Ninaivalai 10

Ninaivalai 10

காதலின் நினைவலைகள்…

என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன்.
உன்னை மறப்பதாக எண்ணி
மீண்டும் மீண்டும்
உன்னை அதிகமாக காதலித்து
என்னையே நான் ஏமாற்றி கொள்கிறேன்.
வேடிக்கையாக இருக்கிறதா?

ஆனால் அந்த ஏமாற்றத்திலும்
தோன்றும் காதலை
நான் அதிகமாக காதலிக்கிறேன்.

ஏனெனில் அந்த ஒருதலை காதலுக்கு
என்றுமே பிரிவு இல்லை என்பதால்தான்…

வெகுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் மனதில் பூத்த சந்தோஷத்தோடு டைரி எழுதத் தோன்றியது எனக்கு. மனம் இறக்கை கட்டிப் பறக்கும் உணர்வு.

நீண்ட நாட்களுக்குப் பின் கண்ட தேவதையின் தரிசனம் பித்தனாக்கியிருந்தது என்னை.

மாதவியின் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவை வெகு விமரிசையாக நடத்தி, அவளை அவள் ஆசைப்படி அவளது புகுந்த வீட்டிற்கும் அழைத்துச் சென்று விட்டுவிட்டு இன்றுதான் பெங்களூர் வந்து சேர்ந்தேன்.

பெயர் சூட்டு விழாவுக்காக மதுரைக்குச் செல்லும்போதே தெரியும் பூரணி வருவாள் என்று. அவள் முகம் பாராமல் எவ்வளவு கட்டுப்பாடோடு ஒதுங்கி நான் இருந்த போதும், என்னை அசைக்கவென்றே குடும்பப் புகைப்படம் எடுக்கையில் என்னருகே வந்து நின்றவளை என்ன செய்ய?

ஆனந்த அதிர்வோடு நான் அவள் முகம் பார்த்திருக்க, அந்தச் சூழலை அழகாக உள்வாங்கியிருந்தது ஒளிபடக்கருவி. அந்தப் புகைப்படக்காரரை தனியே பிடித்து அந்தப் புகைப்படத்தை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.

தவறுதான்… ஆனால் முரண்டும் மனதை அடக்க முடியவில்லை.
ஒரே குடும்பம் என்றாகிவிட்ட பிறகு குடும்ப விழாக்களில் அவளைத் தவிர்ப்பதென்பது இயலாத காரியம். அப்படியும் வேலையை சாக்கிட்டு நான் ஒதுங்க, தேடிவந்து பேசுபவளை என்ன செய்ய?

“ஏன் மாமா? எங்க ஊருக்கு வந்தப்ப கவனிப்புல ஏதும் குறை வச்சுட்டோமா? கோவிச்சிட்டு ஓடிவந்த மாதிரி பாதியில வந்துட்டீங்க. மறுவீட்டு விருந்துக்கூட வரல. மாதவிக்கா வளைகாப்புக்கு வரல.” ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்டவளை ரகசியமாய் உள்ளே பதிந்து கொண்டேன்.

“அ… அதெல்லாம் இல்ல பூரணி.” நேரடியாய் கண்பார்த்துக் கதைக்க முடியாமல் தடுமாறியவனை ஆபத்பாந்தவனாய் காப்பாற்றியது என் அம்மாதான்.

“அவனுக்கு வெளிநாட்டுல வேலையிருந்தது கண்ணு. அதான் வரலை. இப்ப இந்தியாவுக்கே வந்துட்டான். இனி எல்லா விசேஷத்துலயும் தவறாம கலந்துக்குவான். இப்ப மாதவிய விடறதுக்கு உங்க ஊருக்குகூட அவன்தான் வரான்.”

“அதான பார்த்தேன்… நான்கூட மாமா கோபத்துல இருக்காங்களோன்னு நினைச்சேன்.”

“சேச்சே… எனக்கென்ன கோபம்? அதெல்லாம் எதுவுமில்லை பூரணி.”

“அப்புறம் ஏன் மாமா உம்முன்னு இருக்கீங்க? போனதடவை பாப்பாவப் பார்க்க நான் வந்தப்பகூட என்கூடப் பேசல நீங்க.” என்றவள் அதன்பிறகு என்னை ஒதுங்கவே விடவில்லை.

மாதவியைக் கொண்டுவிட அவர்கள் ஊருக்குச் செல்லும் பயணம் சுகமாக அமைந்தது எனக்கு.

அவர்கள் வீட்டுச் செடியில் பூத்த பூவிலிருந்து மாதவிக்குப் பிறந்த குழந்தை வரை ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தது அவளுக்கு பேசுவதற்கு. வாய் ஓயாமல் பேசியவள் என்னையும் இயல்பாக பேச்சினூடே இழுத்துக் கொண்டாள்.

என்னுடன் தயக்கமின்றி பழகியவள் வியக்க வைத்தாள் என்னை. புகுந்த வீட்டில் சதாசர்வ காலமும் என்னைப் பற்றியே மாதவி பேசியதன் விளைவு இதுவென்று புரிந்தது எனக்கு.

அதன்பிறகு என் கண்ணும் மனமும் என் கட்டுப்பாட்டில் இல்லை. முழுக்க முழுக்க தளும்பத் தளும்ப அவளை நிரப்பிக் கொண்டேன்.

திருவண்ணாமலையில் மாதவியைக் கொண்டு விட்டுவிட்டு நான் நேராக இங்கு வந்து சேர்ந்ததும்தான் நிதர்சனம் புரிந்தது எனக்கு. இதுவரை முட்டாள்களின் சொர்க்கத்தில் இருந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது.

பொருந்தாக் காதல் கைசேருவது கடினம் என்பது உரைக்க, மீண்டும் ஒருமுறை எடுத்த முடிவுகளை மனதில் ஓட்டி என்னை நானேக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இரண்டு மாதங்களுக்கு முன், நியூயார்க்கில் இருந்து வேலையை நிரந்தரமாக விட்டுவிட்டு இந்தியா திரும்பியவன், பெங்களூரில் உள்ள இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கான, புகழ்பெற்ற தனியார் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், எனது நண்பன் சேகர் மூலமாக செய்துவிட்டுதான் மதுரைக்கே சென்றேன்.

மாதவிக்குக் குழந்தை பிறந்திருந்த நேரமது. குழந்தையைப் பார்க்க வினோத்தும் பூரணியும் குடும்பத்தோடு வந்திருந்தனர் அப்போது.

வேலையை விட்டதையும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கான பயிற்சிக்காக பெங்களூருவில் தங்கிப் படிக்கப் போவதையும் சொன்னபோது அனைவருமே அதிர்ந்து போனார்கள். என்னுடைய இந்த முடிவை முதலில் ஏற்க முடியவில்லை யாராலும்.

“ஏன் மாப்ள லட்சத்துல சம்பாதிச்ச வேலைய இப்படி திடுதிப்புன்னு விட்டுட்டு வந்திருக்கற? ஏதோ பரிட்சை எழுதப் போறேங்குற. என்ன மாப்ள இதெல்லாம்?” மாமா.

“இந்தியாவுக்கே வந்துடச் சொல்லி நீங்கதான சொன்னீங்க.” மாமாவின் கேள்விக்கு ஆச்சியைப் பார்த்துதான் பதில் சொன்னேன்.

“அது சரிதான்ய்யா. இங்க வந்து அந்த வேலையத் தொடர வேண்டியதுதான? எதுக்குய்யா வேலைய விட்ட?”

“எனக்கு அந்த வேலை பிடிக்கல ஆச்சி.”

“ஏம்பா நீ ஆசைப்பட்ட படிப்பு. படிச்சு முடிக்கவும் வேலை. நாங்க ஒரு வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறதை ஒரு மாசத்துல சம்பாதிக்கிறவன் நீ. ஏன்யா வேலைய விட்ட?” ஆதங்கத்தோடு அண்ணன்.

“எனக்கு இன்னும் படிக்கனும் போல இருக்குண்ணா. அதான் வேலைய விட்டுட்டேன்.”

“ஏன் ஆனந்தா உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உனக்கு கல்யாணம் பேசனும்னு நினைக்கும் போது வேலைய விட்டுட்டு வந்திருக்கற. முதல்ல நீ வேலையில சேரு.” அப்பா.

சூழ்ந்து நின்று அனைவரும் பேசியபோதும் என் முடிவில் மாறாமல் உறுதியாக நின்றேன். வினோத்தும் மாதவியும்கூட தனிமையில் என்னிடம் பேசிப்பார்த்தனர்.

அதுவரை அமைதியாக நடப்பது அனைத்தையும் பார்த்திருந்த பெரியப்பா,

“எல்லாரும் அமைதியா இருங்க. இது ஆனந்தனோட முடிவு. யோசிக்காம எடுத்திருக்க மாட்டான். மாப்ள சொன்ன மாதிரி நாம ஒரு வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறதை அவன் ஒரு மாசத்துல சம்பாதிக்கிறவன். அப்பேர்ப்பட்ட வேலைய விட்டுட்டு வந்திருக்கறான்னா அவன் எவ்வளவு யோசிச்சிருப்பான்?

அவனுக்கு எது விருப்பமோ அதைச் செய்யட்டும். அவன் ஆசைப்பட்டத செய்ய அவனுக்கு உரிமை இருக்கு.”
நிறுத்தி நிதானமாக அவர் பேசிய பிறகு யாருமே எதிர்த்துப் பேசவில்லை.

“ஆனந்தா, எத்தனை வருஷப் படிப்புய்யா இது?”

“வருஷக் கணக்கெல்லாம் சொல்ல முடியாது பெரியப்பா. நான் படிக்கறதப் பொறுத்துதான் இருக்கு.”

“இப்படிச் சொன்னா எப்படிய்யா? காலாகாலத்துல உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கனும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா?” வருத்தத்தோடு சொன்னவரைப் பார்த்து எனக்கும் வருத்தமாக இருந்ததுதான். ஆனால், என்ன செய்ய? அவர் மனம் நோகாமலிருக்க பொய்யாக ஒரு பதிலைச் சொன்னேன்.

“எனக்கு ஒரு இரண்டு வருஷம் கொடுங்க பெரியப்பா. அதுக்கப்புறம் நீங்க சொல்றதைக் கேட்கிறேன்.” அதன்பிறகு அனைவருமே அமைதியாகிப் போனார்கள், ஏதோ இந்த மட்டிலுமாவது ஒப்புக் கொண்டேனே என்று.

தங்குமிடம் பற்றி விசாரித்தவர்களுக்கு சேகருடன் தங்கப் போகிறேன் என்றதும் கொஞ்சம் ஆசுவாசமானது.
தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கீழ்தளத்தில் நானும் சேகரும் பகிர்ந்து கொள்ள, மேல் தளத்தில் எங்களுடன் பயிலும் மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

அவர்கள் மூவரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பிறப்பால் தமிழர்கள் என்ற உணர்வுமட்டுமே எங்களை ஒன்றாக இணைத்தது.

பெங்களூருக்கு வந்த பிறகு எதைப்பற்றியும் நினைக்க எனக்கு அவகாசம் இல்லைதான்.

வாரநாட்கள் முழுவதும் பயிற்சி வகுப்புகளுக்குப் போவதும், வார இறுதியில் படிப்பதற்குத் தேவையான குறிப்புகளை ஐவரும் இணைந்து தயாரிப்பதிலும் கழிகிறது.

என்னைத் தவிர மற்ற நால்வருக்குமே இந்தப் பயிற்சியும் தேர்வுகளும் சிறுவயதிலிருந்து வகுத்துக் கொண்ட லட்சியம்.

இடைவிடாத முயற்சி இருந்தது அவர்களிடம். எனக்கோ புதிதாக அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம். படிக்கும் நேரம் முழுவதும் இணைந்தே இருந்தோம்.

ஆனால் எவ்வளவுதான் நெருங்கிப் பழகினாலும், சில விஷயங்கள் அவர்களிடம் எனக்கு ஒட்டவில்லைதான். தங்கள் லட்சியத்துக்காக அயராது உழைப்பவர்கள் சிறிது ஓய்வு கிடைத்தாலும் அதைச் செலவிடும் முறை எனக்குப் பிடிப்பதில்லை.

மதுவும் கேளிக்கை விடுதிகளும் வெளிநாட்டில் இருந்த போதே என்னைக் கவர்ந்ததில்லை, என்றுமே அவற்றுக்கு நான் இடம் கொடுத்ததில்லை. ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் வேறாய் இருந்தது. அதுவே அவர்களிடம் இருந்து என்னைத் தள்ளி நிறுத்தியது.

ஆனால் சேகரும் அவர்களோடு இணைந்து கொள்வதைத் தடுக்க முடிவதில்லை என்னால். இந்த ஒருவிஷயத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் என் நாட்கள் கழிகின்றன.

எப்பொழுதாவது பூரணியின் நினைவு மனதைக் குடையும் போது மன அமைதிக்காக இயற்கையைத் தேடி ஓடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். அதிலும் வெகுவாக என்னை ஈர்த்தது சிக்மகளூர்தான்.
இங்கிருந்து சில மணி நேரப் பயணம்தான். பூரணியின் நினைவு வரும்போதெல்லாம் இயற்கை அன்னையின் தாலாட்டில் லயித்து மனதைத் துளைக்கும் வலிக்கு மருந்திட்டுக் கொள்வேன்.

ஆனால், இவ்வளவுநாள் நான் முயன்று அடக்கி வைத்திருந்த மனதை இந்த முறை நன்றாக சலனப்படுத்தியிருந்தாள் பூரணி.

அவளது நினைவுகள் புதைமணல்… என்னை உள்வாங்கிக் கொள்ளும் என்று தெரிந்த போதும் சுகமாக அமிழத் துவங்கினேன்.

அலையடிக்கும்…

error: Content is protected !!