நீயும் நானும் அன்பே…
அன்பு-18
நீண்ட நாள்களுக்குப் பிறகு மானகிரி வந்தவனுக்கு தங்களது வீட்டின் பகுதியிலிருந்து, அடுத்தடுத்த பகுதிகளுக்கு செல்ல வீடு கட்டும்போதே வைத்திருந்த வழியினை அடைத்திருப்பதைக் கண்டதும், ‘இதையெல்லாம் யாரும் நம்மகிட்ட சொல்லலையே? சொல்லியிருந்தா அப்பவே வந்து தடுத்திருப்பேனே!’, என்று மனம் வெதும்ப
‘இதனாலதான் இந்த ஆத்தா என்னை இந்தப் பக்கம் வரவிடாம புதுசா கல்யாணமானவன்னு சாக்குபோக்குச் சொல்லி நிறுத்துச்சோ!’, என்று எண்ணியவாறே ராஜவேலு மற்றும் தங்கவேலுவை முன்வாசல் வழியே நேரில் சென்று சந்தித்திருந்தான் சங்கர்.
தங்கவேலு வழமைபோல பேசினார். அவர்கள் வீட்டில் இருந்த அனைவரும் இயல்பாக சங்கரிடம் உரையாடினர்.
ஆனால் ராஜவேலுவின் பேச்சில் இருந்த தயக்கம் மற்றும் தடுமாற்றத்தைக் கண்டு, நீண்ட நேரம் அவருடன் செலவழித்து அவரை தர்மசங்கட நிலைக்கு ஆட்படுத்தப் பிரியமில்லாமல், உடனே சொல்லிக் கொண்டு பண்ணையை நோக்கிக் கிளம்பியிருந்தான் சங்கர்.
சித்திகள் அனைவரும் வழமைபோல வந்து நலம் விசாரித்தாலும், சாந்தனுவுடைய தாயின் தயக்கத்தையும் கண்டு கொண்டான்.
‘என்னாச்சு இவங்களுக்கு? ஏன் இப்டி வித்தியாசமா பிகேவ் பண்ணனும். அப்டியென்ன கெடுதலை இவங்களுக்கு நான் பண்ணிட்டேன்!’, என்ற யோசனையோடே அங்கிருந்து சென்றிருந்தான்.
பண்ணைக்குச் சென்று அங்கிருந்த தந்தையிடம் இதைப்பற்றி நேரடியாகவே விசாரிக்க, “ஆமாந்தம்பி, உன் கல்யாணத்துல இருந்தே பெரிய சித்தப்பா வீட்டுல மூத்தவனோட பேச்சு வார்த்தை எல்லாம் மாறிப்போச்சு…!”, என்று வருத்தத்தோடு இயம்பியவர்
“சரி அது கெடக்கட்டும். நாந்தான் பாத்துக்கறேன்னு சொன்னேனே… அப்புறம் எதுக்கு இப்ப கிளம்பி இங்க வந்த?”, என்ற கேள்வியை முன்வைக்க
“இதையெல்லாம் ஏம்பா மதுரைக்கு எங்களைப் பாக்க வரும்போது சொல்லல?”, என்ற தந்தையின் பேச்சை விடுத்து, தனது பிடியில் நின்று மாறாது கேட்டிருந்தான் சங்கர்.
இதற்குமேல் மகனை திசைதிருப்ப இயலாது என்பதை உணர்ந்தவர், “அவனவனுக்கு ஒரு நியாயம். அவன் புள்ளைக்கு பேசி முடிவு பண்ணி வச்சிருந்த பொண்ணை நீ கட்டாயக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்ததா ஊருக்குள்ள எல்லாருகிட்டயும் கொஞ்சநாளு உஞ்சித்தப்பன் சொல்லிக்கிட்டே தெரிஞ்சான். சாந்தனுவுக்கு எங்கயோ பொண்ணு பேசி முடிச்சதா தங்கம் சித்தப்பா பத்து நாளைக்கு முன்னே சொன்னாரு. அதுக்கப்பறமா.. இப்பதான் ஒருவாரமா எதுவும் சாடை பேசாம திரியறான்!”, என்று மகனிடம் தாஸ் விளக்கம் கொடுத்திருந்தார்.
சாந்தனுவை தான் வரவேற்பிற்கு அழைத்தும் வராமல் இருந்தது. அதன்பின் இதுநாள் வரை எதற்காகவும் தன்னை அழைத்துப் பேசாதது எல்லாம் ஏனோ அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
‘அவனுக்குமா கோபம். அவனுக்குத்தான் எங்க விசயம் முன்னயே தெரியுமே? அப்புறம் எப்டி? நவீனா அவங்கிட்ட பேசினதா சொன்னா? ஆனா அதைப்பத்தி எதுவும் நான் கேட்டுக்கலை…! ஊருக்குப் போயி அவகிட்ட அதைப் பத்திப் பேசனும்’, என்று எண்ணியவனாக தனது பணிகளில் கவனம் செலுத்தி இருந்தான்.
இரவு வந்ததும் தன்னோடு அங்கேயே தங்குவதாகக் கூறிய தந்தையை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பியவன், மாட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாடுகளை ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் சென்று பார்வையிட்டான்.
அனைத்தையும் சென்று தனக்கு திருப்தி ஏற்படும் வண்ணம் பார்வையிட்டு வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவன், மனைவிக்கு அழைத்துப் பேசத் துவங்கியிருந்தான்.
அம்பானியின் அருட்கொடையாக ரிலையன்ஸ் வந்து தற்போது எங்கிருந்தாலும் பேசிக் கொள்ளும்படியான வாய்ப்பாக அமைந்ததில், கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாது மனைவிக்கு அழைத்திருந்தான் சங்கர்.
திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக மனைவியை விட்டு கிளம்பி வந்ததால்… ஏதோ புரியாத உணர்வில் இருந்தவனுக்கு, மனைவியின் குரலைக் கேட்ட நிறைவோடு பேசத் துவங்கியிருந்தான்.
மனைவியிடம் பொதுவான விடயங்களை ஆரம்பத்தில் பேசியவன் அதன்பின், சாந்தனுவிடம் திருமணத்திற்கு முன்பு பேசியதாக பெண் கூறியதை பற்றி விசாரித்தான்.
‘அது எதுக்கு இப்ப!’, என்று விருப்பமில்லாது இழுத்தவளிடம், நடப்பைக் கூறி தான் கேட்டதற்கான காரணத்தைக் கூறினான்.
‘இதென்ன கொடுமை?’ என்று எண்ணியவள், கணவனிடம் மறையாது விடயத்தைப் பகிரத் துவங்கியிருந்தாள் நவீனா.
////////////
சசிகலா மற்றும் தாஸ் இருவரும் சங்கருக்கு நவீனாவை பெண் கேட்டுச் சென்றபிறகு வந்த நாளில், வெற்றி மனைவியோடு மகளைக் காண மதுரை வந்திருந்தார்.
புஷ்பாவை வேறு வேலையாக அருகில் உள்ள இடத்திற்கு அனுப்பிவிட்டு, ஆரம்பத்தில் மகளோடு இலகுவாகப் பேசியவாறு இருந்தவர், பெண்ணுக்கு திருமணத்திற்கு பேசிய விடயத்தைப் பற்றி தெரிவித்திருந்தார் வெற்றி.
மனைவி திரும்பிவிடும் நேரம் நெருங்கவே, மகளுக்கு, சாந்தனுவைப் பெரியவர்களாக பேசி முடித்ததையும் மறையாது மகளிடம் பகிர்ந்திருந்தார் வெற்றி.
அப்போது தந்தையின் விருப்பத்தை அறிந்து கொண்டதோடு, தனது எண்ணத்தை தயங்காமல் பகிர விழைந்தாள் நவீனா.
தான் சங்கரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியதைக் கேட்ட வெற்றி, “காடு கரைன்னு புழுதியோட புழுதியா மாடு கண்ணோட திரியறவனைக் கட்டிட்டு டாக்டரான நீ, அவம் பண்ணையில போயி என்ன செய்யிவ?”, என்று கேட்டார்.
“அவரு அவரு புரொஃபசனைப் பாப்பாரு. நான் என் புரொஃபசனைப் பாத்துப்பேன்பா”, என்று குறைந்த குரலில் பேசிய நவீனாவிடம்
“அது எப்டிம்மா…? உனக்கு இவ்வளவு மட்டமான ஆசையெல்லாம் வந்திருக்கு”,என்று மகளிடம் கேட்க
“எதுப்பா மட்டம்? விவசாயிங்க சேத்துல காலை வைக்கலேன்னா உங்கள மாதிரி வயிட் காலர் ஜாப்ல இருக்கறவங்க எப்டி சோத்துல கை வைக்க முடியும்?”, என்று பெண்ணும் விடாது பேச
“களத்துமேட்டுல போயி கஷ்டப்படறவனைக் கட்டிட்டு வாய்க்கா வரப்புன்னு தெரியவா, உன்னை டாக்டருக்குப் படிக்க வைக்கிறேன். அப்பா சொல்றமாதிரி கேளு. சாந்தனுதான் உனக்கு ஏத்தமாதிரி உன்னோட புரொபஃசன்ல இருக்காப்ல…!
பையனும் சின்ன வயசுல இருந்து நாம பாக்க வளந்தவரு… எந்தக் குறையும் சொல்ல முடியாது. சாந்தனுவைக் கல்யாணம் செய்துகிட்டேன்னா, ரெண்டு பேரும் சேந்து காரைக்குடியிலேயே கிளினிக் ஓபன் பண்ணி நல்லா ஃபியூச்சர்ல செட்டிலாகிரலாம்”, என்று வெற்றி எதிர்காலம் பற்றிய ஆசைவார்த்தை மகளுக்குக் கூற
“இல்லப்பா… சாந்தனுவுக்கே சங்கர் அவங்களை நான் விரும்பறது தெரியும்”, என்று மறுக்க
“தெரிஞ்சாலும்… அதைக் காட்டிக்கறவே இல்லையே! இப்பவே இப்டி இருக்கறவரு இன்னும் உன்னை நல்லாப் பாத்துப்பாரும்மா”, என்று வெற்றி மகளிடம் கூற
“இதுல ஒரே புரொபசன்கறதைவிட என்னை நல்லா புரிஞ்சிகிட்டவங்க சங்கர் அவங்கதான்பா. என்னை நல்லா காலம் முழுக்க பாத்துப்பாங்க… அந்த நம்பிக்கை சாந்தனுமேல என்னிக்குமே எனக்கு வந்ததில்லை. இனியும் வராது”, என்று தனது விருப்பத்தை தந்தையிடம் திடமாக உரைக்க
“சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளைங்கற மாதிரி அதையே திரும்ப திரும்பச் சொல்லாதம்மா”, என்று கடின முகத்தோடு மகளிடம் வெற்றி பேசினார்.
“உண்மை அதுதானப்பா. அதனால, இந்த ஒரு விசயத்தை மட்டும் கன்சிடர் பண்ணி, என்னை சங்கர் அவங்களுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுங்கப்பா”, என்று கெஞ்சல் குரலில் பேசியவளை முறைப்போடு பார்த்திருந்தார் வெற்றி.
பெண்ணோ வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டி, விடாது தந்தையிடம் இரங்கிப் பேசினாள்.
“சங்கர் அவங்க, டாக்டரேட் முடிக்கப் போறாங்க… உங்களுக்குத் தேவை, பேருக்கு முன்னாடி டாக்டர்னு போடற மாப்பிள்ளைதான… அதனால எனக்கு சங்கரவங்களையே பேசி முடிங்கப்பா”, என்று இரங்கிக் கேட்டிருந்தாள் பெண்.
“இல்லைம்மா… வரவர எதுக்கெல்லாம் அப்பாகிட்ட தர்க்கம் பண்றதின்னு இல்லாம போச்சு”, என்று மகளைக் குறைசொன்னவர்
“இன்னிக்கு உனக்கு ஒரு ஈர்ப்புல அப்டி சொல்ற… ஆனா போகப்போக உனக்கே அப்பா சொன்னதைக் கேக்காமப் போயிட்டமேன்னு வருத்தமாத் தோனும். அதனாலதான் அப்பா சொல்றமாதிரி கேட்டு நடந்தா, நானே உனக்கு கிளினிக் வைச்சித்தர ஹெல்ப் பண்ணுவேன்”, என்று பிடிவாதமாக தனது எண்ணத்தை மகளிடம் திணித்துவிட்டு,
“சாந்தனுவுக்கு ரொம்ப பெருந்தன்மைமா… உன்னைப் பத்தித் தெரிஞ்சிருந்தும் எதுவும் சொல்லாம உன்னை ஏத்துக்கத் தயாரா இருக்கார்னா பாரேன்”, என்று கூற
“நான் என்னப்பா தப்பா பண்ணிட்டேன். சங்கரவங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்பறது கொலைக் குத்தமா? அதுல என்ன பெருந்தன்மை சாந்தனுவுக்கு? அப்டி தியாகம் பண்ணியெல்லாம் என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை”, என்று சற்று சூடாகவே கூறியவள்
“உண்மையிலேயே நல்ல ஒழுக்கமான மனுசனா சாந்தனு இருந்திருந்தா நீங்க பேசறதைக் கேட்டவுடனே ஜென்டிலா வந்து, ‘இல்லை மாமா, நவீனாவை அவ விரும்பற சங்கரு அண்ணனுக்கே கல்யாணம் பண்ணுங்கனு சொல்லியிருக்கனும். அப்டி சொல்லாதவனைப் போயி தூக்கி வச்சிக் கொண்டாடுறீங்க?’, என்று மகள் தனது மனதில் உள்ளதை மறையாது தந்தையிடம் கூற
மகளின் பேச்சில் வந்த கோபத்தை இடம் சூழல் உணர்ந்து காட்ட முடியாது, வார்த்தைகளில் சற்று கடுமையோடு, “டாக்டருக்கு படிச்சிட்டா பெத்தவன்கிட்டயே இப்டி எதித்து எதித்து வாயாடனும்னு இல்லைம்மா… அப்பா உங்கிட்ட ரொம்ப பொறுமையா எடுத்துச் சொல்லிட்டு இருக்கேன். வந்ததுல இருந்து நீ புடிச்ச முயலுக்கு மூனு காலுனு பேசறதை முதல்ல விடு. ஒழுங்கா நான் சொல்றதைக் கேட்டு நட… இதுவரை பாத்து பாத்து வளத்தவங்களுக்கு தெரியாதா? உன்னை எப்டிபட்ட மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்னு…”, என்று பேசிக் கொண்டிருக்கும்போதே மனைவி வருவதைக் கண்டு, அப்பேச்சினை அத்தோடு விட்டுவிட்டு பேச்சை திசை மாற்றியிருந்தார் வெற்றி.
நவீனா சங்கருக்கு வக்காலத்து வாங்குவதையும், தனது விருப்பத்தையும் தன்னிடம் கூறுவதை மனைவி கண்டால், மனைவி தன் மகளுக்காக தன்னை மீறி சங்கரை திருமணம் செய்வதற்குரிய விடயங்களில் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் அத்தோடு பேச்சை விட்டிருந்தார்.
மனைவிக்கு தாங்கள் இதுவரை பேசிய விடயம் தெரிய வருவதை விரும்பாது, உடனே மகளிடம் விடைபெற்றுக் கிளம்பியிருந்தார் வெற்றி.
அதன்பின் அன்றே சாந்தனுவிற்கு அழைத்துப் பேசியிருந்தாள் பெண்.
“என்ன சாந்தனு? எல்லாம் தெரிஞ்சிருந்தும் கல்யாணம் பேச எப்படி அக்செப்ட் பண்ண?”, என்று கேட்க
“பெரியவங்க பேசி முடிச்சாங்க நவீனா. இதுல நாம்போயி என்ன மறுப்பு சொல்ல?”, என்று பெண்ணைக் கேள்வி கேட்டு திணறச் செய்திருந்தான் சாந்தனு.
“பெரியவங்க எங்க விசயம் தெரியாம வந்து பேசியிருக்காங்க. உனக்குத்தான் தெரியுமில்ல… அப்புறமென்ன வேணானு சொல்றதுக்கு”, என்று சினத்தோடு பெண் கேட்க
“என்ன தெரிஞ்சிருந்தாலும் அது உன்னோட பாஸ்ட்… அதப்பத்தி இப்ப எதுக்கு மனசைப் போட்டுக் குழப்பிகிட்டு…”, என்றவன்
எதிர்முனையில் எதிர்பாரா சாந்தனுவின் பதிலில் தடுமாறி இருந்தவளை, “நவீனா… மாமா சொல்றது நம்ம நல்லதுக்குத்தான”, என்று நல்லவன் வேடமிட்டுக் கேட்க
“நீ லூசாடா… சங்கரவங்களை நான் லவ் பண்றது தெரிஞ்சும் எங்கிட்ட இப்டிபேச உனக்கு அசிங்கமா இல்லையா?”, என்று ஆவேசமாகவே கேட்டாள்.
“கூல் நவீனா… எது அசிங்கம்…? எங்க சங்கரண்ணனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். கல்யாணத்துக்கு முன்ன வரம்பில்லாம எதுவும் பண்ணாதுன்னு…! அப்டியிருக்க… மனசை மாத்தறது ஒன்னும் பெரிய கஷ்டமில்லை. ஊருல… ஒரே வீட்ல இருந்தாதான எங்கண்ணனைப் பாக்கும்போது, உம்மனசு கஷ்டப்படும். நாம காரைக்குடியிலேயே செட்டிலாகிரலாம்! அப்புறமென்ன?”, என்று எந்த வருத்தமோ, இடரலோ இல்லாமல் விவஸ்தையற்றுப் பேசியவனை
“உனக்கு ஏன் இப்டியெல்லாம் கீழ்த்தரமா தோனுது சாந்தனு? உம்மேல வச்சிருந்த மரியாதையெல்லாம் வீண்”, என்று மனம் வருந்தப் பேசினாள் நவீனா.
“இதுல என்ன கீழ்த்தரமிருக்குன்னு சொல்ற? அவனவன் மேட்டரை முடிச்சுட்டு, வேற பொண்ணைக் கட்டறான். பொண்ணுங்களும் இப்ப நிறைய அப்டிதான் இருக்காங்க… இப்ப உன் கிளாஸ்மேட் இருக்கால்ல… மாதனி… அவளையே எடுத்துக்க..”, என்று பேசத் துவங்க
“அவளைப் பத்தியெல்லாம் பேசி என்னைக் கன்வின்ஸ் பண்ண முடியாது சாந்தனு. எனக்கு உன்னை மேரேஜ் பண்ணிட்டு வாழற விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் என்னை ஏன் ஃபோர்ஸ் பண்ண நினைக்கிற?”, என்று வாதிட
“எனக்கு பிடிச்சிருக்கு நவீனா… உனக்கும் நாளாகிட்டா பழசையெல்லாம் மறந்துட்டு என்னோட வாழ ஆரம்பிச்சுருவ. அந்த நம்பிக்கை எம்மேல எனக்கு நிறைய இருக்கு”, என்றவனிடம்
அதற்குமேல் சாந்தனுவிடம் பேசப் பிரியமில்லாதவள், “டாக்டருக்கு படிக்க மெடிக்கல் காலேஜ் போன மாதிரியில்லாம, கீழ்ப்பாக்கத்துல அட்மிட்டாகப் போறவன் கணக்கா பேசுற…! உங்கிட்ட எனக்கு என்ன பேச்சு. வையி போனை!”, என்று கோபமாக பேசிவிட்டு வைத்திருந்தாள் பெண்.
நடந்ததை மனைவி சொல்லக் கேட்டவனுக்கு, ‘என்ன கருமம்டா இது!’, என்றே தோன்றியது சங்கருக்கு.
அதன்பின் அன்றைய நடப்புகளை சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தபோது… பண்ணையில் உள்ள பகுதிகளில் கும்மிருட்டாக இருந்த இடங்களில் இருந்து வந்த சலசலப்பு, அவ்வப்போது கேட்பதைக் கண்டு பேச்சினூடே அதைத் திரும்பி நின்று கவனித்தவாறே மனைவியோடு பேசிவிட்டு வைத்திருந்தான்.
//////////////
மனதில் ஏதோ ஒன்று பயிர்களை நாசம் செய்யப் புகுந்திருக்கிறது எனப் புரிய அடுத்த அரைமணி நேரத்தில் டார்ச் வெளிச்சத்தில் இயன்றவரை நடந்து சென்று சந்தேகமாக உணர்ந்த இடங்களை நேரில் சென்று பார்த்தான்.
‘மாடு, ஆடு எல்லாம் இந்நேரத்தில வந்து மேயாது. வேற எதுவும் காட்டுக்குள்ள இருந்து பண்ணைப் பக்கமா வந்திருச்சோ?’, என்று தன்னால் இயன்ற தூரம்வரை டார்ச் வெளிச்சத்தின் துணையோடு சென்று பார்த்தவன், எதையும் காணாது பழையபடி வந்து கயிற்றுக் கட்டிலில் வந்தமர்ந்திருந்தான்.
நீண்டநேரம் அமர்ந்திருந்தபோதும் எதுவும் அரவம் இல்லாதிருக்க, ‘காத்தும் வீசல… அப்ப எப்டி ஒரு குறிப்பிட்ட இடத்தில இருந்து மட்டும் சத்தம் கேக்குது? வேற யாரும் வயித்துப்பாட்டுக்கு வந்து திருட வந்திருக்காங்களோ?’ என்ற எண்ணத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான்.
படுத்தவன் சிம்னி விளக்கை மிக குறைந்த அளவு இறக்கி வைத்துவிட்டு, காதுகளை கண்களாக்கிப் படுத்திருந்தான்.
நீண்ட நேரமாகியும் எதுவும் அரவம் இல்லாதிருக்கவே, ஏதோ பேச்சு சத்தம் கேட்டதுபோல தோன்றியது.
குறைவான நபர்கள் வந்திருக்கவில்லை என்பதை குறைந்த குரலில் கேட்ட வாக்குவாத பேச்சின் சத்தத்தில் உணர்ந்து கொண்டிருந்தான்.
‘இவ்வளவு நேரம் தூங்காம இருந்தா விடியக்காலல நல்லா தூக்கம் வரும். அந்த நேரத்துல போவோம்’, என்ற பேச்சும்
‘இப்பவே சோலிய முடிச்சிட்டு கிளம்புவோம்’, என்ற பேச்சும்
‘இப்ப போனா நம்ம எத்தனை பேருனாலும் துவம்சம் பண்ணி வீசிருவான்’, என்றும் விவாதமான பேச்சுக்களைக் கேட்டவன்
இது வேறு நோக்கத்தோடு வந்தவர்களின் கைங்கர்யம் என்பதைப் புரிந்து கொண்டான்.
பயங்கரமான ஏதோ திட்டத்தோடு யாரோ இங்கு வந்திருக்கிறார்கள் என்ற உள்மனதின் சத்தத்தில், ஹரிக்கேன் விளக்கை முழுவதும் அனைத்துவிட்டு ஐம்பது மாடுகளுக்கு மேல் கட்டப்பட்டிருந்த கொட்டகைக்குச் சென்று, கட்டப்பட்டிருந்த கயிறை அரவம் இல்லாமல் அவிழ்த்து விட்டிருந்தான்.
கோழிகள் அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டுகளின் வாயிலைத் திறந்து வைத்தான். அதன்பின் அங்கு ஓரமாக வைக்கப்பட்டிருந்த கருக்கரிவாள் ஐந்தாறை தனது வேஸ்டியில் இடுப்போடு சொருகிய நிலையில் வந்து கட்டிலில் படுத்தவாறு காத்திருந்தான்.
நீண்ட நேரம் அசையாது உறங்கியதுபோலக் கிடந்தவனின் மேல் அடுத்து வந்த அரைமணித் தியாலத்திற்கு பிறகு வந்து இறங்கிய கடப்பாரையை எத்தனை விழிப்பிலிருந்தும் தவிர்க்க இயலவில்லை.
கடப்பாரை சங்கரின் வலது மூட்டை லேசாகவே பதம் பார்த்திருந்தது.
அடுத்தடுத்த நபர்களின் முறையற்ற அடியில், மூட்டில் எழுந்த வலியோடு சுதாரித்து போராடத் துவங்கியிருந்தான் சங்கர்.
இருட்டில் கருவடிவ உருவங்களாக முகத்தில் துணியால் மறைத்திருந்தது மட்டுமே தெரிந்தவர்களை, தான் எடுத்து முன்னேற்பாடாக இடுப்பு வேஷ்டியில் சொருகியிருந்த கருக்கு அரிவாளின் துணையோடு, கையில் எடுத்து முறையோடு ஆழமாக சக்தியை ஒன்று திரட்டி எதிரில் நின்றவர்களின் தசைகளில் கீறியிருந்தான்.
‘ஆ…’வென்ற அலறலோடு அகன்றவர்களை இடதுகாலால் பலம் கொண்ட மட்டும் மிதித்துத் தள்ளியவன், அடுத்தடுத்து நபர்கள் வரவே விடாது போராடினான்.
இதை முற்றிலும் எதிர்பார்த்திராதவர்கள், கையில் இருந்த கருக்கரிவாளை தங்கள் வசப்படுத்த முனைந்தாலும், கையை விட்டு அரிவாள் போன நிலையிலும், இடுப்பில் சொருகியிருந்த அரிவாள்களை நம்பி மிகவும் வேகமாக விழிப்போடு செயல்பட்டான் சங்கர்.
கும்மிருட்டிலும் சங்கரை சமாளிக்க இயலாமல், ‘டேய்… அப்டியே எல்லா கொட்டகையிலயும் தீயை வைங்கடா’, என்ற ஒலிக்கு
அடுத்த பத்தாவது நொடி கொட்டகை அனைத்தும் பற்றியெறியத் துவங்கியது.
தீச்சுவாலையில் மாடுகள், கோழி, ஆடுகள் அனைத்தும் சிதறி வயல்வெளிக்குள்ளும், இதர பகுதிகளிலும் ஓடத் துவங்கின.
இதை எதிர்பார்த்தே இருந்தவன், வந்தவர்கள் அங்கிருந்து ஓடும்வரை ஓயாது வலியைப் பொறுத்தபடியே இயன்றவரை போராடி அனைவரையும் அலறலோடு ஓடச் செய்திருந்தான்.
தீப்பற்றிய வெளிச்சத்தில் முகத்தை மூடிய துணிகளை மீறியும் அடையாளம் தெரிந்த இருவரை மனதில் குறித்துக் கொண்டவன், ‘இத்தனை வருசத்துக்கு அப்புறமா வந்தா பழி தீக்க நினைக்கிறாய்ங்க’, என்ற எண்ணத்தோடு ,
‘டேய் நீ சோலைமலை அம்மன் தெரு கணேசன்தானடா’, என்ற சங்கரின் பேச்சில் அடிக்க வந்தவன் பாதியோடு விட்டுவிட்டு ஓடியிருந்தான்.
ஓடியவர்களின் பின்னே தன்னால் ஓட முடியாதவாறு, வலதுகால் சங்கரை வஞ்சித்திருந்தது.
ஆனாலும், சற்றும் களைத்தானில்லை.
சற்றுநேரத்தில் பால்கரக்க வந்தவர்கள் எரிந்து சாம்பலாகிக் கிடந்த கொட்டகை மற்றும் சங்கரின் நிலையைப் பார்த்து கத்த, ‘பயப்பட வேணாம். இங்க வாங்க கூரி அண்ணே’, என்று ஈரத்துணியால் காலுக்கு கட்டுப்போட்ட நிலையில் தரையில் அமர்ந்திருந்த சங்கர் வந்தர்களில் ஒருவரை அழைத்திருந்தான்.
பால்கரக்க வந்த மூவரும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் காரைக்குடிக்கு சங்கரை அழைத்துச் செல்ல முயன்றபோது தாஸ் அங்கு வந்திருந்தார்.
அதிகமான இரத்தப்போக்கின் காரணமாக தொய்வடைந்திருந்த சங்கரை, மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, தாஸ் மனைவிக்கு மட்டும் விடயத்தைப் பகிர, பதறிய சசிகலா அன்னம்மாளிடம் மட்டும் விடயத்தைப் பகிர்ந்ததோடு, உடனே மருத்துவமனைக்கு விரைந்திருந்தார்.
சாந்தனு பணிபுரிந்த மருத்துவமனையில் சங்கர் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆதலால், அங்கு பணியில் இருந்த மருத்துவன் சாந்தனுவிற்கு அழைத்து விடயத்தைப் பகிர்ந்திருந்தான்.
சாந்தனு விடயத்தை உள்வாங்கிக் கொண்டு நவீனாவிற்கு உடனே அழைத்திருந்தான்.
“என்ன டாக்டர் மேடம்? நல்லாயிருக்கீங்களா? இங்க உங்க ஹீரோ ஹெவி பிளட் லாஸ்ல உயிருக்குப் போராடிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்றீங்க மதுரையில?”, என்ற எள்ளலான வார்த்தையில் சாந்தனு கேட்க முதலில் சாந்தனுவின் பேச்சை நம்பாது வீட்டிற்கு அழைத்திருந்தாள்.
அழைப்பை எடுத்த அன்னம்மாள் தானறிந்த உண்மையை பேத்தியிடம் கூற, பெண் நடுங்கியிருந்தாள்.
—————–.
கணவனைக் காணும்வரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலையில் இருந்தவள், நேரில் கண்டதும் சற்றே ஆசுவாசமடைந்திருந்தாள் நவீனா.
இருந்தாலும், உடலில் அங்கங்கு சிராய்ப்பு போன்றும், சில காயங்களும் இருந்ததைக் கண்டு, ‘இவரு மேல யாருக்கு அப்டியென்ன கோபம்?’ என்று யோசித்தவாறே இருந்தாள்.
அலமேலு நவீனாவை தனித்து விடாமல், தானும் கிளம்பி நவீனாவோடு காரைக்குடிக்கு வந்திருந்தார்.
எதுவும் உண்ணாமல் இருந்தவளை வற்புறுத்தி உண்ண கூறியபடி அலமேலு இருக்க, பெண் பசிக்கவில்லை என்றே அன்றைய நாளைக் கடத்தியிருந்தாள்.
முதல் இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவனை, மூன்றாம் நாள் தனியறைக்கு மாற்றியிருந்தனர்.
தாஸைக் கொண்டு சம்பவத்தன்றே காவல்நிலையத்தில் புகாரளிக்கச் செய்திருந்தான் சங்கர்.
தாஸ் மகனின் நிலை கண்டு தயங்கவே, “போங்கப்பா… போயி முதல்ல கம்ப்ளைண்ட் குடுங்க… கருக்கரிவாளை வச்சி ரெண்டு பேரு வயித்துல கீறிட்டேன். அதுல குடல் சரிஞ்சு எவனும் செத்துட்டா வம்பா போயிரும்”, என்று தந்தையை அவசரப்படுத்தியிருந்தான் சங்கர்.
இராணுவத்தில் இருந்தவர் ஆதலால், மகனுக்கு பாதகம் எதுவும் வராத வகையில் காவல் நிலையம் சென்று புகாரை அளித்துவிட்டு மருத்துவமனை திரும்பியிருந்தார் தாஸ்.
உடனே காவல்துறையும் சங்கரிடம் நேரில் விசாரணையைத் துவங்க மருத்துமனைக்கு வந்திருந்தது.
அனைத்தையும் மறையாது கூறியவன், தான் சந்தேகப்பட்ட இருவரைப் பற்றியும் மறைக்காது கூறியிருந்தான்.
அனைத்தையும் குறித்துக் கொண்டு, காவல்துறை கிளம்பவும் அதே நேரம் மோனிகா அங்கு வரவும் சரியாக இருந்தது.
நவீனாவின் ஓய்ந்த தோற்றத்தைக் கண்டவள், “என்ன? ரொம்ப டயர்டா இருக்க? சண்டை போட்டது எங்கண்ணன். விசிலடிக்கிற வேலையை மட்டுந்தான் செய்வேனு பாத்தா, இப்டி மனசொடிஞ்சு போயி நிக்கிறியே”, என்று தோழியை அந்த நிலையிலும் தேற்ற எண்ணி கிண்டல் செய்ய
“போ மோனி… அப்ப சிறு வயசில எல்லாம் விளையாட்டாத் தோனுது. இப்ப கேட்டவுடனே நடுங்கி வருது”, என்று கூறி அமைதியாகி இருந்தாள் நவீனா.
“டாக்டரே இப்டியிருந்தா… அப்ப எங்க நிலையை யோசி?”, என்று சசிகலா மருமகளிடம் கேட்டதோடு, “வந்ததுல இருந்து ஒரே அலைச்சலா இருக்கு உனக்கு. வீட்லனா போயி ரெஸ்ட் எடும்மா…”, என்று வீட்டிற்கு அனுப்ப முயல…
“இல்லத்தை… நான் அவங்களைப் பாத்துக்கறேன்… நீங்கதான் ரொம்ப டயர்டா தெரியறீங்க… கிளம்பறதா இருந்தா போயிட்டு வாங்க”, என்று மாமியாரை வற்புறுத்தி அனுப்பியிருந்தாள்.
ஆர்த்தோ மருத்துவர்களிடம் நேரில் சென்று விசாரித்து வந்தவளுக்கு, மூட்டு சேதத்தைக் கண்டு நம்பிக்கையற்ற மருத்துவர்களின் பேச்சைக் கேட்டு தொய்வடைந்த மனதோடு இருந்தாள் பெண்.
கட்டோடு கட்டிலில் கண்ட கணவனைக் கண்டு உள்ளம் பதறியது. ஆனாலும் தனது மனவாட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தாள்.
ஒரு வாரம் அங்ஙனமே சென்றிருக்க, அன்னம்மாள் பேரனைக் காண வந்தவர் தினசரி பாலில் கலந்து கொடுக்க ஏதுவாக பச்சைநிறத்திலிருந்த பொடி ஒன்றை பேத்தியிடம் கொடுத்திருந்தார்.
என்ன? ஏது என்று பேத்தி கேட்க, “அது எலும்பு ஒட்டி இலையை சேத்து நிழக் காச்சலா காயவிட்டு அரைச்சதும்மா… அதை பாலுல கலந்து குடு… தேங்காய்ச் சில்லு காலையில அரைமூடி தினமும் குடுத்து விடறேன். அதை பேரீச்சம்பழத்தோட சாப்பிடக் குடு. அந்த எலும்பு ஒட்டி இலைப்பொடிய கட்டவுத்ததுக்கு பின்ன எண்ணையோட சேத்து மூட்டுல போட்டா பய ஓடவே செய்வான்”, என்று பேத்திக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறியிருந்தார் அன்னம்மாள்.
ஒரு வாரத்திற்கு மேல் மனைவியால் விடுப்பு எடுக்க முடியாது என்பதை அறிந்தவன், நவீனாவை கல்லூரிக்கு கிளம்பிச் செல்ல பணித்தான்.
“இங்கதான் என்னைப் பாத்துக்க எல்லாரும் இருக்காங்களே… நீ கிளம்பு” என்று அலமேலுவையும் மனைவியின் துணைக்கு உடன் அனுப்பியிருந்தான்.
அரைமனதாக, வேறு வழியில்லாமல் கிளம்பி கல்லூரிக்கு வந்தவள், எதிலும் பிடிப்பற்று வளைய வந்தாள்.
அடிக்கடி அலைபேசியில் கணவனைத் தொடர்பு கொண்டவள், “நல்லா ரெஸ்ட்ல இருங்க… இந்த வீக்கெண்ட்ல என்னால அங்க வரமுடியலைன்னா, நெக்ஸ்ட் வீக்கெண்ட்ல நான் அங்க வரேன்”, என்று ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் பெண் மிளற்றியிருந்தாள்.
மருத்துவராக இருந்தாலும், தான், தனது சுற்றம், உறவுகள் என்று வரும்போது மனம் பதறுவது இயல்பான செயலாகவே உள்ளது.
அதே நிலையில்தான் நவீனாவும் இருந்தாள். எத்தனையோ கஷ்டமான நோயுடன் போராடும் நோயாளிகளை, இலகுவாக இதுவரை எதிர்கொண்டிருந்தவள், கணவன் என்று வந்தவுடன் தைரியத்தை இழந்திருந்தாள்.
இத்தனை நிகழ்வுகள் நடந்திருந்த நிலையிலும், புஷ்பா, வெற்றி, சாந்தனுவின் வீட்டாரைத் தவிர மற்ற உறவுகள் மட்டும் சங்கரை நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றிருந்தனர்.
மதுரையில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு கிளம்பியவளுக்கு அழைப்பு வரவே எடுத்திருந்தாள்.
புதிய எண்ணாக இருக்கவே, “ஹலோ யாரது?”, என்று கேட்க
“நாந்தான் நவீனா”, என்ற குரலைக் கேட்டவுடன் அழைப்பைத் துண்டித்திருந்தாள் பெண்.
எதிர்முனையில் யார்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
///////////////