TholilSaayaVaa4

4

காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் பொதுவாகப் பேசத்துவங்கினர், இரண்டு மூன்று நாட்களாகத் தன்னை துளைத்துக்கொண்டிருந்த கேள்வியை அடக்க முடியாமல் அவனிடம் கேட்கத் துணிந்தாள்.

“பாஸ் கேக்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது?”

“அதான் என் பெயரை சொல்லிட்டேனே, இன்னும் என்ன பாஸ் ?”

“பாஸ்ன்னு கூப்பிட பிடிச்சுருக்கு, இப்போ பாத்தா நீங்க நெஜமாவே பாஸ்” சிரித்தவள் “தோணும் போதெல்லாம் பைரவ், மத்தவங்க முன்னாடி பாஸ், சரிவா?”

“ஏன் அப்படியோ?”

“ஆபீஸ்ல மரியாதையா இருக்காதே. ஆபீஸ் கலாச்சாரம் பெயரைச் சொல்லி கூப்பிடறதுன்னாலும்… வயசு?”

“ஹேய் ஆழாக்கு! என்ன பாத்தா வயசானவனா இருக்கா?” அவன் முறைக்க

“அப்படியா சொன்னேன், என்னைவிட பெரியவங்க தானே?”

“ஆமா ரொம்ப பெரியவன், குறைந்தபட்சம் ஒரு அடியாவது”, சிரித்தவனை, முடிந்தமட்டும் முறைத்தாள்

சிரித்தவனோ “சரி சரி கேளு…””

“கோவிச்சுக்க கூடாது…” தயங்கினாள்

“நீ மொதல்ல கேளு”

“மத்தவங்க கிட்ட நீங்க ரொம்ப கண்டிப்பா இருக்கீங்க. என் கிட்ட மட்டும் வேற மாதிரி …ஒருவேளை நீங்க என்னை…” வார்த்தை வராமல் முரண்டு பிடிக்க

அவனோ இறுகிய முகத்துடன், “லவ் பணறேனான்னு கேக்கறியா?” அவளைக் கேள்வியாகப் பார்க்க

மௌனமாக அவள் தயக்கத்துடன் தலையசைக்க, அவனோ உரக்கச் சிரிக்கத் துவங்கினான்.

அவன் சிரிப்பைப் புரிந்து கொள்ளமுடியாதவளில் மனம் பயத்தில், தாறுமாறாகத் துடிக்க அவனையே மிரட்சியுடன் பார்த்திருந்தாள். வெகுநேரம் சிரித்தவன்

“என்னைப் பார்த்து இப்படி கேட்பேன்னு நினைக்கவே இல்ல.” மீண்டும் சிரித்தவன், தனக்குத்தானே

“தேவயாடா உணக்கிது ?” சொல்லிக்கொண்டு விடாது சிரிக்க

“சாரி” சங்கடமாக உணர்ந்தவள் சாலையின் புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்

“சேச்சே பரவால்ல” என்றவன், சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு,

“கவல படாதே ஆழாக்கு. நான் உன்கிட்ட நட்பாகத்தான் பழகினேன். என் பேச்சோ, நான் நடந்துகிட்ட விதமோ உன்ன அப்படி நினைக்க வச்சிருந்தா…மன்னிச்சுடு மா” புன்னகையுடன் ஆரம்பித்தவன் வருத்தமாய் முடித்தான்

அவன் மன்னிப்பை வேண்டப் பதறியவள், “ஐயோ இல்ல…” என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்

“நீ கேட்டியே எதுக்கு கம்பனிலேயே சாப்பிடாம ஹோட்டல் போகணும்னு…”

“…”

“ஏன்னா நான் யார் கூடவும் சேர்ந்து லன்ச் சாப்பிட்டதில்லை, அப்படி இருக்கும்போது உன்கூட மட்டும் சாப்டா ஏதாவது பேச்சுவருமோன்னு தயங்கினேன்”

“சாரி…” தலைகவிழ்ந்தாள்

“போதும்மா உன் சாரி! ம்ம் எங்க விட்டேன் ? எஸ்!

எனக்கு ஒண்ணுமில்ல நீ சின்னப்பொண்ணு அதுவும் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்க.

நானும் உங்க எல்லார் மாதிரி தானே? எனக்கு மட்டும் வேலை செய்யுற எடத்துல நண்பர்களோட பேசி பழக ஆசை இருக்காதா? முதலாளி பையன்னா எனக்கென்ன கொம்பா மொளைச்சுருக்கு?

கம்பெனிக்கு வந்த புதுசுல சிலபேர் தானா வந்து நண்பர்களானாங்க, நானும் உண்மையா பழகினேன் ஆனா அவங்க எதிர்பார்த்தது என் நட்பை இல்லை என் பதவியை வச்சு ஆதாயத்தை” சிலநொடி மௌனமாக இருந்தவன் தானே தொடர்ந்தான்,

“சில பல சந்தர்ப்பங்களுக்கு அப்புறம்தான் கண்டிப்பென்ற பாதுகாப்பு வளையத்தை அமைச்சுக்கிட்டேன். பலநாள் இறுக்கமா இருந்த என் வாழ்க்கைல என்னை பாதிச்சது நீதான். உன்கூட பேசும்போதெல்லாம் எதோ காலேஜ்ல இருக்க பீல் வருது. ஸ்ட்ரெஸ் இருந்த இடம் தெரியாம ஓடுது. உன் பேச்சைக் கேட்டா ஸ்டர்ஸ்க்கே பயம்போல” சிரித்துக்கொண்டான்

மாயாவோ அவன் சொன்னதை நினைத்து வருத்தத்திலிருந்ததால், அவன் தப்பினான்.

அவனே மீண்டும் தொடர்ந்தான், “ஏனோ அன்னிக்கி மீட்டிங்குல என்கிட்ட நீ பதிலுக்குப் பதில் பேசினதுல இருந்த குழந்தைத் தனமோ, இல்லை நான் ப்ராஜெக்ட் ரிஜெக்ட் செய்வேன்னு சொல்லியும் குழையாம தில்லா என்கிட்ட பேசுறதோ, ஒரே வாக்கியத்தை நீங்க ன்னு ஆரம்பிச்சு அட புடான்னு முடிகிற ஸ்டைலோ, எனக்கே தெரியலை, உன்னை மாதிரி ஒரு பிரென்ட் வேணும்னு ஆசை வந்தது. அதுக்குதான் இப்படியொரு சாக்க வச்சு பேச்சை வளர்த்தேன்.

ஆனா தாயே இதெல்லாம் என்மேல காதல் பித்துபிடிச்சு சுத்துற ரோமியோன்ற உணர்வை கொடுக்கும்னு நினைக்கலை” என்றவன் அலுவலக பார்க்கிங் தளத்தில் காரை நிறுத்தினான்.

“சாரி பாஸ் ! நீங்க எவளோ நல்லதா யோசிச்சுருக்கீங்க, நான் அல்பமா யோசிச்சுருக்கேன். மன்னிச்சுடுங்க” அவள் வருந்த

“ஹேய் எனக்கு வேண்டியது உன் நட்புதான். சாரி இல்ல. பிரெண்ட்ஸ்?” வலது கரத்தை அன்பாய் நீட்டினான், அவன் கையை குலுக்கியவள்

“பிரெண்ட்ஸ்” என்று முகம்மலர “ஆனா…”

“என்ன ஆனா ?”

“நீங்க CEO, நான் இங்க…எப்படி…நான் நிறைய பேசுவேன் பாஸ்…” அவள் துவங்க

“அதுனாலதானே நானும் உன்கிட்ட பழக நெனச்சேன். என்னை CEO வா இந்த கட்டிடத்துக்குள்ள மட்டும் பாரு, மத்தபடி உன் நண்பனா பாரு. முடியுமா ?” காரை லாக் செய்தவன் அவளோடு நடக்க

“உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே, ஆனா ஒன்னு தோணுது சொல்லவா ?”

“பிரென்ட்ன்னு ஏத்துக்கிட்டா சொல்லு, இல்லை வேண்டாம்” என்றவன் லிஃப்டை அழைக்கும் பொத்தானை அழுத்த

“மத்தவங்க முன்னாடி நீங்க வாங்க போங்கன்னு பேசறேன் தனியா இருக்கும்போது நீ வா போன்னு வரலாம்.தப்பா எடுத்துக்க கூடாது” அவள் கொடுத்த கால் நொடி நிறுத்தத்தில் தன்னிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறாளென்று நினைத்தவன் பதில் தர எத்தனிக்க, மாயா துவங்கிவிட்டாள்,

“எனக்கு சாப்பிட பிடிக்கும், ஆம்பளைங்க முன்னாடி ஸ்டைலா காட்டிக்க கம்மியா சாப்பிட்டு தனியா போய் சாப்பிட தெரியாது, எப்படி சாப்பாடோ அதேபோல என்னால பேசாமலும் இருக்க முடியாது. இதெல்லாம் உங்களுக்கு ஓகேவா பாஸ்?” அவள் நிமிர

முகமெங்கும் புன்னகையுடன் இருந்த பைரவ், “எதோ தெரியாததை சொல்லபோறேன்னு பாத்தா…” என்று சிரித்தவன்,

“நீ நீயா இரு, எனக்காக மாறினாதான் எனக்கு கோவமா வரும், நான் நாணாதான் இருக்கபோறேன். எனக்கும் பேச பிடிக்கும் ஆனா நீ பேசிக்கேட்க பிடிச்சுருக்கு, நான் கொஞ்சம் பொசஸிவ், நீ என் பிரென்ட் அதுனால என்னைத்தாண்டி தான் உன்னை எதுவும் நெருங்கனும்னு நினைப்பேன், அதை நீ சகிக்கணும்.

வேலைல கண்டிப்பா தான் இருப்பேன் அங்க நட்பு பாராட்டமாட்டேன். கம்பெனி வேலை, இங்க வேலைபண்ற ஒவ்வொரு எம்பிளாய்ஸ் வாழக்கை. சோ நட்பு வேற வேலை வேற. மத்தபடி நீ பிரீயா இரு.சரியா”

“ஓகே”

லிஃப்ட் வர அதில் ஏறினர், உள்ளே இருந்த சிலர் பைரவை பார்த்து மரியாதையுடன் புன்னகைக்க, லேசான தலையசைப்புடன் நிமிர்ந்து மௌனமாக நின்றுகொண்டான்.

‘ஆச்சு சார் டெரர் மோட் போயாச்சு’ உணர்ந்தவள் அதன் பிறகு அவனிடம் லிஃபிட்டிற்குள் பேசாமல், அதுவரை பேசியதை மனதில் அசைபோட்டாள்,

கள்ளம் இல்லாமல் பழகும் அவனை எண்ணி வியந்தவள், அவனை வைத்து லாபமடைய நட்பைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றவர்களை வெறுத்தாள்.

‘இவன போயி எப்படி ஏமாத்த மண்சுவருதோ? நீங்க எல்லாரும் யாரோ எவரோ, எங்க இருந்தாலும் எல்லாருக்கும் பேதி புடுங்க!’ மனதுள் சபித்துக்கொண்டே தன் இருக்கைக்குச் சென்றாள்.

அவளுக்காக ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்த நம்பர்கள்,

பத்மா “என்னாச்சு?”

வினோத் “ப்ரொபோஸ் தானே பண்ணார்?”

வெங்கட் “ப்ராஜெக்ட் பத்திரமா இருக்கா?”

மூவருக்கும் பதில் தராமல், வேண்டுமென்றே ஏப்பம் விட்டவள், கணினியின் முன்பு அமர,

“ஓவரா சீன போடறே, சரி இல்ல” வினோத் முறைக்க

“கா விட்டே?” நக்கலாகப் பார்த்தாள்,

“பழம்…பழம்…” வினோத் இளிக்க

“அப்படி வா வழிக்கு…”

“இப்போ சொல்லு ப்ரொபோஸ் தானே?”

“வினோத்! அவர் அப்படிப் பட்டவர் இல்ல. சோ ஸ்வீட் தெரியுமா?”

வெங்கட்டோ “இப்போ அதுவா முக்கியம்? ப்ராஜெக்ட் என்னாச்சு? எல்லாம் சரி பண்ணியா இல்லையா?” வேலையிலேயே குறியாக இருந்தான்.

கட்டை விரலை உயர்த்தி காட்டியவள், “சந்தோஷமா?” என்று கேட்க

“ம்ம். இனிமே புதுசா வில்லங்கத்தை இழுத்துட்டு வராதே” சென்றுவிட்டான்

“அவன் கெடக்கான் நீ சொல்லு என்னாச்சு? எதானா கோவப்பட்டாரா?” பத்மா கேட்க

“அதெல்லாம் இல்ல நாங்க பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்”

“அப்பாடா இப்போ தான் நிம்மதி” என்று வேலையே தொடர்ந்தாள் பத்மா

அதன் பிறகு நண்பர்கள் அவளை எதுவும் கேட்கவில்லை.

அனைத்தையும் போல அன்று நடந்தவற்றையும் வீட்டினருடன் பகிர்ந்து கொண்டவள் மனம் ஏனோ வாடிவிட,

கிருஷ்ணன் “அவன் அப்படி இருக்கறது நல்லதுதான், அதான் நிதர்சனம். உன்மையான நட்பெல்லாம் இப்போ அரிதான விஷயம். அதிருஷ்டம் இருந்ததான் எதையும் எதிர்பார்க்காத நல்ல நண்பன் கூட கிடைப்பான்.”

“ஏனோ பைரவ் சொல்ல சொல்ல பாவமா இருந்துது. அதான் ஃபீல் ஆயிட்டேன்”

“முடிஞ்சா நீ உண்மையான பிரெண்டா இரு, வேற எதுவும் உன்னால இதுல பண்ண முடியாது” மாதவன் சொல்ல

“ம்ம்” என்றவள், மனம் முழுவதும் பைரவ் பற்றிய எண்ணங்களே.

அவன் வாழ்க்கையில் என்றும் உண்மையான தோழியாய் இருக்க முடிவெடுத்தவள்.

அன்றுமுதல் அவனே வேலைச் சுமை காரணமாக, அவளிடம் பேச முடியாமல் இருந்தாலும், தாமாக அவ்வப்போது அவனைப் பார்க்கச் செல்வதை, குறைந்தது மெசேஜாவது செய்து பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

அவன் இரவு கண்டிப்பாக மன இறுக்கத்துடன் தூங்கச் செல்லாமல் பார்த்துக்கொள்ளத் துவங்கினாள்.

அவனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் தன் நேரத்தைச் செலவிட்டான். மாயாவின் பெற்றோரும் அவனை குடும்பத்தில் ஒரு உறுப்பினர்போல் ஏற்றுக்கொண்டனர். முடிந்தபோதெல்லாம் கார்ட்டூனை வடிவமைப்பதிலும், அனிமேஷனிலும் இருக்கும் நுணுக்கங்களை அவளுக்குக் கற்றுக்கொடுத்தான்.

***

காலம் சக்கரத்தின் சுழற்சியில் நாட்கள் மாதங்களாக உருண்டோட, மாயா பைரவ் இருவரின் நட்பும் வளர்ந்துகொண்டே இருந்தது.

மாயா டிசைன் செய்திருந்த, எட்வின் யானை தேர்வுசெய்யப்பட்டு அடுத்த கட்ட வேலைக்குச் சென்றுவிட்டதைக் கொண்டாடக் குழுவாக மதிய உணவிற்கு ஹோட்டல் செல்ல திட்டம் தீட்டியிருந்தனர்.

பைரவிற்கு கால் செய்து அவனையும் தங்களுடன் வரும்படி அழைத்தாள் மாயா,

“இல்லடா, நீங்க போயிட்டுவாங்க. நான் வந்தாலே அவங்க இயல்பா இருக்க முடியாம கஷ்டபட்ரங்களோனு தோணுது. நான் ஒன்னும் தப்பா நினைக்கலை. இது உனக்கு கெடச்ச முதல் வெற்றி. செலிபிரேட் பண்ணு ஓடு”

“நோ! நீங்க வராட்டி நானும் போகல”

“ஆழாக்கு படுத்தாதே சொன்னா கேளு, நீ போய்ட்டுவா, வேணும்னா எனக்கு ஒரு ஸ்வீட் வாங்கிட்டுவா”

“இப்போ பிசியா இருக்கீங்களா? மீட்டிங்?”

“இல்லையே ஏண்டா?”

“சரி அப்போ நாங்க கீழே வெயிட் பண்றோம். வந்து வந்து சேருங்க. பை” அழைப்பைத் துண்டித்தவள் நண்பர்களுடன் கம்பெனியின் வாயிலில் காத்திருக்க

பைரவ் அழைத்தான், “ஹேய் ஆழாக்கு ப்ளீஸ்டா. நீ போயிட்டு வாயேன்”

“ஒரு நிமிஷம் பாஸ்” நண்பர்களிடம் முன்னே செல்லச் சொன்னவள், கொஞ்சம் தள்ளிச்சென்று அருகில் யாரும் இல்லாததை ஊர்ஜித படுத்திக்கொண்டு,

“இப்போ நீ வர, இல்ல நான் உன்கிட்ட முதல்ல சொல்ல நினைக்கிற முக்கியமான விஷயத்தை அவங்க கிட்ட சொல்ல வேண்டி வரும். பரவால்லயா?” மிரட்டினாள்

அவன் அறமாக “என்ன விஷயம்?” என்று கேட்க,

“கைல காசு வாயில தோசை. 5 நிமிஷம் தான் டைம். என் ஸ்கூட்டில வர.”

“ப்ளீஸ்…” அவன் பேச்சு காற்றில் கரைந்தது, அவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

“படுத்தல்…” புன்னகைத்தவாறே புறப்பட்டான் பைரவ்.

ஸ்கூட்டியுடன் வாயில் காத்திருந்த மாயா, அவன் வருவதைக் கண்டதும் சற்று தொலைவில் சென்று காத்திருக்க, அருகில் வந்த பைரவோ,

“என்ன ஆழாக்கு இப்படி டார்ச்சர் செய்றே. எவனாது பாத்தா ஆஃபீஸ்ல வேலை ஓடுதோ இல்லையோ, கட்டாயம் நம்ம மேட்டர் ஓடும்!” கிண்டலாய் சொல்ல

“இந்தா ஹெல்மெட்டை போடு, எவனுக்கும் தெரியாது. சீக்ரம், பசி தாங்கலை” அவனை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

ஆண்களுக்கே உரித்தான பழக்கத்தைப் போல், பைரவும் சாலையில் வேகமாக வாகனத்தை ஓட்டும் பழக்கமுடையவன். புயலென பறப்பவனுக்கு, மிகவும் மிதமான வேகத்தில் மாயாவுடனான ஸ்கூட்டி பயணம் மிகவும் புதுமையாக இருந்தது.

மாயாவின் தோளைப் பற்றியவன், “என்னடா நீ ஓட்ட சொன்னா உருட்டிக்கிட்டு இருக்க?” அவன் அலுத்துக்கொள்ள

“ஏன் பாஸ்?” அவள் கேட்க

“நடக்குறவனே ஓவர்டேக் பண்ணி போயிடுவான் போல இருக்குடா. ப்ளீஸ் கொஞ்சம் ஸ்பீடா போ. இல்லைன்னா லஞ்சுக்கு கிளம்பி டின்னருக்கு தான் போய் சேருவோம்” அவன் கிண்டலாகச் சிரிக்க,

கோவமாக வேகமெடுத்தவள் ரோட்டிலிருந்த ஒரு பள்ளத்தையும் விட்டுவைக்கவில்லை. உணவகத்தில் வண்டியை நிறுத்தி ஒய்யாரமாய் இறங்கியவள், “எப்புடி ஸ்பீடு?” என்று பைரவை பார்க்க,

அவனோ தடுமாறுவதைப் போன்ற பாவனையுடன், “சோறு போடறேன்னு கூட்டிட்டு வந்து கொல்ல பாக்குற? ஐயோ எங்கம்மாக்கு நான் ஒரே புள்ளையாச்சே. கண்ணெல்லாம் இருட்டுதே…நான் இன்னும் உயில் கூட எழுதலையே…” நடிக்க

இதை எதிர்பாராத மாயா, “பாஸ் ப்ளீஸ்! எல்லாரும் பாக்குறாங்க எதுக்கு இப்படி மானத்தை வாங்குற. எனக்கு தலைவலிக்குது”

“தலை ஆமா தலை” எனத் தலையை பற்றிக்கொண்டவன் “ஐயோ சுத்துதே! செத்துப்போன பாட்டி தெரியுறாங்களே!” அவன் தொடர

“வாய்மூடிக்கிட்டு வாடா…” அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவள் நடக்க, சிரித்துக்கொண்டே நடந்தவன்

“காவு கொடுக்க போற ஆட்டை இழுத்துட்டு போறமாதிரியே இழுத்துட்டு போறியே! சம்பளம் கொடுக்குற பாஸ்டி நான்…யாரான என்னை காப்பாத்துங்களேன்…” அவன் புலம்பியபடி நடக்க, சிலர் அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி கடந்துசெல்ல

“மவனே இப்போவே கொலகாண்டுல இருக்கேன். சைலென்ட்டா வா அப்புறம் நான் விஷயத்தை சொல்லமாட்டேன்” அவள் எச்சரிக்கவும், சிரித்தபடியே அவளுடன் சென்றான்.

அதுவரை எதோ பேசி சிரித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பைரவை கண்டதும், அமைதியாகிவிட , பைரவ் மிகவும் சங்கடமாக உணர்ந்தான்

‘இதுக்குதான் நான் வரமட்டேன்னேன். ப்ச்ச் இப்போ என்னால இவங்க உர்ர்ன்னு இருக்க போறாங்க’ அனைவரையும் பார்த்து ஸ்நேக புன்னகையை உதிர்த்தவன், மாயாவின் பக்கத்தில் அமர்ந்தான்.

சில நொடிகள் அமைதியாகவே கழிந்தது, அனைவரும் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருக்க

“இப்படி ஃபோனை பார்த்து கிட்டு தின்ன ஹோட்டலுக்கு எதுக்கு வரணும்? பேசலாமே” மாயா சொல்ல

“ரைட்!” உடனே மேஜையின் மேல் தன் கைப்பேசியை வைத்துவிட்டான் பைரபவ்,

அவன் செயலில் பிரமித்தவர்கள், தங்கள் கைப்பேசிகளை மேஜையில் வைத்தனர்.

உணவை ஆர்டர் செய்தவர்கள் என்ன பேசுவதென்று விழிக்க, மாயா நிலைமையைச் சமாளிக்கத் தானே துவங்கினாள்.

“மொதல்ல யாரு ஃஃபோனை எடுக்குறீங்களோ அவங்கதான் இன்னிக்கி பில் காட்டணும்”

“கிழிஞ்சுது” வினோத் அலுத்துக்கொள்ள

“ஐயோ கிளைன்ட் கால் வந்தா?” வெங்கட் பதற

“ஹே ஆழாக்கு! நானே வேணும்னாலும் பில் கட்டிடறேன் எதுக்கு இந்த விளையாட்டு?” பைரவ் சிரிக்க, அவன் கைப்பேசியை மட்டும் எடுத்து தன் கைப்பையில் வைத்துக்கொண்டவள்,

“உங்களை நான் ஆட்டத்துல சேர்த்துக்கவே இல்லையே! நீங்கக் கேட்டாலும் சாப்பிட்டு முடிகிற வரை ஃபோன் ஹும்ஹும்!”

“விளையாடாதே டா ஃபோனை கொடு”

“முடியாது!”

“ச்சே கொடு ப்ளீஸ் நான் தான் எடுக்கமாட்டேன் சொன்னேன்ல?”

“மு…டி…யா…து…” நாக்கை துருத்தி அவள் போக்கு காட்ட

அவர்கள் நட்பைத் தெரிந்தவர்கள் தான் என்றாலும் இதுவரை நேரில் பெரிதாய் கவனித்ததில்லை நண்பர்கள். மூவரும் வியப்புடன் பார்த்திருக்க பைரவ் அவர்களைத் துணைக்கு அழைத்தான்

“ப்ளீஸ் யாரான கொஞ்சம் சொல்லுங்களேன். உங்க பிரென்ட் தானே?”

வினோத் “உங்க பிரெண்டும் கூடத்தானே…” அவன் முடிக்கும் முன்னே பத்மா அவனைப் பார்த்து ஜாடையாய் தலை அசைக்க

பைரவோ போலியான அலுப்புடன் “நான் சொன்னா எங்க கேக்கறா? இந்த மொத்த கம்பெனியையும் சமாளிக்கிறதும், இவளைச் சமாளிக்கிறதும் ஒன்னும். இதுக்கே தனியா ட்ரெயினிங் வேணும் போல இருக்கே!” வருந்த

“என்ன பாஸ் இதுக்கே நீங்க அலுத்துக்குறீங்க. என்னை வாழக்கை பூரா வச்சு சமாளிக்க ஒரு இளிச்சவாயன் வரபோறானே. அவன் எங்க போய் புலம்ப போரானோ” பேச்சுவாக்கில் விஷயத்தைச் சொன்னாள்.

“என்ன? என்ன?” பைரவ் அதிர்ச்சியாகப் பார்க்க

“என்னடி சொல்றே? “ பத்மா வாய்பிளக்க

“என்னை பொண்ணு பாக்க வராங்க. அதான் சொன்னேன்” தோளைக் குலுக்கினாள்.

“வாவ்! காங்கிராட்ஸ்!” சந்தோஷமாகச் சொன்னவன் அவள் கையை குலுக்கி வாழ்த்தி அனைவருக்கும் இனிப்பை ஆர்டர் செய்தான்.

நண்பர்களும் வாழ்த்த, யோசனையாய் இருந்த பைரவ்,

“பையன் பேரென்ன? எந்த ஊரு? என்ன வேலை?….” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்

“அவன் பேர் அவினாஷ், நம்மளை மாதிரியே கம்ப்யூட்டர் பொட்டியை தட்டுறவன்தான். சென்னைதான் வேற எதுவும் தெரியாது. அடுத்தவாரம் பொண்ணு பாக்க வராங்க.”

“எப்படி இவங்க சம்மந்தம்?” பைரவின் கேள்விகள் முடிவதாய் இல்லை

“சொந்தகாரங்க சொல்லித்தான். நெஜம்மா அவனை பத்தி எதுவும் தெரியாது பாஸ்” அவள் கெஞ்ச அமைதியானவன் மனமோ ஆயிரம் கேள்விகளை உற்பத்தி செய்தது.

மெல்ல மெல்ல அவனின் அன்பான மறுமுகத்தைப் பார்த்த நண்பர்கள் மூவரும் கொஞ்சம் பயம் விலகி பைரவுடன் நட்புடன் பழக முயற்சித்தனர்.

முதல் நாள் இதுவே போதுமென நினைத்தவள், அதற்குமேல் அவர்களைப் பேசவைக்க முயலவில்லை. உணவிற்கான பணத்தைத் தந்தவள் அனைவருடன் புறப்பட

“ஆழாக்கு! சாவியை குடு, சாப்பிட்டுவேற இருக்கேன், நீ ஓட்டினா வாந்திதான் எடுப்பேன்.” அவளை வம்பிழுத்தவன் ஸ்கூட்டி சாவியை வாங்கிக்கொண்டான்.

“நாங்க முன்னாடி போறோம், நீங்க வாங்க” மற்றவர்களிடம் சொன்னவன் அவளை அழைத்துக்கொண்டு புறப்பட

அதிசயமாய் அவர்கள் செல்வதைப் பார்த்தபடி சிலநொடி நின்றிருந்தவர்கள் தங்களுக்குள் எதோ வாதித்துக்கொண்டு புறப்பட்டனர்.

“எங்க போறீங்க? ஆபீஸ் அந்தப்பக்கம்” அவன் தோளைத் தட்டி அவள் சொல்ல

“மூடிட்டு வா!” அவன் கடுகடுக்க,

“என்னவோ பண்ணு.” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

நேராக அவளை ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவன்,

“சூப்பரா ஒரு பட்டுப்புடவை எடு. அப்படியே பையன் அசந்து போகணும்” முன்னே நடக்க

“இதுக்குதான் இப்படி விழுந்துடுச்சுக்கிட்டு வந்தியா? வேஸ்ட்!” அவள் சொல்ல, திரும்பியவன்

“என்ன?” புருவம் சுருக்க,

“எனக்கு புடவையே கட்ட தெரியாது, இதுல பட்டுப் புடவையாம்…” மறுப்பாகத் தலையசைக்க

“அதெல்லாம் அம்மா கட்டி விடுவாங்க நான் ஆண்டி கிட்ட பேசிக்கறேன். நீ வந்து பிடிச்சதை எடு போதும்”

“ஹெலோ! ஹோட்டலுக்கே என் பைசா ஃபனால். இனி சம்பளம் வந்தா தான் உண்டு” அவள் சொல்லவும்

“உன்னையா வாங்க சொன்னேன்? வாங்கிக்க சொன்னேன். இது என் பரிசுன்னு வச்சுக்கோ” பட்டுப்புடவை தளத்தை அடித்தார்கள்

“சொன்னா கேளுங்க பாஸ் பைசாவை வேஸ்ட் பணந்தீங்க.பொண்ணு பார்க்க யாரான கிபிட் கொடுப்பங்களா?”

“மூடிட்டு எடு” உத்தரவிட்டான், அவனிடம் வாதிட்டு ஜெயிக்க முடியாதென்பதை நன்கு அறிந்திருந்தாள், அதனால் விட்டுக்கொடுத்தாள்.

அவள் புடவைகளைப் பார்க்கத் துவங்கினாள், அவன் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஒவ்வொரு புடைவையாக அவள் எடுக்க, ஒவ்வொன்றையும் குறைசொல்லி வேண்டுமென்றான்.

எடுத்து எடுத்து களைத்தவள்,

“சாப்பிட்டதெல்லாம் ஜெரிச்சுப்போச்சு சாமி. நீயே புடவை செலக்ட் பண்ணித்தா. எனக்கு பேட்டரி தீர்ந்து போச்சு” பெருமூச்சு விட்டபடி நாற்காலியில் அமர்ந்துவிட

அவனோ தளமெங்கும் சுற்றி கணக்கில்லா புடவைகளை புரட்டி போட்டான்.
பல நிமிட போராட்டங்களுக்கு பிறகு அழகிய பட்டுபுடவையுடன் வந்தவன்,

“இது ஓகேவா?” என்று கேட்க

“சூப்பரா இருக்கு பாஸ் கலக்கறீங்க! ஆனா என்ன…என் கலருக்கு இந்த புடவை போட்டா கேவலமா இருக்கும்” தன் மாநிறத்திற்கு பொருந்தாதென்று அதை ஏற்க மறுத்தாள்

“பாக்குற எனக்கு தெரியும் எது சூட் ஆகும் ஆகாதுன்னு. இதை சுத்தி காட்ட சொல்லு ஓடு” அவன் விரட்ட, வேண்டா வெறுப்பாய் தன் ஜீன்ஸிற்கு மேல் புடவை கட்ட சொல்லி கடைப்பெண்ணை கேட்டுக்கொண்டாள்.

மிகவும் நேர்த்தியாக சில நொடிகளில் அப்பெண் அவளுக்கு கட்டிவிட தன்னை கண்ணாடியில் பார்த்தவள், அது தான் தானா என்று வியக்க

“உங்க ஆளு செலெக்ட்ஷன் சூப்பர் மேடம்” என்ற அந்த பெண் ட்ரையல் அரை கதவை திறக்க,

புடவை கட்டி பழக்கமில்லாதவள் தள்ளாடிய படி மெதுவாக வெளியே சென்றாள்

அவள் வரவை எதிர்பார்த்திருந்த பைரவ், அவளை புடவையில் பார்த்த நொடியே எழுந்து நின்றுவிட

அவளோ பயத்துடன் மெல்ல அவனை பார்த்து, ஜாடையாய் “எப்படி இருக்கேன்? பூசணிக்கா மாதிரிதானே?” என்று கேட்க

எதுவும் பேசாது அவளை தன் கைபேசியில் படமெடுத்து கொண்டவன்,
“அமேசிங்! செம்மயா இருக்கே. ஆழாக்கு இப்போ அழகா இருக்கே! வாவ்! பையன் கண்டிப்பா பார்த்தவுடனே உன் பின்னாலயே வரப்போறான்”

“எதுக்கு கல்லெடுத்து அடிக்கவா?” அவன் சிரிக்க

“சீ. நெஜம்மா அழகா இருக்கடா. அதுவும் வெட்கப்பட்டு தரையை பார்த்துகிட்டு நீ நடந்துவந்த பாரு! ஆஹா ஆஹா. நானே உன்னை ஒரு செகண்ட் சைட் அடிச்சேன்னா பாரேன்!” அவன் சிரிக்க

“அதென்ன நீயே? இவ்ளோ தற்பெருமை ஆகாது பாஸ். பாக்க நல்லா அழகாத்தான் இருக்கே ஆனாலும் உங்க பெருமையை நீங்களே போடுறது டூ மச். நான் ஒன்னும் வெட்கப்பட்டு நடக்கலை, விழுந்து தொலைச்சுட போறேன்னு கீழ பாத்துகிட்டே நடந்தேன்”

சிரித்தவன், “சரி…சரி…உனக்கு பிடிச்சுருக்கா? வாங்கிக்கரியா? வாங்கிக்கோயேன் ப்ளீஸ்” எனோ அவன் கேட்ட விதமோ, அவன் குரலோ, அவன் கண்களோ எதோ ஒன்று அவளை சம்மதமாய் தலையசைக்க வைத்தது.

இரவு பெற்றோர்களிடம் புடவையை காட்டி, அன்று நடந்ததை ஒப்பித்தாள் மாயா.

“பாவம் நீ ஒரு பிரென்ட் போதும் அவன் ஜெப் காலியாக” மாதவன் கிண்டல் செய்ய

“தப்பு கண்ணா இவ்ளோ விலையுயர்ந்த பரிசெல்லாம் வாங்க கூடாது” கிருஷ்ணன் கண்களில் எனோ கவலை

“நான் சொன்னேன் அவன்தான் கேக்கல. விடுங்க அவனுக்கு கல்யாணம் நடக்கும் போது இதுக்கு ஈடா நானும் கிபிட் கொடுத்துக்குறேன்” என்று சமாதானம் சொன்னாள்.