nk9

nk9

நிலவொன்று கண்டேனே 9
அன்று யுகேந்திரன் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தான். வாய் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்த படியே இருந்தது.
மிகவும் சிரத்தை எடுத்து ரெடியாகிக் கொண்டிருந்தான். கோயம்புத்தூரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் அன்று விழா. மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.
இதில் விசேஷம் என்னவென்றால், அந்த விழாவிற்கு நித்திலாவும் அதிதியாக அழைக்கப்பட்டிருந்தாள். இது ஒன்றே யுகேந்திரனுக்குப் போதுமானதாக இருந்தது.
சிறப்புரையாற்ற அவன் அழைக்கப்பட்ட போது முதலில் பெண்கள் கல்லூரி என்பதால் தயங்கியவன், நித்திலாவின் வருகையை அறிந்ததும் கண்களை மூடிக்கொண்டு தலையாட்டி விட்டான்.
‘பெண்கள் கல்லூரிக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போ’ என்று முன்பொருமுறை அவளைச் சீண்டி இருந்தான். இருந்தாலும், அவன் உள் நோக்கம் ‘பெண்கள் கல்லூரி’ என்பது அல்ல. எப்போதும் தன் பேச்சை ரசிக்கும், பார்த்து வியக்கும் அந்தப் பெண்ணின் பேச்சை ரசிக்கவே ஆசைப்பட்டான்.
இப்போதும், யுகேந்திரனும் ஃபங்ஷனுக்கு அழைக்கப் பட்டிருக்கிறான் என்று அறிந்ததும் மிரண்டு போனாள் பெண்.
‘ஐயையோ! கவிஞரே… நீங்களும் நானும் ஒரே மேடையில பேசுறதா? இது நியாயமா?’ என்று புலம்பி இருந்தாள்.
‘இங்கப்பாரு நித்திலா, ரெண்டு பேரும் போறோம். நீ அங்க பேசுறே.‌ புரியுதா?’ மிரட்டி வைத்திருந்தான் யுகேந்திரன்.
அத்தனை திறமைகளைத் தன்னுள் வைத்துக்கொண்டு எப்போதும் இவனை ஒரு பிரமிப்புடனேயே பார்க்கும் அந்தப் பெண்ணின் பணிவு யுகேந்திரனை மயக்கியது.
வீட்டில் நிற்கும் இன்னொரு காரை ட்ரைவர் முருகனோடு அனுப்பி வைத்திருந்தான். இரண்டு பேரும் ஒன்றாகப் போய் இறங்கினால் வீணான யூகங்களுக்கு இடம் கொடுக்கும் என்பதால் இந்த ஏற்பாட்டைப் பண்ணி இருந்தான்.
ஆனால், விழா முடிந்ததும் அன்றைய தினம் முழுவதும் அவள் அவனோடு தான் என்று ஏற்கனவே சொல்லி இருந்தான். ஆச்சரியம் தரும் விதமாகப் பெண்ணும் சம்மதித்திருந்தாள்.
எப்போதும் போல இப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்திறங்கினான் யுகேந்திரன். முதல்வரே வந்து வரவேற்றார். அவனுக்கு முன்னால் அவர்களின் வீட்டுக் கார் அங்கு வந்திருந்தது. 
உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவன், மற்றைய விருந்தினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டான். இன்னும் இரண்டு மூன்று பேரும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள்.
பொதுவில் எல்லோருக்கும் வணக்கம் வைத்தவன் நித்திலாவைப் பார்த்து லேசாகக் கண் சிமிட்டினான். சுற்றி இருந்தவர்களை சட்டென்று நோட்டமிட்டவள் ஒரு முறைப்போடு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
விழா இனிதாக ஆரம்பிக்க யுகேந்திரனுக்கு முன்னால் ஒருவர் பேசி முடித்திருந்தார். கலை நிகழ்ச்சிகளும் இடையிடையே இடம்பெற்றன. அடுத்து யுகேந்திரனை மேடைக்கு அழைத்தார்கள்.
யுகேந்திரனுக்கும் அன்று கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. மேடை அவனுக்குப் புதிதல்ல. ஆனால, இத்தனை பெண்கள் கூடி நிற்கும் மேடை அவனுக்குப் புதிது.
மேடை ஏறும் வரைதான் அந்தத் தயக்கம். பேச ஆரம்பித்த பின்னால் அனைத்தும் மறந்து போனது. இமைக்காமல் தன்னையே பார்த்திருந்த அந்தப் பெண்ணும் அவனும் தான் அவன் படைத்த உலகில் இருந்தார்கள்.
“இல்லாள் இல்லாத இல்லம் பாழ். இந்த முதுமொழி ஒன்றே போதும், பெண்ணின் பெருமை சொல்ல. இந்தியா குடும்ப அமைப்பை நம்பும் நாடு. இந்தக் குடும்ப அமைப்பின் தலைவியாக இருப்பவள் பெண்.” அந்த இளம் கவிஞனின் பேச்சில் லயித்திருந்தது அரங்கம்.
“ஆண் இல்லாத ஒரு குடும்பத்தை பெண்ணால் தெளிவாக வழி நடத்திச் செல்ல முடியும். ஆனால், பெண் இல்லாமல் போனால் அது குடும்பம் எனும் அமைப்பிலிருந்து மாறுபட்டு விடும்.” இளம்பெண்களின் கரவொலி காதைப் பிளந்தது.
“உலகத்தில் பெண்களைப் பிடிக்காதவர்கள் இருக்கிறார்களா? இல்லை அவர்கள் அழகில் மயங்காதவர்கள் இருக்கிறார்களா? இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால் வாய்ப்புக் கிடைக்காதவர்களாகத்தான் இருப்பார்கள்.” இதை யுகேந்திரன் சொன்ன போது லேசான நகைப்பொலி கிளம்பியது.
“சார் எப்பிடி?” எங்கோ ஓர் மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது. புன்னகையோடே அதை ஏற்ற யுகேந்திரன் பேச்சைத் தொடர்ந்தான்.
நித்திலாவின் முகத்தில் ‘உனக்கு இது தேவைதானா?’ என்ற பாவனையே இருந்தது.
“நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும், ஞானச் செருக்கும் பெண்ணின் தேவை என்கிறார் பாரதியார். இந்தக் குணங்களைக் கொண்ட பெண்தான் ‘செம்மை மாதர்’ என்று போற்றுகிறார்.” 
“சங்க இலக்கியங்களில் ஆணின் இலக்கணமாக இரண்டு விடயங்கள் புனையப்பட்டன. அதிலொன்று, அக வாழ்வில் காதல் மூலம் பெண்ணை வெல்வது. இன்னொன்று, புற வாழ்வில் போர் மூலம் நிலத்தை வெல்வது. ஆனால், எங்கேயும் எப்போதும் வெளிப்பார்வைக்குத் தோற்பது போல தெரிந்தாலும் ஜெயிப்பவர்கள் பெண்கள் தான்.” இதைச் சொன்ன போது நித்திலாவே தன்னை மறந்து கை தட்டினாள்.
“இன்றைய நவீன உலகில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், அவர் திறமைகள் முடக்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இதை என்னால் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. சின்னதாக ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.” சபை ஆர்வமானது.
“இராஜ ரிஷி ஜனகரின் சபையில் வேதாந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மகான்களும், ரிஷிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்று தத்துவங்களை விளக்குகின்றனர். அங்கே பெண் ரிஷியான கார்க்கியும் இடம்பெற்றிருக்கிறார்.”
“யாக்கியவல்கியர் தனது கருத்தை முன்வைத்த போது, ரிஷி கார்க்கி அவரின் கருத்தை ஏற்று அவரை அங்கிகரிக்கிறார். பெண் ரிஷியின் கருத்தை, அங்கிகாரத்தை மிகப் பெரும் பேறாகவே யாக்கியவல்கியர் ஏற்கிறார்.”
“ஒரு பெண் தன்னோடு விவாதிப்பதா? அவரின் அங்கீகாரம் என்பது பெரிதா? என்ற ஆணாதிக்க மனப்பான்மை அப்போது அங்கே ஏற்படவில்லை. இத்தனைக்கும் யாக்கியவல்கியர் என்பவர் யார் தெரியுமா?” ஒரு கேள்வியோடு நிறுத்தினான் யுகேந்திரன்.
சபையே மௌனமாக இருந்தது. பார்வையை ஒரு முறை சுழல விட்ட யுகேந்திரன் நித்திலாவிடம் இறுதியாக வந்து நின்றான்.
“யசுர் வேதத்தை இயற்றியவர்.” உட்கார்ந்த இடத்தில் இருந்த படியே பதில் சொன்னாள் பெண். யுகேந்திரன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை ஒன்று ஒளிர்ந்தது. அந்தப் புன்னகையில் இளம்பெண்கள் பலர் வீழ்ந்து தான் போனார்கள்.
“யசுர் வேதத்தை இரண்டாகப் பிரிக்கலாம். சுக்கில யசுர் வேதம், கிருஷ்ண யசுர் வேதம். இதில் சுக்கில யசுர் வேதத்தை இயற்றியவர் யாக்கியவல்கியர். அத்தனை பெரிய ரிஷி, ஒரு பெண் ரிஷியின் கருத்தை பெரிய பேறாக நினைக்கிறார் என்றால், பெண்கள் எத்தனை மகத்துவத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்?” 
“பெண் அடிமைத்தனம் இன்று இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெண்கள் தான். போராடும் குணம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகிறது. ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணுக்கு எதிரியாகிப் போகும் அவல நிலை இன்றைய காலகட்டத்தில் தான் இருக்கிறது.”
“இவை அத்தனையையும் தாண்டி பெண்கள் மேலே வரவேண்டும். அவர்களால் அது முடியும்.”
அனைத்தையும் சொல்லி முடித்தவன் இறுதியாக நித்திலாவிடம் பார்வையைப் பதித்தான். கேள்வியாகப் பார்த்தாள் பெண்.
“இன்று உங்கள் முன் சப் கலெக்டராக உட்கார்ந்திருக்கும் இந்தப் பெண் ஒரு ஆஃபனேஜில் வளர்ந்தவள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?” அவன் கேட்கவும் சபை ஸ்தம்பித்துப் போனது. நித்திலா மூச்சு விட மறந்து போனாள்.
“எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் இந்தப் பெண் இந்த நிலையை எட்டியிருக்க வேண்டும். குடும்பம், அரவணைப்பு, பாசம், அன்பு எதுவும் இல்லாத ஒரு சூழலில் என் மரியாதைக்குரிய தோழி இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றால், இவையனைத்தும் கிடைக்கப்பெற்ற நீங்கள் எத்தனை சாதிக்க முடியும்?” 
கரகோஷம் நிற்க சில வினாடிகள் தேவைப்பட்டது. அத்தனை பேரின் கவனமும் தன் மேலே குவிய சங்கடப்பட்டுப் போனாள் நித்திலா.
‘என்ன கவிஞரே இது?’ என்பது போல அவள் ஒரு பார்வை பார்த்து வைக்க,
“வாழ்க பெண்கள்!” என்று பேச்சை முடித்துக் கொண்டான் யுகேந்திரன். 
அடுத்து பேசுவதற்காக நித்திலா மேடைக்கு அழைக்கப்படவும் எழுந்து போனாள். நின்றிருந்த கரகோஷம் மீண்டும் ஆரம்பித்தது. அவள் இரு முறை பேச்சை ஆரம்பித்த போதும் பெண்கள் கைதட்டுவதை நிறுத்தவில்லை.
ஒரு நாண முறுவலோடு அதை ஏற்றவள் யுகேந்திரனைப் பார்த்தாள். அவனுமே ஒரு சிரிப்போடு அவளைத்தான் பார்த்திருந்தான். 
‘எல்லாம் உன்னால்தான்.’ என்ற குற்றச்சாட்டு அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. வாய்விட்டுச் சிரித்தவன்,
“யூ டிசேர்வ் இட்.” என்றான் சத்தமாக… கீழிருந்தபடியே.
நிலைமையைச் சமாளிக்கும் விதமாக கல்லூரி முதல்வர் எழுந்து நின்று மாணவிகளை அமைதிப்படுத்தவே ஒரு வாறாக ஆரவாரம் ஓய்ந்தது.
“உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். ஒரு குப்பைத் தொட்டியில் என்னைத் தூக்கி எறியாமல் அனாதை ஆசிரமம் வரை கொண்டு வந்த அந்தக் கருணை உள்ளத்தை நான் பாராட்டுகிறேன்.”
யுகேந்திரனின் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று காணாமல் போனது. மனதை ஏதோ ஒன்று பிசைய நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“எத்தனையோ சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கருவிலேயே பெண் சிசுக்கொலை நடைபெறுவது கவலையாகத்தான் இருக்கிறது.”
“இருந்தபோதிலும், இப்போதெல்லாம் ஆண் குழந்தைகளைத் தத்தெடுப்பதைக் காட்டிலும் பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் குடும்பங்கள் முனைப்புக் காட்டுகிறதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.”
“பெண் குழந்தைகளின் மகத்துவத்தை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டமையையே இது காட்டுகிறது. இது மகிழ்ச்சிகரமான ஒரு விடயம் தான்.”
“பெண்களுக்கு எதிரான எத்தனையோ சமூகச் சீர்கேடுகள் அந்நாளிலும், இந்நாளிலும் நிலவினாலும் மகாகவி பாரதியின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பெண்கள் கல்வி பெற முடியாமல் இருந்த சூழல் தான்.”
“பெண் ஒரு தேசத்தை உருவாக்குகிறாள். அவளது குழந்தைகள் தான் இந்தத் தேசத்தின் எதிர்காலம். நீங்கள் அனைவரும் நாளைய தாய்மார்கள். எதிர்காலம் சிறப்புற வேண்டுமென்றால் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளை சிந்தனைத் திறத்தோடு வளர்க்க வேண்டும்.”
“ஒரு தலைமுறைப் பெண்கள் நினைத்தால் ஒரு மிகச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிட முடியும். இன்றைய சமூகத்தின் சீர்கேடுகளைக் களைய வேண்டுமானால், பெண்களை மரியாதையோடு பார்க்கும் ஆண்குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.”
“பெண் மட்டுமன்றி ஆணும் ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட வேண்டும். வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு வீட்டுப் பொறுப்புகளைச் சொல்லித் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் சொல்லித் தர வேண்டும். இது மதிப்பு மிக்க நம் தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது.”
“பெண்களை மதிக்கும் புதியதொரு ஆண் சமூகத்தை உருவாக்குவோம்.” பேசி முடித்துவிட்டு புயல் போல இறங்கி வந்த நித்திலாவை இமைக்க மறந்து பார்த்திருந்தான் யுகேந்திரன்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகே கரவொலி கூட எழுந்தது. சமுதாயத்தின் மீது அவளுக்கிருந்த அக்கறை அவளின் வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் இருந்தே புரிந்தது.
விழா இனிதாக நிறைவேற எல்லோரும் கலைந்து போனார்கள். யுகேந்திரனையும் நித்திலாவையும் சுற்றி இளம்பெண்கள் ஆட்டோகிராஃபுக்காக சூழ்ந்து கொண்டார்கள்.
“ஆஃபீஸர் சார், எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க? நிறையப் பேர் எதிர்பார்ப்போட இருக்கோம்.” துடுக்காக வந்தது ஒரு கேள்வி.
முதலில் சற்றுத் திகைத்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டான் யுகேந்திரன். அழகான புன்முறுவல் ஒன்று அவன் இதழ்களில் தவழ்ந்தது.
“இந்த சிரிச்சு மழுப்புற வேலையெல்லாம் வேணாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?” மீண்டும் கேள்வி வந்தது.
“அவங்க கிட்ட கேட்டுட்டு உங்களுக்குப் பதில் சொல்லட்டுமா?” யுகேந்திரனும் களத்தில் இறங்கினான்.
“ஓ…” கோரசாகக் குரல்கள் எழுந்தன.
“இல்லையே, நம்பத்தகுந்த வட்டாரங்கள் அப்பிடித் தகவல் சொல்லலையே?” மீண்டும் வில்லங்கமாகவே கேள்வி வந்தது.
“ஆமா… ஆஃபீஸர் தப்பிக்கப் பொய் சொல்லுறார்.”
“ஆமா… ஆமா…” சேர்ந்தாற் போல குரல்கள் எழ யுகேந்திரன் கொஞ்சம் சங்கடப்பட்டான். 
“ஒரு வேளை இங்கதான் இருக்காங்களோ என்னவோ?” மீண்டும் ஒரு அதிகப்பிரசங்கித்தனம். இனி மறைப்பது கஷ்டம் என்று தோன்றியது யுகேந்திரனுக்கு.
“இத்தனை அழகான இளம்பெண்கள் என்னோட நிக்கிறதைப் பொறுத்துக்க முடியாம என்னை முறைச்சுக்கிட்டே ஆட்டோகிராஃப் சைன் பண்ணுறாங்களோ என்னவோ?”
அவன் சொல்லி முடிக்கவும் ‘ஹோ’ என்ற ஆராவாரம். பெண்களின் பேச்சு எல்லை மீறிப் போகவும் அவர்களைக் கண்டிக்க அங்கே வந்த முதல்வர் கூட சிரித்து விட்டார். 
கன்னங்கள் சிவக்க நித்திலா சட்டென்று வெளியே போய் விட்டாள். யுகேந்திரனும் ஒரு புன்னகையோடு எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.
முருகனை ஏற்கனவே யுகேந்திரன் அனுப்பி விட்டிருந்தான். ப்ளாக் ஆடியில் அமைதியாக ஏறி உட்கார்ந்திருந்தாள் நித்திலா. யுகேந்திரன் வந்து ஏறவும் அவனை ஒரு பார்வை பார்த்தாள். புன்னகையோடே பதில் சொன்னான் கவிஞன்.
“நான் என்ன செய்யட்டும் கண்ணம்மா? அத்தனை தூரமா என் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்கதான் வாயை விட்டீங்க யுகேந்திரன்.”
“இல்லையே… இங்கேயே இருக்காங்களான்னு ஒரு பொண்ணு கேட்டுச்சே?”
“அது சும்மா கேட்டிருப்பாங்க. நீங்க எதுக்கு அப்பிடிப் பதில் சொன்னீங்க?”
“ஏன்? சொன்னா என்ன நித்திலா? எதுக்கு மறைக்கணும்?”
“எதுக்குங்க இப்போ தேவையில்லாத பிரச்சினை? மீடியாக்காரங்களுக்குத் தெரிஞ்சா கன்னா பின்னான்னு எதையாவது சொல்லிடுவாங்க.”
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் காரை ஸ்டார்ட் பண்ணினான். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. 
நேரம் மதியத்தைத் தாண்டி இருந்ததால் அந்த நட்சத்திர ஹோட்டலில் காரை நிறுத்தினான் யுகேந்திரன்.
“கவிஞரே! ஒரு முடிவோடதான் இருக்கீங்களா? அனேகமா நாளைக்குத் தலைப்புச் செய்தி நாமாகத்தான் இருக்கும்.”
அதற்கும் அவனிடம் பதிலில்லை. அவள் பக்கக் கதவைத் திறந்து விட்டவன், செக்யூரிட்டியிடம் கீயைக் கொடுத்து விட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
ஏற்கனவே சின்னதாக ஒரு டேபிள் ரிசர்வ் பண்ணி இருந்தான். யாருமற்ற அந்தத் தனிமை இருவருக்கும் இதமாக இருந்தது.
“உனக்குப் பிடிச்சதை ஆர்டர் பண்ணு நித்திலா.” 
“ம்…” அதிக நேரம் எடுக்காமல் அவனுக்கும் தனக்குமாக உணவை ஆர்டர் பண்ணினாள். அவளையே பார்த்தபடி இருந்தான் யுகேந்திரன். 
“என்னாச்சு கவிஞரே? திடீர்னு சைலண்ட் ஆகிட்டீங்க?”
“எதுக்கு இன்னைக்கு அப்பிடிச் சொன்னே?”
“என்ன சொன்னேன்?”
“குப்பைத்தொட்டி அது இதுன்னு.” அவன் முகத்தில் வலி தெரிந்தது. லேசாகப் புன்னகைத்தாள் நித்திலா.
“அதுதான் உண்மை கவிஞரே.”
“போதும் நித்திலா. என்னை வருத்தப்படுத்திப் பார்க்க நினைக்காதே.”
“ஐயையோ! என்ன பேசுறீங்க நீங்க? சத்தியமா எனக்கு அந்த நோக்கம் இல்லை யுகேந்திரன். நிதர்சனத்தைச் சொன்னேன்.”
அவன் முகம் அப்போதும் தெளிவடையாமல் இருக்கவே நித்திலாவிற்குச் சங்கடமாகிப் போனது. மேஜையின் மேலிருந்த அவன் கரத்தைப் பற்றியவள்,
“இன்னைக்கு ஒரு நாள் நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கணும்னு சொல்லி இருக்கீங்க. இதுக்கப்புறம் எப்ப இப்பிடி ஒரு சான்ஸ் கிடைக்குமோ தெரியாது. ப்ளீஸ் மறந்திடுங்க.” 
அவள் கெஞ்சல் கொஞ்சம் வேலை செய்தது. உண்டு முடித்த பின் மீண்டும் கொஞ்ச நேரம் பயணம் செய்தார்கள்.
“கவிஞரே! என்னை எங்கே கடத்திட்டுப் போறீங்க?” 
“ஏன்? சொன்னாத்தான் வருவீங்களா?”
“அப்பிடியில்லை… ஆனா நமக்கெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது அதான்.” அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், காரை வளைத்துத் திருப்பினான். அங்கிருந்து காட்டுப் பாதை ஆரம்பித்தது.
“ஹேய் யுகேந்திரன்! காட்டுக்குப் போறோமா?” ஆச்சரியமாகக் கண்களை விரித்து அவள் ஆர்ப்பரிக்க, அந்த சந்தோஷம் அவனையும் தொற்றிக் கொண்டது.
“ஐயோ! நான் வேற சாரியில இருக்கேனே? முன்னாடியே சொல்லி இருந்தா வீட்டுக்குப் போய் சேன்ஜ் பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம் இல்லை.”
“அங்க போய் எல்லாம் பார்த்துக்கலாம் நித்திலா.” சொல்லி விட்டு காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான்.
“நித்திலா.”
“ம்…”
“இன்னைக்குப் பௌர்ணமி. வீட்டுக்குப் போக கொஞ்சம் லேட் ஆகும். பங்கஜம் அம்மாக்கு தகவல் சொல்லிடு.”
“அட ஆமா! இன்னைக்குப் பௌர்ணமி இல்லை. கவிஞரே பயங்கரமான ஆள் நீங்க. அடர்ந்த காடு… அங்கே பௌர்ணமி நிலவு… ஆஹா! ஆஹா!”
“இன்னும் ஒன்னை விட்டுட்டியே…”
“என்னது?”
“என் பக்கத்திலும் ஒரு நிலவு.” அவன் சொல்லவும் அவன் தோளில் ஒரு அடி போட்டாள் நித்திலா.
“எல்லாம் பொய். அங்கே காலேஜ்ல பொண்ணுங்களைக் கண்ட உடனே என்னைத் திரும்பியும் பார்க்கலை. இப்போ டயலாக் அடிக்கிறார் கவிஞர்.” 
அவள் சிணுங்கலை ரசித்துச் சிரித்தான் யுகேந்திரன். காட்டின் எல்லைக்குள் கார் பிரவேசித்தது. அடர்ந்த மரங்களின் குழுமை அந்த நண்பகல் வெயிலை உணர விடவில்லை.
அந்தப் பச்சை வாசத்தை ரசித்தாள் நித்திலா. ஆங்காங்கே ஒன்றிரண்டு மயில்களும் தோகை விரித்தபடி நின்றிருந்தன.
காட்டுப் பறவைகள், மரஞ்செடி கொடிகள் என அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தொலைபேசியில் பதிந்து கொண்டாள்.
ஆட்கள் நடமாட்டம் அதுவும் விசேஷமாக சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் நிறையவே காணப்பட்டது.
கொஞ்ச நேர பயணத்திற்குப் பிறகு கார் ஒரு காட்டேஜின் முன் நின்றது. யுகேந்திரனைக் கேள்வியாகப் பார்த்தாள் நித்திலா.
“ஸ்டாஃப் யூஸ் பண்ணுறதுக்காக இந்த ஏற்பாடு.” சொன்னவன் காரை விட்டிறங்கினான். நித்திலாவும் கூட இறங்கினாள். ஒரு பையை காரிலிருந்து எடுத்தவன் அதை அவளிடம் கொடுத்தான்.
“என்ன இது?”
“அதான் அம்மிணி சேன்ஜ் பண்ணலைன்னு ரொம்ப வருத்தப்பட்டீங்க இல்லை. இப்போ பண்ணிக்கோங்க.” பையைப் பிரித்துப் பார்த்தவள் புன்னகைத்தாள்.
“ஓ… எனக்கு சுடிதார் வாங்குறதே உங்களுக்கு வேலையாப் போச்சு இல்லை?”
“அது என் பாக்கியம் கண்ணம்மா.”
“அப்பிடியா? நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறமும் இப்பிடிச் சொல்லுவீங்களா?”
“கண்டிப்பா… அதிலென்ன சந்தேகம் உனக்கு?”
“ம்… பார்க்கலாம்… பார்க்கலாம். முதல்ல உங்க வசந்த மாளிகையைத் திறங்க கவிஞரே.” சொல்லி விட்டுச் சிரித்தாள் பெண்.
அந்த காட்டேஜ் மிகவும் அழகாக இருந்தது. ஃபாரெஸ்ட் டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் உயர் அதிகாரிகள் இந்தக் காட்டேஜைப் பயன்படுத்த அனுமதி உண்டாம்.
சில சமயங்களில் ரகசியமாக மீட்டிங்களும் நடக்குமாம். ஒவ்வொரு இடமாகச் சுற்றிப் பார்த்தாள் நித்திலா. பாத்ரூம், கிச்சன், பெட்ரூம் என எல்லா வசதிகளும் இருந்தன.
“கவிஞரே! பேசாம இங்கேயே தங்கிடலாம் போல இருக்கே.”
“கவர்மென்ட் ப்ராப்பர்டி அம்மிணி. நம்ம சொந்த தேவைக்கு யூஸ் பண்ண முடியாது.”
“அப்போ… இப்ப என்ன பண்ணுறீங்களாம்?”
“ஏய்… நீயும் நானும் என்ன டூயட்டா பாடப் போறோம்? ஜஸ்ட் சேன்ஜ் பண்ண வந்தோம். அவ்வளவுதானே?”
“ம்… சரி சரி. அதென்ன டூயட் பாடவா போறோம்னு கேக்குறீங்க? ஏன்? எங்கூட டூயட் பாட மாட்டீங்களா?” அவள் கேள்வியில் சிரித்தான் யுகேந்திரன்.
“நான் ரெடி… நீங்க ரெடியா?” என்றான் பாடலாக.
“ம்… பாட வராது கவிஞரே! வேணும்னா உங்க கூட சேர்ந்து ஸ்டெப் டான்ஸ் ஆடுறேன்.” சொல்லிவிட்டு ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
அவள் செய்கைகள் ஒவ்வொன்றையும் யுகேந்திரன் மிகவும் ரசித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். மனதில் நினைப்பதை எல்லாம் எந்தக் கபடமும் இல்லாமல் அவள் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பாத்ரூமிற்குள் நுழைந்தவன் தானும் உடையை மாற்றிக் கொண்டான். அவன் வாங்கியிருந்த சுடிதாரில் அட்டகாசமாக இருந்தாள் நித்திலா.
“பரவாயில்லை… நல்லாத்தான் செலெக்ட் பண்ணுறீங்க. அதெப்பிடி? எனக்கு அளந்து தைத்த மாதிரி வாங்குறீங்க?” கேட்ட பிறகுதான் வார்த்தைகளின் அர்த்தம் உறைத்தது பெண்ணுக்கு. சட்டென்று வெளியேறி விட்டாள். யுகேந்திரன் வாய் விட்டுச் சிரித்தான்.
காட்டேஜில் காரை நிறுத்தி விட்டு இரண்டு பேரும் நடந்து தான் சென்றார்கள். முகம் தெரியாத மனிதர்கள் முன்பு முக்காடு போடும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. கை கோர்த்தபடி அந்தக் காட்டை வலம் வந்தார்கள்.
அந்த ஏரியா முழுவதும் யுகேந்திரனுக்கு நன்கு பரிட்சயமாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் நித்திலா களைத்துப் போனாள்.
“கவிஞரே! என்னால முடியாது. கால் வலிக்குது.” முழங்காலைப் பிடித்தபடி நின்று விட்டாள் நித்திலா. பக்கத்தில் மரங்கள் சற்று அடர்ந்திருக்கவே அங்கே அவளை அழைத்துச் சென்றவன் ஒரு மரத்தின் கிளையில் அவளைத் தூக்கி உட்கார வைத்தான்.
“ஸ்டெப் டான்ஸ் ஆடலாம்னு சொல்லிட்டு இப்பிடி உட்கார்ந்தா எப்பிடி அம்மிணி?”
“கொஞ்சம் பொறுத்து ஆடலாம் கவிஞரே! இப்போ நீங்க பாடுங்க… ப்ளீஸ்.” அவள் கெஞ்சலைப் பார்த்துச் சிரித்தான் யுகேந்திரன். இருந்தாலும் மறுக்கவில்லை.
“இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா… நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன். அமுதூற்றினை ஒத்த இதழ்களும்… இதழ்களும்…”
அவன் விரல்கள் மென்மையாக அவள் இதழ்களை வருடின. சூழ்நிலைக்குத் தக்கதாக அவன் தேர்ந்தெடுத்துப் பாடவும் ஆச்சரியமாகப் பார்த்திருந்தவள் இப்போது தலை குனிந்து கொண்டாள்.
அவள் வெட்கத்தைப் பார்த்தவன் மேலும் அவளைச் சங்கடப்படுத்த மனமின்றி வேறு பாடலுக்குத் தாவினான்.
“கோடி செல்வரென்றாலும்… தேடும் கள்வரென்றாலும்… யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும் காரிருள் வேளை… உன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைப்பதால்… இவன் கள்வனென்று என்னை நீயும் எண்ணி விடாதே…” 
அவன் குரலில் வருத்தம் இருந்தது. அன்று அவன் நடந்து கொண்ட முறையை எண்ணி வருந்துவது புரியவும் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் நித்திலா.
“நான் உங்களை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன் யுகேந்திரன்.”
“இருந்தாலும்… அன்னைக்கு நடந்தது மிகப்பெரிய தவறு கண்ணம்மா. அதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.”
“அடடா! என்ன இது? அப்பிடி ஒன்னு நடந்ததையே மறந்திடுங்க.”
“முடியவில்லையே கண்ணம்மா…” அவன் குரலில் இப்போது விஷமம் இருந்தது. 
“யுகீ…” எச்சரிக்கும் குரலில் அழைத்தாள் நித்திலா.
“கோடு தாண்டுகிறேனா கண்ணம்மா? வெறும் வாய் வார்த்தை தானே? அதற்குமா தடை?”
“……..”
“ஒரு நாள் வரும் கண்ணம்மா… அன்றைக்கு என் கைத்தாலி உன் கழுத்தினில் ஏறும். அப்போது என்ன சொல்லுவாய்?”
“…….” அவள் மௌனத்தில் வாய்விட்டுச் சிரித்தான் யுகேந்திரன்.
“அப்போதும் இந்த முட்டாள்க் கவிஞன் உன்னிடம் அனுமதி கேட்பான்… கவலைப்படாதே.”
“அப்பவும் அனுமதி கிடைக்கலைனா?”
“காத்திருப்பேன் கண்ணம்மா… உன் மனம் இரங்கும் வரை காத்திருப்பேன்.”
“கவிஞரே!”
“ம்…”
“இப்பிடி நீங்க உருகுற அளவுக்கு எங்கிட்ட என்ன இருக்கு?”
“அது எனக்கே தெரியாதே கண்ணம்மா. நான் உண்மையைச் சொல்லட்டுமா நித்திலா?”
“சொல்லுங்க.” சொன்னவள் மரக்கிளையில் இருந்து குதித்து இறங்கினாள். 
பக்கத்தில் இருந்த அந்தப் பெரிய மரத்தின் அடியில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள். நித்திலா அவன் தோள் சாய்ந்து கொண்டாள். அவளின் உரிமையான அந்தச் செய்கையில் யுகேந்திரன் நிறைந்து போனான்.
“முதல் முதலா உன்னைப் பார்த்தப்போ… ஏதோ காட்டு வாசியைப் பார்க்கிறாப்போல தான் இருந்திச்சு.”
“பரவாயில்லையே, அப்பவும் உங்க ஏரியாவோட சம்பந்தப்படுத்தித் தான் யோசிச்சிருக்கீங்க.” அவள் துடுக்குப் பேச்சில் தன்னை மறந்து சிரித்தான் யுகேந்திரன்.
“இந்த வாய்தான்டி உன்னை வாழ வைக்குது.”
“எங்க பார்த்தீங்க?”
“நடு ரோட்டுல… பொள்ளாச்சியையே ஒரு கலக்கு கலக்கினீங்களே… அன்னைக்கு.”
“ஓ…” 
“அன்னைக்கு பெருசா ஒன்னும் தோனலை. ஆனா கொஞ்சம் கொஞ்சமா இங்க குடியேறிட்டீங்க.” சொன்னவன் அவன் இடப் பக்க மார்பைத் தொட்டுக் காட்டினான்.
“ஓ… அப்போ வாடகை குடுக்கணுமோ?”
“கண்டிப்பா… ஆனா இப்போ இல்லை. அதெல்லாம் நேரம் வரும் போது சரியா நாங்க வசூல் பண்ணிக்குவோம்.”
“கவிஞரே! நிலா!” அவள் குரலில் அத்தனை பரவசம் இருந்தது. இருள் கவிந்திருக்க முழு நிலா வானில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.
அடர்ந்த மரங்களின் இடுக்குகளில் நிலாவின் பவனி அழகாகத் தெரிந்தது. ரசித்துப் பார்த்திருந்தார்கள்.
இரவும், நிலவும், உறவும் யுகேந்திரனைக் கொஞ்சம் சோதித்துப் பார்த்தன.
“போகலாமா கண்ணம்மா?”
“என்ன அவசரம் கவிஞரே?”
“இதற்கு மேலும் இங்கிருந்தால் கவிஞன் வார்த்தை தவறி விடுவான். போகலாம் கண்ணம்மா.” அந்த வார்த்தைகளில் அவன் தோள் சாய்ந்திருந்தவள் அண்ணாந்து அவன் முகம் பார்த்துச் சிரித்தாள். 
“என்னைக் கொல்லாதடி ராட்சஸி…” சட்டென்று எழுந்தவன், அவளுக்கும் கை கொடுத்து எழுப்பி விட்டான். 
அவனது இடது கரத்தை இறுகப் பற்றி அவன் தோள் சாய்ந்திருந்தவள் வீடு வந்து சேரும் வரை விலகவேயில்லை… அவனும் விலக்கவுமில்லை.

error: Content is protected !!