UNNE 2

நுவரெலியா மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இன்னுமொரு எழில் தவழும் பிரதேசம்.

மற்றைய மலையகத்தின் அதாவது மத்திய மாகாணத்தின் பிரதேசங்களை விட இந்த பிரதேசத்தின் காலநிலை சற்று அதிகமாகவே குளிரானது.

பல்வேறு வகையான பூக்களின் அணிவகுப்பும், மரங்களின் அணிவகுப்புமே நம்மை அந்த பிரதேசத்திற்குள் வரவேற்று செல்லும்.

நுவரெலியா பிரதேசத்திற்குள் செல்லும் வழி முழுவதும் தேயிலை பயிர் செய்கைகளும், பச்சைப் பசேலென்ற கரட், கோவா, லீக்ஸ் போன்ற மலைநாட்டுக்கு உரித்தான மரக்கறி பயிர் செய்கைகளும், கண்களுக்கு இனிய பூக்களின் பயிர் செய்கைகளும் வரவேற்க அவற்றை எல்லாம் மனம் நிறைந்த குதூகலத்துடன் பார்த்த வண்ணம் இழையினி மற்றும் விஜயா அங்கு வந்து சேர்ந்தனர்.

சுமார் மூன்று மணி நேர பிரயாணத்தின் பின்னர் நுவரெலியாவின் சீதா தேவி கோவிலை வந்து சேர்ந்தவர்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

இந்த கோவில் சுமார் 5000 ஆண்டு கால பழமையான வரலாற்றைக் கொண்ட கோவில்.

இராவணன் சீதையை இந்திய தேசத்தில் இருந்து அழைத்து வந்து சிறை வைத்த இடமே தற்போது பெரும் பிரசித்தி பெற்ற கோவிலாக வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்த இடத்தில் அனுமான் வந்து சென்றதற்கு அடையாளமாக அவரது பாத அடையாளங்களும் இருக்க அதை எல்லாம் பார்த்தபடியே விஜயா இழையினியோடு பூஜை நடக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றாள்.

விஜயாவின் தந்தை செல்வத்திற்கு அன்று ஊரில் முக்கியமான வேலை இருந்ததால் அவரால் தங்கள் மகள்களோடு வர முடியாது போகவே அவர் ஏற்கனவே அந்த கோவில் நிர்வாகிகளிடம் பூஜை பற்றி பேசி இருக்க இழையினி அங்கு சென்றதுமே பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக ஆரம்பமானது.

விஜயாவின் நண்பர்கள் ஒரு சிலரும் அங்கு வந்திருக்க கலைச்செல்விக்கான பூஜை இழையினியின் மனம் விரும்பிய படி திருப்திகரமாக நடந்து முடிந்தது.

“என்ன இழை பூஜை எல்லாம் ஓகே வா?” விஜயாவின் கேள்விக்கு புன்னகையுடன் அவளை பார்த்து தலை அசைத்தவள்

“டபுள் ஓகே! சரி ஊருக்கு கிளம்பலாமா?” என்று கேட்க

“என்ன ஊருக்கு போகப் போறீங்களா? ஏய்! விஜி நீ நேத்து சொன்ன தானே? இன்டைக்கு எல்லாரும் சேர்ந்து ஊர் சுத்துவோம்னு இப்ப ஊருக்கு போறன்னு சொல்லுற!” விஜயாவின் தோழர்கள் கேள்வியாக அவர்களை பார்த்து கொண்டே அவர்கள் இருவருக்கும் முன்னால் வந்து நின்றனர்.

“ஊர் சுற்றுவதா?” இழையினி கேள்வி பாதி குழப்பம் பாதியாக விஜயாவை திரும்பிப் பார்க்க

அவளைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகைத்த படியே அவளின் அருகில் வந்து நின்றவள்
“இழை பாப்பா! நாம என்ன அடிக்கடியா இப்படி வெளியூருக்கு வாறோம்? எப்பயோ மாசத்தில் ஒரு தடவை இல்லை வருஷத்தில் ஒரு தடவை அதுவும் இந்த வருஷம் தான் நாம மட்டும் வந்து இருக்கோம் இல்லேன்னா அம்மா, அப்பா கூட வந்து ஒரு இடத்திற்கும் போக விடமாட்டாங்க அது தான் நீ இல்லைன்னு சொல்ல மாட்டேன்னு நினைச்சு நான் ஓகே சொல்லிட்டேன் ப்ளீஸ்டா இழை! வந்தது தான் வந்தாச்சு ஒரு ரவுண்ட் போயிட்டு போவோமே” கெஞ்சலோடு அவள் தாடையை பிடித்து கேட்க

புன்னகையுடன் அவளது தோளில் தட்டியவள்
“சரி வா போகலாம்” என்றவாறே முன்னோக்கி நடந்து செல்லத் தொடங்கினாள்.

இள வயதினர் எல்லோரும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தால் அந்த இடத்தில் காரணமே இல்லாமல் சிரிப்பும், கேலிப் பேச்சுகளும் நிறைந்து கொள்ளும்.

அதே போன்று இப்போதும் விஜயாவின் நண்பர்களின் பேச்சில் வெகு நாட்கள் கழித்து தன்னை மறந்து சிரித்து சந்தோஷமாக இருந்து கொண்டிருந்தாள் இழையினி.

“சரி எங்கே போகலாம் சொல்லுங்க? உங்களுக்கு தானே உங்க ஊரைப் பற்றி நன்றாக தெரிந்து இருக்கும்” இழையினி கேள்வியாக நோக்க

விஜயாவின் தோழிகளில் ஒருத்தி
“க்ரேஜொரி பார்க் போவோம் விதவிதமான சாப்பாடு, போர்ட் ரைடுன்னு சூப்பரா இருக்கும் விஜி! நமக்கு சோறு தானே முக்கியம்!” என்று கூற மற்ற அனைவரும் சிரித்துக் கொண்டே அதற்கு ஆமோதிப்பாக தலையசைக்க சிறிது நேரத்தில் அவர்களது கார் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டது.

போகும் வழி முழுவதும் அவர்களது பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் அந்த வழி முழுவதையும் நிரப்ப பதினைந்து நிமிட பிரயாணத்தின் பின்னர் அந்த இடத்தை அவர்கள் வந்து சேர்ந்தனர்.

இயற்கையோடு ஒன்றி போகும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அந்த பார்க் முழுவதும் விதவிதமான உணவு கடைகளும், பல்வகை மலர்களின் அணிவகுப்பும், சிறியோர் முதல் பெரியோர் வரை மனதை இலகுவாக்க ஏதுவான முறையில் இருந்த அந்த இடம் முதல் பார்வையிலேயே இழையினிக்குப் பிடித்துப் போனது.

வானின் நீல நிறமும் மரங்களின் பச்சை நிறமும் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள அவை இரண்டு நிறங்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டாற் போல இருந்த அந்த ஏரி அமைதியான தியானத்தில் இருப்பது போல் தெளிவாக காணப்பட்டது.

இயற்கையான அன்னப் பறவைகளுக்கு பதிலாக அதே வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அன்னத்தின் வடிவத்தை ஒத்த படகுகள் சில அந்த ஏரியில் ஒரு சில நபர்களைத் தாங்கிச் செல்ல உண்மையான ஒரு கிராமத்து எரிக்கரைக்குள் வந்தது போன்ற உணர்வையே இழையினி அங்கே உணர்ந்தாள்.

விஜயா அவளது தோழிகளோடு பேசிக் கொண்டே முன்னால் நடந்து செல்ல இழையினி அவர்களில் இருந்து நான்கு, ஐந்து அடிகள் தள்ளி பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இங்கே வந்து இந்த இரண்டு வருடங்களில் அவள் பெரிதாக எந்த ஒரு பொது வெளி இடங்களுக்கும் சென்றதில்லை.

தன் குடும்பத்தினருடன் இருந்த போது அதிலும் தன் அன்னையும் தான் அவள் இவ்வாறான இடங்களுக்கு எல்லாம் சென்றதுண்டு.

இப்போது வெகு நாட்கள் கழித்து நண்பர்களுடன் வந்து இருந்த தருணம் அவள் மனதிற்குள் இன்பத்தை உருவாக்க அதை மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அனுபவித்த படியே நடந்து சென்றவள் தன் முன்னால் நின்ற நபரை கவனியாமல் அவன் மேல் மோதி நிற்க
“ஏய்! கண் தெரியாதா உனக்கு?” என்றவாறே திரும்பிய அந்த நபர் இழையினியின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து சட்டென்று அமைதியாகிப் போனான்

இயல்பாக வாரி விட்ட கேசம், இழையினியின் நிறத்திலும் சற்று குறைவான நிறம், அழுத்தமான பார்வை என்று நின்று கொண்டிருந்த அந்த நபர் இள நீல நிறத்தில் முழுக்கை சர்ட் அணிந்து அதை முழங்கை வரை மடித்து விட்டிருக்க அவன் முகத்திலோ பலநாட்களாக தொலைத்து விட்ட பொருளை கண்டெடுத்தது போல அவ்வளவு ஆனந்தம் குடி கொண்டிருந்தது.

இழையினி பதட்டத்தில் அவனது முக மாற்றத்தை கவனிக்காமலேயே
“ஸாரி ஸாரி ஸார்! நான் தெரியாமல் வந்து இடித்துட்டேன் ரியலி சாரி” என்று கூறவும்

“ஓஹ்! அப்படியா? இதே மாதிரி நாங்க வந்து உங்கள இடிச்சு இருந்தால் நீங்க அமைதியாக போய் இருப்பீங்களா? கத்தி ஊரைக் கூப்பிட்டு இருப்பீங்க அப்படித்தானே?” அவள் இடித்த நபரைத் தவிர்த்து அவனருகில் நின்று கொண்டிருந்த இன்னொருவன் கோபமாக அவளைப் பார்த்து வினவ

அவனைப் பார்த்து அவசரமாக இல்லை என்று தலையசைத்தவள்
“இல்லை ஸார் நான் அப்படி எதுவும் பண்ணுற ஆள் இல்லை அதோடு இது தெரியாமல் தான் நடந்தது ப்ளீஸ் ஸார் வீணாக சத்தம் போடாதீங்க” அவள் கெஞ்சலாக அந்த நபரை பார்த்து கேட்டு கொண்டு நிற்க அந்த நபர் போட்ட சத்தம் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த விஜயா அவசரமாக அவளை நோக்கி ஓடி வந்து நின்றாள்.

“இழை என்ன நடந்துச்சு?” விஜயாவின் கேள்விக்கு அங்கே நடந்தவை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இழையினி கூறி முடிக்க

தன் முன்னால் நின்ற நபரை முறைத்து பார்த்தவள்
“ஸார் அது தான் அவ தெரியாம இடிச்சதாக சொல்லுறா தானே! அதற்கு பிறகும் ஏன் தேவையில்லாமல் சத்தம் போடுறீங்க?” தன் பங்கிற்கு குரலை உயர்த்த இதற்கு எல்லாம் காரணகர்த்தாவான அந்த நபர் மாத்திரம் அமைதியாகவே நின்று கொண்டிருந்தான்.

விஜயாவும், மற்றைய நபரும் போட்ட சத்தத்தில் ஒரு சில நபர்கள் கூட்டம் கூட ஆரம்பிக்கவே இழையினி பதட்டத்துடன் தன் தோழியின் கையை பிடித்து இழுக்கத் தொடங்கினாள்.

“விஜி வேண்டாம் வா போகலாம் ப்ளீஸ்”

“இல்லை இழை இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது அது தான் நீ தெரியாம இடிச்சேன்னு சொன்ன தானே அப்பவும் தேவையில்லாமல் பிரச்சினை செய்றாங்க நம்ம பக்கம் தான் தப்பில்லைலே! அதோட நீ இடிச்சது அந்த ஆளைத் தானே! இந்த ஆள் எதற்கு தேவையில்லாமல் மூக்கை நுழைக்கணும்?”

“சரி தான் விஜி ஆனா…” அப்போது தான் விஜயா கூறிய விடயத்தை மீண்டும் ஒருமுறை இழையினி மீட்டிப் பார்த்தாள்.

‘விஜி சொன்னது சரி தானே! நான் அந்த ஆள் மேல் தானே இடித்தேன் நடுவில் இந்த ஆள் எதற்காக இவ்வளவு சத்தம் போடணும்?’ இழையினி யோசனையுடன் அந்த நபர்கள் இருவரையும் திரும்பிப் பார்க்க அத்தனை நேரமும் அமைதியாக நின்று கொண்டிருந்த அந்த நபர் தன் அருகில் நின்றவனிடம் ஏதோ ரகசியமாக கூற அவனோ தன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்த இரு பெண்களையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இட்ஸ் ஓகே இழையினி மேடம் நான் எதுவும் தப்பாக எடுக்கல நீங்க போங்க” வெகு நாட்கள் பழகியது போல அந்த ஆடவன் இழையினியைப் பார்த்து கூற அவளோ அவனது உரிமையான அழைப்பில் வியப்பாக அவனை நோக்கினாள்.

அவளது வியப்பான பார்வையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் தன் அருகில் இருந்த நபரின் புறம் திரும்பி
“ராஜா வா போகலாம்!” என்று விட்டு

இழையினியைக் கடந்து செல்கையில்
“கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம்!” அவளுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூறி விட்டு செல்ல அவளோ அவனை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நின்றாள்.

“ஏய்! இழை! இழை! என்னடி பேயறைஞ்ச மாதிரி நிற்குற? அந்த ஆளு உனக்கிட்ட என்ன சொல்லிட்டு போனாங்க?” விஜயா அதிர்ச்சியாகி நின்ற இழையினியின் தோளைப் பற்றி உலுக்க

கனவில் இருந்து விழிப்பதைப் போல அவளைப் பார்த்து விழித்தவள்
“விஜி ப்ளீஸ் வீட்டுக்கு போகலாம் வா ப்ளீஸ்” கெஞ்சலாக கேட்கவே அவளது அந்த நிலையை பார்த்து மறுத்து பேச மனமின்றி தன் நண்பர்களிடம் சொல்லி விட்டு அவர்கள் இருவரும் தங்கள் ஊரை நோக்கி புறப்பட்டனர்.

இந்த பயணத்தை ஆரம்பிக்கும் போது இருந்த அந்த ஆனந்தமான மனநிலை முற்றாக மறைந்து அந்த பெயர் தெரியாத நபரின் ஞாபகமே இழையினியைச் சூழ்ந்து கொள்ள அவளோ முற்றாக கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.

‘யார் அவன்? இதற்கு முன்னர் அந்த நபரைப் பார்த்தது போலவும் உள்ளது பார்க்காதது போலவும் உள்ளது’

‘எனது பெயரை நன்றாக தெரிந்தது போல் வேறு பேசிச் சென்றானே! யார் அவன்?’ ஒரு சில நிமிடங்களே சந்தித்த ஒருவனைப் பற்றி நாள் முழுவதும் சிந்திக்கின்றோமே என்பதை கூட உணராமல் இழையினி அவனது சிந்தனையில் மூழ்கிப் போய் இருக்க மறுபுறம் அவளது சிந்தனைக்கு காரணமானவனோ புன்னகையுடன் தன் காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

“ஆதவா! நீ சொன்னது எல்லாம் உண்மையா? அந்த பிள்ளையை நீ லவ் பண்ணுறியா? நீ இங்க வந்து இந்த ஒன்னரை வருஷமாக என்னோட தானே இருந்த! அப்ப எப்படி இது நடந்தது?” சிறிது நேரத்திற்கு முன்னர் காரின் மீது சாய்ந்து நின்றவனால் ராஜா என்று அழைக்கப்பட்டவன் கேள்வியாக அவனை நோக்க

புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தவன் இத்தனை நாட்களாக தன் மனதிற்குள் இருந்த விடயங்களை எல்லாம் கூறவே
அவனை இன்னமும் அதிர்ச்சியாக நோக்கியவன்
“என்னடா ஆதவா இது? இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்கு அதற்கு பிறகும் அந்த பிள்ளை உன்னை விரும்புவானு நினைக்குறியா? நீ தேவையில்லாமல் உன்னோட நேரத்தை வீணாக்க பார்க்குற” என்று கூற

அதற்கும் அவனுக்கு புன்னகையையே பதிலாக திருப்பிக் கொடுத்தவன்
“நான் இங்கே வந்ததே அவளைத் தேடித் தான் நான் இங்கே வந்து இந்த ஒன்றரை வருஷத்தில் அவளை பார்க்காமலேயே இருந்தேன் இன்னும் ஒரு மாதத்திற்குள் அவளைப் பார்க்கலேன்னா மறுபடியும் என் இடத்திற்கே போகலாம்னு தான் நினைத்தேன் ஆனால் அந்த கடவுள் அவளையே என்னைத் தேடி வந்து பார்க்க வைத்து விட்டார் இனி இழையினியை நான் தவற விடமாட்டேன்” கண்களை மூடி ரசனையோடு கூறவும்

அவனருகில் நின்றவனோ
‘ஆண்டவா! இவனைக் எப்படியாவது காப்பாற்றிடுப்பா’ என தன் மனதிற்குள் நினைத்து கொண்டு அவனைப் பரிதாபமாக பார்த்த வண்ணம் நின்றான்.

இழையினியை அவளது வீட்டில் இறக்கி விட்ட விஜயா அவளைத் தொந்தரவு செய்வதோ, நடந்த சம்பவத்தை பற்றியே மீண்டும் வேறு ஏதாவது பேசுவதோ அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்ததால் அவளிடம் அதைப் பற்றி எதுவும் பேசாமல் அரை மனதுடன் தன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றாள்.

இழையினி வருவதைப் பார்த்ததும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முத்து தாத்தா தன் கையிலிருந்த நீர் பாய்ச்சும் வாளியை கீழே வைத்து தன் தோளில் கிடந்த துண்டில் கையைத் துடைத்து விட்டபடியே அவள் முன்னால் வந்து நின்றார்.

“என்ன பாப்பா பூஜை எல்லாம் முடிஞ்சா? விஜி பாப்பா வரலயா?”

“இல்லை தாத்தா அவ வீட்டுக்கு போயிட்டா”

“என்ன பாப்பா முகம் நல்லா சோர்ந்து போய் இருக்கு உடம்புக்கு என்னவும் செய்யுதா?” முத்து தாத்தாவின் கேள்வியில் சட்டென்று தன் முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டவள்

“இ.. இல்லை தாத்தா ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்தேன் இல்லையா அது தான் கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான் நான் ரூமுக்கு போறேன்” அவரது முகத்தை நிமிர்ந்தும் பாராமல் தன் நெற்றியை நீவி விட்டபடியே வீட்டிற்குள் சென்று விட அவரோ யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

காலையில் அந்த மலை உச்சியின் மீது நின்று சூரிய உதயத்தைப் பார்த்த போது தன்னை சுற்றி இந்த ஒரு வாரகாலமாக நடந்த எல்லா விடயங்களும் பறந்து போய் விட்டது என்று எண்ணி இருந்தவள் இப்போது அந்த பெயர் தெரியாத நபரை சந்தித்த பிறகு பல வாரங்களுக்கான பிரச்சினை ஒன்றாக சேர்ந்து வந்தது போல் இம்சையாக உணர்ந்தாள்.

தன்னறைக்குள் நுழைந்து கொண்ட இழையினி தன் தலையை பிடித்து கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த பெயர் தெரியாத நபரைப் பற்றியும், அவன் இறுதியாக தனக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூறி விட்டு சென்ற ‘கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம்’ என்ற வாசகத்தைப் பற்றியுமே நினைத்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவளது தொலைபேசி சிணுங்கி தன் இருப்பையும் அவளுக்கு நினைவு படுத்தியது.

திரையில் ஒளிர்ந்த மதி என்ற பெயரைப் பார்த்ததும் அவளது புருவங்கள் சலிப்போடு சுருங்கவே அந்த போனை தன் கையில் எடுத்தவள் சிறிது நேரம் அந்த போனையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

இரண்டு முறை முற்றாக அந்த தொலைபேசி அடித்து முடிந்த பின்பும் அவள் அந்த அழைப்பை எடுக்காமல் அமர்ந்திருக்க
“பாப்பா! பாப்பா!” முத்து தாத்தாவின் குரலில் தன் சிந்தனை கலைந்தவள் மெல்ல எழுந்து சென்று கதவைத் திறக்க புன்னகையுடன் ஒரு டம்ளரை அவளின் புறமாக நீட்டினார்.

“என்ன தாத்தா இது?”

“பிரயாணம் செஞ்சு வந்த களைப்பாக இருக்குன்னு சொன்னலே பாப்பா அது தான் இஞ்சி ப்ளேன்டீ ஊத்திட்டு வந்தேன் இதைக் குடிச்சா உடம்புக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் இந்தா பாப்பா” சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அவரது முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் வந்திருந்தும் தனக்காக உடனே சிந்தித்து வேலை செய்து வந்தவரைக் கண்கள் கலங்க பார்த்தவள் அவர் நீட்டிய டம்ளரை வாங்கி கொள்ள அவரும் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இந்த பாசமும் அரவணைப்பும் தானே தன் மனதில் இருந்த சோகங்களை எல்லாம் மறக்க செய்து இத்தனை நாட்களாக தன்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து கொண்டவள் மீண்டும் தான் இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவர் கொடுத்து விட்டு சென்ற டீயில் ஒரு மிடறைக் குடிக்க அதில் இருந்த இஞ்சியின் காரமும், சக்கரையின் இனிப்பும் அவள் மனதுக்குப் தெம்பை அளித்தது போல இருக்கவே கண்களை மூடி அந்த தருணத்தை ஆழ்ந்து ரசித்து கொண்டிருக்கையில் சரியாக அவளது தொலைபேசி மீண்டும் அடிக்க ஆரம்பித்தது.

இம்முறை அந்த அழைப்பை தவிர்க்காமல் தன் கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்து விட்டு அந்த அழைப்பை அவள் எடுக்க மறுபுறம் ஒலித்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் சட்டென்று தன் தொலைபேசியை அணைத்து தூக்கி போட அது அங்கிருந்த பஞ்சு மெத்தையில் இழையினியின் நிம்மதியையும் தன்னோடு இழுத்து கொண்டு போய் தஞ்சம் கொண்டது…