NPG-20 Final

கீதாஞ்சலி – 20

அந்தக் கல்யாண மண்டப வாசலில் இருந்த ‘கௌஷிக் வெட்ஸ் தீப்தி’ பதாகை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக பூக்களாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.

முதல் நாள் இரவு நிச்சயதார்த்தமும் வரவேற்பும் முடிந்திருக்க இப்பொழுது முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வருமாறு சொல்லிய பிறகும் இருவரும் வந்து சேரவில்லை.

“ம்மா ராகுல் எங்கம்மா?” என்று சத்யவதியிடம் கௌஷிக் கேட்டுக் கொண்டிருக்க, தீப்தியோ அமிர்தாவைத் தான் வெகு நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சத்யவதியும் வாசுகியும் இருவரையும் தேடி மண்டபத்தில் அவர்கள் தங்கி இருந்த அறைக்கே வந்துவிட்டார்கள். அறைக்கதவை அவர்கள் தட்டும் முன்னமே அந்தக் கதவு தானாகத் திறந்து கொண்டது.

அங்கு அவர்கள் கண்ட காட்சி இருவர் முகத்திலுமே ஒரு விரிந்த புன்னகையை உண்டாக்கியது. அமிர்தா ட்ரெஸ்சிங் டேபிள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருக்க அவளுடைய நீண்ட கூந்தலைப் பின்னலிட்டுக் கடைசியில் குஞ்சம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்.

அமிர்தாவின் முன் நிரஞ்ஜலா முதுகு காட்டி நின்று கொண்டிருக்க, அவளுக்கும் தன்னைப் போலவே ஜடைப் பின்னிக் குஞ்சம் வைத்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. சந்தோஷ் நிரஞ்ஜலாவின் முன் முழங்காலிட்டு நின்றபடி அவள் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தான். தலையை எந்தப் பக்கமும் ஆட்டாமல் அசைக்காமல் பொறுமையாக நின்று கொண்டிருந்தாள் நிலா பாப்பா.

“இது வரைக்கும் கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை ரெடியாக லேட்டாகித் தான் பார்த்திருக்கேன், கேள்விப்பட்டு இருக்கேன். இப்படித் துணைப் பொண்ணும் மாப்பிள்ளையும் ரெடியாக லேட் பண்ணி இப்பத்தான் பார்க்கிறேன்” சத்யவதி சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைய,

“பாருங்க அத்தை இவங்க பண்றதை, பியூட்டிஷியன் ஏற்கனவே செஞ்சதை நல்லா இல்லைன்னு சொல்லிப் பிரிச்சுத் திரும்பப் பின்னிக்கிட்டு இருக்காங்க” குற்றப் பத்திரிக்கை வாசித்தாள் அமிர்தா.

“நீ தான் மெச்சிக்கணும் உன் பியூட்டிஷியனை. நீங்களே சொல்லுங்கம்மா, இந்தப் புடவைக்கு இப்படித் தளரத் தளரப் பின்னி குஞ்சம் வைச்சு நல்லா நிறைய பூ வைச்சா தானே அழகா இருக்கும்” என்று சத்யவதி வாசுகி இருவரிடமும் நியாயம் கேட்டான் ராகுல்.

“நீ சொன்னா சரிதான் ராகுல்” வாசுகி உடனடியாக ஒத்துக் கொண்டுவிட,

“அப்படி என்னப்பா உனக்குப் பிடிக்காததை அந்தப் பியூட்டிஷியன் செஞ்சு வைச்சாங்க?” எதிர்க் கேள்வி கேட்டார் சத்யவதி.

“நல்லா உயரத் தூக்கிக் கொண்டை போட்டு வைச்சிருந்தாங்கம்மா.” கொண்டை போட்டதை உலக மகா குற்றமாகச் சொல்லி வைத்தான்.

“அந்தக் கொண்டையை நானே போட்டு விட்டு இருப்பேனே. இதுக்கு எதுக்காம் அவ்வளவு காசு கொடுத்து பியூட்டிஷியன்?” ராகுலுக்குத் தகுந்தவாறு வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் அங்குப் பந்தாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூவை எடுத்து அமிர்தாவின் தலையில் சூடிக் கொண்டிருந்தது.

அலங்காரம் முடிந்தாலொழிய ராகுல் வர மாட்டான் என்பதுத் தெரிந்த பிறகு விரைவாக அதை முடிப்பது தானே புத்திசாலித்தனம். எனவே காரியத்தில் இறங்கி விட்டார் சத்யவதி.

“இவளும் அவங்க செஞ்சதுக்கு ஓகேங்கறா ம்மா” சொல்லிக் கொண்டே நெற்றிச் சுட்டியை எடுத்து அவள் பிறை நெற்றியில் சூடிக் கொண்டிருந்தான்.

வாசுகியோ அங்கிருந்த ஜடை வில்லைகளை எடுத்துக் கொண்டவர் அதை அமிர்தாவின் ஜடையில் பொருத்திக் கொண்டிருந்தார்.

“ராகுல் கண்ணா, உன் இஷ்டப்படி உன் பொண்டாட்டிக்கு அலங்காரம் பண்ணியாச்சா? இப்போ மணவறைக்குப் போகலாமா? ஐயர் ரொம்ப நேரமா வெயிட்டிங்ப்பா”

சத்யவதி சொல்லவும் கணவனும் மனைவியும் அசடு வழிய சிரித்து வைக்க, குழந்தைகள் இருவரும் அவர்களைப் பார்த்துவிட்டு அதைப் போலவே சிரித்து வைத்தார்கள்.

ராகுலும் சந்தோஷும் ஒன்றாக மெரூன் நிறத்தில் லேசான கல்வேலைப்பாடுடன் கூடிய குர்தாவும் பட்டு வேஷ்டியும் அணிந்திருக்க, அமிர்தாவின் புடவையைப் போலவே நிரஞ்ஜலாவும் பாவாடை சட்டை அணிந்திருந்தாள்.

அவர்கள் ஒரு குடும்பமாக மாறி நிற்பதே சத்யவதிக்குக் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. புடவைத் தலைப்பால் தன் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“வாங்க போகலாம்” என்று சத்யவதியும் வாசுகியும் முன்னே நடந்துவிட அவர்களை வால் பிடித்துக் கொண்டே சந்தோஷும் நிலாவும் விட்டால் போதுமென்று ஓடியே போனார்கள்.

‘போகலாமா’ என்று கண்களாலேயே ராகுலிடம் வினவிவிட்டு ஒரெட்டு எடுத்து வைத்தவளைக் கரம் பிடித்துத் தடுத்தான் மெல்லிசைக்காரன்.

வெளிர் பச்சையில் அடர் பிங்க நிற பார்டர் வைத்தப் புடவை அணிந்து, காதுகளில் குடை ஜிமிக்கி நர்த்தனமாட, கழுத்தில் பொருத்தமாக மரகதப்பச்சைக் கற்கள் பதித்த அட்டிகை. அதற்குப் பொருத்தமாக வளையல்கள் கைகளில் சிணுங்கிக் கொண்டிருந்தது. இடையில் கண்ணை உறுத்தாத வகையில் மெல்லிய ஒட்டியாணம். அழகுப் பதுமையாகத் தன் முன் நின்றவளைக் கண்களால் கவர்ந்து கொண்டிருந்தான்.

“ரவி… லேட்டாச்சு. போகலாம்” அவன் தோள் பற்றிக் கூறினாள் அமிர்தா.

“ம்ம்ம் போகலாம். உன் ரவியைக் கொஞ்சம் கவனி. போகலாம்.”

“அதெல்லாம் எப்ப கவனிக்கணுமோ அப்ப கவனிப்போம். இப்பக் கிளம்புங்க ரவி” சிணுங்கலாகக் கூறினாள் அமிர்தா.

“நேத்தும் இப்படித்தான், நீ பாட்டுக்குப் போய் தீப்தியோட தூங்கிட்ட. நான் வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தேன். அதுவும் நேத்து எவ்வளவு அழகா இருந்த தெரியுமா?” சொல்லிவிட்டு சின்னக் குழந்தையைப் போல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,

“அப்போ இன்னைக்கு அழகா இல்லையா?” கேட்டுக் கொண்டே அவன் காலின் மீது ஏறி நின்று இரு கன்னத்திலும் முத்தம் வைக்க அந்தக் குறும்பனோ இதழ்களைச் சுட்டிக் காட்டினான்.

அவன் இதழ்களில் விரலால் மெல்ல ஒரு அடி போட்டவள், “இதுக்கு மேல போனா புடவை கசங்கிடும். இப்போ இது போதுமாம். நீங்க குட் பாயா இப்பக் கிளம்பினா நைட் ஸ்பெஷலா கவனிப்பேனாம்” சொல்லிச் சிரிக்க,

“அதை நைட் பார்க்கலாம். இப்போ அலங்காரம் பண்ணி விட்டதுக்கு ஃபீஸ் வாங்க வேண்டாம்?” சொல்லிக் கொண்டே அவள் இடை வளைத்தவன் தன் தேவை தீர்ந்த பிறகே அவளை விடுவித்தான்.

ஒரு வெட்கச் சிரிப்போடு நகரப் போனவளின் கன்னம் பற்றி நெற்றியில் இருந்த பொட்டை மீண்டும் சரியாக வைத்து விட்டான். அவன் செய்கையில் நெகிழ்ந்தவளாக அங்கிருந்த குங்குமச் சிமிழை எடுத்து அவன் புறம் நீட்ட நெற்றிச்சுட்டியை ஒற்றைக் கையால் பற்றிக் கொண்டு அவள் நெற்றி வகிட்டில் அந்தக் குங்குமத்தை வைத்து அழகுப் பார்த்தான் மெல்லிசைக்காரன்.

‘நெற்றிப் பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே’ என்றுப் பின்னணி இசை ஒலிக்காத குறையாகத் தங்களை மறந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றிருந்தார்கள்.

அதற்குள் மீண்டும் வாசல் பக்கம் அரவம் கேட்க இருவரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தனர். அங்கு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு இவர்கள் இருவரையும் பொய்க் கோபத்துடன் முறைத்துக் கொண்டே கௌசல்யா, கௌஷிக்கின் தங்கை நின்று கொண்டிருந்தாள்.

“ராகுல் அண்ணா, நீங்க எங்க, எங்கன்னு அங்க எங்க அண்ணன் கத்திக்கிட்டு இருக்காங்க. நீங்க இங்க ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? சீக்கிரம் வாங்கண்ணா”

மீண்டும் ஒரு அசட்டுச் சிரிப்பை சிந்திவிட்டு இருவரும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். அதற்குப் பிறகு நிற்க நேரமில்லாமல் கல்யாண வேலைகள் இருவரையும் சூழ்ந்து கொண்டது.

அடர் குங்கும் நிறத்தில் புடவை முழுக்க தங்க நிற சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுப் புடவை அணிந்து சர்வ அலங்கார பூஷிதையாகத் தன்னருகே வந்தமர்ந்தவளை இமைக்கவும் மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌஷிக்.

தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாசுகி கலங்கிய கண்களை வெளிக்காட்டாமல் மறைத்திருக்க, ருத்ரமூர்த்தியோ அழுதே விட்டார். அவரின் அழுகையைப் பார்த்து தீப்திக்கும் கண்கள் கலங்கிவிட, ராகுல் தான் ருத்ரமூர்த்தியை சமாதானப்படுத்தினான்.

சுற்றத்தார்கள் அனைவரும் அட்சதைத் தூவி ஆசீர்வதிக்க மங்கள நாணை தீப்தியின் கழுத்தில் அணிவித்து அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான் கௌஷிக். நிறைந்த மனதுடன் மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர் சத்யவதி, ருத்ரமூர்த்தி மற்றும் வாசுகி.

ஆர்ப்பாட்டமாகத் தன் நண்பனைக் கட்டி அணைத்துக் கொண்டான் ராகுல். தீப்தியை அமிர்தாவும் கௌசல்யாவும் சூழ்ந்து கொள்ள அந்த இடமே கலகலப்பாக மாறிப் போனது. அதன் பிறகு வந்த சடங்குகள் அனைத்தும் இளையவர்கள் குறும்பிலும் கேலியிலுமே நகர்ந்தது. விருந்தோம்பல் முடிந்து அனைவரும் வீடு வந்து சேர மாலை நேரம் ஆகியிருந்தது.

மணமக்களுக்குப் பாலும்பழமும் கொடுப்பதுப் போன்ற சடங்குகளை முடித்துவிட்டு, மறுநாள் மறுவீடு அழைப்பு இருப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவென ருத்ரமூர்த்தியும் வாசுகியும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமார்கள். அதுவரையில் இருந்த மகிழ்ச்சி மாறி தீப்தியின் முகம் வாடிப் போனது.

சத்யவதியின் கைகளைப் பற்றிக் கொண்ட வாசுகி, “வளர்ந்துட்டாலும் இன்னமும் அவ சின்னப் பொண்ணு தான் அண்ணி. எதாவது அவளுக்குத் தெரியலைன்னா நீங்க சொல்லிக் குடுங்க, அவ கேட்டுப்பா.” இதற்கு மேல் கூற முடியாமல் நா தழுதழுக்க,

“இதெல்லாம் நீ சொல்லணுமா வாசு. கௌசல்யா மாதிரி, அமிர்தா மாதிரி, தீப்தியும் எனக்கு ஒரு பொண்ணு தான். எல்லாரும் ஒரே ஊருக்குள்ள தானே இருக்கோம். நினைச்சா ஓடி வந்துடலாம். நீ வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காம தைரியமா இரு. நீயே இப்படி அழுதா அப்புறம் அண்ணனை யாரு சமாதானப்படுத்துறது சொல்லு.” என்று சொல்லிக் கண்களாலேயே ருத்ரமூர்த்தியை சுட்டிக் காட்டினார் சத்யவதி.

ருத்ரமூர்த்தி வெகுவாகக் கலங்கிப் போய் இருந்தார். இதுவரையில் மகளைப் பிரிந்தேயிராத தந்தையில்லை என்றாலும் ஏனோ இப்பிரிவு அவரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. மகளிடம் சென்றவர்,

“பாப்பா” என்றழைத்து அவள் தலை கோத,

“அப்பா” என்ற கேவலுடன் அவள் தோள் சாய்ந்து கொண்டாள் தீப்தி. மகளின் அழுகைப் பொறுக்க மாட்டாமல் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு,

“அழக்கூடாது பாப்பா. சந்தோஷமா இருக்கணும். ஆசைப்பட்ட வாழ்க்கை நம்ம கைக்குக் கிடைச்சிடுச்சுன்னு அதை அலட்சியப்படுத்தக் கூடாது பாப்பா. எப்போதுமே அதை ஒரு பொக்கிஷமா நினைச்சுப் போற்றிப் பாதுகாக்கணும். இதுக்கு மேல நான் என்ன சொல்ல? புரிஞ்சு நடந்துக்கோ டா.”

மகளிடம் சொல்லிவிட்டு கௌஷிக்கின் பக்கம் வந்தவர், “ஒத்தைப் பொண்ணு மாப்பிள்ளை. செல்லமா மட்டுமில்ல தன்னம்பிக்கை தைரியம் எல்லாமே சொல்லிக் குடுத்து தான் வளர்த்திருக்கேன்.

கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி. அது உங்க விஷயத்துலேயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதுக்காக தொட்டதுக்கெல்லாம் பிடிவாதம் பிடிக்குற ஆளில்லை என் பொண்ணு. இனி அவளை சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.” சொல்லிவிட்டுக் கௌஷிக்கின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

“நீங்கக் கவலைப்படாதீங்க மாமா. தீப்தியை உங்க அளவுக்கு முடியலைன்னாலும் அவ மனசு வாடாமப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு” பற்றியிருந்த ருத்ரமூர்த்தியின் கரத்தில் சற்றே அழுத்தத்தைக் கூட்டிச் சொல்லி முடித்தான் கௌஷிக்.

இவ்வளவு கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தாங்குமா மெல்லிசைக்காரனின் மனம். அவனே மென்னய உணர்ச்சிப் பாங்கானவன். அவன் கண்களும் கூடக் கலங்கிப் போக,

“இப்ப எதுக்குப்பா நீங்க இவ்வளவு ஃபீல் பண்றீங்க? நீங்களும் அம்மாவும் எதுக்குத் தனியா இருக்கணும்? பேசாம நீங்களும் எங்க கூடவே வந்து இருந்துடுங்க. பாருங்க தீப்தி எப்படி அழறான்னு. இதுவும் உங்க வீடு மாதிரி தான். அதனால நீங்களும் அம்மாவும் இங்கேயே இருந்துடுங்க” என்றான் ருத்ரமூர்த்தியிடம்.

“ஆரம்பிச்சுட்டான்டா….” என்று கௌஷிக் தலையில் கை வைத்துக் கொள்ள,

“என்ன மாப்பிள்ளை?” ஒன்றும் புரியாமல் கௌஷிக்கிடம் வினவினார் ருத்ரமூர்த்தி.

“இவனுக்கு இதே வேலை மாமா. இவனுக்குத் தெரிஞ்சவங்க யாரும் தனியா இருந்திடவே கூடாது. முதல்ல என்னையும் அம்மாவையும் இங்கேயே தங்க வைச்சான். அவ்வளவு ஏன் கௌசல்யா மாப்பிள்ளைக்கிட்ட கூட சொல்லியாச்சு. நீங்க எதுக்கு அவ்வளவு தூரம் தள்ளி ஆஸ்திரேலியாவுல இருக்கீங்க. இங்கேயே வந்துடுங்கன்னு. இப்போ அடுத்தது நீங்களும் அத்தையும்.

ராகுல்… ராஜா… உன்னை மெல்லிசைக்காரன்னு சொல்லி ஒரு கூட்டமே தலையில தூக்கி வைச்சுக் கொண்டாடுறாங்க. எப்படி அவங்களையும் வீட்டுக்குக் கூப்பிட்றுவோமா?” நக்கலாக கௌஷிக் வினவ,

“அஃப்கோர்ஸ்… அவங்க இல்லாம இந்த மெல்லிசைக்காரன் கிடையாதே. அவங்களுக்கு இல்லாத இடமா? எத்தனைப் பேர் வந்தாலும் தாங்குற அளவுக்கு மெல்லிசைக்காரனோட வீடும் சரி மனசும் சரி விசாலமானது தான்.”

“பார்றா…” என்று கௌஷிக் கிண்டல் செய்ய,

“கண்டிப்பா ராகுல். எங்களுக்கு வயசானதுக்கு அப்புறம் எங்களுக்குத் துணை தேவைப்படும் பொழுது நிச்சயமா நாங்க ரெண்டு பேரும் இங்க தான் வருவோம். மக வீடுங்குற உரிமையில இல்லை, மகன் வீடுங்குற உரிமையில.

பொண்ணு பார்க்க வந்தப்போ நீ சொன்னியே, ‘தீப்திக்கு அண்ணனா இருந்து அவளைப் பார்த்துப்பேன்னு’ அந்த ஒத்தை வார்த்தையே போதும்ப்பா.

இப்போ எங்க ரெண்டு பேருக்குமே உழைக்கிறதுக்கு உடம்புல தெம்பு இருக்கு. ரெண்டு பேருமே அடுத்தவங்களுக்கு உதவுற ப்ரொஃபெஷன்ல இருக்கோம். எங்களால முடியிற வரைக்கும் இந்தச் சேவையை செஞ்சுட்டு முடியாதப்போ கண்டிப்பா உன் வீட்டு வாசல்ல தான் வந்து நிப்போம். போதுமா?” என்று மனம் திறந்தார் வாசுகி.

மனம் நிறைந்த மகிழ்வுடனும் திருப்தியுடனும் வாசுகியும் ருத்ரமூர்த்தியும் விடைபெற்றுச் செல்ல, ஆதரவாகத் தன்னவளை அணைத்துக் கொண்டான் கௌஷிக்.

இரவுக்கான ஏற்பாடுகளை இளையவர்கள் வசம் விட்டுவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டுத் தன்னறைக்குச் சென்றுவிட்டார் சத்யவதி. கௌசல்யாவின் குழந்தைகளும் இருந்ததால் நிலாவுக்கும் சந்தோஷுக்கும் நன்றாகவே பொழுது போனது.

குழந்தைகளை அழைத்துச் செல்லும் முன் அனைவரின் முன்னிலையிலும், ராகுல்-அமிர்தா திருமணத்தன்று இரவு “ஏன்ம்மா எனக்குக் கல்யாணம் பண்ணும் போது இப்படிப் பாதியில விட்டுற மாட்டியே?” என்று கௌஷிக் கேட்டதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லிவிட்டே சென்றார் சத்யவதி.

இது போதாதா கௌஷிக்கை அனைவரும் கேலி பேச. சுகமான அவஸ்தையில் வசமாகச் சிக்கிக் கொண்டான் கௌஷிக். பெண்கள் இருவரும் தீப்தியை அழைத்துக் கொண்டு போக, கௌஷிக்கை கௌசல்யாவின் கணவரின் வசம் விட்டுவிட்டு, ராகுல் தன் நண்பனுக்காக முதலிரவு அறை அலங்காரங்களைத் தானே செய்யப் போவதாகக் கூறிக் கொண்டு மாடியேறினான்.

தீப்தியை அலங்காரம் என்ற பெயரில் அமிர்தாவும் கௌசல்யாவும் ஒருவழியாக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அமிர்தாவையும் கிண்டலுக்குள் இழுத்தாள்.

“ஏன் கௌசல்யா, ஒரு விஷயம் கவனிச்சியா?” ஏறத்தாழ மூவருக்குமே ஒரே வயதென்பதால் பெயர் சொல்லி அழைத்தே பழகியிருந்தனர் மூவரும்.

“என்ன தீப்தி?” கௌசல்யா வினவ,

“நேத்தும் சரி, இன்னைக்கும் சரி நான் எப்போவெல்லாம் புடவை மாத்தினேனோ அப்பவெல்லாம் அமிர்தாவும் மாத்தினா.”

“ஏன் அதுக்கென்ன? கௌசல்யா கூடத்தான் ஒவ்வொரு அக்கேஷனுக்கும் மாத்தினா.” என்றாள் அமிர்தா.

“ஆமா கௌசல்யாவும் தான் மாத்தினா. ஆனா இப்போ கௌசல்யா என்ன ட்ரெஸ்சுல இருக்கா?” தீப்தி வினவ,

அப்பொழுது தான் கவனித்தாள் அமிர்தா. கௌசல்யா பட்டுப் புடவை மாற்றி ஒரு இரவு உடையில் இருந்தாள். தான் மட்டும் நேற்றிலிருந்து செய்து வந்ததைப் போல பழக்கதோஷத்தில் தீப்திக்கு புடவை மாற்றி விடும் முன்பே, தான் புதுப்புடவைக்கு மாறி அலங்காரம் முடித்து வந்திருப்பதை.

“அது… வந்து…” என்ன சொல்லி சமாளிப்பதென்றுத் தெரியாமல் அமிர்தா திக்கித் திணற,

“அமிர்தா இங்க என்ன நடக்குது?” கௌசல்யா வினவ,

“அப்படிக் கேளு கௌசல்யா” என்று தீப்தியும் கௌசல்யாவும் ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள்.

“அலங்காரம் எல்லாம் முடிஞ்சுடுச்சு இல்ல. நான் போய் ரூம் ரெடியான்னு பார்த்துட்டு வரேன்” என்று வாய்க்கு வந்த காரணத்தை உளறிக் கொட்டிவிட்டு அமிர்தா ஓடப் பார்க்க,

“அந்த ரூம் புதுப் பொண்ணு மாப்பிள்ளைக்குத் தானே!” என்று கௌசல்யா கேட்பது காதில் விழாததைப் போல அவ்விடத்தை விட்டுப் பறந்து விட்டாள் அமிர்தா.

கண்ணை உறுத்தாத வகையில் மெல்லிய அலங்காரம் அந்த அறையை தேவலோகத்திற்கு இணையாக அழகுற மிளிரச் செய்தது. மெல்லிசைக்காரன் தன் ரசனையை இதிலும் நிரூபித்திருந்தான். பெண்கள் இருவரிடமும் இருந்துத் தப்பி வந்த அமிர்தா இவனிடம் சிக்கிக் கொண்டாள்.

“மேடம் எதுக்கோ ரெடியா இருக்குற மாதிரி இருக்கே?” சொல்லிக் கொண்டே அவளைச் சுற்றி வர,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் மறந்துட்டுக் கட்டிட்டேன். இப்பப் போய் மாத்தப் போறேன்.” முறுக்கிக் கொண்டுத் திரும்பியவளை,

“மாத்தலாம்… மாத்தலாம். மேடம் மூனு புடவை எடுத்திருக்கீங்க இல்லையா? மூனையுமே மாத்திடுவோம்.” சரசக் குரலில் அவள் காது கடிக்க,

“என்னங்கடா நடக்குது இங்க?” என்றபடி வந்து நின்றான் கௌஷிக்.

கௌஷிக்கைப் பார்த்ததும் அமிர்தா அவசரமாக அறையை விட்டு வெளியேறிவிட,

“பார்த்தா தெரியலை. டெகரேட் பண்ணிக்கிட்டு இருந்தேன்” கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதத் தோரணையில் பதிலளித்தான் ராகுல்.

“நம்பிட்டேன் டா…” கௌஷிக் நக்கலாகப் பதில் கொடுக்க,

“சரி… சரி… என் தங்கச்சி பத்திரம். என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைச்சிருக்கேன். அவ கண்ல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தாலும்…” நாடகபாணியில் ராகுல் உரைக்க,

“என்னடா பண்ணுவ?” சிரிப்புடன் கேட்டான் கௌஷிக்.

“அதைப் பத்தி நான் இன்னும் முடிவு பண்ணலை. பண்ணிட்டுச் சொல்றேன்.”

“இந்த டயலாக்கை நீ என்கிட்ட சொல்றதை விட உன் தங்கச்சிக்கிட்ட சொல்லி வை. என்னைப் பத்திரமா பார்த்துக்க சொல்லி.”

“அப்படிங்குற!”

“அப்படித்தான் எல்லா சிம்ப்டம்ஸ்சும் சொல்லுது” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கௌஷிக் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தீப்தியை அழைத்துக் கொண்டு கௌசல்யா வர, ராகுல் கௌஷிக்கைக் கட்டி அணைத்து விட்டு தீப்தியிடமும் ஒரு தலை அசைப்போடு விடைப் பெற்றுச் சென்றுவிட்டான்.

கௌசல்யா பின்னோடு அவள் கணவரும் வர, திருதிருவென்று விழித்தான் கௌஷிக்.

“அண்ணா, முழியை மாத்து. பார்க்க சகிக்கலை. நாங்க நலுங்கு வைச்சட்டுப் போயிடுவோம். கவலைப்படாதே” என்று கேலிச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே இருவருக்கும் நலுங்கு வைத்துவிட்டு வெளியேறினார்கள் கௌசல்யாவும் அவள் கணவரும்.

எதிரில் நிற்பவன் முன்பின் அறியாதவன் அல்ல, தான் பல வருடங்களாக இதயக் கருவறையில் பத்திரமாகப் பூட்டி வைத்திருந்த ஒருவன் தான் என்ற போதும் தீப்திக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவும் நாணம் தடுத்தது. இருவரும் தனித்திருப்பதும் இதுவொன்றும் புதிதல்ல என்ற போதும் வெட்கமே அவளை ஆட்சி செய்தது.

கையிலிருந்த பாற்சொம்பிலேயே கவனமாக இருப்பதுப் போல் நின்றிருந்தவளை கரம் பிடித்து அழைத்து வந்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டான் கௌஷிக்.

“தீபி… உனக்கு வெட்கப் படக் கூடத் தெரியுமா?” சும்மா இருந்தவளைச் சீண்டிவிட்டான் கௌஷிக். இப்பொழுது அந்தக் கண்களில் நாணம் மறைந்து கோபம் வெளிப்பட,

“ஹான்… இது தான் தீப்தி” எந்தக் காதலுக்காகப் பெண்ணவள் வருடக் கணக்கில் காத்திருந்தாளோ அந்தக் காதலைக் கண்களில் வழிய விட்டபடி அவன் பதில் கொடுக்க,

“என்னை வெயிட் பண்ண வைச்சதுக்குப் பனிஷ்மென்ட் இருக்குன்னு சொன்…” முடிக்க முடியாமல் வார்த்தைகள் தந்தியடித்ததுப் பெண்ணுக்கு கணவனின் கரம் சொன்ன செய்திகளில்.

இவ்வளவுக்கும் வளையலணிந்த கரங்களைத் தான் தீண்டிக் கொண்டிருந்தான். அதற்கே பெண்ணவள் மதிமயங்கிப் போக அதற்கு மேல் அங்கு தண்டனை கூட இனிமையாக மாறிப் போனது.


நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்கனியைத் தஞ்சம் அடைந்திருந்தார்கள் ராகுலும் அமிர்தாவும். மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தக் காரணத்தால் அன்று தூக்கம் அவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. படுக்கையில் தன்னருகில் கலைந்த ஓவியமென இருந்தவளை அள்ளிக் கொண்டு பால்கனிக்கு வந்துவிட்டான் மெல்லிசைக்காரன்.

“ரவி, நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?” அவன் தோள் சாய்ந்திருந்தவள் அண்ணார்ந்து முகம் பார்த்துக் கேட்டாள் அமிர்தா.

“என்னடா?” குரலில் கூடக் காதலைக் கசியவிட்டுக் கேட்டான் ராகுல்.

“ஜீவா மாமா வீட்டுல என்னதான் நடந்துச்சு? எப்படி அவங்க கேஸ் வாபஸ் வாங்கினாங்க? நீங்க எதுவுமே சொல்லலியே ரவி?”

“அது எதுக்குடா உனக்கு? அவர் பேசுனதைக் கேட்டா நீ வீணா மனசு வருத்தப்படுவடா. அதான் கேஸ் வாபஸ் வாங்கிட்டாங்கல்ல? இனி அவங்களால நிலா பாப்பாவுக்கு எந்தத் தொந்தரவும் வராது. அவ்வளவுதான்.”

இதுவரையில் அந்த மனிதர் வலையமான்சக்கரவர்த்தி பேசிய எதையுமே அமிர்தாவிடம் ராகுல் பகிர்ந்து கொள்ளவில்லை. கௌஷிக்கிடமும் சொல்ல வேண்டாம் என்றே எச்சரித்திருந்தான். ஆதலால் அங்கு நடந்த எதுவும் அமிர்தாவிற்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

நிலா மீது உரிமை கோரி தொடுத்திருந்த வழக்கை மட்டும் அவர்கள் வாபஸ் வாங்கிவிட்டதாக ருத்ரமூர்த்தி சொல்லி இருந்தார். அது மட்டுமே வீட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும். அங்கு சிம்மவரத்தில் நடந்தது எதுவுமே வீட்டில் இருக்கும் யாரிடமும் கூறவில்லை நண்பர்கள் இருவரும்.

“சரி, அவர் பேசினதை சொல்ல வேணாம். கேஸ் எப்படி வாபஸ் வாங்க சம்மதிச்சாங்க? மறுபடியும் பணம் குடுத்தீங்களா? அதை மட்டுமாவது சொல்லுங்களேன்.”

“பணம் எல்லாம் குடுக்கலைடா. ஜீவாவோட அப்பாவுக்கு நாங்கப் பேசிட்டு வந்த அன்னைக்கு நைட்டே அட்டாக் வந்துடுச்சு.”

“ஐயையோ…”

“ஆமா நைட் டின்னர் சாப்பிட்டுட்டு இருக்கும் போதே வாயில இருந்த தோசையோட மனுஷன் மயங்கிட்டாராம்.”

“அப்புறம்…”

“அப்புறமென்ன? போலீஸ் போன் பண்ணி நீங்க இங்க இருக்காதீங்க. அவர் உயிருக்கு எதாவது ஆகிட்டா அவங்க ஜாதி ஆட்களால உங்க உயிருக்கும் ஆபத்து வந்துடும் கிளம்பிடுங்கன்னு சொன்னாங்க.”

“கிளம்பிட்டீங்க தானே?” கணவனின் குணம் அறிந்தவளாக அமிர்தா சந்தேகமாக வினவ, ஒரு விஷமப் புன்னகையுடன் மறுப்பாகத் தலை அசைத்தான் ராகுல்.

“அதெப்படி வர்ஷூ அப்படியே வர முடியும்? உனக்குத் தெரியுமா அவர் உடம்புக்கு என்ன ஆச்சுன்னே புரிஞ்சுக்காம சாப்பாட்டுல விஷம் வைச்சுட்டதா சொல்லி ரொம்ப வருஷமா அவங்க வீட்ல வேலைப் பார்த்த சமையக்காரனை அடிச்சுத் துவைச்சிருக்கானுங்க.

அப்படி ஒரு லூசுக் கும்பல் அது. எல்லாமே சாதி வெறி பிடிச்ச மிருகங்க. நாங்க அப்படியே கிளம்பி இருந்தோம்னு வை, எங்க ஐயாவோட இந்த நிலைமைக்குக் காரணம் நீங்கதான்னு சொல்லி அப்பவும் நம்மளைத்தான் டார்கெட் பண்ணியிருப்பானுங்க.

எனக்கு இந்தப் பிரச்சனை நீண்டுக்கிட்டே போறதுல விருப்பமில்லை. அதான் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி ஹாஸ்பிடலுக்கே போயிட்டோம் நானும் கௌஷிக்கும்.” ராகுல் சொல்லும் பொழுதே அமிர்தாவின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது.

“ஏன் ரவி அங்கெல்லாம் போனீங்க? உங்களுக்கு எதாவது ஆகி இருந்தா?” சொல்லிவிட்டுத் அவன் மீதானத் தனது அணைப்பை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டாள் எதிலிருந்தோ அவனைக் காத்துவிடும் வேகத்துடன்.

“ரிலாக்ஸ் டா… அதான் ஒன்னும் ஆகலை இல்ல. அங்க போனதுல ஒரு நல்ல விஷயமும் நடந்துச்சு. ஜீவாவோட அப்பாவுக்கு ஸ்ட்ரோக் அட்டாக்குன்னு தெரிய வந்துச்சு. இதுக்கு எந்த விதத்திலும் வெளி ஆளுங்க காரணமா இருக்க முடியாது, முக்கியமா நாங்க காரணமில்லைன்னு அந்த முட்டாள் கூட்டத்துக்கும் புரிஞ்சுது.

ஒரு வழியா ஜீவாவோட அப்பாவைப் பார்க்க ஒத்துக்கிட்டாங்க. ஆனா அந்த மனுஷன் எங்களை ஏறெடுத்தும் பார்க்கலை. வெளியே போகச் சொல்லி நல்லா இருந்த ஒத்தக் கையை மட்டும் ஆட்டி செய்கையில சொன்னார்.

நாங்களும் அந்த நிலைமையில அவரைத் தொந்தரவு பண்ண விரும்பாம வெளியே வந்துட்டோம். கொஞ்ச நேரத்துலேயே அவர் இறந்தும் போயிட்டார்.”

“ஐயையோ… அப்போ இப்ப அவர் உயிரோட இல்லையா?”

“ஹ்ம்ம்… ஆமா, இறந்துட்டார். அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்ட நின்னப்ப, நீ ஊர்ல பார்த்தியே ஜீவாவோட சித்தப்பா அவர் வந்து, அண்ணன் உயிர் பிரியிறதுக்கு முன்ன கேஸ்சை வாபஸ் வாங்கச் சொல்லிட்டதா சொல்லிட்டுப் போனார்.

இத்தனை நாள் போட்ட ஆட்டத்துக்கு மனுஷன் சாகும் போதாவது நமக்கு ஒரு உதவி பண்ணினாரேன்னு நாங்களும் நிம்மதியா கிளம்பி வந்துட்டோம். இனி அவங்களால நமக்கோ நிலா பாப்பாக்கோ எந்தத் தொந்தரவும் இருக்காதுடா. நீ நிம்மதியா இரு.” என்று சொல்லி அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“ரவி, எனக்கு இப்போ எங்க அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு ரவி.” பெண்ணவளின் வார்த்தைகளில் திடுக்கிட்டவனாக அவள் முகம் பார்த்தான் ராகுல்ரவிவர்மன்.

“அவங்க சாகும் போது கடைசியா என்கிட்ட என்ன கேட்டாங்க தெரியுமா? தனியா எப்படி இருப்ப அமிர்தான்னு சொல்லி அழுதாங்க. இதான் அவங்க கடைசியா பேசினது.

இப்போ நான் எங்கம்மாவைப் பார்த்துச் சொல்லணும். நான் தனியா இல்லைம்மா. என்னை உயிரா பார்த்துக்க ஒருத்தர் கிடைச்சுட்டாரும்மான்னு சொல்லணும் ரவி.

முடியுமா ரவி? நான் சொல்றது எங்க அம்மாவுக்குக் கேட்குமா ரவி?” சன்ன விசும்பல்கோடு அவள் சொன்ன போது,

“கண்டிப்பா கேட்கும். நம்ம கண்ணுக்குத் தெரியலைன்னாலும் அவங்க நம்மளைப் பார்த்து ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டு தான்டா இருப்பாங்க.

இனிமே நம்ம ரெண்டு பேருமே தனித்தனி கிடையாது. எனக்கு நீ. உனக்கு நான். நமக்கு நம்ம பிள்ளைங்க” ராகுல் சொல்லக் கண்ணீரோடுத் தலையசைத்து ஆமோதித்தாள் அமிர்தவர்ஷினி.

காலத்தின் கோலத்தால் தனிமைச் சிறையில் தவித்த ஒருவனும் அதே காலத்தால் வலுக்கட்டாயமாகத் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டவளும் இன்றுத் தங்கள் தனிமையைத் துறந்திருந்தார்கள்.

“கொஞ்சம் கம்மியா இருக்குற மாதிரித் தோனலை உனக்கு?” ராகுல் கேட்க,

“எது ரவி?” புரியாமல் கேட்டாள் அமிர்தா.

“பிள்ளைங்க தான்…” சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்தவன்,

“எனக்கு இந்த ரெண்டு எல்லாம் போதாதுப்பா. நம்மளை சுத்தி எப்பவும் ஜேஜேன்னு ஆளுங்க இருந்துக்கிட்டே இருக்கணும். அதுக்குக் குறைஞ்சது இன்னும் ஒரு பத்தாவது வேணும்.”

“பத்தா…” என்று வாய் பிளந்தவளை,

“இன்னைக்கே இன்னும் ரெண்டு புடவை பாக்கி இருக்கு” அவள் காதோடு ரகசியக் குரலில் சொல்லி கொண்டே ஒட்டுமொத்த தாபத்தையும் கண்களில் ஏந்தி, பெண்ணவளைக் கையில் ஏந்திப் பள்ளியறை நோக்கிச் சென்றான் மெல்லிசைக்காரன்.

‘முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்

விடிய விடிய கேட்குதய்யா உனது கீர்த்தனம்’

முற்றும்

error: Content is protected !!