம்மா வாழற வாழ்க்கை பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகா இருக்கும்! அதைப் பார்த்திட்டு நானும் லவ் மேரேஜ் பண்ணிக்கனும்… இப்படி இன்னும் நிறைய ஆசை உண்டு!” என்றாள் ரசனையுடன்!

அதுவரையும் குறுக்கிடாமல் இருந்த சேது, “சின்ன சின்ன ஆசை மாதிரியா?” என கேட்க, “ம்கூம் இல்ல. இது கொஞ்சம் பெரிய பெரிய ஆசை” என்றாள்.

அப்படிச் சொன்ன அடுத்த நொடி, “ஆசை எப்ப நிறைவேறும்னு போய்க்கிட்டு இருக்கிறப்போ, என் எல்லா ஆசையையும் குழி தோண்டி புதைக்கிற மாதிரி அந்த இன்சிடென்ட் நடந்தது” என்றாள்.

உடனே, “ச்சே, ச்ச்சே… நான் எதுக்கு இப்படிச் சொல்லணும்? என் ஆசை, கனவு எல்லாம் நிறைவேறும். அந்த இன்சிடென்ட் நடந்தது” என பேச்சைத் திருத்திக் கொண்டாள்.

இதைச் சொல்லிவிட்டு கண்மணி அமைதியாகிவிட்டாள். அவளது உதடுகள் புன்னகை சாயம் பூசியிருந்தன. குரல் நிராசையின் சாயலில் இருந்தது. இந்த நேரத்தில் ‘என்ன? எப்படி?’ என கேட்டுக் கொண்டா இருக்க முடியும். அவளே சொல்லட்டும் என சேது காத்திருந்தான்.

புன்னகை சுத்தமாக மறைய, “ம்ம்ம், என் அம்மா, அப்பாக்கு ஃபினான்சியலா கொஞ்சமாவது சப்போர்ட் பண்ணலாம்னு, பீஜி படிச்சிக்கிட்டே பார்ட் டைம் ஜாப் போனேன்” என்று மிதமான குரலில் ஆரம்பித்தாள்.

பின் குறைந்த குரலில், “ஜாப் முடிச்சிட்டு திரும்பி வர்றப்பதான்… லேட் நைட்-லாம் கிடையாது… எப்பவும் வர்ற பாதைதான்… ஃபோர்ட்டி ஃபைவ் மினிட்ஸ்ல வீட்டுக்கு ரீச்சாயிடலாம்னுதான்… போய்க்கிட்டு இருந்தேன்… ஆனா…” என்று நிறுத்தும் போது, அவள் குரல் காணாமல் போயிருந்தது.

தரையில் விரலால் எதையோ கிறுக்கியபடி, “ம், இதுக்கு மேல என்ன சொல்ல? உனக்குப் புரிஞ்சிருக்கும்” என்று கூறிவிட்டு, நுனிநாவால் பற்களை அழுத்தி எழுந்த அழுகையை அடக்கினாள்.

வெளியே அவள் பேச்சு! உள்ளே வந்ததும் அவளது பயம்! ஏழு மணிக்குள் வீடு செல்ல வேண்டும் என்றது! பெப்பர் ஸ்பிரே அடித்தது! இவையெல்லாம் அவள் கூடுதல் பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறாள் என்று சொன்னாலுமே, அந்தச் சம்பவத்தின் பாதிப்பு உணர்விலே உழல்கிறாள் என சேதுவிற்குப் புரிந்தது.

அப்போது கீழே தூக்கி எறிந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, “ம்ம்ம்” என்று சேது கொடுத்தான்.

சட்டென்று எதுவும் செய்ய இயலாத இறுக்கமான நிலையில் இருந்தாள். சில நொடிகளில் அதைச் சமாளித்துக் கொண்டு, தண்ணீரை வாங்கினாள்.

அதன்பின் சேது எழுந்துவிட்டான். மீண்டும் அட்டைப் பெட்டி ஒன்றின் மேல் முட்டியிட்டு நின்று கொண்டு, ‘சமிக்கை கிடைக்கிறதா?’ என்று சாளரத்தின் பக்கம் அலைபேசியை வைத்துப் பார்த்தான்.

தண்ணீர் குடித்துக் கொண்டே, “சிக்னல் இருக்கா?” என்று கேட்டதற்கு, “ம்கூம்” என இறங்கியபடி சொன்னவன், “அடிக்கடி செக் பண்ணலாம். சிக்னல் வந்தா, உடனே வீட்டுக்குச் சொல்லிடு. பயப்படமா இருப்பாங்கள?” என்றான்.

தனக்காகப் பார்த்திருக்கிறானா? என்ற உணர்வோடு தலையசைத்தவளுக்கு, உள்ளே மாட்டியதும் இவனால் தனது பாதுகாப்பிற்கு பாதிப்பு வருமோ என்று பயந்தது தேவையற்றது என புரிந்தது.

தன்னொழுக்கம் தவறிடும் ஒரு சிலருக்கு மத்தியில், தவறிழைக்க தாரளமாக வாய்ப்பிருந்தும், இவன் ஒழுக்கம் பேணுபவன் என்று புரிந்ததும் அவன் மேல் ஒரு பெரிய நம்பிக்கை வந்தது!

சமீபமாக யார் மீதும் வராத… வர தயங்கிய, பயந்த நம்பிக்கை அது!!

அப்படி ஒரு நம்பிக்கை அவன் மீது வரவும், “சாரி” என்றாள் கண்மணி.

கலப்படம் ஏதுமில்லா கண்பார்வையுடன் அவளைப் பார்த்து, “எதுக்கு?” என்று கேட்க, ‘நீயே கண்டுபிடி’ என்பது போல் அவள் அமைதியாக பார்த்ததும், சற்று  யோசித்தவன், “வெளிய சொன்னதுக்கா?” என கணித்துக் கேட்டதற்கு, ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.

சேது சிரித்துக் கொண்டான்!!

************************************

Disclaimer : 

Opinion differs! I respect each other’s opinion!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!