Nilavu4

நிலவு – 4

இந்தப் பதிவில் உள்ள வளைகாப்பு பாடல்கள் இணையத்தில் இருந்து எடுத்தவை.  

மணநாள் மட்டும் உடுத்திவிட்டு

மூலையில் முடங்கிக் கிடந்த

பட்டுச் சேலைக்கு கிடைத்த மறு ஜென்மம்!

கிண்ணத்தில் கரைத்த சந்தனம்

மங்கையின் கன்னத்தில் இடம்பிடிக்க,

வண்ண வண்ண வளையல்களை

வாங்கிக் கொண்ட

சொந்தங்களோ வரிசையில் இடம்பிடிக்க,

ஏழுவகை சாதங்களும் எடுக்க எடுக்க

குறையாமல் எஞ்சி நிற்க,

இருகை நீட்டி அமர்ந்திருக்கும் கதாநாயகியின்

கைகளோ ஆனந்தத்தில் ஆர்பரிக்க!

நடக்கும் விழா வளைகாப்பு!

தாய்சேயின் நலம் காக்க நம் முன்னோர்

என்றோ வகுத்த சம்பிரதாய மத்தாப்பு!

 

இப்பூமியில் புதிதாகப் பிறக்கப் போகும் குழந்தையை, உற்றார் உறவினர்களோடு வரவேற்பதே, வளைகாப்பு என்னும் அற்புத நிகழ்வாகும்.

குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்களும் சூழ, வளைகாப்பு நடத்தப்படும் போது, கருவுற்ற பெண்ணுக்கு மன தைரியம் உண்டாகிறது.

மஞ்சுளாவின் விருப்பபடியே அவர்கள் உறவுகள் அனைவரையும் அழைத்திருக்க. மரகதத்தின் கிராமத்து உறவுகள் பலரும் தனிப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, வரவழைக்கப் பட்டிருந்தனர். சுமார் முந்நூற்றியைம்பது பேர் அன்றைய விழாவில் பங்கு கொள்ள வருகை புரிந்த வண்ணம் இருந்தனர்.

சிந்துவின் வளைகாப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வளைபூட்டும் பெண்ணை அலங்கரித்து, அவளுடன், அவள் கணவன் பாஸ்கரையும் சேர்த்து மனையில் அமர வைத்திருந்தார்கள்.

வளைகாப்பு நடக்கும் இடத்தில் மையமாக பூக்கள், பல்வேறு வகையான பழ வகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள் மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் அடங்கிய, சீர்வரிசை தட்டுகள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.

கருவுற்ற சிந்துவின் கைகளில் முதலில் வேப்பிலைக் காப்பும், அதற்கடுத்து தாய்வீட்டுச் சீதனமான தங்க வளையலும் இரு கைகளிலும் அலங்கரிக்க, கூடி நின்ற சொந்தங்கள் தங்கள் பங்கிற்கு வளைபூட்டி, உறவினர்கள் நண்பர்கள் என வந்திருந்த அனைவரும் சந்தனம் குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து அறுகரிசி(அட்சதை) இட்டு ஆசீர்வதித்து சென்றனர்.

 

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு

திருநாள் வளைகாப்பு…

வாழ்வில் திருநாள் வளைகாப்பு…

வண்ணக் கூந்தலை அள்ளி எடுத்து…

பின்னல் அழகாய் போட்டு…

தேன் மணக்கும் தாழை மலர்கள்…

கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு…

வெள்ளி நிலாவை… வெட்டி எடுத்து

நெற்றியில் குங்குமம் இட்டு…

வடிவேலை அளந்த கண்கள் இரண்டில்

சித்திர மையை தீட்டு…

அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரனும்…

 

மரகதத்தின் கிராமத்து சொந்த பந்தங்கள் வளைகாப்பு பாடலைப் பாடி, தங்கள வீட்டுப் பெண்ணை வாழ்த்திக் கொண்டிருந்தனர். 

சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், நெய் புலாவ் சாதம், புளிசாதம், தக்காளி சாதம், கருவேப்பிலை சாதம், தயிர் சாதம்,போன்ற ஏழு விதமான கலவை சாதங்களும், அதற்கு இணையான காய்கறி கூட்டுகளும் பெண் வீட்டின் முறையாக, வந்து இறங்கியிருந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பந்தி பரிமாறப்பட்டு, விருந்து எந்த ஒரு குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாகவே நடைபற்றுக் கொண்டிருந்தது.

வீட்டின் வாசலுக்கும், நுழைவு வாயிலான கேட்டுக்கும் இடைப்பட்ட சிறிய இடத்தில், ஷாமியானா போடப்பட்டு வந்திருந்தவர்கள் அமரவைக்கப்பட்டு இருந்தனர். மாடியில் தயானந்தன் தங்கியிருக்கும் வீட்டிலும், மொட்டை மாடியிலும் அதே போன்ற பந்தல் அமைக்கப்பட்டு அங்கு விருந்து நடைபெற்றது.

பத்து நாட்களில், அதுவும் சுபமுகூர்த்த நாளில் மண்டபம் அமைவது அத்தனை கடினமாக இருக்க, தேடி அலைந்து நேரத்தை விரையம் செய்யாமல், வீட்டிலேயே விழா நடக்க தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்தான் தயானந்தன்.

வளைகாப்பிற்கு நாள் குறித்த, அடுத்த தினமே இரண்டு இலட்சத்தை மரகதத்திடம் கொடுத்த தயா,

“இத வச்சு வளைகாப்பு முடிக்க பாரும்மா… மூணு பவுன்ல வளையல் எடுத்துட்டு, மிச்ச பணத்த விருந்துக்கும் சீர் வரிசையும் செய்ய வச்சுக்கோ” என்று செலவுகளை பிரித்து கணக்கிட்டு சொல்ல,

“பணம் எப்படி புரட்டுனே தம்பி? இத்தன சீக்கிரத்திலே கொண்டு வந்து குடுத்திருக்கியே” தவிப்புடன் மரகதம் கேட்டார்.

அவருக்கு தெரிந்து, மகனின் கையில் சேமிப்பு என்று தற்போது எதுவும் இல்லை. ஒன்று முடிந்தால் மற்றொன்று என்று வரிசை கட்டி வரும் கடமைகளை, தட்டிக் கழிக்காமல், எந்த விதத்திலும் குறைவில்லாமல் செய்பவனுக்கு, அவனது வருமானத்தில் சேமிப்பு என்ற வார்த்தையே தூரமாய் விலகிப் போயிருக்க, தாள முடியாமல் பணம் வந்த விதத்தை கேட்டு விட்டார்.

“கடன் வாங்கினீங்களாங்க? எதுக்கு இவ்ளோ சிரமப் படனும்? நம்மால முடிஞ்சது இதுதான்னு சொல்லி, சுருக்கமா செய்யலாமே…” மிதுனாவும் ஆற்றாமையில் கேட்டுவிட,

“சேர்த்து வச்சிருந்தேன், அது இப்போ உபயோகப்படுது” தயா ஒரு வார்த்தையில் முடித்துவிட, மாமியாரும் மருமகளும் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,

“நான் கடன் வாங்கல… இந்த ஒன்றரை வருஷமா, ஞாயித்துக் கிழமை லீவெடுக்காம லயனுக்கு போனத, தனியா சேர்த்து வச்சிருந்தேன், அந்த காசுதான்மா இது. அஞ்சு பவுன்ல, மூணு பவுன் இப்ப போட்டுட்டு, மீதிய அடுத்த வருஷம் போடறேன்னு சம்மந்தியம்மாகிட்ட சொல்லிடுங்கம்மா” என்று விளக்கவும், தயாவின் நிலையில் இருவரும் பரிதவித்தே நின்றனர்.

“அப்டியே இருந்தாலும் ஒரு வருசத்தில இவ்ளோ பெரிய அமெளண்ட் சேராதே, தயா!” சந்தேகம் தீராமல் தனியாக வந்து மிதுனா கேட்க,

“ரெண்டு ஐ‌டி கம்பெனியில, ஒரு வருசத்துக்கு அக்ரீமெண்ட் போட்டு, அட்வான்ஸ் வாங்கிருக்கேன் மிது. எங்கேயும் போய் கொள்ளையடிக்கல…” எரிந்து விழுந்து, கோபத்தில் பதில் சொன்னான் தயானந்தன்.

எந்த ஒரு ஆண் மகனிடமும் பணம் வந்த வழியை கேட்டால், சரியான முறையில் பதில் வராது. மிகவும் அழுத்திக் கேட்டால், கோபத்துடன் பதில் தந்து விட்டு அவர்களின் செயலை நியாயமாக்கி விடுவார்கள். அந்த வகையை சேர்ந்த சராசரி ஆண்மகன்தான் நான் என்று தயாவும் தன் பதிலில் நிரூபித்து விட்டான்.

“என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா கேட்டிருக்க மாட்டேன், நீங்க சொல்லமா இருந்துட்டு, எங்க மேல கோபப்படுறீங்க” தன்இயல்பில் மிதுனா பேச,

“எதையும் மறைக்கணுமங்கிற அவசியமில்ல மிது, நான் ஒடுற ஒட்டத்தல இதெல்லாம் சொல்லணும்ங்கிறதே, எனக்கு மறந்து போயிடுது” சொல்லத் தெரியாத ஆயாசம் தயாவின் பேச்சில் வெளிபட்டது.

“சரி விடுங்க… இந்த பணம் எதுக்காக சேர்த்து வச்சீங்களோ, அதுக்கு வெளியே எடுத்துருக்கலாமே! எதுக்கு இப்போ உடைச்சீங்க?

“கடன அடைக்கத்தான் சேர்த்து வச்சேன். சிந்துவோட வளைகாப்பு விசேசத்த சிம்பிளா செய்ய பிளான் போட்டு, இப்போ பெருசா வந்து நிக்கவும் கைவைக்க வேண்டியதா போச்சு. ரெண்டு அக்காகளுக்கும் எப்படி கிராண்டா நடத்தினோமோ அப்டியே செஞ்சிருவோம். இனி நடக்க வேண்டிய வேலையப் பாரு” என்று அவனுக்கே, அவன் சமாதானமும் செய்து கொண்டு, மனைவிக்கு விளக்கம் அளித்தான்.

“நானூறு மாம்பழம் தாம்பூலப் பை சொல்லி வச்சிட்டேன். நான் கொடுத்த பணத்திலேயே முடிக்க பாரு மிது” மனைவியிடம் தயா கூற,

“வேணாம் தயா, நான் அதுக்கு சுருக்கமா செய்யலாம்னு பிளான் பண்ணிருக்கேன்”

“எல்லாத்தையும் நல்ல விதமா செஞ்சுட்டு,அதுல மட்டும் ஏன் குறை வைக்கிற? சொல்றபடி கேளு” என்று அவன் அழுத்திச் சொல்ல,

வேறு வழியில்லாமல் தலையாட்டி வைத்தாள் மிதுனா. மனைவி, தன்பங்கு பணத்தை கொடுத்தாலும் வேண்டாம் என்று விடாப்பிடியாக மறுக்கவும் செய்தான் தயானந்தன்.

“என் பொண்டாட்டி பாரத்துல, நான் பங்கெடுத்துக்க கூடாதா?”

உரிமையுடன் அவன் அழுத்திக் கேட்கும் போது, இவளுக்கும் மறுக்கத் தோன்றவில்லை. ஆகமொத்தம், செலவு முழுவதும் தயாவின் பணத்தில் என்றானது.

விஷேசத்திற்கு உறவினர்களை அழைக்க மூத்த பெண்ணும், செலவிற்கு இளைய பெண்ணும் கைகொடுக்க, தன் மருமகளின் வளைக்காப்பு விழா, யாரும் குற்றம் சொல்ல முடியாதபடி நடப்பதில் மஞ்சுளாவின் மனம் அமைதிபட்டது.

தாயுடன் நடந்த பேச்சிற்கு, மிதுனா பாராமுகத்துடன் நடந்து கொள்ள நினைத்தாள்தான். ஆனால் பத்து நாட்களில் வீட்டில் விஷேசத்தை வைத்துக்கொண்டு, புதிதாக தன்னால் ஒரு பிரச்சனையை உருவாக்க விரும்பாமல், எப்பொழுதும் போல் நடமாடினாள்.

வளைகாப்பு விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்க, அனைவரையும் வரவேற்ற, மஞ்சுளாவின் முகத்தில் மலர்ந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருக்க, அது சபையில் தயா தங்க வளையல் போட்டு முடியும் வரை மட்டுமே நீடித்தது. தயானந்தன் வளையல் போட்டுவிட்டு, மேற்கொண்டு வேலைகளை பார்க்கவென நகன்று விட, மஞ்சுளா ஆரம்பித்து விட்டார்.

சீர்வரிசையில் குறை வைக்காதவர்கள் தங்கத்தில் குறை வைத்து விட, அதையும் அந்த சமயத்தில்தான் தன்னிடம் தெரியப்படுத்தியதை நினைத்து, கோபத்தில் கடுகடுக்கத் தொடங்கி விட்டார் மஞ்சுளா.

“நகை கம்மியா செய்யப்போறத, முன்னாடியே சொல்றதுக்கு என்ன? சபையில எல்லார் முன்னாடியும் சொன்னா, ஒன்னும் சொல்ல முடியாதுன்னு, திட்டம் போட்டு காரியம் பண்றீங்களா?” என்று சத்தமாகவே பேச, விழா நடக்கும் இடம் சலசலத்துப் போனது.

மஞ்சுளாவின் பேச்சிற்கு மரகதம் பதில் சொல்லும் முன்பே, மிதுனா முந்திக் கொண்டாள்.

“முன்னாடியே சொல்லியிருந்தா சரின்னு ஒத்துகிட்டு இருப்பியாம்மா? எதுதான் சாக்கு கிடைக்கும்னு காத்திருந்து வம்பு வளக்குற ஆளாச்சே நீ, அதான் சொல்லல” தாய்க்கு குறையாத சிடுசிடுப்பில் மகள் பதில் கொடுக்க,

“இது எந்த ஊர் நியாயம் மிதுனா? சம்மந்தக்காரங்க நம்ம அம்மாவ போனதால, நீ என்ன வேனும்னாலும் பேசலாம்னு நினைச்சிருக்கியா?” தன் பங்கிற்கு பேசியது மிதுனாவின் அக்கா சாந்தினி.

மிதுனாவிற்கு தனது பிறந்த வீட்டின் மேல் இருந்த கோபம், அந்த நேரத்தில் நன்றாக வெளிப்பட, அது புரியாமல் சாந்தினி பேசினாள். அவளுக்குத் தெரியாதே அவர்களின் தாய், தங்கையிடம் தர்க்கம் பண்ணியது.

“அம்மாடி… கொஞ்சம் அமைதியா இருங்கம்மா, சபையில பேச்ச வளர்க்க வேணாம். அடுத்த வருஷம் சேர்த்து போடுறதா, என் பையன் சொல்லியிருக்கான்” மரகதம் அமைதியுடன் பேசி சமாதானத்திற்கு வழி வகுத்தார்.

“என்ன இருந்தாலும் நீங்க முன்கூட்டியே சொல்லாம விட்டது, தப்புதான்” தாய்க்கு தப்பாத மகளாய் சாந்தினியும் பதில் பேச,

“அத்தை முன்னாடியே சொல்றேன்னுதான் சொன்னாங்க…  நான்தான் தடுத்தேன். இருக்குற பத்துநாள்ல புது பஞ்சாயத்து பேசி, நடக்க வேண்டிய நல்ல காரியம் தடைபட்டு போச்சுன்னா, அந்த குறை காலத்துக்கும் இருக்கும். அதான் என்ன பேச்சு வந்தாலும் சமாளிக்கலாம்னு, மனசுல நினைச்சுட்டுதான் சொல்லாம விட்டது” மிதுனா விளக்கம் சொல்லவும், மஞ்சுளாவின் முகம் சுருங்கிப் போனது.

இந்த பேச்சு நடக்கும் பொழுது மரகதத்தின் மூத்த பெண்கள் நர்மதா, கங்கா இருவரும், மிதுனாவின் பேச்சை கேட்டபடி இருந்தனர். மஞ்சுளாவின் குணத்தை அறிந்தவர்கள்தான், என்றாலும் இந்த நேரத்தில் நாமும் பேசினால் பிரச்சனை, வேறு ரூபத்தில் திசை திரும்பி விடும் அபாயம் உள்ளதை அறிந்து கொண்டவர்கள், நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருந்தனர். 

தன்னை சரியாக கணித்து செயல்படும் மகளை அந்த சமயத்தில் மஞ்சுளாவால், கடிந்து கொள்ளவும் முடியவில்லை. உறவினர்கள் முன்னிலையில் எதுவும் குற்றம் குறையாகப் பேசினால், அந்தப் பேச்சு தனக்கே திரும்பி விடும் சூழ்நிலை அங்கே நிலவியது.

“ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு ஆனபிறகு இதெல்லாம் கணக்குல எடுத்துட்டு பேசக்கூடாது மஞ்சுளா. நாளைக்கே உன் பொண்ணுக்கு செய்யும்போது, இதே தட்டுப்பாடு உனக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்” என்று வந்திருந்த உறவுப் பெண்மணி பேசிவிட,

அவருக்கு சாதகமாய் பலரும் ஆமாம் சாமி போட்டு அந்த பேச்சை ஆமோதிக்க, மேற்கொண்டு அவரால் குறை சொல்வதை நீட்டி முழக்க முடியவில்லை. ஆனாலும் அந்த நேரம் முதல், அடக்கி வைத்த வன்மத்தை வெளியே காட்டாமல், இறுகிய முகத்துடன் வலம் வந்தார்.

தயானந்தனும் தன்னுடன் பணிபுரிபவர்களையும், மற்றும் பல நண்பர்களை சேர்த்துக்கொண்டு, வந்தவர்களை கவனித்து பந்தி கவனிப்பில் அலைந்து கொண்டிருக்க, அவனுக்கு இந்த பேச்சு நடந்தது தெரியவில்லை.

விழாவிற்கு வருகை புரிந்தவர்கள் பசியாறி, இன்முகத்துடன் விடை பெற்று செல்ல, மிதுனாவும் தன் சகோதரியுடன் சேர்ந்து அவர்களை வழியனுப்பி வைக்க, வீட்டு மனிதர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

கிராமத்து உறவுகளை, ஏற்கனவே அழைத்து வந்திருந்த அதே பேருந்திலேயே, விருந்து முடிந்ததும் அனுப்பி வைத்தான் தயானந்தன். மதியம் விழா முடிந்து, சிந்துவை முறைப்படி தாய் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகும் சமயத்தில், மஞ்சுளா தன்வாதத்தை தொடங்கி விட்டார்.

“பிரசவத்துக்கு கூட்டிட்டு போறவங்க, கல்யாண நகை, சீர்வரிசை எல்லாம் ஒழுங்கா எப்ப செய்ய முடியுதோ, அப்போ கொண்டு வந்து விட்டா போதும். அதுவரைக்கும் உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்க” என்று அலுங்காமல் குண்டைப் போட்டுவிட, அங்கே கூடி இருந்தவர்கள் அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. பாஸ்கரும் இந்தப் பேச்சை தன்தாயிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

“அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசும்மா… நம்ம பொண்ணும் அவங்க வீட்டுல இருக்கா, எதுவும் தப்பாகிடப் போகுது” மிதுனாவின் அக்கா, மஞ்சுளாவின் காதில் கிசுகிசுக்க, அதை கருத்தில் கொள்ளாமல் தன் பேச்சிலேயே குறியாக நின்றார்.

“அஞ்சு பவுனுக்கு பதிலா, மூணு பவுன் செய்யபோறத ஒரு மரியாதைக்காவது உங்களுக்கு சொல்லத் தோணிச்சா, என்னதான் எங்க பொண்ண உங்க வீட்டுல குடுத்திருந்தாலும், சம்மந்தக்காரங்களுக்கு மரியாதை தரணுமா, இல்லையா” என்று தயானந்தனிடம் நேருக்குநேராய் நின்று கேட்க, அவன் கேள்வியாய் மனைவியையும் தாயையும் பார்த்தான்.

“அது தம்பி… செய்முறைய இன்னைக்குதான் சொன்னோம்.  அததான் சம்மந்தியம்மா சொல்றாங்க” மரகதம் இறங்கிய குரலில் விளக்கிச் சொல்ல,

“நான் முன்னாடியே சொல்லச் சொல்லியிருந்தேனே” தயா, தன்அம்மாவிடம் கேள்வி கேட்க,

“நீங்க சொல்லி என்ன பிரயோசனம்? உங்க வீட்டுல சொல்லல… சபையில எல்லாருக்கும் முன்னாடி சொல்லி, என்னை வாயடைக்க வச்சுட்டாங்க” என்று மஞ்சுளா விவரம் சொல்ல,

“நாந்தாங்க இன்னைக்கு சொல்வோம்னு சொன்னேன்” என்று மிதுனாவும் பதில் பேசியதில், தயானந்தனுக்கு கோபம் பொங்கி விட்டது.

“அறிவிருக்காடி உனக்கு, நானூறு பேருக்கு முன்னாடி எங்க குடும்பத்தையே நிக்க வச்சு கேள்வி கேக்கவா, நான் இத்தன சிரமப்படுறேன். அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எங்களை மரியாதை குறைவா நடத்தனும்னு முடிவே பண்ணிட்டீங்களா? உன்கிட்ட இத நான் எதிர்பாக்கல” பல்லைக் கடித்துக் கொண்டு, ஏகத்திற்கும் கண்டித்துப் பேச,

கணவனின் இந்த பேச்சை சற்றும் எதிர்பார்க்கவில்லை மிதுனா. ஆனால் இந்த சமயத்தில் தானும் கோபபட்டு பேசவேண்டாம் என்று முடிவெடுத்தவள், சற்று நிதானித்தே பேசினாள்.

“அன்னைக்கு வந்து சொல்லியிருந்தா, இந்த ஃபங்சன் நடக்கிறது சந்தேகம்தான். அப்டியே சரின்னு சொன்னாலும் இவங்க வேற ஏதாவது சொல்லி, குத்தம் கண்டுபிடிப்பாங்க” என்று கணவனிடம் பேசி முடித்தவள்,

தன் அன்னையிடம் திரும்பி, “இனி ஒரு வார்த்தை, நீ பேசினாலும் நமக்குள்ள உறவு விட்டுப் போச்சுன்னு அர்த்தம்” அத்தனை கோபத்துடன், குரலில் அழுத்ததைக் கூட்டி, தன்எதிர்ப்பைக் காட்டி விட்டாள் மிதுனா. அந்த பேச்சில் மஞ்சுளாவும் சற்று அதிர்ந்து போனார்.

“அவங்க இப்டிதான் செய்வாங்கன்னு முடிவெடுத்து, நாமளும் பதிலுக்கு செஞ்சா, அவங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேணாமா?” இடைவெட்டிப் பேசி, பொதுவில் மனைவியை வெகுவாய் அதட்டினான் தயானந்தன்.

“அவளுக்குதான் விவரம் பத்தாது, நீங்களாவது சொல்லி இருக்கலாமேம்மா… இந்த பெரிய மனுஷி பேச்ச, எப்போ இருந்து தட்டாம கேக்க ஆரம்பிச்சீங்க” தாயைக் கடிந்து கொள்ளவும் தயங்கவில்லை தயானந்தன்.

“தம்பி, கோபப்பட இது நேரமில்ல… மொத நம்ம பொண்ணு பிரச்சனைய முடிப்போம்” பெரிய அக்கா நர்மதா பேச்சினை மாற்ற, ஒரு நிமிடம் சுதாரித்தவன், மஞ்சுளாவைப் பார்த்து,

“எப்படியும் அடுத்த வருஷம் எங்கபொண்ணுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைய, முறையா செஞ்சு முடிக்கிறேன். உங்க மனசு கஷ்டப்படுறதுக்கு இதுதான் காரணம்னா அதுக்கு மன்னிப்பும் கேக்குறேன். தயவு செய்து பெரிய பேச்சு பேசாதீங்க” என்று கைகூப்ப, அந்த செயல் அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சியையும் சங்கடத்தையும் கொடுத்தது.

தயா கைகூப்பிய மறுநிமிடமே மிதுனா வந்து, அவன் கைகளை இறக்கி விட்டு, “என்ன காரியம் பண்றீங்க? நான்தான் சொல்லிட்டேனே, இனி பேசமாட்டாங்க” என்று உறுதி அளித்தாள்.

“எங்கள சொல்லிட்டு நீங்க பெரிய காரியம் செய்றீங்க, தம்பி…” சாந்தினியும் தணிந்து போய் பேச,

“என்ன ஆனந்தா இது? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா. இனி ஒருதரம் இப்டி செய்யாதே!” நர்மதா சொல்ல,

“நாங்க இருக்கும் பொது நீ மத்தவங்க கிட்ட கையேந்தி நிக்க கூடாதுடா…” கங்காவும், தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

மிதுனாவின் பேச்சில் அதிர்ந்திருந்த மஞ்சுளா, சகோதரிகள் பேசிய இடைப்பட்ட நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டிருந்தவர், தன் இயல்பில் இருந்து மாறாமல்,

“இப்படி சொல்றவங்க, வீட்டுல ஒரு வார்த்தை கேட்டிருந்தா இன்னைக்கு இப்டி நிக்க வேண்டிய அவசியமில்லையே” சற்றே ஏளனக் குரலில், தயாவின் செயலைப் பார்த்துப் பரிகாசம் செய்ய, மரகதத்தின் பெண்களுக்கு பொறுக்கவில்லை

“உங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் பேசத்தெரியும் கொஞ்சம் யோசிச்சு பேசுங்க” நர்மதா அடக்கபட்ட கோபத்துடன் பேச,

“உனக்கென்னம்மா நீ வக்கணையா சீர்வரிசை வாங்கிட்டு பேசுற, இங்கே எதுவுமில்லாம நிக்குதே…” குறையாத எகத்தாளத்துடன், மஞ்சுளாவின் பேச்சுக்கள் தொடர்ந்தது.

“ஓஹோ… அப்போ உங்க பொண்ணுக்கு நீங்க சீர் அடுக்கி வச்சீங்களா? நீங்க சொன்ன இதே பேச்ச, நாங்களும் மாத்தி பேச ரொம்ப நேரம் ஆகாது” கங்காவும் சீற்றத்துடன் பேச,

“அக்கா, பேச்சு நம்ம பொண்ண பத்திதான். என் பொண்டாட்டிய பத்தி இல்ல…” அப்பொழுதே பேச்சை துண்டித்தான் தயா.

“நீ எல்லாத்துக்கும் இப்பிடி தணிஞ்சு போய் நிக்கிறதாலதான்டா, இவங்க இஷ்டத்துக்கும் பேசுறாங்க. வெட்டியா ஊர் சுத்துற இவங்க பையன அதட்டி வழிக்கு கொண்டு வரத் தெரியல… கால்காசு பெறாத மாப்பிள்ளைக்கு சீர் செனத்தி ஒன்னுதான் குறைச்சலா போச்சு” தங்களின் சுயத்தை உரசியவாறு பேசிய கங்காவின் பேச்சில் அதிர்ந்த மஞ்சுளா,

“நீங்கதானே வழிய வந்து பொண்ண கொடுத்தது. நாங்களா வந்து கெஞ்சினோம்! ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பள, உங்க பொண்ணு திமிருல அடங்காம சுத்தினதுக்கு, எங்கள குத்தம் சொல்வீங்களா?” விடாமல் பேசிக்கொண்டே போனார்.

அடுத்தடுத்த தர்க்கங்கள் பெண்களிடம் நீண்டிட, பேச்சு முடிவிற்கு வரும் வழியும் தெரியவில்லை. மொத்தத்தில் சிந்துவின் வளர்ப்பையும் அவர்களின் குடும்பத்தையும் மஞ்சுளா இறக்கி வைத்து பேசிட, பதிலுக்கு கங்காவும் நர்மதாவும் சேர்ந்து பாஸ்கரின் குறைகளைப் பேசி, மிதுனாவிற்கு இன்னும் சீர் செய்யாமல் இருப்பதை சுட்டிக் காட்டிப் பேசினர்.

யார் பேச்சையும் யாரும் கேட்பதாய் தெரியவில்லை. மரகதமும் முயன்ற அளவு, தன்பெண்களை தடுத்துப் பார்த்தும், பலனில்லை. மிதுனாவின் அடுத்தடுத்த அதட்டல்களும் மஞ்சுளாவிடம் பலிக்கவில்லை.

“அன்னைக்கே சொன்னோமேம்மா… இவங்க பொண்ணுகிட்ட, நீயும் மாமியாரா நடந்துட்டு இருந்தா, இப்போ நம்ம பொண்ண குத்திக் காமிச்சு பேச மாட்டாங்க. இவங்க பையன் மேல எந்த தப்பும் இல்லைன்னு எப்டியெல்லாம் பூசி மொழுகுறாங்க… உன் மருமகளும் அவங்க அம்மாவ இப்டி பேசாதேன்னு அடக்கி வைக்கிறத விட்டுட்டு, சண்டைய வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறா” இறுதியில் நர்மதாவின் குற்றப்பார்வை மிதுனாவின் மீது திரும்ப,

“ஒருவேல, இப்படியெல்லாம் நாம பேசி அடிச்சிக்கணும்னு ஆசபட்டுத்தான், அன்னைக்கு இந்த நகை விஷயமும் சொல்லாம விட்டாளா? அப்படியா மிதுனா”,

தங்களுக்குள்ளேயே ஒரு முடிவெடுத்துக் கொண்டு, அது சரியா என்று மிதுனாவையே கேட்டு வைக்க, இதற்கு என்ன பதில் சொல்வதென அவளுக்கே தெரியவில்லை.

தன்தாயை பேசி சமாளித்துக் கொள்ளலாம் என அசிரத்தையாக விட்ட தன் மடத்தனம், தன்னையே குற்றவாளியாக்கி நிறுத்தி விட, ஒரு நிமிடம் பேச்சிழந்து நின்று விட்டாள்.

“வாய்க்கு வந்தத பேசக்கூடாது கங்கா… அவ சொல்லதானே செய்றா… ரெண்டு பக்க சொந்தத்தையும் பேச வைக்கிறதால, யாருக்கு என்ன லாபம் வந்திடப் போகுது? எல்லாருக்கும் மனக்கஷ்டம்தான் மிஞ்சும். ஒரு மாமியாரா ரொம்ப நல்லாவே அவள நான் புரிஞ்சு வைச்சுருக்கேன். இனி ஒரு வார்த்தை யாரும் யாரையும் பேச வேணாம், போதும் நிறுத்துவோம்” என்று மருமகளை விட்டுக் கொடுக்காமல் மரகதம் பேச,

“உன் மருமக மேல குத்தம் சொல்லலம்மா, நாம முன்கூட்டியே தெரியப்படுத்தலன்னு, அவங்க சொல்லிக் காமிக்கிறாங்க, அதுக்கு காரணம் உன் மருமகதானே! அப்போ அவளையும்தானே, பேச வேண்டி வரும்” நிதர்சனத்தை உடைத்து கங்கா கூறிட, மிதுனாவிற்கு இதை எப்படி எடுத்துக் கொள்வதென்றும் புரியவில்லை. ஆனால், அந்த வேலையை அசராமல் தனதாக்கிக் கொண்ட மஞ்சுளா,

“உங்க பொண்ணுக்கு செய்ய வேண்டியத பத்தி நான் கேட்டா, நீங்க என் பொண்ண காரணம் காட்டி திசை திருப்புறீங்களா? அப்டி அவ சொல்லிக் குடுத்து, பேசுற நெலமையில நான் இல்ல… அதே போல அவகிட்டயும் எங்களுக்கான மரியாதை எங்கேயும் குறையக்கூடாதுன்ணு சொல்லித்தானே வச்சிருக்கேன்” மீண்டும் வார்த்தைகளை கொட்டி விடவும்,

“போதும், கொஞ்சம் நிப்பாட்டேன்ம்மா… உன்னோட வீம்பால, இன்னும் பேச்சு வளர்ந்துட்டே போகுமே, ஒழிய குறையாது” சாந்தினி தன்தாயிடம் தணிந்து போகச் சொல்லி பேச,

“உலக அதிசயமா, பையனப் பெத்தவங்கிற கொம்பு புதுசா மொழைச்சிருக்கு. இன்னமும் பேசுவாங்க, பெத்த பொண்ணையே எடுத்தெறிஞ்சு பேசின நாக்கு, எதுக்கும் அசராது” காறித் துப்பாத குறையாக வெறுப்பை உமிழ்ந்தாள் மிதுனா.

அவளின் மனதில் அங்கிருக்கும் அனைவரின் மீதும் கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்க, அதை தன் வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட்டாள். அன்றே தன்தாய் பேசிய பேச்சிற்கு பதிலடி கொடுத்திருந்தால், இன்று இந்த நிலை தனக்கு வந்திருக்காதோ என்றே நினைக்கவும் தொடங்கி விட்டாள்.

அவள் கணவன்தான் சொன்னானே, உன்னை நீயே விட்டுக் கொடுத்துக் கொள்ளாதே என்று, அதன் அர்த்தம் இப்பொழுது சரியாகத் தெரியவர, என்ன புண்ணியம்? பேச்சுக்கள் தடித்துப் போய், கடைசியில் அவளையே குற்றவாளியாக்கி நிறுத்தி விட்டது.

சாந்தினி, நர்மதா, கங்கா என இவர்களின் கணவன்மார்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும், மாடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க, கீழே இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தது.

மிதுனாவின் பேச்சைக் கேட்டதும் முறைத்து, பார்வையாலேயே அவளை மீண்டும் கடிந்து கொண்ட தயானந்தனுக்கு, இந்த விதண்டாவாதங்களை தடுக்க முடியவில்லை. தன் வீட்டுப் பெண்களை அதட்டி அமைதிப் படுத்தினாலும், மஞ்சுளாவை யார் தடுத்து நிறுத்துவது என்ற பெரிய கேள்வி, அவன் மனதில் வந்து நின்றது.

இப்படி அனைவரும் அவரவர் நிலையில் நின்று பேசிக் கொண்டு நிற்க, விழா நாயகியின் நிலைமையோ முற்றிலும் தலைகீழாய் மாறிக் கொண்டிருந்தது.

நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, சிந்துவின் கண்கள் முழுவதும் நிராசையை சுமந்து கொண்டு நின்றது. வயிற்றின் பாரத்தை விட, இதயத்தின் பாரம் அந்த நேரத்தில் பாறையாக கனத்துப் போய்விட்டது.

இனி தன் வாழ்வு முழுமைக்கும் சாபம் போன்றே, தன் மாமியாரின் பேச்சுக்கள், வருங்காலத்தில் தன்னை துண்டாடப் போகின்றதா என்றே வெகுவாக மனதில் துடித்துப் போனாள்.

இந்த நிலையிலும் கணவன் மீது இயல்பாய் இருந்த நப்பாசையில், வேதனை சுமந்த விழிகளுடன் பாஸ்கரை நோக்க, அவனோ தனக்கும் அங்கு நடப்பவற்றிக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் நின்று கொண்டிருந்தான்.

தான், அவன் மேல் கொண்ட நேசத்தின் ஒருதுளி அளவு கூட, இவன், தன் மீது வைக்கவில்லையா என்றே அந்த கர்ப்பிணிப் பெண்ணின் மனம் பிதற்றிக் கொண்டது.

இனி இவனோடு வாழத்தான் வேண்டுமா என்று நினைக்கும் பொழுதே, அடிவயிற்றில் உதைத்த அவளது குழந்தை ‘ஏன்? எனக்காக வாழமாட்டாயா’ என்று கேட்பது போல் தோன்ற, கழிவிரக்கத்தில் நொந்து கொண்டிருந்தவள், நொடி நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டாள்.

தன் வளர்ப்பை இழிவுபடுத்தி, தன் குடும்பத்தாரை தலைகுனிய வைத்தவர்களுக்கு, பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றே உறுதி கொண்டாள்.

உயிராய் நேசித்தவனின் பாராமுகம், அவளது தன்மானத்தை சீண்டி விட, இனியும் தாழ்ந்து போகக் கூடாது என்று நிமிர்ந்து நின்றாள். தனி மனுஷியாய் நின்றிருந்தால், இத்தனை வேகம் வந்திருக்குமா தெரியவில்லை. இத்தனை நாட்களில் தன்னை வதைத்த பேச்சுக்கள், இன்று தன் குடும்பத்தாரையும் சுற்றி வளைக்க, மனதளவில் பெரும்  ஆவேசம் கொண்டாள்.

“என்னை இங்கே இருந்து கூட்டிட்டு போயிடுண்ணே… இவங்க கேக்குற சீர்வரிசை இல்லாம, இனி இந்த வீட்டுப் வாசப்படிய மிதிக்க மாட்டேன், அப்படி நான் வரும்போது என்கூட வாழத் தகுதியானவரா இவர் இல்லைன்னா, இவரை ஒரெடியா தலமுழுகவும் தயங்க மாட்டேன்” இதயமெல்லாம் வலி கொண்டாலும், நிமிர்வுடன் பேசினாள் சிந்து.

“என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா சிந்து? ஏண்டி இப்டி இறுக்கிப் போய் இருக்க… எல்லாம் சரி பண்ணிடலாம்” நிறைமாசக்காரியின் உடல்நலனில் அக்கறை கொண்ட நர்மதா, அவளை அமைதிப்படுத்தவென சாந்தமாகப் பேச,

“பேச்சு மட்டுமில்லக்கா, இனி நானும் இறுக்கத்தோடதான் இருக்கப் போறேன். என்னோட பத்தாம் பசலித்தனத்துக்கு எல்லாரையும் பலியாக்கினது போதும். நான் எப்படி இருக்கணும்னு எனக்கு புரிய வச்சுட்டாங்க. ஒரு பொண்ணு வெகுளியா இருந்தா, அது, அவளை தாங்கிட்டு நிக்கிறவங்களுக்கு எத்தன கஷ்டங்கள குடுக்குதுன்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.

இனிமே யாரும் எனக்காக, இவங்ககிட்ட கைய கட்டிட்டு நிக்க வேணாம். இவங்க சொல்ற சீர்வரிச, நகை நட்டு எல்லாம் என் சுயசம்பாத்தியத்துல செஞ்சுக்கப் போறேன், இனி என் சொந்த உழைப்புல வாழப்போறேன்” பேச்சில் உறுதி தெறிக்க சொன்னவளின், ஒவ்வொரு வார்த்தையும் அனைவரின் நெஞ்சிலும் அதிர்ச்சியைக் கூட்டியது.

“அண்ணன் இருக்கும் போது இப்படியெல்லாம் பேசக்கூடாது, சிந்து!” தங்கையின் அருகில் நின்று, தயா தன்மையாகச் சொல்ல,

“போதும்ண்ணே… இன்னும் எத்தன காலத்துக்குதான், எங்கள தூக்கி சுமப்ப? உனக்கான வாழ்க்கைய நீயும் வாழனும். உன்னையே நம்பி வந்த அண்ணிக்கு, இனி பக்கபலமா இருக்கப் பாருண்ணே” அலுத்துக்கொண்டே வந்த சிந்துவின் வாத்தைகளில், அண்ணனின் மேல், அவளுக்கிருந்த பாசம் கண்ணுற்று, அவனை கட்டிப் போட்டுவிட்டது.

“எல்லாரும் அவங்கவங்க கடைமைய செய்துட்டு, தங்களோட வாழ்க்கையையும் வாழ்ந்துட்டுதான் இருக்காங்க சிந்து, இவ்வளவு அழுத்தம் இப்போ உனக்கு வேணாம்” கணவனின் திகைத்த நிலையை உணர்ந்த மிதுனா, ஆதரவாக அவள் தோள் அணைத்து ஆறுதல் கூற,

“இல்லையே அண்ணி… எனக்காக பேச வேண்டியவர் இன்னமும் அமைதியாதானே நிக்கிறார். சொந்த, பந்தத்துக்கு முன்னாடியே, என்னை விட்டுக் கொடுக்கிறவர், நாளைக்கு நடுத்தெருவுலயும் நிக்க வைக்க தயங்க மாட்டார்.

பலி கொடுக்குற ஆட்டை, மஞ்சதண்ணி தெளிச்சு கட்டிப்போட்ட மாதிரி, கழுத்துல தாலின்னு ஒன்னு கட்டிகிட்டு, இங்கே அடிமையா இருக்க நான் விரும்பல. நான் தப்பு பண்ணினவதான், ஆனா அதுல அவர் பங்கு எதுவுமே இல்லன்னு சொல்றத கேட்டு, என்னை நானே அசிங்கமா உணர்றேன்.

பணத்தை மட்டுமே மதிச்சு வாழ்க்கைய எடை போட்றவங்க மத்தியில, நாமளும் சுயநலமாவே இருக்குறதுதான் நமக்கும் நல்லது அண்ணி… என் முடிவுல இருந்து என்னை பின் வாங்கச் சொல்லாதீங்க” கண்கள் சிவக்க, தன்னைதானே உணர்ந்துகொண்டவள் போல் பேசிய பேச்சில், அனைவரும் உறைந்து நின்றனர்.

அப்பொழுதும் பாஸ்கர் வாயை திறக்கவில்லை. சமாதானம் பேச, மனைவியை அணுகினால் தாயின் வெறுப்பு பார்வை, அவனை பதம் பார்த்து விடும் வாய்ப்பு நிறையவே இருக்க, அமைதியாய் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றான்.

மனைவியை ஆறுதல் படுத்தவோ, அவளது பேச்சுக்கு மறுபேச்சு பேசவோ அவன் முயற்சிக்கவில்லை. தனது முதுகெழும்பில்லாத கோழைத்தனத்தை, அங்கே வெட்ட வெளிச்சமாக்கி விட்டான்.

உடன்பிறந்தவளின் பேச்சு உயிரையே உருக்கச் செய்ய, பாஸ்கரை தன் விழிகளால் பொசுக்கிய தயானந்தன்,

உன் உடம்பு இருக்குற அசதியில என்னென்னனவோ பேசிட்டு இருக்கடாம்மா, கொஞ்ச நேரம் அமைதியா உக்காரு” அன்பாய், அதட்டல் போட்டு அவளை சகஜப்படுத்த முயல,

“என்னை இன்னைக்கு பேச விடுண்ணே… அவங்க பொண்ணுக்குச் சொன்ன நியாயம்தான் எனக்கும். எப்டி அண்ணியே சம்பாதிச்சு அவங்களுக்கு சீர் செஞ்சுக்கணும்னு சொன்னாங்களோ, அதே மாதிரி எனக்கான செய்முறைக்கு நான் சம்பாத்திக்க போறேன். என்னை தடுக்காதண்ணே, இனியும் நீ என்னை தாங்கிக்க வேணாம். பக்கத்துல நின்னு ஆதரவு குடு. அது போதும் எனக்கு…” உணர்ச்சிப் பிழம்பாய் நின்றவள், உடலெல்லாம் நடுக்கம் பரவி தடுமாறி தள்ளாடிவிட, சிந்துவின் தோள் அணைத்திருந்த மிதுனா, அவளை அமரவைக்க நாற்காலியை முன்னே இழுக்க.

“இங்கே வேணாண்ணி… தயவு செஞ்சு நம்ம வீட்டுக்கு என்னை கூட்டிட்டுப் போயிடுங்க” வெறுப்பினைச் சுமந்து கொண்டு பேசியபடியே, மயங்கிச் சரிந்தாள். 

உணர்ச்சிகொதிப்பில் தத்தளித்தவளுக்கு கர்ப்பிணிகளின் இயல்பான இரத்த அழுத்தம் கூடியிருக்க, மனபாரமும் உடல்பாரமும் தாளமுடியாமல் கீழே சரிந்திருந்தாள்.

சடுதியில் மகளை, மரகதம் மடி தாங்கிக் கொள்ள, உடனடியாக தண்ணீர் தெளித்து, அவளை தெளிய வைத்தாலும், முகமும் கண்களும் அயர்ச்சியை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்தது.

“அக்கா, தங்கச்சிய உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ… நான் இங்கே எல்லா வேலையும் முடிச்சிட்டு வர்றேன். போனதும் எனக்கு ஃபோன் பண்ணு” நர்மதாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, வாடகைக் காரில் சகோதரிகளோடு, தாயையும் சேர்த்தே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

அடக்கப்பட்ட கோபங்களும் ஆத்திரங்களும் தயானந்தனின் நடையிலும் இறுகிய முகத்திலும் தெளிவாகத் தெரிய, மிதுனாவைப் பார்த்து,

“வீட்டுக்கு ஒத்த ஆம்பளையா நின்னு மூணு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக் குடுத்தவன்டி உன்புருசன்… பொண்ண பெத்தவங்க மனசு எப்பிடியெல்லாம் கஷ்டபடும்னு அனுபவத்தில தெரிஞ்சுகிட்டவன்.

அதுக்குதான் உங்கம்மா, இதுவரைக்கும் மூஞ்சிய தூக்கி வச்சப்போ எல்லாம், அவங்களும் பொண்ணுங்கள பெத்தவங்கன்னு சும்மா இருந்தேன். எப்போ எங்க வீட்டு பொண்ணு, வெறுத்துப் போய் அழுதாளோ, அப்பவே எனக்கும் இந்த வீட்டுக்கும் உள்ள உறவு முறிஞ்சுடுச்சு…

உன்னை, நான் தடுக்க மாட்டேன், அதே போல என் முடிவுல நீ தலையிடக்கூடாது. இத மனசுல பதிய வச்சுட்டு வீட்டுக்கு வா” தனக்குள் வெடித்த கோபத்திற்கு எல்லாம், மனைவியை வடிக்காலாக்கிக் கொண்டு வெகுண்டவன், தன் வேலைகளை பார்க்க விரைந்தான்.

***********************************************

 

ஓடைக் குளிர் ஓடை என மான்கள் நம்பி ஓடும்

வேளை அது கோடை எழும் கானல் என்று மாறும்

நெஞ்சோடு தோன்றுகின்ற நேசம் யாவும்

நில்லாமல் ஓடுகின்ற நீர் மேகம்….

கண்ணோடு காணுகின்ற கோலம் யாவும்

தண்ணீரில் போட்டு வைத்த கோடாகும்

வழிக்கி வந்தது துணையா – இல்லை

வழுக்கி வீட்டிடும் வினையா – இதை

என்னென்று சொல்வது சித்திரப் பதுமையே..! (பாடல் வரிகள்)