Manmo 21

Manmo 21

மித்ரமதி முழுதாகத் தேறி இருந்தாள். பாட்டியும் அம்மாவும் அவளைத் தாங்கு தாங்கென்று தாங்கினார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார்கள்.
அவை எல்லாவற்றையும் விட கணவனின் அருகாமை அவளை மனதளவிலும் உடலளவிலும் தேற்றியிருந்தது என்று சொல்லலாம்.

கார்த்திக் மனைவியை விட்டு எங்கேயும் நகரவில்லை. ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்குமாக அலைந்து கொண்டிருந்தான். வீட்டிலிருக்கும் போதெல்லாம் லேப்டாப்பில் தொழிலை கவனித்துக் கொண்டான்.

தன் அருகாமையிலேயே மனைவியை சதா வைத்துக் கொண்டான். அவள் தன் கண்ணில் படவில்லையென்றால் மாடியில் நின்றபடி அவன் குரல் கேட்கும்.

‘மித்ரா!’

‘ம்… அந்தா கூப்பிட்டுட்டாரு ம்மா உம் புருஷன். ஓடு!’ இது பாட்டி. கார்த்திக்கின் நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்குப் பரம திருப்தி என்றாலும் இப்படித்தான் கேலி பண்ணுவார்

பத்மா கூட மகனின் மாற்றம் பார்த்து மலைத்துப் போனார். தன் மகன் தானா இது! ஒரு பெண், ஒரு ஆணின் வாழ்வில் வந்து விட்டால் அவனில் இத்தனை மாற்றங்கள் சாத்தியமா?

சாத்தியம் தான் என்று நிரூபித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். இன்னும் இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் நேற்று மித்ரமதியின் கையில் குழந்தையைக் கொடுத்திருந்தார்கள்.

சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்கள் கணவனும் மனைவியும். குழந்தையின் தீண்டல் இல்லை என்றாலும் ஒரு தாய்மைக்கான அனைத்து செயற்பாடுகளையும் இயற்கையிலேயே அவள் உடல் செய்ய ஆரம்பித்திருந்தது.

சமயத்தில் அதுவே அவளுக்குக் கஷ்டமாகிப் போக மித்ரமதி துடித்துப் போவாள். இது போன்ற சமயங்களில் எதற்குப் பெரியவர்கள் துணை தேவை என்று அப்போது அவளுக்குப் புரிந்தது.

கார்த்திக் ற்கும் மனைவி படும் வேதனைகள் புரிந்தது. இருந்தாலும்… அவர்களுக்குள் இன்னும் அத்தனை பழைய அன்னியோன்யம் இல்லாததால் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்தான்.

அன்று ஹாஸ்பிடலில் இருந்து வரும் போது மித்ரமதியும் கொஞ்சம் நெகிழ்ந்திருந்தாளோ என்னவோ! கணவன் அவனுக்கேயான சில உரிமைகளை எடுத்துக் கொண்ட போது லேசாக அனுமதித்திருந்தாள்.

ஆனால் அதுவே தொடர்கதையாக அவள் அனுமதிக்கவில்லை. கார்த்திக் ற்கும் மனைவியின் விலகல் முதலில் வினோதமாகத் தான் இருந்தது. அவள் உடல்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு அவளை மென்மையாகவே கையாண்டான்.

அவள் அருகாமையே அவனைப் பரவசப் படுத்தியது. இல்லையென்று போன தன் உலகம் இரட்டிப்பாகக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் கார்த்திக்.

இன்னும் ஒரு வாரத்தில் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு போகலாம் என்று டாக்டர் சொல்லி இருந்தார். அந்தச் சேதியைக் கேட்ட நொடியிலிருந்து வீட்டை ரெண்டு படுத்திக் கொண்டிருந்தாள் மித்ரமதி.

மனைவியின் ஆர்ப்பாட்டங்களை ஒரு புன்னகையோடு பார்த்தபடி வேலைகளில் மூழ்கி இருந்தான் கார்த்திக்.

“பாட்டி! இந்த இடத்தை இன்னும் கொஞ்சம் க்ளீன் பண்ணச் சொல்லுங்க.”

“சரிடா ராசாத்தி.”

“என்னோட ரூமுக்கு ஆர்டர் பண்ணின கர்ட்டன் எல்லாம் வந்திடுச்சா?”

“இன்னும் ரெண்டு நாள்ல வந்திடும்மா.”

“புதிய ஃபர்னிச்சர் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி கர்ட்டனை மாட்டிடுங்க சரியா?”

“சரிடா தங்கம்.”

படபடப்பாக மேலே மாடிக்கு வந்த மனைவியின் கைப்பிடித்து நிறுத்தினான் கார்த்திக்.

“எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் மித்ரா?” இயல்பாகவே அவன் விரல்கள் மனைவியின் காது மடல்களை வருடியது.

“கார்த்திக்! நீங்க சீக்கிரம் ரெடியாகுங்க. ஹாஸ்பிடல் போகணும் இல்லை.‌ சும்மா அந்த லாப்டாப்பையே கட்டிக்கிட்டு எப்பவும் அழாதீங்க கார்த்திக்.” சொல்லிவிட்டு அவள் நகர கார்த்திக் அப்படியே நின்றுவிட்டான்.

“என்னது! சும்மா லாப்டாப்பைக் கட்டிக்கிட்டு அழுறேனா?” கார்த்திக் இப்போது வாய்விட்டுச் சிரித்தே விட்டான். மனைவியின் குதூகலம் அவனையும் தொற்றிக் கொண்டது.

“ஏம்மா மித்ரா?” கேட்டபடி வந்தார் பத்மா.

“சொல்லுங்க ஆன்ட்டி.”

“சின்னக்குட்டி வீட்டுக்கு வந்ததும் ஒரு ஃபங்ஷன் பண்ணலாமா?”

“பண்ணுங்க ஆன்ட்டி. இதையெல்லாம் எதுக்கு எங்கிட்டக் கேக்குறீங்க.”

“அப்போ சரி. ஆமா… என்ன பேர் செலெக்ட் பண்ணி இருக்கீங்க?”

“உங்க பையன் தான் செலெக்ட் பண்ணினாரு?”

“என்ன கார்த்திக்?” பத்மா ஆவலாகக் கேட்க வீடே கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தது.

“Neya…” மகன் சொல்லவும் பத்மா மருமகளைப் பார்த்தார்.

“உனக்குப் பிடிச்சிருக்கா மித்ரா?”

“ரொம்பப் பிடிச்சிருக்கு ஆன்ட்டி.” அவள் சிரிக்கவும் பத்மாவிற்கு நிறைவாக இருந்தது. அம்மா அங்கிருந்து நகர்ந்து விடவும் மனைவியிடம் வந்தான் கார்த்திக்.

கப்போர்ட்டில் எதையோ பிஸியாகத் தேடிக் கொண்டிருந்தவளைத் தன் புறமாகத் திருப்பினான். அவன் விரல்கள் அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்தது.

லண்டனில் பார்த்த அதே மித்ரமதி. முன்பைவிட இப்போது இன்னும் கொஞ்சம் சதை போட்டுத் தாய்மைக்கே உரிய மினுமினுப்போடு அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.

“பொண்ணு வரப்போறா ன்னு சொன்னதுக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம். என்னைக் கண்டுக்கவே இல்லை. இதுல பொண்ணு வீட்டுக்கே வந்துட்டா… அடேங்கப்பா! ம்…” பேசியபடி இப்போது அவன் விரல்கள் அவள் கருங் கூந்தலை வருடியது.

“எப்போ நம்ம வீட்டுக்குப் போறோம் மித்ரா?” அவன் ஆசையாகக் கேட்க, மித்ராவின் கண்கள் கணவனைத் தீர்க்கமாகப் பார்த்தது.

“ம்… சொல்லு பேபி… எப்போ போறோம்?” மீண்டும் அவன் அழுத்திக் கேட்டான்.

“ரெடியாகுங்க கார்த்திக். ஹாஸ்பிடலுக்கு லேட் ஆகுது.” சட்டென்று அந்தப் பேச்சைக் கத்தரித்து விட்டு நகர்ந்து விட்டாள் மித்ரா.

கார்த்திக்கிற்கு எதுவோ குறைந்தாற் போல இருந்தது. மனைவியின் செய்கைகளில் சிலநேரங்களில் ஒரு ஈடுபாடு இல்லாதது போலவே தோன்றியது.
அவன் முகம் குழப்பத்தைக் காட்டியது.

***

கார்த்திக்கின் பக்கத்தில் மித்ரமதி குழந்தையோடு நிற்க ஆரத்தி எடுத்தார் பத்மா. வீடே வாசலில் திரண்டு நின்றது. பார்கவியும், நந்தகுமாரும் கூட வந்திருந்தார்கள்.

“வளைகாப்பு நடந்தப்பவே அந்தக் கடங்காரி கண்ணு வெச்சா. ஏழு மாசமா?‌ ஒம்பொது மாசமான்னு! எம் பேத்திக்குக் கண்ணு பட்டுப் போச்சு.” பாட்டி புலம்பினார்.

குழந்தை கொழுகொழு வென்றிருந்தது. அம்மா அப்பாவின் அழகையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்திருந்தது. எட்டு மாதத்தில் பிறந்த குழந்தை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தது.

பத்மா அதைச் சொல்லிச் சொல்லியே ஆச்சரியப் பட்டார்.

“நீங்க சொல்றதும் சரிதாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் வீட்டுலயும் இப்படி நடந்திருக்கு. ஆனா அந்தக் குழந்தையைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க பத்மா.‌ அவ்வளவு ஆக்டிவ் ஆ இருக்கும்.” இது தேவகி.

“அப்படியா?”

“ஆமா…” பெண்கள் பேச்சு இப்படி ஓடியது. பார்கவி குழந்தையை விட்டு நகரவில்லை.

“பார்கவி… நீயும் சீக்கிரமா ஒன்னைப் பெத்துக்கோ. அதான் உம் புருஷனுக்கு ஆப்பரேஷன் நல்ல படியா முடிஞ்சுதில்லை?”

“கண்டிப்பா பாட்டி.” சட்டென்று பார்கவி ஆமோதிக்கவும் நந்தகுமார் மிரண்டு போய்ப் பார்த்தான்.

“என்ன பாகீ… சொல்லவே இல்லை! இது எப்போ இருந்து?”

“சும்மா இருங்க நந்தா.” நந்தகுமாரின் கேலியில் பார்கவி வெட்கப்படவும் மித்ராவும் கார்த்திக்கும் சிரித்தார்கள்.

“ஏம்மா மித்ரா?”

“என்ன அங்கிள்?”

“நாமல்லாம் எப்போ அமெரிக்கா போறோம். நம்ம குட்டிப் பொண்ணுக்கு பாஸ்போர்ட் எடுக்கணும் இல்லை?” சக்ரதேவ் கேட்கவும் மித்ரமதியும் புன்னகைத்தாள். ஆனால் பதில் சொல்லவில்லை.

பத்மாவின் கையில் குழந்தை இருந்ததால் ஏதோ வேலை இருப்பது போல மாடிக்குப் போனாள் மித்ரமதி. ஆனால் கார்த்திக் ற்கு தன் மனைவியின் செய்கை இயற்கை போல தெரியவில்லை.

அவள் பின்னோடு போனவன் ரூம் கதவை அடைத்தான். சத்தத்தில் திரும்பிப் பார்த்த மித்ரமதி திடுக்கிட்டுப் போனாள்.

“கார்த்திக்! என்ன… என்ன வேணும்?” கணவன் தன்னைக் கண்டு கொள்ளவும் வார்த்தைகள் சிக்கியது மனைவிக்கு. நிதானமாக அவள் பக்கத்தில் வந்த கார்த்திக் அவள் தோள்களைப் பற்றிக் கொண்டான்.

“என்னாச்சு மித்ரா?”

“ஒன்னுமில்லையே…‌ நீங்க எதைக் கேக்குறீங்க?

“மித்ரா! என்னைப் பாரு.‌ எங் கண்ணைப் பார்த்துப் பேசு.” அவன் உறுதியாகச் சொல்லவும் அங்கிங்கென அலைப்புற்ற அவள் கண்கள் அவனை நேராகப் பார்த்தது.

“குட்… இப்போ சொல்லு மித்ரா. அமெரிக்கா போறதுல உனக்கென்ன கஷ்டம்?”

“எதுக்கு கார்த்திக்?”

“புரியலை…”

“அமெரிக்கா வந்து என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க? உங்க லைஃப்ல வந்த கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எத்தனைன்னு லிஸ்ட் போடச் சொல்லுறீங்களா?”

மித்ரமதி கேட்ட மாத்திரத்தில் மனைவியின் தோளிலிருந்த கார்த்திக்கின் கைகள் சட்டென்று விலகியது. அவள் காலில் கிடந்ததை எடுத்து அடித்தாற் போல உணர்ந்தான் கார்த்திக்.

“மித்ரா!”

“நீங்க தான் சொன்னீங்களே கார்த்திக். உங்க வாழ்க்கையில வந்த முதல் பொண்ணு நானில்லை ன்னு. உங்க கண் என்னை மட்டும் காதலாப் பார்க்கலைன்னு…”

“மித்ரா இது நியாயம் இல்லை. அன்னைக்கு நான் சொன்னது உன்னைக் காயப்படுத்தணும் ங்கிறதுக்காக. எங் கண்ணுல காதல் இருந்தது ன்னு சொன்னவளே நீதான்.”

“அது இல்லை ன்னு மறுத்தது நீங்க தானே?”

“நீ ஆர்க்யூ பண்ணுற மித்ரா. நான் நினைச்சிருந்தா இதையெல்லாம் உங்கிட்ட சொல்லாமலே விட்டிருக்கலாம். உனக்கு என்னோட கடந்த காலம் எதுவும் தெரிஞ்சிருக்காது.”

“அதான் காயப்படுத்தணும்னு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே!” அவள் குரல் கலங்கவும் கார்த்திக் தவித்துப் போனான்.

“மித்ரா… நீ என்னை இன்னும் புரிஞ்சுக்கலையா? அது என்னோட பாஸ்ட் மித்ரா.”

“நந்தகுமாரும் என்னோட பாஸ்ட் தானே கார்த்திக். அதை நீங்க ஏன் புரிஞ்சுக்கலை?” அவள் ஆணித்தரமாகக் கேட்கவும் கார்த்திக்கின் முகம் சிவந்து போனது.

“டாமிட்!” பக்கத்தில் இருந்த சுவரில் ஓங்கிக் குத்தியவன் மேலே எதுவும் பேசாமல் வெளியே போய்விட்டான்.

மித்ரமதி பக்கத்தில் இருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள். கண்களில் நீர் திரண்டு போனது.

சற்றுநேரத்தில் பத்மா குழந்தையோடு வரவும் கண்களைத் துடைத்துக் கொண்டாள் பெண்.

“மித்ரா! என்னாச்சு? ஏன் முகம் ஒருமாதிரியா இருக்கு?”

“ஒன்றுமில்லை ஆன்ட்டி.”

“அழுதியா என்ன?”

“…………….”

“என்னாச்சும்மா? சண்டை போட்டீங்களா ரெண்டு பேரும்?”

“நான் அமெரிக்கா வரலைன்னு சொன்னேன். அதுக்கு உங்க பையன் கோபப்படுறாரு.”

“இதுல கோபப்பட என்ன இருக்கு அவனுக்கு? இங்கப்பாரு மித்ரா…‌ உனக்கு எங்க இருக்கப் பிடிக்குதுதோ அங்க இரு. இப்போ உன்னோட அமைதி தான் முக்கியம். ஏன்? தொரைக்கு பொண்டாட்டி புள்ளையோட இருக்கணும்னா இங்கேயே இருக்க வேண்டியது தானே?” நடப்பு என்னவென்று தெரியாமல் அவர் பங்கிற்குத் திட்டிவிட்டுப் போனார் பத்மா.

குழந்தையைக் கட்டிலில் கிடத்தி விட்டுத் தானும் அதன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள் மித்ரா. அந்தப் பட்டுத் தேகத்தின் ஸ்பரிசம் அத்தனை மென்மையாக இருந்தது.

அந்தக் கன்னக் கதுப்புகளும் நாசியும் கணவனை ஞாபகப் படுத்தியது பெண்ணுக்கு. முயல் குட்டியைப் போல தன்னருகில் இருந்த அந்தச் சின்ன உருவத்தை வருடிக் கொடுத்தாள்.

அருகில் அசைவு தெரிந்தது. குழந்தைக்கு வாகாக அவள் ஒருக்களித்துப் படுத்திருக்க அவள் முதுகோடு ஒன்றினான் கார்த்திக்.

மனைவியின் இடை தழுவிய அவன் கை அவளையும் தாண்டிச் சென்று அவன் மகளையும் தழுவியது. மித்ரமதி கல்லுப் போல படுத்திருந்தாள்.

“மித்ரா!”

“………….”
“நீ இப்போ பேச மாட்ட இல்லை… அதான் நிறையப் பேசிட்டயே!”

“என்னைப் பேச வெச்சதே நீங்க தான கார்த்திக்?”

“மித்ரா… நீ என்னைக் கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கவே மாட்டியா?”

“……………”

“நான் ஒன்னும் என்னை நல்லவன்னு சொல்லிக்கலையே. ஆனா உனக்காக நான் என்னையே மாத்திக்கிட்டேன் ங்கிறதை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற?” மனைவியைத் தன் புறமாகத் திருப்பியவன் அவள் கண்களையே பார்த்தான்.

“அத்தனையையும் உனக்காக விட்டேனே… அது கூடவா உனக்குப் புரியலை. எப்போ உன்னை லண்டன் ல பார்த்தனோ அதுக்கப்புறம் சகலதும் நீதான்னு தானே வாழ்றேன்.”

“……………”

“நீ பேசும் போது அத்தனை கோபம் வருது. ஆனா சேர்ந்தாப்போல ஒரு பத்து நிமிஷம் விட்டுட்டு இருக்க முடியலை. உங்கிட்டத் தானே ஓடி வர்றேன். என்னை இன்னும் என்ன பண்ணச் சொல்லுற மித்ரா?”

“வேணாம் கார்த்திக். என்னை விட்டிருங்க.” அவள் சொல்லிய மாத்திரத்தில் அவன் கைகள் அவளை அழுத்திப் பிடித்தது.

“அது இந்த ஜென்மத்துக்கும் நடக்காது.”

“நான் இன்டியா வை விட்டு வரமாட்டேன்.”

“எம் பொண்ணு அமெரிக்கால தான் வளரணும்.”

“ஏன்? இங்க வாழ்றவங்க எல்லாம் அப்போ மனுஷங்க இல்லையா?”

“எனக்கு அதைப்பத்தித் தெரியாது. எம் பொண்ணு எங்கூடத்தான் இருப்பா.”

“அப்போ உங்க பொண்ணையும் கூட்டிக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. இந்தப் பொண்ணு வந்ததுக்கு அப்புறமாத் தானே பொண்டாட்டி மேலயே பாசம் வந்துச்சு. அதுவரை என்னை எட்டிக்கூடப் பார்க்கலையே.”

“ஏன்? டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பும் போது இந்தப் பொண்ணைப் பத்தி நீ சொன்னியா? இல்லையே… ஆனாலும் நான் வந்தேன் தானே?”

“எதுக்கு சொல்லணும்?”

“ஏய்! அந்தக் குழந்தைக்கு அப்பா நான் தான் மித்ரா.”

“அதை நான் சொல்லணும் கார்த்திக். எம் பொண்ணுக்கு அப்பா நீங்க தான்னு நான் சொல்லணும்.”

“அதைத்தானே நானும் கேக்குறேன். ஏன் சொல்லலை?”

“பிடிக்கலை…” அவள் அழுத்தமாகச் சொல்ல கார்த்திக் நொறுங்கிப் போனான்.

“அப்போ… அப்பா இல்லாமலேயே உம் பொண்ணை வளக்க நினைச்சியா?” அவன் கண்கள் லேசாகக் கலங்கியது.

“ஏன்? இந்த உலகத்துல உங்களை விட்டா வேற ஆம்பிளைங்களே கிடையாதா?” அவனைக் காயப்படுத்தும் நோக்கத்தில் இப்போது மித்ரமதி வார்த்தைகளைத் தவற விட்டாள்.

“………….”

“ஒரேயொரு ஃபோன் கால். ரிச்சர்ட்டுக்கு. எங்க வேணும்னாலும் வந்து சொல்லுவான்… நீங்க கேட்டதை.”

“மித்ரா! என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?” அவன் குரல் வேதனையின் உச்சத்தில் இருந்தது.

“ஏன்? கார்த்திக் ங்கிற பெயரோட பல பொண்ணுங்க பெயர் அடிபடும் போது… மித்ரா ங்கிற பெயரோட பல பசங்க பெயர் அடிபடக் கூடாதா கார்த்திக்?”

“இதுக்கு நீ என்னைக் கொன்னுருக்கலாம் மித்ரா.”

“ஒரு பேச்சு… வெறும் வாய் வார்த்தை… அதுக்கே உங்களுக்குச் சாகத் தோணுது. ஆனா நான்… எல்லாத்தையும் சகிச்சுக்கணுமா கார்த்திக்?” அதற்கு மேல் கார்த்திக் மனைவியோடு விவாதிக்கவில்லை. அமைதியாகி விட்டான்.

ஆனால் அவளையே பார்த்திருந்த அவன் கண்கள் கலங்கியது. உருண்டு திரண்ட இரு நீர்த்துளிகள் அவள் முகத்திலேயே பட்டுத் தெறித்தது.

பிடிவாதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மித்ரமதி.

***

வீடே ஜகஜ் ஜோதியாகக் காட்சி அளித்தது. அன்றைக்கு புதுவரவிற்குப் பெயர் சூட்டும் விழா வைத்திருந்தார்கள். எப்போதும் போல வீட்டுப் பெரியவர்கள் ஜமாய்த்திருந்தார்கள்.

அன்றைய வாக்குவாதத்திற்குப் பிறகு கார்த்திக் மனைவியோடு பேசவில்லை. இந்த ஒரு வாரமும் மௌனமாகவே கழிந்தது அவன் உலகம். மித்ரமதி பேச வந்த போதும் அதைத் தவிர்த்து நகர்ந்து விட்டான்.

குழந்தையை மட்டும் யாரிடமும் தராமல் கையோடேயே வைத்திருந்தான். மகளை அணைத்தபடி இருக்கும் அவன் முகம் அடிக்கடி சிந்தனையில் ஆழ்ந்து போகும். பாராதது போல எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள் மித்ரா.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவர் முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டுத் திரியுறாராம்?” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் பெண்.
குழந்தைக்கான ஆடைத் தெரிவை எப்போதும் போல பத்மா பார்த்துக் கொள்ள, மித்ரமதிக்கு ஒரு புடவையைக் தெரிவு செய்தான் கார்த்திக்.

“சராரா நல்லா இருக்கும் கார்த்திக் மித்ரா க்கு.” இது பத்மா.

“அதை விட மித்ராக்கு ஸாரி நல்லா இருக்கும்.” அவன் ஒற்றை வரியில் அம்மாவை ஆஃப் பண்ணி விட்டான்.

“இது ப்ரைடல் வெயார் கார்த்திக்.” மகன் தெரிவு செய்தது மணப்பெண் பட்டுப் புடவை என்பதால் சட்டென்று சொன்னார் பத்மா.

“ஏன்? எம் பொண்டாட்டியைப் பார்த்தா உங்களுக்கு ப்ரைட் மாதிரித் தெரியல்லையா?” அதன் பிறகு பத்மா வாயைத் திறக்கவே இல்லை.

மித்ரமதி தான் ஆச்சரியப் பட்டாள். அவன் தெரிவு செய்த புடவை பாட்டி காலத்து டிசைனில் இருந்தது. பார்டர் மட்டுமே ஒரு முழம் நீளத்தில் இருந்தது.
அவன் ஆசையாகத் தெரிவு செய்யவும் எதுவும் பேசாமல் இருந்து கொண்டாள்.

“மித்ரா! உனக்குப் பிடிச்சிருக்கா ம்மா?” பத்மா கேட்கும் போது மட்டும் அவன் கண்கள் மனைவியை ஒரு நொடி ஆர்வமாகப் பார்த்தது. அந்தப் பார்வைக்காகவே தலையாட்டினாள் பெண்.

“பாட்டி…”

“சொல்லுங்க கார்த்திக்.”

“அன்னைக்கு… செவன் மன்த்ஸ் ல ஒரு ஃபங்ஷன் பண்ணினோம் இல்லை பாட்டி?”

“ஆமா கார்த்திக்… வளைகாப்பு.”

“அன்னைக்கு மித்ரா நிறைய ஜ்வெல்ஸ் போட்டு ரொம்ப அழகா இருந்தா. இன்னைக்கும் அதே மாதிரி ட்ரெஸ் பண்ணி விடுறீங்களா?”

“அட! பண்ணிட்டாப் போச்சு. அப்போ நீங்க வேஷ்டி சட்டையில வர்றீங்க ன்னு சொல்லுங்க.”

“கரெக்ட்.” சாவித்திரியும் கார்த்திக்கும் சிரித்துக் கொண்டார்கள். மித்ரமதியின் முகம் தான் அந்தச் சிரிப்பைப் பார்த்துக் கடுகடுத்தது.

வேஷ்டி சட்டையில் தன் மகளைத் தூக்கிய படி கனகம்பீரமாகத் திரிந்த கணவனை அவள் கண்கள் படம்பிடித்துக் கொண்டது.

‘அனியாயத்துக்கு இத்தனை ஹான்ட்ஸம்மா இருக்கானே!’

ஃபங்ஷன் அருமையாக நடந்து முடிந்திருந்தது. பெரியவர்கள் எல்லோரும் களைப்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மித்ரமதி தங்கள் ரூமிற்கு வந்தாள்.

குழந்தை கொஞ்சம் சிணுங்கிய படியே இருக்க மேலே வந்தவள் ஏசி யை ஓட விட்டாள். பட்டுப்புடவை, நகைகள், தலை நிறையப் பூ…‌ என அவளுக்குமே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

அவள் நகைகளை அகற்றப் போகும் நேரம் ரூமிற்குள் வந்தான் கார்த்திக். கண்கள் ஒரு முறை மனைவியையும் மகளையும் வருடிச் சென்றது. மித்ரமதி அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

அலமாரியைத் திறந்தவன் அதிலிருந்த நகைப் பெட்டி ஒன்றை எடுத்து மனைவியிடம் நீட்டினான்.

“என்ன கார்த்திக் இது?”

“பிரிச்சுப் பாரு.” அவன் சொல்லவும் அதைத் திறந்தாள் மித்ரா. உள்ளே அழகானதொரு ஆரம் இருந்தது.

“எதுக்கு இப்போ இது?”

“தெரியலை… தோணிச்சு, வாங்கினேன்.” அவன் பேச்சு, நடவடிக்கைகள் எல்லாம் வித்தியாசமாகப் பட்டது மனைவிக்கு.

குழந்தையின் கன்னத்தில் குனிந்து முத்தம் வைத்தவன் மனைவியின் கன்னத்தை மிருதுவாக வருடிக் கொடுத்தான்.

“நான் கிளம்புறேன் மித்ரா.”

“எங்க?” மித்ரா திடுக்கிட்டுப் போனாள்.

“அமெரிக்கா.”
“கார்த்திக்! நீங்க என்ன சொல்றீங்க?” பதட்டம் அவள் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“இந்த மித்ரமதி சந்திரசேகரை இனியும் தொல்லை பண்ண வேணாம்னு நினைக்கிறேன் மித்ரா.”

“கார்த்திக்!”

“நீ சொன்னது எல்லாமே சரிதான். என்னால இப்போ புரிஞ்சுக்க முடியுது. உன்னை மாதிரி ஒரு பொண்ணு… என்னை மாதிரி ஒரு மனுஷனோட வாழணும்னு எந்த விதமான கட்டாயமும் இல்லை. என்னைக் காதலிச்ச பாவத்துக்காக உனக்கொரு நரக வாழ்க்கையைக் குடுக்க என்னாலயும் முடியாது.”

“கார்த்திக்!”

“நிறைய தப்புப் பண்ணிட்டேன் ரதி. அப்போத் தோணலை. பார்கவி போடுற பாட்டுல வர்ற மாதிரி எனக்காகவே ஒரு பொண்ணு வருவா. என்னை உருகி உருகி லவ் பண்ணுவா. அவளுக்காக மட்டும் தான் நான் வாழணும்னெல்லாம் அப்ப தோணலை. இஷ்டப்படி வாழ்ந்துட்டேன்.”

“……………”

“உம் பொண்ணுக்கு அப்பா ன்னு என்னைச் சொல்ல உனக்குப் பிடிக்கலை ன்னு சொன்ன. பரவாயில்லை… நீ அனுப்பின டிவோர்ஸ் நோட்டீஸை மேற்கொண்டு ப்ரொஸீட் பண்ணலாம். நீ சரியாத்தான் முடிவெடுத்திருக்கே. நான் தான் இடையில வந்து எல்லாத்தையும் குழப்பிட்டேன்.”

“……………”

“சாரி மித்ரா.‌ சாரி… எல்லாத்துக்கும் சாரி. பேபியை நல்லாப் பார்த்துக்கோ. டேக் கெயார். பை.” சொன்னவன் சட்டென்று வெளியேறி விட்டான்.

மித்ரமதி திக்பிரமை பிடித்தது போல நின்றிருந்தாள்.

error: Content is protected !!