nk12

நிலவொன்று கண்டேனே 12

‘எம்.எல்.ஏ அன்பரசு கைது’
அனைத்துப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தி இதுவாகத்தான் இருந்தது. காட்டில் வைத்துப் பிடிபட்ட கும்பலை தீர விசாரணை செய்ததில் ஒரு பெரிய நெட்வேர்க்கே அம்பலத்திற்கு வந்தது.
விசாரணைகள் அனைத்தும் மிகவும் ரகசியமாகவே நடைபெற்றன.
அரசியல்வாதிகளுக்கு எல்லா இடங்களிலும் விசுவாசிகள் இருப்பதால் எல்லா நடவடிக்கைகளிலும் ரகசியம் பேணப்பட்டது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு நாட்கள் ரகசிய வலை விரிப்பின் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
எங்கேயும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அதிகாரிகள் இடமளிக்கவில்லை. 
அந்தச் சிறிய ஹாலில் ப்ரெஸ் மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது. சப் கலெக்டர், வனத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்ஜிதமான தகவல்கள் எதுவும் அரசாங்க தரப்பில் இருந்து வெளியாகாததால் மக்கள் தங்கள் இஷ்டத்துக்கு கண், மூக்கு வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நித்திலா தான் முதலில் பேச ஆரம்பித்தாள். கூடியிருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தவள் நடந்த நிகழ்வுகளை விபரித்தாள். 
“கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள், மற்றும் போலீஸ் அதிகாரிகளின் துணையோடு அரசாங்கத்துக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் இருந்து மரங்களைக் கடத்திய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது.”
“இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த நிகழ்வின் போது கைப்பற்றப்பட்ட மரங்கள், வாகனங்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.”
“கைதானவர்களைத் தீர விசாரித்த போது இதில் பெரிய பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.”
“ரகசிய விசாரணைகளின் பின்னர் இரண்டு நாள் தீவிரத் தேடுதலில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் பாரபட்சமில்லாமல் கைது செய்யப்பட்டனர்.”
“விசாரணையின் போது கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்கு மூலங்களும் மாஜிஸ்ட்ரேட்டின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. குற்றங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மேல் உறுதியானதால் மாஜிஸ்ட்ரேட் வழங்கிய வாரண்ட்டின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.”
“வெறும் சந்தேகத்தின் பெயரில் ஆரம்பித்த இந்தத் தேடுதல் வேட்டையில் என் தோளோடு தோள் நின்ற என் சக அதிகாரிகளுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.”
“எங்கேயும் விஷயங்கள் கசியாமல் குற்றவாளிகளைக் கைது செய்ய அவர்கள் பெரிதும் உதவி இருக்கிறார்கள்.” பேசி முடித்தவள் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.
கூடியிருந்த நிருபர்கள் கடகடவென அவள் பேசிய அனைத்தையும் சுருக்கெழுத்தில் மாற்ற, கேமராக்கள் பளிச் பளிச்சென்று மின்னலடித்துக் கொண்டிருந்தன.
கேள்விகளுக்கான நேரம். நித்திலா கொஞ்சம் வீரியமான ஏவுகணைகளைத் தான் எதிர்பார்த்திருந்தாள். பக்கத்திலேயே யுகேந்திரன் அமர்ந்திருந்தான். முகத்தில் ஒரு கடினத்தன்மை தெரிந்தது.
“மேடம், இதுக்கு முன்னாடியும் இப்படிக் கடத்தல்கள் நடந்திருக்கா?”
“ஆமா. ரெண்டு தரம் இது மாதிரி பண்ணி இருந்திருக்காங்க.”
“ஃபாரெஸ்ட் அதிகாரிகள் கவனத்துல இருந்து அது எப்படித் தப்பிச்சுது மேடம்?”
“அதுக்குப் பேர் தான் கடத்தல் சார். கடத்த வர்றவங்க அவங்ககிட்ட சொல்லிட்டா கடத்துவாங்க?” அந்த இடத்தில் மெல்லிய சிரிப்பொலி கேட்டது.
“அப்படி இல்லை மேடம். மரத்தைக் கடத்துறது எங்கிறது சின்ன விஷயம் கிடையாது. மரங்களை வெட்டும் போது அந்த இடத்துல நிறைய சேதங்கள் வரும். அது கூடவா ஆஃபீசர் பார்வையில இருந்து தப்பியிருக்கு?” 
“குட், நல்ல கேள்வி. இதுக்கு, சம்பந்தப்பட்ட ஆஃபீசர் தான் பதில் சொல்லணும்.” சொல்லிவிட்டு யுகேந்திரனைத் திரும்பிப் பார்த்தாள் நித்திலா.
முகம் பொலிவிழந்து போயிருந்தது. இரண்டு நாட்களும் அதிக அலைச்சல் இருந்தாலும் அதையும் தாண்டிய சோர்வு அவன் முகத்தில் தெரிந்தது.
“நீங்க சொல்லுறது சரிதான். மரங்களை வெட்டி இருந்தா அந்த இடத்துல நிறைய சேதங்கள் வரும். சுற்றி வர இருக்கிற தாவரங்கள் பாதிக்கப்படும். அதை வைச்சே ஈசியா கண்டு பிடிச்சிடலாம்.”
“அப்போ இது எப்பிடி ஆஃபீசர் சாத்தியமாச்சுது?”
“வன வளப் பாதுகாப்புச் சட்டம் 1972 ன் அடிப்படையில் 2007 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் பரப்பளவுள்ள காட்டு ஏரியாவை அரசாங்கம் விஸ்தரிப்புச் செய்தது.”
“இந்தப் பரப்பளவில இருக்கிற காடு முழுவதும் தேக்கு மரங்கள் நிறைந்த பகுதி. அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் வெட்டப்பட்ட மரங்கள் இங்கு பாதுகாப்பான முறையில பேணப்படுது. இது முழுக்க முழுக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான மரங்கள். இந்தக் கடத்தல் அங்க தான் நடந்திருக்கு.”
“நீங்க சொல்லுற தகவல் ரொம்பவே புதுசா இருக்கு சார். அப்பிடி இருக்கும் போது யாரு இவ்வளவு துல்லியமா தகவலறிந்து வேலை பார்த்திருக்காங்க?”
“அது தெரியலை சார். ஆனாப் பக்காவா ப்ளான் பண்ணி வேலை பார்த்திருக்காங்க.” சொல்லிய யுகேந்திரன் தலையைக் குனிந்து கொண்டான்.
குரல் கம்மிப் போயிருந்தது. இனி கேள்விக் கணைகள் எப்படிப் பாயும் என்று அவனுக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் சமாளிக்கத் தான் வேண்டும்.
“அது எப்படி சாத்தியம் சார்? இவ்வளவு சீக்ரெட்டான விஷயம் எப்படி லீக் ஆகிச்சு?”
“ரொம்ப சீக்ரெட் ன்னு சொல்ல முடியாது சார். கொஞ்சம் இறங்கி தகவல் சேகரிச்சா கண்டு பிடிக்கலாம்.”
“இந்தத் தகவல் உங்க மூலமா வெளியே போறதுக்கும் வாய்ப்பிருக்குத் தானே சார்? ஏன்னா சம்பத்தப்பட்டவங்க உங்க குடும்பத்திலேயே இருக்காங்க.”
கேள்வி நிதானமாகப் பாய்ந்து யுகேந்திரனின் மார்பைப் பதம் பார்த்தது. அவன் மௌனிக்க பதில் நித்திலாவிடம் இருந்து வந்தது.
“அப்படிப் போக வாய்ப்பு இருந்திருந்தா குற்றவாளிகளைப் பிடிக்கிறதுக்கு முன்னாடியும் தகவல் போயிருக்குமே சார். அவங்க தப்பிக்கலைங்கிறதே போதுமான ஆதாரம் தானே?” அவள் பதிலில் நியாயம் இருந்தது.
“ஏன் மேடம்? உங்களுக்கும் யுகேந்திரன் சாருக்கும் இடையில…” அந்த நிருபர் கேள்வியை முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டான் யுகேந்திரன்.
“ப்ளீஸ் சார்… பர்சனல் கேள்விகள் கேட்காதீங்க.” முந்திக் கொண்டு பதில் சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள் நித்திலா.
“விடுங்க கவிஞரே, தடுக்காதீங்க. அப்பிடி என்னத்தைக் கேட்டிடப் போறாங்க.” அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாகச் சொன்னவள் அந்த நிருபரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“யூ கோ அஹெட்.”
“இல்லை மேடம்… உங்களுக்கும் யுகேந்திரன் சாருக்கும் இடையில ஒரு அழகான நட்பு இருக்கிறது எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த நட்பு உறவா மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறதா சொல்லுறாங்க. அதுக்கும் இந்தக் கேஸுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?”
கேள்வி கேட்டவர் மிகவும் நாகரிகமாகத்தான் கேட்டார். வம்பு வளர்க்கும் நோக்கத்துடன் அந்தக் கேள்வி கேட்கப்படவில்லை என்று தெளிவாகப் புரிந்தது.
“நட்பு, உறவு இது எல்லாத்தையும் தாண்டி கடமைன்னு ஒன்னு இருக்கு சார். சட்டம் எப்போதும் தன் கடமையைச் செய்யும்.” சொல்லிவிட்டு அத்தோடு அந்த மீட்டிங்கை முடித்துக் கொண்டாள் நித்திலா.
யுகேந்திரன் அமைதியாகவே இருந்தான். ஃபோனுக்கு ஏதோ ஒரு கால் வரவும் அதில் மும்முரமாக இருந்தான். மிச்சம் மீதியாகத் தொடர்ந்த கேள்விகளுக்கும் நித்திலாவே பதில் சொல்லியபடி இருந்தாள்.
கொஞ்சம் பரபரப்பாக அவள் அருகில் வந்தவன்,
“நித்திலா, கொஞ்சம் சீக்கிரமா கிளம்பணும். முடிச்சிட்டு அவசரமா காருக்கு வா.” யாரையும் கவரா வண்ணம் நாசூக்காக அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னவன், மெதுவாக நகர்ந்து விட்டான்.
நித்திலாவும் தேவையில்லாத கேள்விகளைத் தவிர்த்து விட்டு முடிந்தவரையில் சீக்கிரமாக வந்து சேர்ந்தாள்.
“என்னாச்சு யுகீ? ஏதாவது ப்ராப்ளமா?” கேட்டபடியே அவள் காரில் ஏற சட்டென்று காரைக் கிளப்பினான் யுகேந்திரன்.
“ம்… தாத்தா கூப்பிட்டிருந்தாங்க. அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.”
“ஐயோ! என்ன ஆச்சு?”
“லேசா ப்ரெஷர் ஏறிடுச்சாம். நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னாங்களாம். அதான் தாத்தா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க.”
“ஓ…” அதற்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த ப்ளாக் ஆடி அமைதியாக ஹாஸ்பிடல் வளாகத்தில் போய் நின்றது.
ரூம் நம்பரைத் தாத்தா சொல்லி இருந்ததால் இருவரும் நேராக ரூமிற்கே சென்றார்கள்.
வானதி பெட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இடது மேல் கையில் ஒவ்வொரு அரை மணித்தியாலமும் ப்ரெஷ்ஷரைச் செக் பண்ணுவதற்காக கஃப் சுற்றப் பட்டிருந்தது.
கதவு திறந்த சத்தத்திற்கு லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தவர், நித்திலாவைக் காணவும் புன்னகைத்தார்.
“அத்தை…” அழைத்தபடி அவர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள் நித்திலா.
“என்னாச்சும்மா?” கேட்டபடியே யுகேந்திரனும் போய் அருகில் நின்று கொண்டான்.
“ஒன்னுமில்லை… லேசா நெஞ்சு வலிச்சுது. தாத்தாக்கிட்ட சொன்னேன். உடனேயே இங்க இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க.”
“அப்பிடி இல்லை அத்தை. நெஞ்சு வலியை எல்லாம் அவ்வளவு சிம்பிளா எடுத்துக்கக் கூடாது.”
“ம்… அதுவும் சரிதான். அதை விடும்மா, எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கீங்க ரெண்டு பேரும்?” 
வானதியின் கேள்வியில் நித்திலா மட்டுமல்ல, யுகேந்திரனுமே கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். என்ன மாதிரியான கேள்வி இது? அதுவும் இந்த நேரத்தில்.
“அத்தை…” இளையவளின் தயக்கத்தில் புன்னகைத்தார் வானதி.
“ஏம்மா? எதுக்குத் தயங்குற? சொல்ல வந்ததை தாராளமா சொல்லு.” அவர் ஊக்குவிக்கவும் யுகேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா. அவனுமே அமைதியாக நின்றிருந்தான்.
“இல்லை… இந்த நிலைமையில கல்யாணப் பேச்சு…” நித்திலா முழுதாக முடிக்கவில்லை. வானதி முகத்தில் லேசான புன்முறுவல் தோன்றியது.
“நித்திலா… ஒரு வகையில பார்த்தா… நான் உங்கிட்ட மன்னிப்புக் கேக்கணும்மா.”
“அத்தை, என்ன பேச்சு இது?”
“இல்லையில்லை… முழுசாக் கேளு. உன்னை முதல் முதலா பார்த்தது நான் தான். அப்போல்லாம் யுகி கேலி பண்ணுவான். உன்னை டீவீ ல காட்டினா, அம்மா உன்னோட ஹீரோயின் வர்றான்னு சொல்லி கிண்டல் பண்ணுவான். அப்போ நான் தான் கேட்டேன். என்னோட ஹீரோயினை பேசாம உனக்கு ஹீரோயினா மாத்திடலாமான்னு…”
புன்னகையோடு பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தினார். முகம் சுருங்கிப் போனது. ஏதோ ஒரு கசப்பை விழுங்க முயற்சிப்பது போல கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டார்.
“ஆனா… இப்பிடி ஒரு கேடுகெட்ட குடும்பத்துல உன்னைக் கொண்டு வந்து சிக்க வெச்சுட்டேனே நித்திலா.”
“அத்தை…” நித்திலா அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போக, யுகேந்திரன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“என்ன பேசுறீங்க நீங்க?‌ என் புருஷனை சமாளிக்கிறது உன் புருஷன் பாடுன்னு சொன்ன நீங்களா இப்பிடிப் பேசுறீங்க?”
“அப்போ இருந்த நிலைமை வேற நித்திலா.”
“ஏன்? இப்போ என்ன ஆகிப் போச்சு அத்தை? இதே தப்பை உங்க பையன் பண்ணியிருந்தா நான் என்ன பண்ணி இருப்பேன்?”
“என்ன பண்ணி இருப்பே?”
“கண்டிப்பா தண்டனை வாங்கிக் குடுத்திருப்பேன். அவர் பண்ணினது தப்புன்னு அவருக்கு புரிய வெச்சிருப்பேன். அதுக்காக அவரைத் தூக்கித் தூரப் போட்டுற முடியுமா?”
“உன்னளவுக்கு எனக்குப் பெரிய மனசில்லைம்மா.” வானதியின் கண்களில் லேசாக நீர் கோர்த்தது.
“அத்தை… ப்ரெஷர் ஏறியிருக்கு.‌ நீங்க எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு மருகிறீங்க. அழுதிடுங்க… பாரம் தீர அழுதிடுங்க அத்தை.” 
அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம், தன் இரு கைகளாலும் முகத்தை மூடிய வானதி குலுங்கிக் குலுங்கி அழுதார். அவரை வாரி அணைத்துக் கொண்ட நித்திலா தலையைத் தடவிக் கொடுத்தாள்.
யுகேந்திரன் இவர்களுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று கொண்டான். மனம் கனத்துப் போனது. 
அன்று காலையில் தான் வானதிக்கு விஷயத்தைச் சொல்லி இருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் காட்டில் வைத்து கைது பண்ணியவர்களைத் தீர விசாரித்ததில் பல விஷயங்கள் வெளி வந்தன. 
இந்த விஷயத்தில் கொஞ்சம் பெரிய புள்ளிகள் சம்பந்தப் பட்டிருப்பது தெரியவந்தது. விஷயம் எந்த வகையில் கசிந்தாலும் அவர்களை எல்லாம் கைது பண்ணுவது சிம்ம சொப்பனம் என்பதால் யாரும் வாய் திறக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வானதியின் காதுகளுக்கு செய்தி போவதை யுகேந்திரன் விரும்பவில்லை. உணர்ச்சி வசப்பட்டு அவர் அன்பரசைத் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் இருந்ததால் அதைத் தவிர்த்திருந்தான்.
ஆனால், கைது பண்ணிய பிறகு எந்த ஒளிவு மறைவும் தேவையில்லை என்றே தோன்றியது. காலையில் வானதியை உட்கார வைத்து நிதானமாக அவர் தலையில் இடியை இறக்கினான் மகன்.
ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்தவன் தாயின் அமைதியில் கொஞ்சம் ஆச்சரியப் பட்டுத்தான் போனான். மின்னாமல், முழங்காமல் இறங்கிய இடி என்பதாலோ என்னவோ வானதி அமைதியாகத் தான் அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.
அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. சோகமா? ஏமாற்றமா? கோபமா? எதுவென்று சொல்லத் தெரியாத ஒன்று அவரைப் பாறை ஆக்கி இருந்தது.
அவரை அப்படியே தனியே விட்டுச் செல்ல மனமின்றி தாத்தாவின் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தான் யுகேந்திரன்.
அன்று முழுவதும் நித்திலாவும், யுகேந்திரனும் வானதிக்குத் துணையாக ஹாஸ்பிடலிலேயே இருந்தார்கள். வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று டாக்டர் அனுமதி கொடுத்த போதும் சத்தியமூர்த்தி சம்மதிக்கவில்லை.
ஒரு நாள் ஹாஸ்பிடலில், டாக்டர் கண்காணிப்பில் இருக்கட்டும் என்று முடித்து விட்டார். சொந்தத்தில் ஒரு பெண்மணியை வானதிக்குத் துணையாக இருத்தி விட்டு வீடு திரும்பினார்கள் இருவரும்.
நல்ல களைப்பில் இருந்தாள் நித்திலா. அன்றைய பொழுது முழுவதும் ஹாஸ்பிடலில் கழிந்து போனது. வானதி எவ்வளவோ சொல்லியும் வீட்டுக்குப் போக மறுத்து விட்டாள்.
லேசாக இருள் சூழ்ந்திருந்தது.‌ யுகேந்திரன் இன்று அதிகமாக எதுவும் பேசவில்லை. என்ன? வானதி அழுது தீர்த்து விட்டார், யுகேந்திரன் அழவில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.
“யுகீ…”
“ம்…” ட்ரைவ் பண்ணிய படியே பதில் வந்தது.
“சாப்பிட்டுட்டே போகலாம், வீட்டுக்கு வாங்க.”
“ம்…” ஒற்றை வார்த்தையோடு முடித்தவன் காரை வீட்டிற்கு முன் பார்க் பண்ணினான். இவன் தலையைக் காணவும் பங்கஜம் அம்மா ஓடி வந்து வரவேற்றார்.
“வாங்க தம்பி… நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேம்மா.”
“பங்கஜம் அம்மா.” நித்திலாவின் குரல் இடைபுகுந்தது.
“சொல்லு கண்ணு.”
“யுகேந்திரனும் இன்னைக்கு இங்க தான் சாப்பிடப் போறாங்க.”
“ஓ… தாராளமாச் சாப்பிடட்டும் கண்ணு. எல்லாத்தையும் மேஜை மேலே வெச்சிடவா?”
“ம்…” சொன்னவள் அவனை அவள் ரூமிற்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு ரூமிற்கு அழைத்துச் சென்றாள்.
“சாரி கவிஞரே! உங்களுக்குக் குடுக்க எங்கிட்ட ட்ரெஸ் இல்லை. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.” சொன்னவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.
பங்கஜம் அம்மா பரிமாற இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். அன்று அமாவாசை போலும். வானில் நிலாவின் ஊர்வலத்தைக் காணவில்லை. 
மழை வரும் அறிகுறிகள் லேசாகத் தெரிந்தது. காற்றின் ஈரப்பதன் கூட சற்றுத் தூக்கலாக இருக்க குளிர்ந்த தென்றல் தேகத்தைத் தழுவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த அந்தச் சின்னத் தோட்டத்தில் போய் அமர்ந்து கொண்டான் யுகேந்திரன்.
நித்திலா வைத்திருந்த பூச்செடிகள் பூக்க ஆரம்பித்திருந்தன. மல்லிகைச் செடி அப்போதுதான் ஒன்றிரண்டாகப் பூத்திருந்தது. 
அந்தப் பூவில் ஒன்றைக் கொய்து முகர்ந்து பார்த்தவன் பக்கத்தில் வந்தமர்ந்த நித்திலாவின் தலையில் அதைச் சொருகி விட்டான். 
“யுகீ! இது நான் வெச்ச செடிதான் தெரியுமா?'”
“ஓ… அதான் வாசனை அட்டகாசமா இருக்கோ?” அவன் கேள்வியில் முறைத்தவளைப் பார்த்துக் கண்ணடித்தான் கவிஞன்.
“அட! கவிஞருக்கு இதெல்லாம் வருமா?” கவலைகளைக் கொஞ்சம் அவன் மறந்திருப்பது புரியவும் நித்திலாவும் கேலியில் இறங்கினாள்.
“கவிஞருக்கு இன்னும் என்னெல்லாமோ வரும். ஆனால் நீதான் என் கையைக் கட்டிப் போட்டுவிட்டாயே கண்ணம்மா.” அவன் வாய்மொழியில் அவள் தலையைக் குனிந்து கொண்டாள். முதல் முதலாக அவன் தீண்டிய பொழுது மின்னலாக அவள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.
“நீ எந்த வகைப் பெண் கண்ணம்மா? பாரதி சொன்னானே… அப்படியா?
பகைவனுக் கருள்வாய் – நன்னெஞ்சே!
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ- நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ…”
அவன் பாராட்டில் நெகிழ்ந்து போனாள் நித்திலா. அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் யுகேந்திரன். பெண் அனுமதித்தாள்.
“உறவுகளுக்காக நான் நிறையவே ஏங்கி இருக்கேன் யுகீ. ஒரு உறவை என்னால சட்டுன்னு விட்டுக் குடுக்க முடியாது.”
“…………”
“எந்த வகைப் பொண்ணுன்னு கேட்டீங்களே? நான் எந்த வகை கவிஞரே?” அவள் கேள்வியில் தன்னிடமிருந்து அவளைப் பிரித்தவன், ஆச்சரியமாக அவள் முகம் பார்த்தான்.
“ஏய்… உனக்கு அத்தனை தூரம் தமிழ் தெரியுமா பெண்ணே?”
“ஓரளவுக்கு…”
“நிச்சயமாக நீ ‘அத்தினி’ இல்லை…”
“சரி…”
“அவளுக்கு அழகும் இல்லை… குணமும் இல்லை…”
“ம்…”
“நீ ‘சங்கினி’ யும் அல்ல… அவள் அழகிதான்… ஆனால் குணமில்லாதவள்.”
“சரி…”
“நீ ‘பத்தினி’ யா? இல்லை ‘சித்தினி’ யா? யார் பெண்ணே நீ? என் பத்தினியா?”
“நான் சித்தினி கவிஞரே!”
“ஏனப்படி?”
“பத்தினியிடம் எல்லா நல்ல பண்புகளும் உண்டு. கற்பு நெறி தவறாதவள், அழகி, எல்லோரிடமும் அன்பாக இருப்பவள், கணவனிடம் காதல் கொண்டவள், தெய்வபக்தி உள்ளவள். ஆக மொத்தம் பெண்ணின் இலக்கணம் அவள்.”
“சரி…” அவள் விளக்கத்தில் புன்னகைத்தான் யுகேந்திரன்.
“ஆனால் இந்தப் பண்புகள் எல்லாம் சித்தினியிடமும் இருந்தாலும்… அவளிடம் இன்னொரு விஷயம் இருக்கும் கவிஞரே!”
“என்ன கண்ணம்மா?”
“தனக்கு வரப்போகும் கணவன் தன்மீது காதல் கொண்டவனாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாளாம்.” சொல்லி முடித்தவள் நாணத்தோடு அவன் முகம் பார்த்தாள்.
யுகேந்திரனின் பார்வை மாறிப்போனது. கிறக்கத்தோடு அவளையே பார்த்திருந்தான்.
“நீங்கள் எந்த வகை கவிஞரே?”
“அதையும் நீயே சொல்லி விடு கண்ணம்மா.”
“நீங்கள் ‘குதிரைசாதி’ இல்லை… அவர்கள் கறுப்பாக இருப்பார்கள்… குணமும் சரியில்லை.”
“ம்…”
“காளை சாதியுமில்லை… அழகாக இருந்தாலும் குணமில்லை.” அவன் பாணியிலேயே பதில் சொன்னாள்.
“சரி… அப்படியென்றால் ‘மான் சாதி’ யா? ‘முயல் சாதி’ யா? எந்தச் சாதி நான்?”
“மான் சாதி நீங்கள்.”
“அது ஏன்? முயல் சாதி லட்சணம் கொண்ட ஆண்களும் நல்லவர்கள் தானே? அழகானவர்கள், தெய்வபக்தி உள்ளவர்கள், நல்லொழுக்கம் உள்ளவர்கள், மரியாதையாக நடந்து கொள்வார்கள்.”
அவன் அடுக்கிக் கொண்டு போகவும் சிரித்தாள் நித்திலா. கேள்வியாகப் பார்த்தான் யுகேந்திரன்.
“அத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் இவர்கள் மென்மையானவர்கள். ஆனால் ‘மான் சாதி’ யில் உள்ளவர்கள்… இத்தனை சிறப்போடு உண்மைக்கும் குரல் கொடுப்பார்கள். கண்டிப்பும் உறுதியும் அவர்களிடம் இருக்கும். அத்தோடு…”
“அத்தோடு…” அவன் குரலில் இப்போது விஷமம் கூடி இருந்தது.
“இவர்களிடம் மென்மை இருக்காது. ரொம்பவே கடினமான உடல் வாகு….” அவளை முழுதாக முடிக்க விடாமல் மீண்டும் இழுத்தணைத்தவன் அவளைக் கொஞ்சித் தீர்த்தான்.
“அப்படி என்ன கடினத்தை என்னிடம் கண்டுவிட்டாய் கண்ணம்மா? அந்த ஒற்றை முத்தத்தில் என் ஒட்டு மொத்தக் கடினத்தையும் உனக்கு நான் காட்டி விட்டேனா என்ன?”
அவள் முகமெங்கும் முத்தம் பதித்தபடி கவிஞன் உளற ஆரம்பித்திருந்தான். கலகலவென சிரித்தபடி அவனைத் தள்ளி விட்டவள் அதே சிரிப்போடு வீட்டினுள் ஓடி விட்டாள்.
மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது. தன் ஒற்றைக் கையால் தலையைக் கோதியபடி போகும் தன் காதலியையே பார்த்திருந்தான் கவிஞன்.