நீயும் நானும் அன்பே…
அன்பு-12
இரண்டு ஆண்டுகளாக கண்ணில் மட்டும் காதல் வளர்த்திருந்தவர்கள், இன்று களத்தில் இறங்கப் போவதை அறியாமலேயே பயணத்தைத் துவக்கியிருந்தனர்.
துவக்கம் இனிதாகவே இருக்க, எதையும் யோசிக்க, யாசிக்க எண்ணாமல் வந்திருந்தான் சங்கர்.
பசிக்கு உணவைத் தவிர்த்தவளை அழைக்க வந்தவன், பெண்ணின் பேச்சில், ‘ஆரம்பிச்சிட்டாடா…! இன்னும் போகப் போக மோகினியாட்டம் என்னாகுமோ!’, என்கிற ரீதியில் நவீனாவை ஆழ்ந்து பார்த்தவன்
“சரி இப்ப கூப்டறேன்ல…! வா வந்து சாப்பிட்டு தெம்பா வந்து பேசலாம்!”, என்றவாறே காரிலிருந்து இறங்கி பெண்ணை நோக்கி கையை நீட்டியிருந்தான் சங்கர்.
சங்கர் இறங்கி நின்றவாறு அழைத்தும் வராதவளை, ‘என்னதான் இப்ப இதுக்கு வேணுனு வாயத் துறந்து சொல்லாம…! வாய்க்கா வரப்பு சண்டை கணக்கா நம்மட்ட வந்து முறைச்சுகிட்டு இருந்தா…! அவளுக்கு என்ன வேணுனு கனவா கண்டேன்! காலக் கொடுமைடா!’, என்று கோபம் முனுக்கென எழ
“ஏய்…! நேரமாகுதுல்ல…! சீக்கிரம் இறங்கி வா..! சாந்தனு தேடி வரப்போறான்!”, என்று பெண் அமர்ந்திருந்த பகுதியின் கதவைத் திறந்து கோபமாகவே அழைத்தான் சங்கர்.
சங்கரை வைத்த விழி எடுக்காமல் பார்த்தவள், ‘நேரமாகட்டும்…! சாந்தனு வந்தா எனக்கென்ன!’, என்கிற பார்வையை சங்கரிடம் வீசியவாறே குனிந்து கொண்டு, அசையாமல் இருந்தவளைப் பார்த்தவனுக்கு, பசியோடு சேர்ந்து, பெண்ணின் அலட்சியத்தால் எரிச்சல் வந்திருந்தது.
“வீனா…!”, என்று மீண்டும் உரக்க அழைக்க
“…”
நீண்ட நேரமாகியும் சங்கர் வராமல் இருக்கவே, வெளியில் வந்த சாந்தனு சங்கரின் கதவைத் திறந்து பேசுவது எல்லாம் பார்த்துவிட்டு, அப்படியே வந்தவழியில் திரும்பியிருந்தான்.
“அவன் எதாவது நினைச்சுக்கப் போறான்டீ…! இப்ப வரப்போறீயா இல்லையா?”, என்று பெண்ணின் கையைப் பிடித்து தனது முரட்டுத்தனத்தைக் காட்டி இழுக்க
“எல்லாம் அவனுக்கு தெரியும்!”, என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டு, வெடுக்கெனக் கையை சங்கரிடமிருந்து உருவியபடி அமைதியானவளைக் கண்டவனுக்கோ
“என்ன தெரியும்?”, என்று புருவங்களைச் சுருக்கி புரியாமல் கேட்க
“எல்லாமே தெரியும்!”, அலட்சியமாய் பதில் வந்திருந்தது.
“எல்லான்னா…! எனக்குப் புரியல…! நீ எதைச் சொல்ற!”, சாந்தமாக மாறத் துவங்கியிருந்தான் சங்கர்.
“ம்… நாலு வருசங் கழிச்சு கல்யாணம் பண்ணிக்க கேட்டதெல்லாந்தான்…!”, என்று அவளும் அதே குரலில் நீட்டி முழங்க
“அதல்லாம்….”, என்று இழுத்தவன், “அத எதுக்குடீ அவங்கிட்ட போயி சொன்ன?”, என்று பதறியிருந்தான்.
“…”, ‘சொல்லிட்டேன் அதுக்கு இப்ப என்ன?’ எனும் பார்வையை வீசிவிட்டு அமைதியாக இருந்தாள்.
அதற்குமேல் பொறுமையில்லாமல், அவள் அமர்ந்திருந்த பின்பக்கக் கதவை நன்கு திறந்து அவளைத் உள்ளே தள்ளிவிட்டு, அவளின் அருகில் சென்று அமர்ந்தவாறு, கதவைத் சாத்தியவனின் கோபத்தை, மூடிய கதவின் சத்தத்திலிருந்து கண்டு கொண்டாள் பெண்.
ஆனாலும், எதையும் கண்டுகொண்டதாகவோ, அல்லது பயந்ததாகவோ காட்டிக்கொள்ளாமல், காணாததைக் கண்டதுபோல, அருகில் வந்தமர்ந்தவனை இமை மூடாது பார்த்திருந்தாள் நவீனா.
ஆனாலும் எந்தப் பதற்றமுமில்லாமல் இருந்தவளை, “உங்கிட்டதான கழுதையா கத்தறேன்…! வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க…! பதிலைச் சொல்லு!”, என்று கேட்க
“…”, எப்டி ஆரம்பிக்க என்று யோசித்தவளை
“வீனா…! நேரத்தை வீணடிக்காம இப்ப சொல்லப் போறீயா இல்லையா?”, என்று அருகில் அமர்ந்த பெண்ணை வார்த்தையால் நெருக்க, பெண் கூறத் துவங்கியிருந்தாள்.
///////
மருத்துவ கல்லூரிகளில் கல்லூரி துவங்கும்போது பெரும்பாலும், ராகிங் சற்று வன்மையாகவே இருந்தாலும், சற்று நாள்களில் அதற்கு சம்பந்தமேயில்லாத சூழல் அங்கு அரங்கேறியிருக்கும்.
முட்டிக் கொண்டவர்கள் முத்தமிட்டுக் கொள்வதும், முறைத்துக் கொண்டவர்கள் தோளோடு தோளணைத்துச் செல்வதுமாக மாறிவிடும், மாயாஜால மந்திர, தந்திரமில்லா இயந்திரத்தனம் மிகுந்த துறையது!
ராகிங்கின்போது சேர்ந்த ஜோடிகள், படிப்பு முடிந்ததும் வாழ்க்கையிலும் சேர்ந்து பயணிப்பது, இங்கு இயல்பான ஒன்று.
வகுப்புகள் துவங்கும்போது, வருகைப்பதிவேட்டின் பெயரைக்கேட்டு, பார்த்தே அறிமுகமாகியிராத ஒருவனின் பெயரால், பெண் தொடர்ச்சியாக அழைக்கப்படுவதும், அதேபோல் அதே பெண் பெயரால் அந்த ஆண் அழைக்கப்படுவதும், இங்கு தவிர்க்க முடியாத தவறாக, தவறாது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகவே உள்ளது.
ஆண், பெண், இருவருக்கிடையே எந்த அறிமுகமுமே இல்லாதபோதும், தன்னை நீண்ட நாள்களாக பெயர்சொல்லி அழைக்கும் பெயருக்குரியவனைக் காண பெண் ஏங்குவதும், அதேபோல ஆணும் எண்ணுவதும், இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் இருவர் மனதும் சமாதானமாகி சங்கமித்து, வாழ்க்கையிலும் அவர்கள் ஒன்றாகிப் போகக்கூடிய சூழலும், இத்துறையில் அதிகம்.
உருவம், நிறம் இங்கு தோற்றுப்போய், பிறரின் கிண்டலாகவோ, விளையாட்டாகவோ கூறத்துவங்கும், சொல்லின் வலுவால் இணைகின்ற உள்ளங்கள், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வது மருத்துவ கல்லூரியில் நடக்கும் சொல்(சுயம்)வரமாக என்றுமே உள்ளது.
அதேபோல நவீனா மருத்துவ கல்லூரிக்கு வந்த புதிதில், அவர்களது வகுப்பு மாணவர்களில், சில பெண்கள் ஆண்களது பெயராலும், அந்த ஆண்கள் பெண்ணின் பெயராலும் அழைக்கப்பட்டிருந்தனர்.
நடைமுறைகள் எதுவுமறியாதவள் எதையும் ஆரம்பத்தில் கவனித்திருக்கவில்லை.
நவீனா, அவளது வகுப்பு தோழமைகள் தவிர சீனியர்களாலும், சாந்தனுவின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டாள்.
முதலில் இதுபற்றி அறிந்திருக்கவில்லை பெண். பிறகு நாட்கள் செல்லவே… என்ன? ஏது என்று விசாரிக்க, விடயம் அறிந்து கொண்டிருந்தாள்.
கஸின் மற்றும் சீனியர் என்கிற எண்ணத்தில் சாந்தனு பெயரால் தன்னை அழைப்பதாக, அதுவரை எண்ணி இலகுவாக வலம் வந்திருந்தவளுக்கு, இதை அறிந்ததும், சாந்தனுவை அவர்களது வகுப்பு தோழமைகள் எவ்வாறு அழைக்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்தாள்.
கேட்டவளுக்கோ, தனது பெயரைக் கொண்டே சாந்தனுவை அழைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தாள்.
“நவீனா”, என்று சாந்தனுவை அவனது வட்டத்திலும், தான் வந்தது முதல் அழைப்பதைக் கேட்டவளுக்கு, இதற்குமேல் இந்த விடயத்தை கூறாமல் மறைப்பது உசிதமாகப்படவில்லை.
ஆகையினால், சாந்தனுவிடம், சங்கரின்மீதான தனது ஈர்ப்பை உடனே பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் அவனுக்கு சங்கர், நவீனா பற்றி அனைத்தும் அறிந்து கொண்டான் என்றும், ஒருவழியாக சங்கரிடம் கூறி முடித்திருந்தாள் நவீனா.
பொறுமையாக, பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டறிந்தவன், ‘இது என்னங்கடா பழக்க வழக்கம்!’, என்று மட்டுமே சங்கர் எண்ணிவிட்டு, தன் கைகளால் தலைமுடியைக் கோதி தன்னை ஆசுவாசப்படுத்தியிருந்தான் சங்கர்.
சங்கரின் செயலைக் கண்டு, “புரொஃபசர்னா அது காலேஜோட விட்றணும். இனி இந்த மாதிரி எதாவது வந்து ஏடாகூடமா கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது! ஆமா சொல்லிட்டேன்”, என்று மிரட்டலையும் முன்வைத்திருந்தாள் நவீனா.
“ஆஹான்… அவ்வளவுதானா இல்லை இன்னும் வேற எதுவும் இருக்கா?”, என்று நக்கல் குரலில் வினவியவனை
“எனக்கென்னானு! என்னைய மறந்துட்டு ஹாயா வாய்க்கா வரப்புனு நாத்து நடவும், களை பறிக்கவுமா தெரியரீங்க!”, வம்பு
“பாக்கனு ஆசையா வந்தவகிட்டயா… பேசாம போனேன்!” சங்கர்.
‘ஆசையாதான் இப்ப பேசுனேன்’ பார்வையில் பதிலளித்திருந்தாள் நவீனா
“பாக்காம போறவக்கிட்ட வெத்தலை பாக்கு வச்சா… எங்கூட வந்து பேசுன்னு கெஞ்ச முடியும்?”
‘நல்லா பேசுறயா!’
“மறக்கவுமில்லை! உங்கிட்ட என்னை மறைக்கவுமில்லை! அப்டியிருக்க… எதையாது சொல்லாம… இறங்கி வா!”, என்று இறங்கத் திரும்பியவனை
“மறக்கலைன்னு அப்ப ஃப்ரூவ் பண்ணுங்க…! வரேன்!”, பந்தயம் குதிரை வேகத்தில் வந்திருந்தது பதில்.
பதில் கூறவில்லையெனில் வரமாட்டேன் என்கிற செய்தியும் அதில் மறைந்திருந்ததை கவனித்திருந்தான் சங்கர்.
“மறந்துட்டேன்னு…! எத வச்சு சொல்ற?”, பெண்ணின் வேகத்தைக் கண்டு, இதழை விட்டு நழுவிய புன்னகையோடு வினவினான் சங்கர்.
“மறக்க முடியாத அளவுக்கு இதுவரை நமக்குள்ள எதுவும் நடக்கலையே! அத வச்சுத்தான்!”, மருத்துவ கல்லூரி வளாகத்தினுள் வரம்புமீறிய காட்சிகளைக் கண்ட கண்கள், சத்தங்களை மொழிபெயர்த்து உணர்ந்து கொண்ட செவிகள், உடல் கூசியதை உணர்ந்த தோல்களின் வழியே, தனது பருவம் கற்றுத் தெளிந்திருந்ததை சங்கரிடம் துணிச்சலாகப் பேசியிருந்தாள்.
“…”, பெண்ணைத் திரும்பி நோக்கியவன், அவளின் எதிர்பார்ப்பை மறைத்துப் பேசி, தன்னைத் தூண்டியது புரிந்தாலும், சற்று நேரம் அவளுடன் அளவளாவியது ஏதோ ஒரு அவஸ்தையான உணர்வைத் தூண்டியிருந்தது.
மறக்க முடியாத எதுவும் நடக்கலையே என்கிற பெண்ணின் வார்த்தையில் சிலிர்த்தவன், சிரிப்போடு, தன்னவளை தன்னோடு இழுத்து அணைத்திருந்தான்.
பெண் யாசித்திருந்தும், இதை யோசிக்கவில்லை என்பதை அவளின் தடுமாற்றத்தில் உணர்ந்து கொண்டான் சங்கர்.
அத்தோடு விட்டுவிடும் உத்தேசமின்றி, “செமப் பசி…! ஆரம்பிச்சா இப்ப முடியாது!”, என்ற இருபொருள் கொண்ட வார்த்தையின் வழியே நடக்கப் போகும் செய்தியை பெண்ணிடம் உதிர்த்தவன், புத்துணர்வு பெற உத்தேசித்து, புதுமலராக தன் முன் இருந்தவளின் முகத்தை, தனது கைகளால் தாங்கி, பார்வையை இதழில் குவித்தபடியே நெருங்கியிருந்தான்.
இதழமுதம் பருக நெருங்கியவனின் அண்மையில், தேனுண்ட வண்டாக கிறங்கிய பெண், முதலில் இதமாக உணரத்துவங்கிய இதழ் தீண்டல், வன்மையோடு கூடிய வண்மையாக நீண்டிருந்தது.
ஆண்டுக்கணக்கில் காத்திருந்தவனுக்குள் இருந்த தாகம் தணிய நேரமெடுத்தது.
பெண்ணும் தன்னவனின் அருகாமையோடு கூடிய இதழ் தீண்டலில், மன்மத நகரத்தின் நுழைவாயிலுக்குள் நுழைந்திருந்தாள்.
மன்றம் செல்லும் வேகத்தோடு, முற்றுகையிட்டு முத்ததாகம் தீர்த்தவனை விட்டுப் பிரிய மனமில்லாமல், சூழல் உணர்ந்து இதழை மீட்டிருந்தாள்.
இதழ் முத்தத்தால், பரிமாறப்பட்ட தேனை மிஞ்சும் இனிமைச் சுவை இதயம் துவங்கி உடலெங்கும் பொங்கி வழிய, முதல் நெருக்கம் தந்த இதத்தில் உருவான மணம் இருமனதிலும் நிறைந்திருந்தது.
இதழ் மீட்டுக் கொண்டவள், தன்னை அவனிடம் இருந்து மீட்க பிரிய மனமில்லாமல், மார்பில் சாய்ந்து, தன்னவனின் இதயராகத்தை இதமாக ரசித்திருந்தாள்.
“வீனா…!”, இந்த அழைப்பு பெண்ணிற்குப் புதிது… இதமான இளகிய குரலில் அழைத்தவனைக் கண்திறந்து பாராமல்,
“ம்…”, என மெல்லிய குரலில் முனகியவளை விடுவிக்கும் எண்ணமில்லாதபோதும், வேறு வழியில்லாமல்
“சாந்தனு பாவம்டீ…! எவ்வளவு நேரமா வயிட் பண்ணறான்!”, என்று சங்கர் நினைவுறுத்த
“ஓஹ்… சாரி…! நீங்க போயி சாப்பிட்டு வாங்க!”, வாய் மட்டும் கூறியது.
செயல் வேறு கூறியது. பெண் அவனிடம் தஞ்சம் புகுந்த நெஞ்சை விட்டு விலக மனமில்லாமல் அதே நிலையில் இருந்தாள்.
ஆடவனுக்கும், பெண்ணை விலக்க மனமில்லாமல், “உனக்கு பசிக்கலையா?”
இல்லையெனத் தலையாட்டியவள், இன்னும் விலகவில்லை.
அதற்குமேலும் பெண்ணை நாடச் சொன்ன மனதைக் கட்டுப்படுத்தி, “வா வீனா! அவன் ரொம்ப நேரமா வயிட் பண்ணுறான்”, என்று தற்போதைய நிலையை மீண்டும் நினைவுறுத்த
“ஒரு நிமிசம் இருங்க!”, என்று அவனது பேச்சில் குறுக்கிட்டு நிறுத்தியவள், தனது உதட்டைக் குவித்து,
“இப்டியே நான் எப்டி அங்க வர…!”, என்று சிவந்து தடித்த இதழைக் காட்டிக் கேட்க
அடுத்த முயற்சிக்காக அவளை முற்றுகையிட சிரிப்போடு முனைந்தவனை, “போங்க…! இன்னும் டேமேஜ் பண்ணி…! வீட்டுக்குப் போக முடியாம பண்ணிறாதீங்க!”, என்று சங்கரைத் தன்னிடமிருந்து வெட்கத்தோடு பிரித்து தள்ளிவிட்டிருந்தாள்.
“ப்ரூஃவ் பண்ணலைன்னு யாரோ அழுத மாதிரி இருந்தது! இப்ப என்னடான்னா பக்கத்துலயே விடமாட்டிங்கறே!”, என்று கூறிவிட்டு இறங்க,
“என்னால சாந்தனு முன்ன இப்டியே வரமுடியாது. நீங்க சாப்டுட்டு எதாவது வாங்கிட்டு வாங்க!”, என்று சாந்தமாகப் பேசி அனுப்பியிருந்தாள் சங்கரை.
சங்கருக்கு சாந்தனுவைக் காண சற்று சங்கடமாகக் கூட தோன்றினாற் போலிருந்தது.
“சரி அப்ப இரு…! அவன் சாப்டிருந்தா அவங்கிட்ட வாங்கி குடுத்து விடறேன்…! என்ன வாங்க?”, என்று கேட்க
“மூனு இட்லி போதும்!”, என்றவளை
“இது எப்டி பத்தும்”, என்று கேட்க,
“போதும்…! ஏற்கனவே எனக்கு பசியில்லை!”, என்று ஏதோ மனம் நிறைந்த உணர்வினால் கூறினாள் பெண்.
சங்கரின் வருகையைப் பார்த்தபடியே சிரித்திருந்த சாந்தனுவிற்கு, ‘ஊடல் முடிஞ்சு இந்தம்மா அண்ணனை மட்டும் அனுப்பியிருக்கு…! இது வரதுக்குள்ள… ஊருல உள்ள கடையெல்லாம் அடைச்சிருவான்னு நினைச்சேன். ஆனா ஆளக் காணோமே’, என்று மனதிற்குள் எண்ணியவாறே
“என்ன அண்ணே, நீங்க கூப்டும் வரலையா!”
என்ன சொல்ல என்று புரியாமல், “இன்னும் பசிக்கலையாம்…! அதனால… போகும்போது பசிச்சா சாப்பிட மூனு இட்லி மட்டும் போதுமாம்!”, என்றுவிட்டு,
“நீ சாப்பிட்டியா?” என்று தம்பியைக் கேட்க,
“நீ போன நேரத்துக்கு மூனு தடவை சாப்பிட்டுருக்கலாம்னே!”, என்றவன்
“ஆச்சு…! உனக்கு வேணுங்கறதை ஆர்டர் பண்ணு! நான் டாக்டரம்மாவுக்கு பார்சல் வாங்கறேன்!”, என்று சாந்தனு அடுத்த கட்ட பணியை தொடர்ந்திருந்தான்.
எதுவும் நடவாததுபோல தம்பியின் முன் தன்னைச் சமாளித்து கைகழுவ அகன்றிருந்தான் சங்கர்.
சங்கர் எளிதான செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்டதாகப் பெயர் செய்துவிட்டு, சாந்தனு, நவீனாவோடு ஊரை நோக்கிக் கிளம்பி ஆயத்தமானான்.
சாந்தனு நவீனாவைக் கிண்டல் செய்ததை எதுவும் பேசாது அமைதியாக கேட்டுக் கொண்டான் சங்கர்.
“பசிச்சா…! அங்கேயே வந்து எங்ககூட சாப்பிட்டுருக்கலாமே! அப்புறம் சாப்பிடுவேன்னு வாங்கிட்டு வரச்சொல்லிட்டு உடனே மொக்குனா என்ன அர்த்தம் டாக்டர்!”, சாந்தனு
“இதுக்குலாம் புது டிக்சனரி போட்டு உயிர வாங்காதே டாக்டர்!”, நவீனா
“எல்லாம் என் நேரம்…! இனி உங்க ரெண்டு பேரு கூட பாத்துதான் டிராவல் பண்ணணும்னு என் ஆழ்மனசு சொல்லுது!”, சாந்தனு.
“உன் ஆழ்மனசு, பாழ்மனசா? இல்லை பால்மனசானு? சொல்லு சாந்தனு!”
“மனசாட்சியே இல்லாம முக்காமணிநேரம் வேஸ்ட் பண்ணதோட, மூணு இட்லிய மூச்சுவிடாம மொக்கிட்டு பேசுற பேச்சைப் பாரேன்!”
நவீனா விடாமல் சாந்தனுவை வம்பிழுத்தவாறு உண்டு முடித்து கிளம்பியபோது
“நீ ட்ரைவ் பண்ணுவியா?”, என்று சாந்தனுவிடம் மெதுவாக கேட்டவளை
“பண்ணுவேன்…! பட் லைசன்ஸ் இல்ல…! ஏன் கேக்குற?” என்று சாந்தனு கேட்க
“இல்ல நீ வண்டிய எடு!”, என்று அதிகாரமாகக் கூறிவிட்டு பின்னாடி ஏறியிருந்தாள் பெண்.
சங்கர் எவ்வளவோ மறுத்தும், சாந்தனு கேட்காமல் தானே வண்டி எடுப்பதாகக் கூற, சரியென்று ஒருவழியாக சம்மதித்து, சாந்தனுவுடன் முன்னே ஏறிய சங்கரைக் கண்டவளுக்கு,
‘உங்களை வச்சிட்டு இனி எந்த பிளானும் போடவே கூடாது’, என்று சங்கரை முறைத்திருந்தாள் பெண்.
பெண்ணின் முறைப்பு புரியாமல் என்னவென சைகையால் கேட்க,
“இதுக்கா நான் இவ்வளவு மெனக்கெட்டேன்!”, என்று நவீனாவின் சத்தத்தில், ‘எல்லாத்துக்கும் மூலமே இந்த வீனா தானா!’, என்று பார்த்திருந்தான் சங்கர்.
மூவரும் சமாதானமாகி, இறுதியாக சங்கர் உறுதியோடு வண்டியோட்ட, அருகில் வந்து அமர்ந்தவளைக் கண்டவனுக்கு அசதியில், ‘இப்பதான் டாக்டரம்மா படிக்க ஆரம்பிச்சுருக்கு…! இன்னும் அஞ்சரை வருசம் என் அரைணாகயிறே இந்தம்மா கையில அடமானந்தானா!’, என்று நினைத்து, சற்றே மனம் சுணங்கினாலும், மகிழ்ச்சியில் வண்டியை எடுத்திருந்தான்.
சாந்தனு, ‘இதற்குமேலும் அமர்ந்து சீன் பார்க்க தன்னால் இயலாது’ என்று இருவரிடமும் மறையாமல் கூறிவிட்டு, பின் சீட்டில் சென்று படுக்க தயாராகியிருந்தான்.
“ரொம்ப சீன் போடாத டாக்டரூ! நாங்க ரெண்டுபேரும் சும்மா பேசுனாகூட சீனா உனக்கு!”, என்று எதுவுமே தெரியாது என்பதுபோல பாப்பா வேடமிட்டு சாந்தனுவை ஏமாற்ற நினைக்க
“எங்கண்ணனை எனக்கு நல்லாத் தெரியும்!”, என்று சிரித்துவிட்டு அமைதியாகப் படுத்திருந்தான் சாந்தனு.
சங்கருடன் அருகில் அமர்ந்திருந்தவள் பேச்சைத் துவக்கியிருக்க, பேச்சைக் கேட்பதா, இரவில் வண்டியை ஒழுங்காக செலுத்துவதா என்கிற குழப்பத்தில், பெண்ணை நோகடிக்க விரும்பாமல், இருபக்கமும் பேலன்ஸ் செய்து பயணத்தை கண்ணும் கருத்தாகக் கையாண்டிருந்தான், சங்கர்.
இரண்டு வருட கதையை இரண்டே மணி நேரத்தில், தோளில் சாய்ந்தும், அவன் முகம் பார்த்தும், குறையாத குதூகலத்தோடு, கலையாகப் பேசியவாறு வந்தவளை, இமை சிமிட்ட மறந்து ரசித்தவாறு வந்திருந்தான் சங்கர்.
வண்டியை மெதுவாக ஓட்டி வந்தபோதும், விரைவில் வந்தடைந்ததான உணர்வு இருவருக்குள்ளும்.
காரைக்குடிக்குள் வண்டி நுழைந்ததும், சங்கரை வண்டியை நிப்பாட்டச் செய்தாள் நவீனா.
பின்பக்கம் ஏறிக் கொண்டவள், தூங்கியவாறு வந்த சாந்தனுவை எழுப்பி சங்கரோடு அமரச் சொல்லியிருந்தாள்.
அதன்பின் பேசாமல் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தவளை, அத்தையின் வீட்டில் இறக்கிவிட்டவர்கள், வீட்டினுள் செல்லாமல், வாசலிலேயே விடைபெற்று தம்பியோடு மானகிரிக்கு வண்டியை விட்டிருந்தான் சங்கர்.
//////////
பெண்ணின் கல்வி ஒருபுறம் போக, மறுபுறம் காதலை கண்ணியத்தோடு வளர்த்திருந்தாள்.
பெண்ணின் வற்புறுத்தலால், நீண்ட நாளுக்குப் பிறகு விடுதிக்குச் சென்று வெளியில் அழைத்துச் செல்ல வந்த சங்கரைக் கண்ட நவீனாவின் ரூம்மேட் மற்றும் வகுப்பு தோழிகள் அனைவருமே அதிசயித்திருந்தனர்.
விவசாயி என்கிற அலட்சியத்தோடு பெண்ணை அதுவரை சீண்டி அழ வைத்தவர்கள் அவர்கள்.
களத்து மேட்டுல காளை மாடுகூட திரியறவனைப் போயி… என்று பலவாறாக பேசி நவீனாவை நக்கல் செய்தவர்கள், அதுவரை தங்களுக்குள் சங்கரைப்பற்றிய உருவம், செயல், கல்வி இவற்றை குறைவாக எடைபோட்டு எண்ணியிருந்தார்கள்.
நேரில் பார்த்ததும் தங்களது எண்ணத்தை அழித்துவிட்டு, நயன பாஷையால் அழைப்பு விடுவித்திருந்தனர்.
‘அண்ணனை கேட்டதாச் சொல்லு’ என்று இதுவரைக் கூறிய வந்த வாய், சங்கரைக் கண்டதும், ‘வாவ்… மச்சான் நல்லாயிருக்காருடீ!’ என்று மாறியிருந்தது.
“மச்சானா… கொன்னுருவேன்டீ!”, என்று கத்திய நவீனாவைக் கண்டு கொள்ளாமல், ஆளுக்கொரு வேண்டுதலை முன்வைத்திருந்தனர்.
“ஏய்…! இன்ட்ரடியூஸ் பண்ணு விடுடீ!”, என்று ஒருத்தி கெஞ்ச
“பந்தயம் வச்சுக்கலாமா நவீ? ஓபன் சாலன்ஜ்!”, என்று WWFல் வருபவள்போல நெஞ்சு நிமிர்த்தி ஒருத்தி வர
“ஹியூமன் அனாடமி புக்ல போட்ட பிக் மாதிரி ஒவ்வொன்னும் வந்து தனித்தனியா கண்ணு முன்ன எம்போஸ்டா வந்து சுண்டி இழுக்குதடீ!”, என்பதோடல்லாமல், அதற்கு மேலும் வக்கிர வார்த்தைகளைக் கூறி ஒருத்தி பேசவும்,
“மீசைக்குக் கீழே இருக்கிறதைப் பார்த்தாலே லாக் போடத் தோணுதடீ…! நீ இதுவரை எத்தனை லாக் போட்ட!”, என்று ஒருத்தி கணக்குக் கேட்க
“காலமெல்லாம் உங்கஷ்டடியில வச்சிக்கப் போற…! சைட்டடிக்க தானடி செய்யறோம்…! என்னவோ அபேஸ் பண்ணா மாதிரி எதுக்கு இந்தக் கத்து கத்துற!”, என்று நவீனாவை ஆளுக்கொன்று பேசிக் கதறடித்திருந்தார்கள்.
பெண்ணும் தன்னுடன் பயிலுபவர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தாலும், எது விளையாட்டு, எது வினையம் என்று அறியாதவளல்ல.
மோகமும், காமமும் மலிந்து கிடக்கும் துறையது. எதையும் நேர்த்தியாக்கிக் கொள்ளும் சிலரால், மருத்துவப் பண்பாடு குலையாமல் இன்னும் குறைவின்றி கொண்டாடப்படும் துறையாக உள்ளது.
இருப்பதைத்தானே பேசுகிறோம் என்கிற ரீதியில் சிலர் பச்சையாகப் பேசுவதைக் கண்டு ஒதுங்கிச் சென்றுவிடுவாள் நவீனா.
பெண்கள் பேசிய எதுவும் விளையாட்டல்ல என்பது பெண்ணுக்கும் புரிந்திருக்க, அதன்பின், அவனாக வந்து அழைக்க வருவதாகக் கூறினாலும், விடுதியின் பக்கம் வரவே கூடாது என தடை விதித்திருந்தாள்.
குழம்பியிருந்தான்…! பெண்களின் மனவாஸ்து புரியாத சங்கர்.
//////////
வருடங்கள் போகவே, சாந்தனு தனது மருத்துவக் கல்வியை நிறைவு செய்துவிட்டு, காரைக்குடியில் நவீனாவின் வீட்டில் தங்கி பிராக்டிஸ்ஸிற்காக புகழ்பெற்ற மருத்துவமனைக்கு சென்று வரத் துவங்கியிருந்தான்.
ஒன்பதாம் வகுப்பில் நந்தா படித்துக் கொண்டிருந்தான். பெற்றோருக்கு, பெண்ணே மருத்துவம் படிக்கும் நிலையில், மகனை இன்னும் நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுக்க எண்ணி, அதற்கான முயற்சியில் நந்தாவிற்கு படிப்பைத் திணிக்கத் துவங்கியிருந்தனர்.
சங்கருக்கும் முப்பதை நெருங்கியிருக்க, சசிகலா மகனை திருமணத்திற்கு நெருக்கினார்.
“ஏன் சங்கரு, அண்ணங்கிட்டனா பேசவா? கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் போயி நவீனா படிக்கட்டும்டா!”, என்று மகனிடம் கேட்க
“இல்லைம்மா…! அது கஷ்டம்! பொருத்தது பொருத்தாச்சு! இன்னும் ஒன்னரை வருசந்தான!”, என்று தாயை சரிக்கட்டியிருந்தான் சங்கர்.
நவீனாவுமே வருந்தியிருந்தாள்.
“ரொம்ப காக்க வச்சிக் கஷ்டப்படுத்தறேனா?”
“தெரிஞ்சா சரி…!”
“சொல்லுங்க…! உங்களுக்கு எப்டி தோணுதோ அப்டியே செய்யறேன்!”
“நான் ரொம்ப பேராசைக்காரன். இப்ப இருக்கிற மாதிரி உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு, என்னால காலேஸ் ஹாஸ்டல்ல இருக்க முடியாது. வேணுனா இங்கேயே வீடு எடுத்து தங்கிரலாம்னாலும்… படிச்சிட்டே… எப்டி?”, என்று சங்கரே தயங்க
“என்னதான் சொல்ல வரீங்க? தெளிவா சொல்லுங்க!”
“கல்யாணம் ஆகிட்டா…! என்னோட எதையும் நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கறதான… உத்தேசம் உன் விசயத்துல இல்ல!”, மறையாது மனம் திறந்திருந்தான்.
பெண்ணுக்கு தன்னவனை எண்ணி வருத்தம் வந்திருந்தது. தனக்காக நீண்ட வருடங்கள் காத்துக் கிடப்பவனுக்கு தான் என்ன செய்யப் போகிறோம் என்கிற வருத்தம்தான். எதானாலும் சமாளிக்கலாம் என்று துணிந்தவள்,
“சரி…! அப்போ பெரியவங்ககிட்ட பேசுங்க…! நான் பாத்துக்கறேன்!”, என்று தயங்கிய நவீனாவை நோக்கி
“படிச்சு முடி…! பாக்கலாம்!”, என்று பெருமூச்சோடு தெளிவாகப் பேச்சை முடித்திருந்தான்.
அன்னம்மாளும் பேரனை அழைத்து பேசியிருந்தார்.
“தம்பி…! இந்தக் கட்டை வேகறதுக்குள்ள உங்கல்யாணத்தைப் பாத்திரணும்டா!”
“சீக்கிரம் நடக்கும் ஆத்தா…! அதுவரை உங்களுக்கு ஒன்னும் ஆகாது!”, என்று தேற்றியிருந்தான் சங்கர்.
சங்கரோ, நவீனா மருத்துவத்தை முடித்தபிறகு அவர்களது வீட்டில் பேசலாம் என்று முடித்திருந்தான்.
மற்ற அத்தைகள் அனைவரும் படையெடுத்து ஓய்ந்து, ‘அந்தப் பையனுக்கு ஏதோ குறைபோல!’, என்று காற்றோடு செய்தியை பரப்பியிருந்தனர்.
மோனிகாவை, அவளது பட்டப்படிப்பிற்குப் பிறகு திருமணம் முடித்துக் குடுத்திருந்தார்கள்.
தோழியான நாத்தானாரின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த நவீனாவைச் சந்தித்தபோது, “ஒழுங்கா சொல்லுக்கா…! மச்சானை நீ கட்டிக்குவன்னா சரி! போனா போகட்டும்னு அக்கா உனக்காக விட்டுக் குடுக்கறேன்! இல்லைனா இப்பவே சொல்லிரு…! நான் கட்டிக்குவேன்!”, என்று தைரியமாகப் பேசிய வராவைக் கண்ட நவீனா
“உங்க மச்சாங்கிட்டயே கேளுடீ…! உன்னைக் கட்டிக்கிறேன்னு சொன்னா… நீயே கட்டிக்க!”, என்று கூறிவிட்டு நகர்ந்திருந்தாள் நவீனா.
வராவிற்கு ஓரளவு இருவரையும் கணித்து வைத்திருந்ததால், தனது சந்தேகம் தீர்க்க வேண்டி தமக்கையிடம் நேரடியாகக் கேட்டு சந்தேகம் தீர்க்க முனைந்திருந்தாள்.
நவீனா விளையாட்டுக்குக் கூறியதையும், சங்கரிடம் சென்று கலந்து கொண்டு கலகத்தை மூட்டியிருந்தாள் வரா.
நவீனாவிடம் வந்து சாடிய சங்கரை, சத்தமில்லாத யுத்தத்தை இதழ்களில் தொடர்ந்து சமாதானம் செய்திருந்தாள் பெண்.
“இதுலயே என் வாழ்க்கை முடிஞ்சிரும்போல!”, என்று ஆடவனும் என்றுமில்லாமல் சலித்திருந்தான்.
“ஏன் இவ்வளவு சலிப்பு…! மேரேஜ்கு பேசுங்கனு சொல்லிட்டேன். நீங்கதான் இப்ப வேணாங்கறீங்க!”, என்று தன்னவனைக் கோபித்தாள் பெண்.
“அடுத்தமுறை உங்க அப்பா ஊருக்கு வரும்போது பேச சொல்லப்போறேன்!”, என்று செய்தி சொன்னவனை அர்த்தத்தோடு பார்த்துச் சிரித்திருந்தாள் நவீனா.
/////////////////
சாந்தனுவின் பெற்றோருக்கு, மருத்துவம் படித்த மகனுக்கு மருத்துவம் படித்த பெண்ணை மணமுடிக்க விரும்பி, நவீனாவைக் கேட்க எண்ணினார்கள்.
அத்தோடு கிளம்பி காரைக்குடிக்கு வந்து, புஷ்பாவிடம் நேரில் பேசிவிட்டு சென்றிருந்தனர்.
புஷ்பாவும் கணவனிடம் தொலைபேசியில் விடயத்தைப் பகிர்ந்திருந்தார்.
வெற்றி காரைக்குடி வந்திருந்தபோது, பெரியவர்கள் கூடி, மனம் மனம் சாட்சியாக தங்களுக்குள் பேசி, நவீனா ஹவுஸ் சர்ஜன் முடித்தவுடன் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பிள்ளைகள் தாங்கள் சொல்வதை மறுத்துக் கூறமாட்டார்கள் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இருபக்கப் பெற்றோரும் தங்களது கடமையைச் செய்ய முனைந்திருந்தனர்.
பெற்றோர் பேசிச் சென்றதை அறியாதவனோ, மருத்துவமனையில் தனது பணியினை செவ்வனே தொடர்ந்திருந்தான் சாந்தனு.
பெற்றோர்களின் முடிவை அறியாதவளோ, சங்கரின் காதலில் கரை கடந்திருந்தாள்.
சங்கர் தாயிடம் விடயம் பகிர்ந்து, நவீனாவை திருமணத்திற்கு பெண் கேட்குமாறு கூறியிருந்தான்.
முடிவுகள்… முழுமை பெறுமா?
அடுத்த அத்தியாயத்தில்….
—————-