NMK-1

                          நின் முகைக் காதல்       

                                   1                                                                                            

“மாங்கல்யம் தந்துனானேனா மம ஜீவன ஹேதுனா”  ஐயரின் கணீர் குரல் அந்தத் திருமண மேடை எங்கும் ஒலிக்க,

வந்திருந்த சொந்த பந்தம் உற்றார் உறவினர் என அனைவரும் எழுந்து நின்று அட்சதை தூவி ஆசிர்வதிக்க,

பெற்றோர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மிதக்க, மனதில் புதிதாக வரப் போகிற, தனக்கே தனக்கான தன்னவளை மனம் முழுவதும் நிறுத்தி, குனிந்திருந்த அவளது முகத்தைப் பார்த்தபடி, ஐயர் கொடுத்த அந்தப் பொன் தாலியைக் கையில் வாங்கி,

“இனி நீ என் சொந்தம், என் பொறுப்பு, என் காதல் வாழக்கையின் ஆரம்பம் நீ” என மனதில் கூறி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அந்த மாங்கல்யத்தைக் கட்டினான் ஆதவ் கிருஷ்ணா.

பெண்ணவளின் முகத்தை வெகு நேரமாகப் பார்க்க முயற்சி செய்து தோற்றவன், அவன் கையால் அவளது நெற்றியில் குங்குமத்தை வைக்கச் சொன்ன போது அந்த வாய்ப்பை நழுவ விடாமல் உபயோகப் படுத்திக் கொண்டான்.

அந்த சிவப்பு நிறக் குங்குமத்தை அவளது நெற்றியில் தீட்ட அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் முகம் தாமரை போல அழகாக இருந்தாலும், அவளது கண்களில் ஒளிஇல்லை.

அந்தக் கண்களில் மாறாக ஒரு சோக கீதமோ அல்லது இயலாமையோ அல்லது விரக்த்தியோ தென்பட்டது அவனுக்கு.

‘ஒரு வேளை தன் வீட்டைப் பிரியும் துக்கமாக இருக்கும். போகப் போக சரியாகி விடும் என்று நினைத்தான்.

திருமணச் சடங்குகள் அனைத்தையும் அவனோடு சேர்ந்து தவறாமல் செய்தாள் தீட்சண்யா.

எல்லாம் முடிந்து மணமக்களின் விருந்து வர, ஆதவ்வின் நண்பர் கூட்டம், தீட்சண்யாவின் நண்பிகள் கூட்டம் என ஒரு பட்டாளமே நின்று கலாட்டா செய்ய,

“தங்கச்சிக்கு ஊட்டு மச்சான்..என் கல்யாணத்துல என்ன ரகளை பண்ண..விட்ருவேனா..கமான்,” அவனது நண்பன் பிரதாப் அவனை சீண்ட,

“எஸ்.. எஸ்.. டூ இட்..” கோரசாக அனைவரும் சேர்ந்து கொண்டனர்.

“ஹே.. சரி சரி..” கொஞ்சமும் வெட்கப் படாமல் தன்னுடைய வழக்கமான கம்பீர நிமிர்வுடன் நண்பர்களிடம் சிரித்தபடி கூறியவன்,

தீட்சண்யாவின் பக்கம் திரும்ப, அவளது முகம் பார்த்து குரலில் சற்று மென்மையை கொண்டு வந்தான்.

“ஊட்டலேனா கண்டிப்பா நம்மள விட மாட்டாங்க. கொஞ்சமா தரேன். ஓகே..” குனிந்து அவள் காதில் சொல்ல, அவளாலும் மறுக்க முடியவில்லை.

ஆதவ் ஒரு பிடி எடுத்து தன் கையால் அவளுக்கு ஊட்ட,

அவளையும் ஊட்டச் சொல்லி மறுபடி கூச்சல் கிளம்பியது.

வேறு வழியின்றி தன் உணவிலிருந்து சிறிது எடுத்து ஆதவிற்கு ஊட்டினாள் தீட்சண்யா.

“என்ன மாப்ள, இனிமே இப்படியே தானா..? எப்படி நல்லா இருக்கா இப்படிச் சாப்பிடறது?” பிரதாப் அவன் வாயைக் கிளற,

“ஏன் நீ இன்னும் அப்படியே தான் கண்டினியு பண்றியா?” ஆதவ் பதிலுக்கு அவனை நக்கலாக  பார்த்தான்.

“ஐயையோ.. அவளா… சான்ஸ்சே இல்ல..மாப்ள..சமைக்கறதே பெரிய விஷயம் இதுல உனக்கு ஊட்டி வேற விடணுமான்னு காளி அவதாரம் எடுத்துருவா..உனக்காவது குடுத்து வைக்கட்டும்னு சொன்னேன்.” என பெருமூச்சு விட,

“நான் இங்க தான் இருக்கேன்” கூட்டத்தில் அவனின் மனைவி மாதவி குரல் கேட்டதும், அசடு வழிந்தான்.

அவனைக் கண்டு அனைவரும் சிரிக்க,

தீட்சண்யா எதிலும் ஒட்டாமல் தன் போக்கில் லயித்திருந்தாள்.

ஆதவ் அவளைக் கவனித்தாலும் பெரிதாக எதுவும் அவன் நினைக்கவில்லை.

பின் மாப்பிளை குடும்பத்தார்  அனைவரிடமும் விடைபெற்று மண்டபத்தை விட்டுக் கிளம்ப, தீட்சண்யா பெரிதாக அழுவாள் என ஆதவ் எதிர்ப்பார்க்க, அதற்கு மாறாக அவள் நிதானமாகவே தந்தைக்கு விடை கொடுத்தாள்.

அவளுக்கு அம்மா இல்லாத குறை தெரியாமல் இருக்க, அவளை சற்று அதிகமான கட்டுப்பாடுடன் கொஞ்சம் பயம் காட்டியே வளர்த்து விட்டார்.

தந்தையிடம் பயம் இருந்தாலும், வெளியில் அவள் மிகவும் சந்தோஷமாகவே இருந்தாள். வீட்டில் அவள் கேட்பதற்கு முன்பே அனைத்தும் கிடைத்தாலும், தந்தையிடம் மட்டும் சற்று விலகல் கொண்டிருந்தாள்.

அவள் அழுவதற்கு பதிலாக அவளது தந்தை நடராஜன் தான் கண்கலங்கி நின்றார்.

ஆதவ் ஆதரவாக அவரின் கரம் பற்ற,

“ அவளுக்கு அம்மா இல்ல. நான் அவகிட்ட பாசம் காட்டினத விட கண்டிப்பை தான் அதிகம் காட்டினேன். என் வளர்ப்பால அவ வழி தவறி போய்டக் கூடாதுங்கற ஒரே எண்ணம் தான் அந்தக் கடுமைக்குக் காரணம், இத அவ புரிஞ்சு இருக்க மாட்டா. ஆனா உங்களுக்குத் தெரியனும்.” நடராஜன் கூறுவதைக் கேட்ட தீட்சன்யாவிற்கு ஒரு ஏளனப் புன்னகை மட்டுமே வந்தது.

அவள் அனுபவித்தது அப்படி. அவளைக் குற்றம் கூற முடியாது என்பது ஆதவிற்கும் நன்றாகவே தெரியும்.

இருந்தும், “நீங்க கவலைப் படாதீங்க மாமா. நீங்க அவள நல்லா வளத்திருக்கீங்க. யாரும் ஒன்னும் சொல்ல முடியாது. அவளும் சீக்கிரம் புரிஞ்சுப்பா.” அவரது கையைத் தட்டி ஆறுதல் கூறினான்.

“ரொம்ப சந்தோஷம் பா.” அவர் அழுகையை உள்ளிழுத்து அவர்களை வழியனுப்பி வைத்தார்.

ஆதவின் தாய் உமா மற்றும் தந்தை ராஜவேல் இருவரும் நடராஜனிடம் ,

“அவ எங்க வீட்டுப் பொண்ணு, நீங்க கவலைப் படாதீங்க” என்க, அடுத்து வந்த ஆதவின் அண்ணன் ராகேஷ் அவனது மனைவி சரண்யா இருவரும்,

“வீட்டுக்கு அடிக்கடி வாங்க சித்தப்பா. அதுவும் உங்க வீடு தான். தீட்சண்யாவ விட்டு பிரிஞ்சுட்டோம்னு நினைக்காதீங்க” என அவள் ஆருதாலாகப் பேச,

நடராஜன் உண்மையிலேயே அக மகிழ்ந்தார்.

ராஜவேலும் நடராஜனும் தெரியாதவர்கள் அல்ல. எட்டு வருடமாக இருவரும் தொழில் முறையில் நல்ல நண்பர்களே. ஒரு விழாவில் தீட்சண்யாவைப் பார்த்துப் பிடித்துப் போக, உமா தான் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். இல்லை இல்லை ஆரம்பிக்க வைத்தான் ஆதவ்!

அனைவரும் கிளம்பி ஆதவின் வீட்டிற்கு வந்து சேர, அவர்களை ஆலம் சுற்றி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

முதலில் தீட்சன்யாவை விளக்கேற்ற வைத்து பின் ஒரு பாயசம் மட்டும் வைக்கச் சொல்லி, கூடவே இருந்தார் உமா.

“டயர்டா இருக்கா மா?” பரிவாக அவர் கேட்க,

அந்தக் குரல் தீட்சண்யாவை கலைத்தது.

“அதெல்லாம் இல்ல அ..அத்தை..” தடுமாறி சொல்லி முடித்தாள்.

“வீட்டுக்கு வந்ததும் விளக்கேற்றி ஒரு ஸ்வீட் பண்ணனும், அது தான் எங்க வழக்கம்.அதுக்காக தான் வந்ததும் செய்ய வெச்சேன். நீ இதை எல்லாருக்கும் குடுத்துட்டு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.” இன்முகத்துடன் கூறி முதலில் அந்தப் பாயசத்தை அவளுக்கு ஊட்டிவிட்டு , கையில் பாயச ட்ரேயும் கொடுத்து அனுப்பினார்.

அவளும் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு கடைசியாக ஆதவிற்கும் கொடுக்க,

“நான் தான் லாஸ்ட்டா..?” என எடுத்துக் கொள்ள,

“அது… முன்னாடி மாமா இருந்தாரு.. அப்பறம் அக்கா..எல்லாரும்..” என இழுக்க,

“சரி சரி.. சும்மா தான் கேட்டேன். இங்க உட்காரு. நீயும் சாப்பிடு” என ஒரு ஸ்பூன் அவளுக்கும் நீட்ட,

“இல்ல அத்தை என்னைத் தான் முதல்ல சாப்பிட சொன்னங்க.. சோ சாப்டேன்.” என்றாள்.

அவனிடம் இப்போது தான் இவ்வளவு நீளமாகப் பேசுகிறாள் என்பதால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் ஆதவ் உன் பொண்டாட்டிய சைட் அடிச்சது போதும், அவளை ரூமுக்கு கூட்டிட்டு போ.” ராகேஷ் சொல்ல,

சரண்யாவும் சிரித்தாள். ராஜவேல் அப்போதே எழுந்து சென்றிருக்க, ராகேஷ் தம்பியை கிண்டல் செய்தான்.

“என் நேரம் டா. நீயெல்லாம் கலாய்க்கற..” என்றவன் பாயசத்தை இரண்டு மிடறில் குடித்து விட்டு

“வா..” என அவளை அழைத்துச் சென்றான்.

முதல் முதலாக அவள் வருவதால் அவளுக்காக பல பரிசுகளை வாங்கி வைத்திருந்தான். அதை எப்போது கொடுக்க வேண்டும் என்று மனதில் திட்டம் போட்டிருந்தான்.

அவனது அறையை சுற்றிப் பார்த்தவள், தன்னுடையதை விட மிகவும் பெரிதான அரை என்பதையும், அதை அவன் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதை உணர்ந்தாள்.

“இந்த வார்ட்ரோப் உன்னோடது. உன் திங்க்ஸ் வந்ததும் இங்க வெச்சுக்கோ. இப்போதிக்கு நீ சேன்ஜ் பண்ணிக்க…” என சொன்னவன், அவளுக்காக அவன் ஒதுக்கி இருந்த வார்ட்ரோப்பை திறந்து அவனே சென்று வாங்கி வந்த ஒரு பர்ப்பிள் நிற சுடிதாரை எடுத்துக் கொடுத்தான்.

“இது உனக்காக நான் வாங்கி வெச்ச சில டிரஸ். உனக்குப் பிடிக்கும்னு நினைக்கறேன்.” என அவன் காட்ட,

அங்கே ஒரு டசன் சுடி, ஒரு டசன் புடவை, சில பட்டுப் புடவைகள், ஏன் இன்னர்ஸ் கூட தவாறாமல் வைத்திருக்கப்பட்டது. உடை மாற்றக் கூட போதுமான இடம் இருந்தது.

அவளுக்குச் சங்கடமாகிப் போனது.

இன்னும் அவளது பொருட்கள் வராத நிலையில், அதை ஏற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்க,

சுருக்கமாக, “தேங்க்ஸ்” என்றாள்.

“ம்ம்..ஹ்ஹும்..” என்றவன் அவள் கையில் டவலும் கொடுத்து அழகாகப் புன்னகைத்துச் சென்றான்.

‘இது என்னடா புது இம்சையா இருக்கு..யார் இதெல்லாம் வாங்கி வைக்கச் சொன்னா.?’ என அவள் நினைக்கும் போதே

வீட்டு வேலையாள் அரைக் கதவைத் தட்ட, இவள் சென்று பார்த்தாள்.

“அம்மா உங்க திங்க்ஸ்..” வாசலிலேயே நின்றான்.

“வெச்சுடுங்க” கதவைத் திறந்து வழி விட்டாள்.

அவன் கொடுத்த அந்த சுடிதாரை அங்கேயே வைத்து விட்டு, தன்னுடையதை திருப்தியாக எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

அரை மணி நேரம் ஷவரில் நின்று அழவும் முடியாமல் வேதனையை எப்படி மறைப்பது என சிந்தித்துக் கொண்டிருந்தாள். குளித்து விட்டு வந்து அந்தக் கட்டிலில் அமர்ந்தவள் தன்னை மறந்து உறங்கியும் விட்டிருந்தாள்.

ஆதவ் வந்து பார்க்க, அவள் நன்றாக உறங்குவது தெரிந்து மெல்ல கதைவைச் சாத்திக் கொண்டு சென்றான். ஆனால் தான் கொடுத்த உடையை அவள் அணியவில்லை என்பதையும் அவன் கண்டான்.

தீட்சண்யா எழுந்து பார்க்கையில் மணி ஆறாகி இருக்க, முகத்தைக் கழுவிக் கொண்டு அவசரமாக கீழே இறங்கி வந்தாள்.

“மெதுவா வா.. ஒன்னும் அவசரமில்ல” சரண்யா சொல்ல,

“இல்ல கொஞ்சம் படுத்தேன் அப்படியே தூங்கிட்டேன்.” காரணம் சொல்ல,

“நோ ப்ராப்ளெம்..” உமாவும் அவளுக்கு அருகில் வர,

வேறு என்ன பேசுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“நைட் டின்னர் சாப்பிட்டா வேலை முடிஞ்சது.” சரண்யா சிரிக்க,

வயிற்றில் புளியைக் கரைத்தது தீட்சண்யாவிற்கு. அவனோடு தனியாக இருக்க அவளுக்கு மனம் உறுத்தியது.

‘எல்லாத்தையும் சொல்லிட வேண்டியது தான் வேற வழியே இல்ல. அவர் அடிச்சா என்ன பண்றது? ச்ச ச்ச அடிக்கலாம் மாட்டாரு..’ அவளே தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தாள்.

டின்னர் ரெடி என வேலைக்காரன் வந்து கூற, “எடுத்து டேபிள்ல வை..” உமா ஆர்டர் போட்டார்.

அவனும் வைத்து விட்டுச் செல்ல,

“எல்லாம் வாங்க” என பொதுவாக அழைக்க,

“தீட்சா வா மா” என அவளை அழைத்து ஆதவின் பக்கத்தில் அமர்த்தினார்.

அனைவரும் கலகலப்பாக உண்டு முடிக்க,

“ஆதவ் நீ கொஞ்ச நேரம் உங்க அண்ணா கூட பேசிட்டு இரு” சரண்யா கூறிவிட்டு தீட்சண்யாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.

விஷயம் அறிந்து தனக்குள் சிரித்தவன், அதை ஆமோதித்து டிவி பார்க்கச் சென்றான்.

சரண்யா தன்னுடைய அறைக்குக் கூடிச் சென்று அவளுக்கு சிம்பிளான புடவை ஒன்றை அணியச் சொல்ல, சரண்யாவிடம் எதுவும் கூற முடியாமல் அவள் சொன்னபடி செய்து கொண்டாள்.

மிதமான மேக்அப் போட்டு அவளை அலங்கரிக்க, “நீ செம கியூட்” என மனம் விட்டுப் பாராட்டினாள்.

மெல்லிதாகச் சிரித்தவள், அவளிடம் பால் சொம்பையும் கொடுத்து ஆதவின் அறைக்கு கூட்டிச் சென்றாள்.

“நீ இங்க இரு நான் ஆதவ்வ அனுப்பறேன். ஆல் தி பெஸ்ட்!” என அவளது கன்னம் கிள்ளி சிரித்துவிட்டு ஓடிவிட்டாள்.

அதற்குள் அந்த அறை அலங்கரிக்கப் பட்டு இருக்க, அதைக் கண்டவள்,

“ப்ச்…” என சலித்துக் கொண்டு பால் செம்பை டேபிளில் வைத்தவள், கையைப் பிசைந்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அடுத்த இருபது நிமிடம் அவளுக்குள் ஒரே சிந்தனை, தன் மனதில் இருப்பதை அவனிடம் எப்படி சொல்வது என்பது தான்.

கதவைத் திறக்கும் சத்தம் கேட்க, அவளுக்கு இதயத் துடிப்பு அதிகமானது.

மிகவும் காஷுவலாக, ஒரு டிஷர்ட் ஷர்ர்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வந்து, உள் பக்கம் கதவைத் தாளிட்டான்.

கை கால்கள் சில்லிட்டுப் போக, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றாள்.

அவன் அருகில் வந்ததும், இத்தனை நேரம் யோசித்து வைத்திருந்த அனைத்தும் அவளுக்கு உந்த,

“இது…” அவன் ஆரம்பிக்க,

“நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” துடித்த உதடுகளின் மூலம் வாய்விட்டு சொல்லிவிட்டு அவனை ஏறிட்டுப் பார்க்க,

கையைக் கட்டிக் கொண்டு கட்டிலின் ஒரு பக்கம் சாய்ந்த படி நின்றான்.

“சொல்லு..” என்றான்.

“நான் ஒருத்தன லவ் பண்றேன்…!!” அசராமல் ஒரு அனு குண்டை அவன் தலையில் போட்டு விட்டு, அவன் முகத்தைப் பார்த்தாள்.