Kumizhi-20

நேசம் – 20

ஹோட்டல் திறப்பு விழா இனிதே முடிய, ஒரு வகையான புரியாத சூழலிலேயே இருவரும் பயணித்தனர். புதிய நிர்வாகத் தன்மை கொஞ்சம் திணறல் எடுத்தாலும், அனுபவசாலிகளின் வழிகாட்டலில் அருமையாய் விளங்கிட, சிவனியாவின் நாட்கள் ஆனந்தமாய், இவள் எண்ணம் போல் எளிமையாய் அமைய, நிர்வாகம் மிகவும் பிடித்துப் போனது.

பலவகையான முன்னேற்பாடுகள், பல சலுகைகள் என தன் எண்ணத்தை எல்லாம் கணவனிடம் சொல்ல, நன்றாய் அலசி ஆராய்ந்த பின்னரே அதற்கு செயல் வடிவம் கொடுத்தான் பாண்டியன்.

தற்போதைய முறைகளான கேஷ்பாக்(cashback) சலுகையில் உணவு முதல் அறைவாடகை வரை கொண்டு வந்திட, அதை பயன்படுத்த வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் கோதை கிராண்ட்டில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாகியது.

வருணா கேட்டரிங்ஸ் A TO Z வேலைகளும் ஆரம்பமாகிட, அதற்கென தனியாக குழுவும் அமைக்கப்பட்டு, தடையில்லாமல் நடந்தன.

எல்லாமே அந்ததந்த இடத்தில் பொருந்திப்போன உணர்வைத் தந்த நேரத்தில், சிவனியா சோர்வாய் நடமாட ஆரம்பித்தாள்.

வேலைகள் அதிகம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதால் வந்த சோர்வு என இவள் அசட்டையாய் விட, அவளை அதட்டி, பாண்டியன் டாக்டரிடம் அழைத்துச் சென்ற பிறகு தான், நாள் தள்ளிப் போய் குழந்தை உண்டானதே தெரிய வந்தது.

“நாள் கணக்கு கூட பார்த்து வச்சுக்க தெரியாதா?” ஒரு கண்டிப்புப் பார்வை பரிசாய் பாண்டியனிடம் கிடைக்க

“வேலை பிஸில மறந்துட்டேன் மாமா!” இவள் இளித்து வைத்தாள்.

“எம்புள்ள வளர்ந்தாலும் நீ வளரமாட்டடி!”

“என் மாமா பக்கத்துல சின்னப் பொண்ணாவே இருக்கேனே! உங்களுக்கு ஏன் பொறாமை?”

“உன்னை அடிச்சுக்க ஆள் இல்லடி!”

“இப்டி தான் இருக்கும்னு, எப்டி கேஸ் பண்ணுனீங்க வருமாமா?”

“விரதம்னு குறிச்ச தேதியில, இந்த மாசம் புஃல் மீல்ஸ் சாப்பிட்டிருக்கேன் சிவும்மா! சந்தோஷமா இருக்கேன்! தேங்க்ஸ் பாப்பா!” என்றவனின் குரல் கரகரப்பிலேயே உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட சிவனியாவின் கண்களும் கலங்கிட

“இந்த சந்தோசத்தை உங்களுக்கு குடுக்க, அஞ்சு வருஷம் வெயிட் பண்ண வச்சுட்டேனே! சாரி மாமா!”

“அட லூசுப்பாப்பா! நாந்தான் சாரி சொல்லணும், படிப்பு, தொழில்னு உன்னை இழுக்காம இருந்திருந்தா, நமக்கு எப்பவோ பிரமோஷன் கிடைச்சிருக்கும்.”

வீட்டிற்க்கு வந்து பெரியவர்களிடம் சொன்னதில் அனைவருக்கும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி மட்டுமே! செங்கமலம் சந்தோசத்தை தன் கண்ணீரில் வெளிப்படுத்திட, அவரை அணைத்து முத்தம் கொடுத்த மகளும்

“வேலைய மட்டுமே கவனத்துல வைக்கிறேன், குடும்பத்த பாக்காம இருக்கேன்னு சொன்னத, இப்போவாவது வாபஸ் வாங்குறியாம்மா!” என சீண்டு முடித்திடவும் தான், நிலைமை அங்கே சகஜமானது.

முதல் மூன்று மாதங்கள் ஓய்வில், பெரியவர்களின் கவனிப்பில் இருந்தவளுக்கு, மசக்கை சுகமாய் படுத்தி வைக்க, பாண்டியன் அலறி வைத்தான்.

“வாந்தி எடுக்குறது கூட பெரிய விசயமா தோணல, ஒண்ணுக்கு ரெண்டு கிளாஸ் ஜீஸ் குடிக்க சொல்றது தான் கஷ்டமா இருக்கு” – சிவனி

“வாந்தி எடுத்த உடனே குடிச்சா, திரும்ப வராது” சமாதனப் படுத்தியே திணித்து வைக்க, அதையும் எடுத்து வைத்தாள்.

“இவர எங்கேயாவது கடத்துங்க அத்தம்மா! இல்லன்னா நாம போயிடுவோம். இவரோட தொல்லை தாங்க முடியல!” கோதையை துணைக்கு அழைத்து மிரட்டச் செய்யவும் தான் அமைதியாகிப் போனான்.

ஆறாம் மாதம் தொடங்கியவுடன் “இப்போதான் நல்லா சுறுசுறுப்பா வேலை பாக்கணும்” என கோதையும், கமலமும் சேர்ந்து அவளை உட்கார விடாமல் வேலைக்கு விரட்டி விட, பாண்டியன் அதற்கு இரு மடங்காய் தாங்கினான்.

இரவினில் வேலைகள் அனைத்தும் முடித்து வரும் பொழுதுகளில், இவளது தேவைகள் அனைத்தும், அவனது சேவைகள் ஆகி போக, முன்னை விட வருமாமா மந்திரமும், சியபாப்பா ஜெபமும் அதிகமாகிப் போனது.

நாளின் முன்னுரையில் முறைப்புகளோடும், கோபங்களோடும் இருவரும் முட்டிக் கொண்டாலும், நாளின் இறுதியில் காதலோடு சமாதானத்தை முடிவுரையாய் எழுதிக் கொண்டார்கள்.

அளவில்லா அன்பும், தெவிட்டாத அக்கறையும் இருவரையும் ஆட்கொள்ள, தீராநேசத்தின் பரிசாக, இவர்களின் மகன் ‘தியானேஷ் கிருஷ்ணா’வின் வருகை மேலும் ஆனந்தத்தை அளித்து குடும்பமே கொண்டாடித் தீர்த்தது.

ஒரு வருடம் முழுவதும் பிள்ளை வளர்ப்பு, பிரசவ ஒய்வு என்று வீட்டிலேயே இருந்திட, அந்த நேரத்தில் பாண்டியனின் மேற்பார்வையில் அனைத்தும் நடந்தாலும், முடிவு என்பது இவள் சொல்வதைப் பொறுத்தே அமைந்தது.

பெரியவர்களின் வளர்ப்பில் பிள்ளையை விட்டவள், தன் பணியில் மீண்டும் தன்னை மூழ்கடித்துக் கொள்ள, முன்னை விட வேகமாய் இவர்களின் பாதை முன்னேறத் தொடங்கியது.

தங்கள் இருவரின் கோபங்களும், பக்குவமற்ற தன்மையும் எவ்விதத்திலும் மகனை சேரவிடாமல் இருக்க, அவனை கண்ணும் கருத்துமாய் வளர்க்க, பெரியவர்களையே இருவரும் பெரிதும் நம்பினார்கள். என் பிள்ளை என் கையில மட்டுமே வளர வேண்டும் என்று இருவரும் நினைப்பதில்லை.

இவர்களின் எண்ணத்திற்கு தப்பாமல் அவனும் அமைதியான பிள்ளையாய், அறிவான குழந்தையாய் வளர, அதற்கு நேர்மாறாய் ‘ஆரனாக்ஷி’ மலர்ந்தாள்.

கிருஷ்ணாவிற்கு அண்ணன் பட்டம் அளித்த பட்டாம்பூச்சி. வேலை, தொழில் என்று எந்நேரமும் சுற்றி அலைந்த வருணபாண்டியனை, ஒரே இடத்தில் கட்டிபோட்ட மந்திரக்கோலின் செல்லப்பெயர் ‘ஆஷி’.

மகன் பிறந்த பொழுதே தன்னை ஏமாற்றி விட்டாய் என சிவனியாவை சீண்டியவன், அடுத்து தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று சட்டமாய் கேட்டு வைக்க

“அடுத்ததும் பையனா பொறந்தா என்ன செய்வீங்க மாமா?”

“பொண்ணு பொறக்கற வரைக்கும் முயற்சி பண்ணுவோம் சிவும்மா!” மனைவியை அதிர வைத்தான்.

“உன்னோட முரட்டு தனத்துக்குப், பொம்பளப் பிள்ள வேண்டாம் வருணா!” – கோதை

“நான் உங்ககிட்ட சிக்கினது பத்தாதா? பொண்ணும் வந்து கஷ்டப்படனுமா?” – சிவனி

“பெத்துக் குடுத்துட்டு பேசு! என்னோட ஆக்சன் ரியாக்ஷன் எல்லாம் எப்படின்னு அப்போ தெரியும்” – பாண்டியன்

“உன் மனசு போல பொண்ணு பொறந்தாலும், இவள உரிச்சிட்டு வந்தா, இந்த வீடு தாங்காதே தம்பி” செங்கமலமும் தன் போக்கில் மகளை கிண்டலடிக்க

“ஒன்பது பையன் பொறந்தாலும், பத்தாவது பொண்ணு பொறக்கும்னு நம்பிக்கை இருக்கு” அனைவரயும் வாயடைக்க செய்தவன், தன் பிடிவாதத்திற்கு இறைவனைக் கூட்டுச் சேர்க்க, அவன் நம்பிக்கையை பொய்க்காமல், சிவனியாவையும் காப்பாற்ற ஐந்து வருடங்கள் கழித்து மகள் வந்து சேர்ந்தாள்.

கைகளில் அள்ளிகொண்ட பூக்குவியலை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன், பரவசத்தின் உச்ச நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

பாலில் குங்குமப்பூ கலந்த நிறத்தில் இருந்த பூஞ்சிட்டு, சற்றே அசைந்து தன் பூவுடலை முறுக்கி கொண்டாலும் சிவந்து போக, மகவை கையில் ஏந்தியவனுக்கு

“அச்சோ! இந்த குட்டி இப்படி சிவந்து போறளே சிவனி! ஏதும் வலிக்குமா?” அப்போதே பதறி வைத்தவன், அதை தொடரவும் செய்தான். அன்றிலிருந்து அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தாள் அவனின் இளவரசி.

“பொறந்த குழந்த இப்படி இல்லாம இருந்தா தான் ஆச்சரியம் மாமா!”

“நம்ம பையன் அப்படி இல்லையேடி?”

“அமைதியா, அறிவா இருக்குற குழந்தைங்க எல்லாம், அப்படித்தான் இருக்கும்.” அன்றைக்கே பிள்ளையை தன் பக்கம் இழுத்துக் கொஞ்சுவதில் பங்கு போட்டுக் கொண்டாள்.

எபிலாக்

சரியாய் மூன்று வருடங்கள் கழித்து, அதாவது சிவனியா – வருணபாண்டியன் திருமணம் நடந்து பதிமூன்று வருடங்கள் முடிந்த நிலையில், பல மாற்றங்கள் வாழ்வில் ஏற்பட்டாலும், தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை பாண்டியன் குடும்பம்.

தற்பொழுது கோதை இல்லத்தில் ரவி தன் பிள்ளைகளோடு, குடும்பமாய் இருக்க, முன்னை விட பெரியதாய் சமையல் அறை விஸ்தரிக்கப்பட்டு இருந்தது. உணவுத் தாயரிப்பு முழுவதும் அவன் கட்டுபாட்டில் வந்திருக்க, ஹோட்டலின் நிர்வாகத்தில் கதிர் பொறுப்பேற்று சிவனியாவிற்கு வலது கையாக நின்றான். எட்டாம் வருட இறுதியில் கோதை கிராண்ட் மேலும் இரண்டு மாடிகள் கட்டும் விஸ்தரிப்பு பணி நடந்து முடிந்திருந்தது.

ஹோட்டல் மட்டுமல்லாது ஸ்டார்ட்-அப் வேலைகளும் தொடங்கப்பட்டு, சிவனியாவின் மேற்பார்வையில் வெற்றிகரமாய் நடந்து கொண்டிருந்தன.

ஹோட்டல்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் போன்ற பெரிய இடங்களின் உணவுத் தயாரிப்பு, லாண்டரி, வேலைகளும், அலங்காரப்படுத்தும் முறைகளும்(டெக்கரேட்ஸ்) வாரம், மாதம், வருடம் என்ற கணக்கில் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, அதற்கென துறை வாரியாக ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட, இப்பொழுது பாண்டியனின் ராஜ்ஜியம் பெரிய சாம்ராஜ்ஜியமாகவே எழுந்து நின்றது.

ஆதி முதல் அந்தம் வரையிலான வேலைகள் தனித்தனியாக நடந்தாலும், “ஹோட்டல் பாண்டியா” என்ற ஒரு குடையின் கீழே கொண்டு வரப்பட, நிர்வாகத்திற்கு சிவனியா பொறுப்பு வகிக்க, எத்தனை பெரிய இன்னல்கள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் அவள் தலைமை அமைந்தது.

வேலை செய்பவர் அனைவரிடத்திலும் அவளுக்கென்று தனியிடம் இருந்தது. அதற்கு காரணம் பாண்டியன். அனைத்திலும் ஒத்துப்போகும் இருவரின் முடிவுகளில், மேலும் தொழில் விஸ்திரமாகிக் கொண்டிருந்தது.

பாண்டியன் எப்பொழுதும் அவள் பின்னே அமைதியாக இருப்பது போல் வலம் வந்தாலும், அவனின் பார்வையில் இருந்து எதுவும் தப்பாமல் பார்த்துக் கொண்டான். ஆக மொத்தம் இவன் எப்பொழுதும் அவளுக்கு கறுப்புப்பூனை தான். மொத்தத்தில் இவர்கள் வாழும் வாழ்க்கை, தொழில் இரண்டிலும் பின்னிப்பிணைந்தே வலம் வந்தனர்.

காலமும் வயோதிகமும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ராமலிங்கத்தை இறைவனிடம் கொண்டு சேர்த்திட, அந்த துக்கத்தில் இருந்து மீண்டது, அந்த வீட்டு மழலைகளின் மொழியில் தான்.

பாண்டியனின் வீடு இப்பொழுது மூன்று மாடி கட்டிடமாய் மாற்றம் பெற்று, கீழே இரண்டு பாட்டிமார்களும் தங்கி, பேரனை தங்களோடு, அங்கேயே நிறுத்திக் கொண்டனர். முதல் மாடியில் சிவனியா-பாண்டியனின் வசிப்பிடம் ஆனது. விவசாயத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த பாண்டியன், இரண்டாவது மாடியில், தொழில் நடக்கும் இடங்களை பார்த்துகொண்டு, பெரியவர்களையும், மகளையும் கவனித்துக் கொள்ளும் காரணம் காட்டியே வீட்டோடு தன் அலுவல்களை அமைத்துக் கொண்டான். மூன்றாவது மாடி முழுவதும் குழந்தைகளின் விளையாட்டுக் கூடமாகி இருந்தது.

வீட்டிற்கு பின்னே தோட்டம் பராமரிக்கப்பட்டு, செயற்கை நீருற்றும், குளமும் அமைக்கப்பட, மாலை வேளையும், ஒய்வு நேரமும் அனைவருக்கும் அங்கேயே பொழுது கழிந்தது.

வண்ண மீன்கள் குளத்தில் நீந்திக் கொண்டிருக்க, வெளிப்புறமாய் வேலிகள் அமைத்து, உள்ளேயே பல வகை சிறிய பறவைகள் வளர்க்கப்பட்டு வந்தன. அதனை நாள் முழுவதும் பார்த்து பரவசப்படுவதே அந்த வீட்டின் சின்ன இளவரசி ஆஷியின் வேலை அவளுக்கு குடை பிடிப்பதே அவள் தந்தை பாண்டியனின் முழுநேர தொழில்.

வயது மூன்று ஆனாலும் அவன் தோள்களில் மட்டுமே பவனி வருவாள். மீனுக்கும், குருவிக்கும் தன் பங்கு உணவை வைக்காமல் அவளுக்கு சோறு, தண்ணி இறங்காது.

தாயின் வருமாமா விளிப்பினை, தொற்றிக் கொண்டு தந்தையை ‘வருப்பா’ என்றே அழைக்கிறாள்.

“வருப்பா… ரெட் பிஷ் புவ்வா தா(சா)ப்பிடல… ஆ காட்ட சொல்லு நான் ஊத்தி விதுதேன்(ஊட்டி விடுறேன்)”

“ஆஷிம்மா… பாப்பு சாப்பிட்டா தான், அது ஆ காமிக்கும், நீ ஒரு வாய் வாங்கிக்கோ குட்டிம்மா” கெஞ்சிக் கொண்டிருந்தான் பாண்டியன்.

“அப்போ ப்ளாக்கிய(கறுப்பு மீன்) ஆ காமிக்க தொ(சொ)ல்லு…”

“அது தூங்கிருச்சுடா குட்டி…”

“வொயிட்டிய(வெள்ளை மீன்) தூப்பிது(கூப்பிடு)…” என மழலையில் உத்தரவிட

“அது காக்கா தூக்கிட்டு போச்சு! ஒரு வாய் சாப்பிடு வந்துரும்” உணவை திணித்தாலும் துப்பி வைத்தாள். மனைவியிடம் பிடிவாதமாய் உத்தரவு போடுபவன், மகளிடத்தில் கெஞ்சும் பொம்மையாக மாறிப்போனான்.

சுற்றிலும் பார்த்தவள் “பிங்கிக்கு குது(டு)ப்பேன்” பச்சை கிளியை கைகாட்ட

“அது உன் கைய கடிக்கும், பாப்புக்கு வலிக்கும் குட்டி!”

“கதிக்காது நீ குது(டு)” வீம்பாய் கொடுத்த பிறகே, அவளும் வாயை திறந்தாள்.

“என்ன மாமா? உங்க பொண்ணு மீனு, கிளி கூட பேசி முடிச்சாளா?” – சிவனி

“அது முடியாது! நீ சாப்பிட்டு முடி!”

“நீங்களும் வாங்க…”

“குட்டிக்கு முடிஞ்சதும் வரேன்… நீ சமத்தா போய் சாப்பிடு சிவும்மா!”

“இப்படி சொல்லியே என்னை கழட்டி விடுங்க… வீட்டுல சாப்பிட வைக்க உங்க பொண்ண பழக்கப் படுத்துங்க மாமா!”

“அழுதே சாதிப்பா… இல்லன்னா பொம்மை எல்லாம் தூக்கி உடைச்சு போட்றாடி… சமாளிக்க முடியல!”

“இது எப்போ?”

“நேத்து தான்… வீட்டுல ரெண்டு வாய் கூட வாங்கிக்கல! கீழே புரண்டு அழ ஆரம்பிச்சவள, வெளியே கூட்டிபோய் தான் சமாதானப் படுத்துனேன்!”

“என்கிட்டே ஏன் சொல்லல?”

“எதுக்கு பிள்ளைய அடிச்சு வைக்கவா? போய் சாப்பிட்டு தூங்கு போ…” விரட்டி விட, வேண்டுமென்றே

“ஆஷிம்மா… அம்மா கார்ல போகபோறேன் கிரிஷ் கூட…” சொல்லியதும் அவளிடம் தாவியவள்

“பாப்பு வரேன்” என தொற்றிக் கொள்ள

“பாப்புவும், அம்மாவும் சாப்பிட்டு போவோம் சரியா?”

அந்த நேரத்தில் மகன் கிரிஷ் அங்கே வந்துவிட, மகள் ‘கீகீ’ எனவும், பதிலுக்கு அவன் ‘குக்கி’ எனவும் அழைத்து வைக்க செல்லச் சண்டை ஆரம்பாகியது.

“அம்மா குக்கிய சீக்கிரம் கூட்டிட்டு உள்ளே வருவியாம், ரெண்டு மணிநேரம் ஆச்சுன்னு பெரிய பாட்டி(கோதை) சொன்னங்க!” – கிரிஷ்

“இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சுட்டா உள்ளே போயிரலாம்டா!” தந்தை மகளைப் பார்த்து கேலி பேசினாள். நாசுக்காய் மகளை உள்ளே அழைத்துச் சென்று, ஊட்டி விட, சத்தமில்லாமல் சாப்பிட்டு வைத்ததை, ஜாடையில் கணவனிடம் காட்ட,

“ரொம்ப பெருமை பட்டுக்காதேடி! தெனமும் இத சொல்லி சாப்பிட வைக்க முடியாது.”

“வேற ஏதாவது சொல்லி சமாளிக்க தெரியணும்”

“அது என்னமோ! நீ சொன்னா கேக்குது, நான் சொன்ன காதுல வாங்காம, முரண்டு பிடிக்குது இந்த குட்டி!” –பாண்டியன்

“ஹஹா… நீங்களும் இப்படித்தானே மாமா! அதுல பாதி உங்க பொண்ணுக்கு இப்பவே வந்திருச்சு, உங்கள நானே ரொம்ப நல்லவன்னு சொல்ற மாதிரி, படுத்தி வைக்கப் போறா பாருங்க!

“அப்போ நான் நல்லவன் இல்லையா?”

“ம்ப்ச்… போதும் ஆரம்பிக்காதீங்க! பேபி பயந்துரப் போகுது”

டிவி ரிமோட் யார் வைத்துக் கொள்வது என்பதில் இரு வாண்டுகளுக்கும் சண்டை ஆரம்பித்திருந்தது

“கிரிஷ் அவ சின்ன குழந்தடா! போட்டி போடாதே!” பாண்டியன் கண்டிக்க

“நானும் சின்ன பையன்தான்! தேர்ட் ஸ்டாண்டர்ட் தான் படிக்கிறேன்”- கிரிஷ்

“நீயும் அவளும் ஒண்ணா? இன்னும் அவ ஸ்கூல் போக ஆரம்பிக்கல…” மேலும் பாண்டியன் சத்தம் போட

“அதட்டாதீங்க மாமா!” மெல்ல காதை கடித்தவள்,

“கிரிஷ், பாப்பு கூட விளையாடு! இவ்ளோ நேரம் கழிச்சு டிவி வேண்டாம், போ கண்ணா!” இருவரையும் அனுப்பி வைக்க,

“அங்கே பாருங்க அண்ணனா பொறுப்பா விளையாட கூட்டிட்டு போயிட்டான், இதுக்கெல்லாமா சத்தம் போடுவீங்க?” எப்பொழுதும் போல் இவள் சமாதானப்படுத்தி வைக்க, தங்கையை அவர்கள் அறைக்கு கூட்டிச் சென்று கொண்டிருந்தான் அண்ணன்.

பெரியவர்களின் கவனிப்பில் வளரும் குழந்தைகள் எப்பொழுதும் தன் நிலையை உணர்ந்து கொள்ளும் சாதூரியத்தைப் பெற்றவர்கள். அந்த நிலை இந்த வீட்டிலும் தொடர, நிறைவான பார்வையால் பிள்ளைகளை பார்த்தான்.

அன்னையாய் கண்டிப்பும், கவனிப்பும் எப்பொழுதும் தன் பிள்ளைகளிடம் வைப்பதில் தவறுவதில்லை சிவனியா. அதேபோல் பாண்டியனும் எந்த இடத்திலும் தன்னுடைய பிடிவாதத்தை யாரிடமும், இப்பொழுதெல்லாம் திணிப்பதில்லை என்று சொல்வதை விட, அவன் மனைவி அதைச் செய்ய விடுவதில்லை. கோபங்களும், முறைக்கும் பார்வைகளும் முழுதாய் விடைபெறவில்லை என்றாலும், வீரிய தூக்க மருந்து எடுத்துக் கொண்டதைப் போல ஏகத்திற்கும் அடங்கிப் போய் இருந்தன. மொத்தத்தில் வாழ்க்கைப் பயணங்கள் இருவரையும் பக்குவப்படுத்தி இருந்தது.

பிரச்சனைகளும், சங்கடங்களும் இணைந்து வாழ்க்கையின் போக்கையே மாற்றும் நோக்கில் பயணப்பட்டாலும், அதையெல்லாம் தகர்த்தெறிந்து இவையெல்லாம் எங்கள் அன்பை, நேசத்தை என்றும் குறைக்காது, எப்பொழுதும் இன்ப ஊற்றாய் பெருகிக்கொண்டே இருக்கும் என்பது போல் இருந்தது இவர்களின் நேசப்பார்வைகள். இந்த பாதைகளில் என்றும் தடையின்றி பயணிக்க இவர்களை வாழ்த்தி விடை பெறுவோம் தோழமைகளே…

error: Content is protected !!