NESOVA 11
NESOVA 11
ஸ்வேதாவின் வெட்கச் சிரிப்பில்…அவனது கோவம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க…தணிந்ந குரலில்… ஹரி… “இப்ப சொல்லு… ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன?” என்று கேட்க…
“என்னால வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது…” என்ற ஸ்வேதாவின் பதிலில்…
“வேறு யாரையும் என்றால்? புரியலையே…” என்று அவன்… அவளை மடக்க…
மௌனத்தையே பதிலாகக் கொடுத்தாள் ஸ்வேதா…
அதற்குள் இன்டீரியர் டெகரேசன் செய்யும் ஆட்கள் ஒவ்வொருவராக அங்கே வரத்தொடங்கவும்…
“அவங்க வேலையைப் பார்க்கட்டும்… வா நாம வெளியில் போய் பேசலாம்…” என்று ஹரி முன்னே செல்ல… அவனைப் பின் தொடர்ந்து வெளியே வந்தாள் ஸ்வேதா.
முதலில்… உள்ளே நுழைந்த பொழுது அவள் இருந்த மனநிலையில்… அந்த இடத்தின் சூழலை கவனிக்க வில்லை ஸ்வேதா…
இப்பொழுதுதான் அவளது கண்ணில் படுகிறது… அங்கே நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு… பலவண்ணங்களில் பூத்துக் குலுங்கிய அழகிய மலர் செடிகள்…
விழி விரித்து அவள் சுற்றிலும் பார்க்க… இயற்கை அழகு மொத்தமும் கொட்டிக்கிடக்க அக்கறையுடன்… நேர்த்தியாகப் பராமரிக்கப் பட்டிருந்தது அந்தத் தோட்டம்…
மா… பலா… மாதுளம்… சப்போட்டா… கொய்யா… நாவல் எனப் பலவகை மரங்கள் நன்கு வளர்ந்திருந்தன… விழி விரிய… அவற்றைப் பார்த்தவாறே நடந்தாள் ஸ்வேதா…
அவளது பார்வையில் இருந்த ரசனையைக் கண்ட ஹரி… “இது நான்கு ஏக்கர் நிலம் ஸ்வேதாமா!!! ஐந்து வருஷத்துக்கு முன்னே வாங்கிப் போட்டேன்…
இங்கே இந்தப் பண்ணையை பராமரிக்க ஆட்கள் போட்டிருக்கிறேன்” என்று பெருமைபொங்கச் சொன்னான் ஹரி.
“மிகவும் அழகாக இருக்கு…” என்றவள்… “வீட்டையும் மிகவும் அழகாய் கட்டியிருக்கீங்க…” என்க…
“உனக்கு பிடிச்சிருக்கா?” கேட்டான் ஹரி…
“ம்ம்… ரொம்ப… நான் முன்பு ஒரு முறை… உங்களிடம் சொல்லியிருக்கேன் இல்ல…” என்று தொடங்கியவள்…
மனதில் எதோ புரியவும்… கண்களில் நீர் கோர்க்க… “அதற்காகத்தானா ஹரி! இதெல்லாம்…” மூச்சு முட்டுவது போல் இருந்தது அவளுக்கு…
“ம்ம்… அன்று உன் பிறந்தநாள் அன்றைக்கு…” என்றுவிட்டு “இது புரிய உனக்கு இவ்வளவு வருஷம் ஆச்சு இல்ல… ஸ்வேதா? உண்மையிலேயே நீ டியூப் லைட்தான்” என்று அவன் சிரிக்க…
கோவமாக அவனை முறைக்க முயன்று… அதில் தோற்றுப்போய் சிரித்தேவிட்டாள் ஸ்வேதா…
அவளுடைய பிறந்தநாளன்று… ஹரி… ‘காணி நிலம் வேண்டும்‘ பாடலைப் பாடி முடித்தவுடன்… வர்ஷினி அங்கிருந்து செல்ல… பாலுவும் அவளைத் பின் தொடர்ந்து சென்றுவிடவும்…
ஹரியுடன் அங்கே தனிமையில் உட்கார்ந்திருந்த ஸ்வேதா… தனக்காகவே அவன் பாடிய அந்தப் பாடலிலும் அவனது குரல் தந்த இனிமையிலும்… மூழ்கிப்போயிருக்க…
“என்றைக்குமே என்னால் இந்த நாளை மறக்க முடியாது ஹரி!!! என்ன அருமையாய் பாடுறீங்க… இந்தப் பாட்டு எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியுமா ஹரி!!! உண்மையிலேயே… அப்படி ஒரு காட்சி என் கற்பனையில் வந்துவிடும்…”
“பாரதியார் தென்னை மரம் வேணும்னு தான் பாடினார்… எனக்குக் கொஞ்சம் ஆசை அதிகம்…”
“மா… பலா.. வாழைன்னு எல்லா மரமும் இருக்கணும்… அப்பத்தான் அங்கே குயில் மட்டுமில்லை… மைனா… கிளி… அணில்ணு எல்லாமே வரும்… கீச்கீச்னு சத்தம் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கும்…”
“கலர்புல்லாக… நல்ல வாசனையான பூச்செடிகள் நிறைய இருக்கணும்… அதைச் சுற்றி நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கணும்…”
‘இந்த பிளாட் வாழ்க்கையெல்லாம் கொஞ்சம் போர்தானே?” பேசிக்கொண்டே போனவளைப் பார்த்து…
“போதும்… விட்டுடு… அழுதுடுவேன்…” என வடிவேலு பாணியில் அவளைக் கிண்டல் செய்து சிரித்தான் ஹரி…
அந்த நிகழ்வு அவள் மனதில் தோன்றவும்… “அன்று அவள் கற்பனையில் சொன்னதை… இன்று செயலில் செய்துவிட்டானே…” மகிழ்ச்சியில்… அப்படியே அசையாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் ஸ்வேதா…
அவளது முகத்துக்கே நேரே சொடுக்கு போட்டு அவள் நினைவைக் கலைத்தவன்…
“இதுக்கே இவ்வளவு எமோஷனல் ஆனால் எப்படி? நீ பார்க்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கே” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டவும்… உண்மையிலேயே முறைத்தாள் ஸ்வேதா…
“ஏய்…நீயே… வேண்டுமானால் வந்து பாரேன்…” என்று அவளை அங்கே, பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தின் அருகில் அழைத்துச் சென்றான் ஹரி…
அந்த நீச்சல் குளத்தை ஒட்டி… தனது கிளைகள் முழுதும் மஞ்சள் வண்ண மலர்களை நிரப்பி வைத்து… அவளுக்காகவே காத்திருந்தது அந்த சரக் கொன்றை மரம்…
மெல்லியதாகக் காற்று வீசவும் அந்த மலர்கள் பறந்து வந்து… நீச்சல் குளத்தில் விழுந்து, அழகிய ஓவியங்களை வரைந்தது.
மகிழ்ச்சியில்… கண்களில் நீர் கோர்க்க… கால்கள் தள்ளாட… நிற்க முடியாமல்… அந்த மரத்தை பிடித்துக் கொண்டாள் ஸ்வேதா…
அருகில் வந்து… அவளுடைய தோளில் தட்டிய ஹரி… “நீ… சப்போர்டுக்கு என்னைக் கூட பிடிச்சுக்கலாம்… நான் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டேன்…” என்றவாறே அவளது கையை பிடித்து அழைத்துச் சென்று… அங்கே போடப்பட்டிருந்த கல்மேடையில் அவளை உட்காரச் சொன்னவன்… தானும் அருகில் உட்கார்ந்து கொண்டான்…
“இப்ப சொல்லு… இப்பொழுதாவது என்னை… உனக்குப் புரிகிறதா?” என்று கேட்டான் ஹரி…
ஸ்வேதா… ஏற்பட்டிருந்த பிரமிப்பிலிருந்து சற்றும் கலையாதவளாக… “ம்ம்…” என்க…
“உனக்கு என்னைப் பிடிக்கும் தானே?” கேட்டான் ஹரி..
“ம்ம்…”
“நீ என்னைக் காதலிக்கிறாயா… இல்லையா?”
“‘ம்ம்” என்றவளை விசித்திரமாகப் பார்த்தவன்…
“என்ன ம்… ம்…? இது ஒரு பதிலா?” என்று குரலை உயர்த்த…
“இல்ல… ம்ம்...” தவிப்புடன் பதில் சொல்ல முடியாது முகம் சிவக்க… முழுதும் நேசம் பொங்க தன் கண்களை… அவனது கண்களில் கலந்து… அவனை நோக்கினாள் ஸ்வேதா…
அதில் தடுமாறித்தான் போனான் ஹரி..
“ம்ம்… அப்படினா… ஆமாம் தானே?” அவன் கேட்கவும்…
ஸ்வேதா… ஆமாம் என்பதுபோல் தனது தலையை ஆட்ட..
“நன்னா… பூம்பூம் மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டு… பிறகு ஏண்டி என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திருக்க…?” என்று ஹரி கேட்கவும்…
குழம்பித்தான் போனாள் ஸ்வேதா…
“நான் எப்ப உங்களை வேண்டாம்னு சொன்னேன்?” என்று அவள் வியப்புடன் கேட்கவும்…
அதற்கு ஹரி “நீ நேற்று உன் அப்பாவிடம் அப்படிச் சொன்னதாக… உன் அருமை அண்ணன்தான் சொன்னான்…” என்கவும்…
“யாரு நந்து அண்ணாவா? அவன் எப்படி உங்களிடம் சொன்னான்?” என்று அவள் கேட்க…
அதில் கடுப்பான ஹரி… “சொன்னால் உனக்கு கோவம் வரும்… ஆனால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை” என்றுவிட்டு… கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு… “நீ உண்மையிலேயே குழல் விளக்குதான்” என்கவும்…
முதலில் அவன் சொன்னது புரியாமல் விழிக்க… பிறகு அதன் அர்த்தம் புரியவும்… “வேண்டாம் ஹரி! நீங்க இப்படியே பேசிக் கொண்டிருந்தால்… இந்த ஸ்விமிங் பூலிலேயே உங்களைத் தள்ளி விட்டுவிடுவேன்” என்று அவள் மிரட்டவும்…
“நீ செய்தாலும் செய்வமா”… என்றவன் கொஞ்சம் தீவிரமாக… “ஏய் லூசு… எனக்கு நந்தா க்ளோசா இல்ல பாலு க்ளோசா?” என்று கேட்கவும்…
அதற்கு… “என்….ன… நீங்க பாலு அண்ணாவோட கான்டாக்ட்ல தான் இருக்கீங்களா?” என்று கோபத்தின் உச்சிக்கேச் சென்றவள்…
“நீங்க எல்லாரும் திட்டம் போட்டுத் தான் என்னை ஏமாற்றி… முட்டாளாக ஆக்கினீர்களா?”
“இனிமேல் நான் இங்கே ஒரு செக்கண்ட் கூட இருக்க மாட்டேன்…” என்று அங்கிருந்து போக எத்தனித்தவளை… தடுத்து நிறுத்திய ஹரி… “ஏய்! முழுசா எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு போ… நானே உன்னை பத்திரமாகக் கொண்டுபோய் விடுகிறேன்” என்கவும்…
மறுபடியும், போய் அந்தக் கல்மேடையில்… உர்ர்!! என்று உட்கார்ந்து கொண்டாள் ஸ்வேதா… அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை…
அவளது நாடியில் விறல் பதித்து… முகத்தை நிமிர்த்தி… அவளது கண்களில் கலந்தவாறே… ” என்னைப் பார்த்தால்… உன்னை ஏமாற்றுபவன் போலத் தோன்றுகிறதா?” என்று கேட்ட ஹரியின் பாவனையில் கரைந்தவள்…
இல்லை என்பது போல் தலை ஆட்டி… “பிறகு ஏன் என்னை விட்டு இவ்வளவு நாள்… வெகுதூரம் போய்ட்டீங்க ஹரி” எனக் கண்ணீர் குரலில் ஸ்வேதா கேட்கவும்…
அதில் முகம் மாறியவன்… “அதற்குக் காரணம்… நீதான்… ஸ்வேதா…” என்ற ஹரியை வலியுடன் பார்த்து… “நானா?” என்க…
“ஆமாம்… நீயேதான்…” என்றுவிட்டு… “காதலுக்கு முதலில் தேவை நம்பிக்கை… அந்த நம்பிக்கை உனக்கு என்னிடம் கொஞ்சமும் ஏற்படவில்லை என என் மனதிற்குப் புரிந்ததால்தான்… உன்னை நீங்கிப் போனேன்…” என்றான்.
அதில் அதிர்ந்த ஸ்வேதா… “என்ன சொல்ல வரீங்க ஹரி! எனக்குப் புரியவில்லை” என்க…
“உனக்கு விபத்து நடந்த அன்று… ஜீ.ஹெச்சில் இருந்து… வேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது… அந்த மயக்க நிலையிலும்… நீ என்ன சொன்ன தெரியுமா?” என்றவன்… முன்பு நடந்தவற்றை சொல்லத் தொடங்கினான்…
ஆம்புலன்ஸில் அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது ஸ்வேதா எதோ முனகுவதுபோல் கேட்கவும்…
ஹரி, அவள் என்ன சொல்கிறாள் என்பதை அறிய… அவளுக்கு அருகில் குனிந்து அவளது முகத்தின் அருகே காதை கொண்டுசெல்ல… முதல் முறை அவள் சொன்னது ஒன்றுமே புரியவில்லை…
மறுபடி கூர்ந்து கவனிக்கவும்… “ஹரி எங்கே இருக்கீங்க?” என்று உளறலாக சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா… அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹரியின் உயிர் கரைந்து கண்களில் கண்ணீராக வழிந்தது…
“அந்த ஒரு நிலையிலும் தன்னை இவள் ஏன் தேடுகிறாள்?” என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அந்தக் கணம் தன்னிடம் அவள் கொண்ட காதலை முதல் முதலாக உணர்ந்தான் ஹரி…
அவள் குணமாகிக் கல்லூரிக்கு வரத்தொடங்கிய பிறகு… அவளது நடவடிக்கைகள் மாறிப்போய்… அவள் அவனை வேண்டுமென்றே தவிர்ப்பது ஹரிக்கு நன்றாகவே புரிந்தது… அவன் மனம் மிகவும் புண்பட்டுப் போனது…
அதுவும் அன்று, பேருந்திலிருந்து ஸ்வேதாவும் வசுதாவும்… இறங்கி வரும்பொழுது, தூரத்திலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஹரி.
ஸ்வேதா சற்று தள்ளாடுவதுபோல் அவனுக்குத் தோன்றவும் அவளை நோக்கி வேகமாக வந்தான் அவன்.
அப்பொழுதுதான் வஸுதா “என்னாலே தானேகா உங்களுக்கு இப்படி ஆகிப்போச்சு” என்று சொன்னதை அவன் கேட்க நேர்ந்தது.
அவளுக்கு நடந்தது விபத்து இல்லை என்பது ஹரிக்குத் தெரியவரவும்… அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளவே…
“என்ன ஸ்வேதா நடந்தது? இவளாலதான்னா… அது ஆக்சிடென்ட் இல்லையா… நீ இருந்த நிலைமையில் உன்னை ஒன்றும் கேட்கக் கூடாதுன்னு விட்டது தப்பா போச்சே… போலீஸ்ல கூட விபத்துன்னுதானே பைல் பண்ணி இருக்காங்க…” என்று கொஞ்சம் வேகமாகக் கேட்கவும்…
“விடுங்க ஹரி… ஒரு பிரச்சினையும் இல்ல… அது தெரியாமல் நடந்த விபத்துதான்…” என்று ஸ்வேதா சொன்ன பதிலில் அவனுக்கு வந்த கோபம்…
அவள் தள்ளாடிய படி வருவதைக்கூடக் கவனிக்காமல் உடன் வந்த வாசுதாவின் மீது திரும்ப… அவளை நோக்கி… “ஏய் நீ சொல்லு… அன்றைக்கு என்ன நடந்தது?” என்று மிரட்டும் குரலில் கேட்க…
“நீங்க யாரு இவளைக் கேள்வி கேட்க? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள்… என்று வசுதாவை அருகில் வைத்துக்கொண்டே ஆத்திரத்துடன் ஸ்வேதா… அலட்சியமாகச் சொல்லவும்…
கொஞ்சம் கூட தன்னிடம் நம்பிக்கை இல்லாதது போல்… ஸ்வேதாவின் நடவடிக்கைகள் அவனுக்குத் தோன்றிவிட, அதுவும் காதலிப்பது பற்றி… கண்டபடி முன்பு அவள் பேசிய பேச்சுக்கள் அவனுக்கு நினைவில் வரவும்… அவள்மேல் தான் கொண்டிருக்கும் காதலால் தனது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டிக்கும் பொழுது… இவள் இப்படி நடந்து கொள்கிறாளே… என்ற ஆதங்கத்தில்… அவள் மேல் கொண்ட அன்பையும் காதலையும் தாண்டி… அவனது சுயம் கொஞ்சம் தலை தூக்கிவிடவே…
“இனி… நீயே வந்து… என்னிடம்… என்ன நடந்தது என்பதைச் சொன்னால் மட்டுமே… நான் உன்னுடன் பேசுவேன்… இல்லையென்றால்… உன் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் நான் தலையிட மாட்டேன்…”
“உனக்கு நான்” என்றவன்… அதைத் திருத்தி… “என்னோட ஃப்ரண்ட்ஷிப்… வேண்டும் என்றால்… நீயேதான் என்னைத் தேடி வரணும்” என்றுவிட்டு… கோபத்துடன் அவளைக் கடந்து போனான் ஹரி…
அதன் பிறகு அவளும் அவனை நெருங்க எந்த முயற்சியும் செய்யவில்லை… அது ஹரியை இன்னும் அதிகமாகவே இறுகச் செய்துவிட… எந்த நினைவுமே அவனைப் பாதிக்காதவாறு முழுவதுமாக வேலையில் தன்னை புதைத்துக் கொண்டான்.
ஸ்வேதாவே தன்னைத் தேடி வரவேண்டும் நினைத்தான் ஹரி.
வர்ஷினியோ இல்லை பாலுவோ நடுவில் வந்து இவனுக்காக, இவனுடைய காதலுக்காக… அவளிடம் பேசினால்… எதோ இவனுக்காக அவர்கள் சிபாரிசு செய்வதுபோல் ஆகிவிடும் என அவனுக்குத் தோன்றவும்…
அதைக் கொஞ்சமும் விரும்பாத ஹரி… அவர்களிடம்… இதுபற்றி எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
வர்ஷினியின் திருமணத்தில் அவளைப் பார்க்கும் வரை அவனிடம் இருந்த உறுதி… பொலிவிழந்துபோய் இருந்த ஸ்வேதவைக் கண்டவுடன் ஆட்டம் காணத் தொடங்கியது. அதன் பிறகு… வர்ஷினியின் மூலம் அவளது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் விரும்பியது போல் யூ எஸ் சென்று எம்.எஸ். படித்து முடித்து அவள் வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம் என அவன் இருக்க… திடீரென ஸ்வேதா பி.ஹெச்.டி யில் சேர்ந்தது வர்ஷிணியே அறியாத ஒன்று. அதனால் அவளது வருகை மேலும் மூன்று நெடிய ஆண்டுகள் தாமதமானது…
சொல்லிக்கொண்டே போனான் ஹரி… அவன் பக்க நியாயங்களை…
“இப்ப சொல்லு… நீ அப்பொழுது நடந்துகொண்ட விதம் சரியாக இருந்ததா?” எனக் குற்றம்சாட்டும் குரலில் அவன் கேட்கவும்…
கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்வேதா… “எனக்கு என்று ஒரு மனதும்… அதில் எண்ணங்களும்… சில நியாயங்களும்… இருக்கும் தானே? அது உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்க…
“அதை நீ இன்னும்கூட என்னிடம் சொல்லவில்லை தானே?” என்று ஹரி பதில் கேள்வி கேட்க…
சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா அவள் மனதிலிருப்பதை…