NNA10

NNA10

நீயும் நானும் அன்பே

அன்பு-10

 

படம் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து திமுதிமுவென கூட்டம் வெளியேறியபடி இருந்தது.

 

பொங்கல் விடுமுறைக் காலம் என்பதால் திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது.

 

மோனிகாவை முன்னே விட்டு, பின்னே நடந்து வந்தவன், மோனிகாவின் மீது வந்து இடிக்க வந்தவனை, வாகாக தள்ளி நிறுத்தியிருந்தான் சங்கர்.

 

தந்தையின் தவறுக்கு அந்தப் பெண்ணை நோவதில் என்றுமே அவனுக்கு விருப்பம் இருந்ததில்லை.  தங்கை என்று உருகாதபோதும், மோனிகாவின் விடயத்தில் கரும்பாறையென இறுகிய இதயத்திற்குள்ளும், ஈரம் இருந்தது.

 

தாயை இழந்து தந்தையோடு வந்து நின்றவளை, முதலில் ஏற்க மறுத்த மனதைச் சரிகட்டி, ஒருவழியாக சமாதானம் செய்திருந்தான்.

 

வீனாவின் இருப்பு நேரத்தை, தங்களது பகுதியில் அதிகப்படுத்தும் புதுவரவாக மோனிகா இருப்பதால், தங்கையிடம் இளக்கம் அவன் அறியாமலேயே வந்திருந்தது.

 

படிப்பு சம்பந்தமாகவோ, இல்லை ஏதேனும் அவர்களுக்குள் சாதாரண சம்பாசனையாகவோ தொடர்ந்த உறவால், பெரும்பாலும் தங்களது பகுதியில் நவீனா வந்து போவதற்கு மோனிகாவே காரணம் என்பதை அவள் பள்ளிக்குச் செல்லத் துவங்கியது முதல் உணர்ந்திருந்தான் சங்கர்.

 

மோனிகா வருமுன்புவரை சங்கர் வந்துவிட்டால் அங்கு செல்வதைக் குறைத்து விடுவாள் பெண்.  ஆனால் இப்போது சங்கர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களது தினசரி நிகழ்வுகளை மாற்றாமல் மாட்லாடினார்கள்(பேசிக் கொண்டார்கள்).

 

மோனிகாவை பொறுத்தமட்டில் தனது தேவைகள் அனைத்திற்கும் தந்தையை மட்டுமே இதுவரை நாடியிருந்தாள்.

 

பெண்ணுக்குரிய அனைத்து தேவைக்கும் அவரையே நாடி நின்றவளைக் கண்ட நவீனாவிற்கு சற்று வருத்தம் வந்திருந்தது.

 

அத்தோடு, சசி அத்தையிடம் மோனிகாவையும் கோர்த்துவிட்ட பணியை இருவரும் உணராமலேயே இலகுவாகச் செய்து முடித்திருந்தாள் பெண்.

 

தனது தேவைக்காக போய் சசியிடம் நிற்பவள், சசி சுதாரிக்கும்முன்பே மோனிகாவை இடையில் நிறுத்திவிட்டு, தனது அத்தையைக் கொண்டே சாதித்துக் கொள்வாள்.

 

முதலில் தயங்கிய மோனிகாவும், பிறகு சசியுடன் ஒட்டிக் கொண்டாள். 

 

படம் பார்க்க வரமாட்டேன் என்றவளை வம்பிடியாக இழுத்து வந்து தனியே விட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றவளை நொந்தபடியே நெரிசலுக்கிடையே நெளிந்தபடியே வந்தாள் மோனிகா.

 

கூட்ட நெரிசலில் தெரியாமல் இடிக்க வந்ததாக அந்த இளைஞனை கைகொண்டு மறைத்து வழிகாட்டி வழியனுப்பியவன்,

 

“மோனிகா கொஞ்ச நேரம் அப்டி ஓரமா நில்லு.  கூட்டம் குறைஞ்ச பின்னாடி போயிக்கலாம், என்ற தங்கையை ஒதுங்கி நிற்குமாறு கூறியிருந்தான் சங்கர்.

 

இதற்கிடையில் அவனோடு படித்த, பள்ளித் தோழனைக் கண்டிருந்தான்.  ஒதுங்கி நின்ற நேரத்தில் அவனுடன் பேச முற்பட்டிருந்தான் சங்கர். மோனிகாவை கவனித்தவாறே எதிரில் நின்று நண்பனோடு பேசிக் கொண்டிருந்தான்.

 

‘டேய்… இது நம்ம ஊரு புது சரக்குடா… நம்ம வேலு வீடுல்ல… அதான்டா அந்த மிலிட்ரி சேத்துக்கிட்ட பொம்பிளைக்கு பிறந்த குட்டிடா…, என்ற தனதருகில் கேட்ட வார்த்தையைக் கேட்டு, சரேளென வார்த்தை வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தான் சங்கர்.  அதற்குள் இருவரும் மோனிகாவை நெருங்கியிருந்தனர்.

 

இவனைக் கவனியாது, மோனிகாவை மட்டுமே கவனித்து பேசியபடியே இவர்களைக் கடந்து சென்ற இருவரில் ஒருவன் யாரென அடையாளம் தெரியாமல், நண்பனிடம் அவசரமாக விடைபெற்று, அவர்களின் பின்னே வந்திருந்தான்.

 

அதையறியாத மற்றவனோ, ‘ஆத்தா மாதிரி கூப்டா வந்து சேந்துக்குமா, இல்லை… குட்டி சேதாரத்தை உண்டு பண்ணுமா தெரியலையேடா!’, என்று கூறியிருக்க

 

அதேநேரம் முதலாமவன் மோனிகாவை நெருங்கி, “ஆளுத் தேடுறியா? காசுக்கா இல்லை ஓசியா?, என்று பெண்ணைப் பார்த்து வார்த்தையில் வக்கிரத்தோடு வழிசலாய் வந்து கேட்க

 

மோனிகா தன்னை நெருங்கி வந்து கேட்டவனை கண்டு பயந்தபடியே, கண்கள் சங்கரைத் தேட…

 

கொதிகலனாய் மாறி, இருவரையும் முதுகில் தட்டி நிப்பாட்டியிருந்தான், பின்னே வந்திருந்த சங்கர்.

 

‘யாரது கேள்வியாகத் திரும்பியவர்களை, அவர்கள் என்னவென்று சுதாரிக்கும் முன், மாற்றி மாற்றி தனது கைமுஷ்டியால் ஓங்கி ஆளுக்கொரு குத்து மூக்கில், மூக்கில்  விட்டிருந்தான் சங்கர்.

 

எதிர்பாரா நிகழ்வில் இருவரும் சுதாரிக்கும்முன், வாங்கிய குத்தில் சில்மூக்கு சிதறியதால் இரத்தம் சீறிப் பாய்ந்து வந்து தரையில் சிந்திச் சிதறியது.

 

அருகில் நடந்து சென்ற வண்ணம் இருந்தவர்கள் அனைவரும் சிதறி ஓடியிருந்தனர்.

 

வந்தவர்களின் பேச்சைக் கேட்டு பதறிய மோனிகா, சங்கரின் இந்த திடீர் செயலால் உண்டான களேபரத்தில் கரைய ஆரம்பித்திருந்தாள்.

 

சங்கர் நிறுத்தாமல் மேலும் இருவரின் கன்னத்தில் ஆளுக்கொரு அறைவிட, அத்தோடு இருவரும் சங்கரைத் தாக்க முனைந்தனர்.

 

சங்கர் உழைப்பால் இறுகி நின்றிருந்த தனது தேகத்தால் அவர்களைத் தாக்க, வலியும், வேதனையும் வந்திருந்து முடியாமல் திணறினாலும், பின்வாங்காமல் சங்கருடன் எதிர்த்துப் போராடினர். சண்டைக்காடாக மாறியிருந்தது அந்த இடம்.

 

மோனிகா பதறி அழத் துவங்கியதை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தாள்.

 

எல்லாரும் காருக்கு சென்றுவிட, சங்கரும் மோனிகாவும் அங்கு வராமல் போகவே, பார்த்துவிட்டு வருவதாக வந்த சங்கரின் சித்தப்பா, மகனின் வீரதீரச் செயலைக் கண்டு

 

‘ஐயோ ஆரம்பிச்சிட்டானா… ஐயனாரு கணக்கா ஆளே உருமாறி எதிருல நிக்கிறவனுகளை ஒன்னுமில்லாம துவம்சம் பண்ணிருவானே!  இவனை மலையிறக்குறதுக்குள்ள எங்க அம்மாட்ட குடிச்சதெல்லாம் வெளிய வந்திருமே!’, என்று பதறியவாறே ஓடி வந்திருந்தார்.

 

அதிகமாக பேசியவனது வாயிலுள்ள பற்கள் விழுமாறு (கன்னம்) குமட்டைச் சேர்த்து குத்து விட்டிருந்தான். வாயெல்லாம் ரத்தம் வழிந்தாலும், உடம்பில் மிகுந்த காயங்கள் ஏற்பட்டபோதும், தங்களது தவற்றை அடிவாங்கியவர்கள் உணராமல், சங்கரிடம் விடாமல் போராடினார்கள்.

 

தவறை உணராத இருவரும், சங்கர் மோனிகாவிற்காக இந்த அளவு களத்தில் இறங்கி எதிர்ப்பான் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர்களது முகத்திலேயே தெரிந்திருந்தது.

 

சண்டையை பிரிக்க வந்த திரையரங்கு ஊழியர்களும் அவருக்கு ஒத்துழைக்க, சங்கரை ஒருவழியாக மற்றவர்களிடம் இருந்து பிரித்திருந்தனர்.

 

ஆனாலும், அடிவாங்கியவர்கள் இருவரும், சங்கரிடம் சவால் விட, “கொன்னு குழி தோண்டி புதைச்சிருவேண்டா…!, என்று சங்கர் மீண்டும் ஒரு அறைவிட திமிற

 

“என்னமோ கூடப் பிறந்தவ மாதிரி வந்து ஒரேடியாத் துள்ளுற, என்று ஒருவன் கூற

 

தன்னை விடுவித்துக் கொண்டு போய், இன்னும் நாலு மிதி விட்டிருந்தான்.

 

விழுந்ததில் குண்டக்க மண்டக்க உடம்பில் அடிவாங்கி எழமுடியாமல் திணறியவனை, இன்னும் இரண்டு மிதி மிதித்திருந்தான்.

 

தியேட்டரில் உள்ள எடுபொடிகள் அனைவரும் வந்து சங்கரை சமாதானம் செய்து, அவர்களுக்கும் அறிவுரை கூறி அங்கிருந்து ஒருவழியாக அனுப்பியிருந்தார்கள்.

 

அரங்கில் நிறைய சேதம் அவர்கள் நின்றிருந்த இடத்தில் உண்டாகியிருக்க, அதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு, சங்கரை அழைத்துக் கொண்டு திரும்பியிருந்தார் அவனது சித்தப்பா.

 

சங்கரால் அவர்கள் பேசியதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

 

அவர்களைக் கொன்றிருந்தால் மனம் சமாதானம் ஆகியிருக்குமோ என்கிற வெறி.  ஆறவில்லை. 

 

இதெற்கெல்லாம் தனது தந்தை மற்றும் மோனிகாவின் தாய் மீது வெறுப்பு இன்னும் மிகுந்திருந்தது.

 

‘பெரியவங்க யோசிக்காம பண்ணதுக்கு, இந்தப் புள்ளை என்ன செய்யும்?  இது இத்தோட முடியுமா? இன்னும் எவ்வளவு விசயங்களை இந்தப் புள்ளை ஃபேஸ் பண்ணனும்னு தெரியலையே!

 

சில்மிஷம் செய்த இருவரும் தங்களது கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அறிந்தவனுக்கு, நமது வீட்டிற்குள் நடப்பது அத்துபடியாக தெரிந்து கொண்டு, தகாத வார்த்தைகள் பேசுபவர்களைக் கண்டு, உள்ளம் கொதித்தது.

 

தந்தையின் செயலில் ஒட்டாமல் வீட்டில் இருக்கிறான் என்கிற செய்தியை ஊருக்குள் பேசியதைக் கேட்ட தைரியத்தில்தான், மோனிகாவைப் பற்றிய விமர்சனங்களோடு வந்தவர்கள், தனியே நின்றவளிடம் வந்து துணிச்சலாக பேசியிருந்தனர்.

 

சங்கரும் உடன் வந்திருந்ததை இடைவெளியின் போதே கண்டிருந்தார்கள்.  ஒட்டாமல் முகத்தை உம்மென்று வைத்தபடியே தின்பண்டங்கள் வாங்கியதைக்கூட தானாக மோனிகாவிடம் நேரில் கொடுக்காமல், சிறுவர்கள் மூலம் கொடுத்ததையும் பாராமல் பார்த்திருந்தார்கள்.

 

அந்த தைரியம்தான் அவர்களை இந்த அளவிற்குப் பேசத் தூண்டியிருந்தது.

 

ஆனால் மோனிகா தனித்து நின்றிருக்க, செல்பவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கி மறுபுறம் தோழனோடு ஓரமாக நின்றவனை கவனிக்காமல், மோனிகாவைப் பார்த்தவாறே வந்து பேரத்தைத் துவங்கியிருந்தான் ஒருவன்.

 

ஆனாலும் தனியொருவனாக இருவரையும், அடித்துத் துவைத்தவனை, ஆள் சேர்த்துச் சென்றாவது அடித்தால்தான் வெறி தீரும் என்கிற அளவிற்கு வன்மம் வளர்த்து விலகியிருந்தனர் அந்த இருவரும்.

 

வரும்வழி நெடுக, சித்தப்பா, “அவனுகளே சாக்கடை.  நாம பாட்டுக்கு பேசாம கண்டுக்காத மாதிரி வந்திருந்தா இவ்வளவு பிரச்சனையில்லல… எதுக்கு தேவையில்லாம கைநீட்டுன… இனி அத்தோட விடற ஆளுக மாதிரி தெரியலை… இதையே சாக்கா வச்சு அங்கங்க வந்து பிரச்சனைய கூட்டுவானுங்க… அந்த சனங்களைப் பத்தித் தெரிஞ்சும் போயி கைவச்சுருக்க…, என்று மகனைச் சாடியிருந்தார்.

 

“எப்டி அவன் பேசுறதைக் கேட்டுகிட்டு பேடி மாதிரி வரச் சொல்றீங்க?  நாலு தட்டு தட்டினாத்தான் இனி நம்ம வழிக்கு வரமாட்டான்!, என்று தனது செயலை நியாயப்படுத்தியவன்

 

“திரும்ப வச்சிக்கிட்டா… பெத்தவளுக்கு கொல்லிபோட இருக்கமாட்டானுக, என்று தீவிரமாகக் கூறியிருந்தான் சங்கர்.

 

ஆனால் மோனிகாவைப் பார்த்து அவன் கேட்டதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. அமைதியாக வீட்டிற்குள் வந்தவன், அவனது அறைக்குள் இருக்க, மோனிகா தந்தையிடம் தனக்கு தெரிந்த விடயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

 

ஆனால் பெண்ணும், அவர்கள் தன்னிடம் கேட்டதைக் கூறவில்லை.

 

சில வார்த்தைகளை அவள் கேட்கும் வாய்ப்பு இருந்திருக்கவில்லை.  தன்னிடம் அவர்கள் கேட்டதை தந்தையிடம் கூறவும் மனம் கூசியது.

 

தாஸிற்கு மகனின் இந்தச் செயலைக் கண்டு, மனம் பதறினாலும் தெளிந்திருந்தார்.

 

பெண்ணை நினைத்தே குடியைத் துவங்கியிருந்தார்.

 

இனி மகன், தான் இல்லாமல் போனாலும், மகளை விடமாட்டான் என்கிற தைரியம் உண்டாகியதில் நிம்மதியாக உணர்ந்தார்.

////////////////

 

அங்கங்கு இரத்தத் திட்டுகள் உடையில் இருக்க, வீட்டிற்குள் நுழைந்தவனைப் பார்த்துப் பதறியிருந்தார்.  அதற்குள் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டவனைக் கண்டு புலம்பியவாறே அடுக்களைப் பக்கம் சென்றிருந்தார்.

 

கையில் தேநீரோடு வந்து கதவைத் தட்ட, குளியல்போட்டு வந்து நின்றவனைக் கண்ட சசி

 

“என்னடா சங்கரு, என்ன நடந்துச்சு… வம்பு தும்புக்கு போகமாட்டேன்னு சத்தியமெல்லாம் போனதடவை பண்ணிட்டு இப்ப எங்க போயி அடுத்த வம்பை இழுத்துட்டு வந்திருக்க?, என்று அவனது உடம்பை ஆராய்ந்தவாறே கையில் எடுத்து வந்திருந்த தேநீரைக் கொடுத்தார்.

 

“வம்புக்கு போகமாட்டேன்.  வந்த வம்ப விடமாட்டேன்னுதான் உங்ககிட்ட சத்தியம் பண்ணேன்.  இது வந்த வம்பு…, என்று முடித்திருந்தான்.

 

“என்னடா? எதுக்கு போன இடத்தில வம்பு உன்னையத் தேடி வருது!  போனமா படம் பாத்திட்டு வந்தமானு இல்லாம இப்டியா…”, என மகனை கோவிலைச் சுற்றுவதுபோல சுற்றி வந்தும் காயம் எதுவும் கண்ணில்படாமல் இருக்கவே, மனதில் நிம்மதிப் பெருமூச்சை வெளிவிட்டிருந்தார் சசி.

 

தாயின் எண்ணம் உணர்ந்தவன், உடனே சட்டை ஒன்றை எடுத்து மாட்டியபடியே பதிலளித்தான்.

 

“என்ன விசயம்னு சொல்ல மாட்டியா?”, என்று மகனிடம் விடாமல் நின்றவரை

 

“ஒன்னுமில்லைம்மா!, என்று ஒற்றைவரியில் கூறிவிட்டு வெளியில் கிளம்பிவிட்டான்.

 

“ஒன்னுமில்லாததுக்கே உடுப்பெல்லாம் ஊருப்பட்ட இரத்தக் கறையோட வந்திருக்க…, என்றபடியே பின்னால் வர, அதற்குள் வேக எட்டு வைத்து விட்டைவிட்டு வெளியேறியிருந்தான்.

 

வீட்டிற்குள் இருந்தால், தோண்டல், துருவல் அடுத்தடுத்து வரும் என்று சங்கருக்குத் தெரியும்.

 

தெளிவாக விடயமறிந்த இருவரில் ஒருவர் வெளியேறியிருக்க, அடுத்ததாக, பெண்ணிடம் சென்று நின்றார் சசி.

 

தனக்குத் தெரிந்ததை,  தந்தையிடம் கூறியதை மட்டுமே சசிகலாவிடமும் கூறிவிட்டு மவுனியாகியிருந்தாள் மோனிகா.

 

மோனிகாவை முன்னிட்டே விடயம் பெரியதாகியிருக்கிறது என்பதை உணர்ந்தவர், இதற்குமேல் மகன் இதைப்பற்றிப் பேசமாட்டான் என்பது திண்ணம் என்பதை உணர்ந்து விட்டுவிட்டார்.

 

பெண்கள் விடயம் என்றால் அவன் இப்படி நடந்து கொள்வதை ஓரிருமுறை கண்டிருந்ததால், தனது வளர்ப்பினை நம்பி விட்டிருந்தார்.

 

‘காவாலித் தனமா எதாவது பேசியிருப்பானுக, இல்லைனா, எதாவது செஞ்சிருப்பானுக… அதான் கைய நீட்டியிருக்கான், என்று மனதை இலகுவாக்கியிருந்தார்.

 

இதை எதையும் அறியாதவளோ, இரவில் மோனிகாவைத் தேடி வர, அவளின் இயல்பற்ற முகம் கண்டு விடயத்தை என்னவெனக் கேட்டாள்.

 

முதலில் அமைதி காத்தவள், சங்கரின் செயலைக் கூற, “சபாஷ்… நான் உங்க அண்ணன் ஃபைட் பண்ணத பாக்காம விட்டுட்டேனே!, என ஏமாற்றத்தோடு உரைத்திருந்தாள்.

 

அத்தோடு விடாமல், “அதுக்கெதுக்கு நீ உம்முனு இருக்க.  பாதுகாப்புக்கு நமக்கு ஒரு ஆளு இருக்கும்போது யாராவது இப்டி அழுவாங்களா? ஃபைட் சீனப்போ கைதட்டி உங்க அண்ணனை என்கரேஜ் பண்ணியா…?, என்று மோனிகாவைக் கேட்க

 

அவள் மறுத்து தலையசைக்க, “ப்ச்… என்ன புள்ளையா இருந்திருக்க… என்கரேஜ் பண்ணியிருக்க வேணாமா?, என்று மோனிகாவை கிண்டல் செய்திருந்தாள்.

 

“அந்த இடத்தில நீ நின்னுருந்தா தெரிஞ்சிருக்கும்.  யாருமில்லாம எங்கண்ணன் மட்டும் தனியா ஒரு ஆளா சண்டை போட்டாங்க… அவனுங்க ரெண்டு பேரு… எதாவது பண்ணிட்டா என்ன செய்யறதுனு ரொம்ப பயந்துட்டேன், என்று இன்னும் அதிலிருந்து வெளிவராமல் பேசினாள் மோனி.

 

“சரி சரி விட்டுத்தள்ளு! நான் அந்த எடத்துல இருந்திருந்தா விசிலடிச்சு உங்க அண்ணனை என்கரேஜ் பண்ணியிருப்பேன்.  இந்த மூட்டைப்பூச்சியால அத மிஸ் பண்ணிட்டேன், என்று சோகமாக உரைத்தவள்,

 

“உங்க அண்ணனுக்கு எதுவும் ஆகாது! பயப்படாத…!  எங்க உங்க அண்ணன்?, என்று சிரித்தபடியே கேட்க

 

“அப்பவே வெளிய கிளம்பிப் போயிட்டாங்க, என்றிருந்தாள் மோனிகா.

 

“சரி… நாம்போயி அத்தையைப் பாத்துட்டு வரேன், என்று சசியை நாடிச் சென்றிருந்தாள் நவீனா.

 

“அத்தை, இன்னிக்கு என்ன ஸ்பெஷல், என்று சசியிடம் கேட்டவளை, யோசனையோடு

 

“இன்னிக்கு என்ன ஸ்பெஷல், என்று பதிலுக்கு கேட்டிருந்தார்.

 

“உங்க பையன் இன்னிக்கு ஃபைட்டெல்லாம் பண்ணி, எல்லாத்தையும் துவம்சம் பண்ணிட்டாங்களாமில்ல…!, இவளாகவே கூடுதலாகச் சேர்த்துக் கூறினாள்.

 

“மோனி சொன்னா…! அதுக்கு எங்களுக்கு நீங்க எதாவது ஸ்பெஷசலா பண்ணிக் குடுக்கணுமில்ல…!

 

“அடிங்க… அவன் சண்டை போட்டுட்டு வந்தததுக்கு, இப்பத்தான் அவன் முகுதுல ஒன்னு போட்டு அனுப்பியிருக்கேன்.  உனக்கும் வேணுனா சொல்லு… ஸ்பெசஷலா நாலு தாரேன், என்று சிரித்தபடியே நவீனாவை நோக்கி வர

 

நவீனாவோ அங்கிருந்து ஓடியபடியே, “இதெல்லாம் நல்லாயில்லை… சொல்லிப்புட்டேன். சண்டை போட்ட மகனுக்கு ஒன்னு குடுத்துட்டு, ஆடியன்சுக்கு நாலுங்கறது அதிகம்!, என்றபடியே

 

“நீங்க பேட் மம்மியா இருக்கீங்க… பையனை என்கரேஜ் பண்ணாதான இன்னும் நல்லா வருவாரு.  மிலிட்டிரி வீட்டிலயே எல்லாம் உல்டாவா பண்ணா எப்டி!”, என்று தனது  உரையை முடிக்கும்முன்

 

“இப்டித்தான் என்று நவீனாவின் முதுகில் செல்லமாக அடி ஒன்றை வைத்திருந்தார் சசி.

 

“அடியா இது, இடி மாதிரி இறக்குறீங்க! பாவம் உங்க புள்ளை! அதான் வலி தாங்காம வீட்டை விட்டு ஓடிட்டாங்கபோல!, என்றபடியே வலியில்லாத இடத்தினை வலித்தது போல முதுகைத் தடவியவாறே சசியைப் பார்த்தவாறே அங்கிருந்த வெளிவந்தவள், எதிரில் வந்தவனைக் கவனியாமல், நவீனாவின் வருகையை உணர்ந்து முன்னேறி வராமல் நின்றவன் மீது போய்  இடித்திருந்தாள்.

 

நவீனா பேசியதைக் கேட்டபடியே நின்றவன், வந்து இடிக்க வந்தவளையும், தள்ளி நிறுத்த முனையாமல் இதழோரம் சிந்திய புன்னைகையோடு பார்த்திருந்தான்.

 

‘ஆனை வரதுக்குள்ள அதோட மணியோசை வர்றமாதிரி… தான் இவ வாய்ஸ், என்று எண்ணியவாறே பெண்ணின் செயல்களைப் பார்த்தபடியே நின்றிருந்தான் சங்கர்.

 

‘இந்த எடத்துல எதுவுமே இருக்காதே… இப்ப எதுல போயி இடிச்சேன்… மெத்துன்னு இருக்கு, என்றபடியே திரும்பியவள்

 

சங்கர் நிற்பதைப் பார்த்து அசடு வழிந்தவாறே, அவனிடமிருந்து அவசரமாக விலகி, “தெரியாம…, என்றுவிட்டு அசட்டுச் சிரிப்போடு அகன்றிருந்தாள் நவீனா.

 

பின்னோடு வந்த சசி, கண்டதை காணாததுபோல அங்கிருந்து அகன்றிருந்தார்.

/////

 

மாதங்கள் உருண்டோட, மகத்துவங்கள் பல கண்டு, கேட்டு, கற்று, அந்த ஆண்டை நிறைவு செய்திருந்தாள் பெண்.

 

இறுதி ஆண்டின்,  பருவத் தேர்வுகளுக்கிடையே மாட்டிக் கொண்டவன், ஊரையே மறந்திருந்தான்.  பெண்ணின் நினைவுகளோடு!

 

சித்திரை வருடப் பிறப்பு முடிந்தவுடன் தந்தை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார்.

 

சன்டிவி என்ற புதிய தமிழ் சானல் ஒளிபரப்பைத் துவங்கி அன்று மக்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தேவையான அனைத்து அமானுஷ்ய வேலைகளையும் துவங்கியிருந்தது.

 

மக்கள் அனைவரும், மகிழ்ச்சியோடும், நிறைவோடும் புத்தாண்டோடு, புதிய தொலைக்காட்சி சானலையும் வரவேற்றிருந்தார்கள்.

 

நவீனா மட்டும், அமைதியாக இருந்தாள்.

 

ஒன்றரை மாதங்கழித்தே இனி இங்கு ஊருக்குத் திரும்புவாள்.

 

வருத்தத்தோடு வளைய வந்தவளைக் கண்டவனுக்குப் புரிந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளவில்லை.  இருவரையும் தொடர்வண்டியில் ஏற்றிவிட சங்கர்தான் உடன் வந்திருந்தான்.

 

தந்தையோடு நின்றிருந்தவள், தலையை ஆட்டி விடைபெற்றதைப் பார்த்தவனுக்கும் மனம் கனத்தது.

 

ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்தான்.  பெண்ணோ, அவனைப் பார்ப்பதையே பெரும்பாலும் தவிர்த்திருந்தாள்.  பார்த்தாள் நிச்சயமாக அழுகை வரும் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். 

 

தந்தையின் முன்பு அழுது எதையாவது இழுத்து வைக்க வேண்டாம் என்ற முடிவோடு, சங்கரின் கையில் இருந்த அவளது சூட்கேசை வாங்கும்போது, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “கிளம்பறேன், என்கிற வார்த்தையோடு நகர்ந்திருந்தாள்.

 

கரகரப்பான பெண்ணின் குரலில் அவளின் அழுகை உணர்வை உணர்ந்தவன், பெண் நிமிர்ந்து பார்ப்பாளா என்று எதிர்பார்த்தே முடிவில் ஏமாற்றத்தோடு திரும்பியிருந்தான்.

//////////

 

நவீனாவின் மாறுதல்களை முன்பே கண்டிருந்த பெற்றோர் பெண்ணை அவள் போக்கில் விடுமுறையில் விட்டிருந்தனர்.

 

இடையில் ஊரிலிருந்து கோடைவிடுமுறைக்கு தாஸ் குடும்பத்தைத் தவிர அனைவரும் மைசூர் ட்டிரிப் வந்ததோடு, பார்க்க வந்ததாக கூறி இரண்டு நாட்கள், அவர்களது வீட்டில் வந்து டேரா போட்டிருந்தனர்.

 

நந்தாவிற்கும் புதிய வரவுகளோடு பொழுது இனிமையாகச் சென்றது.  சாந்தனுவும் உடன் வந்திருக்க நவீனாவிற்கு சற்றே ஆறுதலாக உணர்ந்தாள்.

 

வரும் கல்வியாண்டு முதல் காரைக்குடிக்கு குடும்பத்தை கொண்டு வந்து விடத் திட்டமிட்டிருந்தபடி, மாற்ற முயல, புதிய செய்தியைக் கேட்டவளுக்கு இடி விழுந்ததுபோல இருந்தது.

 

ஆனாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல், காரைக்குடியிலிருந்து பள்ளிக்கு சென்று வரத் தன்னை தயார் செய்யத் துவங்கியிருந்தாள் பெண்.

 

ஒரே ஆறுதல், சாந்தனு பனிரெண்டாம் வகுப்பு என்பதால், கிராமத்திற்கு தனிவகுப்பு முடிந்து திரும்பத் தாமதமாவதால், நவீனாவின் வீட்டில் வந்து தங்கி படித்தான்.

 

தோழன் தோள் கொடுத்தான்.

 

சாந்தனு படிப்பில் புலியாக இருந்தான். நவீனாவும் அவனோடு சேர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தினாள்.

 

சங்கரும் தனது கல்லூரிக் கல்வியை முடித்துவிட்டு, முழுநேர விவசாயியாக மாறியிருந்தான்.

 

காரைக்குடிக்கு ஏதாவது வேலையாக வருபவன், சாரதா, முல்லை இருவரும் கொடுத்து விடுவதை வந்து கொடுத்துச் செல்வான்.

 

ஆச்சி எதாவது கொடுத்துவிட்டார்கள் என்று அவ்வப்போது சங்கர் வீட்டிற்கு வந்து செல்வதாக, தாய் சொல்வதைக் கேட்டவளுக்கு கோபம் கொப்பளித்தது.

 

‘ஒரு நாளாவது இருந்து பாக்கறாங்களா? அப்டியென்ன அவசர வேலை?’, என்று உள்ளம் சங்கரைத் தேடத் துவங்கியது.

 

கிராமத்து வழக்கம் எல்லாம் அத்துபடியாகி இருந்தவள், சரியாக என்ன மாதத்தில் எந்த விழா என்று முன்பே சாந்தனுவின் பெற்றோர் வாயிலாக அறிந்து கொள்ளுவாள்.

 

எதையும் விடாமல், சென்று கலந்து கொண்டு திரும்புவதை வாடிக்கையாக்கியிருந்தாள் பெண்.

 

பெரும்பான்மை நேரங்களில் புஷ்பாவும் உடன் வந்திருந்து, மகளைக் கையோடு அழைத்துச் சென்றுவிடுவார்.

 

எந்த ஆச்சி, “புள்ளைய ரெண்டு நாளு இங்க விட்டுட்டுப் போ, என்று கூறினாலும், புஷ்பா விடமாட்டார்.

 

‘அவங்கதான் லாஸ்ட் இயர் ஃபுல்லா வச்சிப் பாத்தாங்க.  இப்ப என்னானா இனி அவங்களை நம்பி விடமாட்டாங்களாம்.  என்னங்கடா இது.  இதெல்லாம் எந்த ஊரு நியாயம்! நேரத்துக்கு ஏத்த மாதிரி… எல்லாத்தையும் மாத்திகிட்டு!, இது நவீனா.

/////////

முழக்கொட்டு விழாவிற்கு வந்திருந்தாலும், முன்புபோல சுதந்திரமாக நடமாட இயலாது, ஏதோ ஒன்று தடுத்தது.

 

புஷ்பாவும் உடன் இருப்பதால், இரவு நேரத்தில் அறையை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலை.  நிறைய கட்டுப்பாடுகள்.

 

சின்னச் சின்ன விடுமுறை நாட்களும் கைகொடுக்கவில்லை. பெரிய பள்ளம் மனதில் விழுந்து, சங்கரிடம் மிகுந்த கோபத்தில் இருந்தாள் பெண்.

 

கோபம் எதனால் என்பதைக்கூட புரிந்து கொள்ள இயலவில்லை.  ஆனால் அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற முடிவோடு கிளம்பி வந்திருந்தாள்.

 

“என்னக்கா, சிடுசிடுன்னே பேசுற”, வரா

 

“எம்பேச்சே இப்ப அப்டி மாறிடுச்சு வரா”, என்று பாவம்போலக் கூறியவள், சாடை மாடையாக மற்றவர்களைப் பற்றி விசாரித்து, அத்தோடு சங்கரைப் பற்றியும் பட்டும் படாமல் விசாரித்தாள்.

 

வராவோ, “மச்சானும் உன்னையப் பத்தியே தான் எங்கிட்ட பேசுறாங்க…! நீயும் மச்சானைப் பத்தியே எங்கிட்ட கேக்குற!, என்று கூற

 

“இது என்னடா புது வம்பு!, என்று எண்ணியவாறே

 

“இன்னிக்குத்தானடி கேட்டேன்.  அதுக்கு இப்டி சொல்லிட்ட!, என்று ஒருவழியாக சமாளித்து,

 

“நீ பாட்டுக்கு எதாவது இப்டி பெரியவங்ககிட்ட வாயில வந்தத சொல்லப் போற!, என்று உசார்படுத்தினாள்.

 

ஒரு மார்க்கமாகப் பார்த்தவளை, ‘இனி இவகிட்ட அவங்களைப் பத்தி எதுவும் கேக்ககூடாது என்று முடிவுக்கு வந்திருந்தாள் நவீனா.

 

ஒருவழியாக சங்கரை தேடிப் பிடித்தவள், “பாத்து ரொம்ப நாளாகுது.  எனக்கு உங்களைப் பாக்கணும்னு தோன்ற மாதிரி உங்களுக்கு தோணலையா?, என்று கேட்டிருந்தாள் பெண்

 

பெண்ணைப் புரிந்தாலும், “அதான்… அப்போப்போ நீ இங்க வந்தா பாக்கறேனே, சங்கட சமாளிப்பு

 

“காரைக்குடிக்கு வந்திட்டு, காலுல வெந்நிய ஊத்தன மாதிரி ஏன் வந்தவொடனே கிளம்புறீங்கனு கேட்டேன், விளக்கம்

 

“வேல கிடந்திருக்கும்.  அதான்…, என்று சமாதானம் கூறியதோடு, பெண்ணவளது கேள்விகளுக்கு ஓரிரண்டு வார்த்தைகளில் பதிலைப் பேசிவிட்டு, உடனே அகன்றிருந்தான் பெண்ணை விட்டு.

 

கூட்டம் இருந்த வீட்டில், அதற்குமேல் இருவரும் நின்றால் என்ன? ஏது? என்று கேள்வியெழும் என்பதே காரணம்.

 

அத்தோடு வீடு திரும்பியவள், மனம் சமாதானமாகி படிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தாள்.

 

மாதங்கள் கடந்தன.  மாற்றங்கள் வராமல் இருந்தது.

 

வந்தவன் காணாமல் செல்வதை கேட்டவளுக்கு வீம்பு வந்திருந்தது.

 

அதன்பின் காரைக்குடி வீட்டில் நவீனா இருக்கும்போது, வீட்டிற்கு வந்த சங்கரை மரியாதை நிமித்தமாகக் கூட வாவென்று அழைக்காமல் அறைக்குள் அடைந்திருந்தாள்.

 

புஷ்பராணியோ மகளின் செயலைக் கண்டு, “ஏய் வந்த புள்ளைய வானு கேக்காம என்ன பண்ற?, என்று கண்டிக்க

 

வெளியே வந்து சங்கரை முறைத்தபடியே, “வாங்க, என்றுவிட்டு அகன்றிருந்தாள்.

 

சங்கருக்கு பெண்ணின் முறைப்பைக் கண்டு, ‘அடுத்து என்ன பஞ்சாயத்தை பண்ணப் போகுதோ தெரியலையே! சிக்குனா வச்சி செஞ்சிருவா!’, என்று எண்ணியவாறே, அத்தையிடம் கூறிக் கொண்டு விடைபெற்றிருந்தான்.

 

அரையாண்டுத் தேர்வும் வந்தது.

 

விடுமுறையில் அம்மாவிடம் மல்லுக்கட்டி மானகிரி சென்றிருந்தாள். உடன் புஷ்பாவும் வந்திருந்தார்.

 

அடுத்த நாள் காலையில், தாத்தாவோடு சமரசம் செய்து பண்ணைக்குச் சென்ற வண்டியில் சென்றவள், சங்கருக்காக கொட்டகையினுள் காத்திருக்கத் துவங்கினாள்.

 

பண்ணையில் அவளை எதிர்பார்க்காதவனோ, “தனியாவா வந்த? என்ன விசயம் வீனா?, என்றபடியே எதுவுமே இதற்குமுன் நடந்தது நினைவில் இல்லாததுபோன்ற கேள்வியுடன் வந்தான்.

 

இடையில் கைவைத்தபடியே கொட்டகைக்குள் வந்தவனை நின்றவாறு முறைத்தவள், “என்ன ஃபார்மரு… வரவர உங்க போக்கே சரியில்லையே, என்று ஒரு திணுசாகக் கேட்க

 

“எம்போக்குல… அப்டி என்ன தப்பக் கண்டுட்ட?”, என்றபடியே சிரிக்க

 

“நானா வந்து, மாசம் ஒருதடவையாவது வந்து பாருங்கனு சொன்னதில இருந்து, அந்தப் பக்கம் வந்தாகூட வீட்டுப்பக்கமா வராம போயிரீங்களாம், என்றவளை சங்கடமாகப் பார்த்தான்.

 

‘இதல்லாம் இவளுக்கு யாரு போயி சொல்றது

 

“என்னைப் புரிஞ்சுக்கோ வீனா.  எல்லா தடவையும் நான் அங்க வந்தா நல்லாவா இருக்கும்? தினமும் எனக்கு காரைக்குடில வேலை இருக்கும்.  அதுக்காக வீட்டுக்கு தினமும் வரமுடியுமா?, என்று நியாயம் கேட்டவனை

 

“நீங்கள்லாம் ரொம்ப பிஸி… நான் வெட்டி… உங்களைப் போயி நான் அப்டி சொன்னது எந்தப்புதான்!”, என்று மன்னிப்புபோல கிண்டல் குரலில் பேசியவளின் அருகில் சென்று

 

“எதுக்கு வீணா மனசைப் போட்டுக் குழப்பற, வேணுனே நான் அப்டி பண்ணலை

 

“கடைசியா ஜூலை மாசம் பாத்தது உங்களை… இப்ப டிசம்பர். அதுவும் அன்னிக்கு நீங்க வந்தப்போ பேசக்கூடாதுன்னுதான் இருந்தேன்.  எங்கம்மாதான் இழுத்துவிட்டாங்க… இல்லைனா வந்து பேசியிருக்கவே மாட்டேன்!, என்று அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தவள்

 

“அஞ்சாறு கிலோ மீட்டர் தூரத்துலதான் இருக்கோம்.  ஆனா ஐயாவைப் பாக்க இனி அப்பாயிண்ட்மென்ட் வாங்கனும்போல!, என்று சங்கரை நக்கல் குரலில் பேசினாள்.

 

“எனக்கு ஒன்னுமில்லை வீனா.  பொம்பிளைப் புள்ளை நீ.  உனக்கு இன்னும் படிப்பு இருக்கு.  இந்த விசயத்தை உங்க வீட்ல எப்டி எடுத்துப்பாங்கனு எனக்கு சரியா தெரியலை.  அப்டியிருக்க ஏதாவது பிரச்சனையின்னா இப்ப என்னால எதுவும் செய்ய முடியாதுல்ல…!

 

“சும்மா பாத்தாலே பிரச்சனை வருமா!

 

பேசாமல் நின்றான்.  “தோணும்போது பாத்துட்டா நான் பாட்டுக்கு என் வேலைய எந்த டிஸ்ரபன்சும் இல்லாம பாத்துட்டு போயிட்டே இருப்பேன்.  இல்லைனா… இதுவேதான் மனசு முழுக்க வந்து நிக்குதுன்னு வந்து விளக்கம் உங்ககிட்ட சொன்னதுக்குப் பின்னதான… இப்டி விலகி விலகி போறீங்க!, என்று சங்கரை கேள்வியால் திணறடித்தாள்.

 

பெண் தன்னை இன்னும் நெருங்கியதை உணர்ந்தவனுக்கோ என்ன செய்வது என்று ஒன்னும் புரியாத நிலை.

 

அருகில் வந்தவன், “இனி முடிஞ்ச வரை, இருந்து பாத்துட்டு வரேன் வீனா!, என்று சமாதானமாகக் கூற

 

அருகில் நின்றவனை இருகையால் பலம் கொண்டமட்டும் மார்பில் மாறிமாறி அடித்தவள், “காரைக்குடிக்கு வந்துட்டு கலெக்டரு ஆபிசுல அவசர வேலைனு இனி போனீங்கன்னா…! அத்தோட போயிருங்க…! இனி எப்போவும் எனக்கு நீங்க வேணாம்!, என்றபடியே அடிக்க

 

பெண்ணின் கோபம் புரிந்தவனோ, எலும்பியின் அடியில் வலி தாங்காமல் கையை பிடித்திருந்தான்.

 

“பிசாசு…! அதுக்கு எதுக்கு இந்த அடி அடிக்கிற!  வாய்ப்பேச்சு வாயோட இருக்கும்போது, இப்டி கைநீட்டாதன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்காத!, என்றான்.

 

“பிசாசுன்னா சொல்றீங்க…! இப்ப பிசாசு என்ன செய்யும்னு காமிக்கிறேன் பாருங்க…!, என்றவளோ, தனது கையில் இருந்த நகத்தால் சங்கரின் கையில் பிராண்டியிருந்தாள்.

 

“ஏய்! ஏற்கனவே அடிச்சது பத்தலைன்னு இப்ப இப்டி பிராண்டி வைக்கிறியே! ஏன் அன்னிக்கு அப்டி கிளம்பி வந்தேன்னு கேக்காம இப்டி பண்ணுற!, என்று நவீனாவின் செயலில் வந்த எரிச்சல் இருந்தபோதும், இளநகையோடு பெண்ணை நோக்க

 

“என் நிலைமை எல்லாம் உங்களுக்கு சிரிப்பாதான் இருக்கும்.  ரொம்ப பண்ணாதீங்க…! அஞ்சு மணிக்கு நான் வீட்டுக்கு வந்திருவேன்னு தெரிஞ்சும் அதுக்கு பத்து நிமிசம் முன்ன கிளம்பிப் போனா என்ன அர்த்தம்?, விடாது மனிதனைக் கேள்வியால் கேட்டிருக்க

 

“அன்னைக்கு ராஜு ஐயாவை ஆஸ்பத்திரில விட்டுட்டு, வீட்டுக்கு வந்திருந்தேன்.  வயசானவர ரொம்ப நேரம் எப்டி தனியா விடமுடியும்.  அதான் கிளம்பிட்டேன்!, என்ற நியாபகப்படுத்தி விளக்கம் கூற

 

“நல்லாதான் ரீசன் சொல்றீங்க…! இன்னொரு தடவை நீங்க இப்டி பண்ணா இனி உங்க முகத்துலயே முழிக்க மாட்டேன்!, என்று வைராக்யமாகப் பேசியவளை

 

“என்ன வீனா! இதுக்கெல்லாம் போயி இவ்வளவு பெரிய வார்த்தை பேசுற?  அப்டியே நாம பாத்தாலும் நீ வாங்கனு கேப்ப! நான் தலையாட்டுவேன்…! அப்புறம் சும்மா ஒரு பேச்சுக்கு… நல்லா படிக்கிறியானு நான் கேப்பேன்..! நீ தலையாட்டப் போற…! இதுக்கு எதுக்குன்னுதான் போயிட்டேன்!  இனி அப்டி நடக்காம பாத்துக்கறேன்!”, என்று சமாதானம் கூறியவன்

 

சமாதானம் ஆகாமல் நின்றவளை,இன்னும் வீனாவுக்கு கோபம் குறையலயா? என்ன செஞ்சா கோபம் குறையும்!, என்றபடியே பெண்ணை நெருங்கியிருந்தான்.

 

நெருங்கியவனை விட்டு விலகியவள், “நீங்க பண்ணதுக்கு நானும் பதிலுக்குப் பண்ணுவேன்!  அப்பதான் என்னிலமை உங்களுக்குப் புரியும்!, என்றிருந்தாள்.

 

“சரி, நீ வந்ததுல இருந்து இந்த இடமே ஒரே சோகமா இருக்கு வீனா.  கொஞ்சம் எதாவது ஜாலியா பேசேன்!, என்று பெண்ணை வேறு பக்கம் மனதை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டான்.

 

“நான் கோபமாதான் இருக்கேன் இன்னும்!, என்று குனிந்தபடியே நகர்ந்தவளை

 

“நான் கோபமா இல்லையே!, என்றபடியே, நடந்தவளை நாலே எட்டில் சென்று கையில் தூக்கியிருந்தான்.

 

சங்கரின் எதிர்பாரா செய்கையில் அதிர்ந்தவள், “என்னை இறக்கிவிடுங்க…!, என்றபடியே திமிறி இறங்கியிருந்தாள்.

 

அடித்ததோடு, பிராண்டியதும் எரிய கையை, கையைப் பார்த்தவனைக் கண்டவளுக்கோ வருத்தமாக இருந்தது.  ஆனாலும் கோபம் குறையாததால் கண்டும் காணாதது போல வீம்பாக இருந்தாள்.

 

“அடிச்ச கை அணைக்கும்னு சொல்லுவாங்க வீனா!”, என்ற பெண்ணை வம்பிழுக்க

 

“அதுக்கு வேற ஆளப் பாருங்க!, என்றாள்

 

“அதுக்கு வேற ஆளத் தேடச் சொல்ற? அப்ப எங்கம்மாகிட்ட சொல்லி வேற யாரையாவது வீட்டுக் வந்து மருந்துபோட வரச் சொல்லச் சொல்லவா? நீ பிராண்டுனது எரியுதுடீ!

 

“கொன்னுருவேன்! உங்க அப்பா மாதிரி எதுவும் ஐடியா இருந்தா இப்பவே சொல்லிரணும்.  இல்லை அத்தை மாதிரி நான் சும்மாலாம் இருக்கமாட்டேன். ரெண்டு பேரையும் கொன்னு குழிதோண்டிப் புதைச்சி  மண்ணுக்கு உரமாக்கிருவேன்.  ஆமா சொல்லிப்புட்டேன்!, என்று அனல் தெறிக்கும் தொனியில் பேசியவளை,

 

அயர்ந்து போய் பார்த்திருந்தான்.  இது பாக்கத்தான் இப்டி தம்மாத்தூண்டா இருக்கு. எவ்வளவு பெரிய வார்த்தை பேசுது! அம்மாடி…! விவரம் மட்டுமில்ல… விவகாரமாவும் இருக்கு!

 

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டீ!  அதுக்கு எதுக்கு இவ்ளோ டென்சன்!, என்று பெண்ணைத் தேற்றினான்.

 

கண்கள் கலங்கியிருக்க, இப்டி இன்னொரு தடவை பேசுங்க…! அப்புறம் நான் யாருங்கறதை தெரிஞ்சிப்பீங்க!, என்றவள்,

 

“என்னை வீட்டுல கொண்டு போயி விடுங்க! வாங்க நேரமாகுது! அம்மா தேடுவாங்க!, என்று கூறியவள்

 

அதற்குமேல் கொட்டகையிலிருந்து வெளிவந்திருந்தாள்.

 

நிமிட நேரத்திற்குள் தன்னைச் சுதாரித்தவள், எதுவும் நடவாததுபோலக் கிளம்பியிருந்தாள்.

 

நவீனாவின் சடுதிநேர மாற்றங்களைக் கண்டவனுக்கோ இவளுக்கு ஈடு கொடுக்க தன்னால் இயலுமா? என ஒரு கனம் யோசித்திருந்தான்.

 

அதற்குள் வீட்டில் நவீனாவைக் காணாமல் தேடிய புஷ்பா, சங்கரோடு வந்திறங்கிய நவீனாவைக் கண்டதும் என்ன செய்தார்?

 

அடுத்த அத்தியாயத்தில்…

/////////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!