NPG-14

கீதாஞ்சலி – 14

இரவு உணவு வேளை. அனைவரும் டைனிங் ஹாலில் ஒன்று கூடியிருந்தனர். இது சத்யவதியின் கட்டளை. ஒரு நாளைக்கு ஒரு நேர உணவையாவது அனைவரும் சேர்ந்து ஒன்றாக உண்ண வேண்டும் என்பது சத்யவதியின் ஆசை.

அவரது இந்த ஆசையால் ராகுலின் பலப்பல பழக்கங்கள் சத்தமே இல்லாமல் விடைப் பெற்றுப் போயிருந்தன. அது மட்டுமல்லாமல் சென்னையில் ராகுல் வழக்கமாகச் செல்லும் ‘பப்’களில் வேலை பார்த்து வந்த ராகுலின் பிரியத்திற்குறிய ‘கண்ணா’க்கள்,

“எங்க சார், அண்ணனை ரொம்ப நாளா ஆளையே காணோம்” என்று கௌஷிக்கிற்கு அழைத்துக் கேட்குமளவிற்கு ஆகிப் போயிருந்தது. முற்றாகத் தவிர்த்திருந்தான்.

தனிமையைத் துரத்த வேண்டுமென்று தானே ராகுல் இவற்றை எல்லாம் நாடிச் செல்வது. இப்பொழுது அவன் தனித்திருக்கும் தருணங்கள் வெகு அபூர்வம். அவன் முகம் பார்த்தே மனதறிந்து நடக்கும் மனைவி, சொன்னதைத் தட்டாமல் செய்யும் அருமையான மகன், இவர்கள் இருவரையும் தாண்டி அவன் ஒட்டு மொத்த உலகத்தையுமே ஒற்றை ஆளாய் நிரப்பும் நிரஞ்ஜலா எனும் குட்டி தேவதை.

எனவே தனிமையும் வெறுமையும் ராகுலின் வீட்டிலிருந்து மட்டுமல்ல மனத்திலிருந்தும் வெளியேறிச் சென்றிருந்தன.

டைனிங் ஹாலில் சத்யவதி, கௌஷிக், ராகுல், சந்தோஷ் அனைவரும் உணவருந்திக் கொண்டிருக்க, அமிர்தா அவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கு மட்டுமே அமிர்தாவால் பரிமாற முடியும். ராகுலுக்குப் பரிமாறும் வேலையை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டாள் நிரஞ்ஜலா.

டைனிங் டேபிள் மீதே ஏறி அமர்ந்து கொண்டு சிறிது சிறிதாக உணவு பரிமாறும் அந்தக் குட்டி மகள் இல்லாமல் ராகுலுக்கும் உணவு இறங்காது. இதற்காகவே எத்தனை முக்கியமான ரெக்கார்டிங் வேலை இருந்தாலும் அதை விரைவாக முடித்து விட்டு நிரஞ்ஜலா தூங்குவதற்குள் வீட்டில் இருப்பான் மெல்லிசைக்காரன்.

அமிர்தா தான் தவித்துப் போவாள். நிரஞ்ஜலா பரிமாறும் அழகால் ராகுலின் வயிறு நிரம்பலாமே தவிர உணவால் நிரம்ப முடியாது. குழந்தை அவளுக்கு இயன்ற வகையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ராகுலின் தட்டில் வைப்பாள்.

“நிலா குட்டி கீழ இறங்குங்கடா. அப்பா சாப்பிடட்டும்.” எப்பொழுதும் போல் அமிர்தா நிரஞ்ஜலாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“ம்ஹூம்…. மாட்டேன்” திட்டவட்டமாக வந்தது பதில்.

“இங்க வந்து நல்லா அடம் பிடிக்க கத்து வைச்சிருக்கா ம்மா. எல்லாம் நீ குடுக்குற இடம் தான் ராகுல். வீசம்படிக்குக் கையும் காலும் முளைச்ச மாதிரி இருந்துக்கிட்டு மாட்டேனாம்ல்ல மாட்டேன். கீழ இறங்கு நிலா, அப்பா சாப்பிடட்டும்” சத்யவதி கொஞ்சம் மிரட்டல் போலச் சொல்ல,

உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அதற்கும் ராகுலைத் தான் சரணடைந்தாள் குழந்தை.

“விடுங்கம்மா… எனக்குப் போதும். நான் நல்லா தான்ம்மா சாப்பிட்டேன்” மகளின் கண நேர முகச் சுணக்கம் கூடத் தாங்காதவனாக உடனடியாக ராகுலிடமிருந்துப் பதில் வந்தது.

“என்னடாப்பா பண்றது? உனக்கு உன் பொண்ணு முகம் வாடுறது தெரியுது. ஆனா பொண்டாட்டி மனசு வாடுறது தெரிய மாட்டேங்குதே” அங்கலாய்ப்பாக சத்யவதி சொல்ல,

“யாருக்கு இவனுக்கா தெரியாது. நீங்க வேற ஏன்ம்மா? இப்போ என்ன நடக்கும் தெரியுமா? இந்த மேடம் இங்க சாப்பிடாம கொஞ்ச நேரம் கழிச்சு மாடிக்குக் கையில சாப்பாட்டுத் தட்டோட போவாங்க.

அதை யாரு சாப்பிடுவாங்க, யாரு ஊட்டி விடுவாங்கன்னெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இந்த சார் கீழ இறங்கிக் கிச்சனுக்குள்ள போவாரு.

திரும்ப வரும் போது பார்த்தா கையில அவ்வ்வ்வ்ளோ பெரிய பால் டம்ளர் இருக்கும். அதையும் யாரு குடிப்பாங்கனு எல்லாம் எனக்குத் தெரியாது. அதை எப்படியும் ஒருத்தரால மட்டுமே குடிக்க முடியாது. அது மட்டுந்தான் எனக்குத் தெரியும்.” கௌஷிக் சொல்ல அப்படியா என்பதைப் போல சத்யவதி அமிர்தாவைப் பார்த்தார்.

பதில் கூற முடியாமல் வெட்கம் தடுக்கப் பரிமாறும் சாக்கில் தலையைக் குனிந்து கொண்டாள் அமிர்தா. அவள் சொல்லாமலேயே அவள் ஒப்புதலை அவள் வெட்கம் அழகாக சொல்லி முடித்திருந்தது.

அதற்குள், “கௌஷிக் மாமா அதை அம்மும்மா, அப்பா ரெண்டு பேரும் தான் குடிப்பாங்க. இது கூடத் தெரியாதா?” சாட்சியாக மாறி சந்தோஷ் பதிலளித்திருந்தான்.

“ஏன் டா ராத்திரியில தூங்க மாட்டியாடா நீ” சந்தோஷை ஒன்றும் சொல்ல முடியாமல் கௌஷிக்கிடம் பாய்ந்தான் ராகுல்.

“ஹ… தூங்கியிருந்தா இதெல்லாம் யாரு கண்டுபிடிக்கிறது?”

“அடடா இவர் பெரிய டிடெக்டிவ்… கண்டுபிடிக்கிறாராம்! போட்டா குடுக்குற, இப்பப் பாரு.” கௌஷிக்கிடம் ரகசியமாகக் கேட்ட ராகுல்,

சொல்லிவிடலாமா என்பதைப் போல அமிர்தாவைப் பார்த்தான். அவள் சம்மதமாகத் தலையசைக்கவும்,

“சத்யாம்மா, உங்க பையனுக்குப் பொண்ணு ரெடி. கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.”

“நிஜமாவா ராகுல் சொல்ற? நீயே பொண்ணு பார்த்துட்டியாப்பா? யாருப்பா பொண்ணு? எந்த ஊரு?” ஆர்வம் மேலிட அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் சத்யவதி.

“நானெல்லாம் பொண்ணு பார்க்கலை சத்யாம்மா. சாரே பார்த்துக்கிட்டார். லவ்ஸ் சத்யாம்மா லவ்ஸ். அதுவும் உங்க வீட்டு லவ் எங்க வீட்டு லவ் இல்ல, கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷமா லவ்வாம்.” ராகுல் சொல்ல,

“அடப்பாவி எதுக்குடா இத்தனை வருஷமா இதைச் சொல்லாம இருந்த? முன்னாடியே சொல்லி இருந்தா இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு நான் பேரன் பேத்தியையே பார்த்திருப்பேன்.” பிலுபிலுவென்று கௌஷிக்கைப் பிடித்துக் கொண்டார் சத்யவதி.

“ம்மா, நீங்க பெத்த பிள்ளையை நீங்களே நம்பலைன்னா எப்படிம்மா? நானாவது லவ்வாவது பண்றதாவது…. அவன் சும்மா சொல்றான்ம்மா” அப்பொழுதும் சாப்பாடு மட்டும் தான் முக்கியம் என்று தட்டிலிருந்துத் தலையை நிமிர்த்தாமலேயே சொன்னான் கௌஷிக்.

“என்னப்பா இவன் இப்படிச் சொல்றான்?” என்று ராகுலிடம் கேட்ட சத்யவதி, அமிர்தாவை நோக்கி “இந்தப் பசங்க ரெண்டு பேரையுமே நம்ப முடியாது அமிர்தா. ரெண்டும் எப்போதுமே கூட்டுக் களவாணிங்க தான். நீ சொல்லும்மா. யாரு பொண்ணு? எங்க பார்த்தீங்க?” என்று அவளிடம் கேட்டார்.

“அத்தை, பொண்ணு பேரு தீப்தி. நான் இன்னைக்குத்தான் நம்ம ஸ்டுடியோல பார்த்தேன். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தீப்தியைத் தெரியும்” என்றாள் அமிர்தா.

“அது எப்படி? அப்ப நிஜமாவே லவ்ஸ்தானா?” சொல்லிக் கொண்டே கதை கேட்கும் சிறு குழந்தையைப் போல் ஆர்வத்துடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டார் சத்யவதி.

அவரின் தெளிகையில் வாய்விட்டுச் சிரித்தாள் அமிர்தா.

“அத்தை நீங்க சொல்றது ரொம்பச் சரி. காதல் தான். ஆனா கௌஷிக் அண்ணாவுக்கு இல்ல. அந்தப் பொண்ணுக்கு நம்ம கௌஷிக் அண்ணா மேல எக்கச்சக்கக் காதல். ரெண்டு பேரும் காலேஜ் மெட்ஸ்சாம். அந்தப் பொண்ணு அண்ணாவோட ஜூனியராம். அப்போ இருந்தே அண்ணாவைப் பிடிக்குமாம்.

முதல்ல இது ஏதோ வயசுக் கோளாறுன்னு நினைச்சிருக்காங்க. ஆனா படிச்சு முடிச்சப்புறமும் அவங்களால மறக்க முடியலையாம்.

அதுக்கப்புறம் கௌஷிக் அண்ணாவைத் தேடிக் கண்டுபிடிச்சு அவங்க இவர் கூட இருக்குறதுத் தெரிஞ்சு இவர் கிட்ட வந்து கோரஸ் பாடுறதுக்காக சேர்ந்திருக்காங்க.”

“சத்யாம்மா, இதுக்கப்புறம் நான் சொல்றேன்” அமிர்தாவைப் பாதியில் நிறுத்திவிட்டுத் தான் ஆரம்பித்தான் ராகுல்.

“அந்தப் பொண்ணு ரொம்ப ஆசையா வந்து இந்தப் பெரிய மனுஷங்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணி இருக்கு. அதுக்கு இந்த வீணா போனவன் என்ன தெரியுமாம்மா பதில் சொல்லி இருக்கான்?”

“என்னத்த பெருசா சொல்லி இருக்கப் போறான்? என் ஃப்ரெண்டுக்கு இப்போ யாருமில்ல. இந்த சிட்சுவேஷன்ல நான் கல்யாணமெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்லி இருப்பான்” நொடித்துக் கொண்டார் சத்யவதி.

“கரெக்ட், உங்களுக்கு எப்படித் தெரியும் சத்யாம்மா?”

“நான் கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கட்டுமான்னு கேட்கும் போதெல்லாம் இதையே தானே சொல்லிக்கிட்டு இருந்தான்.”

“டேய்…டேய்…டேய் ஏன்டா இப்படிப் பண்ற? இந்த உலகத்துல நான் மட்டுமில்ல ராசா. என்னைத் தவிர உனக்கு முக்கியமானவங்க பலரும் இருக்காங்க. நீ என்னைய காரணமா காட்டியே எல்லாரையும் கஷ்டப்படுத்துவியா?” கோபமாக கௌஷிக்கிடம் பாய்ந்தான் ராகுல்.

“இங்க பாரு இப்பவும் சொல்றேன். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையலைன்னா அந்த வாழ்க்கை எப்பேற்பட்டதா இருந்தாலும் சரி அது எனக்கும் வேணாம். கடைசி வரைக்கும் எனக்கு நீ உனக்கு நான்னு வாழ்ந்துட்டுப் போவோம். நமக்கு சந்தோஷ் அப்படிங்குற முடிவுல தான் இருந்தேன்.

இப்போ அமிர்தா உன் லைஃப்ல வந்தப்புறம் நீ அவ கூட நிம்மதியா இருப்பேங்குற நம்பிக்கை வந்திருக்கு. அதனால தான் இப்பக்கூட நான் சம்மதிக்கிறேன். இப்பவும் எப்பவும் எனக்கு நீ ரொம்ப ரொம்ப முக்கியம்டா.”

கௌஷிக் சொல்லி முடிக்க மௌனமாகிப் போனான் ராகுல். எதில் குறை வைத்தாலும் தனக்கு நட்பு விஷயத்தில் கடவுள் அள்ளி அள்ளிக் கொடுத்திருப்பதாகத் தோன்றியது. நெக்குருகிப் போனான் மெல்லிசைக்காரன்.

“நீ நண்பேன்டான்னு சொல்லு, பாடா படுத்துறேன்னு சொல்லு, இல்ல என்ன வேணா சொல்லிக்கோ. ஆனா எனக்கு நீ தளபதி தான் டா. அந்த தேவாவுக்கு ஒரு சூர்யா மாதிரி இந்த ராகுலுக்கு ஒரு கௌஷிக்.” சொல்லிவிட்டு கௌஷிக்கை அணைத்துக் கொண்டான் ராகுல்ரவிவர்மன்.

ராகுல் மட்டுமல்ல கௌஷிக் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அமிர்தாவும் சத்யவதியும் கூட மெய் சிலிர்த்துப் போனார்கள் இவர்கள் இருவரின் நட்பைக் கண்டு.

“சம்மதத்தைக் கூட எப்படிச் சொல்றான் பாருங்கம்மா” சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு கௌஷிக்கின் முதுகில் நன்றாக அடித்துக் கொண்டே கேட்டான் ராகுல்.

“இவன் சம்மதிக்கிறது கிடக்கட்டும் ராகுல், இவன் பண்ணி வைச்ச கூத்துக்கு அந்தப் பொண்ணு இப்ப சம்மதிக்கணுமே” என்றார் சத்யவதி.

“சம்மதிக்காமலா அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்திருக்கா” கெத்தாகக் கூறினான் கௌஷிக்.

“தெரியுதுல்ல அவ அமெரிக்காவில இருந்து உனக்காகத் தான் வந்திருக்கான்னு தெரியுதுல்ல, போய் பேசினா என்னடா? அந்தப் பொண்ணு அமிர்தாகிட்ட அவ்வளவு ஃபீல் பண்ணிச் சொல்லி இருக்கு.” இது ராகுல்.

“அமிர்தா நீ பேசுனியாம்மா? என்னம்மா சொன்னா அந்தப் பொண்ணு?”

“சாயங்காலம் காஃபி ஷாப் கூட்டிட்டுப் போய் பேசினேன் அத்தை. அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு. வீட்ல அவங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருக்காங்க. அண்ணா கிட்ட வந்து பேசினா அண்ணாவும் இப்படிச் சொல்லிட்டாங்க.

அதான் என்ன பண்றதுன்னு தெரியாம கிடைச்ச வேலையை வாங்கிக்கிட்டு யூ.எஸ் போயிட்டாங்களாம். இப்போ இவங்க திரும்பி வந்ததே அவங்க அப்பா அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷமாம்.

நான் இவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து இவரைத் தொல்லை பண்ணக் கூடாதுன்னு தானே விலகிப் போனேன். உங்க மேரேஜுக்கு அப்புறம் கூட இவருக்கு என் ஞாபகம் வரலையேன்னு சொல்லிப் புலம்பித் தீர்த்துட்டாங்க.

பத்தாததுக்கு நேர்ல பார்த்துக் கூட அண்ணா கண்டுக்காம போன கடுப்பு வேற. கௌஷிக் அண்ணா, தீப்தி கொலை காண்டுல இருக்காங்க. கையில சிக்குனீங்க சின்னா பின்னமாகிடுவீங்க” சத்யவதியிடம் ஆரம்பித்து கௌஷிக்கிடம் சிரிப்புடன் முடித்தாள் அமிர்தா.

“என் ஃபுல் சப்போர்ட் என் மருமகளுக்குத் தான்ப்பா. அமிர்தா, தீப்தி கூட ஃபோட்டோ எதாவது எடுத்திருந்தா காட்டும்மா” இப்பொழுதே தன்நிலை விளக்கம் கொடுத்துவிட்டுக் கேட்டார் சத்யவதி.

“ஃபோட்டோ ஒன்னும் எடுக்கலையே அத்தை. ஆனா இன்னைக்கே உங்க கிட்ட இந்த விஷயம் பத்தி பேசிடுறதா சொல்லிட்டுத் தான் வந்தேன் அத்தை. நம்பர் இருக்கு, இருங்க வீடியோ காலே போட்டுப் பேசிடுவோம்.”

அமிர்தா கையில் ஃபோனை எடுக்க, சரியாக அந்நேரம் மெசேஜ் வந்ததற்கான ஒலி ஒலித்து அடங்கியது. வந்திருந்த மெசேஜைப் பார்த்துவிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் அமிர்தா.

அவள் சிரிப்பதைப் பார்த்து அனைவருக்கும் அவள் சிரிப்புத் தொற்றிக் கொண்டது.

“ஓய் சோனி, என்னன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல” அடக்க மாட்டாமல் கேட்டே விட்டான் ராகுல்.

அவனின் விளிப்பில் முறைத்தாலும் கையிலிருந்த அலைப்பேசியை சத்யவதி ராகுல் இருவரும் பார்க்குமாறு காண்பித்தாள் அமிர்தா. அதில், நடிகை ராதிகா பேசும் பட வசனத்தைப் பேசி டப்ஸ்மேஷ் செய்து அனுப்பி இருந்தாள் தீப்தி. அதுவும் கையில் கௌஷிக்கின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அதைப் பார்த்து வேறு பேசி இருந்தாள்.

“அதான்யா எனக்கும் தெரியலை, உன் நிறமும், உன் முடியும், மொகரக்கட்டையும்… ஆனா என்னவோ இருக்குய்யா உன்கிட்ட…” என்று முகத்தில் நவரசங்களும் போட்டிப் போடப் பேசி இருந்தாள் தீப்தி.

“அம்மாடி இந்தப் பயலுக்கு ஏத்த பொண்ணு இவ தான்மா, நான் முடிவே பண்ணிட்டேன்” பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கியபடி சொல்லிவிட்டு நகர்ந்தார் சத்யவதி.

“வசமா மாட்டுனடா நீ” சொல்லிவிட்டு ராகுலும் அமிர்தாவும் கூட நகர்ந்து விட, அந்த ஃபோனை எடுத்து அந்த வீடியோவை ரகசியப் புன்னகையுடன் ரசித்துப் பார்த்திருந்தான் கௌஷிக்.

**************

பிள்ளைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு ராகுலுக்காகக் காத்திருந்தாள் அமிர்தா. இருவருமே சிறிது நேரம் அந்த நீண்ட பால்கனியில் நிலவையும் கடலையும் அந்த ஏகாந்தத்தையும் ரசித்துக் கொண்டே சிறிது நேரம் பேசியபடி இருந்த பிறகே தூங்குவது வழக்கம்.

நீண்ட நேரமாக ராகுல் வராததால் அவனைத் தேடியபடி எழுந்து வந்தாள் அமிர்தா. ராகுலுக்கென்றுப் பிரத்யேகமாக ஒரு அறை மாடியில் இருந்தது. முழுக்க முழுக்க இசைக் கருவிகளால் நிறைந்திருந்தது அந்த அறை.

அங்கு பியானோவின் முன் கண் மூடித் தலை சாய்த்து அமர்ந்தவாறு இசைத்துக் கொண்டிருந்தான் ராகுல்ரவிவர்மன். இதுவரையில் வெளிவராத ராகமது. புதுப் படத்திற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். ராகம் திருப்தியாக அமைந்து போக அதையே திரும்பத் திரும்ப இசைத்துக் கொண்டிருந்தான்.

மெல்ல அந்த அறைக் கதவைத் திறந்துப் பார்த்த அமிர்தா, அவளும் அந்த மெல்லிசைக்காரனின் இசையில் மயங்கி லயித்து நின்றுவிட்டாள். பின் அவன் இருந்த மோன நிலையைக் கலைக்க விரும்பாதவளாகத் திரும்ப, சரியாக அந்நேரம் அவளைப் பார்த்துவிட்டு அழைத்தான் ராகுல்.

“அமிர்தா, வா உள்ள வா. ஏன் திரும்பிட்ட?”

“இல்ல. நீங்க ஏதோ முக்கியமா பண்ற மாதிரி இருந்தது. அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான்…”

“நம்ம ஊர்ல இருந்த போதே ஒரு நல்ல ஆஃபர் வந்துச்சு அமிர்தா. ராஜேந்திர பிரசாத் சார் படம். ஹிஸ்டரி சப்ஜெக்ட். செவன் லேங்குவேஜஸ்ல ரிலீஸ் பண்ண பிளான் பண்ணியிருக்காங்க. ரொம்பப் பெரிய பட்ஜெட் படம். அந்த வேலை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இப்போ கமிட் ஆகியிருக்குற படமெல்லாம் முடிச்சுக் குடுத்துட்டா நல்லது. அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் ஒர்க் பண்ண வேண்டி இருக்கு.”

“ஓ… இப்போ நீங்க வாசிச்சது புதுப் பாட்டா? ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அப்படி ஒரு ப்ளெசென்ட் ஃபீல். கண்டிப்பா இந்தப் பாட்டு சக்சஸ் ஆகும் பாருங்க ரவி.”

“ஆஹான்… இந்த டியூன் ப்ரொடியூசர், டைரக்டருக்கு எல்லாம் புடிச்சா தான் பாட்டா மாறும் மேடம்.”

“கேக்க எவ்வளவு நல்லா இருக்கு. இதைப் போய் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா?”

“அப்படி எடுத்த எடுப்புல ஒரே டியூன்ல எல்லாம் சேடிஸ்ஃபை ஆக மாட்டாங்கடா. நிறைய வெரைட்டி காமிக்கணும். பார்க்கலாம், எல்லாருக்கும் பிடிக்குதான்னு!”

“யாருக்குப் பிடிக்குதோ இல்லையோ எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. எனக்காக இன்னொரு தடவை வாசிச்சுக் காமிங்க ரவி” ஆர்வமாக அமிர்தா வினவ,

“உனக்கு இல்லாததா சோனி, வா இங்க வந்து உட்காரு. நீயே வாசிச்சுப் பாரு” சொல்லியபடி பியானோவின் முன் போடப்பட்டிருந்த, அவன் அமர்ந்திருந்த சற்றே பெரிய அளவிலான் குஷன் வைத்த திவான் போன்ற இருக்கையில் சற்றுத் தள்ளி அமர்ந்தான் ராகுல்.

“எனக்கு வாசிக்க எல்லாம் தெரியாது ரவி” அமிர்தா மறுக்க,

“வா, நான் சொல்லித் தரேன்” கொஞ்சமே கொஞ்சம் வற்புறுத்தி அங்கனையை அருகமர்த்திக் கொண்டான் மெல்லிசைக்காரன்.

“அமிர்தா, இந்த மூவி நான் கமிட் ஆகிட்டா டிஸ்கஷன் அது இதுன்னு கொஞ்சம் ட்ராவல் எல்லாம் பண்ண வேண்டி வரும். ராஜேந்திர பிரசாத் சாமான்யமா திருப்தி அடையிற ஆள் கிடையாது. ரொம்ப ஹார்ட் ஒர்க் தேவைப்படும். அப்படி நான் எங்கேயாவது ஃபாரின் கன்ட்ரீஸ் எல்லாம் போனா நீ இங்க தனியா சமாளிச்சுக்குவியா?” அருகில் இருந்தவளின் முகம் பார்த்துக் கேட்டான் ராகுல்.

அந்தக் கேள்வியைக் கேட்பதற்கே அவன் முகம் வெகுவாக சங்கடத்தைத் தாங்கி நின்றது. அதை விட இரு மடங்கு வேதனையை வெளிக்காட்டியது பெண்ணவளின் முகம்.

“எத்தனை நாள் ரவி? ரொம்ப நாள் ஆகுமா…”

“தெரியலையே டா. எப்படியும் மாசக் கணக்குல ஆகும்.”

“ஓ…” அணிச்சம் மலரென வாடிப் போனது அமிர்தாவின் முகம்.

“இந்தப் ப்ரொஜெக்ட் வேணா ட்ராப் பண்ணிடவா? பின்னாடி வேற சான்ஸ் எதாவது வராமலா போயிடும். அப்பப் பார்த்துக்கலாம்.”

“சேச்சே… அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க ரவி. இது எவ்வளவு பெரிய ஆஃபர். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நான் சமாளிச்சுக்குவேன். கௌஷிக் அண்ணா இருப்பாங்கல்ல. கல்யாணம் முடிச்சுட்டா தீப்தியும் கூட இருப்பாங்க. அப்புறம் என்ன ரவி? நீங்க கவலைப்படாம உங்க மியூசிக்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணுங்க. சரியா?”

தனக்காக இவ்வளவு பெரிய வாய்ப்பை அவன் நழுவ விடுவதா? அவனைப் பிரிவது வேதனையைக் கொடுத்தாலும் அவன் வளர்ச்சி தன் பொருட்டுத் தடைபடுவதை அமிர்தா விரும்பவில்லை.

“அதுக்கில்ல அமிர்தா, நாம இன்னும் ஜீவா அப்பா பிரச்சனையை முடிக்கலை. அதான் யோசனையா இருக்கு.” சொல்லியபடி தாடியை தடவிக் கொண்டான் ராகுல்.

“அதான் முழுசா பத்து கோடி தூக்கிக் குடுத்து இருக்கீங்களே. இதுக்கு மேல என்ன ரவி?”

“பணம் குடுத்தது ஜீவாவோட சித்தப்பாவுக்கு. அந்தாள் வாயை அடைக்க. எனக்கென்னவோ ஜீவா அப்பா இந்தப் பணத்துக்கெல்லாம் மடங்குற ஆளா தெரியலை. இதை இப்படியே விட்டுடுவாங்கன்னும் தோனலை.”

“ஆனா எனக்கு இப்ப அந்த மாதிரி எந்தப் பயமும் இல்லை ரவி” சொல்லியபடி லேசாக அவன் தோளில் தலையை மட்டும் சாய்த்துக் கொண்டாள். இப்பொழுது இது மாதிரியான லேசான தொடுகைகள் இருவருக்குள்ளும் சகஜமாகி இருந்தது.

“ஆனா இப்பத்தான் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு” ஒரு பெருமூச்சுடன் சொன்னான் ராகுல்.

“அடடா நான் உங்களை ஹீரோன்னுல்ல நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஹீரோ பயப்படலாமா? நீங்களே சொல்லுங்க.”

“பயம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் சோனி. பயம் தான் ஒரு மனுஷனை ஒரே இடத்துல தேங்க விடாம ஓட வைச்சுக்கிட்டே இருக்கு. பயம் இல்லைன்னா வாழ்க்கையில முன்னேற்றமும் இருக்காது. தெரியுமா?”

“ஆஹான், பயத்தைப் பத்தி அப்புறம் கிளாஸ் எடுக்கலாம். இப்போ மியூசிக்கை ஸ்டார்ட் பண்ணுங்க இசையமைப்பாளரே” கேலி போல அமிர்தா சொல்லவும் சிரித்தபடி பியானோவை இசைக்க ஆரம்பித்தான் மெல்லிசைக்காரன்.

முதலில் அவனின் இசையில் மயங்கியவள் பின் தானும் அந்தப் பியானோவை இசைக்க விரும்பினாள். அவள் கரம் பிடித்து அவளையும் இசைக்க வைத்தான், அவனும் இசைத்தான்.

இசை தந்த மயக்கத்தால் இருவரும் இருந்த அதீத நெருக்கத்தைப் பெரிதாகக் கணக்கில் கொள்ளவில்லை இருவருமே. அமிர்தாவின் இரு கரங்களும் பியானோ மீதிருக்க, ராகுலின் ஒரு கை அமிர்தாவின் கை மீதிருக்க மற்றொரு கையோ அவளின் இடை வளைத்துப் பின் பியானோவைத் தீண்டியது. தாடையோ பெண்ணின் தோளில் சௌக்கியமாக அமர்ந்திருந்தது.

எங்கெங்கோ பாடல்களில் சுற்றித் திரிந்தவர்கள் கடைசியாக இந்தப் பாடலில் வந்து நின்றார்கள். முதலில் ஆரம்பித்தது ராகுல் தான். பியானோவில் விளையாடிய அஞ்சனையின் கரங்கள் அவனை அவ்வாறு பாடத் தூண்டியது போலும்.

‘அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்

இசைந்து இசைத்ததுப் புது ஸ்வரம் தான்’ அவன் பாட,

“ஹை இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும் ரவி” குதூகலமாகச் சொன்னபடித் தானும் இணைந்துக் கொண்டாள்.

முதலில் பாடலில் மயங்கிப் போனவர்களை அந்தப் பாடலோ அல்லது வரிகளோ இன்றி இசையோ எதுவோ ஒன்று அவர்களுக்குள்ளே ஒருவர் மீது ஒருவர் தீராத மயக்கம் கொள்ள வைத்தது. தங்களையே மறந்த ஒரு மயக்க நிலையில் இருவரும் மாறி மாறிப் பாடிக் கொண்டிருக்க, ஒரு இடத்தில் வந்துத் தயங்கி நின்றது அமிர்தாவின் குரல்,

‘அணைத்து நனைந்தது தலையணை தான்

அடுத்த அடி என்ன எடுப்பது நான்?’

பாடல் வழியாகவே தன் மனதையும் தலைவனுக்கு மறைமுகமாக சுட்டிக் காட்டிவிட்டாள். பாடிவிட்டு அந்தக் கண்கள் இரண்டும் அவனையே பார்த்தபடி இருந்தது. அந்தப் பார்வையில் கொஞ்சம் ஏக்கமும் கலந்து இருந்ததோ?

‘படுக்கை விரித்தது….’ இதற்கு மேல் பாட நாணம் தடுக்க அமிர்தாவின் குரல் அத்தோடு நின்றது.

பாடல் நின்றவுடன் தான் தாங்கள் இருவரும் இருக்கும் நிலையும் புரிந்தது. இருவர் முகமும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க, மூச்சுக் காற்று இரண்டும் மோதிக் கொள்ளும் அளவு நெருக்கம். அந்த மான் விழிகள் இரண்டும் சொன்ன சேதியில் சொக்கித் தான் போனான் மெல்லிசைக்காரன்.

இடை வளைத்திருந்த கரம் இன்னும் கொஞ்சம் இறுக்கத்தைக் கூட்ட தேனுண்ணும் வண்டாக மாறி அவள் இதழ் பூவைத் தஞ்சமடைந்திருந்தான்.

முதல் முத்தம் பாவையை சற்றே தடுமாறச் செய்ய அவள் கைகள் நடுக்கத்தில் பியானோவின் கீ போர்ட்டை அழுந்தப் பற்ற அது பெரும் சத்தத்தை உருவாக்கியது.

அந்தச் சத்தம் இருவரின் மயக்கத்தையும் குலைப்பதற்குப் போதுமானதாக இருந்தது. வெட்கத்தில் சிவந்தத் தன் முகத்தை அவனிடமிருந்து மறைக்கும் பொருட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அமிர்தா.

ராகுலோ சட்டென்று எழுந்தவன் தன் உள்ளங்கையால் நெற்றியைப் பற்றிக் கொண்டு சில நொடிகள் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். பின்,

“சாரி அமிர்தா. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” அவள் முகம் பாராமலேயே சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறிச் சென்றுவிட்டான்.

‘நினைக்க மறந்தாய், தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரைத் திறப்பாயோ

திறந்து அகச்சிறை இருப்பாயோ

இருந்து இருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில்தானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவில் நானே அணைக்கிறேன்’