NPG-5

கீதாஞ்சலி – 5

அந்த மெர்சிடிஸ் பென்ஸ் சென்னையிலிருந்து தேனி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. கார் ஓட்டும் பொறுப்பு டிரைவர் வசம் இருக்க முன்னிருக்கையில் கௌஷிக். பின்னால் சந்தோஷ் பூஸ்டர் சீட்டில் அமர வைக்கப்பட்டிருக்க அவனருகில் ராகுல்ரவிவர்மன்.

சந்தோஷுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் தந்தையுடன் மேற்கொள்ளும் முதல் நெடுந்தூரப் பயணம் இது. இதுவரை ராகுல் தன்னுடைய எந்தப் பயணத்தின் போதும் சந்தோஷை உடன் அழைத்துச் சென்றதில்லை.

அப்படியே சென்றாலும் அது சென்னையிலேயே இருக்கும் பீச், மால், தியேட்டர் போன்ற இடங்களாகத் தான் இருக்கும். நெடுந்தூரம் தந்தையுடன் பயணம் செய்வது இதுவே முதல் முறை. அதுவும் கமலாம்மா துணையில்லாமல். சந்தோஷை எங்கு அழைத்துச் சென்றாலும் உடன் கமலாம்மாவையும் கூட்டிக் கொண்டுதான் போவான் ராகுல்.

சந்தோஷ் பிறந்து இந்த ஏழு வருட காலத்தில் இதுவரையில் ராகுல் தனியாக சந்தோஷைக் கவனித்துக் கொண்டதே இல்லை. எப்பொழுதும் வேலைக்கு ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் வசம்தான் சந்தோஷ் ஒப்படைக்கப் பட்டிருப்பான்.

பார்த்துக் கொள்ளப் பிரியப்படாமல் இல்லை, ஆனால் குழந்தையைக் கவனிக்கும் அளவிற்குப் பொறுமையும் நிதானமும் ராகுலிடத்தில் அப்பொழுது இருந்திருக்கவில்லை. இப்பொழுது இது அனைத்தும் மெல்ல நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது கௌஷிக்கால். ராகுலுக்கே தெரியாமல்.

சந்தோஷைப் பள்ளியில் விடும் பொறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக டிரைவரிடமிருந்து மாற்றி இப்பொழுது முழுதாக ராகுலிடம் விட்டிருந்தான் கௌஷிக். தானும் உடன் செல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு வருகிறான். காரணமேதும் சொல்ல முடியாத நாட்களில் மட்டுமே கௌஷிக்கும் உடன் செல்வது. மற்ற நாட்களில் எல்லாம் தந்தையும் மகனுமாகவே பள்ளிக்குச் செல்லப் பழகியிருந்தார்கள். பழக்கி இருந்தான் கௌஷிக்.

இப்பொழுது கூட கௌஷிக்கின் கட்டாயத்தின் பேரிலேயே சந்தோஷையும் உடன் அழைத்துச் செல்ல சம்மதித்து இருந்தான் ராகுல்.

“சந்தோஷ் எதுக்கு கௌஷிக். வீண் அலைச்சல். கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர். அவனை எதுக்கு அலைய வைக்கணுங்குற?”

“ரெண்டு பேரும் ஊருக்குப் போறோம். அப்புறம் அவன் மட்டும் எப்படி டா இங்கே இருக்க முடியும்?”

“இப்போ இந்த அவார்ட் ஃபங்க்ஷனுக்கு டெல்லிக்குப் போனோமே, அப்போ எல்லாம் கூட்டிக்கிட்டா போனோம். இங்க தானடா இருந்தான். இத்தனை நாளா இது தானே டா பழக்கம். வர வரப் புதுசு புதுசா எல்லாம் பண்றேடா.”

“அது வேற… இது வேற. நாம போனதும் வாசல்லயே வைச்சு எங்கம்மா கேட்பாங்க எங்கே சந்தொஷ்னு? என்ன பதில் சொல்லுவ?”

“வர வர ஒரு மார்க்கமாதான்டா போயிக்கிட்டு இருக்க. உன் கிட்ட என்ன பேச்சு. நான் சத்யாம்மா கிட்ட நேரிலேயே பேசிக்கிறேன். உன்னைப் பத்தி நல்லா போட்டுக் கொடுக்கிறேன். இரு” முறுக்கிக் கொண்டாலும் கடைசியில் கௌஷிக் விருப்பப்படி சந்தோஷையும் கூட்டிக் கொண்டுதான் கிளம்பினார்கள் நண்பர்கள் இருவரும்.

இரவு நேரப் பயணமென்பதால் கார் ஓட்டும் பொறுப்பு டிரைவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கௌஷிக் ஏதோ முக்கியமான கணக்கு வழக்குப் பார்க்கும் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு லேப்டாப்புக்குள் தலையை விட்டுக் கொண்டான்.

சந்தோஷுக்குத் தன்னுடைய அத்தனைக் கேள்விகளையும் கதைகளையும் ராகுலிடமே சொல்ல வேண்டிய நிலை. முதலில் அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த முரடனைத் தன்னுடைய கள்ளம் கபடமற்றப் பேச்சு சாமர்த்தியத்தால் தன் உலகத்துக்குள் சுலபமாக இழுத்துக் கொண்டான் குழந்தை சந்தோஷ்.

அவ்வப்பொழுது, “அந்தப் பிளாக் பேக்ல பிஸ்கட் இருக்கும், சந்தோஷுக்குக் குடு ராகுல்.”

“ரொம்ப டையர்டா தெரியிறான். அந்த ஜூஸ் பாட்டில் எடுத்துக் குடிக்க வை”

“சந்தோஷுக்குப் பசிக்குதான்னு கேளு ராகுல்” போன்ற கேள்விகள் மட்டுமே கௌஷிக்கிடமிருந்து வரும்.

“இதுக்குத் தான் கமலாம்மாவையும் கூட்டிட்டு வரலாம்னு சொன்னேன்” என்று ராகுல் சலித்துக் கொண்டாலும் குழந்தைக்குத் தேவையானவற்றை செய்யத் தவறவில்லை.

ஒரு கட்டத்தில் கௌஷிக் எதுவும் சொல்லாமலேயே, சந்தோஷிற்கு விக்கல் வந்த பொழுது வேகமாக அவனுக்குத் தண்ணீரைப் புகட்டி விட்டு டிஷ்யூ பேப்பரால் குழந்தையின் வாயையும் துடைத்து விட்டான் ராகுல். இக்காட்சியை முன்னிருந்த கண்ணாடி வழியாகப் பார்த்த கௌஷிக்கின் முகத்தில் ஒரு ரகசியப் புன்னகை மலர்ந்தது.

சந்தோஷ் தூக்கத்திற்காக அலைமோத பூஸ்டர் சீட்டை நடு இருக்கைக்கு மாற்றி சீட் பெல்ட் அணிவித்து விட்டுக் குழந்தையின் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ராகுல்.

பொதுவாகக் குழந்தைப் பிறப்பின் போது பெற்றெடுக்கும் பெண்ணும் தாயாகப் பிறப்பெடுக்கிறாள் என்று சொல்லுவது வழக்கம். இங்கு சற்றுத் தாமதமானாலும் ஆணொருவன் தந்தையாகப் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறான் தன் மகனால்.

“ரெண்டு நாள் என்ன ப்ரோக்ராம் கௌஷிக்?” சீட்டில் தலை சாய்த்தவாறு மெல்லிய குரலில் வினவினான் ராகுல்.

“நாளைக்கு மத்தியானம் நாம படிச்சோமே அந்த ஸ்கூல்ல ஒரு சின்ன ப்ரோக்ராம் இருக்கு. அங்க படிக்கிற பசங்களுக்கு நீ மோடிவேஷனல் ஸ்பீச் கொடுக்கணுமாம். அதுக்கப்புறம் தேனி மாவட்ட ரசிகர் மன்றம் சார்பா ஒரு பாராட்டு விழா மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுக்குப் போகணும். இது ரெண்டும் தான் டா வேற ஒன்னும் கமிட் பண்ணிக்கலை.”

“குட்… இதுவே ஜாஸ்தி. நான் என்னடா மோடிவேஷனல் ஸ்பீச் கொடுக்குறது? நாம படிக்கும் போது இருந்த டீச்சர்ஸ் எல்லாம் இப்பவும் இருந்தா நம்மளைப் பத்திக் கழுவி கழுவி ஊத்துவாங்க. அவ்வளவு சேட்டை பண்ணியிருக்கோம் படிக்கிற காலத்துல. இதுல எங்க இருந்து நான் மோடிவேஷனல் ஸ்பீச் குடுக்குறது?”

“சரி… டீச்சரிடம் மாட்டாமல் சேட்டை செய்வது எப்படின்னு சொல்லி ஸ்பீச் குடுத்திடு. சோ சிம்பிள்” சொல்லிவிட்டு இலகுவாகச் சிரித்தான் கௌஷிக்.

“ஹா…ஹா எதுக்குடா இந்த வயசுக்கு மேல டீச்சர்ஸ் கிட்ட எனக்கு அடி வாங்கிக் கொடுக்க பிளான் பண்றே நீ? சரி எது எப்படியோ சத்யாம்மா கூட ஃபுல்லா ஒரு நாள் ஸ்பென்ட் பண்ற மாதிரி பார்த்துக்கோ. அவங்களுக்காகத் தான் இந்த ட்ரிப் ப்ளான் பண்ணினதே. சோ இதுக்கு மேல எந்த ப்ரோக்ரமும் கமிட் பண்ணிக்காதே கௌஷிக்.”

“ஒன் டே இல்லடா முழுசா ஒன் வீக் நாம அம்மா கூட தான் இருக்கப் போறோம். நான் அதுக்குத் தகுந்த மாதிரி சென்னையில எல்லாம் ப்ளான் பண்ணி செஞ்சிட்டு தான் வந்திருக்கேன். நீ ரிலாக்ஸ் பண்ணு.”

“ஒன் வீக்கா? என்னடா சொல்ற? என் கிட்ட டூ டேய்ஸ் ப்ரோக்ரேம் தானே சொன்ன, சந்தோஷ் ஸ்கூல் போக வேண்டாமா?”

“சந்தோஷுக்கு இப்போ ஸ்கூல் ஹாலிடேய்ஸ். மறந்துட்டியா என்ன?”

“ஓ… ஆனாலும் ஒரு வாரத்துக்கு எல்லாம் என்னால அங்க இருக்க முடியாது கௌஷிக்.”

“ஏன் ராகுல். வீட்ல வசதி பத்தாதுன்னு நினைக்கிறியா? ஹோட்டல் வேணா பார்க்கலாமா? ஹ்ம்ம்.. பக்கத்துல.. தேக்கடியில வேணா பார்க்கலாமா? அங்க ஸ்டார் ஹோட்டல்ஸ் இருக்கும். சூட் புக் பண்ணட்டா?”

“சேச்சே… லூசு மாதிரிப் பேசாத. வசதிக்காக எல்லாம் பார்க்கலை. உனக்கே தெரியும் எனக்கு இப்ப எல்லாம் சில விஷயங்கள் டெய்லி தேவைப்படுதுன்னு. அப்படி இருக்கும் போது சத்யாம்மா முன்னாடி எப்படிடா? ஒரு நாள் ரெண்டு நாள்னா அட்ஜஸ்ட் பண்ணிடலாம். ஒரு வாரம்னா என்னால முடியாது கௌஷிக். ரொம்ப நாள் நல்லவன் மாதிரி சத்யாம்மா கிட்ட என்னால நடிக்க முடியாது கௌஷிக்.”

“நீ நல்லவன் மாதிரி நடிக்க எல்லாம் வேண்டாம். நீயே நல்லவன் தான்டா”

“இப்ப எல்லாம் நல்லவனா இருந்தா யாருக்கும் பிடிக்கிறதில்லை கௌஷிக். ஈசியா ஏமாத்திட்டுப் போயிட்டே இருப்பாங்க. ஹ்ம்ம்… பார்ப்போம் எத்தனை நாள் சத்யாம்மா கிட்ட சமாளிக்க முடியுதுன்னு” சொன்னவன் ஒரு பெருமூச்சோடு சீட்டில் தலையை சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டான்.

ஏதோ மறுத்துப் பேச வந்த கௌஷிக்கும் ராகுலின் நிலை பார்த்துப் பேசாமல் திரும்பிக் கொண்டான். மூடிய ராகுலின் கண்களுக்குள் டெல்லியில் அவார்ட் ஃபங்க்ஷனில் நடந்த விஷயங்கள் பவனி வந்தன.

முதல் நாள் குடியரசுத் தலைவர் கையால் விருது வாங்கும் விழா. எந்தவித சஞ்சலமும் இல்லாமல் நன்றாகவே நடந்தேறியது. அதற்கு அடுத்த நாள் மாலை பிரதம மந்திரியின் இல்லத்தில் விருது பெற்றவர்களுக்காக ஒரு சிறப்புத் தேநீர் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நல்ல விசாலமான அறையில் அனைவரும் கூடி உரையாடுவதற்கு வசதியாகத்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். வட்ட வடிவ மேஜைகள் போடப்பட்டு அவரவருக்கான பெயர் பலகையோடு நாற்காலிகள் வெண்ணிற உடை அணிந்து காணப்பட்டன.

அந்த அறையில் இருந்த பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே வெளியே தெரிந்த தோட்டம் கண்ணைக் கவர்ந்தது. ஆங்காங்கே காதில் மாட்டியிருந்த ப்ளூ டூத் வழியாக உரையாடியபடி இங்குமங்கும் விரைப்பாக நடை பயின்றக் கறுப்புப் பூனைகள் தான் கொஞ்சம் அச்சத்தைக் கொடுத்தன.

நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் எந்தவிதப் பகட்டும் பாசாங்குமின்றி இயல்பாகவேப் பழகினார் பிரதமர். வந்திருந்த அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகளாவது நிச்சயமாகக் கலந்துரையாடினார்.

மனிதருக்கு இசையின் மீது கொஞ்சம் அதீத ஆர்வம் போலும். ராகுலிடமும் அவன் எதிரில் அமர்ந்திருந்த, வயதில் மூத்தப் பாடகர் ஒருவரிடமும் மட்டும் சிறிது நிமிடங்கள் கூடுதலாகக் கதைத்தார். அது அங்கு குழுமியிருந்த அனைவரின் கருத்தையும் கவர்ந்தது.

“ப்ளீஸ் மேக் யுவர் செல்ஃப் கம்ஃபர்டபிள்” என்று கூறிவிட்டுப் பிரதமர் விடைபெற்றுச் சென்றுவிட அதன் பிறகு விருந்து அங்கிருந்த உயர் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் கிளம்பிய பின் சூழ்நிலையின் இறுக்கம் சற்றுக் குறைந்து இலகுத் தன்மை வந்திருந்தது. அவரவர் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் அமர்ந்தபடியும் ஆங்காங்கே நின்றபடியும் பேசிக் கொண்டிருந்தனர்.

ராகுலும் கௌஷிக்கும் அங்கிருந்த ஜன்னல் வழியாகத் தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் வந்தாள் மாயா. ராகுலின் முன்னாள் மனைவி தன் இந்நாள் கணவருடன் வந்திருந்தாள்.

“ஹாய் ராகுல்” தன் முதுகுக்குப் பின் கேட்டப் பழக்கப்பட்ட குரலில் அதிர்ந்து திரும்பினான் ராகுல். பார்த்த நொடி எவ்விதம் எதிர்வினையாற்றுவது என்றுப் புரியாமல் கொஞ்சம் திகைத்துப் போனவன் நொடியில் தன்னை சுதாகரித்தும் கொண்டான்.

“என்ன ராகுல் தெரியாத ஆளைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க. ஓஹ்… கமான் யா” என்று சொல்லிக் கொண்டு ராகுலை அணைப்பது போல் வந்தாள் மாயா. சட்டென்று இரண்டெட்டு பின்னால் நகர்ந்தவன் இரு கரம் கூப்பி வணக்கம் வைத்தான்.

இச்செயலைக் கண்டு மாயாவும் அவளின் கணவனும் தங்களுக்குள் ஒரு அர்த்தப் பார்வை பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய முகத்திலும் ஒரு அலட்சிய பாவம் வந்திருந்தது. அவர்களைப் பொறுத்த வரையில் ராகுல் வாழத் தெரியாதவன். இந்த பேருக்கும் புகழுக்கும் ஏற்ப நடக்கத் தெரியாதவன்.

ராகுல் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாயாவின் கணவருடன் கைக்குலுக்கித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். கௌஷிக்கையும் அவர்கள் இருவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான்.

விவாகரத்தானவர்கள் பிற்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் சொல்ல வில்லையே. அதுவும் திரைத்துறையில் திருமணமும், விவாகரத்தும் மிகவும் சகஜம். ஒருவரை ஒருவர் என்றேனும் பிற்காலத்தில் சந்தித்தால் ஒரு ஹாய், ஹலோவுடன் நட்பு பாராட்டுவதும் சகஜம் தான்.

அதனால் நடந்து கொண்டிருக்கும் எதுவும் கௌஷிக்கிற்குத் தவறாகத் தெரியவில்லை. மாயா புகைப்படத்தில் மட்டுமே அறிமுகம் அவனுக்கு. ஆனால் ராகுல் மிகவும் அசௌகரியமாக உணர்கிறான் என்பதை அவன் உடல் மொழியின் மூலம் கௌஷிக்கால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“அப்புறம் ராகுல் நீங்க எப்பதான் லைஃப்ல மூவ் ஆன் பண்ணப் போறீங்க?” கேள்வி கொஞ்சம் நக்கலாக வந்தது போல் இருந்தது மாயாவிடமிருந்து.

தான் வாழ்க்கையில் அடுத்தத் திருமணத்தை முடித்துக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கையில் ராகுல் இத்தனை வருடங்கள் கடந்தும் இப்படித் தனித்து நிற்பது கொஞ்சம் இளக்காரமாகத் தோன்றியது மாயாவுக்கு. கொஞ்சம் அவனை சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டாள். அதனால் வந்தக் கேள்வி அது.

“நம்ம லைஃப் யாருக்காகவும் காத்திருக்காது மாயா மேம். அது மூவ் ஆகிட்டே தான் இருக்கும் மாயா மேம். பூனை கண்ணை மூடிக்கிட்டு இந்த உலகமே இருட்டா அகிடுச்சுன்னு சொல்லுமாம். அந்த மாதிரி இல்ல இருக்கு நீங்க சொல்றது மாயா மேம்” வாக்கியத்துக்கு இரண்டு ‘மாயா மேம்’ போட்டவன் வேண்டுமென்றே அந்த வார்த்தைகளில் கொஞ்சம் அழுத்தம் வேறு கூடுதலாகக் கொடுத்தான் ராகுல்.

இப்படி ஒரு பதிலை நிச்சயமாக மாயா எதிர்பார்க்கவில்லை. இக்கேள்வியைக் கேட்டதும் ஒன்று ராகுல் கோபப்படுவான், இல்லையென்றால் தன்னைப் பிரிந்ததை நினைத்து வருத்தப்படுவான் என்பது தான் அவள் எதிர்பார்ப்பாக இருந்தது. கோபமோ வருத்தமோ அதைப் பார்த்து சந்தோஷப்படுவதற்காகத் தான் அவள் அந்தக் கேள்வியையே கேட்டாள். இப்படி நக்கலடிப்பான் என்று எதிர் பார்க்கவில்லை.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மாயா விக்கித்துப் போய் பார்த்திருக்க ராகுலோ அதோடு நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தான்.

“நீங்களே சொல்லுங்க மிஸ்டர்… இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே, அவங்களுக்கு நாம என்ன பண்ணாலும் தப்பு தான். நாம தண்ணி, தம், ஃபிகர்னு லைஃபை என்ஜாய் பண்ணினோம்னு வைங்க, ஐயோ அம்மா என் வாழ்க்கையே போயிடுச்சுன்னு புலம்புவாங்க.

சரி, நாம நல்ல பிள்ளையா அந்த ஸ்ரீராமரோட செராக்ஸ் காப்பியா இருந்தா, ஹைய… இவன் சரியான சாம்பார், என்னோட சொசைட்டிக்கு செட்டே ஆக மாட்டான்னு சொல்லிட்டுக் கழட்டி விட்டுடுவாங்க.

இருக்குறது ஒரு லைஃப், அதை எதுக்கு இவங்களுக்காக நாம வாழணும். நாம நமக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டுப் போயிடலாமே. நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் நம்மோட சாய்ஸ் தான். யாரும்… ஐ ம் சாரி எவளும் கேள்வி கேட்க முடியாது.” அந்த ‘எவளும்’ சொல்லும் பொழுது பல்லைக் கடித்து மெல்லியக் குரலில் அழுத்தி உச்சரித்த விதம் எதிரில் நிற்பவர்களைக் கொஞ்சம் கிலியடையத்தான் செய்தது.

அவர்களின் அதிர்ந்த தோற்றத்தில் திருப்தி அடைந்தவனாக, “நீங்க வேணா ஒரு டூ டேய்ஸ் என் கெஸ்டா எங்கூட ஸ்டே பண்ணிப் பாருங்க. அப்புறம் நீங்களும் என் லைஃப் ஸ்டைலுக்கு மாறிடுவீங்க.” என்று மாயாவின் கணவரைப் பார்த்துக் கண்ணடித்துக் கூறினான் ராகுல்.

முற்றிலுமாக அதிர்ந்து போன மாயா, “யூ கைஸ் கன்டினியூ. எங்களுக்குக் கொஞ்சம் அர்ஜன்ட் வர்க் இருக்கு. நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக அந்த இடத்திலிருந்து நழுவிச் சென்றாள் தன் இந்நாள் கணவரைக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு.

ஒரு அலட்சிய சிரிப்புடன் அவர்கள் போவதைப் பார்த்திருந்தான் ராகுல்ரவிவர்மன்.

“என்ன ராகுல், இந்தப் பொண்ணு சந்தோஷ் பத்தி ஒரு வார்த்தைக் கூடக் கேட்காமப் போகுது?” கௌஷிக் வினவ,

“பொண்ணா இதெல்லாம் அந்த கேட்டகிரில வராது கௌஷிக். இதுவரை நீயும் கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை. மேடம் எதுக்காக என்னை டிவோர்ஸ் பண்ணாங்க தெரியுமா?”

“ம்ஹூம்… மீடியாவில வந்தது தான் தெரியும். ஆக்சுவல் ரீசன் தெரியாது” என்று கூறி இட வலமாகத் தலை அசைத்து மறுத்தான் கௌஷிக்.

“எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான். சில மாசங்கள் தான் வித்தியாசம். ஆரம்பத்துல எல்லாமே நல்லா தான் போய்க்கிட்டு இருந்துச்சு. ஆனா கொஞ்ச நாள்லேயே நான் தப்பு பண்ணிட்டேன்னு புரிஞ்சது.

அவங்க ஆசைப்பட்டது சோசைட்டிக்காக வாழற ஹை கிளாஸ் வாழ்க்கை. நான் ஆசைப்பட்டதோ எனக்கே எனக்கான நார்மலான குடும்ப வாழ்க்கை. இது போதாதா ரெண்டு பேருக்கும் நடுவுல பிரச்சனை வர்றதுக்கு?”

“அதென்ன ஹை கிளாஸ் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை? புரியலையேடா”

“அதாவது இப்போ அவங்களுக்கு பர்த்டே வருதுன்னு வை, நான் கிஃப்டா புதுசா புடவை, பூ, டைமண்ட் செட் எல்லாம் வாங்கிக் கொடுத்தா, அவங்களுக்கு அந்த டைமெண்ட் செட் மட்டும் தான் பிடிக்கும். புடவை, பூ எல்லாம் பிடிக்காது. ஏன்னா அது மிடில் கிளாஸ் மென்டாலிட்டியாம்.

மாடர்ன் டிரஸ்ங்குற பேர்ல அரை குறையா உடுத்திக்கிட்டு விடிய விடிய குடிச்சு கும்மாளமடிச்சு பார்ட்டி பண்றது தான் ஹைகிளாஸ் பர்த்டே செலிப்ரேஷன். இப்ப புரியுதா உனக்கு?”

“ஹான்… புரியுது, புரியுது.”

“நான் வேற அப்போ எல்லாம் அக்மார்க் நல்ல பையனா இருந்தேனா என்னால அவங்க ரேஞ்சுக்குக் கம்பெனி குடுக்க முடியலை. சோ கழட்டி விட்டுட்டாங்க.

சரி, குழந்தை பிறந்துட்டா சரியாகிடும்னு நினைச்சேன். எல்லாம் இன்னும் மோசமா தான் ஆச்சே ஒழிய எதுவும் சரியாகலை. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் விட்டுக் கொடுத்து தான் போனேன்.

ஆனா எனக்கு வேற ஒருத்தனைத்தான் பிடிச்சிருக்கு, உனக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு வந்து நின்னப்போ, அவங்க பின்னாடி கெஞ்சிக்கிட்டு நிக்க என் தன்மானம் இடம் குடுக்கலை. மியூசுவல் டிவோர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போனோம். இதெல்லாம் நடக்குறப்போ சந்தோஷ் கைக் குழந்தை.

கோர்ட்ல எங்கே குழந்தை அம்மா கிட்ட தான் இருக்கணும்னு சொல்லிடுவாங்களோன்னு நினைச்சேன். நான் வளர்த்துக்கப் பிரியப்படறேன்னு சொன்னப்போ மறுத்துப் பேசாம குழந்தையைத் தூக்கி என் கையில குடுத்தப்போ எனக்குப் புரியலை. அடுத்த மாசமே அவங்க ரெண்டாவது கல்யாணம் நடந்தப்போ தான் எனக்கு விஷயம் புரிஞ்சது.”

சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனமாக வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் ராகுல்ரவிவர்மன். கோபத்தை அடக்கும் விதமாக கைகளிரண்டையும் இறுக்கமாக மூடியிருந்தான். அவனின் எண்ண ஓட்டம் புரிந்தது கௌஷிக்கிற்கு. ஆறுதலாக ராகுலின் தோளில் கை வைத்தான் கௌஷிக்.

“அதுக்கப்புறமென்ன, ஐயா தனிக்காட்டு ராஜா தான். என் வாழ்க்கை என் இஷ்டம். போதாக் குறைக்கு நீயும் வந்து சேர்ந்தே. வேற என்ன வேணும் சொல்லு. நிம்மதியா போகுது லைஃப்” உதட்டில் சிரிப்பிருந்தாலும் அந்தக் கண்களில் உயிர்ப்பில்லை.

“எல்லாம் சரிதான். ஆனா உன் மேலயும் தப்பிருக்கு.”

“நான் என்னடா தப்பு பண்ணினேன்?”

“மனசும் மனசும் சேர்ந்தா தான் காதல். இப்படி மனசே இல்லாத ஒருத்தி உன்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்கிறதுக்காகவா உன்னை நீ மாத்திக்கிட்ட? நீயே சொன்ன, அப்போ நீ அக்மார்க் நல்ல பையனா இருந்ததா. எதுக்காக மாறின? யாருக்காக மாறின?

எந்த சிட்சுவேஷனிலேயும் உன்னை நீ மாத்திக்கிட்டு இருந்திருக்கக் கூடாது. இப்போ அவளுக்காக உன்னை நீ மாத்திக்கிட்டதா தான் எனக்கே தோனுது.

ட்ரிங்க்ஸ் கூட போனா போகுதுன்னு ஒத்துக்கலாம். நீ இருக்குற ஃபீல்ட்ல இது சகஜம்னு ஆகிடுச்சு. ஆனா பொண்ணுங்க விஷயத்துல நீ பண்றது ரொம்பப் பெரிய தப்பு. ஆர்.வீ மியூசிக்ல பாடணும்னா அவங்கூட பெட்டை ஷேர் பண்ணிக்கிட்டா போதும்னு பேர் வாங்கி வைச்சிருக்க.

இது நல்லாவா இருக்கு நீயே சொல்லு. இப்போ உன்னை மதிச்சு உனக்கு இவ்வளவு பெரிய அவார்ட் கொடுத்திருக்காங்க. இதுக்கு மேலயாவது தப்பான எந்த விஷயமும் பண்ணாம இருடா. ஆஸ் அ ஃபிரெண்ட் நான் உன்கிட்ட கேட்கிறது இது மட்டும் தான். சந்தோஷுக்கு ஒரு நல்ல அப்பாவா இருக்க ட்ரை பண்ணு.”

“டேய் நிறுத்து… நிறுத்து. நானா யாரைத் தேடியும் போகுறதில்லை. யாரையும் கம்பெல் பண்றதும் இல்லை. அவங்களா வர்றாங்க, நான் யூஸ் பண்ணிக்கிறேன். அவ்வளவு தான். இதுல என்ன தப்பு கண்டுபிடிச்ச நீ?”

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா. அதோ கையில வைச்சிக்கிட்டு நிக்கிறான் பாரு, அதை வாங்கி அப்படியே உன்னை சுட்டுத் தள்ளணும் போல ஆத்திரம் வருது. என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்களேன்னு பொறுமையா போறேன். என் பொறுமையை ரொம்ப சோதிக்காம சீக்கிரமா திருந்தும். திருந்தித் தொலையும்.” முடிவில் சிரிப்புடன் முடித்தாலும் கௌஷிக் உண்மையிலேயே மனம் வெறுத்துப் போய் தான் பேசுகிறான் என்பதை ராகுலால் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்படியே எண்ணங்களின் போக்கில் பயணித்திருந்தவன் எப்பொழுது கண்ணயர்ந்தானோ காலையில் அவன் கண் விழிக்கும் பொழுது சத்யவதியின் வீட்டை நெருங்கியிருந்தார்கள்.

அதிகாலை நேரம். இருள் அப்பொழுது தான் பிரியா விடை பெற்றுக் கொண்டிருந்தது. லேசான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்த வேளை. இவர்கள் வீடிருக்கும் தெருவுக்குள் நுழையும் போதே ராகுல் பார்த்துவிட்டான். சரியாக கௌஷிக் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஒரு பெண் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதை.

அமிர்தவர்ஷினிதான் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். மஞ்சள் நிற குர்தாவும் டார்க் ப்ளூ கலர் லெகிங்கும் அணிந்து தலையில் கட்டிய ஈரத் துண்டோடு ரசனையும் வேகமும் போட்டி போட கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“டேய் கௌஷிக், அது நம்ம ‘சோனி’யாடா?” என்று அந்தப் பெண்ணைக் காண்பித்துக் கேட்டான் ராகுல்.

“அவளே தான். சோனி கீனின்னு எதுவும் கூப்பிட்டு வைச்சிடாதே. தொலைச்சுக் கட்டிருவா. ஜாக்கிரதை” நண்பன் குணமறிந்து எச்சரித்தான் கௌஷிக்.

“அதையும் தான் பார்க்கலாமே. அண்ணா பலமா ஒரு ஹார்ன் குடுங்க” என்று ராகுல் சொல்லவும் சரியாக அவளை நெருங்கும் நேரம் டிரைவர் பலமாக ஹார்னை ஒலிக்க விட, “ஓய் சோனி” என்று ராகுலும் சேர்ந்து கத்தவும் அதிர்ந்து போனவளாக கையிலிருந்த கோல மாவெல்லாம் உடை மீதும் தலை மீதும் கொட்ட எழுந்து நின்றாள் அமிர்தவர்ஷினி.

கார் கௌஷிக்கின் வீட்டு வாசலில் நிற்கவும் இறங்கி வந்த ராகுல் இவள் நின்ற கோலத்தைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆர்ம்பித்தான். கோல மாவின் உபயத்தால் உடை முழுதும் பாழாகி இருக்க முகமெல்லாம் வேறு வெள்ளைப் பெயின்ட் அடித்தாற் போல கோல மாவு.

உள்ளிருந்து குழந்தை அழும் சத்தம் வேறு கேட்டது. விறுவிறுவென்று ராகுல் அருகில் வந்தவள் கையில் வைத்திருந்த மீதமிருந்த கோல மாவு முழுவதையும் அவன் தலையில் எம்பி கொட்டிக் கவிழ்த்தாள். கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முறைத்துப் பார்த்துவிட்டுத் திரும்பப் போனவளைக் கைப் பிடித்து நிறுத்தினான் ராகுல்ரவிவர்மன். அவனும் இப்பொழுது வெள்ளை பெயின்ட் வாசியாகி இருந்தான்.

என்ன முயன்றும் அவன் கைகளிலிருந்து தன் கையை விடிவித்துக் கொள்ள முடியவில்லை அமிர்தாவால். அவனோ அவளை மேலிருந்து கீழ் வரை ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லை சோனி”

“நீயும் தான் நெட்ட கொக்கு” சொன்னவள் உள்ளிருந்து குழந்தை சற்று அழுகையைக் கூட்டவும், பலத்தைத் திரட்டி அவன் கையை உதறிவிட்டு உள்ளே ஓடிப் போனாள்.

இவர்கள் இருவரையும் ஆவென்று அதிசயித்துப் பார்த்திருந்தார்கள் சத்தம் கேட்டு வெளியே வந்த சத்யவதியும் கௌஷிக்கும்.

“ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து வந்து

உன் பேரைச் சொல்லிச் சொல்லிப் பாடுது”