AOA- EPILOGUE

AOA- EPILOGUE

அவனன்றி ஓரணுவும்– 23

இயற்கைக்கு அழிவேயில்லை.

இயற்கையை நேசிப்பவனுக்கும் அழிவே கிடையாது.

பிரபஞ்சன் தன் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் எழுந்திருக்க தடுமாறவும் ஹரி அவனைத் தாங்கியபடிப் பிடித்தார்.

இன்னும் ஹரி அவன் விழித்ததை நம்ப முடியாமல்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் விழித்தது ஓர் அதிசிய நிகழ்வு போல்தான் இருந்தது. இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

ஹரி முகப்பறையிலிருக்கும்போது மேலே படுக்கையறையில் ஏதோ சத்தம் கேட்க, என்னவோ ஏதோ என்று பதறி கொண்டு அவர் மேலே ஏறிவந்தார். அந்தக் காட்சியை இப்போதும் அவரால் நம்ப முடியவில்லை.

பிரபா படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயன்று கொண்டிருந்தான். ஹரி அந்தக் காட்சியைப் பார்த்து ஸ்தம்பித்து நின்று விட, அவன் இருபது நாள் படுக்கையில் கிடந்தவன் போல் அல்லாது அவனே முயன்று எழுந்தும் நின்றான்.

உடல் பலத்தைத் தாண்டி அவன் மனோபலம் அத்தகையது.

அது ஹரிக்கு நன்றாக தெரியும். அவன் எழுந்து கொண்டதை வியப்பாக பார்த்தவர் கண்ணீர் மல்க,“பிரபா” என்று அவனை ஆரத்தழுவி கொண்டு கண்ணீர் பெருக்கினார்.

“எப்படிடா உனக்கு என்னை விட்டு போக மனசு வந்தது… என்னைப் பத்தி நீ ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சியா? இத்தோட நீ முழிக்கவே மாட்டியோ… எங்க நான் திரும்பி அனாதையாகிட்டேன்னோன்னு நினைச்சேன்” என்று அவர் அழுது கொண்டே தன் மன உணர்வுகளை கொட்டி தீர்க்க,

“ஐயோ! அப்படி எல்லாம் பேசாதீங்க சார்” என்று அவன் குரல் தடுமாற்றத்தோடு மெலிதாக வெளிவந்தது. அவர் இடையிட்டு கோபமாக பதிலளித்தார்.

“போடா டேய்… எங்களை எல்லாம் இப்படி பயப்பட வைச்சிட்டியே… உனக்கு என்ன பெரிய தியாகின்னு நினைப்போ” என்று அவன் தோளில் குத்த அவன் முகம் புன்னகை பூத்தது. ஆனால் இன்னும் அவர் அந்த மனநிலையிலிருந்து மீண்டு வரவில்லை. மீண்டும் அவன் தோள் மீது சாய்ந்து அழ தொடங்கினார்.

பிரபாவால் அவரின் வேதனையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அவரை சமாதானம் செய்யவில்லை. ஒவ்வொரு நொடியும் அவர் சுமந்த வலி கண்ணீராக பெருகி வெளியேறி கொண்டிருந்தது.

மெளனமாக அவர் அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தான். மனதிலுள்ள சோகமெல்லாம் வடிந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பட்டும் என்று அமைதியாக அவர் தலையை தடவிவிட, அவர் தன் கண்ணீரை துடைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“இப்பவும் என்னால நம்பவே முடியல… ஏதோ அதிசியம் நிகழ்ந்த மாதிரி… எப்படி பிரபா?” என்று அவர் கேட்க, அவன் பதிலுரைக்கவில்லை. ஆனால் அவன் பார்வை மூடியிருந்த தன் கைகளுக்குள் சென்றது. அதற்குள் ஷெர்லியின் செயின் இருந்தது.

பிரபா அவர் முகத்தை பார்த்து, “எனக்கு இன்னும் இந்த உலகத்துக்கு மேல இருக்க பிடிப்பு போகல சார்… நான் ரொம்ப ரொம்ப சாதாரண மனுஷன்” என்றான்.

“யாரு நீயா?” என்றவர்எகத்தாளமாக கேட்க அவன் நக்கலாக சிரித்துவிட்டு, “நான்தான்” என்று சொல்லி கண்ணடித்தான்.

ஹரி அப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தார்.

“அச்சோ! உனக்கு சாப்பிட கூட எதுவும் குடுக்காம பேசிட்டு இருக்கேன் பாரு” என்று அவர் தலையிலடித்து கொள்ள,

“இப்ப ஒன்னும் அவசரமில்ல சார்… நான் முதல அந்த மனநிலையில் இருந்து மீண்டு வரணும்… நான் குளிச்சிட்டு வரேன்” என்றான்.

“நான் உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா?” என்று அவர் கரிசனமாக கேட்கவும், “வேண்டாம்… நான் என்ன நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்தவனா… ஐம் ஆல் ரைட்… கொஞ்சம் வார்ம்அப் பண்ணா சரியாகிடும்” என்றான்.

“சரி சரி… பண்ணிட்டு சீக்கிரம் வா… எனக்கு நீ முழிச்சது கையும் ஓடல காலும் ஓடல… உன்கிட்ட பேசிட்டு இருக்கிறது கூட கனவு மாதிரிதான் இருக்குன்னா பாரேன்” என்று வியப்போடு சொல்லி கொண்டவர்,

“நான் முதல இந்த விஷயத்தை லோகிக்கு போன் பண்ணி சொல்லணும்… அப்புறம் சேதுவுக்கு குணபாலன் ஐயாவிற்கு” என்று அவர் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

அதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த பிரபாவிற்கு அவன் எதிர்பார்த்த பெயர் வராதது ஏமாற்றமாக இருந்தது.

“சரி… நான் எல்லோருக்கும் போன் பண்றேன் … நீ வா” என்று அவர் அறையை விட்டு வெளியேற போகவும்,

“சார் ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தவும் அவன் திரும்பி பார்க்க அவன் தயங்கியபடி மௌனம் காத்தான்.

“சொல்லு பிரபா” என்றான்.

“ஹ்ம்ம் அது… ஷெர்லி எங்கே?” என்று அவன் வினவ, அவருக்குமே ஒரு நொடி பதட்டத்தில் அவளை பற்றி மறந்துவிட்டோமே என்று தோன்றியது. முதலில் அவளிடம் அல்லவா சொல்ல வேண்டும்.

இந்த இருபது நாட்கள் அவள் பட்ட துன்பத்தை நேரடியாக அவர் பார்த்திருந்தாரே! இரவெல்லாம் தூங்காமல் பிரபாவின் அருகில் உட்கார்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்த ஜீவன். அவள் காதலைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவள் பிரபாவின் மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் தன் நாட்டிற்கு போகிறேன் என்றபோது ஒரு விதத்தில் அவருக்கு அவளின் முடிவு சரியென்றே தோன்றியது.

இளம் பெண். அவளுக்கென்று ஒரு வாழ்க்கையிருக்கிறது. பிரபாவின் இழப்பால் ஷெர்லி இப்படி உடைந்து போய் நிற்பதை அவர் விரும்பவில்லை.

ஆதலால்தான் அவளை அனுப்பி வைத்தார். ஆனால் பிரபா எழுந்த இந்த நொடியில் அவள் இங்கே இல்லாமல் போனாலே என்று மிகுந்த வேதனையாக இருந்தது.

“சார்” என்று பொறுமையிழந்து ஹரியை அழைக்கும் வரை அவர் ஷெர்லியை பற்றிய யோசனையிலேயே நின்றிருந்தார்.

“சார்” என்று பிரபா அழைக்கவும், அவன் முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்த அவளுக்கான தவிப்பை உணர்ந்தார்.

அந்த நொடியே அவர் எண்ணத்தைக் காட்டி கொள்ளாமல் அலட்சியமாக, “அவ அவ நாட்டுக்கு போயிட்டா… அனேகமாஅவ இந்த நேரத்துக்கு ப்ளைட் ஏறியிருப்பா” என்றார் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடியே!

அதே நேரம் ஹரியின் ஓரப் பார்வை பிரபாவின் முக பாவனையை அளந்து கொண்டிருந்தது. அத்தனை நேரம் திடமாக நின்று கொண்டிருந்தவன் மெளனமாக படுக்கையில் அமர்ந்து கொண்டான். வார்ததைகளால் அவன் வேதனையை விவரிக்க முடியவில்லை. கண்களில் நீர் நிரம்பிவிட்டது.

தன் கரத்திலிருந்த அவளின் டாலரை அவன் திறந்து பார்க்க, ஹரியும் அதனை பார்த்துவிட்டு, “இது ஷெர்லிது இல்ல… மறந்துட்டு போயிட்டா… ப்ச் இப்ப என்ன பண்றது” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும்போது, அவள் சென்று விட்டாள் என்பதை ஏற்று கொள்ள முடியாமல் தத்தளித்தது அவன் மனம்.

பிரபா கண்களை மூடி தன்னைத்தானே நிதானப்படுத்தி கொள்ள முயன்றுக்கொண்டிருந்தான். இதுபோன்ற ஒரு உணர்வை அவன் இதுவரை உணர்ந்ததேயில்லை. விழியோரம் நீர் கசிந்துக் கொண்டிருக்க அந்த சமயம் அவன் நினைவுகளைக் கடந்து சென்ற காட்சிகளும், அவன் காதுகளில் வெகு அருகாமையில் கேட்ட ஷெர்லியின் குரலும் மீண்டும் ஏதோ ஒரு தெளிவைஅவனுக்குள் உணடுப் பண்ணியது.

சில மணிநேரங்கள் முன் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் எண்ணலைகளில் மோதி கொண்டிருந்தது.

அந்த நொடியே விழிகளைத் திறந்து எழுந்து நின்றபடி, “ஷெர்லிக்கு கால் பண்ணுங்க சார்” என்றான்.

ஹரியோ அவனை ஏற இறங்க பார்த்து, “நோ யூஸ் பிரபா… அவ கிளம்பிட்டு இருப்பா” என்று சொல்ல,

“இல்ல இல்ல… அவ போகல… நீங்க கால் பண்ணுங்க” என்று திடமாக உரைத்தான்.

“சான்சே இல்ல… ஷெர்லி இந்நேரம் ப்ளைட் ஏறியிருப்பா” என்று மீண்டும் ஹரியின் அலட்சியத்தில் அவன் சீற்றமானான்.

“இப்ப கால் பண்ணுவீங்களா மாட்டீங்களா… அட்லீஸ்ட் உங்க போனையாச்சும் எடுத்துட்டு வாங்க… நானே கால் பண்ணிக்கிறேன்”  என்றவன் பதட்டமாக எழுந்து கொள்ள முயன்று தடுமாறவும்,

“சரி சரி நீ டென்ஷனாகதே நான் போய் எடுத்துட்டுவரேன்” என்று சொல்லி கொண்டே ஹரி வெளியே சென்று சில நிமிடங்களில் மீண்டும் அவன் அறைக்குள் நுழைந்தார்.

அவர் அவளுக்கு அழைத்துவிட்டு தன் செல்பேசியை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “பாரு… அவ எடுக்க மாட்டிறா பிரபா… ப்ளைட் ஏறியிருப்பாளா இருக்கும்” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னர் ஷெர்லி அழைப்பை ஏற்றாள்.

எடுத்த மறுகணமே அவள் குரல் பதட்டத்தோடு ஒலித்தது.

“ஹரி… நான் இன்னும் ப்ளைட்டு ஏறல… என் செயின் மிஸ்ஸிங்… இட்ஸ் மோர் பிரஸ்ஸியஸ்” என்றாள்.

அத்தனை நேரம் பிரபாவின் முகத்திலிருந்து தவிப்பும் வேதனையும் அந்த நொடியேமாயமாக மறைந்தது. அவன் இதழ்கள் விரிந்தன.

அவரும் அவள் சொன்னதை கேட்டு புன்னகைத்து கண்களை சிமிட்டியவர்,  “நீயே பேசு… அவளுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸா இருக்கட்டும்” என்று சொல்லி அவனிடம் அந்த கைபேசியை கொடுத்துவிட்டு அவர் வெளியேற விட்டார்.

“சார்” என்றவர் அழைக்க அவர் காதில் வாங்கமால் சென்றுவிட்டார். அத்தனை நேரம் அவளிடம் பேச வேண்டுமென்று தவியாய் தவித்த மனது இப்போது என்ன பேசுவது எப்படி பேசுவது என்று புரியாமல் அவதியுற்றது.

அவன் மௌனமாக என்ன பேசுவது என்று யோசித்து கொண்டிருக்க அப்போது எதிர்புறத்தில் ஷெர்லி படபடப்பாக,

“ஹரி…ப்ளீஸ்… பிரபாவை பத்தி மட்டும் என்கிட்ட பேசிடாதீங்க… எனக்கு எதையும் கேட்க வேண்டாம்… எனக்கு அவ்வளவு கட்ஸ் இல்லை… சாரி” என்று அவள் குரல் அழுகை தொனியில் மாறியது, அவளின் வார்த்தையிலிருந்த வலி அவன் ஆழ் மனதை துளையிட்டது.

அந்த நொடியே அவன் தன் மௌனத்தை கலைத்து, “ஷெர்லி” என்று அழைக்க, மௌனமாவது இப்போது அவள் முறையானது.

ஆனால் விரைவாக தன்னை மீட்டு கொண்டவள்,  “ஒஎம்ஜி!… பிர… பிரபா… பிரபா ஆர் யு ஓகே?” என்றாள்.

அவள் குரல் நடுங்கியதில் பிரபாவின் கண்களும் கலங்கின. அவனால் எதுவும் பேச முடியவில்லை.

“பிரபா… ஸ்பீக்” என்று அவள் சத்தமாக கத்திவிட்டு அழவும்  அவன் தன்னை நிதானப்படுத்தி கொண்டு, “டோன்ட் கோ” என்றான்.

அதற்கு மேலே ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அவள் மௌனமாகிட பிரபா மட்டுமே பேசினான்.

“ஷெர்லி திரும்பி வா…  உடனே வா… நீ போக கூடாது… எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும்” என்க, அவள் ‘உம்’ என்று கூட சொல்லாமல் ஸ்தம்பித்து நிலையில் நின்றிருந்தாள்.

“என்ன பதிலே காணோம்… திரும்பி வர இல்ல?” என்று அவன் சந்தேகமாக கேட்கவும், அவளோ சந்தோஷத்தில் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

“எனக்கு மட்டும் ஏதாச்சும் சூப்பர் பவர் இருந்தா… இப்பவே… இந்த நிமிஷமே உங்க முன்னாடி வந்து நின்றிருப்பேன் ஹென்சம்!” என்றாள் அவள்!

“உனக்கு சூப்பர் பவர் இல்லைன்னு யார் சொன்னது ஷெர்லி?” என்றவன் கேட்கவும் அவளுக்கு புரியவில்லை.

“என்ன சொன்னீங்க?” என்றவள் பதில் கேள்வி கேட்க, அவன் சிரித்துவிட்டு, “லைப் ஆப் கிஸ்” என்றான்.

பதிலில்லாத அவள் மௌனம் பேசிய காதல் மொழி அவனுக்கு மட்டுமே கேட்டது. அதன் பின் கடந்து சென்ற ஒவ்வொரு நொடிகளும் யுகங்களாகி போனது.

அவள் எப்போது வருவாள் என்ற காத்திருப்பும் கூட அழகாக இருந்தது.

அந்த நடுநிசியிலும் பிரபாவை பார்க்க ஒரு கூட்டமே திரண்டுவிட்டது. லோகநாதன் குடும்பத்தினர், சேது, அந்த ஊர் மீனவர்கள் என்று எல்லோருமே அவனை ஒரு காட்சிப் பொருளை போல அதிசயமாக பார்த்துவிட்டு சென்றனர்.

அவர்கள் எல்லோருடைய அக்கறையும் அவனை நெகிழ்த்தியது. இருப்பினும் அவர்கள் யாரிடமும் சுவாரசியமாக பேசும் மனநிலையில் அவன் இல்லை.

ஆனால் அவர்களுக்கு பேசவும் சொல்லவும் நிறைய இருந்தது. அவற்றையெல்லாம் பேசி பேசி ஓய்ந்த பின்னே அவர்கள் அங்கிருந்து செல்ல, ஹரி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு,

“ரொம்ப லேட்டாயிடுச்சு… விட்டா இன்னும் கொஞ்சம் நேரத்தில விடிஞ்சிரும்… வந்து கொஞ்ச நேரம் படுத்து தூங்கு” என்றார்.

“நீங்க போய் தூங்குங்க… எனக்கு தூக்கம் வரல” என்றவன் சோபாவில் அமர்ந்துக் கொண்டு வாசலையே பார்த்து கொண்டிருந்தான்.

“ஷெர்லி வந்தா நானே உன்னை” என்றவர் சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க கூட இல்லை.

“அதான் எனக்கு தூக்கம் வரலன்னு சொல்றேன் இல்ல… நீங்க போய் படுங்க” என்றவன் அழுத்தி கூறவும், “ஹ்ம்ம் ஹ்ம்ம் புரியுது” என்று அவனை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு படியேறியவர் மீண்டும் திரும்பி வந்து அவன் அருகில் வந்து அமர்ந்து,

“டே! எனக்கு ஒரு டவுட்” என்றார்.

“இந்நேரத்தில உங்களுக்கு என்ன டவுட்” என்று அவரைக் கடுப்பாக பார்க்க, “இல்லடா பிரபா… உன்னையும் ஷெர்லியும் எப்படியாச்சும் கோர்த்து விடணும்னு நான் நினைச்சேன்தான்… ஆனா இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா… இது என் எண்ணத்துக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு தொடர்பு உங்க இரண்டு பேருக்குள்ள இருக்கோன்னு” என்றார்.

அவரை அர்த்த பார்வை பார்த்தவன் மெலிதாக புன்னகைத்து, “இந்த உலகத்துல நடக்கிற எல்லா விஷயத்துக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றோடு ஒண்ணு தொடர்பு இருக்கு… அது எப்படி என்னங்கிற கேள்விக்கெல்லாம் நம்ம பதில் தேட ஆரம்பிச்சோம்னா அது முடியவே முடியாது… அதனால ரொம்ப யோசிக்காம நீங்க போய் படுத்து தூங்குங்க” என்றான்.

“உன்கிட்ட நான் சந்தேகம் கேட்டதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்… கொஞ்ச நஞ்சம் புரியிற விஷயத்தையும் கூட புரியாம பண்ணிடுவான்” என்று புலம்பி கொண்டே அவர் அறைக்கு சென்றுவிட, பிரபா மனம் முழுக்க அவளைப் பற்றிய சிந்தனைதான்.

கைகளில் அவள் டாலரை எடுத்து வைத்து உற்று பார்த்து கொண்டிருந்தான். முதல் முறை அந்த டாலரை பார்க்கும் போதே அவனுக்கு வித்தியாசமாக தோன்றிற்று.

ஆனால் அது பற்றி கிறிஸ்டோபர் கடிதத்தில் படிக்கும் போதுதான் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு டாலருக்கு அப்படியொரு சக்தியா? என்று யோசித்த அதே நேரம் அவன் படித்த வேறொரு பக்கம் அவனை வியப்பின் உச்சத்திற்குக் கொண்டுச் சென்றது.

‘ஜீவசமாதி என்றால் என்ன என்று நான் வினவ, அவள் எனக்கு விளக்கமளித்தாள்.

அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஆன்மா  சம்பந்தப்பட்டது. உடல் அழியும். ஆனால் ஆன்மா அழியாது. தங்களின் முன்னோர்கள் யாரும் இன்றுவரை இறக்கவில்லை. அழியவில்லை.

ஆன்ம சக்தியாக மாறி இந்த பூமியைப் பேரழிவிலிருந்து காத்து கொண்டிருக்கின்றனர் என்றாள். இதுவரை அவள் சொன்ன எல்லாவற்றையும் நம்பிய நான் இதை நம்ப தயாராக இல்லை.’

அவன் அப்போது தேடி கொண்டிருக்கும் கேள்விக்கான பதிலாகவே அந்த வரிகள் இருந்தன. ஏற்கனவே அவன் சமாதி நிலைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறான். ஆனால் அந்த வரிகள் அவனுக்கு புதிதாக சில தகவல்களை தந்தன.

ஷெர்லியின் யுனிவெர்ஸல் பவர் என்கிற வார்த்தை மீண்டும் அந்த வரிகளை அவன் மூளைக்குக் கொண்டு வந்தன. கடைசியாக கடலலைகள் முன்னே இதை எப்படியாவது செய்துவிட வேண்டுமென்ற பிடிவாதத்தோடு அமரும்போது ஹரியின் நினைவு வந்த அதே சமயம் ஷெர்லியின் நினைவும் வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது.

ஆனால் விழிகளை மூடி எல்லாம் மறந்து தானே பிரம்மாக மாறிய போது உண்டான அனுபவம் அவன் உடலில் இப்போதும் சிலிர்ப்பை உண்டாக்கியது. சூனியத்தை நோக்கி பிரபஞ்ச வீதிகளுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு!

அவனை அந்த சூனிய பாதை ஆழமாக உள்ளிழுத்து கொண்டு செல்ல, அப்போது அவன் எண்ணங்களில் தன் முன்னோர்களின் வாழ்க்கை கண் முன்னே கட்சிகளாக அரங்கேறின. ஷெர்லியும் அதில் அடக்கம். செல்லாவின் முகத்தில் அவன் ஷெர்லியைதான் பார்த்தான்.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம். எல்லோருமே அந்த வட்டத்திற்குள் விடாமல் சுழன்று கொண்டே இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை தாத்தாவை போல் இருப்பதும் பின் அதே குழந்தை தாத்தாவான பின், இரண்டு மூன்று சந்ததிதகள் கழித்து பிறக்கும் பேரன் அவன் முகத்தை கொண்டிருப்பதும் என்று எல்லாமே ஒரு சுழற்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. முடிவும் தொடக்கமும் மீண்டும் ஒரே புள்ளியில் சந்தித்து கொள்ளும் சுழல்தான் மனித வாழ்க்கை.

அந்த சுழலிலிருந்து அத்தனை சீக்கிரத்தில் யாரும் மீண்டு வரமுடியாது. தங்கள் ஆனம் சக்தியை உணர்ந்த சிலர் மட்டுமே அந்த வட்டத்திலிருந்து தங்களை  விடுவித்து கொள்வர் .

பிரபாவும் அதேபோல் தன் ஆன்மாவை தூய்மைப்படுத்தி அந்த சுழற்சியிலிருந்து வெளியேறி  சூனியத்திற்குள் நுழைய காத்திருந்த போது மீண்டும், ஏதோ ஒரு சக்தி அவனை அதே வட்டத்திற்குள் இழுத்து வந்துவிட்டது. அந்த சக்தி ஷெர்லிதான் என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

ஷெர்லியிடம் இருக்கும் காந்தசக்தியை அவன் முன்னமே உணர பெற்றான். ஆனால் இப்போது அவளின் அந்த காந்த சக்தி அவனை மரணத்தின் பிடியிலிருந்து இழுத்து வந்து மீண்டும் லௌகீக வாழ்க்கைகுள் தள்ளிய சூட்சமத்தை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் விழிகள் மூடி இப்படி யோசித்து கொண்டிருக்கும்போது வாயிற்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் விழிகளைத் திறந்துப் பார்த்தவன் அவளின் வருகையைக் கண்டு எழுந்து நின்றான்.

ஷெர்லி உள்ளே நுழைந்தாள். எதிரே நின்று கொண்டிருந்தவனை சில நொடிகள் வியப்படங்காமல் அவள் பார்த்திருந்தாள்.

அவனும் அவளையேதான் விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். களையிழந்த முகம் கண்ணீர் நனைந்த விழிகள் என்று அவள் முகம் அப்பட்டமாக அவனுக்கான அவளின் மனவேதனையைப் பிரதிபலித்தது. அவன் விழிகளை நீர் நிறைக்க அவள் அவன் அருகில் வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு,

“சீரியஸிலி என்னால பிலீவ் பண்ணவே முடியல ஹென்சம்” என்று கண்ணீர் வடித்தாள்.

அவளின் அந்த நெகிழ்வு அவனுக்குள் சிலாகிப்பை ஏற்படுத்த அவனும் அவளை அழுத்தமாக அணைத்து கொண்டான்.

உணர்வுகள் பேசி கொள்ளும் போது அவர்கள் பேச மொழிகள் தேவையிருக்கவில்லை.

“எப்படி இப்படி செய்யலாம்?” என்று கோபமாக கேட்டான். அவனை அதிர்ச்சியாக அவள் நிமிர்ந்து பார்க்கும் போதே,

“நீ செஞ்சது கொஞ்சம் கூட நியாயமே இல்ல” என்றான்.

“என்ன நியாயம் இல்ல”

“ஏன் என்னை விட்டுட்டு போகணும்னு நீ முடிவு பண்ண…”

அந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்வாள். மௌனமாக அவன் முகம் பார்க்க,

“உனக்கு தெரியுமா? எங்கம்மாவும் இப்படிதான்… சுனாமி வந்த போது என் உயிரை காப்பாத்தி இந்த உலகத்தில தனியா விட்டுட்டு அவங்க மட்டும் நிம்மதியா போயிட்டாங்க… இப்போ நீயும் அதேதானே எனக்கு செய்ய பார்த்த” என்றான்.

தொடர்ச்சியாக கண்கள் கலங்கி அவன் உணர்வுபூர்வமாக பேச அவள், “சாரி பிரபா… இனிமே உங்களை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்” என்றாள்.

“போக கூடாது” என்றான் அதிகாரமாக சொல்லிவிட்டு

மீண்டும் அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அவள் கரைந்துருகி போனாள்.

அதேநேரம் அந்த தருணத்தின் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள். காதலோடும் கண்ணீரும் பெருகிக் கொண்டே போனது. இருவரின் உணர்வுகளும் ஒரே புள்ளிக்குள் சங்கமித்தது.

ஆறு மாதங்களுக்கு பிறகு…

ஷெர்லிக்கும் பிரபாவிற்கும் பதிவு திருமணமாகி ஐந்து மாதங்கள் கடந்திருந்தன.  அவள் இந்திய நாட்டின் பிரஜையாக மாறியிருந்தாள். அவள் தந்தை ஜான்சனும் தாய் லியாவும் அவளின் பதிவு திருமணத்திற்கு வந்துவிட்டு புறப்பட்டுவிட்டனர்.

கவிதை போல் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை இனிதே அரங்கேறியது. ஆனாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்குள்ளும் அவ்வப்போது சண்டை வருவது வழக்கமாக இருந்தது.

அன்றும் அத்தகைய ஒரு சூழ்நிலைதான். ஹரிதான் இவர்களுக்கு இடையில் சிக்கி தவித்து கொண்டிருந்தார் என்று சொல்ல வேண்டும்.

அன்று பிரபா தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தான்.

அவனை பார்த்தும் ஹரியின் முகத்தில் அச்சம் படர்ந்தது.

“என்ன பிரபா வர லேட்டாகும்னு சொன்னே” என்று தன் பதட்டத்தை மறைத்து கொண்டுக் கேட்க அவன் புன்னகை மலர,

“வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு… வந்துட்டேன்” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான். ஹரி வாசலிலேயே நின்று தோட்டத்தின் பின்பக்கம் எட்டி பார்த்து கொண்டு,

“சரி சரி நீ மேலே போய் டிரஸ் மாத்து” என்றார். அந்த நொடி அவர் முகத்திலிருந்த படபடப்பை உணரந்தவன்,

“ஆமா நீங்க ஏன் வெளியே நின்னுட்டு இருக்கீங்க” என்றான்.

“இல்ல காத்து வரல உள்ள” தட்டி தடுமாறி பதில் சொன்னார்.

எதுவோ சரி இல்லையே என்று யோசித்தவன், “சரி ஷெர்லி எங்கே?” என்று வினவ,

“அவ மேலே மேலேதான் இருக்கா பிரபா” என்று அவர் கை அவசரமாக சுட்டிக் காட்டியது. ஆனால் அவரின் பார்வை வேறு திசையில் காவல் காத்தது.

“அப்போ அவ மேலே இல்ல” என்று அவரைப் பார்த்து சொல்லிவிட்டு அவன் தோட்டத்தின் பின் புறமாக செல்ல, “டே பிரபா” என்று பதறிக்கொண்டு அவன் பின்னே வந்தார் ஹரி.

“பேசாதீங்க…மாமனாரும் மருமகளும் செய்ற வேலையா இது” என்று கண்டிப்போடு அவன் கேட்க, “டே அது இல்லடா” என்று ஹரி சமாளிப்பாக பேச வரவும் அவரைக் கோபமாக திரும்பி முறைத்தவன், “ஒழுங்கா இப்போ உள்ளே போறீங்களா இல்லையா?” என்று கேட்டான்.

“பிரபா” என்றவர் தயங்க, “உள்ளே போங்க சார்” என்று அதட்டலாக சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல ஹரிக்கு வேறு வழியில்லை. அவர் வீட்டிற்குள் சென்றார்.

பிரபா பின்புற தோட்டத்திற்கு செல்ல ஷெர்லி அங்கிருந்த மாமரத்தில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டிருந்தாள்.

அவன் அவள் முன்னே வந்து நிற்க, அவள் தன் கையைப் பின்னோடு மறைத்து கொண்டாள்.

“மேடம் என்ன பண்ணிட்டுஇருக்கீங்க?”

“அது… சும்மா காத்து வாங்கிட்டு” என்று அவள் மழுப்பலாக புன்னகைக்க, “மாமானாரும் மருமகளும் பேசி வைச்சிட்டு ஒரே பொய்யை சொல்றீங்களாக்கும்” என்று கேட்டான்.

“என்ன பொய்… அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று சமாளித்து கொண்டிருந்தவளை விழிகள் இடுங்க பார்த்தவன் அவள் எதிர்பாரா வண்ணம் அவளை தன்புறம் இழுத்து அணைத்து கொண்டு அவள் வலது கரத்தை முன்னே கொண்டு வந்தான். அவள் விரலிலிருந்த சிகரெட்டை பார்த்த நொடி அவன் கோபம் அதிகரித்தது.

“நீ திருந்தவேமாட்டியா?” என்று கேட்க,

“நோ ஹென்சம்… நான் பிடிக்கல” என்றாள்.

“அப்புறம் இது என்னவாம்”

“சும்மா… கையில பிடிச்சிட்டு இருந்தேன்… பாருங்க பைர் கூட பண்ணல… அதான் நீங்க ஸ்மோக் பண்ண கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கீங்க இல்ல… நான் எப்படி அந்த ப்ராமிஸ் மீறுவேன்” என்றாள்!

“நல்லா நடிக்கிற” என்றவன் பார்வை அவளை முற்றுகையிட,

“நோ” என்றவள் மறுக்க,

“பொய் சொல்லாதே” என்று மிரட்டலாக உரைத்தான்.

ஷெர்லிக்கு இப்போது கோபம் பொத்து கொண்டு வந்துவிட்டது.

“ஸ்டாப் இட் பிரபா… நீ ரொம்ப என்னை டாமினேட்பண்ற… சொல்லிட்டேன்… நானே என்னைகாச்சும் ஒரு நாள்தான் ஸ்மோக் பண்றேன்… அது கூட நீ முடியாதுன்னு சொன்னா” என்றவள் அவன் கரத்திலிருந்து திமிறி கொண்டு வெளியேறி நடந்தாள்.

“இப்ப ஏன் கோபப்படுற… நான் உன் நல்லதுக்காகதானே சொல்றேன்!” என்றவன் அவள் பின்னோடு செல்லவும்,

“உங்க ஊர்ல ஆம்பளைங்க எல்லாம் சிகரெட் பிடிச்சா தப்பில்ல… பொண்ணுங்க பிடிச்சாதான் அது குற்றம்” என்றாள்.

அவன் அவளை வழிமறித்து நின்று, “நான் எப்போ ஷெர்லி அப்படி சொல்லியிருக்கேன்… சிகரெட் யார் பிடிச்சாலும் அது உடல் நல கேடுதான்… ஆனா பெண்கள்னு வரும்போதுஅதோட பதிப்பு ஜாஸ்தி” என்றான்.

அவள் அவனைப் பார்க்க கூட விரும்பாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள அவன் அவள் தோள் மீது கைப் போட்டுக் கொண்டு,  “டென்ஷனாகாம நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்று சொல்லி அவளைத் தோட்டத்திலிற்கும் ஒரு மரத்திற்கு அருகில் நிறுத்தினான்.

“இந்த மரத்தைப் பார்த்தியா… இந்த மரத்தில எந்த இடத்தில பூச்சி அரிச்சாலும்… என்னால ஏதாச்சும் பண்ணி சரி பண்ணிட முடியும்… ஆனா வேர்ல மட்டும் பூச்சி அரிச்சா… எதுவும் பண்ண முடியாது… இந்த மரத்தை வெட்டிதான் சாய்க்கனும்” என்றவன்,

“நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கோ… பெண்கள்தான் ஷெர்லி இந்த சமுதாயத்தோட வேர்… ஒரு ஆணோட தவறான பழக்கம் குணம் அவனை மட்டும்தான் அழிக்கும்… ஆனா ஒரு பெண்ணோட தவறான பழக்கம் குணம் அந்த மொத்த குடும்பத்தை ஏன் நம்ம சமூகத்தையே மொத்தமா பாதிக்கும்… இது ஒரு மேல் டாமினேஷன் தாட்னு நினைச்சுக்காதே… மனித இனத்தில ஆதிவாசிகள் தொடங்கி இங்க பூமியில இருக்க எல்லா உயிரினங்களும் பெண்களைச் சார்ந்துதான் இருக்கு”  என்று அவளுக்கு பொறுமையாக விளக்கமளிக்க, அவள் முகத்திலிருந்த கோபம் காணாமல் போனது.

அவள் புன்னகையோடு, “ஓகே… இனிமே நான் பிடிக்கவேமாட்டேன்“ என்றாள்.

“நம்பலாமா?” என்றவன் சந்தேகமாக கேட்க,

“ம்ம்ம்” என்று அவள் தலையை வேகமாக அசைக்க அவளை அணைத்துக் கொண்டு அவன் கிறக்கத்தோடு, “இந்த லிப்ஸ் எனக்கு மட்டும்தான்டி சொந்தம்… நீ அப்பப்போ அதை மறந்துடுற” என்றான்.

“அப்போ ஸ்மோக் பண்ணனும்னு தோணும் போதெல்லாம்” என்றவள் சொல்லி முடிக்கும் முன், “வித் பிளஸர்” என்றவன் அவள் இதழ்களை அவன் நெருங்கி வரவும் அவனை விலக்கிவிட்டு தோட்டத்திற்குள் புகுந்து ஓடினாள்.

“ஏ ஷெர்லி” என்று கத்திக்கொண்டே அவளை அவன்  துரத்த,

இருவரும் துரத்தி ஓடியபடியே வீட்டின் முன்புறம் வந்திருந்தனர். அப்போது ஷெர்லி வீட்டிற்குள் நுழைந்த சேதுவைப் பார்த்து தேங்கி நின்று விட, அவள் பின்னோடு ஓடி வந்த பிரபா சேதுவை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை.

“வா சேது” என்று பிரபா அவனை வரவேற்க,

ஷெர்லியும் ஒருவாறு சமாளிப்பாக புன்னகைத்துவிட்டு, “வாங்க சேது… உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

பிரபாவின் முகமெல்லாம் புன்னகை வழிந்தோடியது.

“இந்த சாமியார் வேஷம் போடுறவங்களையே நம்பக்கூடாதுப்பா” என்றான் கேலியாக.

“யார குத்தி காட்டி பேசுற” பிரபா புருவத்தை நெறிக்க,

“உன்னைத்தான்டா சொல்றேன் துரோகி” என்றான் சேது!

பிரபா நண்பனைப் பார்த்து உதட்டை மூடி கொண்டு சிரிக்கவும் சேது அவனை முறைத்துப் பார்த்து, “சிரிக்காதே… எனக்கு பத்திகிட்டுவருது… காதலே பண்ணமாட்டேன்… கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லன்னு சொல்லிட்டு… இண்டர்நேஷ்னல் லெவலில் ரூட் போட்டுருக்க நீ… உன்னை என்ன செய்யலாம்” என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த பிரபா, “ஹம்ம்… உனக்கு tummyfireohmania ஒரு நோய் வந்திருக்கு மச்சான்” என்றதும்,

“என்னடா சொல்ற… அது என்னடா புது நோய்” என்று பதட்டத்தோடு கேட்டான் சேது!

“அது புது நோயெல்லாம் இல்லை… ரொம்ப பழைய நோய்தான்… மத்தவங்க நல்லா வாழ்றதைப் பார்த்துப் பொறுக்காம வயிறு குபுகுபுன்னு பத்திக்கிட்டு எரியுமாம்” என்று சொல்ல

“அடப்பாவி! உன்னை” என்று சேது அவனை அடிக்க வர ஹரி வாசலுக்கு வந்தார்.

“வாடா சேது… உள்ளே வராம வாசலில நின்னு பேசிட்டு இருக்க” என்று கேட்க,

“நான் உள்ளே வரல… இவன் என்னை ஓவரா கலாய்கிறான்” என்று சேது முகத்தைத் திருப்பிக்கொண்டு சொல்ல, ஹரி நம்பாமல் பார்த்தார்.

“இவன் போய் உன்னைக் கலாய்க்கிறதா”

“அவனையே கேளுங்கப்பா” என்று சேது சொல்ல,

“என்னடா அப்படி கலாய்ச்சே” என்று ஹரி பிரபாவிடம் கேட்டார்.

“அது ஒன்னும் இல்ல… அவன் வீட்டில ரெண்டு வருஷமா பொண்ணு பார்த்து ஒன்னு கூட சிக்கல… ஆனா எனக்கு ஷெர்லி கிடைச்சிட்டா… அதுலதான் ஐயா காண்டாகி வயிரெறியிராரு… அதைதான் சொன்னேன்” என்றான் பிரபா.

சேதுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஹரி வந்த சிரிப்பை பிரயாத்தனப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டு,

“எத்தனை பொண்ணு பார்த்தாலும் தலை விதின்னு ஒன்னும் இருக்கு இல்ல சேது…  நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட” என்றார் ஹரி.

“நானே பரவாயில்ல சேது” என்று பிரபா சத்தமாக சிரிக்க ஹரியும் உடன் சேர்ந்து சிரித்தார். சேது அவர்கள் இருவரையும் உஷ்ண பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஷெர்லி கைகளில் ஜூஸ் டம்ளரோடு வெளியே வந்து,

“என்ன உள்ளே வருவீங்கன்னு பார்த்தா வெளியவே நின்னுட்டீங்க… இங்கயே நின்னு அரட்டையா” என்று கேட்டு கொண்டே, “இந்தாங்க சேது… ஜூஸ்” என்றாள்.

பிரபாவால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“எடுத்துக்கோ… கூலா இருக்கு… அப்படியாச்சும் tummyfireohmania தாக்கம் கொஞ்சமாச்சும் குறையுதா பார்க்கலாம்” என்றான்.

ஷெர்லி அந்த வார்த்தை புரியாமல், “tummyfireohmania வா அப்படின்னா” என்று சந்தேகமாக கேட்டாள்.

சேது பதட்டமாகி பிரபாவின் காதோரம் நெருங்கி, “டே! என் மானத்தை கப்பலேத்தி கலிபோர்னியா அனுப்பிடாதாடா ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

“பிழைச்சு போ “ என்றவன் ஷெர்லியை பார்த்து,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷெர்லி சும்மா” என்றான்.

ஹரி உடனே, “விடு சேது… வா உள்ளே போய் பேசலாம்” என்று அவனை தோள் மீது கைப் போட்டு உள்ளே அழைத்து வந்தார்.

எல்லோரும் வீட்டிற்குள் நுழைந்து பேச வசதியாக அங்கிருந்த சோபாவில் சுற்றி அமர்ந்து கொண்டனர்.

“நீங்க இரண்டு பேரும் செஞ்ச கலாய்ல… நான் வந்த விஷயத்தையே மறந்துட்டேன்” என்று சொல்லி தன் கையிலிருந்த பைலை பிரபாவிடம் கொடுத்தான் சேது.

அதனை வாங்கி பார்த்துக் கொண்டே, “என்ன சேது இது?” என்று கேட்க,

“நம்ம காலேஜ்ல ஜெனிடிக்சைன்ஸ் ஸ்டூடண்ட்ஸ் மூலமா வாங்கின ரிப்போர்ட்” என்றான்.

பிரபா அதற்குள் அவற்றைப் பிரித்து ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினான்.

சேது அப்போது, “உனக்கும் ஷெர்லிக்குமான ஜீன்மேட்ச் ஆகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு” என்றதும் ஷெர்லி முகத்தில் அளவில்லா வியப்பு!

அவள்தான் இப்படி ஒரு சோதனையை செய்து கொள்ள வேண்டுமென்று சொன்னது. பிரபா மறுத்த போதும் அவனையும் பேசி அவள்தான் சம்மதிக்க வைத்தாள். அவளுக்கு இருந்த சந்தேகத்தை முழுவதுமாக தீர்த்து கொள்ளவேண்டுமென்ற எண்ணம்தான்.

ஆனால் பிரபாவிற்கு அப்படியொரு தேவையிருக்கவில்லை. அவன் உள்ளுணர்வே போதுமானது.

ஷெர்லி முகத்தில் அளவில்லா ஆனந்தம். ஆச்சரயமும் கூட!

“உனக்கு இப்போதிருப்தியா?” என்று பிரபா அவளைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “இன்னும் நான் முழு விஷயத்தையும் சொல்லி முடிக்கல” என்று இடையிட்டு பேசினான் சேது.

எல்லோரும் அவன் புறம் ஆர்வமாகத் திரும்ப, “உங்க ரெண்டு பேருக்கும்  இருக்கிறது… m130 Gஜீன்” என்ற போதுஷெர்லி,

“அப்படின்னா?” என்று வினவினாள். ஆனால் பிரபாவிற்கு புரிந்திருந்தது.

சேது அவள் சந்தேகத்திற்கு பதிலளித்தான்.

“*M130Gஜீன் இருக்கிறவங்களோட பாரம்பரியம் 70000 வருஷத்துக்கு முன்னாடியாம்… ஆப்பிரிக்காவில இருந்த வந்த ஆதி மனிதன் கிட்ட இருந்து வந்திருக்க இந்த ஜீன் தமிழர்கள் கிட்ட இருக்கு… அப்புறம் ஆஸ்ட்ரேலியன் கண்டத்தில இருக்கு… இது மூலமா இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு” என்றான்.

“என்னது?” என்று ஷெர்லியும் ஹரியும் ஒரே போல கேட்க,

“குமரி கண்டம்… ஆதி மனிதனின் நாகரிகம் தோன்றிய இடம்” என்று பதிலளித்தான் பிரபா!!

 

********************************நிறைவு********************************

*M130 – உலகின் தொல்குடி என்பதற்கான ஆதாரம்

நேஷ்னல் ஜியோகிரஃபிக் மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் திரு.பிச்சப்பன்  என்பவரும்  இணைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். அதில் நம் மதுரை அருகிலுள்ள ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தில் 13  நபர்களுக்கு ஒரே வகையான 130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.

 

இம்மரபணு 70,000 ஆண்டுகள் பழமையானது. இதன் தொடர்ச்சிகள் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆஸ்த்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழன்தான் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் உங்களால் கேட்கப்பட்ட, கேட்கப்படாத கேள்விகளுக்கான பதில்கள்.

  • நீலா என்ற பாத்திரத்தைப்பற்றி சொல்லவில்லை? அது அவசியமில்லை. பிரபா நீலாவின் தொடர்பை அறிவியல் பூர்வமாக புரிய வைத்துவிட்டேன் என்று நினைக்கிறன்.
  • பிரபா போல ஷெர்லிக்கு ஏன் சக்தியில்லை? இந்த கேள்விக்கு பதில் நீங்கள் யோசித்தாலும் தெரியும். அதாவது ஷெர்லியிடம் இருந்த கெட்ட பழக்கங்கள் அவள் ஆற்றலை மறக்கடித்துவிட்டது. மனித இனம் தன்னுடைய கணிக்கும் திறனை இழந்ததற்கு காரணம் இதுதான். பிரபாவின் வாழ்க்கை முறையே நம்முடைய ஆற்றலுக்கு) சிறந்த சான்று.
  • Nucleardisaster பற்றிக் குறிப்பிடப்பட்ட தகவல்கள் விகடன் பத்திரிக்கையில் எழுதப்பட்ட கட்டுரை மற்றும் Chernobyl documentaryயில் இருந்து எடுக்கப்பட்டது)
  • யோகா சம்பந்தப்பட்ட புத்தகங்கள்? நான் யோகா குறித்து எந்தவொரு தனிப்பட்ட புத்தகத்தையும் படிக்கவில்லை. ஆனால் நிறைய விஷயங்கள் திருமூலர் சித்தர் மற்றும் கொங்கணர் சித்தர் பாடல் விளக்கங்கள் கொண்டு எழுதினேன். உங்களுக்கு இதில் ஆர்வம் அதிகம் இருந்தால் புத்தகத்தை நாடுவதை விட நல்ல குருவை நாடுவது உசிதம். புத்தங்கங்கள் பெரும்பாலும் ஹாசன் முறை பற்றியும் முத்திரைகள் பற்றியுமே சொல்வனவாக இருக்கிறது.
  • இயற்கை பரிணாமம் பற்றி நான் எழுதிய அனைத்து தகவல்களும் ‘பரிணாமத்தின் பாதை’ என்ற டேவிட் அட்டன்பரோவின் தமிழாக்க நூல்.
  • மற்றும் இவையல்லாத பல தகவல்கள் நிறைய youtube videos websites மூலமாக ஆராய்ந்து எடுக்கப்பட்டது.
error: Content is protected !!