NPG 12

NPG 12

கீதாஞ்சலி – 12

கண் முன் விரிந்திருந்த அந்த பிரம்மாண்டத்தை விழி விரித்துப் பார்த்திருந்தாள் அமிர்தா. ராகுலின் இல்லத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். முழுதாக இருள் கவிழ்ந்திராத அந்த மாலை வேளையிலும் ஜெகஜோதியாக ஒளி வீசிக் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தைப் பார்த்த பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது அமிர்தவர்ஷினிக்கு. படபடப்பைப் போக்கும் விதமாக மடியில் இருந்த குழந்தை நிரஞ்ஜலாவை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள்.

கார் போர்டிகோவை வந்து அடையும் வரை வழியில் இரு புறமும் இருந்த பூச்செடிகளோ செயற்கை நீர் வீழ்ச்சியோ எதுவுமே பெண்ணின் கருத்தைக் கவரவில்லை. ஏதோ தனக்கு சற்றும் சம்பந்தமில்லாத இடத்துக்கு வந்ததைப் போன்ற ஒரு உணர்வுதான் எழுந்தது அவளுக்குள். கார் நின்றதும்,

“ராகுல், அமிர்தா ரெண்டு பேரும் குழந்தைங்களை வைச்சுக்கிட்டு இங்கேயே இருங்கப்பா. நான் போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லி சத்யவதி மட்டும் காரிலிருந்து இறங்கினார்.

அதற்கு அவசியமே இல்லாதது போல் வாசலில் எல்லாமே தயாராக வைத்திருந்தார்கள் கமலாம்மாவும் சாந்தியும். சத்யவதி ஆச்சரியமாகப் பார்க்க,

“எல்லாம் ஃபோன்லயே சொல்லி ஏற்பாடு பண்ணிடோம்ல. உன் புள்ளயும் கொஞ்சம் விவரமானவன் தான்மா” என்றான் கௌஷிக்.

“அது ஒன்னுமில்ல சத்யாம்மா. சாரு கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டேன் அப்படின்னு உங்களுக்கு சிம்பாலிக்கா சொல்றாராமா” காரிலிருந்து இறங்கிக் கொண்டே ராகுல் தனது நண்பனைக் கேலி பேச,

“அது தான் எனக்கு நேத்தே தெரியுமே” என்றார் சத்யவதி.

“ஏன்… இல்ல ஏன் ங்குறேன்?” கௌஷிக் வரிந்து கட்டிக் கொண்டு தனது அன்னையிடம் பாய,

“நான் நேத்தே முடிவு பண்ணிட்டேன் டா. இதுக்கு மேலயும் உன்னைத் தனியா விட்டு வைச்சா இந்த சமுதாயத்துக்கு அதை விடப் பெரிய துரோகம் வேற கிடையாது. அதான் ஒரு புத்திசாலிப் பொண்ணா பார்த்து அவ கையில  உன்னை ஒப்படைச்சிடலாமின்னு முடிவே பண்ணிட்டேன்.” நொடித்துக் கொண்டார் சத்யவதி.

“ஆஹா எனக்குத் தெரியாம நேத்துத் தரமான சம்பவம் நடந்திருக்கும் போலயே! என்னம்மா அது?” என்று ராகுல் சத்யவதியிடம் வினவ,

“ஐ அம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட். சோ ப்ளீஸ்” வடிவேலுவைப் போலவே சொல்லி ராகுலை வீட்டிற்குள் செல்லுமாறு கையைக் காட்டினான் கௌஷிக்.

அவன் பாவனையில் தனை மறந்து சிரித்தவனாக அமிர்தாவின் பக்கம் வந்தான் ராகுல்ரவிவர்மன்.

சற்று உயரம் கூடுதலாக இருந்த அந்தக் காரிலிருந்து நிலாவையும் தூக்கிக் கொண்டு அமிர்தா இறங்குவதற்கு சற்று சிரமப்பட, இயல்பாகச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் இறங்குவதற்கும் கையை நீட்டினான் மெல்லிசைக்காரன்.

“இல்ல… பரவாயில்ல, நானே…” என்று சொல்லியபடி அமிர்தா காரின் கதவைப் பற்றிக் கொண்டே இறங்க முற்பட, கட்டியிருந்த புடவை அவளைக் கொஞ்சம் தடுமாற வைத்து ராகுலின் கைகளைப் பற்ற வைத்தது.

ஒரு கையால் குழந்தை நிலாவைத் தூக்கி வைத்துக் கொண்டு மறுகை அமிர்தாவின் ஒரு கையைப் பற்றியிருக்க, அமிர்தாவின் மற்றொரு கையோ தங்களுக்கு முன் நடுவில் நின்றிருந்த சந்தோஷின் தோளைச் சுற்றி அரவணைத்திருந்தது.

அவர்கள் ஒரே குடும்பமாக மாறி நின்றிருந்த காட்சி அவர்கள் மேல்  அக்கறை உள்ளவர்களை நெகிழச் செய்தது. சத்யவதி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே,

“சாந்தி வாம்மா, நீ வந்து ஆரத்தி எடு” என்றார். அவ்வப்பொழுது மட்டுமே சென்னை வந்தாலும் ராகுல் வீட்டில் நீண்ட நாட்களாகப் பணியாற்றுபவர்களிடம் ஓரளவுப் பழக்கம் இருந்தது சத்யவதிக்கு.

“என்னம்மா நீங்க… என்னைப் போய் இதெல்லாம் செய்ய சொல்றீங்களே? நான் எப்படிம்மா?” என்று சாந்தி தயங்க,

“ஏன் நீ ஆரத்தி எடுத்தா என்ன? அதெல்லாம் தாராளமா எடுக்கலாம். சும்மா பிகு பண்ணாம செய் சாந்தி” சத்யவதி அதட்டல் போல சொல்ல, கொஞ்சம் சங்கோஜத்துடனே ஆரத்தியைச் சுற்றினார் சாந்தி.

“சாந்தி அக்கா, இதான் சான்ஸ். எவ்வளவு வேணுமோ வாங்கிடுங்க. டேய் புது மாப்பிள்ளை ஆரத்தி எடுத்தா தட்டுல காசு போடணும். தெரியும்ல” என்றான் கௌஷிக்.

புன்னகையுடன் தட்டில் சில ஆயிரங்களை வைத்தான் ராகுல்.

“சாந்தி, நீ போய் அதை வாசல்ல ஊத்திட்டு வந்துடு. ராகுல், அமிர்தா வாங்கப்பா, உள்ளே வாங்க. அமிர்தா வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாம்மா” வீட்டின் பெரிய மனிதராய் அவர்களை வரவேற்றார் சத்யவதி.

வீட்டினுள் சென்ற கையோடு சந்தோஷ் நிரஞ்ஜலாவை அழைத்துக் கொண்டு செறுவிட்டான். அவனுக்கு அவன் புதுத் தங்கையிடம் அவ்வீட்டில் காண்பிப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தனவே.

உள்ளே சென்று அமிர்தாவை சுவாமி விளக்கேற்றச் சொல்லி இருவரையும் வணங்க வைத்துப் பின் இருவரையும் அமர வைத்துப் பாலும் பழமும் கொடுத்தார் சத்யவதி.

பாலும் வாழைப்பழமும் நாட்டுச் சர்க்கரையும் கலந்த அக்கலவையை ராகுல் பாதி அருந்திவிட்டு அமிர்தாவிடம் தர வேண்டும். கையைப் பிடிப்பதெல்லாம் இயல்பாக வந்தது ராகுலுக்கு. அதில் ஒன்றும் தவறாகத் தோன்றவில்லை.

ஆனால் இது கொஞ்சம் நெருடலாக இருந்தது. தான் குடித்துவிட்டு மீதியை அமிர்தாவிடம் எப்படிக் கொடுப்பது? எச்சில் என்று அவள் மறுத்துவிட்டால்? பலத்த சிந்தனைகளுக்கு இடையில் சாந்தியிடம் ஒரு ஸ்பூனைக் கேட்டு வாங்கி ஸ்பூனால் ஒரு வாய் மட்டுமே தான் சாப்பிட்டுவிட்டு டம்ளரை அப்படியே அமிர்தாவிடம் நீட்டினான் ராகுல்.

“வெறும் டம்ளரை நீட்டினா அமிர்தா எப்படிக் குடிக்கும்? ஸ்பூனைக் குடுடா” வேறு யார்? சாட்ஷாத் கௌஷிக்கே தான்.

கௌஷிக்கை ராகுல் முறைத்துக் கொண்டிருக்க அதற்குள் இயல்பாக ஸ்பூனை வேண்டிக் கை நீட்டி இருந்தாள் அமிர்தா. சில நொடி தாமதத்திற்குப் பின் ராகுலின் முகத்தை நிமிர்ந்து பார்த்த பிறகு தான் அவன் தயங்குவதும் அதற்கானக் காரணமும் புரிந்தது.

கூசிப் போனது அமிர்தாவிற்கு. ஒரு ஆண்மகன் அவனே அப்படித் தயங்குகையில் தான் வலியக்க சென்று கையை நீட்டியதுப் பெரும் வெட்கக் கேடாகத் தோன்றியது அவளுக்கு. ஏற்கனவே அந்த வீட்டின் பிரம்மாண்டத்திலும் செழுமையிலும் மிரண்டிருந்தவள் இச்செயலுக்குப் பின் இன்னும் ஒடுங்கிப் போனாள்.

அவள் சங்கடத்தைப் போக்குவதைப் போல, “ம்மா நிலா பாப்பாக்கு” என்று கேட்டுக் கொண்டு சரியாக அந்நேரம் அவர்கள் முன் நிரஞ்ஜலா வந்து நின்றாள்.

“அக்கா வேற ஸ்பூன் கொண்டு வாங்க” என்று ராகுல் கூறவும் சாந்தியும் சென்று எடுத்து வந்துக் கொடுத்தார்.

“சாஸ்திரத்துக்கு நீ ஒரு வாய் வாயில போட்டுட்டு அப்புறம் குழந்தைக்குக் குடும்மா” சத்யவதி சொல்ல,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்துவிட்டுப் பட்டும் படாமல் தன் வாயில் கொஞ்சமாகப் போட்டுக் கொண்டு மீதத்தை நிலாவுக்கு ஊட்டி விட்டாள் அமிர்தா.

அந்தச் சிட்டோ வெறும் ஒரு வாய் மட்டும் வாங்கிக் கொண்டு அத்தோடு இறங்கி மீண்டும் சந்தோஷோடு சேர்ந்து கொண்டு ஓடியே போனது.

இப்பொழுது அமிர்தாவிற்கு அதை சாப்பிடுவதில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. எப்பொழுதும் நிலா மிச்சம் வைத்த உணவை எப்படி வாயில் போட்டுக் கொள்வாளோ அதே போல பாலும் பழமும் கூட முழுதாக அமிர்தாவின் வயிற்றை நிரப்பி இருந்தது.

சாந்தி இரவு உணவைக் கவனிக்க செல்ல, கமலாம்மா குழந்தைகள் இருவரையும் தேடிச் சென்றார். அனைவரும் அங்கிருந்து நகரவும் பேச்சை ஆரம்பித்தான் ராகுல்.

“சத்யாம்மா நீங்க சொன்னதை எப்படி நான்கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ, இப்போ அதே மாதிரி நான் சொல்றதை நீங்க கேட்கணும். நீங்களும் இந்தத் தடிப்பயலும் இனிமே எங்கூட இங்கேயே தான் இருக்கணும். பெரிய இவன் மாதிரி இவன் தனியா ஒரு வீடு புடிச்சு வைச்சிருக்கானே அங்க மட்டும் நீங்க போகவே கூடாது. ஊருக்கும் போகக் கூடாது. சொல்லிட்டேன்” ராகுல் சத்யவதியைப் பார்த்துப் பேச,

“அது அவ்வளவு நல்லா இருக்காது கண்ணா. எலி வலையானாலும் தனி வலை வேணும்னு சும்மாவா சொல்லியிருக்காங்க பெரியவங்க?” தன்மையாகவே என்றாலும் மறுக்கத்தான் செய்தார் கௌஷிக்.

“பார்த்தீங்களா, கௌஷிக், கௌசல்யா மாதிரி தான் நானும்னு சொல்லிட்டு இப்போப் பிரிச்சுப் பேசுறீங்களே?”

“ஆரம்பத்துல இருந்து உன் கூடவே இருந்திருந்தா அது வேறப்பா. இப்போ நீ சுயமா முன்னுக்கு வந்தப்புறம் உங்கூட வந்து சேர்ந்துக்கிட்டா ஏதோ பணத்துக்காக வந்து சேர்ந்துக்கிட்ட மாதிரி ஆகிடாதா?”

“இந்தப் பணம் எல்லாம் நம்ம உறவுக்குள்ள ஒரு விஷயமா சத்யாம்மா?”

“நீயும் நானும் வேணா அப்படி நினைக்கலாம். ஆனா வெளியில இருந்துப் பார்க்கிறவங்களுக்கு?”

“நீங்களே சொல்லிட்டீங்க, வெளியில் இருக்குறவங்கன்னு! நம்ம வாழ்க்கைக்குள்ளேயே இல்லாதவங்க நம்மளைப் பத்தி என்ன பேசினா நமக்கென்ன? அப்படியே உங்க முகத்துக்கு நேரா யாராவது வந்து கேட்டா, ‘அது என் பையன் சம்பாதிச்சது அதுல எனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்குன்னு’ சொல்வீங்களா அதை விட்டுட்டு…”

பெருமையாக சிரித்துக் கொண்டார் சத்யவதி. “எப்பா பொம்பளைப் புள்ள ஒருத்தி இருக்கா. அவ எப்பவாவது அலுத்துக் களைச்சு அம்மா வீட்டுக்குன்னு வருவாளே, அவளுக்கு என்ன பதில் சொல்றது?”

“அண்ணன்னுங்க வீட்டுக்கு வரச் சொல்லுங்க” அழுத்தம் திருத்தமாக வந்தது ராகுலின் குரல்.

“ஒன்னுக்கு ரெண்டு அண்ணிங்க… என் பொண்ணு தாங்குவாளா? ஆண்டவா” விளையாட்டாக அங்காலய்த்தபடி சத்யவதி மேலே பார்க்க,

“அதெல்லாம் எம் பொண்டாட்டி என் தங்கச்சியை நல்லாத்தான் கவனிச்சுக்குவா” சட்டென்று சொல்லிய பிறகே வார்த்தைகளின் அர்த்தம் புரிய நாக்கைக் கடித்துக் கொண்டான் ராகுல்.

கொஞ்சம் தயக்கமாக அமிர்தாவை ஏறிட்டுப் பார்த்துக் கண்களாலேயே மன்னிப்பை வேண்ட, அவளும்  பரவாயில்லை என்பதைப் போல் கண்களாலேயே பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். இக்காட்சியை ஒரு ஸ்வாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் சத்யவதியும் கௌஷிக்கும்.

“கேட்டுக்கிட்டீங்களா ம்மா, என் பொண்டாட்டியாம்!” கௌஷிக் கிண்டலாக அந்த ‘என்’னில் அழுத்தம் கொடுக்க அமிர்தா வெட்கம் மேலிடத் தலை கவிழ்ந்து கொண்டாள்.

அமிர்தாவை விட்டு இன்னும் கண்களை நகர்த்தி இருக்கவில்லை ராகுல். அந்த வெட்கம் அவனைத் தடம் புரளச் செய்து கொண்டிருந்தது.

தலையை உலுக்கித் தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டவன், ‘இல்லை, இவள் எனக்குத் தோழி மட்டுமே. இவளை நான் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. குழந்தைகளுக்காகவும் இவர்களின் பாதுகாப்பிற்காகவும் மட்டுமே இந்தத் திருமணம்.’ மீண்டும் மீண்டுமாக சொல்லி மனதுக்குள் உருவேற்றிக் கொண்டான் அந்த மெல்லிசைக்காரன்.

**************

ராகுல் மாடியில் அவனறைக்குச் சென்றுவிட, அமிர்தாவோ அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்குக் குழந்தைகளோடு சென்றுவிட்டாள். இருவரும் இப்படி ஆளுக்கு ஒரு திசையில் செல்வதைப் பார்த்த கௌஷிக் தனது தாயாரைத் தேடிக் கொண்டு வந்தான்.

கீழே உள்ள அறைகளில் ஒன்றில் தான் சத்யவதி இருந்தார்.

“என்னடா இன்னும் தூங்கலையா?” இந்நேரத்துக்கு தன்னைத் தேடி வரும் மகனைப் பார்த்துக் கேட்டார் சத்யவதி.

“இல்லம்மா. என்னம்மா ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கு ஒரு ரூமுக்குள்ள போய்ட்டாங்க?”

“கல்யாணம் மட்டுந்தான் நாம பண்ணி வைக்க முடியும் கௌஷிக்கண்ணா. வாழ்க்கை? அதை அவங்க ரெண்டு பேரும் தானே வாழணும்.”

“ஆனா அம்மா… மத்த விஷயமெல்லாம்…” இதற்கு மேல் எப்படி அம்மாவிடம் வெளிப்படையாகக் கேட்க?

“ரெண்டு பேரும் சின்னப் பசங்க கிடையாது. இதுக்கு மேல நாம சாஸ்திரம், சம்பிரதாயம்னு ஏதாவது ஏற்பாடு பண்ணா அது அவங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப தர்ம சங்கடமா போயிடும். விடு. மத்ததெல்லாம் தானா நடக்கும்.”

“என்னமோ ம்மா, ரெண்டு பேரும் குழந்தைங்களோட சந்தோஷமா இருந்தா சரிதான்.” பேசிக் கொண்டே சத்யவதியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான் கௌஷிக்.

“ஏன்மா நாளைக்கு எனக்குக் கல்யாணம் ஆனா கரெக்டா எல்லா ஏற்பாடும் பண்ணிடுவீங்க தானே. இப்படிப் பாதியில விட்டுற மாட்டீங்களே?” தனது அதி முக்கிய சந்தேகத்தைக் கேட்டு வைத்தான் கௌஷிக்.

“கடவுளே” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் சத்யவதி.

*************

தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் குழந்தைகளோடு இருந்தாள் அமிர்தா. குளித்து முடித்து சற்று இலகுவான இரவு உடைக்கு மாறியிருந்தாள். இரவு உணவையும் முடித்து விட்டுத் தான் மாடிக்கு வந்திருந்தார்கள்.

அமிர்தாவிற்கும் நிலா பாப்பாவிற்கும் மாடியில் ராகுலின் அறைக்குப் பக்கத்தில் இருந்த அறையை ஒதுக்கி இருந்தார்கள். நிலாவைத் தூக்கிக் கொண்டு அமிர்தா மாடிப்படி ஏற சந்தோஷின் முகம் வாடிப் போனது.

“சந்தோஷ் கண்ணா, புது இடம் இல்லையா? பாப்பாவுக்கும் எனக்கும் பயமா இருக்கும். இன்னைக்கு நைட் மட்டும் எங்க கூட வந்து தூங்குறீங்களா?” அமிர்தா கேட்க பளிச்சென்று சந்தோஷின் முகம் ஒளி வீசியது.

சந்தோஷ் இன்னமும் அமிர்தாவை ஆன்ட்டி என்று தான் அழைத்துக் கொண்டிருந்தான். போகப் போக அவனே மாற்றிக் கொள்வான் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே இருந்தததால் அவனை யாரும் வற்புறுத்தவும் இல்லை.

“இல்ல ஆன்ட்டி, டெய்லியுமே நான் பாப்பா கூடவே நைட் இருந்துக்குறேன். நோ ப்ராப்ளம்” உடனடியாகப் பதில் வந்தது சந்தோஷிடமிருந்து. கையோடு தனக்குத் தேவையான உடைமைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் பையன். சிரித்துக் கொண்டே அவனையும் அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்து சேர்ந்தாள் அமிர்தா.

நல்ல விசாலமான அறை. தாராளமாக நான்கு பேர் படுத்து உருளக் கூடிய அளவு பெரிய கட்டில் ஒன்று நடுநாயகமாக வீற்றிருந்தது. ஒரு ஓரத்தில் ஸ்டடி டேபிள் ஒன்று மேஜையுடன் இருக்க, மற்றொரு புறத்தில் இரண்டு ஒற்றை சோஃபாக்களும் ஒரு டீப்பாயும் இருந்தது. இடது பக்க மூலையில் அறையோடு கூடிய அட்டாச்டு பாத்ரூம் தெரிந்தது. எல்லாவற்றிலும் ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்ட்லைப் போல அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு சுத்தம்.

வலது பக்க மூலையில் இருந்த கதவைத் திறந்து பார்த்தாள். நீள வாக்கில் ட்ரெஸ்சிங் ரூம் இருந்தது. அதன் மறுபுறத்தில் இருந்த கதவும் அங்கு இடம் பெற்றிருந்த ராகுலின் உடைமைகளும் இரண்டு அறைகளுக்கும் பொதுவான டிரெஸ்சிங் ரூம் அது என்றுணர்த்தியது. சத்தமில்லாமல் அந்தக் கதவைக் கையோடு மூடி வைத்தாள். பால்கனியும் அதே போல் மிகவும் நீளமாக இரண்டு அறைகளுக்கும் பொதுவாக இருந்தது.

குழந்தைகள் இருவரும் வெகு நேரம் ஏதேதோ வளவளத்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் நிலாவிற்குத் தூக்கம் கண்களைச் சுழற்ற அவள் சிணுங்கத் தொடங்கினாள். இதற்கு மேல் அமிர்தா பாடினால் மட்டுமே குழந்தை உறங்குவாள்.

சந்தோஷ் உடனிருப்பது, புது இடம் எல்லாமாக சேர்ந்து அமிர்தாவிற்குப் பாடுவதற்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

“சந்தோஷ், பாப்பா பாட்டுப் பாடினா தான் தூங்குவா. நான் பாடுனா உனக்கு எதுவும் டிஸ்டர்பென்ஸ் இல்லையே?”

“நோ ஆன்ட்டி. எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும். பட் இது வரை யாரும் அப்படி என்னைத் தூங்க வைச்சதே இல்ல. எனக்கும் சேர்த்துப் பாடுறீங்களா?” விழி விரித்துக் கெஞ்சுதலாகக் கேட்டான் சின்னவன்.

மிகப் பெரும் இசையமைப்பாளனின் ஒற்றை மகன் இத்தனை நாட்களாகத் தாலாட்டுக்கு ஏங்கி இருக்கிறான். இதை என்னவென்று சொல்லுவது?

சந்தோஷ் அப்படிக் கேட்டதும் உருகி விட்டது அமிர்தாவிற்கு. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் ஒரு பக்க மடியில் நிலாவையும் மறுபக்கம் சந்தோஷையும் படுக்க வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் பாடத் துவங்கினாள். கைகள் இருவரதுத் தலை முடியையும் கோதிக் கொடுத்தது.

பால்கனி செல்வதற்கான ப்ரென்ச் விண்டோ கதவிலுள்ள கர்டனை அமிர்தா சற்றே விலக்கி விட்டிருக்க, வானில் பிறை நிலவின் ஊர்வலம் அவள் கண்களுக்குத் தட்டுப்பட்டது. தன்னால் பாடல் பிறந்தது.

‘வானத்தில் ஆடும் ஓர் நிலவு

என் கையிலோ இரு நிலவு

தேய்பிறையோ அங்கே

வளர்பிறைகள் இங்கே

வானத்தில் ஆடும் ஓர் நிலவு

என் கையிலோ இரு நிலவு

முத்து விளைந்திடும் தென்கடலில்

உன் புன்னகை முத்தில்லையே

கத்தும் குயிலோசைத் தென்மலையில்

நீ சிந்திடும் மொழியில்லையே

தென்றல் மயங்கும் உங்கள் பேச்சில்

அங்குத் தோன்றும் சிந்துப் பாட்டில்

நெஞ்சோ இனிக்குது செந்தமிழே

வானத்தில் ஆடும் ஓர் நிலவு

என் கையிலோ இரு நிலவு

தேய்பிறையோ அங்கே

வளர்பிறைகள் இங்கே’

பாடல் முடிந்த பொழுது குழந்தைகள் இருவருமே உறங்கிப் போயிருந்தார்கள். குழந்தைகள் மட்டுமல்ல மற்றொருவனும் வெளியில் பால்கனியில் அமர்ந்து இவள் பாடலைத் தான் கண் மூடி ரசித்திருந்தான்.

குழந்தைகளின் உறக்கம் கலையாதவாறு மெல்ல கட்டிலில் இருந்து இறங்கியவள் சற்று நேரம் நடந்தால் நன்றாயிருக்கும் போலத் தோன்ற ஓசைப்படாமல் பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

இரண்டு அறைகளுக்குமாய் சேர்த்து நல்ல பெரிய பால்கனி. அதுவே ஒரு விசாலமான அறை போலத் தான் இருந்தது. வரிசையாக அடுக்கி வைத்தாற் போலக் கண்ணாடித்  தடுப்புகள் மட்டுமே இருந்தன. தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சில்லென்ற காற்று முகத்தில் மோதக் கைகளைக் கட்டிக் கொண்டுக் கண்களை மூடி ஆழ மூச்செடுத்தாள்.

சட்டென்று ஏதோ தோன்ற வலப்பக்கம் திரும்பிப் பார்த்தாள் அமிர்தா. அங்கு போடப்பட்டிருந்த கௌச்சில் தலை சாய்த்து ராகுல் அமர்ந்திருப்பதுத் தெரிந்தது. கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

அறைக்குள் சென்றுவிடலாம் என்று திரும்பியவளை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.

“இங்க கொஞ்சம் வர்றியா அமிர்தா”

“ஹான்… வரேன்” அவனெதிரில் சென்று நின்றாள்.

அவள் வரவும் கையிலிருந்த ஆறாம் விரலை நசுக்கிப் போட்டுவிட்டுத் தனக்கருகில் கைக் காட்டினான். சற்றுத் தள்ளி ஓரமாக அமர்ந்தாள் பெண்.

“நானே உங்கிட்ட பேசணும்னு நினைச்சேன்”

“ம்ம்ம் சொல்லுங்க”

“நமக்குக் கல்யாணம் என்னமோ நடந்துடுச்சு. ஆனா அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு தான் தெரியலை.”

கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியலையா? எதைப் பற்றிப் பேசுகிறான் இவன்? அமிர்தாவின் இதயத் துடிப்புத் தாறுமாறாக எகிறத் தொடங்கியது. அவளின் அலைப்புறுதலை அவள் கண்களை சிமிட்டும் வேகத்தில் உணர்ந்தவன்,

“ஹேய் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ். நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.”

“எந்த அர்த்தத்துல?” வார்த்தைகள் தந்தியடித்ததுப் பெண்ணுக்கு.

“நீ நினைக்கிற அர்த்தத்துல நான் அதை சொல்லலை.”

“இல்லல்ல நான் எந்த அர்த்தத்தையும் நினைக்கலை” படபடவென்று அவள் மறுக்க,

“ஓகே… ஓகே கூல். இந்த அர்த்தப் பிரச்சனையை விட்டுடுவோம். இப்ப நான் சொல்ல வந்ததை சொல்லவா?”

“சொல்லுங்க”

“என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தக் கல்யாணம் குழந்தைகளுக்காகவும், உங்களோட பாதுகாப்புக்காவும் மட்டும் தான் நடந்தது. அதுல நான் ரொம்பவே க்ளியரா இருக்கேன். சோ கொஞ்ச நேரத்துக்கு முன்ன பயந்த மாதிரி நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். புரிஞ்சுதா?”

முதலில் இல்லை என்று தலை அசைத்தவள் பின் ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள்.

“இதுக்கு என்ன அர்த்தம்?” ராகுல் கேட்க,

“இல்ல நான் பயப்பட எல்லாம் இல்ல. அப்புறம் நீங்க சொன்னது புரிஞ்சுது.” அவளின் பாவனையில் வாய் விட்டு சிரித்தான் அவன்.

“இனி சந்தோஷ் நிலா ரெண்டு பேருக்குமே அம்மான்னா அது நீதான், அப்பான்னா அது நான் தான். இதைத் தவிர வேற எந்த எதிர்பார்ப்பையும் நான் உனக்குள்ள திணிக்க மாட்டேன்.”

“ஹ்ம்ம்ம்”

“உனக்கு எப்படியோ, நான் பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட விஷயம், ஒரு கல்யாணம் சக்சஸ் ஆக மூணு விஷயம் வேணும். ஒன்னு காதல், ரெண்டு நம்பிக்கை, மூணாவது கம்பெட்டபிலிட்டி.

காதல் இந்த வயசுக்கு மேல எனக்கு வருமான்னு தெரியலை.”

‘காதலுக்கு வயசு இருக்கா என்ன?’ மனதில் நினைத்து மட்டுமே கொண்டாள்.

“நம்பிக்கை… உன்னை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். சோ நம்பிக்கை உன் மேல கொஞ்சம் இருக்கு”

‘இந்தக் கொஞ்சம் நம்பிக்கைக்காகவா உயிரைப் பணயம் வைச்சு அன்னைக்கு சண்டை போட்ட? உனக்கு எப்படியோ, என்னை மீறித் தொட்டுப் பாருங்கடா அப்படின்னு அத்தனை பேரையும் எதுத்துக்கிட்டு ஒத்தை ஆளா நின்னியே அப்பவே மலையளவு நம்பிக்கை உன் மேல எனக்கு வந்தாச்சு.’

தனக்கே தெரியாமல் தனது மனது அவனுக்கு ஆதரவாகப் பேசுவதை உணராதவளாக அவன் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள் அமிர்தா.

“அப்புறம் கம்பெட்டபிலிட்டி…” சொல்லிவிட்டு உதடு மடித்து சிரித்தான் ராகுல்ரவிவர்மன்.

அமிர்தாவிற்குமே லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவளும் அவனை நோக்கிப் புன்னகைத்தாள்.

“சின்ன வயசுலேயே நாம ரெண்டு பேரும் எப்ப ஒத்துப் போயிருக்கோம்?” சொல்லிவிட்டுப் பெரிதாகவே சிரித்தான் ராகுல்.

“நீங்க தான் சீண்டிக்கிட்டே இருப்பீங்க”

“யாரு நானா? நீ தான். கௌஷிக்கை அண்ணான்னு கூப்பிடுவ. என்னை வாடா போடா ம்ப. இப்போ வசமா வந்து மாட்டிக்கிட்டியா? ஒழுங்கா அப்பவே அண்ணான்னு கூப்பிட்டிருந்தா இப்ப தப்பிச்சிருக்கலாம் இல்ல சோனி.”

சிறு வயது நினைவுகளைப் பற்றிய பேச்சு இருவரையும் இலகுவாக்கி இருந்தது. ராகுல் நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டுக் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். அமிர்தா அவன் பக்கம் நன்றாகத் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

“இதோ இது தான் இந்த சோனிதான். இப்படிக் கூப்பிட்டு கூப்பிட்டே என்னை எவ்வளவு வெறுப்பேத்துவீங்க. நான் இதால எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா?”

“ஹா…ஹா சோனின்னு கூப்பிடுறதால என்ன கஷ்டப்பட்ட?”

“குட்டியா இருக்குறதால தானே அப்படிக் கூப்பிடுறீங்க. சோ குண்டாகணும்னு சொல்லி நல்லா இஷ்டத்துக்கு சாப்பிட்டு பயங்கர குண்டாயிட்டேன் தெரியுமா? ஸ்கூல்ல காலேஜ்ல எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேலி பண்ணுவாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டயட், எக்சர்சைஸ், யோகா எல்லாம் பண்ணி இப்படி ஒல்லி ஆனேன். எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” சொல்லிவிட்டு உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“ஒல்லியா ஆகிட்டியா என்ன?” நம்பாத பாவனையில் கேட்டு வைத்தான் அவன்.

“ஆமா ஒல்லியா தானே இருக்கேன்” சொல்லிவிட்டுத் தன்னைத் தானே குனிந்து பார்த்தும் கொண்டாள்.

அவளைத் தலை முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தவன் “அது சரி” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

அவன் செய்கையில் கோவம் வந்தது அமிர்தாவிற்கு. “எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன். நீங்களும்  இங்க உக்கார்ந்து புகை வண்டி ஓட்டாமப் போய்த் தூங்குங்க” சொல்லிவிட்டு வெடுக்கென்று எழுந்து நடந்தாள்.

அவளதிகாரத்தில் கொஞ்சம் ஆடித்தான் போனான் மெல்லிசைக்காரன். உதட்டில் உறைந்த மந்தகாசப் புன்னகையுடன் போகும் அவளையே பார்த்திருந்தான்.

error: Content is protected !!