நீயும் நானும் அன்பே…
அன்பு-2
வீட்டிலிருந்து தந்தையோடு கிளம்பும்போது, மனதை என்னவோ செய்ததை உணர்ந்த நவீனா, எதனால் அப்டி இருக்கிறது என்று புரிந்து கொள்ள இயலாமல், மூச்சுக்குத் திணறுபவள்போல வாயால் மூச்சை இழுத்து விட்டபடியே தந்தையோடு கிளம்பியிருந்தாள்.
பயணம் முழுவதும் தந்தையின் கைகளுக்குள் கோழிக் குஞ்சுபோல முடங்கிக் கிடந்தவளைக் கண்ட வெற்றிக்கோ, மகளை ஊரில் விடாமல் தன்னோடே மீண்டும் மெட்ராஸிற்கே அழைத்துச் சென்று விடுவோமா என்ற எண்ணம்கூட தோன்றி மறைந்தது.
வெற்றி தானாகவே முன்வந்து பேசினாலும், ம்ம்… அல்லது ம்ஹூகூம்… என்ற ஒலியெலுப்பலும், தலையாட்டாலுமாகவே அமைதியாக இருந்த நவீனா மனம் நொந்த நிலையில் இருந்தாள்.
நேரம் ஒன்பதைத் தாண்டவே, புஷ்பா கொடுத்தனுப்பிய உணவை மகளை உண்ணச் செய்து, தானும் உண்டதாக பேர் செய்து, மகளை படுக்கச் செய்தார் வெற்றி.
பர்த்தில் சென்று படுத்தவளுக்கும் பல சிந்தனைகளோடு கூடிய குழப்பங்கள்!
உறங்க இயலாதபடியான உள்ளக் குமுறல்கள்!
என்னடா இது கஷ்டம்!
எனக்கு மட்டும் ஏனிப்படி என்ற ஏக்கங்கள்!
சொல்லி அழ இயலாத சோகங்கள்!
பிறர்முன் அழுவதை இளவயதிலேயே அசிங்கமாக எண்ணத் துவங்கியதன் விளைவு!
‘நந்தா மட்டும் இனி அப்பா, அம்மா கூட ஜாலியா இருப்பான். நான் மட்டும் அங்க போயி நொந்து, வெந்து காத்துப் போன பந்து போல ஆகப் போறேன்.
அங்க நிறைய சின்ன பசங்க விளையாட இருந்தாலும், இனி போயிதான் ஃபிரண்ட் ஆகணும்.
நல்லா என்ஜாய் பண்றமாதிரி ஃபிரண்ட்ஸ் அமையனும்!
இந்த அம்மா வேற நிறைய அட்வைஸ் பண்ணியிருக்காங்க.
பாய்ஸ், என்னனு? கேட்டா அதுக்கு பதில். அதுக்குமேல தேவையில்லாம அவங்ககூட ஒரு வார்த்தைகூட பேசக்கூடாதுன்னு சொல்லி விட்டாங்க!
போயித்தான் பாப்போமே!
அப்புறம் புது ஸ்கூல்லயும் நல்ல ஃபிரண்ட்ஸ் கிடைக்கணும்!
தலைக்கு மேல, தலைவலி வரவைக்கிற அளவு வேலை இருக்கு!
எல்லாம் நல்லா செட்டாகுமா?
செட்டாகலைனா நான் என்ன செய்வேன்?
அடிக்கடி என்னை ஊருல வந்து, அம்மா, அப்பா பாக்க வருவாங்களா?
அதைப் பத்திக் கேட்டதுக்கு இந்த அம்மா வாயே தொறக்கலை! என்னவா இருக்கும்னு தெரியலை!
இனி குவார்டர்லி லீவுக்காவது என்னை வந்து கூட்டிட்டுப் போவாங்களா?
இல்லை, அப்டியே இங்க தொல்லை தீந்ததூனு விட்ருவாங்களா?
எல்லாம் இந்த ஆச்சி, தாத்தானால வந்தது!
இந்த ஃப்ளோராம்மா(புஷ்பா)வோட ஆச்சி, தாத்தா ரெண்டு பேரும் இல்லைனா, என்னைய இவங்க எங்க கொண்டு போயி விட்ருப்பாங்க!
எல்லாத்துக்கும் இவங்கதான் காரணம். ஆளத் தூக்கி ஆப்பிரிக்காவுக்கு பேக் பண்ணனும்!
ரெண்டு பேரையும் போயி வச்சிக்குறேன்!
அய்யோ! அவங்களை விட்டா வேற யாரையும் இப்போ எனக்கு அங்கு தெரியாதே!
கொஞ்ச நாளைக்கு அடக்கவொடுக்கமா அம்மா சொன்ன மாதிரி இருந்துட்டு, அப்புறமா யோசிச்சு என்ன செய்யலாம்னு, அங்க போயி முடிவெடுத்துக்கலாம்!
….’, என மனவோட்டம் தன்னைச் சுற்றியும், தனது இனிவரக்கூடிய சூழ்நிலையைச் சார்ந்தும் நீண்டிருக்க, அங்கு செல்ல மனமில்லாத போதும் பயணத்தை தொடர்ந்திருந்தாள் நவீனா.
பர்த்தில் மகளைப் படுக்க வைத்துவிட்டு, தானும் சென்று படுத்தவருக்கு உறக்கமே வரவில்லை.
மகளைப் பற்றிய சிந்தனை ஒருபுறம் கவலையைக் கொடுக்க, சின்னம்மாவின் மகளான சசிகலாவைப் பற்றிய எண்ணமும் உடன் எழவே மனம் நொந்தவாறே, சசிகலாவின் இன்றைய வாழ்க்கைக்கு தானும் ஒரு காரணியாகிப் போனதைப் பற்றி எண்ணி வருந்தியவாறே படுத்திருந்தார் வெற்றி.
என்று, எப்போது தங்கையைப் பற்றி நினைத்தாலும், அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.
இன்றும் அதே மனநிலை வந்திருக்க, அதற்குக் காரணமான நிகழ்வுகளை அசைபோட்டிருந்தார் வெற்றி.
————–
ஹரிதாசன் இராணுவப் பணியில் சேர்ந்து, அப்போது இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
வருட விடுமுறையில் அப்போது ஊருக்கு வந்திருந்தார்.
சசிகலாவின் நெருங்கிய உறவில் திருமணம் ஒன்று காரைக்குடியில் நடந்தது. நிகழ்வில் சசிகலாவும் கலந்து கொண்டு தோழிகளோடு வளைய வந்ததைக் கண்டிருந்தார் ஹரிதாசன்.
கண்டவுடன் மனிதருக்கு பெண் மீது மையல் உண்டாகியிருந்தது.
தையல் மீதான மையலை தனக்குள் வைத்திருக்க முடியாமல், அண்டை அயலாரிடம் விசாரித்து பெண் யாரென்று அறிந்து கொள்ள விழைந்தார்.
தீவிர தேடலால், சசிகலா தனது தூரத்து உறவினர் வீட்டுப் பெண்தான் என்பதையும், அன்றே அவரின் காதல் கண்டுபிடித்துத் தந்திருந்தது ஹரிதாசனுக்கு.
சசிகலாவின் மேல் கொண்ட காதலால், வீட்டுப் பெரியவர்களிடம் ‘கட்டுனா அவளைத்தான் கட்டுவேன்’ என ஒற்றைக் காலில் நின்றிருந்தார்.
குருவேல் சம்மதித்தும், சசிகலாவின் வீட்டில் மறுத்திருந்தனர். காரணம் அந்தஸ்து பேதம் எனத் தெரிய வந்திருந்தது.
அடுத்த ஆராய்ச்சியில், வெற்றிச்செல்வனுக்கு சித்தி மகள்தான் சசிகலா என்பது தெரிய வந்தது.
உடனே வெற்றியைத் தேடி, அவரின் உதவியை நாடியிருந்தார் ஹரிதாசன்.
முதலில் சற்று யோசித்தவர், பிறகு ஹரிதாசனின் கண்மூடித்தனமான காதலைக் கண்டு இறங்கி வந்திருந்தார்.
சித்தி, சித்தப்பா இருவரிடமும், ‘மாப்பிள்ளை நல்ல மனிதர்! தங்கையை அவர் மட்டுமன்றி, குடும்பத்தாரும் நன்றாகவே நடத்துவார்கள்.
அந்தஸ்து பேதம் பார்ப்பவர்களானால், பெரியவர்களே எப்படி முன்வந்திருந்து திருமணத்தை நடத்த கேட்டிருப்பார்கள்’ என பாயிண்டுகளை முன்வைத்து சசிகலாவின் பெற்றோர் மனதைக் கரைத்திருந்தார் வெற்றி.
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’, என்ற சொல் போல சசிகலாவின் வீட்டிலும், சம்மதித்து, திருமணத்தை விமரிசையாக செய்திருந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் எந்தக் குறையுமின்றி குதூகலமாகச் சென்றிருந்தது.
சசிகலாவின் வீட்டிலுள்ளவர்களுக்கும் நல்ல இடத்தில் மகளை திருமணம் செய்து கொடுத்ததில் நிறைவும் உண்டாகியிருந்தது.
சசிகலா தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மனம் நிறைந்திருந்தார்.
இருவரின் நிறைவான வாழ்க்கையின் பயனாக, சசிகலா கற்பமடைந்திருந்தார்.
கற்பவதியை தாங்கு தாங்கென்று தாங்கிய கணவனின்மீது சசிகலாவுமே பித்தாகியிருந்தாள்.
“என்னங்க அடுத்து ஏழாவது மாசம் வளைகாப்பு போடலாமான்னு கேட்டு அம்மா தபால் போட்டுருக்காங்க”, மெல்லிய குரலில் நாணத்தோடு கேட்ட மனைவியைப் பார்த்து சிரித்தார் ஹரிதாசன்.
“கண்டிப்பா என்னை விட்டுப் போகணுமா சசி?”, என்று கைவளைவில் தன்னை வைத்துக் கொண்டு, ஏக்கமாகக் கேட்ட கணவனை எண்ணி உள்ளம் உருகினாலும், மனம் மகிழ்ந்திருந்தார் சசிகலா.
ஆனாலும், கணவனைச் சமாளித்து ஒருவழியாக பிரசவத்திற்கு காரைக்குடிக்கு வந்திருந்தார் சசிகலா.
சசிகலாவின் வளைகாப்பு முடிந்து, பணிக்குச் செல்ல மனமேயில்லாமல் கிளம்பியிருந்தார் ஹரிதாசன்.
அடுத்து வந்த நாட்களில் கடிதப் போக்குவரத்து இருவரிக்கிடையே அன்போடும், அன்னியோன்னியத்தோடும் எந்தக் குறைவுமின்றித் தொடர்ந்திருந்தது.
மாதங்கள் உருண்டோட, கற்ப காலத்தில் கணவரையே எண்ணியிருந்த பெண்ணின் மனதால், அச்சு அசலாக, கணவனை விட சற்று நிறம் கூடுதலாக, மகனைப் பிரசவித்திருந்தார் சசிகலா.
புது வாரிசு வந்த மகிழ்ச்சியில் குடும்பமே குதூகலமான மனநிலையில் இருந்தது. குருவேலுவின் குடும்பமே கிராமம் முழுமைக்கும் தங்களால் இயன்றதை இலவசமாக வழங்கி, தங்களது மகிழ்ச்சியை, இல்லாத மக்களோடு பகிர்ந்து கொண்டிருந்தனர்.
‘ஜேம்ஸ்பாண்ட்’ என தமிழ் திரையுலகம் அன்று போற்றிய ஜெய்சங்கர் மீது கொண்ட அன்பால், மகனுக்கு ஜெய்சங்கர் எனப் பெயரிட்டு மகிழ்ந்திருந்தார், ஹரிதாசன்.
மனைவியை உடன் அழைத்துச் செல்கிறேன் என்று நின்றவரை பெரியவர்கள் தடுத்திருந்தனர். ஆறு மாதங்களாவது கடந்த பிறகு, உடன் அழைத்துச் செல்லுமாறு கூறி ஹரிதாசனை சமாதானம் செய்திருந்தார், அவரின் அன்னை அன்னம்மாள்.
மனமே இல்லாமல் கிளம்பியவரைக் கண்டு மனம் கூம்பியிருந்தாலும், கணவரை இன்முகத்தோடு வழியனுப்பியிருந்தார் சசிகலா.
குழந்தை பிறந்து பத்து மாதங்கள் வரைத் தொய்வில்லாமல் தொடர்ந்த, கடிதத் தொடர்பில் அதன்பின் சற்று தொய்வு வந்திருந்தது.
பணிப் பளுவால் தொய்வு வந்திருக்கலாம் என மனதைத் தேற்றியிருந்தார் சசிகலா.
மாதங்கள் கடந்து வருடமாகிய போது ஊருக்கு வந்த ஹரிதாசன், நீண்ட நாட்கள் தங்காது உடனே கிளம்பியிருந்தார்.
பெரியவர்கள் மட்டுமன்றி, சசிகலாவிற்குமே ஆச்சர்யமாக இருந்தது.
பெரியவர்களும் மகனிடம் காரணம் கேட்க, ‘குழந்தையை வைத்துக் கொண்டு சசிகலா தனிமையில் அங்கு வந்து சிரமப்பட வேண்டாம்’ என உடன் அழைத்துச் செல்லவில்லை என்று கூறினார் ஹரிதாசன்.
சசிகலாவிற்கும் அது சரியெனப்படவே கணவனைத் தொந்திரவு செய்யாமல் விட்டிருந்தார். ஜெய்சங்கருக்கும் மூன்று வயதாகியிருந்தது.
இந்நிலையில் வெற்றிக்கு, வேலு குடும்பத்தில் இளையவரான தங்கவேலுவின் பெண் புஷ்பாவை மணமுடிக்கக் கேட்டனர்.
வெற்றியும் அப்போது அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால் அன்றைய மனநிலையில் சரியென்று சம்மதித்திருந்தார்.
திருமண நிகழ்விற்கு ஹரிதாசனும் ஊருக்கு வந்திருந்தார். திருமணம் முடிந்த கையோடு மனைவியோடு தனது பணியகமாக இருந்த பெங்களூருக்கு கிளம்பியிருந்தார் வெற்றி.
அதேசமயம், ‘ஒத்தைப் புள்ளையா இருக்கான். அதுக்குத் தொணைக்குத் தொணையா இன்னொரு புள்ளை வேணுமில்ல. சங்கருக்கும் வயசும் மூனாயிருச்சு’, என்ற பெரியவர்களின் வற்புறுத்தலால், ஹரிதாசனும் சசிகலா மற்றும் குழந்தை ஜெய்சங்கரோடு அன்றைய அவரது பணியிடமான பெங்களூருவிற்கு கிளம்பியிருந்தார்.
வந்த ஒரு மாதத்தில் கணவரின் செயல்களில் உண்டான மாற்றத்தைக் கண்டு, கணித்து, கேள்வி கேட்ட சசிகலாவிடம், எதையும் மறைக்க விரும்பாமல் தனது உண்மை நிலையை பகிர்ந்திருந்தார் ஹரிதாசன்.
கணவர் சொன்ன செய்தி பெண்ணுக்கு உவப்பாக இல்லை. இடியே தலையில் விழுந்ததுபோல மனம் இறுகியிருந்தார் பெண்.
ஆம், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேறு ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அவளோடு தற்போது குடும்பம் நடத்துவதாகவும் கூறிய கணவனைக் கண்டவள், உடனே கதறியிருந்தார்.
திருமணத்தின்போது இருவருமே பெங்களூருவில் வசிக்கப் போவதையறிந்து, வெற்றிச்செல்வனது முகவரியை வாங்கி குறித்து வைத்திருந்த சசிகலா, உடனே அண்ணனுக்கும், மாமனாருக்கும் கடிதம் மூலம் செய்தியைத் தெரிவித்திருந்தார்.
கடிதம் கண்டு பதறிப்போன வெற்றியும் நேரில் வந்து ஹரிதாசனிடம் பேசினார்.
“இல்லை மாப்ளை, அந்தப் பொண்ணை என்னால விடமுடியாது. அவ என்னை நம்பி வந்திட்டா. இரண்டு பேரையும் நல்லா வச்சுக்குவேன்”, என்று கூறியவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வெற்றியின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
மருமகளின் கடிதம் கண்ட பெரியவர் குருவேலு, தனக்கு மிகவும் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மகனுக்குத் தந்தியை அனுப்பியிருந்தார்.
இதைக் கேட்டு, ஹரிதாசன் குடும்பத்தோடு, வெற்றியின் குடும்பமும் பதறியடித்து ஊருக்குக் கிளம்பி வந்தனர்.
குருவேல் ஆரோக்கியமாக இருப்பதைக் கண்ட, சசிகலாவிற்கு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி இந்த முடிவை மாமனார் எடுத்திருப்பதை யூகித்தவளாய் அமைதியாக இருந்தாள்.
ஹரிதாசனுக்கோ புரியவில்லை. மனைவி கடிதம் எழுதியது தெரியாததால், தந்தையிடம் என்னவென விசாரிக்க, மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டிருந்தார்.
தந்தையிடமே ‘அவளில்லாமல் எனக்கு இனி வாழ்வு கிடையாது’ என பிதற்றிய மகனை, கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் பெரியவர்.
அதற்குமேல் அங்கு வந்து அண்ணனைத் தடுத்திருந்தனர் தம்பிகள் இருவரும்.
“உன்னை நம்பி ஒரு வீட்ல பொண்ணைக் கேட்டு கல்யாணம் பண்ணி வச்சா, அந்தப் பொண்ணுக்கு இப்டி ஒரு அநியாயம் பண்ணலாமா?”, என்று கேட்ட தந்தையிடமே
“நீங்களுந்தான் மலேசியால போயி சம்பாதிக்கிறேனு பதினாறு வருசமா ஊருப்பக்கமே வராம இருந்தீங்க!
அங்கயும் உங்களுக்கு ஒரு குடும்பம் இருந்ததா அங்க இருந்து ஊருக்கு வரவங்கள்லாம் எங்ககிட்ட சொன்னாங்க.
அப்ப அம்மாவுக்கு நீங்க பண்ணதுக்கு பேரு என்னப்பா?”, என கன்னத்தை தடவியவாறே பேசியிருந்தார் ஹரிதாசன்.
“என்ன ஹரிதாசா பேசுற? ஊரு சொல்றதை எதுக்கு நம்புற? உன்னைப் பெத்தவளுக்கோ, உங்களுக்கோ எந்தக் குறையுமில்லாம தான அப்பா பாத்துகிட்டாரு. ஊரு நாலும் சொல்லும். அதைக் கேட்டுட்டு வாயில வரதை யோசிக்காம கேக்காத!”, என்று அன்னம்மாள் மகனை அதட்டியிருந்தார்.
குடும்ப நபர்களைத் தவிர்த்து, சசிகலா வழி உறவினர்கள் சிலரும் இருக்கவே அன்னம்மாள் மகனைப் பேசியிருந்தார்.
தாயின் பேச்சைக் கேட்டவர், “சசியை நான் மறுக்கவே இல்லை. ரெண்டு பேரையும் சந்தோசமா வாழ வைக்கிறேன்னு தானேம்மா சொல்லுறேன்!”, என்று எதிர்கேள்வி கேட்டு வாயடைக்கச் செய்திருந்தார் ஹரிதாசன்.
குருவேலுவிற்கு சங்கடம் உண்டாகியிருந்தது.
இதையெல்லாம் கேட்டிருந்த வெற்றிச்செல்வனுக்கோ, ‘தாயைப் போல பிள்ளை’ என்பதுபோல இங்கு ‘தந்தையைப் போல ஹரிதாசனும்’ மாறியதாகவே எண்ணத் தோன்றியது.
இதைப்பற்றி அறியாமல் ஹரிதாசனுக்கு தங்கையை மணமுடிக்க தானே முன்னின்று பேசியது தவறோ என்று அன்று முதலே அவரின் செயலின் மீது வருத்தம் தோன்றியிருந்தது.
சசிகலாவோ ‘இனி எனக்கு இவருடனான இந்த வாழ்வு வேண்டாம். குழந்தையோடு பிறந்தகம் செல்கிறேன்’ என்று கிளம்ப எத்தனித்தார்.
‘வீட்டிற்கு வந்த மகாலெட்சுமி மனசொடிஞ்சா அது சாபமா போயிரும். அதனாலே நீ அப்டியெல்லாம் எங்கயும் போகவேணாம். இது உன் வீடு, வாசல். எவ்வளவு நாளைக்குத்தான் அவன் இப்டித் திரியறான்னு நாங்களும் பாக்கறோம்!’ என்று மருமகளை சமாதானம் செய்திருந்தனர் பெரியவர்கள்.
தன்னோடு எந்தக் குறையும் இன்றி அன்பாகவும், அனுசரனையோடும் இதுவரை என்பதைவிட, இன்றுவரை நடந்து கொண்டிருந்த ஹரிதாசன், இப்படிச் செய்வாரென சசிகலாவால் இன்னமும் நம்ப இயலவில்லை.
கடிதப் போக்குவரத்தில் இவ்வளவு நாட்கள் இதைப்பற்றித் தெரிவித்திராதவர், பெரியவர்களின் விடா முயற்சியினால், ஒரு வருடத்திற்குப் பிறகே தங்கை புஷ்பாவின் திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார்.
வந்தவருக்கு மனைவியை உடன் அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டாதபோதும், பெரியவர்களின் பேச்சைக் கேட்டு உடன் அழைத்துச் சென்றிருந்தார்.
ஹரிதாசன் செயலையும், வாய்மொழியையும் கேட்ட பெரியவர்கள் மருமகளையும், பேரனையும் வீட்டில் வைத்துக் கொண்டு, மகனிடம், “அவளை விட்டுட்டு வந்தா இந்த வீட்டுல இனி உனக்கு இடம். இல்லைனா அப்டியே அங்கிட்டே இருந்துக்கோ”, என்று வீட்டிலிருந்து மகனை அனுப்பியிருந்தனர்.
‘புதுப்பெண் மோகத்தில் செல்பவர், மோகம் தீர்ந்தபின் தன்னிடம் திரும்புவார்’ என்று பெரியவர்களின் பேச்சைக் கேட்டு ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளாக காத்திருந்தும் சசிகலாவின் வாழ்வில் எந்த மாற்றமும் வராமல் போயிருந்தது.
இடையில் ஹரிதாசன் எழுதிய கடிதங்களை காகிதக் குப்பையாக எண்ணி ஒதுக்கியிருந்தார் சசிகலா.
இடைவிடாத மன உளைச்சல் காரணமாக மகனைத் தன்னோடு வைத்து வளர்க்க இயலாத துரதிஷ்டவாதியாக இருந்தவர், மகனை சிறுவயதிலேயே விடுதியில் சேர்த்திருந்தார் சசிகலா.
மகனின் தற்போதைய வளர்ச்சியினைக் கண்டும், ஆதரவான பேச்சைக் கண்டும், பழையதை மறக்கத் துவங்கியிருந்தார்.
சசிகலாவின் நிலையை எண்ணினாலே குற்ற உணர்ச்சியோடு, ஹரிதாசன் மீது வெறுப்பும் வெற்றிச்செல்வனுக்கு வந்திருந்தது.
தான் முன்னின்று உறுதியாக திருமணத்தை நடத்திவிட்டு, இன்று தனித்து வாழும் தங்கையின் நிலைக்கு எதுவும் செய்ய இயலாத தன்னுடைய கையாலாகாத தனத்தை எண்ணி இன்றுமே வருத்தம் இருக்கிறது.
தங்கையைக் காணும்போது தலையைக் குனிந்தபடியே இன்றும் செல்லும் வெற்றியை, முன்வந்து தேற்றுவார் சசிகலா.
“அவரு அப்டி செஞ்சதுக்கு, நீங்க என்ன அண்ணே செய்வீங்க. எல்லாம் என் நேரம்”, என்ற கூறினாலும் வெற்றிக்கு மனம் அதை ஏற்க மறுத்தது.
பெண்பிள்ளைகள் அனைவரும் நல்ல நிலையில் இருக்க, ஒற்றை மகனும் தங்களுக்கு இல்லை என்றானதை எண்ணி மனம் வருந்தினாலும், பெரியவர்கள் இருவரும் அதை வெளிக் காட்டவில்லை.
குருவேலுவின் மரணத்திற்கு வந்து கலந்து கொண்ட ஹரிதாசன், அதன்பின் இந்த வீட்டின் பக்கமே வரவேயில்லை.
குருவேலுவின் மனைவி அன்னம்மாள், மருமகளுக்கும், பேரனுக்கும் தற்போது துணையாக இருந்தாலும், ஏதோ வெறுமை அனைவர் உள்ளத்திலும் ஏராளமாகவே மண்டிக் கிடந்தது.
————————–
ஒருவழியாக தொடர்வண்டி விடியலின்போது மானாமதுரையை வந்தடைந்திருந்தது
நவீனாவிற்கு உறக்கம் தொலைத்த முதல் இரவாக அன்று அமைந்ததால் கண்களில் எரிச்சல் மிச்சமிருக்க, தந்தையோடு தன்னால் இயன்ற லக்கேஜை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கியிருந்தாள்.
வழமையைவிட ஐந்து நிமிடம் முன்பாகவே ஸ்டேசனுக்குள் வந்திருந்தது தொடர்வண்டி.
எப்பொழுதும் தாமதமாக வரும் வண்டியினை, அசட்டையாக எண்ணி வெளியில் நின்றிருந்தவன், பிளாட்பார்மிற்குள் நுழைந்த வண்டியின் சத்தத்தில் உள்ளே வந்திருந்தான் ஜெய்சங்கர்.
அதற்குள் தந்தையும் மகளுமாக லக்கேஜைச் சுமந்தவாறு பிளாட்ஃபார்மில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
ஹரிதாசன் சாயலில், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில், மாநிறத்தை விட கூடுதலான கருப்புடன், வாட்ட சாட்டமாக தன்முன் வேகமாக வந்து “தாங்க…”, எனக் கையில் உள்ளதை வாங்க கைநீட்டியவனைக் கண்ட வெற்றி,
“லக்கேஜ் கொஞ்சம்தான்பா, நானே எடுத்துட்டு வரேன்”, என்க
“இல்லை! எங்கிட்ட கொடுங்க, நான் எடுத்துட்டு வரேன்”, என்று வெற்றியின் கையிலிருந்ததை அவனாகவே தனது கைகளில் மாற்றியிருந்தான்.
தனது கையில் இருந்தவற்றை சங்கரிடம் கொடுத்த வெற்றி, உடன் வரும் நவீனாவின் கையில் இருந்ததை, தான் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினார்.
சந்தன நிறத்தில், சித்துப் பெண்ணாக ஐந்தடி இரண்டங்குல உயரத்தில், உறக்கம் இன்னும் மிச்சமிருந்த கண்களோடு, அயர்வாக சுரிதாரில் நின்றிருந்தவளை கண்ணுற்றவன்,
‘இதுதான் தாத்தா நினைச்சுப் பயப்படற மெட்ராசு மெரீனாவா!’, எனத் தனக்குள் எண்ணியபடியே மாமனுக்கு முன்னே நடந்திருந்தான்.
வெற்றிக்கு உண்மையில் அவன் ஹரிதாசன் மகன் என்கிற யூகத்தைத் தவிர, அவனது பெயர் எதுவும் நினைவில் இருக்கவில்லை.
அதனால் வாப்பா, போப்பா என்று பேசிக் கொண்டார்.
ஜெய்சங்கருக்கும், வெற்றியோடு நெருங்கிய தொடர்பு இதுவரை இல்லாததால் மாமா என உரிமையோடு அழைத்துப் பேச எதுவோ தடுத்தது.
நடந்ததைக் கண்ணுற்றவள், சங்கரை ட்ரைவர் என எண்ணியிருந்தாள் நவீனா.
நவீனாவும் இதுவரை சங்கரை இங்கு வந்திருந்த நாட்களில் சந்தித்ததில்லை என்பதால் அவளுக்கும் யாரென்று தெரியவில்லை.
வெள்ளை நிற அம்பாசடரில் கொண்டு வந்த லக்கேஜ்களை உரிய இடங்களில் வைத்துவிட்டு, இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான் சங்கர்.
தந்தை மற்றும் சங்கர் இருவரின் பொதுவான பேச்சில் கவனமில்லாமல் வந்தவள், சற்று நேரப் பயணத்தில் கண் அசந்திருந்தாள்.
காம்பவுண்டுக்குள் நுழைந்த காரின் சத்தத்தில் அந்த விடியலின் அழகோடு, பேத்தியை வரவேற்க பெரியவர்கள் இருவருமே வெளியே வந்திருந்தனர்.
முதலில் மருமகனை வரவேற்றுப் பேசியவர்கள், உறங்கும் மகளை எழுப்பி மகள் இறங்க உதவியரிடம், “நீங்க இங்குட்டு வாங்க மாப்பிள்ளை, பேத்தியை நான் கூட்டிட்டு வரேன்”, என்று தங்கவேலு மருமகனை அனுப்பிவிட்டு நவீனாவை நெருங்கினார்.
அன்னம்மாளும், சசிகலாவுமே நேரில் வந்து வரவேற்று இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு உள்ளே சென்றிருந்தனர்.
ஜெயவேலு குடும்பத்துடன், தங்கவேலு வீட்டிலிருந்து அவரது மகன் குடும்பமும் கோடைகால சுற்றுலாவிற்கு என ஏற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்றிருந்தனர்.
அறை எல்லாம் முந்தைய தினமே தயாராக இருக்க, இருவரின் லக்கேஜ்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
நவீனாவும் பேந்தப் பேந்த விழித்தபடியே, தாத்தா எவ்வளவோ அழைத்தும் சிறு புன்னகையை மட்டும் தந்தவள், தந்தையின் பின்னால் ஒட்டியவாறே வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.
வந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவள், கொடுத்த காஃபீயை வாங்கி மிடறு மிடறாக அருந்தினாள்.
வீட்டில், பூஸ்ட், போர்ண்விட்டா, ஹார்லிக்ஸ், காம்ப்ளான் என்று நாளொன்றுக்கு கேட்டதைக் கொடுத்து பழக்கியிருந்த புஷ்பா, டீ, காஃபீயை கண்ணில் காட்டமாட்டார்.
அதனாலேயே பெண்ணுக்கு அதன்மேல் மோகம் இருக்க, ஆச்சி கொடுத்ததை ஆவலாக அருந்தினாள்.
‘ஆச்சிய டக்கவுட் பண்ண நினைச்சு வந்தா, காஃபீய கண்ணுல காட்டி காலையிலேயே இப்டி அவங்க பக்கமா கவுத்தறாங்களே!’, என எண்ணியவாறே ரசித்து நிதானமாக காஃபீயை அருந்தினாள் நவீனா.
வெற்றி, வராண்டாவில் மாமனாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
தயங்கித் தயங்கி தந்தையிடம் வர முயன்றவளை, முல்லை ஆச்சி கண்ணுற்று,
“அம்மாடி நவீனா, இங்க வா…”, என அழைத்தார்.
அருகில் தயங்கியவாறே வந்த பேத்தியைக் கண்டவர், “போயி வெரசா தலைக்கு ஊத்திட்டு வா. ட்ரெயினுல வந்தது ஒரே சூடா இருக்கும். நான் காலைப் பலகாரத்துக்கு ஆப்பம், முக்குளி (பணியாரம்) செய்திருக்கேன்”, என்று பேத்தியிடம் கூறினார்.
“எங்க என் லக்கேஜ்ஜெல்லாம்…”, என்று தயங்கியவளை
“அதுக்குத்தான் இப்படி பதுங்கிப் பதுங்கி வந்தியா”, என்று பேத்தியின் தயங்கிய நடைக்கு விளக்கம் தந்த நன்முல்லைப் பாட்டி, அவர்களின் தங்கும் அறையைக் காட்டினார்.
உள்ளே சென்றவளுக்கு எடுத்து வந்திருந்த லக்கேஜ்ஜில் ஒன்று குறைவதைக் கண்டு, “இன்னொரு பேக் காருலயே இருக்குபோல!”, என்று முல்லை ஆச்சியிடம் கூற
“அதுக்கு என்ன? போயி விரசா எடுத்துட்டு வரச் சொல்றேன்”, என்றபடி நகர்ந்தவரிடம்
“நானே போயி எடுத்துட்டு வரேன் ஆச்சி”, என்று தைரியமாக முன்வந்தவளையே முகம் கொள்ளாப் புன்னகையோடு அனுப்பியிருந்தார் முல்லை.
வெளியில் வந்தவள், கார் நின்றிருந்த இடத்திற்கு வர, வெளியில் சென்று விட்டு உள்ளே நுழைந்த ஜெய்சங்கரைக் கொண்டாள்.
நவீனாவின் மெல்லிய கார் நிறுத்துமிடத்தை நோக்கிய, தயங்கிய நடையைக் கண்ணுற்று நேராக இரண்டே எட்டில் அவளிடம் வந்திருந்தான் சங்கர்.
“என்ன வேணும்?”, என்ற சங்கரின் கணீர் குரலைக் கேட்டவள்
“ட்ரைவர்… என் லக்கேஜ் உள்ள மிஸ் ஆகிருச்சு, அதை எடுத்துத் தரீங்களா?”, என்று காரை நோக்கிக் கையை நீட்டி பவ்வியமாகக் கேட்க
நவீனாவின் ட்ரைவர் என்கிற பேச்சில் சட்டென கோபம் எழ, “என்னாது! ட்ரைவரா? உன்னை ஸ்டேசன்ல வந்து கூட்டிட்டு வந்தா… என்னை ட்ரைவர்னு சொல்லுவியா?”, என முரட்டுக் குரலில் கேட்டு பெண்ணை மிரட்டியிருந்தான்.
பயந்துபோன முகத்தோடு, “சாரி..” என்றவளிடம் முதல் நாளே தனது ருத்திர தாண்டவத்தை மேலும் புதியவளிடம் காட்ட விருப்பமின்றி,
“நான் ஜெய்சங்கர். நான் யாருன்னு முதல்ல கேட்டுத் தெரிஞ்சுக்க… பழக்க வழக்கம் தெரியாம, பெருசா படிக்க வந்துட்டா!”, என்று கோபக் குரலில் கூறியவனிடம்
“நீங்களே யாருன்னு சொல்லிற வேண்டியதுதான!, இதப்போயி இனி நான் யாருகிட்ட என்னனு கேக்க!” எனத் துடுக்காகப் பேசிவிட்டு, தாயின் அறிவுரைகள் நினைவில் எழ அமைதியாக நின்றாள்.
“ம்… எல்லாம் நல்லாத்தேன் பேசுற… நான் குருவேலு தாத்தாவோட மகன் புள்ளை பேரன்” என்று மிடுக்கோடு, வலது புறங்கையினால் மீசையை நீவியவாறே கூறினான்.
“இதை நீங்க முன்னமே சொல்லியிருக்கலாம்!”, என்று எதிரில் நின்றவனுக்கு குறைந்த குரலில் ஐடியா கூறியவள், அதற்குமேல் பேசாமல் இருக்க தன்னையே கட்டுப்படுத்தியவாறு நின்றிருந்தாள்.
காரினுள்ளே இருந்த பேக்கை எடுத்துக் கையில் கொடுத்தவனின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டாள்.
கிளம்ப எத்தனித்தவளிடம், “ஏய்… இங்க பாரு… சொந்த பந்தங்களை யாரு என்னனு கேட்டு முதல்ல தெரிஞ்சுக்கோ! வாயில வந்ததை இனிப் பேசக்கூடாது. என்ன சரியா?”, என்ற அதட்டலோடு இலவச புத்திமதியையும் கூறி அனுப்பி வைத்தான்.
தலையை மீண்டும் ஆட்டிவிட்டு அவனின் மிரட்டலால் மிரண்ட விழிகளை மறைக்க முயன்று, கையில் வாங்கிய பேக்கோடு, தன்னையே திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே வீட்டிற்குள் செல்பவளை அங்கிருந்தே பார்த்திருந்தான் சங்கர்.
விகற்பங்கள் எதுவும் மனதில் இல்லாமல், விளையாட்டும், திண்பண்டங்களுமே நிறைந்திருந்த மனதினால், குழந்தை முகமும், கொஞ்சும் குரலும் இன்னும் மாறாமல், மிரட்சியோடு தன்னைப் பார்த்துச் செல்பவளைக் கண்டவனுக்கோ , ‘பாவம் இந்தப் புள்ளை இங்க வந்து மாட்டிக்கிட்டு, என்ன பாடுபடப் போகுதோ’, என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பேத்தியின் மிரட்சியான பார்வையைப் பார்த்த முல்லை, “என்ன தாயீ!”, என்று வாஞ்சையோடு கேட்க
வெளியில் நின்றிருந்த சங்கரைக் காட்டி, “அவங்களை நான் ட்ரைவர்னு நினைச்சு அப்டிக் கூப்டுடேன் ஆச்சி!”, என்று மெல்லிய குரலில் தனது தவறை உரைத்தாள் நவீனா.
எட்டிப் பார்த்து பேத்தியின் அடையாளங்களுக்குள் சிக்கியவனைக் கண்டு புன்னகை பூசிய முகத்தோடு, “ட்ரைவரு ரெண்டுபேரும் நம்ம வூட்டு ஆளுங்களலாம் டூர் கூட்டிட்டு போயிருக்காரு…! இது நம்ம சங்கரு…! உங்க மூத்த தாத்தாவோட பேரன்!”, என்று கூற
இத்தனை ஆண்டுகளில் எத்துனை முறை இங்கு வந்தும் பார்த்திராத இவனைப்போல, இன்னும் யாரெல்லாம் இங்கு இருக்கிறார்களோ என்று நினைத்தவள், உறவுகளைக் கற்றுணரவே தனக்கு ஒரு காலம் தேவைப்படும் என எண்ணிக் கொண்டவளாக, குளிக்க மாற்றுடையுடன் கிளம்பியிருந்தாள்.
மானகிரி அவளின் மனங் கவருமா?
அடுத்த அத்தியாயத்தில்…