vav-17

vav-17

வா… அருகே வா! –  17

                                          பூங்கோதையின் விசும்பல் அடங்குவதாகத் தெரியவில்லை.

  ‘நீ அழுவ பியூட்டி. எனக்காக அழுவ…’ திலக் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலிக்க, பூங்கோதையை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் தடுமாறினான் திலக்.

              ‘தன் மனசை யார்கிட்டயும் சொல்லாத பியூட்டி… மனம் உடையாமல், அதைத் தானா சுமக்கும் பியூட்டி அழுதா… அழுதா… என் முன்னாடி அழுதா… நான் இருக்கேனு, என்னை நம்பி அழுதா!’ என்ற எண்ணம் தோன்ற, திலக்கின் கண்களில் நீர் திரண்டாலும், அவன் மனதில் ஓர் பெருமிதம்.

             ஆனால், பூங்கோதையின் அழுகை நீண்டு கொண்டே போக, “பியூட்டி… போதும்.” என்று அவளைச் சமாதானம் செய்தான் திலக்.

சமாதானம் தோற்க, திலக் பூங்கோதையிடம் கெஞ்சினான். கெஞ்சல் தோற்கக் கொஞ்சினான். கொஞ்சலும் தோற்க மிஞ்சினான் ராணுவ வீரன்.

     “இப்படிலாம் மிரட்டினாலும் நான் பயப்பட மாட்டேன்.” என்று அவன்  தோள்களை உரசியபடி, அவள் சிணுங்க திலக்கின் கண்களில் குறும்பு கூத்தாடியது.

     தன் மனைவியின்  ஆடை செய்யத் தவறிய பணியை அவன் கைகள்  மெல்லச் செய்ய, சரேலென்று அவனிடமிருந்து விலக முயல திலக்கின் பிடிமானம் இறுகியது.

    “என்ன செய்யறீக?” பூங்கோதை வெட்கத்தில் தவிக்க, “பியூட்டி…” அவன் குரல் கொஞ்சியது.

“மிலி…. ட்… ட…” அவள் வார்த்தை தடுமாற, “ம்… கூப்பிடு…” அவன் குரல் அழுத்தமாக ஒலித்தது.

   அவன் முகம் குறுஞ் சிரிப்போடு… புருவத்தை உயர்த்தியபடி அவன் கைகள் எல்லை மீறிக்கொண்டே, “என்ன சொல்லணும் பியூட்டி… சொல்லு…” என்று உற்சாகமாக அழுத்தமாக ஒலிக்க, “போங்க…” என்று வெட்கப்பட்டு, மெல்லிய புன்னகையோடு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூங்கோதை.

          அவளின் வாசத்தை தன் வசமாக்கி, “நீ இப்படி சட்டுன்னு அழுகையை நிறுத்துவன்னு தெரிஞ்சா, அப்பவே… இப்படி…” என்று திலக் இழுக்க, அவனைக் கோபமாக முறைத்தாள்.

           ‘உன் கோபம் எனக்கு எம்மாத்திரம்?’ என்று வினவுவது போல், சினத்தை வெளிப்படுத்திய அவள் முகத்தை அவன் இதழ்களால் கோலமிட… சினம் மறைந்து, அவள் முகம் வெட்கத்தை வெளிப்படுத்தியது.

                       பூங்கோதையின் வெட்கம், பியூட்டி என்று ராணுவ வீரன் அழைப்பது சரியென்பதை உறுதி செய்தது.

                                     பூங்கோதையின் வெட்கம், அவனுக்குச் சம்மதத்தைக் கூற, ‘ராணுவ வீரனுக்கே நேரம் குறைவு இதில் வெளி உலகத்திற்கு என்ன வேலை?’ என்று வினவுவது போல் காற்று வேகமாக வீச, அந்த அறையின் ஜன்னல் திரைச் சீலைகள் வேகமாக அந்த அறையை மூடிக் கொண்டன.

    முத்தம்மா ஆச்சி வீட்டில், பூங்கோதை பத்திரமாகச் சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்தான் கதிரேசன்.

                               திலக், பூங்கோதை இருவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்த பின்பே முத்தமா ஆச்சியும், பார்வதி ஆச்சியும் நிம்மதி அடைந்தனர்.

       அவர்களிடம் கூறிவிட்டு கதிரேசன் அவர்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

     அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, “வள்ளி சொல்லு.” என்று மெல்லிய புன்னகையோடு பேச ஆரம்பித்தான் கதிரேசன்.

“பூங்கோதை பத்திரமா அங்கன போய்ட்டாகளா?” என்று வள்ளி சுவரில் சாய்ந்தபடி கேட்க, “பத்திரமா போய்ட்டா, திலக்கையும் பார்த்தாச்சு.” என்று கதிரேசன் கூற, “அதுதானே  பார்த்தேன். இல்லைனா, நீங்க என் கிட்ட பேசுவீகளா?” என்று வள்ளி வம்பிழுக்க, பெருங்குரலில் சிரித்தான் கதிரேசன்.

    “என்ன சிரிப்பாணி? இப்படியே என் கேள்விக்கு பதில் சொல்லாம மழுப்பிரலாமுன்னு பாக்குறீகளா?” என்று வள்ளி கேட்க, “அது கடமை வள்ளி.” என்று கதிரேசன் வள்ளிக்குப் புரிய வைக்கும் நோக்கோடு கூறினான்.

          “அப்ப நானு? என் கிட்ட கடமை கிடையாதா?” என்று வள்ளி மேலும் வம்பிழுக்க, “நீ என் கடமை கிடையாது வள்ளி. என் வாழ்க்கை.” என்று நிதானமாகக் கூறினான் கதிரேசன்.

     “நல்ல பேசுதீக.” என்று வள்ளி இழுக்க, “எது நல்லா இல்லைன்னு சொல்லு… மாத்திப்போம்.” என்று கதிரேசன் வள்ளியின் போக்கில் பேசினான்.

    “எதுவும் மாறவேண்டாம். எல்லாம் நல்லா தான் இருக்கு.” என்று வள்ளி வெட்கப்பட்டாள்.

                  “வள்ளி…” கதிரேசன் தயக்கத்தோடு நிறுத்த, “ம்…” என்று வள்ளி இழுத்தாள்.

    கதிரேசன் மேலும் தயங்க, “இப்படித்தேன், ஒவ்வொரு தடவையும் தயங்கித் தயங்கிய நிக்கறீக.” என்று வள்ளி சிணுங்கினாள்.

           “நீ படிச்ச பொண்ணு. உனக்கு பக்குவம் அதிகம் இருக்கும்.” என்று கதிரேசன் தொடங்க, “எதை சொல்றதுக்கு இத்தினி பீடிகை? என்னை இவ்விளவெல்லாம் புகழ வேணாம். சொல்லுங்க நான் புரிஞ்சிக்கிறேன்.” என்று பட்டென்று கூறினாள் வள்ளி.

     ‘நல்லா தான் பேசுவா. சில சமயம் பட்டுன்னு பேசுவா… பூங்கோதை பத்தி பேசினா என்ன சொல்லுவா?’ என்ற எண்ணம் கதிரேசன் மனதில் தயக்கமாக ஓட, “என்ன அமைதியாகிடீக?” என்ற வள்ளியின் கேள்வி கதிரேசனை மீண்டும் நனவுலகத்திற்கு அழைத்து வந்தது.

                  “பூங்கோதை…” என்று கூறி நிறுத்தி நிதானமாகப் பேச ஆரம்பித்தான் கதிரேசன். கதிரேசனின் குரலில் உள்ள தீவிரத்தில் வள்ளி எதுவும் பேசாமல், “ம்…” கொட்டினாள்.

              “இல்லை..  பூங்கோதைக்கு யாரும் கிடையாது வள்ளி. நாம தான் எல்லாம். இப்ப திலக் இருந்தாலும், திலக் கூட இருக்க மாட்டான். அந்த பதட்டம்தான்.” என்று கதிரேசன் இழுக்க, “புரியுதுங்க. எல்லாரும் ராணுவ வீரரை பத்தி பேசுவாக. ஆனால், அவுக  மனைவி? அவுக குடும்பம்? நினைச்சாலே பக்குன்னு தாங்க இருக்கு. பூங்கோதை இந்த கல்யாண்துக்கு எப்படி ஒத்துக்கிட்டா?” என்று வள்ளி கேள்வியாக நிறுத்தினாள்.

     “பூங்கோதை கிட்ட கேட்டு சொல்லுதேன்.” என்று கதிரேசன் நக்கலாகக் கூற, “அது சரி…” என்று வள்ளி கழுத்தை நொடித்தாள்.

   “என்னவா இருந்தாலும், என்னக்கெல்லாம் இப்படி ஒரு மாப்பிளை பார்த்திருந்தா கட்டிருக்க மாட்டேன். எங்க வீட்லயும் இப்படி எல்லாம் கொடுக்க மாட்டாக.” என்று வள்ளி நிறுத்த, ‘ஒருவேளை, பூங்கோதைக்கு அம்மா, அப்பா இருந்திருந்தா கொடுத்திருக்க  மாட்டாகளோ?’ என்ற எண்ணத்தோடு கதிரேசனும் மௌனித்தான்.

     “நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கதிரேசனின் மௌனத்தில் கலங்கி கேட்க, “இல்லை… அப்படி எல்லாம் இல்லை வள்ளி. திலக் ரொம்ப நல்லவன்.” என்று கதிரேசன் கூற, “இந்த நேரம் போயிருக்காகளே! கல்யாணத்துக்கு வந்திருவாக்கல்ல?” என்று வள்ளி சந்தேகமாகக் கேட்டாள்.

     “அதெல்லாம் நிச்சயமா வந்திருவாக.” என்று கதிரேசன் உறுதியாகக் கூற, வள்ளியின் குறும்பு மேலோங்கியது.

             “ஹப்பா…” என்று வள்ளி பெருமூச்சு விட, “என்ன?” என்று கதிரேசன் சந்தேகமாகக் கேட்டான்.

    “இல்லை… இல்லை… உங்க அத்தை மகள் வரலைன்னா, பூங்கோதை இல்லை, என் நண்பன் இல்லைன்னு என் கழுத்தில் தாலி கட்டலைனா?” என்று கூறி வள்ளி கிண்கிணியாக சிரிக்க, “என்ன வள்ளி கேலி பேசுதியா?” என்று கதிரேசன் தன் வருங்கால மனைவியின் குறும்பை ரசித்தபடி கேட்டான் கதிரேசன்.

    வள்ளி தன் வாயை பொத்தி மீண்டும் சிரிக்க, “எல்லாரும் முக்கியம் தான். அதுக்காக உன்னை விடவா வள்ளி? உன்னை கட்டிக்கிட்டு, எந்த கடமையும் சேர்ந்தே தான் செய்வோம்.” என்று கதிரேசன் கூற, வள்ளி தலை அசைத்தாள்.

               அவர்கள் பேச்சுக்கள் நீண்டு கொண்டே போனது.

         மறுநாள் காலையில் திலக், பூங்கோதையை எழுப்பக் குளிர் தாங்காமல் பூங்கோதை நடுங்கிக் கொண்டு போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.

  போர்வைக்குள் இருந்து  பூங்கோதையின் முகம் மட்டுமே தெரிய, அவள் முகத்தை தன் விரல்களால் தீண்டியபடி, “பியூட்டி… நாம, இன்னைக்கி  குல்மார்க் போறோம். எழுந்திரு.” என்று திலக் கூற, “அப்படினா?” என்று கேட்டுக்கொண்டே பூங்கோதை திரும்பிப் படுத்தாள்.

           அவள் காதருகே இருக்கும் முடியை ஒதுக்கி விட்டு, ‘சொன்னால் பியூட்டி சந்தோஷப்படுவா… துள்ளிக் குதித்து ஆச்சரியப்படுவா?’ என்ற கற்பனையோடு, “பனிக்கட்டி மலை!” என்று  ஆர்வமாக கூறினான் திலக்.

      “ம்… க்கும்..” என்று பூங்கோதை சலித்துக் கொள்ள, “ஹே… பியூட்டி. உனக்கு இன்னைக்கி என்ன ஆச்சு?” என்று திலக் பரிதாபமாகக் கேட்டான்.

        “ரோஜா படத்தில், அரவிந்தஸ்வாமி கண்ணை கட்டிக்கிட்டு கூட்டி போற மாதிரி கூட்டிட்டு போகணும் மிலிட்டரி.” என்று கண்களைத் திறக்காமல் கூறினாள் பூங்கோதை.

            ‘இது நம்ம பியூட்டியா?’ என்ற சந்தேகம் திலக்கின் மனதில் எழ, பேச வாரத்தை வராமல் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் திலக்.

   “என்ன பதிலை காணும் மிலிட்டரி? பண்ணுவீகளா? மாட்டீகளா?” என்று பூங்கோதை கண்களை திறந்து கேட்க, “அது மட்டும் போதுமா? இல்லை…” என்று அவன் இழுக்க, “யாரவது வேணாமுன்னு சொல்லுவாகளா?” என்று பூங்கோதை  குறும்பு கொப்பளிக்கக் கேட்க, அவள் காதை திருகினான் திலக்.

     “மிலிட்டரி…” என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்  பூங்கோதை.

“கிளம்ப சொன்னா, என்ன படுத்துகிட்டே பேச்சு? ஒரு தடவை கண்ணை கட்டி கூட்டிட்டு வந்தா பத்தாது?” என்று திலக் அவளைச் செல்லமாக மிரட்ட, அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டு, “பத்தாது… பத்தாது….” என்று கூறிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் பூங்கோதை.

              ஜன்னல் வழியாக இயற்கையை ரசிக்கும் படியாக அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான் திலக்.

      ‘பூங்கோதையை சின்ன வயசிலிருந்து பாக்குறேன். ஒரு அனுதாபம் உண்டு. அவ வளர வளர எனக்கு அவளைப் பிடிக்கும். ஆனால், இவ்விளவா?’ என்று தன்னை நினைத்து பிரமித்து போனான் திலக்.

         ‘பியூட்டிக்கும் என்னை அந்த அளவுக்கு பிடிச்சிருக்கு.’ என்ற எண்ணம் தோன்ற, அவன் கண்கள் கலங்கியது.

       ‘நான் இத்தனை பலவீனமானவனா? பியூட்டி… இந்த ஒரு வார்த்தை என்னை என்னன்னவோ செய்யுதே. அவ அழுதா தாங்கலை. அவ சிரித்தாலும், இத்தனை வருஷம் அவ இப்படி சிரிக்கலையேன்னு மனசு வருத்ததப்படுது… அவள் கெஞ்சும் போதும், கொஞ்சும் போதும்… அவ பக்கத்துலயே இருக்கனுமுனு தோணுதே.’ என்று அவன்  சிந்தனை ஓட, திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தான் திலக்.

       “இது சரி இல்லை. ஒரு ராணுவ வீரனுக்கு இது அழகில்லை.” என்று தனக்கு தானே கூறிக்கொண்டான் திலக்.

மேலும் பல சிந்தனையோடு திலக் அமர்ந்திருக்க, குளித்து முடித்து காபி தூள் நிறத்தில், வெள்ளை நிற பூக்கள் படர்ந்திருப்பது போல் சேலை கட்டிய பூங்கோதை சத்தம் எழுப்பாமல் மெல்ல மெல்ல நடந்து திலக்கின் காதருகே, “ப்ப்பா…” என்று கத்த, திலக் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

     “ஹ… ” என்ற சிரிப்போடு அவளை முன்னே இழுத்து, அவள் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டை சரி செய்ய… அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்து,  “எதுவும் பிரச்சனையா? அமைதியா இருக்கீக?” என்று கேட்டாள் பூங்கோதை.

         “அது… உன் அழகில் மயங்கி, வாயடைச்சி போய்ட்டேன்.” என்று கூறிக்கொண்டே, பூங்கோதைக்கு ஜெர்கின் அணிவித்து, தானும் அணிந்து கொண்டு அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான் திலக்.

      இந்தியப் பாகிஸ்தான் எல்லையில், அவர்கள் உரையாடல் ஹிந்தியில் இருந்தது.

                    “நம்மள யாரு மனித வெடிகுண்டா போகப்போறோம்?” என்று ஒரு குறுந்தாடி வைத்த  ஒருவன் கனத்த குரலில் கேட்க, “இல்லை… யாரவது உயிரோட வேணும்.” என்று மற்றொருவன் கூறினான்.

        “இல்லை… ஒருத்தன் உயிரோட வந்தும் பிரயோஜனமில்லை. மீடியா… பிளடி மீடியா… அவனைச் செய்தி போட்டே காப்பாத்திரும்…” என்று கூற, “நமக்கும் ரகசியம் வேணும்.” என்று நெட்டை மனிதன் எழுந்து நின்று ஆங்காரமாகக் கத்தினான்.

          வெறி கொண்ட குறுந்தாடி மனிதன், தன் துப்பாக்கியை மேலே  நோக்கிச் சுட, ” வீல்….” என்று சத்தத்தோடு அங்கிருந்த பறவை செத்து விழுந்தது.

“மரணம்… மரணம்… மரணம்…. இது நமது லட்சியம்.” என்று கூறிக்கொண்டு, கூட்டம் கலைந்தது என்பது போல் எழுந்து சென்றான் அந்த குறுந்தாடி மனிதன்.

    அவன் தான் தலைவன் போலும்! அனைவரும் அவனைப் பின்பற்றிச் சென்றனர்.

அதே நேரம் குல்மார்கில்….

       மிலிட்டரி பின்னே, பூங்கோதையின் கண்களை மூடிக் கொண்டு வர பூங்கோதை முன்னே நடந்து சென்றாள்.

    “மிலிட்டரி… எதோ தூக்க கலக்கத்தில், ரோஜா படம் கனவுல வந்ததும், தெரியாம கேட்டுட்டேன். அதுக்காக இப்படியா? இப்படி நடக்குறது கஷ்டமா இருக்கு மிலிட்டரி.” என்று பூங்கோதை கெஞ்சினாள்.

        “பொஞ்சாதி ஆசை பட்டா கண்டிப்பா நிறைவேத்தனும். அதுவும் பியூட்டீன்னா, அதீத அவசியமித்தேன்.” என்று திலக் கூற, “ரொம்ப குளுருது. இதுல இப்படி வேற கூட்டிட்டு போனா என்ன அர்த்தம்?” என்று தன் கைகளைக் குறுக்கே கட்டிக்கொடு அவள் நடுங்க, அவள் மேல் சாய்ந்து கொண்டு அவன் வெப்பக்காற்றில் அவளை அணைத்துக் கொண்டு, “இப்ப?” என்று கேட்டான் திலக்.

     “ரொம்ப அவசியம். கண்ணை திறங்க.” என்று தன் கால்களைத் தரையில் உதைத்தாள் பூங்கோதை.

       அவள் கால்களில் மாட்டியிருந்த பூட்ஸ் சற்று வழுக்க, கீழே இருந்த பனிக்கட்டி பொடியாகி அங்கு வீசிய காற்றில் பறக்க, அவள் சேலை வழியாகக் கால்களைத் தீண்டிய பனிக்கட்டியின் குளிரில், “ஐயோ! குளுருது மிலிட்டரி.” என்று குளிர் தாங்காமல் நடனம் ஆடினாள் பூங்கோதை.

     “இதுக்குத்தேன் சொல்லுதேன். என் சொல் பேச்சு கேட்டு வான்னு…” என்று அவளைச் செல்லமாக மிரட்டிக்கொண்டு, அழைத்துச் சென்றான் திலக்.

                               அங்குச் சென்று திலக் பூங்கோதையின் கண்களிலிருந்து கைகளை விலக்க, பூங்கோதை பார்த்த காட்சி….

காஷ்மீரில் பயணம் தொடரும்….

வா… அருகே வா!  வரும்….

error: Content is protected !!